Monday, July 01, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 7 – ‘bottle – நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்’




கடந்த சீஸன்களில், பிக்பாஸ் வீட்டில் பகலில் எவராவது தூங்கினால் நாய் குரைக்கும் சத்தத்தைப் போடுவார்கள். ஆனால் இந்த முறை துப்பாக்கியின் சத்தம். ‘இந்தச் சத்தம் எங்களுக்கு கேட்டுப் பழகிடுச்சு” என்று லாஸ்லியா இயல்பாகக் கூறினாலும் இதன் பின்னால் உள்ள வலி பெரியது.

சில வருடங்களுக்கு முன்பு பார்த்த குறும்படம் அது. தீபாவளி சமயத்தில் எல்லோர் வீட்டிலும் பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்தச் சிறுவனால் அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்க முடியாது. வீட்டினுள் அஞ்சி பதுங்கியிருப்பான். ஏனெனில் அப்போதுதான் இலங்கையிலிருந்து இந்தியா வந்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் அவன்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை வணிக நோக்கில் உணர்வுச்சுரண்டலாக மாற்றுவது அபத்தம்தான். அதே சமயத்தில் அவர்களின் நேர்மையான உணர்வுகளில் வெளிப்படும் வலியும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதே.

**

Bottle என்கிற பிரச்சினை டாஸ்மாக்கின் வழியாக தமிழகத்தில்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறதென்றால் பிக்பாஸ் வீட்டிலும் பிரச்சினையாக அமைந்திருக்கிறது. விஷயம் இதுதான். அபிராமி ஒரு தண்ணீர் பாட்டிலை குழந்தையாக பாவித்து பராமரித்து வருகிறாராம். அது முகிலின் குழந்தை என்று விளையாட்டாகவும் கூறி வருகிறாராம். (இதையெல்லாம் நாம் எங்கே கண்டோம்?!)

பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தவைகளை ‘செய்தியாக’ வாசிக்கச் சொல்லி பாத்திமா பாபுவிடம் கமல் கேட்டதும் இந்த ‘பாட்டில்’ விஷயத்தையும் விளையாட்டாக அதில் சேர்த்து விட்டார் பாத்திமா. இத்தனைக்கும் சரவணணும் மதுமிதாவும் இந்த விஷயத்தைப் பொதுவில் கூறாதீர்கள் என்று பாத்திமாவை கேட்டுக் கொண்டும் அவர் அதைச் செய்யத் தவறி விட்டார். பிறகு இதற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். 

இதற்கு அபிராமி சற்று அப்செட் ஆகி விட்டார். ஆனால் விஷயம் இத்தோடு முடிந்திருக்க வேண்டும். இதற்கு மதுமிதா அளித்த விளக்கத்தில் நெருப்பு பற்றிக் கொண்டு மேலதிக சர்ச்சையானது. “நான் தமிழ்ப் பொண்ணு.. எங்கள் கலாசாரத்தில் இவற்றை ரசிக்க மாட்டார்கள். தொலைக்காட்சியில் நிறைய பேர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்’ என்று மதுமிதா அளித்த விளக்கத்தினால் அபிராமி, சாக்ஷி, குறிப்பாக ஷெரீன் ஆகியோர் பொங்கி விட்டார்கள்.

இந்த ‘தமிழ்ப் பொண்ணு’ என்னும் அரசியலை கடந்த சீஸனில் ரித்விகா, ஜனனி உள்ளிட்டவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையும் நினைவு கூறலாம்.

பொதுவாக கடந்த சீஸன்களில் கமலுக்கு முன்னால் போட்டியாளர்கள் விவாதம் செய்யத் தயங்குவார்கள். ‘சண்டையா… நாங்க யாரும் பார்க்கலையே” என்று பலாப்பழத்தை தண்ணீர் பாட்டிலில் மறைக்க முயல்வார்கள். காமிராவில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மறந்திருக்கும். ஆனால் இந்த சீஸன் போட்டியாளர்கள், கமலுக்கு முன்பேயே குடுமிப்பிடிச்சண்டை போடத் தயங்கவில்லை.

‘யாருக்கும் பாட்டில் பொறக்காது….” “நல்ல வேளை.. நான் தமிழ்ப்பொண்ணு இல்லை. ஆனா அப்படி நடிச்சிருக்கேன்” என்று இந்தச் சர்ச்சைக்கு அலட்டிக் கொள்ளாமல் கமல் அடித்த நகைச்சுவை கமெண்ட்டுக்களும் அவற்றின் டைமிங்கும் அபாரம். மனிதர் இது போன்ற சமயங்களில் அதிகம் ரசிக்க வைத்து விடுகிறார்.

“தமிழ்ப் பொண்ணுக்கும் மற்ற பொண்ணுகளுக்கும் கலாசார ரீதியா என்ன வித்தியாசம்?,” என்று ஒரு சமயத்தில் மதுமிதாவிடம் ஷெரீன் கேட்டது சரியானது. ‘நான் தமிழங்கோ.. அய்யோ.. நான் தமிழங்கோ… என்கிற சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி மதுமிதா தொடர்ந்து அலறுவது காமெடி.

பொதுப்புத்தி சார்ந்தும், அபிராமியின் நலன் கருதியும் இவர் அதைச் சொல்லியிருந்தாலும் இதிலிருந்த பாகுபாட்டு அம்சத்தை பிறர் சுட்டிக் காட்டிய பிறகு ஒப்புக் கொள்வதே சரியானது.

இதற்காக அவர் தனியாக அமர்ந்து புலம்ப வேண்டிய அவசியமே இல்லை. தன்னை நல்லவராகவும் உலகமே தனக்கு எதிரியாக இருப்பதாகவும் கருதிக் கொள்வது ஒருவகையான போதை. அதில் விழுந்து விடக்கூடாது. தானும் எத்தனையோ சமயங்களில் மற்றவர்களை புண்படுத்தியிருப்போம் என்கிற சுயபரிசீலனை வேண்டும்.

இது அபிராமியின் ‘பர்சனல்’ விஷயம். இதை கலாசார ரீதியாக ஆட்சேபிப்பதாலும் விவாதங்களின் மூலம் ஊதி வளர்ப்பதாலும் அபிராமி என்னும் தனிநபரின் சுதந்திரத்தில் ஆழமாக தலையிடுகிறோம் என்பதை மதுமிதா உணர வேண்டும். ‘கலாசார காவலர்’ வேலையை எடுத்துக் கொள்ளக்கூடாது. பார்க்கும் மக்கள் அதைத் தீர்மானித்துக் கொள்வார்கள்.

அபிராமி செய்தது கலாசார சீரழிவா, விளையாட்டா என்றொரு திடீர் தேர்தலை பாத்திமா நடத்தியது முந்திரிக்கொட்டைத்தனம். பள்ளி வகுப்புகளில் கவனித்தால் ‘நான்தான் லீடரு.. நான்தான் லீடரு’ என்று தன் உடல்மொழியின் மூலம் சிலர் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். பாத்திமாவின் இது போன்ற செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அபிராமி உள்ளிட்ட அனைத்து இளம் பெண்களுக்காக மதுமிதாவிடம் ஆவேசமாக வாதாடி ‘ப்ளேபாய்’ கணக்கில் ஸ்கோர் செய்ய முயன்றார் கவின். என்னனொரு வில்லத்தனம்?!

வனிதாவிற்கும் மதுமிதாவிற்கும் இது குறித்த நிகழ்ந்த ஆவேச உரையாடலில் “இன்னிக்கு உனக்கு குடும்பம் நல்லா அமைஞ்சு இருக்கு.. ஆனா.. நாளைக்கு என்னவாகும்.. நினைச்சுப்பாரு..” என்றெல்லாம் சாபம் விடும் வகையில் வனிதா பேசியது நிச்சயம் தவிர்த்திருக்கப்பட வேண்டியது. சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

ஓர் அற்பமான விவகாரம் ஊதிப் பெருக்கப்பட்டால் எப்படியெல்லாம் கேவலமாக வெடிக்கும் என்பதற்கு இந்த பாட்டில் விவகாரத்தை ஒரு பெரிய பாட்டாகவே பாடி விடலாம்.

**

மனதிற்குப் பிடித்தவர்களுக்கு இதயம் வடிவத்தில் இருந்த தலையணைகளை பரிசளிக்கலாம் என்றொரு விஷயம் நடந்தது. இதில் அதிக இதயங்களைப் பெற்றவர் சரவணன். இவருடைய குணாதிசயம் காரணமாக முதல் வாரத்திலேயே வெளியேறி விடுவார் என்று கணித்தேன். ம்ஹூம். நிறைய வாரங்கள் தாங்குவார் போலிருக்கிறது. மனிதர் பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் அவசியமான சமயங்களில் சரியாக பேசுகிறார். அதிலும் பெரும்பாலும் நடுநிலை தவறாமல் உண்மையைப் பேசுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

வனிதாவிற்கு எந்த இதயமும் கிடைக்கவில்லை. இதற்காக அவர் சோர்வடைந்து விடவும் இல்லை. ‘சிறப்பாகச் செயல்பட்டதற்காக தன்னையே தான் பாராட்டிக் கொள்வதாக தெரிவித்தார்’. இந்தத் தன்னம்பிக்கை பாராட்டப்படக்கூடியதுதான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டும் மற்றவர்கள் ஏன் தன்னை விரும்பவில்லை என்பதையும் அவர் கவனிக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகாரத்தை மட்டுமே நிலைநிறுத்தக்கூடாது. அன்பும் அனுசரணையும் சகிப்புத்தன்மையும் கூடவே தேவை. ‘நான் சொல்வதை மட்டும் கேள்’ என்று கட்டளையிடக்கூடாது. இதுவே வனிதாவின் எதிர்மறை அம்சம்.

அடுத்த வாரத் தலைவருக்கான போட்டி நடந்தது. இதை வெளிப்படையாக நடத்தினால் பிரச்சினையாகுமே என்று சேரன் நியாயமான காரணத்தைச் சொன்னார். ‘கைய தூக்கிட்ட பிறகு இதைச் சொன்னா எப்படி?” என்று சரவணன் அநாவசியமாகக் கோபப்பட்டார். சேரன் இதற்கு வருத்தமடைந்தார் என்பது பிறகு தெரிந்தது.

‘நான் தலைவராக வந்தாலும் எவரிடமும் ஆணையிட மாட்டேன். ஒரு பிரச்சினையென்றால் இரு தரப்பிடமும் விசாரித்தே முடிவு செய்வேன்” என்று முகின், மீரா உள்ளிட்ட தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் சொல்லியவற்றில் வனிதாவிற்கான படிப்பினைகள் இருந்தன. வனிதாவின் ‘ஹிட்லர்தனம்’ பற்றி மீராவும் பொதுவில் புகார் கூறினார். உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளாமல் பொதுவில் தெரிவித்தது நல்ல விஷயம். என்றாலும் சர்ச்சைகளைத் தவிர்த்து ‘இந்த உலகம் ஒன்றுபட ஓயாது பாடுபடுவேன்” என்று சம்பிரதாயமாக பேசிய மோகன் வைத்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

**

மிகப் பொறுமையானவராகவும் அனைவரையும் அனுசரித்து செல்பவருமாகக் காணப்பட்ட சேரனும் இன்று சற்று சறுக்கினார்.

கமல் முன்பு நிகழ்ந்த பஞ்சாயத்தில், “அபிராமிக்கும் மீராவிற்கும் வெளியில் நிறைய பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. அவற்றை உள்ளே கொண்டு வந்ததுதான் துவக்க நாள் சண்டைக்கு காரணம்’ என்று சேரன் சொன்னதை பிறகு மீரா மறுத்தார். “அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. அப்போதைய மனநிலையில் அபிராமி எதையோ செய்தார். இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம்” என்று கூறிய போது “இதுக்குத்தான்யா சின்னப்பசங்க விவகாரத்தில் நாம தலையிடக்கூடாது.. நம்ம பேர்தான் கெட்டுடும்’ என்பது சேரனின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும். .

பிறகு மீரா சேரனிடம் பேச வந்த போது.. “இனி எங்கிட்ட பேசாதம்மா.. உனக்காக பெட் எல்லாம் மாத்திக் கொடுக்க ஒப்புக்கிட்டேன் பாரு.. என்னைச் சொல்லணும்” என்று சொன்னது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. என்ன.. சேரன்..நீங்களுமா.. இப்படி?

‘தன் தனித்தன்மைகளை இழந்து விடாமல் நேர்மையாக செயல்படுவதா?.. அல்லது இந்த விளையாட்டிற்காக போலித்தனமாக நடிப்பதா?’ இதுதான் மீராவும் மதுமிதாவும் பிறகு தனிமையில் படுத்துப் புலம்பிய உரையாடலின் சாராம்சம்.

இந்த விளையாட்டில் முன்தீர்மானத்தோடு நடிக்க முடிவு செய்திருப்பவர்களை ஏதும் செய்ய முடியாது. ஆனால் நேர்மையாகவும் சென்சிட்டிவ்வாகவும் இருக்க முயல்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட குழப்பம் நிச்சயம் வரும் இதற்காக அவர்கள் தங்களின் தனித்தன்மையை நிச்சயம் இழக்க வேண்டியதில்லை. போலியாகவும் நடிக்க வேண்டியதில்லை. ஒரு குழுவில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டால் போதும். இதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டால் போதும்.

**

அழுகாச்சி டாஸ்க்கில் இவர்கள்தான் ஒருவரையொருவர் அத்தனை பாசத்துடன் அணைத்துக் கொள்கிறார்கள். ‘அம்மா.. அப்பா.. அக்கா.. அண்ணா’ என்று உருகி வழிகிறார்கள். ஆனால் ஓர் அற்பமான விவகாரத்திற்காக ஆவேசமான குடுமிப்பிடிச் சண்டையும் போடுகிறார்கள். ஃபாஸ்ட் புட் உணவு மாதிரி இரண்டே நாளில் உருவாகிய உறவு எத்தனை போலித்தனமானது என்பதை இந்தக் குடுமிப்பிடிச் சண்டைகள் அம்பலப்படுத்தி விடுகின்றன.

அதிலும் இந்தப் பெண்கள் இருக்கிறார்களே.. இந்தச் சண்டைகளை ஊதி ஊதிப் பெருக்குவதில் மன்னிகளாக இருக்கிறார்கள். நான் வேறு.. பெண்தான் சக்தியின் வடிவம், தாய்வழிச்சமூகம்.. என்றெல்லாம் ஒருபக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன். வீட்டம்மணி காஃபி டம்ளரை ‘நொக்’ என்கிற சத்தத்துடன் வைத்து விட்டுப் போகும் போது இவற்றையெல்லாம் பரிசிலீக்க வேண்டுமோ என்று தோன்றி விடுகிறது.



suresh kannan

8 comments:

Sindhuja said...

Sir, bigboss பார்ப்பதை விடவும் உங்கள் விமர்சனம் மிக அருமை. இவ்வளவு positive perspective மற்றும் நடுநிலையான விமர்சனம் நான் பார்த்திராதது. Please keep up the awesome work sir!

AquaNasav said...

Ippavavathu purinja sari sir.

Anantho Speaks.... said...

Well narrated...

malar said...

நேற்று எபிசோடில் கலவர காரணகர்த்தா சபஜக்ட் முகின் தலையிடவேயில்லை .ஷெரின் ...அப்பப்பா சண்டையில் ஒவ்வொருமுறையும் ஏய் என்று அவர் குரல் ஒலித்தது எத்தனைபேருக்கு கேட்டது ?

மிக அருமையாக கம்பீரமாக செய்தி வாசித்த அந்நாள் எங்கள் சித்தப்பா மாமா க்களின் ஆதர்ச செய்தி வாசிப்பாளினியை பற்றி நாலு வார்த்தை பாராட்டி சொல்லியிருக்கலாம் நீங்க .
அதன்பின் நல்ல அருமையாக வாசிக்க கூடிய லொஸ்லியா (முதல் நாள் அறிமுகத்தில் வாசித்ததுபோல் ) வாசிக்காமல் ஆங்கரிங் செய்ததுபோல் வாசித்தது போலித்தனத்தின் டாப் .
முன்பு நீங்கள் சொன்னது இப்போ நினைவிற்கு வந்தது
//ஓவியா போன்ற தேவதைகள் இயல்பில் கிடைப்பது
அபூர்வம் //

ஆக மொத்தம் சிறு விஷயத்தை ஊத்தி கூட்டி பெருக்கி விட்டனர்

Gopi Chakrabani said...

நேற்று மதுமிதா தனது ஈகோவை விட்டு கொடுக்ககூடாது என்பதால் தான் அனைவராலும் விவாதிக்கபட்டார். தன் கூறிய வார்த்தைகள் மற்றவர்களை காயபடுத்தியதை அறிந்தும் அவர் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியதே காரணம்.
ஷெரின் அருமையாக ஒரு கேள்வியை முன் வைத்தார் தமிழ் பொண்ணுக்கும் மற்ற பொண்ணுக்கும் என்ன வித்தியசம் என கேட்க மதுமிதாவால் பதிலளிக்க முடியவில்லை..
தமிழ் பொண்ணு என்ற ஆயுதம் எப்போதும் காப்பாற்றாது...

Unknown said...

As usual great write-up sir...நேற்றைய விஷயம் தேவையேயில்லாதது தான்...ஆனா இன்னைக்குதான் ஆட்டமே ஆரம்பம் ஏன்னா நாமினேசன் நாள் ஆச்சே...யார்யார் வெளியே பாச சீன் காட்டிட்டு பின்னாடி குத்தறாங்கன்னு தெரியும்...

நுனிப்புல் said...

அழுகாச்சி டாஸ்க்கில் மதுமிதா அவர் வளர்க்கபட்ட முறையைக் கூறினார். தான் சினி துறைக்கு வந்த புதிதில் எல்லாருக்கும் வணக்கம் மட்டுமே சொல்லுவாராம்.. அவங்க வீட்டில் அவ்வளவு கெடுபிடியாக வளர்த்ததாக.. அதன் வெளிப்பாடாகத்தான் மதுமிதாவின் இந்த கருத்தை பார்க்கமுடிகிறது.. இன்றளவும் எங்கள் வீட்டில் பாட்டு பாடும் போது எதாவது எசக்குபிசக்கான வார்த்தைகள் அந்த பாட்டில் வந்தால் கட் செய்து தான் பாடுவோம்.. அம்மா அவ்வளவு கண்டிப்பானவர்.. அதனால் மதுமிதாவின் எண்ணம் புரிகிறது..

பட் குழுவில் உள்ள மற்ற எல்லாரும் தவறென சுட்டும் பட்சத்தில் சாரி ன்னு சொல்லிட்டு அடுத்த வேளையை பார்க்கலாம்...

Saranya said...

மூன்று சீசனாக உங்களின் பிக் பாஸ் கருத்துகளை நான் தொடர்ந்து படித்து வருகின்றேன்.. அருமையாக விளக்கம் தருகின்றீர்கள்.. நீங்கள் எழுதும் சில கிண்டலான விளக்கங்களை நான் மிகவும் ரசிக்கின்றேன்.. ஆனால் என்னால் உங்களுக்கு முகநூலில் கமெண்டு செய்ய முடியவில்லை.. உங்கள் பதிவிற்கு கீழ் கமெண்டு ஆப்ஷனே வருவதில்லை...
பிக்பாஸ் மட்டுமல்ல உங்களின் அனைத்து பதிவினையும்,சினிமா விமர்சனங்களையும் தவறாமல் படிப்பேன்.. அனைத்தும் அருமை சார்..