இன்றைய எபிஸோடைப் புரிந்து கொள்ள முரட்டுத்தனமான தைரியமும் குருட்டுத்தனமான துணிச்சலும் வேண்டும். அத்தனை சிக்கலான நுட்பங்கள் இன்று பெருகி வழிந்தன.
விவேக் நடித்த நகைச்சுவைக்காட்சியொன்று இருக்கிறது. “லதாவுக்கும் மோகனுக்கும் ஒரு அண்டர்கவர் கனெக்ஷன் இருக்கு. இது ரமேஷூக்கு தெரியாது. அவன் லதாவோட தங்கச்சி ராதாவையும் லவ் பண்றான். ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தை ஃபார்ம் ஆவுது.. இது மோகனுக்கு தெரிஞ்சுடுது.” என்கிற ரேஞ்சில் ஒரு தொலைக்காட்சி சீரியல் கதையை அவருக்கு விளக்குவார்கள். மனிதர் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வார். இன்றைய எபிஸோடும் அதேதான். பிக்பாஸ் எடிட்டிங் டீமில் இருந்தவர்களும் மண்டை காய்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
**
சரி, இன்றைய கதைக்கு வருவோம். நாள் 9 –ன் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னால் ஒரு சிறிய recap போட்டார்கள். அதைச் சற்று கவனமாகப் பார்த்திருந்தவர்களுக்கு இன்றைய நாளின் ஆங்காரச் சண்டைகளின் மூலக்காரணத்தை புரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாக்ஷியும் ஷெரீனும் பற்ற வைத்த நெருப்பே இன்று பயங்கரமாக வெடித்தது என்பது புரியும். அரையும் குறையுமாக காதில் விழுந்த உரையாடலை அவர்கள் எக்குத் தப்பபாக போட்டுக் கொடுத்தார்கள். இதற்காகவே காத்திருந்த வனிதா அதன் மேல் தாரளமாக பெட்ரோலை ஊற்றினார்.
என்னதான் நடந்தது? எனக்குப் புரிந்த அளவில் விளக்குகிறேன்.
வனிதா அண்ட் கோவிடம் நிகழ்ந்த சண்டையால் தான் தனிமைப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மீரா, முகினிடம் நட்பைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். எனவே அவரை அழைத்து “ஏன் இப்பல்லாம் என் கூட பேச மாட்டேன்ற” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயத்தில் அந்தப் பக்கம் கடந்து சென்ற சாக்ஷி, இந்த உரையாடலை மைக்ரோ செகண்டுகளில் மட்டும் கேட்டு விட்டு அரையும் குறையுமாகப் புரிந்து கொண்டு “மாப்பிள்ளைக்கு சின்ன சொம்பு வேணாமாம்.. பெரிய சொம்புதான் வேணுமாம்” என்கிற காமெடி மாதிரி “அபிராமி கூட முகின் பேசக்கூடாதாம். மீரா அவன் கிட்ட சொல்லிட்டு இருக்கா” என்று வனிதாவிடம் தப்பும் தவறுமாக போட்டுக் கொடுத்து விட, எதிரணியின் மீது எப்போதடா போர் தொடுக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிற வனிதாவிற்கு கிடைத்தது ஒரு கிலோ அவல் அல்லது ஒரு டஜன் வாழைப்பழம்.
முகினையே நேரடியாக அழைத்து பஞ்சாயத்திற்கான விதையைப் போடுகிறார் வனிதா. “மீரா அப்படியெல்லாம் சொல்லையே” என்று முகின் மறுக்க, ‘என்னடா இது சரியாவே பத்த மாட்டேங்குது” என்று சலிப்படைந்த வனிதா, மறுபடியும் சாக்ஷியிடம் சென்று “இன்னாடி.. இது மீரா.. அந்த மாதிரி சொல்லலையாமே?” என்று தூண்ட “அப்படித்தானே எனக்கு கேட்டுச்சு” என்று சாக்ஷி மழுப்ப முகினுக்கே இப்போது சற்று குழப்பமாகி விடுகிறது. ஒருவேளை மீரா சப்டெக்ஸ்டாக அப்படிச் சொல்லியிருப்பாளோ என்று.
எனவே அவர் என்ன செய்கிறார்... நேரடியாக மீராவிடம் சென்று ‘அபிராமி கூட பேச வேணான்னு என் கிட்ட சொன்னியா?” என்று கேட்கிறார். இதன் மூலம் உண்மையை வனிதா டீமிற்கு உணர்த்த முயல்கிறார். ஆனால் ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் மீரா ‘என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. வளருங்கப்பா.. சின்னப் பசங்களா” என்று எதிரணியின் மீது இருக்கும் கோபத்தை முகினிடம் காட்ட “ஏய்” என்று கோபமாகிறார் முகின்.
சம்பந்தப்பட்டவர்களை நேராக அழைத்து அவர்களின் எதிரிலேயே விசாரித்து பிரச்சினையை தீர்க்க நினைக்கும் முகினின் நேர்மை சரியானதுதான். ஆனால் அவர் அதைக் கொண்டு சென்ற விதம்தான் அபத்தமானது. “நானும் மீராவும் எங்களைப் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தோம். இது எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் சொன்னது போல் எதுவும் இல்லை” என்று கறாராக வனிதா டீமிடம் அவர் சொல்லியிருந்தால் பிரச்சினை அப்போதே அடங்கியிருக்கும்.
மாறாக நியாயத்தை நிலைநாட்டுவது போல மீராவைக் கொண்டு போய் எதிரணியிடம் கோர்த்து விட்டதுதான் அபத்தமானது. இதனால் பிரச்சினை இன்னமும் பெரிதானது.
ஒரு ஆண், சொந்தமாக முடிவெடுக்கத் தெரியாமல் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ மாறினால் அது எத்தனை கேவலமானதாக இருக்கும் என்பதை முகினின் செய்கை காட்டியது. ஒருபக்கம் வனிதாவின் தூண்டுதலை ஏற்றுக் கொண்டு அதன் படியும் ஆடினார். இன்னொரு பக்கம், பிறகு மீரா விளக்கம் அளித்த போது ‘ஸாரி” என்றும் சொன்னார். தாய்க்கும் மனைவிக்கும் இடையில் மாட்டிக் கொண்ட புதுமாப்பிள்ளையின் நிலைமை.
**
தன் ராவடி செய்கைகளால் முதல் சீஸன் காயத்ரியையும் அநாயசமாக முந்துகிறார் வனிதா. ஒவ்வொருவரிடமும் சென்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுப்பதும் சண்டை என்று வரும் போது அதிகாரத்துடன் கத்துவதும் என்று இவரின் உடல்மொழியைக் காணவே அத்தனை அருவருப்பாக இருக்கிறது.
பாத்திமா பாபு குறிப்பிட்டதைப் போல மீராவிற்காக குறிவைத்து எய்யப்பட்ட ஆயுதம் எந்தக் கணத்தில், எப்போது மதுமிதாவை நோக்கி பாய்ந்தது என்பது விசித்திரம்.
“மீரா.. மதுமிதா கிட்ட பேச வேணாம்னு யார் கிட்டயாவது நாங்க சொன்னோமா?” என்று ஒரு பொதுப்பஞ்சாயத்தை சாக்ஷி எழுப்ப.. எல்லோருமே மறுத்தார்கள். ஆனால் மதுமிதா மட்டும் ‘ஏன் இதுல என் பெயர் ஏன் வந்தது.. சம்பந்தப்பட்டவங்க கிட்ட மட்டும் கேட்டிருக்கலாமே?” என்று கேட்க ஷெரீனுக்கும் மதுமிதாவிற்கும் இதனால் மோதல் வந்தது.
“பாத்து நடந்துக்கப்பா” என்று ஒரு அக்கா நிலையில் முகினிடம் மதுமிதா முன்பு ஆலோசனை சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. சாக்ஷியைப் போலவே ஷெரீனும் இதை அரைகுறையாக கேட்டு விட்டு இந்தச் சமயத்தில் அதை சரியாகப் பற்ற வைத்தார்.
‘தமிழ்ப்பொண்ணு’ என்கிற கமெண்ட் ஷெரீனை பயங்கரமாக பாதித்திருக்கிறது போல. அதை வைத்துக் கொண்டு மதுமிதாவிடம் அவ்வப்போது புகைந்து கொண்டே இருக்கிறார். ரவுடியாக மாறி எகிறிக் கொண்டே இருக்கிறார். மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.
மதுமிதாவும் சளைக்காமல் பதிலுக்கு ஷெரீனிடம் எகிற ‘அவங்க லெவல் எல்லாம் அப்படித்தான்” என்று வர்க்க ரீதியான திமிரைக் காட்டினார் வனிதா. அதாவது இவங்க ஹைகிளாஸாம். எல்லாருமே பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக குப்பை கொட்ட வந்திருக்கிறார்கள். இதில் என்ன.. ஹைகிளாஸ்.. லோகிளாஸ்.. ‘தமிழப்பொண்ணு’ மாதிரியே இதுவும் பயங்கரமான discrimination கமெண்ட்.
**
“முகினை உன்னுடன் பழக விடாமல் மதுமிதாவும் மீராவும் சேர்ந்து தடுக்கிறார்கள்’ என்கிற வதந்தியை அபிராமியிடம் வனிதா பற்ற வைத்தார். கவின், சாண்டி உள்ளிட்ட ஒரு குழுவே படுத்துக் கொண்டு இதை உரையாடியது.
வனிதா சொல்லித் தந்த படி முகினை ஆவேசமாக அழைத்துக் கொண்டு பொதுவில் வந்து ஏதோ முக்கியமான அறிவிப்பு மாதிரி ‘சீன்’ காட்டினார் அபிராமி. தன் அறிவிப்பு மீராவின் காதில் விழ வேண்டும் என்பதற்காக அவர் படுக்கை அறையின் கதவைத் திறந்து வைத்ததெல்லாம் பயங்கர காமெடி. ‘அவர்கள் அப்படித்தான் பேசினார்களா?” என்பதை உறுதி செய்து கொள்ளாமல் இப்படி பேயாட்டம் ஆடியது சகிக்கக்கூடியதாக இல்லை. கத்துவதையெல்லாம் கத்தி விட்டு “உங்களுக்குப் பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோங்க” என்று அம்மணி கத்தி விட்டுச் சென்றது எரிச்சலாக மட்டுமில்லை. நகைச்சுவையாகவும் இருந்தது. (இவரு…ரிசர்வ் பாங்க் வேலையை ரிசைன் பண்ணிட்டு போறார்ரோவ்..)
தங்களைப் பற்றி பேசப்படும் வம்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அபிராமி நினைத்தது சரி. ஆனால் அந்த வம்பு உண்மையில் பேசப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பிறகு இதைச் செய்ய வேண்டும். வனிதா டீமின் தூண்டுதலின் பேரில் செய்வது மோசமானது.
ஏதோ முகினையும் அபிராமியையும் பிரிக்க உலக நாடுகள் எல்லாம் இணைந்து சதி செய்வதாக இவர் கற்பனை செய்வது கொள்வது நகைச்சுவையாக இருக்கிறது.
அபிராமியின் கற்பனை இப்படியிருக்க, லாஸ்லியா ஆர்மியைச் சேர்ந்தவர்களின் கடுப்பு இப்படியாக இருந்திருக்கலாம்.
“ஐய்யய்ய.. எங்க கவலையெல்லாம் லாஸ்லியா செல்லத்தை எவனாவது சிரிச்சு சிரிச்சு.. உஷார் பண்ணிடுவானோ, இந்தப் புள்ளயும் எங்கயாவது விழுந்துடுமோ’ன்னுதான் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு பீதியோட உக்காந்திருக்கோம். அது புரியாம.. நீ வேற.. குறுக்கும் நெடுக்கும் ஓடிட்டு இருக்க. நீ எக்கேடுன்னா கெட்டுப் போ.. மோகன் வைத்யாவைக் கூட லவ் பண்ணிக்க.. எங்களுக்குப் பிரச்சினையே இல்ல.”
**
முகினின் கோபத்தை சேரன் ஹேண்டில் செய்த விதம் அருமை மட்டுமல்ல முதிர்ச்சியானதும் கூட. “வா.. இங்க வந்து கொஞ்சம் நேரம் அமைதியா உக்காரு.. யார் கிட்டயும் பேசாத. இந்த வீட்ல பேசறதுக்கு உரிமையிருக்கு. ஆனா கத்தறது.. வயலன்ஸ் காட்டறதுக்கு யாருக்கும் உரிமையில்ல. பார்த்துக்க.. உன் பேரும் கெட்டுடும்’ என்று சரியான சமயத்தில் உரிமையாக ஆலோசனை சொல்ல, அதை உடனடியாக கேட்டுக் கொண்டு அடங்கினார் முகின்.
ஆனால் இதை இப்படியே விட்டுட்டா எப்படி என்று ஆங்காரமான வனிதா, முகினை தனிமையில் அழைத்து “ஒரு ஆம்பளையா.. மீரா கிட்ட நீ கத்தினது சரியானது. ஆனா அடிக்கப் போயிருந்தா நானே உன் சட்டையைப் பிடிச்சிருப்பேன். உனக்கு கத்தறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. யாரும் கேட்க முடியாது” என்று மறைமுகமாக சேரனுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
“ஒரு ஆம்பளையா நீ அடிச்சிருந்தா கூட சரி. ஆனா ரத்தம் வர்றா மாதிரி அடிக்கக்கூடாது” என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லுவார் போலிருக்கிறது. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப வன்முறையை நிறையச் சந்தித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டவர் வனிதா என்று தெரிகிறது. ஆனால் அவரே ஓர் ஆணின் வன்முறையை ஆதரித்துப் பேசுவது ‘மாமியார் குணத்தைக்’ காட்டுகிறது.
**
வனிதா டீமின் ராவடித்தனங்களை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே இத்தனை எரிச்சல் வரும் போது நேரடியாக பார்க்கும் அமைதிப்புறாவான லாஸ்லியாவிற்கு எரிச்சல் வராதா என்ன? வந்தது. அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரைச் சுற்றி இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது எப்படி அவரால் நிம்மதியாக சாப்பிட முடியும்? எனவே தன் எரிச்சலைக் காண்பிக்கும் விதமாக நாற்காலியைத் தள்ளி விட்டு கோபத்துடன் எழுந்து சென்றார்.
மதுமிதாவுடன் லாஸ்லியா இணைந்து கொண்டார் என்கிற சந்தேக காண்டில் ஏற்கெனவே இருக்கும் வனிதா இதற்கு கவலைப்படவில்லை. “பிக்பாஸ்ல வர்றவங்களுக்கு இதெல்லாம் நடக்கும்-னு தெரியாதா?” என்று சொன்னது வேறு லாஸ்லியாவை கூடுதலாக காயப்படுத்தியது. தன்னைப் போலவே மற்றவர்களும் ரவுடிகளாகத்தான் இருப்பார்கள் என்கிற சித்திரத்தை உருவாக்க முயல்கிறார் வனிதா. சென்சிடிவ்வான மனிதர்களும் இந்த உலகில் இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரிய வேண்டும்.
ஒருவர் டென்ஷனாகி தனிமையை நோக்கிச் சென்றால் அவர்களை தற்காலிககமாக அப்படியே விட்டு விடுவதுதான் நட்பிற்கு அழகு. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தையும் உபயோகிக்க முயன்ற கவின், லாஸ்லியாவை கக்கூஸ் வரைக்கும் துரத்திச் சென்றது எரிச்சல். அப்பாஸ், கணேஷ் வெங்கட்ராமனுக்குப் பிறகு ‘ஹார்பிக்’ விளம்பரத்தில் நடிக்க ஏற்றவர் இவரே. கூச்ச நாச்சமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்கிறார்.
லாஸ்லியாவின் மெளனமான கோபத்தை வனிதா இடதுகையால் நிராகரித்தாலும், அது அபிராமிக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே அவரை அழைத்துப் பேசுகிறார். கூடவே மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து அமர்ந்தார் ஷெரீன்.
“பாருங்க.. உங்க மூணு பேரையும் எனக்குப் பிடிக்கும். ஆனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நீங்களாக அதற்கு முடிவெடுங்க. சம்பந்தப்பட்டவங்க கிட்ட போய் நேரா பேசுங்க” என்று லாஸ்லியா சொன்ன விதம் சிறப்பு மட்டுமல்ல, முதிர்ச்சியும் கூட. இதன் மறைமுக நீதி “வனிதா மாதிரியானவங்க சொல்றதைக் கேட்டுட்டு மூளையில்லாம ஆடாதீங்க மூதேவிங்களா” என்பதுதான்.
“தனிமைப்படுத்துதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நான் அனுபவிச்சிருக்கேன். அதனால்தான் மதுமிதாவிடம் சென்று நானாக பேசினேன்” என்று அவர் சொன்னதும் உணர்வுபூர்வமானது.
இதே போல் பின்பு முகினிடம் பேசும் போதும் “நீங்க ரெண்டு பேரும் என்ன பேசினீர்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தெரியும்..இல்லையா,? எனில் நீங்கள் உறுதியாகச் சொல்லியிருக்கலாமே” என்று லாஸ்லியா சொன்ன பிறகுதான் முகினுக்கும் தன் தவறு புரிந்தது. “ஏற்கெனவே அவ டிப்ரசன்ல இருக்கா” என்று மீராவைப் பற்றி மதுமிதாவும் சொன்னார்.
**
இத்தனை அமர்க்களம் நடந்து முடிந்த பிறகு “என்னாச்சு” என்று தலையில் அடிபட்ட விஜய்சேதுபதி மாதிரி மீரா எழுந்து கேட்க ‘ஐய்யய்யோ.. முதல்ல இருந்தா..” என்று நமக்கு பீதியாக இருந்தது. நல்ல வேளையாக சுருக்கமாக அந்தக் காட்சி முடிந்தது. அத்தனை விஷயத்தையும் தூங்குவது போல் மீரா கேட்டுக் கொண்டுதான் இருந்தார் என்பது தெரிகிறது. ஆனால் அப்போதே எழுந்து வந்து ஜோதியில் கலந்து சூழலை இன்னமும் அசிங்கமாக்காமல் அமைதியாக இருந்தது சிறப்பு.
‘தான் செய்வது சரி’ என்கிற பிடிவாதத்தைத் தவிர மீராவிடம் பெரிதாக எந்தக் குறையும் இல்லை என்பதைக் கவனிக்க முடிகிறது.
“யோவ்.. நீதான்யா.. இப்ப கேப்டன்.. ஏதாவது வாயைத் திறந்து பேசுய்யா” என்று பாத்திமா சுட்டிக் காட்டியதும் ‘இதோ பாருங்கோ.. அது வந்து.. நான் வயசுல பெரியவன் சொல்றேன்.. கேட்டுக்கோங்க” என்று பூர்ணம் விஸ்வநாதனாக மாறி பம்மினார் மோகன் வைத்யா. மீராவிடம் முன்பு காட்டியதில் துளி கூட கோபம் கூட இப்போது இல்லை. காரணம் எதிரில் இருப்பவர் வனிதாவாயிற்றே? ‘ஒன்று போட்டால் என்னாவது?”
**
மறுநாள் காலையிலும் வனிதாவின் அலப்பறைகள் தொடர்ந்தன. தனது தலைவர் பொறுப்பு இன்னமும் அமலில் இருப்பது போலவே நடந்து கொண்டார். ‘சமையல் இடத்தை க்ளீன் பண்ணச் சொல்லுங்க” என்று சேரனுக்கு மறைமுகமாக நெருக்கடி தர முயல, சேரன் அதை சிறப்பாகக் கையாண்டார். “காலையிலேயே எல்லாம் முடிச்சாச்சு.. இங்க சமையல் செய்யறவங்க அசுத்தம் பண்ணாம பார்த்துக்கணும்” என்று விளக்கம் அளிக்க வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை.
பிறகு மோகனை அழைத்த சேரன் “ஏதாவது சொல்றதா இருந்தா.. கேப்டன்’ற முறையில் நீங்க வந்து என்கிட்ட சொல்லுங்க” என்ற போது .. சபாஷ்!.. அப்படிச் சொல்லு கோப்பாலு” என்று ஆனந்தமாக இருந்தது. அதற்கும் “பூர்ணம் விஸ்வநாதன்’ எபெக்டை கொடுத்தார் மோகன்.
இத்தனை கலாட்டாக்களையும் கவனித்துக் கொண்டிருந்த சரவணன், “யப்பா.. சாமிகளா.. இங்க இருந்தா.. நான் மென்ட்டல் ஆயிடுவேன். என்னைக் கழட்டி விடுங்க. நான் போறேன்” என்று பீதியுடன் காமிராவைப் பார்த்து பேசினார்.
“சரவணன்.. அது உங்கள் கோரிக்கை மட்டுமல்ல.. பார்வையாளர்களாகிய எங்கள் கோரிக்கையும் அதுவேதான்”
**
ஒரு சிறிய தகவல் இடைவெளி எத்தனை பெரிய பஞ்சாயத்தைக் கூட்டியது என்பதுதான் இன்றைய நாளின் நீதி.
சிலம்பைத் திருடியவன் பிடிபட்டான்' என்கிற தகவலைக் கேட்டவுடன் 'கொண்டு வாருங்கள்' என்று மன்னர் உத்தரவிடுகிறார். அது 'கொன்று வாருங்கள்' என்பது போல் காவல் அதிகாரிகளுக்கு கேட்க கோவலனின் மரணம் நிகழ்ந்ததாக சிலப்பதிகாரம் குறித்து ஒரு கதை சொல்வார்கள்.
ஒரே எழுத்துதான் வித்தியாசம். ஒரு ஆசாமியின் உயிரே போயிற்று.
suresh kannan
6 comments:
எவ்வளவு அழுத்தமாக பார்த்திருக்கிங்க என்பது புரிகிறது. அப்பப்போ லாஸ்லியா வார்த்தை மொழி களையும் நீங்க குறிப்பிடலாம். உதாரணமாக ---------இயலாது............
உண்மையாகவே உங்களது விமர்சனம் பார்த்தால் தான் அந்த நாள் முழுமை அடைகிறது
ப்பா... அபாரம்
Epic
மிகத் தெளிவாக கிரஹித்து எழுதி இருக்கீங்க..����
நேத்து பிக் பாஸ் பார்த்தப்ப முந்தி சின்ன புள்ளையா இஸ்கூல் படிக்கறப்போ ஒரு விளம்பரம் தூர்தர்ஷனில் போடுவாங்க அது நினைவில் வந்தது .குழந்தை ஒன்று பலூனை ஊதி படீரென வெடிக்கும் சத்தம் மட்டுமே கேட்டு ரோட்டில் ஒருவர் கியாஸ் வெடித்ததில் ஆரம்பிச்சு கணவன் மனவி சண்டை டு கொலையோ எனுமளவுக்கு gossip பரப்பி பெரிதாக்குவாங்க அதுதான் நேற்றைய சம்பவமும் .
/// ஒரு ஆண், சொந்தமாக முடிவெடுக்கத் தெரியாமல் ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ மாறினால் அது எத்தனை கேவலமானதாக இருக்கும் // மிக அருமையான கூற்று
கவினின் செய்கைகள் அருவருப்பைமற்றும் வெறுப்பை இன்க்ரீஸ் செய்வது போல் எனக்கு தோன்றுகிறரது
கொஞ்சம் பார்த்துதான் டெலிகாஸ்ட் பண்ணனும் இந்த தொடரை பெருவாரியான ஆண்கள் ayyo பெண்களே வேண்டாம்னு ஓடும் அபாயமுண்டு அந்த நால்வரணியை பார்த்து .உங்கள் விமரிசனம் அருமை ..இதையெல்லாம் கமல் சார் பார்த்து அவரது மேற்கோளில் காட்டினால் நன்றாக இருக்கும் .அனைவரின் பெர்ஸ்பெக்டிவ்ஸ்சும் முக்கியம் அல்லவா .
Post a Comment