Monday, January 09, 2017

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

 
 
 
'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?" 
 
இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற  ஒரு  காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.
 
ஏப்ரல் 10, 2002  அன்று  சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும்  கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை  நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். 'அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.
 
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார்.  அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

'கண்டேன் சீதையை' என்று அனுமன் சொல்வது போல 'அழைத்தார் பிரபாகரன்' என்பது நூலின் அழகான தலைப்பு.
 
எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

***

அழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
தமிழ்அலை வெளியீடு, பக்கங்கள் 48, விலை ரூ.50/-
 
(அலமாரி இதழில் பிரசுரமான மதிப்புரை)
 
suresh kannan

No comments: