Wednesday, January 04, 2017

தமிழில் இருக்கிறதா சிறுவர் சினிமா?



மனஅழுத்தம் என்பது  பெரும்பாலும் வயதில் பெரியவர்களுடன் தொடர்புடைய சொல்லாகத்தான் பொதுவாக  இதுவரை அர்த்தம் கொண்டிருந்தது. இளம் பருவத்தினருக்கோ, சிறார்களுக்கோ  அந்தச் சொல்லுடன்  தொடர்பு இல்லை என்றும் அப்படியே சமயங்களில் அது வெளிப்பட்டாலும் எள்ளலாகவே கருதப்பட்டது. எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தை, 'ஒரே டென்ஷன்' என்று அலுத்துக் கொள்ளுமானால் அது  சுற்றத்தாலும் உற்றத்தாலும் நகைச்சுவையானதாகவே பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இதை தீவிரமாக அணுகக்கூடிய ஒரு சூழலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ பெரியவர்களின் உலகத்திற்கு நிகராக சிறார்களின் உலகமும் பல்வேறு அக/புற அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றன.

கல்வி என்பது அறிவது என்கிற ஆதாரமான அடையாளத்தையும் நோக்கத்தையும் இழந்து பொருளீட்டும் பாதைக்கான கருவியாகவே மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் ஆர்வமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவர்கள் மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள். அதிக மதிப்பெண்ணை ஈட்டுபவன்தான் புத்திசாலித்தனமான மாணவன் என்று நம்ப வைக்கப்படுகிறது. கல்வி என்பது சேவையாக அல்லாமல், சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான அடுத்த இளையதலைமுறையை உருவாக்குகிறோம் என்கிற தொலைநோக்கு அல்லாமல் பெரும்பாலான கல்வி நிலையங்கள் முற்றிலும் வணிக நோக்கத்திற்கு இணக்கமானதாக மட்டுமே இயங்கத் துவங்கியிருக்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டி வெளியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள், கல்வி நிறுவனங்களாலும் பெற்றோர்களாலும் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பு உடைந்து தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலை வந்தடைந்திருக்கிறோம். அதிலும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குடும்பங்கள் ஒற்றைக் குழந்தையோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார்கள். தனிவீடுகள் மெல்ல மறைந்து அடுக்குமாடி கலாச்சாரம் பெருகிற கட்டிடங்ககளில் எல்லா வீட்டின் கதவுகளும் பெரும்பாலும் சாத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விளையாடுவதற்கும் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சக வயது நட்போ, சகோதரத்துவமோ அல்லாத, கதை சொல்வதற்கு தாத்தா, பாட்டிகள் துணையோ அல்லாத மன இறுக்கத்துடன் தனிமையில் வளர்கிற சிறார்கள் பெருகி வருகிறார்கள்.

விளையாட்டு மைதானங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. விளையாட்டு நேரங்கள் திருடப்பட்டு  பாடத்திட்டங்களை திணிக்கும் வன்முறை  நேரமாக மாற்றப்படுகின்றன. பொருளீட்டும் வாய்ப்பு  அதிகமிருக்கும் துறை தவிர இதர துறைகளின் ஆர்வங்கள் மறுக்கப்படுகின்றன;  கேலியாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய அவலம் நிறைந்த சூழலில் பெரும்பாலான சிறார்களின் பொழுதுபோக்கு என்பது சினிமா, வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் என்று மூளையையும் கண்களையும் பாதிக்கிற அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குறுகிய வெளியில் நிகழும் இயக்கமாக மட்டுமே உள்ளது. இளம்பருவம் என்பது உடலில் செயல்திறன் அதிகம் பெருகி வழியும் காலக்கட்டமாகும். ஓடியாடி செலவழிக்கப்பட வேண்டிய அந்த செயல்திறன் அவ்வாறான வாய்ப்பில்லாமல் அடைபடுவதும் பல்வேறு உளச்சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் வழியாக மாறுகிறது.

***

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதானமான பொழுதுபோக்கு என்பது சினிமா என்பதின் மீதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.  திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களைத் தவிர, தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி என்று இதரபிற பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பாலானவற்றைத் தாண்டி நம்முடைய அன்றான உரையாடல்களிலும் சினிமா தொடர்பான அம்சங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. பெரியவர்களே சினிமாவை சுவாசித்துக் கொண்டிருக்கும் போது வளரிளம் பருவத்தினருக்கும் அதுவே  பொழுதுபோக்கு வாய்ப்பாக இருப்பது ஒரு நடைமுறை அவலம்.

இப்படி தவிர்க்கவே முடியாத ஒரு விஷயமாக நம் சூழலில் சினிமா இருக்கும் போது, அது சிறார்களின் பார்வைக்கும் மனநிலைக்கும் இணக்கமானதாக இருக்கிறதா, அவர்களின் உலகத்தை சரியாக பிரதிபலிக்கிறதா, இளம் பருவத்தினருக்கேயுரிய பிரத்யேகமான சிக்கல்களை பேசுகிறதா என்றால் இல்லை என்கிற துரதிர்ஷ்டமான பதில் மட்டுமே நம்மிடம் இருக்கிறது.

சிறுவர் சினிமா என்றாலே நமக்கு இரானிய திரைப்படங்களின் நினைவு மட்டுமே உடனே வருகிறது. அந்த அளவிற்கு சிறுவர்களின் புறவுலகை, அகம் சார்ந்த பிரச்சினைகளை, சிக்கல்களை அந்தப் பிரதேசத்தின் சினிமாக்கள் அற்புதமாக விவரிக்கின்றன. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அப்பாஸ் கியரோஸ்தமி இயக்கிய Where Is the Friend's Home? என்கிற அற்புதமான  திரைப்படத்தை சொல்லலாம்.

தனது நண்பனின் வீட்டுப்பாட புத்தகத்தையும் சேர்த்து தவறுதலாக கொண்டு வந்து விடுகிறான் ஒரு சிறுவன். தன் நண்பன் ஆசிரியரிடம் தண்டனை பெறக்கூடாதே என்பதற்காக புத்தகத்தை அவனிடம்  தருவதற்காக பக்கத்து கிராமத்தில்  இருக்கும் நண்பனின் வீட்டை தேடிச் செல்லும் பயணம்தான் இத்திரைப்படம். சிறார்களின் களங்கமில்லாத உலகில் இந்தச் சமூகம் எந்தெந்த வகையில் எல்லாம் தம் அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பதை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் விவரிக்கிற திரைப்படம் இது.

போலவே பிரெஞ்சு திரைப்படங்களும் சிறார்களின் உலகத்திலுள்ள சிக்கல்களைப் பற்றி தீீவிரமாக உரையாடுகின்றன. உதாரணத்திற்கு The Kid with a bike என்கிற திரைப்படம் தந்தையின் அன்பு நிராகரிக்கப்படும் ஒரு சிறுவன் எவ்வாறு மூர்க்கமாக மாறுகிறான் என்பதையும் பின்பு கனிந்து மனம் திரும்பும் விதத்தையும் இயல்பான திரைமொழியில் விவரிக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

***

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு சிறந்த உதாரணத்தை சட்டென்று சொல்லி விடமுடியவில்லை. மேலைய நாடுகளில் இருப்பதைப் போன்று மையநீரோட்ட வெளியில் சிறார்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் திரைப்படங்களோ, அப்படியொரு வகைமையோ, அதற்கான வணிகச் சந்தையோ இங்கு இல்லை. அவ்வாறான வழக்கமும் இங்கு இல்லை. அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய வைக்கும் 'கூட்டு அவியல்' திரைக்கதையுடன்  ஒரு வணிகப் பண்டமாகவே சினிமா உருவாக்கப்படுகிறது.

1955-ல் ஏற்படுத்தப்பட்ட Children's Film Society என்கிற அரசு சார்ந்த அமைப்பு, இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்படும் திரைப்படங்கள் பொதுவெளியில் பரவலாக அறிமுகமாவதில்லை. விருது பெறும் திரைப்படங்களை  பார்க்கும் ஒரு குறுகிய வட்டத்து அறிவுசார் மக்களிடையே மட்டும்தான் அவை காணக் கிடைக்கின்றன.

இதைப் போலவே சென்சார் சான்றிதழ்களுக்கும் நடைமுறையில் இங்கு எவ்வித மதிப்புமுமில்லை. U சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை  அனைவரும் பார்க்கலாம், UA சான்றிதழ்  என்றால் 12 வயதிற்கு குறைவான வயதுள்ள சிறார்கள், பெரியவர்களின் துணையுடன் பார்க்கப்பட வேண்டியது, A என்றால் அது வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டியது என்கிற தகவல்கள் பொதுவாக அறிந்திருக்கப்பட்டாலும். வன்முறைக்காட்சிகளும் ஆபாசக்காட்சிகளும் நிறைந்திருக்கும் ஒரு வணிகப்படத்தை, எவ்வித விழிப்புணர்வும் குற்றவுணர்வும் இன்றி குழந்தைகளோடு  பார்க்கும் கலாசாரமே நடைமுறையில் உள்ளது.

ஒருவேளை இதில் தவற விடும் வாய்ப்புகளை, தொலைக்காட்சிகள் வரவேற்பறைக்குள்ளேயே நுழைந்து குழந்தைகளை பார்க்க வைக்கும் சேவையைப் புரிகின்றன. கொச்சையான பாலியல் அம்சங்கள் மிகுந்திருக்கும் திரையிசைப் பாடல்களின் பொருள் ஏதும் அறியாமல், அந்தப் பாடல்களைப் பாடும், அதே போன்ற உடலசைவுகளுடன் நடனமாடும், குழந்தைகள் கலந்து கொள்ளும் 'ரியாலிட்டி ஷோக்களை' கண்டால் ஒருபக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளை உருவாக்கும் தொலைக்காட்சிகளுக்குத்தான் எவ்வித பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் இல்லை என்றால், விளம்பர ஆசையில் பெற்றோர்களுக்கும் இவ்வித உணர்வு இல்லாமல் போவது கொடுமையானது.

***

சிறுவர்கள் பெரும்பாலான காட்சிகளில் காட்டப்பட்டால் அது சிறுவர் சினிமா என்கிற ஒரு அசட்டு நம்பிக்கையும் புரிதலும் இங்கு இருக்கிறது.  அந்த திரைப்படங்கள் பிரத்யேகமாகவும் முழுமையான அக்கறையுடனும் சிறார்களின் சிக்கல்களைப் பற்றி பிரத்யேகமாக உரையாடுகிறதா என்பதையே முக்கியமாக கவனிக்க வேண்டும்.

சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் பெரும்பாலான சிறார்களின் பாத்திரங்கள் பெரியவர்களின் உடல்மொழியை பாவனை செய்பவர்களாக, துறுதுறுவென உள்ளவர்களாக, வயதிற்கு மீறிய செயல்களைச் செய்கிறவர்களாகவே உள்ளார்கள். சிறார்களின் உலகிற்கு என்றுள்ள பிரத்யேகமான இயல்பும் அழகியலும் பெரும்பாலான திரைப்படங்களில் இல்லை. டெய்சி இரானி நடித்த 'யார் பையன்?' (1957), குட்டி பத்மினி இருவேடங்களில் நடித்த 'குழந்தையும் தெய்வமும்' (1965) போன்ற சில உதாரணங்களைக் கவனித்தால், தமிழ் சினிமாவின்  வழக்கப்படி கூட்டு அவியலாக உருவாக்கப்பட்ட திரைக்கதையில் இந்த துறுதுறு குழந்தைகள் பெரும்பாலான காட்சிகளில் வருவார்கள், அவ்வளவுதான். மணிரத்னத்தின் 'அஞ்சலி' திரைப்படம் வெளிவந்த தொன்னூறுகளின் காலக்கட்டம் வரையும் கூட இதுதான் நிலைமை. காதலர்களுக்கு உதவி செய்யும் குழந்தைகளின் அபத்தமான காட்சிகள் இதில் இருந்தன.

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் மரபணு உள்ளிட்ட பல காரணங்களால் தனித்தன்மையான குணாதிசயங்கள் இருக்கும். ஆனால் கொழுகொழு, துறுதுறு குழந்தைகள்தான் புத்திசாலித்தனமான, ரசிக்கத்தக்க குழந்தைகள் என்கிற மாதிரியான மனோபாவமும் அசட்டு நம்பிக்கையும் பொதுவெளியில் உறுதிப்பட இவ்வாறான திரைப்படங்கள் உதவி செய்தன. தங்களின் பிள்ளைகள் இவ்வாறான உடல்மொழியை, பாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசையை  கொண்டிருக்கிற, அதற்கான திணிப்புகளை குழந்தைகளிடம் மேற்கொள்கிற பெற்றோர்கள் மிகுந்திருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது.

***

சில சிறார்களிடம் கற்றல் திறனில் இருக்கும் சிக்கல் தொடர்பாக கவனிக்கப்படாமல் இருந்த Dyslexia என்கிற குறைபாட்டைப் பற்றி பொதுவெளியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படமாக 'தாரே ஜமின் பர்' (2007) -ஐ சொல்லலாம். இந்தக் குறைபாட்டினால் அவதியுறும் ஒரு சிறுவனைப் பற்றி பிரதானமான உரையாடலை மேற்கொண்ட திரைப்படம் இது. இதன் திரைக்கதை வணிகக் காரணங்களுக்காக வேறு எங்கும் அலைபாய்வதில்லை. தனது மையத்தைக் குறித்தான கவனமும் அக்கறையும் இத்திரைப்படத்தில் இருந்தது சிறப்பு. இந்த நோக்கில் ஏறத்தாழ இதே அக்கறையுடன் தமிழில் வெளிவந்த திரைப்படமாக 2013-ல் வெளிவந்த 'ஹரிதாஸ்' திரைப்படத்தைச் சொல்லலாம். இதில் வணிகநோக்கு அம்சங்கள் கலந்திருந்தாலும் 'ஆட்டிஸம்' எனும் குறைபாடுள்ள சிறுவனின் விளையாட்டு ஆர்வத்தை மையப்படுத்திய திரைப்படம்.

சில வருடங்களுக்கு முன், கணையாழி குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட, ரவிச்சந்திரன் சுப்ரமணியன் எழுதிய 'கர்னல் தோட்டத்துக் கணக்கு' என்கிற படைப்பை வாசித்து பிரமித்தேன். சிறார்களின் உலகை மிகவும் யதார்த்தத்துடன் சித்தரிருந்தது அந்தக் குறுநாவல். அது போன்றதொரு இயல்பான படைப்பு சினிமாவில் சாத்தியமா என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அந்த ஆவலை சற்று தணிக்கும் படியாக வந்தது, பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க'. (2009). பொதுவாக சிறார்களை 'புனிதப்படுத்தி' களங்கமில்லாத வெள்ளந்திகளாக சித்தரிக்கும் போக்கிலிருந்து விலகி, அந்த உலகிற்கேயுரிய போட்டிகளை நகைச்சுவைப் பூச்சோடு சொன்னது. இது சிறுவர்களுக்கான பிரத்யேகமான படைப்பாக அல்லாமல் வணிக சினிமாவின் கூறுகளோடு இணைந்திருந்தது ஒரு பலவீனம். இதே இயக்குநர் இயக்கிய பசங்க -2, சிறார்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக இருந்தாலும் முற்றிலும் நாடகத்தனமான ஒவ்வாமையைக் கொண்டிருந்தது.

இந்த வகையில் இயக்குநர் ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படம். குழந்தைகளின் தனித்தன்மைகளை, அவர்களின் கற்பனையுலகை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கல்விக்கூடங்கள் அவர்களை  பிராய்லர் கோழிகள் போல் ஆக்கும் நிற்கும் அவலத்தைச் சொன்னாலும் குடும்ப வன்முறை, உலகமயமாக்கம் என பல்வேறுவிதமாக அலைபாய்ந்ததில் மையத்திலிருந்து விலகிப் போனது.

இவ்வாறான சில மாற்று முயற்சிகள் சமீபத்தில் உருவாகி வருவது பாராட்டத்தக்கது என்றாலும் சிறார்களின் உலகை மையப்படுத்தி ஒரு தீவிரமான சினிமா தமிழில் இதுவரை உருவாகவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. அந்த சினிமா சிறார்களின் பிரச்சினைகளை, சிக்கல்களைப் பற்றிய படமாக இருக்க வேண்டியது கூட அவசியமில்லை. அவர்களின் உலகை இயல்பானதாக, கொண்டாட்டமானதாக, நல்லியல்புகளை அவர்களுக்குகள் விதைப்பதாக இருப்பதாக இருந்தாலும் சிறப்பே.

ஹாலிவுட்டில் அனிமேஷன் திரைப்படங்களுக்கென ஒரு வணிகச்சந்தை இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் அம்மாதிரியான வகைமைகளை தீவிரமாக முயலலாம். அவ்வாறான கலாசாரம் இங்கு உருவாவது படைப்பாளிகளின் கையில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் தரப்பும் இணைவதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.

சிறார்களுக்கான சினிமா என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல. தாங்கள் கடந்த வந்த இளம்பருவ பாதையை மறந்து பெரியவர்களாக மட்டுமே இயங்குபவர்களுக்கும் கூட அவசியமானது. 

(' புத்தகம் பேசுது'  - அக்டோபர் 2016 இதழில் பிரசுரமானது)


suresh kannan

No comments: