Monday, July 08, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”


கமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள்.

‘வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும்’ என்கிற விளையாட்டில் மதுமிதாவை விட்டு விட்டு மீராவைத் தேர்ந்தெடுத்தற்காக அபிராமியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது வனிதா அண்ட் கோ. “உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா?” என்று அவரை சரமாரியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் வனிதா. இதற்கு ஜால்ரா போட அவரைச் சுற்றி ஷெரீன் உள்ளிட்ட வானரங்கள்.

உண்மையில் அபிராமி மதுமிதாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் “நான் உனக்கு மென்ட்டரா இருந்து நெறய பண்ணியிருக்கேன். ஞாபகம் இருக்கா?” என்றெல்லாம் மீரா இம்சை செய்ததற்குப் பிறகு அவரின் டார்கெட் மாறியிருக்கும் என்று தோன்றுகிறது.

“உனக்காகத்தானே.. இந்தப் பிரச்சினையில் உன்னோடு நின்றோம். நீயே மாறி செயல்படலாமா?” என்று வனிதா அண்ட் கோ கோபத்தோடு கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் நட்பு என்பது ஜனநாயகத்தன்மையோடும் இருக்க வேண்டும். தாம் விரும்பியதைத்தான் தன் நண்பர்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி ஒருவேளை செய்து விட்டால் அதற்காக விரோதம் பாராட்டக்கூடாது. “இப்படி பண்ணிட்டியே?’ என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு நட்பைத் தொடரலாம். அல்லது அதற்கான காரணங்களை விசாரித்து நண்பரின் நோக்கில் நியாயமான காரணங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

வீட்டை விட்டு வெளியேறும் விளையாட்டு என்பது திடீர் என அறிவிக்கப்பட்டதொன்று. எனவே அந்தச் சமயத்தில் ‘சரி’ என்று தோன்றியதை அபிராமி செயல்படுத்தியிருப்பார். இந்த உணர்வை இதர நண்பர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் நல்ல நட்பிற்கான அடையாளம்.

அபிராமியுடன் நிகழ்ந்த காரசாரமான உரையாடலின் இடையில் வனிதா அடிதத ஒரு கமெண்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. “நான் யார் கூடயாவது சண்டை போட்டிருக்கனா?” (ரத்த பூமியில் போர்க்கள மனநிலையிலேயே  எப்போதும் வாழும் ஒருவர் பேசுகிற பேச்சா இது?!)

**

வனிதாவால் நிராகரிக்கப்பட்டதால் “நான் வீட்டுக்குப் போகணும்” என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார் அபிராமி. சாக்ஷி வெளியேற தான் காரணமாகி விடுவோமோ என்கிற குற்றவுணர்வும் இதனுடன் இணைந்து கொண்டது. குழுவாக இருக்கும் போது அந்தத் துணிச்சலில் ராவடி செய்கிறவர்கள், தனிமைப்படுத்தப்பட்டால் பயந்து நடுங்குகிறார்கள். அபிராமி, மீரா, மதுமிதா என்றொரு வரிசை இப்படித்தான் இருக்கிறது.

பஸ் டே உள்ளிட்டு பல கலாட்டாக்களைச் செய்யும் கல்லூரி மாணவர்கள், கேங்காக இருக்கும் போது பல குறும்புகளைச் செய்வார்கள். ஆனால் அவை அத்துமீறும் போது, அவர்களில் நாலைந்து பேர்களை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து ‘விசாரித்தால்” .. ண்ணா.. விட்டுருங்கன்னா… இனிமே இப்படிச் செய்ய மாட்டேண்ணா…” என்று அழுது துடிப்பார்கள்.

கழிப்பறை மூலையில் கதறித் துடித்துக் கொண்டிருந்த அபிராமியை அந்தப் பக்கம் வந்த மதுமிதா சமாதானம் செய்ய முயன்றார். மக்கள் ஆதரவைப் பெற்று விட்ட நிம்மதியும் கெத்தும் அவர் முகத்தில் தெரிந்தது. என்றாலும் அவர் அபிராமிக்கு வழங்க முயன்றது நல்ல உபதேசம். “நீ எதுக்காக இங்க வந்தே? அதைச் செஞ்சு முடிக்காம ஏன் போறேன்னு அடம் பிடிக்கறே?”

ஆனால் எதிர் டீம் இவர்களைப் பார்த்து விட்டதால் பதறிய அபிராமி “சரி.. நான் இப்ப என் பிரண்ட்ஸ் கிட்ட போகணும்” என்று பதறி ஓடி அங்கும் சென்று “சும்மா பார்த்தோம்.. பேசிட்டு இருந்தோம்” என்று தானே முன் வந்து விளக்கம் அளித்தார். இப்படியெல்லாம் பயந்து கொண்டுதான் நட்பை பேண வேண்டுமென்றால் அதற்குப் பதில் தனிமையில் கம்பீரமாக இருப்பதுவே சிறப்பு. நம் சுதந்திரத்தை ஒரு நல்ல நட்பு கட்டுப்படுத்தக்கூடாது.

**

அகம் டிவி வழியாக கமல் வந்ததும் எவிக்ஷன் கார்டை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸை கூட்ட ஆரம்பித்தார். (ஆனால் இந்த முடிவு சமூகவலைத்தளங்களில் பரவலாக வெளியாகி விட்ட பிறகு அத்தனை சஸ்பென்ஸாக இல்லை. நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைவதால் பிக்பாஸ் டீம் இதற்கு ஏதாவது செய்யலாம்).

‘மக்களில் ஒருவர்  ஒரு போட்டியாளருடன் பேசலாம்’ என்பதின் மூலம் ஒரு பெண்மணி கவினுடன் பேசினார். “நீங்கள் யாரைத்தான் உண்மையா லவ் பண்றீங்க?” என்று அவர் கேட்டவுடன் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வந்தது. “ஏங்க.. இங்க எவ்ள முக்கியமான விஷயங்கள் போயிட்டு இருக்கு.. இப்ப இதுதான் பிரச்சினையா?” என்று கேட்டவரையே கலாய்க்க முயன்றார் கவின். “நான் யாரையும் லவ் பண்ணலை. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் சும்மா ஜாலிக்காக விளையாடறேன்” என்றதும் சாக்ஷியின் சற்று திகைப்பான முகம் க்ளோசப்பில் காட்டப்பட்டது. லாஸ்லியாவின் முகத்தில் ‘அப்பாடா!’ என்கிற நிம்மதி தென்பட்டது.

ஏதோவொரு திரைப்படத்தில், சந்தானத்தின் நான்கு தங்கைகளிடம் ஊரிலிருந்து வந்திருக்கும் தூரத்து உறவினரான கார்த்தி எப்போதும் கடலை போட்டுக் கொண்டிருப்பார். அதைக் கண்டு பல்வேறு விதங்களில் டென்ஷன் ஆவார் சந்தானம். நம்மையும் சந்தானத்தின் நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார் கவின். “ஒரு கேள்விதானா?” என்று கவின் கேட்டதும், “பார்த்தீங்களா.. போன் பேச வந்த பொண்ணு கிட்ட கூட கொக்கி போடறீங்களே?” என்று கமல் ஜாலியாக கலாய்த்தது சிறப்பு.

கவின் காப்பாற்றப்பட்ட செய்தியைத் தொடர்ந்து பிக்பாஸ் லோகோவை இரண்டாகப் பிரித்து அதைப் பொருத்திப் பார்க்கும் விநோதமான விளையாட்டின் மூலம் சஸ்பென்ஸை நீட்டிக்க முயன்றார் கமல். இது அத்தனை எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேர விரயமும் கூட. மீரா மற்றும் சரவணனின் போர்டுகள் பொருந்திப் போனதும் மகிழ்ச்சியடைந்த மீரா, சரவணணை கட்டிப்பிடிக்க முயல.. “ஹே.. இரும்மா..” என்று பதறிப் போனார் சித்தப்பூ.

“வீட்ல மூலைக்கு மூலை பேசலை. மூளையில்லாம பேசறாங்க” என்று மதுமிதா அடித்த துடுக்குத்தனமான கமெண்ட் அபஸ்வரம். நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் மேடம்!

இறுதியில், ‘வெளியேறப் போகிறவர் பாத்திமா’ என்கிற விஷயம் உறுதியானது. அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டார் அவர். வீட்டில் முதலில் நுழைந்தவர் முதலில் வெளியேறுவது ஒரு தற்செயல் ஒற்றுமை. முந்தைய சீஸன்களில் ஒருவர் வெளியேறுகிறார் என்றால் வீடே கூடி ஒப்பாரி வைக்கும். ஆனால் இந்த முறை அது நிகழவில்லை. மகனாக கருதப்பட்ட தர்ஷன் கூட அடக்கி வாசித்தார். (நிற்க, இது வலுக்கட்டாயமான டிராமாவாக நிகழ வேண்டும் என்று நான் கூறவில்லை.) பிறகு மோகன் வைத்யா மட்டுமே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

அபிராமி டீமிற்கு பாத்திமா வெளியேறுவது கூட அத்தனை கவலையில்லை. மாறாக சாக்ஷி காப்பாற்றப்பட்டது அத்தனை நிம்மதியை அளித்தது. தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டார் அபிராமி. “இனிமே நாம் புது பிரண்ட்ஸ்” என்று நட்பைப் புதுப்பித்துக் கொண்டார் சாக்ஷி. பஸ் பாஸ் ரெனியூவல் மாதிரி நட்பும் ஆகி விட்டது.

**

சிரித்துக் கொண்டே வெளியே வந்த பாத்திமா கமலுடன் உரையாடினார். அவரின் குடும்பம் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘வீட்டில் எப்படி இருப்பாரோ.. அப்படியேதான் இங்கும் இருந்தார்” என்றார்கள் அவர்கள்.

வீட்டின் நிலைமையைப் பற்றி கமல் விசாரிக்கும் போது “சில பேர் டாமினேட் செய்யறாங்க” என்று தயங்கியபடி பாத்திமா விவரிக்க “அதான் வெளியே வந்துட்டீங்களே.. தைரியமா பெயரைச் சொல்லுங்க” என்று கமல் உற்சாகம் அளிக்க ‘வனிதா’வின் பெயரைச் சொன்னார் பாத்திமா. பார்வையாளர்களும் தங்களின் கைத்தட்டலின் மூலம் இதை வழிமொழிந்தார்கள்.

இந்தத் தயக்கம் கூட பாத்திமாவின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நிகழ்ச்சிக்குத் தேவையான ‘content’ஐ அவர் தர முடியாததும் இன்னொரு காரணமாக இருக்கும். ‘Controversial’-ஆ நடந்துக்கறவங்கதான் இங்க நீடிக்க முடியும்” என்று வனிதா கூறியதை நினைவுகூரலாம்.

“சேரன், சரவணன், சாண்டி போன்றோர் நடுநிலைமையாக இருக்க முயல்கிறார்கள். ஆனால் அபிராமி, ஷெரீன், ரேஷ்மா, சாக்ஷி உள்ளிட்டவர்கள் அதிகாரத்திற்குப் பணிந்து விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்” என்று பாத்திமா அளித்த விளக்கம் சரியானது.

வீட்டின் ஆண்களைப் பற்றிய கருத்துக்களையும் சுருக்கமாகச் சொன்னார் பாத்திமா.  தரமான படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் மரியாதையை இழந்து விடக்கூடாது என்கிற காரணத்திற்காக ஒதுங்கி விடுகிறார் சேரன் என்று அவர் குறிப்பிட்டது துல்லியமான அவதானிப்பாக இருக்கலாம். “நல்லா அனலைஸ் பண்றீங்க” என்று கமலே பாத்திமாவைப் பாராட்டினார். மனிதர்களை இத்தனை சரியாக வரையறுக்கும் பாத்திமா, சற்று துணிச்சலாக வீட்டில் இயங்கியிருந்தால் வெளியேற்றத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் தங்களின் ஆதாரமான இயல்பிலிருந்து நிறையவும் சிலரால் மாற முடியாது; கீழே இறங்கி வர முடியாது. ஒருவேளை பாத்திமா சம்பந்தப்பட்ட பகுதிகள் எடிட்டிங்கில் போய் விட்டதா என்றும் தெரியவில்லை.

வீட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக மூவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற ஒரு ‘பவர்’ பாத்திமாவிற்குத் தரப்பட்டது. இதற்காக அவர் தர்ஷனைத் தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்ததே. இன்ன பிறராக சாண்டி மற்றும் அபிராமியைத் தேர்ந்தெடுத்தார்.

இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் அவர் சேரனையும் ஒரு தேர்வாக செய்திருக்கலாம் என்று தோன்றிற்று. வீட்டைச் சுத்தம் செய்வது முதல் பிறரது பிரச்சினைகளுக்கு ஆலோசனையும் சமாதானமும் செய்வது வரை பல விஷயங்களை சேரன் சரியாக செய்து வருகிறார். தலைவர் பதவி கிடைத்தால் அந்த அதிகாரம் தந்த உற்சாகத்தோடு இன்னமும் சிறப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது.

“இந்த பதினைந்து பேரைத் தாண்டி பெரிய உலகம் வெளியே இருக்கு. தைரியமா விளையாடுங்க. யாராலயும் influence ஆயிடாதீங்க” என்றெல்லாம் பாத்திமா தந்த உபதேசம் அவசியமானது. 

**


கமல் விடைபெற்றவுடன் ‘அப்பாடா!’ நிகழ்ச்சி முடிவடைந்தது போல என்று பார்த்தால் வீட்டின் பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தன. ‘பாட்டில்’விவகாரத்தைப் பற்றி கவின் சாக்ஷியுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்.

புகையறைக்குள் புகுந்து கொண்டு மீரா அழுது கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நபராக சில நண்பர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தது குறித்த வருத்தம் அவருக்கு.  “நீங்க ரெண்டு பேரும் அவ மூஞ்சுல பூரான் விட்டுட்டீங்கள்லே..அதான அழுவறா” என்று தர்ஷனையும் முகினையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் சாண்டி.

“வனிதாக்கா கோபப்பட்டாலும் நட்பிற்காக ஸ்ட்ராங்கா நிக்கறவங்க” என்று வனிதாவிற்கு சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ஷெரீன். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்று அடுத்த தலைவருக்கான ‘அம்மாவாசை’ கெத்து அபிராமியின் முகத்தில் வந்து விட்டது. வீட்டின் தலைமை மாற்றம் பற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.

“மீரா நடுவுல புகுந்து என்னை வெறுப்பேத்தியதால்தான் அவங்களைத் தேர்ந்தெடுத்தேன். இது அவங்களுக்குப் புரியமாட்டேங்குது” என்று சேரனிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் அபிராமி. “வனிதாவோட இப்பத்தி டார்கெட் மதுமிதாதான். இது முடிஞ்சதும் அடுத்தது மீராவை எய்ம் பண்ணுவாங்க. நீ சாக்ஷி கிட்ட பேசு” என்று சரியான திசையில் ஆலோசனை தந்து கொண்டிருந்தார் சேரன்.

இந்த விளையாட்டின் ஃபார்மட்டை சரியாகப் புரிந்து கொண்டவர்களால் இத்தனை எளிதில் சட்சட்டென்று உணர்ச்சிவசப்பட முடியாது. வந்த இரண்டு நாட்களிலேயே ‘தேவா – சூர்யா’ நட்பெல்லாம் ஏற்பட முடியாது என்கிற நிதர்சனம் புரியும். அடுத்த வாரத்தில் கூட்டணியில் இன்னமும் சில மாற்றங்கள் வரும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

suresh kannan

3 comments:

Sri said...

Nice update !!!

Santhosh said...

Big boss won't be complete without reading your review sir.. excellent writing sir. Was missing your review in Vikatan and luckily found this blog through your FB post..

Unknown said...

Correct analysis... Cheran has guts and right view but he don't want to enter into the ditch to harm his image..