Thursday, December 26, 2019

Capernaum | 2018 | முட்களின் பாதை






இளமைப் பருவம் என்பது உலகில் எல்லோருக்கும் இயல்பானதாகவும் சுகமாகவும் அமைந்து விடுவதில்லை.  கணிசமான சதவீதத்தினருக்கு அது தினசரி போராட்டமாகவும் சகிக்க முடியாத அவலமாகவும் அமைந்து விடுகிறது.

போர், வறுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவற்றின் பின்னணியில் வாழும் சிறார்களின் வாழ்க்கை என்பது கொடுமையானதாக இருக்கிறது. அப்படியொரு சிறுவனின் வாழ்க்கையை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமானதாகவும் உண்மையாகவும் பதிவாக்கியிருக்கிறது இந்த லெபனான் தேசத்து திரைப்படம்.

ஜெயின் என்கிற பன்னிரெண்டு வயது சிறுவன், தன் பெற்றோர்களின் மீது வழக்குத் தொடர்கிறான். அவன் சொல்லும் காரணம் “அவர்கள் ஏன் என்னைப் பெற்றார்கள்?”. சற்று விசித்திரமாக இருந்தாலும் அதன் துயரமான பின்னணிக் காரணங்களை அறிய நேரும் போது அந்தக் கேள்வியின் அழுத்தம் நமக்குப் புரிகிறது.

**

லெபனானின் தலைநகரம் பெய்ரூட். அங்குள்ள சேரியில் வாழும் சிறுவன் ஜெயின். வதவதவென்று நிறைய குழந்தைகளைப் பெற்றுப் போட்டிருக்கும் அவனுடைய பெற்றோர் சிறையில் போதை மருந்துகளை விற்கும் தொழிலைச் செய்கிறார்கள். தகப்பன் பெரும்பாலும் குடி போதையில் இருக்கிறான். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான அஸாத் என்பவரின் கடையில் வேலை செய்கிறான் ஜெயின். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை ஏக்கத்துடன் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பார வண்டியை இழுத்துச் செல்கிறான்.

அவனுடைய சகோதரி ருதுவாகிறாள். பெற்றோர்களிடமிருந்து இந்த விஷயத்தை மறைத்துக் கொள்ளச் சொல்லி அதற்காக உதவுகிறான் ஜெயின். அவள் ருதுவாகிய விஷயத்தை அறிந்தால், சிறுமியான அவளை கடை உரிமையாளரான அஸாத்திற்கு திருமணம் வைத்து விடுவார்கள் என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவன் பயந்தது போலவே ஆகி விடுகிறது. அந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் சண்டையிடுகிறான். ஆனால் சிறுவனால் என்ன செய்ய முடியும்? இவனை அடித்து அப்புறப்படுத்தி விட்டு தன் பெண்ணை தானே இழுத்துச் செல்கிறான் தகப்பன்.

இதனால் கடும் கோபமும் வெறுப்பும் அடையும் ஜெயின், வீட்டை விட்டு வெளியேறுகிறான். பேருந்தில் ஏறி பயணித்து வழியில் தென்படும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இறங்கி விடுகிறான். அங்கு துப்புரவு பணியாளராக இருக்கும் ரஹில் என்கிற பெண்மணியிடம் ‘வேலை கிடைக்குமா?” என்று கேட்கிறான்.

ரஹில் எத்தியோப்பிலிருந்து புலம் பெயர்ந்திருக்கும் பெண்மணி. போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக லெபானனில் தங்கியிருப்பவள். தன் குழந்தையை பணியிடத்தில் மறைத்து வளர்க்கிறாள். அவளால் ஜெயினுக்கு உதவ முடிவதில்லை. பசியுடன் பரிதாபமாக சுற்றித் திரியும் சிறுவனின் மீது இரக்கம் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தன்னுடைய குழந்தையை ஜெயினிடம் விட்டு விட்டு அவள் பணிக்குச் செல்வாள். குழந்தையை ஜெயின் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஏற்பாடு. சிறுவனாக இருந்தாலும் பொறுப்புள்ள தந்தையைப் போல குழந்தையை கண்ணும் கருத்துமாக பராமரிக்கிறான் ஜெயின்.

பணிக்குச் செல்லும் ரஹில் ஒருநாள் திரும்பி வருவதில்லை. போலி பர்மிட் காலம் முடிந்து விடுவதாலும் அவற்றைப் புதுப்பிப்பதற்காக ஏஜெண்ட் அநியாயமாக கேட்கும் பணத்தை அவளால் தயார் செய்ய முடியாததாலும் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறாள். ரஹில் திரும்பி வராததால் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சமாளிக்கிறான் ஜெயின். சமாளிக்க முடியாத நிலையில், சம்பாதிப்பதற்காக தனக்குத் தெரிந்த போதை மருந்து விற்பனையையும் செய்கிறான். இதனால் சிக்கல்களையும் அவன் எதிர்கொள்ள நேர்கிறது.

குழந்தையை வைத்துக் கொண்டு சாலையெங்கும் சுற்றுகிறான். ஒரு நிலையில் அவனால் நிலைமையைச் சமாளிக்க முடிவதில்லை. அவர்கள் தங்கியிருக்கும் வீடும் பறிபோகிறது. ரஹிலின் ஏஜெண்டைச் சந்திக்கிறான். குழந்தையை தத்து கொடுத்து பணம் சம்பாதிப்பதற்காக நீண்ட காலமாக திட்டமிடுபவன் அந்த ஏஜெண்ட். “நீ ஏன் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாய்? அவனை நான் நன்கு பார்த்துக் கொள்கிறேன். நீ விரும்பும் நாட்டிற்கு உன்னை அனுப்புகிறேன். என்னிடம் ஒப்படைத்து விடு” என்கிறான் ஏஜெண்ட். வேறு வழியில்லாமல் அரைமனதாக அதற்கு சம்மதிக்கிறான் ஜெயின்.

ஆனால் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் ஏதாவது ஒரு ஆவணம் தேவை. அதை எடுப்பதற்காக தன் வீட்டிற்குத் திரும்பச் செல்கிறான் ஜெயின். திருமணம் செய்யப்பட்ட இளம் சகோதரி, கர்ப்ப காலத்தில் இறந்து விட்டிருக்கும் அதிர்ச்சியான செய்தியை அப்போது அறிகிறான். ஆத்திரம் கொள்ளும் ஜெயின், பெற்றோர்களிடம் பயங்கரமாக சண்டையிட்டு விட்டு கத்தியை எடுத்துக் கொண்டு கடைக்காரன் அஸாத்தைக் கொல்வதற்காக ஓடுகிறான். அவனைக் காயப்படுத்தி விடும் நிலைமையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

அதே சிறையின் இன்னொரு பக்கத்தில் ரஹில் அடைக்கப்பட்டிருக்கிறாள். தன் குழந்தை என்னவானதோ என்கிற பதட்டத்திலும் அழுகையிலும் அவள் இருக்கிறாள். ஜெயினின் தாய் அவனைப் பார்க்க சிறைக்கு வருகிறாள். அவள் சொல்லும் தகவல் அவனை மிகவும் கடுப்பேற்றுகிறது. ‘மகனே.. நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இறந்து போன உன் சகோதரி மீண்டும் வந்து பிறப்பாள். நீ வெளியே வந்தவுடன் அவளுடன் விளையாடலாம்” என்கிறாள். அவள் கொண்டு வந்த இனிப்புகளை குப்பையில் எறிந்து விட்டு வெறுப்புடன் சிறைக்குச் செல்கிறான் ஜெயின்.

ஒரு நாள், சிறையில் இருக்கும் தொலைபேசியின் மூலம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேசுகிறான் ஜெயின். பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடி ஒளிபரப்பாக விசாரணை செய்யும் நிகழ்ச்சி அது. அதன் மூலம் ஒரு கோரிக்கையை வைக்கிறான் ஜெயின்.

“என் பெற்றோர்களின் மீது வழக்குப் போட வேண்டும்”

**

புலம் பெயர்ந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவள் ரஹில். ‘அங்கிருந்து எந்நேரமும் வெளியேற்றப்படலாம்’ என்கிற பதட்டமான சூழலில் வாழ்பவள். தன் குழந்தையைப் பற்றிய விவரம் வெளியே தெரிந்தால் அதை இழக்க நேரிடும் என்பதால் மிகவும் ரகசியமாக வளர்க்கிறாள். இப்படி நெருக்கடியானதொரு பின்னணி இருந்தாலும் தன் குழந்தையின் மீது பாசத்தையும் அன்பையும் பொழிகிறாள் ரஹில். இது மட்டுமல்லாமல், கூடுதல் சுமையாக இருந்தாலும் சிறுவன் ஜெயினையும் அவள் அன்போடு ஏற்றுக் கொள்கிறாள்.

இதற்கு நேர்மாறான சூழல் ஜெயினின் வீட்டில் இருக்கிறது. திட்டமிடாமல் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அவனுடைய பெற்றோர், தங்களின் தேவைகளுக்காக பிள்ளைகளை சிரமமான சூழலில் தள்ளுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். அப்போதுதான் ருதுவாகியிருக்கும் இளம் சிறுமியை, வயது வித்தியாசம் அதிகமுள்ள நபருக்கு திருமணம் செய்து தர தயாராக இருக்கிறார்கள்.

இப்படி நேர் எதிரான இரண்டு பெற்றோர்களைச் சித்தரிப்பதின் மூலம் பொறுப்புள்ள பெற்றோர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை இயக்குநர் சுட்டிக் காட்டுகிறார். “எங்களின் அவலமான வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அழுகையும் சீற்றமுமாக நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், ஜெயினின் பெற்றோர்.

ஒரு கோணத்தில் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற சூழலில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கடுமையான வறுமையிலும் தங்களின் பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். ரஹில் அதற்கு சிறந்த உதாரணம்.

இது தவிர, போர் உள்ளிட்ட காரணங்களால் புலம் பெயர்ந்திருக்கும் அகதிகளின் அவலமான வாழ்க்கையையும் இந்தத் திரைப்படம் அழுத்தமாகச் சித்தரிக்கிறது. ‘உயிரோடு இருந்தாலே போதும்’ என்று இதர பிரதேசங்களுக்கு  இடம் பெயர்பவர்கள், உழைப்புச் சுரண்டல், ஏஜெண்ட்களின் பிடுங்கல், தாம் வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்கிற பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள்.

குழந்தையுடன் சாலையில் சுற்றித் திரியும் போது ‘மேசெளன்’ என்கிற சிறுமியைச் சந்திக்கிறான் ஜெயின். அவள் சாலையில் பூக்களை விற்பனை செய்பவள். சிரியாவிலிருந்து வந்திருக்கும் அகதி. “பணம் சேர்த்து தந்தால் தன்னை ஏஜெண்ட் ஸ்வீடனுக்கு அனுப்பி வைப்பார். அங்கு நான் நிம்மதியாக வாழ்வேன்” என்று கண்களில் கனவு பொங்க ஜெயினிடம் விவரிக்கிறாள் மேசெளன். ஆனால் அது அத்தனை எளிதான காரியமா, அவள் எங்கு சென்று மாட்டிக் கொள்வாளோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருக்கிறது.

எத்தியோப்பிய அகதியான ரஹில் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் அன்பு பல்வேறு நெகிழ்வான காட்சிகளால் பார்வையாளர்களுக்கு உணர வைக்கப்படும் அதே சமயத்தில், ஜெயினுக்கும் குழந்தைக்குமான காட்சிகள் மிக அற்புதமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ரஹில் திரும்பி வராத காரணத்தால் குழந்தைக்கான உணவை தேடி அலைகிறான் ஜெயின். அவன் கொண்டு வரும் பாலின் அந்நிய வாசனை காரணமாக அதைக் குடிக்காமல் திரும்பி படுத்துக் கொள்கிறது குழந்தை. ஏக்கத்துடன் ஜெயினின் மார்பை அது தடவும் காட்சி நெகிழ்வுபூர்வமானது. ஒரு கட்டத்தில் குழந்தையும் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழகி விடுகிறது.


**

இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கும் நாடின் லபாகி அடிப்படையில் ஒரு நடிகையாவார். லெபனானில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் வாழ்ந்தவர் என்பதால் போரினால் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போகும் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகும் நாடின் லபாகி இயக்கிய முதல் திரைப்படம் Caramel (2006). அழகு நிலையத்தில் பணிபுரியும் ஐந்து பெண்களின் பிரச்சினைகளை சித்தரிப்பதின் மூலம் லெபனான் பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அந்தப் பிரதேசத்தின் அரசியலையும் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். பரவலான கவனத்தையும் விருதையும் தன் முதல் திரைப்படத்தில் பெற்ற நாடின் லபாகி இயக்கிய நான்காவது திரைப்படம்தான் Capernaum. இந்தத் திரைப்படத்தில் ஜெயினின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞராக சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று ஜெயினாக நடித்திருக்கும் சிறுவனின் அபாரமான பங்களிப்பு. படம் முழுக்க சோகமும் இறுக்கமும் முதிர்ச்சியும் தென்படும் முகபாவத்துடன் நடித்துள்ளான். படத்தில் அவன் புன்னகைப்பது இரண்டே இடங்களில்தான். குழந்தைக்கு பிறந்த நாள் கேக்கை ரஹில் வெட்டும் போது தன்னிச்சையாக சிரிக்கிறான். இரண்டாவதாக, அவன் படிப்பிற்காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கப்படும் போது வலுக்கட்டாயமாக புன்னகைக்க வைக்கப்படுகிறான். சோகமும் புன்னகையும் கலந்த அவனுடைய உறைந்த முகத்துடன் படம் நிறைவுறுகிறது.

சிறுவனாக நடித்திருக்கும் ஜெயின் அல் ரபியா, ஒரு சிரிய அகதியாவான். சிரியாவில் நிகழும் போர் காரணமாக அவனது குடும்பம் 2012-ல் லெபனானிற்கு இடம் பெயர்ந்தது. அங்குள்ள சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவனை இனங்கண்டு இந்தப் பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். தன்னுடைய அசலான வாழ்க்கையையே திரைப்படத்தில் பிரதிபலிக்கச் செய்திருக்கிறானோ என்று எண்ண வைக்குமளவிற்கு அத்தனை இயல்பான நடிப்பை வழங்கியுள்ளான் ஜெயின். இந்தத் திரைப்படத்தில் அவன் வழங்கியுள்ள நேர்த்தியான நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ள ஜெயின், இதன் மூலம் பெற்றுள்ள கவனத்தினால் இப்போது நார்வேயில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

ஜெயின் மட்டுமல்ல, இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள பெரும்பாலான இதர நடிகர்களும் தொழிற்முறையற்ற நடிகர்கள். ‘மிக இயல்பான நடிப்பை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சாதாரண நபர்களையே தேர்ந்தெடுத்தேன்’ என்கிறார் இயக்குநர் நாடின் லபாகி. ஆவணத் திரைப்படத்தின் பாணியை பெரும்பாலான காட்சிகளில் பின்பற்றியிருக்கும் இந்தத் திரைப்படம் ‘பார்வையாளர்களின் அனுதாபத்தை பல காட்சிகளில் கோரிக் கொண்டேயிருக்கிறது’ என்பது போன்ற விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.

2018 கான் திரைப்பட விழாவில், ‘நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரிவு’ ‘சுயாதீன திரைப்பட பிரிவு’ ஆகியவற்றில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட Capernaum, அதிகம் வசூலித்த அரபுத் திரைப்படம் என்னும் பெருமையையும் பெற்றிருக்கிறது. ‘சிறந்த  அயல்நாட்டுத் திரைப்படம்’ என்னும் பிரிவிற்காக லெபானின் சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டது.

‘நமது சமூக அமைப்பு, அரசுகள், முட்டாள்தனமான முடிவுகள், போர்கள் ஆகியவற்றினால் குழந்தைகள் அதிக விலையைத் தர வேண்டியிருக்கிறது. அவர்களால் பேச முடியாது. எனவே அவர்களின் துயரங்களையும் சிக்கல்களையும் திரைப்படத்தின் வழியாக பேச நான் முடிவு செய்தேன்’ என்கிறார் இயக்குநர் நாடின் லபாகி.

போர், வறுமை உள்ளிட்ட பல்வேறு புற அழுத்தங்கள் இருந்தாலும், தங்களின் குழந்தையை பொறுப்பில்லாமல் வளர்த்தால் அது எவ்வாறான அவலங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஜெயினின் வாழ்க்கை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. வறுமையான சூழலிலும் குழந்தையின் மீது அன்பை செலுத்த முடியும் என்கிற ரஹிலின் வாழ்க்கையின் மூலம் பெற்றோர்களின் ஆதாரமான கடமையையும்  நமக்கு நினைவுப்படுத்துகிறது.

இது குழந்தைகளை பிரதானமாக வைத்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் என்றாலும் பெற்றோர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பாக இருக்கிறது.



(குமுதம் தீராநதி -  DECEMBER  2019 இதழில் பிரசுரமானது)
 
suresh kannan

1 comment:

Mahendran said...

படிக்கும் போதே மனம் கசிகிறது.