Friday, December 06, 2019

யூ டர்ன் (கன்னட திரைப்படம்) 'யூ'கிக்கவே முடியாத திரைக்கதை




கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவிற்கு 'பேய்' பிடித்துள்ளது. எனவே அது சார்ந்த பல அபத்தமான திரைப்படங்களும் 'பிட்ஸா' போன்ற சில குறிப்பிடத்தகுந்த முயற்சிகளும் வெளியாகி வருகின்றன. 'விசுக்' என இருட்டில் மின்னி மறையும் உருவங்கள், 'டமால் டமால்' என காதைப் பிளக்கும்  சப்தங்கள், சிரிப்பை வரவழைக்கும் ஒப்பனைகள் போன்ற நகைச்சுவைகள் ஏதுமின்றி, பார்வையாளர்களை உண்மையாகவே இருக்கை நுனிக்கு வரவழைத்து பரபரப்பிற்கு ஆளாக்கும் ஒரு  கன்னடத் திரைப்படம் வெளிவந்துள்ளது. - யூ டர்ன்.


சினிமா ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நிதி திரட்டும் 'Crowd Funding'  முறையின் மூலம் சமகாலத்திலும்  திரைப்படத்தை உருவாக்க முடியும் என்கிற சாத்தியத்தை ஏற்படுத்திய 'பவன்குமார்'தான் இதன் இயக்குநர்.  இதே முறையில் இவர் உருவாக்கிய முந்தைய கன்னட திரைப்படமான 'லூசியா' பெரிய வெற்றியைப் பெற்றது. சித்தார்த் நடிப்பில் 'எனக்குள் ஒருவன்' என்கிற தலைப்பில் இது தமிழிலும் வெளிவந்தது.


புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், யூகிக்கவே  முடியாத திருப்பங்களினாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், பேய்ப்படங்களின் பொதுவான தேய்வழக்கு அபத்தங்கள் இல்லை என்பது  பெரிய ஆறுதல். பார்வையாளர்களை பல்வேறு வழியாக  திசைதிருப்பி இறுதி வரைக்கும் தனது சஸ்பென்ஸை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அபாரமான உருவாக்கம்.


***

ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் உதவி நிருபராக பணிபுரியும் இளம் பெண் ரச்சனா. பெங்களூர் இருவழி  மேம்பாலத்தின் வழியில், சாலையின் நடுவேயுள்ள தடுப்புக்கற்களை அகற்றி வைத்து விட்டு அந்த குறுக்கு வழியாக ''யூ டர்ன்' எடுத்துப் போகும் இருசக்கர வாகனப் பயணிகளை ரச்சனா கவனிக்கிறாள். பாலத்தை சுற்றி வரும்  நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் இந்தக் காரியம் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே தான் பணிபுரியும் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரையொன்றை எழுதுவதற்காக அது தொடர்பான தகவல்களை சேகரிக்கிறாள். சாலையோரத்தில் இருக்கும் வயதான பிச்சைக்காரர் ஒருவரிடம் பணம் தந்து, எவரெல்லாம் இது போன்று தடுப்புக்கற்களை தள்ளி வைத்து விட்டு செல்கிறார்களோ, அவர்களின் வாகன எண்ணை குறித்து தம்மிடம் தருமாறு கேட்கிறாள். அவர்களைச் சென்று சந்தித்து உரையாடி தம்முடைய கட்டுரையை உருவாக்குவது அவளுடைய நோக்கம்.

ஒருநாள் காலையில் பிச்சைக்காரரிடம் சென்று அவர் குறித்து தந்த ஒரு வாகன எண்ணின் முகவரியைக் கண்டுபிடித்து அங்கு செல்கிறாள். கதவைத் தட்டினால் எவரும் திறப்பதில்லை. திரும்பி வந்து விடுகிறாள். அன்றைய இரவு அவளைத் தேடி போலீஸ் வருகிறது. ரச்சனா தேடிச் சென்ற நபர் அன்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 'நீ ஏன் அவர் வீட்டிற்குப் போனாய்?" என்பது போன்ற பல கேள்விகளால் போலீஸ் அவளுக்கு நெருக்கடி தருகிறது. ரச்சனா திகைப்புடன் தன்னுடைய தரப்பைச் சொன்னாலும் அவர்கள் நம்புவதாயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல்  தவிக்கிறாள் ரச்சனா.

விஷயம் இத்தோடு முடியவில்லை. சாலைத் தடுப்பை மீறிச் சென்றவர்கள் குறித்து ரச்சனா அதுவரை சேகரித்து வைத்திருக்கும் அத்தனை ஆசாமிகளுமே, குறுக்கு வழியை உபயோகித்த அதே நாளன்று  தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சியான தகவல் தெரியவருகிறது. போலீஸ் குழம்புகிறது. தர்க்கபூர்வமாக இதை நடைமுறையில் நிறுவ முடியாது என்பதால் இந்த வழக்குகளைத் தாண்ட முயற்சிக்கிறது.

ஆனால் ரச்சனா இதை விடுவதாயில்லை. காவல்துறை நண்பருடன் இணைந்து இந்தப் புதிருக்கான விடையைத் தேடி பயணிக்கிறாள். இதற்காக தன் உயிரையே கூட பணயம் வைக்குமளவிற்கு அவளுடைய முயற்சி தீவிரமாகச் செல்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது பரபரப்பான காட்சிகளாக விரிகின்றன.

***

ரச்சனாவாக நடித்திருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் அற்புதமாக நடித்திருக்கிறார். எதற்காக தன்னிடம் விசாரணை நடைபெறுகிறது என்கிற விஷயம் புரியாமல் காவல்துறையினரிடம் சிக்கித் தவிப்பதும், இதன் பின்னால் உறைந்துள்ள ரகசியங்கள் மெல்ல மெல்ல துலக்கமாகும் போது அதை தேடிச் செல்லும் பயணத்தை தீவிரப்படுத்துவதும் என அபாரமான பங்களிப்பு. ரச்சனாவின் தவிப்பு பார்வையாளர்களுக்குள்ளும் பரவுகிறது.

காவல்துறை அதிகாரி 'நாயக்' ஆக  நடித்திருக்கும் ரோஜர் நாராயணன், உயரதிகாரியாக வரும் கிருஷ்ணா ஹெப்பலே என்று இதில் வரும் பெரும்பாலான நடிகர்கள் தங்களின் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, பவன்குமார் உருவாக்கியுள்ள அபாரமான திரைக்கதைதான் இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சம். பெரும்பாலானவர்களை எளிதில் நம்ப வைக்க முடியாத அமானுஷ்யத்தன்மையிலான கதையை, நம்பகத்தன்மையுடனான காட்சிகள், சித்தரிப்புகளின் மூலம் சாத்தியப்படுத்துகிறார். இதற்காக அவர் எவ்வித கோணங்கித்தனங்களையும் செய்வதில்லை. 'யூ' வடிவில் அமைந்த உருவங்களை, பொருட்களை திரைக்கதையில் ஆங்காங்கே புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்தியிருப்பது சுவாரசியம்.

காட்சிகள் தலைகீழாகத் தெரியும் துவக்க காட்சியிலேயே படம் அதன் பரபரப்பை துவக்கி வைத்து விடுகிறது. அபாரமான ஒளிப்பதிவும் மிகையில்லாத, ஆனால் காட்சிகளுக்குத் தேவையான பரபரப்பை வழங்கத் தவறாத பின்னணி இசையும் இத்திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.


***


சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டே போகும் விவரங்களை நாளிதழ்களில் காண்கிறோம். சில நுண்ணிய இடைவெளிகளில், நொடிகளில் பல விபத்துகள்  தற்செயலாக தவிர்க்கப்படுவதையும் நடைமுறையில் நாம் காண்கிறோம். ஆனால் விபத்துகள் பற்றிய எச்சரிக்கைப் பலகைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் வாகன ஓட்டிகள் அதீதமான  தன்னம்பிக்கையுடன் அலட்சியமாகவே அணுகுகிறார்கள்.

சாலைவிதிகளை மீறுவது அவர்களுக்கு மட்டுமல்ல, இதர பயணிகளுக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என்பதும் அந்த இழப்பு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்கிற அழுத்தமான படிப்பினையை, ஓர் அமானுஷ்யமான பின்னணியில் உருவான திரைப்படத்தின் மூலம் சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார் இயக்குநர் பவன்குமார். தம்முடைய கதை சொல்லும் திறமையை வணிக நோக்கத்திற்காக அல்லாமல் சமூகத்திற்கு அவசியமாக விழிப்புணர்விற்காகவும் பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

இதர மாநிலங்களில், மொழிகளில் உருவாகும் திரைப்படங்களைப் பற்றிய ஆர்வமோ, அறிமுகமோ தமிழ் சூழலில் பொதுவாக அதிகமில்லை. அவ்வாறானவர்களை தம்முடைய அசாதாரணமான திறமையால் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.



(அம்ருதா  இதழில் பிரசுரமானது) 

suresh kannan

3 comments:

ஹரி நிவாஸ் said...

பரபரப்பை வழங்கத் தவறான பின்னணி இசையும் i think there is a typo error

பிச்சைப்பாத்திரம் said...

yes. corrected now. thanks.

Mahendran said...

நானும் பார்த்திருக்கிறேன்.