பெருமுதலீட்டு திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவை தங்களது அத்தனை வணிகத் தந்திரங்களையும் மிருக பலத்துடன் பயன்படுத்தி ஏறத்தாழ ஒட்டுமொத்த சந்தையையும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. தயாரிப்பு பற்றிய ஆரம்பக்கட்ட தகவல் துவங்கி அந்த திரைப்படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு சலிப்புண்டாகும் வரை இது சார்ந்த பரபரப்பு பொதுவெளியில் குறையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம் பாகுபலி-2.
இவ்வாறான ஆக்ரமிப்பினால் பல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் வெளியாவதில் பல்வேறு விதமான சிக்கல்கள் நேர்கின்றன என்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பும், பல திறமைசாலிகளின் உழைப்பும் எவருக்கும் பயனில்லாமல் டிஜிட்டலில் உறைந்து கிடக்கின்றன. பிரதானமான அரங்குகள், நேரங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக இருக்கிறது.
அரசியலும் திரைத்துறையும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதால் நிகழும் திரையரசியல் விளைவு இது. பல காத்திருப்புகள், சிக்கல்களுக்குப் பிறகு சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு அரங்குகள் கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை. இது போன்ற புதிய முயற்சிகளுக்கு பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பில்லை என்கிற மெல்லிய சமிக்ஞை கிடைத்தாலும் கூட போதும், உடனே அந்த திரைப்படம் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது.
பிரம்மாண்டமாக சந்தைப்படுத்துதல் எனும் பலம் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு இருப்பதில்லை. அவை சிறப்பாக அமைந்திருந்தால் கூட, முதல் கட்ட பார்வையாளர்கள் கண்டபிறகு அவர்களின் வாய்மொழி வழியாகத்தான் மெல்ல அதன் புகழ் பரவும். ஆனால் லாபவெறி மிகுந்திருக்கும் சூழலில் அவ்வாறான அவகாசம் அளிக்கப்படுவதில்லை. ஒரு சிறுமுதலீட்டுத் திரைப்படம் சுவாரசியமானது என ஒருவர் கேள்விப்பட்டு இரண்டு நாட்கள் தாமதமாகச் சென்றாலும் கூட, அது அரங்கத்தில் தொடர்ந்து திரையிடலில் இருக்கும் என்கிற உத்திரவாதமில்லை. உடனே தூக்கப்பட்டு விடுகிறது. பிறகு கள்ள நகல்கள் மூலமோ, தொலைக்காட்சியின் வழியாகவோ பார்க்க காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பெருமுதலீட்டுத் திரைப்படம் வெளியாகும் போது, மன்னர் வருகையின் போது எளிய சமூகத்தினர் ஒதுக்கப்படுவது போல சிறுமுதலீட்டுத்திரைப்படங்களுக்கான கதவுகள் உடனே அடைக்கப்படுகின்றன. அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. நாம் எந்த திரைப்படத்தைக் காண வேண்டும் என்பதைக் கூட வணிக அரசியலே தீர்மானிக்கும் அவலமான சூழல்.
இதற்கு திரைத்துறையினரையோ, திரையரங்கு உரிமையாளர்களையோ மட்டும் பெரிதும் குறைசொல்லி பலனில்லை. லாபம் ஈட்டாத ஒரு செயலைச் செய்ய வணிகர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான தர்க்கம்தான். ஒரு சிறுமுதலீட்டுத் திரைப்படம் வெளியாகும் தகவலை முன்னமே அறிந்து, அதன் முன்னோட்டக் காட்சிகளையொட்டி அது சுவாரசியமானதாக இருக்கும் என யூகித்தால் முதல் சில நாட்களுக்கு உள்ளாகவே அதற்கு ஆதரவளித்தால்தான் அதன் இருப்பு நீடிக்கும்.
இது சார்ந்த மனோபாவத்தையும் கலாசாரத்தையும் நாம் பழக வேண்டும். மிக குறிப்பாக சினிமாவின் மீது விருப்பமுள்ள நபர்களும் திரை ஆர்வலர்களும் இதை ஒரு கடமையாகவே செய்யலாம். நல்ல முயற்சி என அறியப்படும் ஒரு திரைப்படத்தைப் பற்றிய பரப்புரையை இயன்ற வழிகளில் எல்லாம் சாத்தியப்படுத்தலாம்.
சமீபத்தில் வெளியான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் கவனிக்கப்படாமல் போன ஆனால் கவனிக்கப்பட வேண்டிய முயற்சிகளுள் சிலவற்றைப் பற்றி சுருக்கமாக பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அவ்வாறான சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.
காதல் கண்கட்டுதே
பரவலாக கவனிக்கப்படாமல் மறைந்து போன நல்ல முயற்சிகளுள் இதுவொன்று. ஆண் x பெண் உறவுச்சிக்கல் என்பது கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. தீரவே தீராதது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது. அதிலும் மனப்பக்குவம் இன்னமும் மலராத இளம் பருவத்தில் உண்டாகும் காதலில் பரஸ்பர புரிதலின்மை உள்ளிட்ட பல சிக்கல்கள் நிகழ்ந்தே தீரும். இந்த மையத்தை சிறப்பாக பதிவு செய்த திரைப்படம் இது.
வழக்கமான காதல் திரைப்படங்கள் போல ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு மோதலுக்குப் பின் மலரும் காதல், சாதி போன்ற காரணங்களுக்காக பெற்றோர்களின் எதிர்ப்பு, பயங்கரமான வில்லன், அடிதடி சாகசங்கள் என்பது மாதிரியான அபத்தங்கள் இந்த திரைப்படத்தில் இல்லை என்பது பெரும் ஆறுதல். சிறுவயது முதலே தங்கள் உறவை இயல்பான நட்புடன் அமைத்துக் கொண்ட ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் மலர்ந்திருக்கிற காதலையும் உணர்ந்து அதே இயல்புத்தனத்துடன் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். காதலர்களுக்குள் நிகழும் வழக்கமான ஊடல்கள், சண்டைகள், ஆணுக்கு எழும் சந்தேகம் போன்றவற்றை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மிக இயல்பாக நகரும் காட்சிகளும் இளம் நடிகர்களின் அபாரமான நடிப்பும் இந்த முயற்சியை கவனத்துக்குரியதாக மாற்றுகின்றன.
இதே பாணியிலான ஓர் அழுத்தமான திரைப்படத்தை இயக்குநர் கெளதம் ஏற்கெனவே உருவாக்கியிருந்தார். 'நீதானே என் பொன் வசந்தம்' என்கிற திரைப்படம். 'ஒரு காதலுக்குள் நிகழும் சில தருணங்கள்' என்று படம் துவங்கும் போதே அந்த வகைமையை தெளிவுப்படுத்தியிருந்தார். வெவ்வேறு பருவங்களில் ஒரு காதலுக்குள் நிகழும் மகிழ்ச்சிகளை, ஊடல்களை, பிரிவுகளை, கோபங்களின் தருணங்களை பதிவு செய்திருந்தார். 'காதல் கண்கட்டுதே' முயற்சியை இதன் மினியேச்சர் வெர்ஷன் எனலாம். மையத்திலிருந்து திரைக்கதை எங்கும் விலகாமல் பயணப்படுவது இதன் சிறப்பு.
நாயகிகளை 'மந்த புத்தி'யுள்ளவர்களாகவும் நாயகனின் வழிகாட்டுதல்களின் படி நடக்கிற முட்டாள்களாகவும் சித்தரிக்கிற பொதுவான சூழலில் இத்திரைப்படத்தின் நாயகி சுயமரியாதையுள்ளவளாக காட்டப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நிருபர் பணியில் உள்ள அவர் இருசக்கர வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால், மறைந்து போன தன் தந்தையின் நினைவாக வைத்துள்ள பைக்கை உபயோகப்படுத்த முடிவு செய்கிறார். ஆனால் நாயகியின் தாய் முதல் சுற்றியுள்ள அனைத்து ஆண்களும் 'ஒரு பெண்ணால் எப்படி பைக் ஓட்ட முடியும்' என கேலி செய்கின்றனர். ஒரு சவாலாக அந்த விஷயத்தை நாயகி கடக்கும் பிடிவாதம் ரசிக்கும்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இளம் காதலர்களுக்குள் நிகழும் சிக்கலான அனுபவங்களை யதார்த்தத்திற்கு நெருக்கமாக நின்று பதிவு செய்த இயக்குநர் சிவராஜிடமிருந்து தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது 'காதல் கண்கட்டுதே'.
பாம்புச் சட்டை
இளம் வயதிலேயே கணவனை இழந்த தன் அண்ணிக்கு ஆதரவாக அவருடன் ஒரே வீட்டில் வசிக்கிறான் நாயகன். அதனால் சந்தேகங்களும் அவதூறுகளும் உருவாகின்றன. அவனுடைய காதல் திருமணத்திற்கு கூட தடையேற்படுகிறது. ஆனால் அவன் எல்லாவற்றையும் தாண்டி உறுதியாக இருக்கிறான். அண்ணிக்கு மறுதிருமணம் செய்வதற்காக பணம் சேர்க்க முற்படும் அவனுடைய பாதை தீய திசை நோக்கி இழுக்கப்படுகிறது. அது அவனை எவ்வாறெல்லாம் தத்தளிக்கச் செய்கிறது, எவ்வாறு கீழ்மையில் வீழ்கிறான், பிறகு அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை சித்தரிக்கிறது திரைப்படம்.
நாயகன் பாபி -சிம்ஹாவிற்கும் நாயகி கீர்த்தி சுரேஷிற்குமான காதல் காட்சிகள் மிக இயல்பாகவும் உயிர்ப்புடனும் அமைந்திருக்கின்றன. படத்தில் மிக முக்கியமான, ரசிக்கக்கூடிய அம்சம் இது.
தண்ணீர் கேன் போடும் நாயகன், எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் நாயகி, கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி வேலை செய்யும் நாயகியின் தந்தை, நகைக்கடையில் பணிபுரியும் அண்ணி என்று அடித்தட்டு மக்களின் வாழ்வியல் தொடர்பான காட்சிகளும் அதன் பின்புலங்களும் கூடுமானவரை யதார்த்தமாக பதிவாகியிருந்தன.
நாயகன் பல விதங்களில் முன்மொழியும் காதலை நாயகி தொடர்ந்து மறுக்கிறாள். அதற்கு அவள் தெரிவிக்கும் காரணம் சமூகப் பாகுபாட்டின் அவலத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. சுடவைக்கும் உண்மை.
இது போன்று உருவாக்கப்படும் காதல் காட்சிகளுள் உள்ள பிரச்சினை என்னவெனில், ஒரு பெண் காதலை மறுத்தாலும் அது சார்ந்த உடல்மொழியை வெளிப்படுத்தினாலும் கூட ஆண் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தால், மிரட்டினால், ஒரு கட்டத்தில் அவள் ஒப்புக் கொள்வாள் என்கிற தவறான செய்தியை தமிழ் சினிமா தொடர்ந்து நிறுவிக் கொண்டேயிருக்கிறது. இளம் ஆண் மனங்களில் இதுவொரு விஷ விதையாக பல காலமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் இதை சோதித்துப் பார்க்க விரும்பும் இளைஞன், பெண்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். தன் நோக்கம் நிறைவேறாத பட்சத்தில், அந்த தோல்வியை தன் ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு ஆசிட் அடிப்பது முதற்கொண்டு கொலைசெய்வது வரை பெண்களை பல்வேறு விதமாக பழிவாங்கத் துவங்குகிறான். காதல் என்பது இயல்பாகவும் பரஸ்பர ஒப்புதலுடனும் மலர வேண்டிய விஷயம் என்பதை தமிழ் சினிமா இயக்குநர்கள் இனிமேலாவது பதிவு செய்தால் நல்லது.
ரஜினியின் உடல்மொழியை நகலெடுக்கிறார் என்கிற புகார் சொல்லப்பட்டாலும் பாபி சிம்ஹா நன்றாகவே நடித்திருக்கிறார். ஒப்பனை குறைவாகவுள்ள கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் அத்தனை அழகாக மிளிர்கிறார். கைம்பெண்ணின் துயரத்தை பானு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகனை தீய திசை நோக்கி இழுக்கும் பாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு வலுவாக அமைந்துள்ளது. கள்ள நோட்டுக்கள் உருவாகும் விதம், அவை புழக்கத்தில் விடப்படுவதற்கான நடைமுறை, அந்தக் கோஷ்டிகள் செய்யும் தில்லுமுல்லுகள், அப்பாவி ஆசாமிகளை தங்கள் பாதையில் இழுத்துப் போடும் விதம் போன்றவை பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. நேர்மைக்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் நாயகனின் மனோபாவமும் ஏமாற்றத்திலிருந்து மீள்வதற்கான அவன் கொள்ளும் ஆவேசமும் சிறப்பாக பதிவாகியுள்ளது.
இளம் கலைஞர் அஜீஷின் இசையில் 'நீ உறவாக' எனும் பாடல் அற்புதமாக உருவாக்கப்பட்டு சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டு பாட்டி, அவரின் பின்புலம் முதற்கொண்டு ஒவ்வொரு சிறிய பாத்திரமும் விஷயமும் மிகக் கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. ஒரு முதியவர் சாலையில் தவறுதலாக கொட்டி விடும் அரிசியை நாயகி பொறுக்கித் தருகிறாள். இந்த ஒரு காட்சிக் கோர்வை உருவாக்கப்பட்டிருக்கும் விதமே இயக்குநரின் கலையுணர்விற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
எங்கேயும் நிலைக்காமல் அலைபாயும் திரைக்கதைதான் இத்திரைப்படத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. படத்தின் முற்பகுதி அபாரமான இயல்புத்தனத்துடன் உருவாகியிருந்தாலும் பிற்பகுதி சினிமாத்தனமாக அமைந்திருப்பது ஏமாற்றம். இயக்குநர் ஆடம் தாசனிடமிருந்து சிறப்பானதொரு சினிமாவை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை ஆழமாக விதைக்கிறது 'பாம்புச்சட்டை'.
மாநகரம்
குற்றங்களின் கூடாரம் என்று பெருநகரங்களின் மீது பொதுவான புகார் இருக்கிறது. இதை வைப்பவர்கள், கிராமங்களில் இருந்தும் சிறுநகரங்களில் இருந்தும் இடம் பெயர்ந்தவர்கள். இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் பெரும்பாலும் அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களால்தான் பெருநகரங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கெல்லாம் மக்களின் அடர்த்தி அதிகமாகிறதோ, அங்குள்ள பொருளியல் அசைவுகள் காரணமாக பெரிய குற்றங்கள் முதல் உதிரிக்குற்றங்கள் வரை நிகழும் என்பது எளிமையான தர்க்கம்.
நேர்காணல் ஒன்றிற்காக சென்னையை நோக்கி வருகிறான் ஓர் இளைஞன். வந்த முதல் நாளிலேயே நகரத்தின் கசப்பு அவன் மீது படிகிறது. ஆள் மாறாட்ட பிழை காரணமாக வன்முறைக் கும்பலிடம் அடிவாங்குகிறான். தன் கல்விச்சான்றிதழ்களை தவற விடுகிறான். அவனுடைய பயணம் இத்திரைப்படத்தின் முக்கியமான இழை. காதலை இறைஞ்சிக் கொண்டேயிருக்கும் ஒரு முரட்டுக்காதலன், மகனின் மருத்துவத்திற்காக நகரத்திற்கு வரும் கால்டாக்சி டிரைவர், சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க நினைக்கும் ஒரு சிரிப்பு ரவுடி கோஷ்டி போன்றவை இதர இழைகள்.
இத்திரைப்படத்தின் முக்கியமான பலம் என்று இதன் திரைக்கதையைச் சொல்ல வேண்டும். ஏறத்தாழ ஒரே நாளில் நடந்து முடியும் கதை. அனைத்து இழைகளையும் கச்சிதமாகவும் உறுத்தல் இல்லாத ஒத்திசைவுடன் அடுக்கியதே இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை சுவாரசியமாக்குகிறது. ஸ்ரீ முதல் சார்லி வரை ஒவ்வொரு பாத்திரமும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கின்றன. குறிப்பாக சிரிப்பு ரவுடியாக வரும் முருகதாஸின் வெள்ளந்திதனம் ரசிக்க வைக்கிறது. ஆனால் இந்தப் பகுதியில் நிகழும் நகைச்சுவை முழுக்க செயற்கைத்தனம்.
தமிழ் சினிமாவின் வழக்கமான அவியலாக அல்லாமல் அபாரமான திரைக்கதையின் மூலம் நல்லதொரு திரில்லர் திரைப்படத்தை முயன்ற லோகேஷ் கனகராஜிடமிருந்து இன்னமும் சிறப்பான திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.
கடுகு
தோற்றத்தில் மிக எளிமையாகத் தோன்றுகிற சாமானியன், மற்றவர்கள் தாழ்வாக எள்ளி நகையாடுகிற வேடிக்கைப் பொருளாக இருக்கிறவன் நீதியின் சார்பில் அநீதிக்கு எதிராக அதுவரை அடங்கியிருந்ததில் இருந்து வெடிக்கும் கதைகளை நிறைய வாசித்திருக்கிறோம். 'கடுகு' அப்படியொரு திரைப்படம். எளியவனாக இயக்குநர் ராஜ்குமார் நடித்திருந்தார். சிறப்பானது என்று மதிப்பிட முடியாவிட்டாலும் குறைவில்லாத நடிப்பு.
தரங்கம்பாடி என்கிற சிற்றூரின் பின்புலத்தில் நிகழ்கிற கதை. அரசியல் செல்வாக்குள்ள அமைச்சர், அப்பாவியான ஒரு பள்ளி மாணவிக்கு நிகழ்த்த முயன்ற அநீதியைப் பற்றி அறிந்து புழுங்கிச் சாகிறான் சாமானியன். இந்த அநீதிக்குத் துணை போகும் அந்த ஊரின் பிரபலமான இளைஞனின் மீதும் அவனுடைய கோபம் பாய்கிறது. புலி வேஷம் அணிந்து நடனமாடக் கூடிய தன் திறமையை வைத்து தீயவர்களை எப்படி பழிவாங்குகிறான் என்பது உச்சக்காட்சி.
இயக்குநர் படத்தை சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருந்தாலும் சினிமாவின் செயற்கைத்தன வாசனை படம் பூராவும் நெளிய வைக்கிறது. ஆச்சரியகரமாக பரத் இதில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஊருக்கு நல்லது செய்து அதன் மூலமான லாபங்களுக்கு ஆசைப்படாதவராக நகர்ந்து கொண்டிருந்த அவரது பாத்திரம், முகத்தில் அறைவது போல் சட்டென்று எதிர்திசைக்கு நகர்கிறது. அது சார்ந்த அக தத்தளிப்புகளை பரத் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த திரைப்படம் எனக்கு இரண்டு தமிழ் சிறுகதைகளை நினைவுப்படுத்தியது. ஒன்று அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்'. இன்னொன்று சா.கந்தசாமியின் 'இரணிய வதம்'. மெல்ல மெல்ல சூடேறி ஒரு கணத்தில் சடாரென்று வெடிக்கும் கதைகள். ஆனால் திரைப்படம் அது சார்ந்த கவித்துவ உச்சம் ஏதுமில்லாமல் உப்புச் சப்பின்றி அபத்தமாக முடிந்து போகிறது. ஆசிரியையின் துயரம் சார்ந்த உபகதையை அனிமேஷன் வடிவில் சொன்னது சிறப்பு. தன் காதலுக்காக பல கோணங்கித்தனங்கள் செய்து ஏமாறும் அந்த அப்பாவி இளைஞனின் விருப்பத்தை இறுதியிலாவது இயக்குநர் விஜய் மில்டன் நிறைவேற்றியிருக்கலாம்.
முன்னணி நாயகர்களுக்காக செயற்கையான அதிபிம்பங்களை உருவாக்காமல் எளிய மனிதர்களுக்கான திரைக்கதையை நம்பி தமிழ் சினிமா பயணிப்பது ஆரோக்கியமான அடையாளம். அந்த வகையில் 'கடுகு' வரவேற்கத்தகுந்ததொரு முயற்சி.
8 தோட்டாக்கள்
நகைச்சுவை நடிகராக நிலைபெற்ற ஒருவரை, குணச்சித்திர வேடத்திற்கு நகர்த்தும் போது பழைய அடையாளத்தையும் கூடவே தக்க வைத்துக் கொள்வார்கள். இயக்குநர் அல்லது நடிகரின் பிடிவாதத்தினால் இது நிகழலாம். தனது பிரதான அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்கிற பாதுகாப்பு உணர்ச்சியே இதை செலுத்துகிறது என யூகிக்கிறேன். நாகேஷை பாலச்சந்தர் உபயோகப்படுத்தியதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். குணச்சித்திர பாத்திரமாக இருந்தாலும் கூட அதன் இடையில் 'காமெடியன்' நாகேஷ் வெளிப்பட்டே தீர்வார். இது பல நகைச்சுவை நடிகர்களுக்கு நேர்கிற விபத்து. காலம் பூராவும் நகைச்சுவையிலேயே அமிழ்த்தப்பட்டு மறைந்தவர்களும் உண்டு.
அவ்வாறில்லாமல் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட ஒருவரை அந்த அடையாளம் முற்றிலும் இல்லாமல் வேறொரு நிறத்திற்கு மாற்ற சவாலான மனோபாவமும் அசாதாரணமான தன்னம்பிக்கையும் வேண்டும். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற நகைச்சுவை நடிகரை அப்படி முயன்று பார்த்த படைப்பாக 'சூது கவ்வும்' திரைப்படத்தைச் சொல்லலாம். ஊழல்கள் மலிந்திருக்கும் அரசியலில் நேர்மையான ஒருவருக்கு இடமேயில்லை என்கிற அபத்த நகைச்சுவை தாங்கிய பாத்திரத்தை பாஸ்கர் அருமையாக கையாண்டிருப்பார். அவரது நகைச்சுவை பிம்பம் எங்குமே தோன்றாது. நலன் குமாரசாமி இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்.
இதற்குப் பிறகு இந்த நோக்கில் பாஸ்கரின் இன்னொரு பரிமாணத்தை திறமையாக பயன்படுத்தியவர் என்று இளம் இயக்குநர் ஸ்ரீ கணேஷை சொல்லலாம். '8 தோட்டாக்கள்' ஒரு அருமையான கிரைம் திரில்லர். அபாரமான திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை.
***
இவற்றைத் தவிர எங்கிட்ட மோதாதே, அதே கண்கள், நிசப்தம், கடம்பன், லென்ஸ் போன்ற திரைப்படங்களையும் அவற்றின் சில பிரத்யேகமான காரணங்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவைகளின் பட்டியலில் வைக்கலாம். இது போன்ற நல்ல முயற்சிகளின் இடையில் புற்றீசல்கள் போல முதிராத முயற்சிகளும் இடையிலேயே கைவிடப்பட்ட பரிதாபமான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களும் இருப்பது வருந்தத்தக்கது.
மேலே சுருக்கமான அலசப்பட்டுள்ள திரைப்படங்கள் கூட ஓரெல்லை வரையான நல்ல முயற்சிகள் எனலாமே தவிர சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை. அந்தந்த இளம் இயக்குநர்களுக்கு, சினிமாவுக்கேயுரிய நெருக்கடிகள், தவிர்க்க முடியாத சமரசங்கள் ஆகியவற்றினால் அது சார்ந்த பிரதிபலிப்பு விபத்துகள் படைப்பில் நேரிட்டிருக்கலாம். ஆனால் அவற்றை மீறியுமான பல விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் 'சிறந்த திரைப்படம்' எனும் எல்லையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.
உதாரணமாக, பாம்புச்சட்டை மிக இயல்பான காதல் திரைப்படமாக, சமூகவிழிப்புணர்வு சார்ந்த படைப்பாக மலர்ந்திருக்க வேண்டியது. ஆனால் திரைக்கதைக் கோளாறினால் தனது மையத்தை தவற விட்டு விட்டது. பாம்புச்சட்டை நாயகனுக்கும் சரி, 8 தோட்டாக்களின் பிரதான பாத்திரத்திற்கும் சரி, அவர்கள் துரத்திச் செல்லும் பணத்தின் அவசியம் திரைக்கதையில் போதுமான அளவு அழுத்தத்துடன் பதிவு செய்யப்படவில்லை. 'வேறு வழியில்லை, அந்த திசை நோக்கித்தான் அவன் பயணப்பட வேண்டியிருக்கிறது' என்கிற நம்பகத்தன்மையையும் நெருக்கடியையும் உணர்வுபூர்வமாக பார்வையாளனும் அடையும் போது அந்தப் படைப்போடு தன்னை வலுவாக இணைத்துக் கொள்கிறான். படைப்பும் வெற்றி பெறும். இது ஒரு உதாரணம் மட்டுமே.
திரைக்கதை உருவாக்கங்களிலும் விவாதங்களிலும் இது போன்ற விஷயங்களை இளம் இயக்குநர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.
மற்றபடி வழக்கமான, சலித்துப் போன தமிழ் சினிமா உருவாக்கங்களிலிருந்தும் முன்னணி நாயகர்களை மட்டும் உருவாக்கப்படும் மசாலா கதைகளில் இருந்தும் விலகி, திரைக்கதையை பிரதானமாக நம்பி உருவாக்கப்படும் இது போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் முக்கியமானவை. இவற்றின் வளர்ச்சியும் பார்வையாளர்கள் இவற்றிற்கு தரும் ஆதரவும்தான் தமிழ் சினிமாவை வளமான பாதைக்கு இட்டுச் செல்லும்.
(பேசும் புதிய சக்தி இதழில் பிரசுரமானது)
suresh kannan