Sunday, October 17, 2010

பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?



விஜய் டிவியில் ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படமான 'ரத்த சரித்திரம்' பிரமோஷனை பார்த்த கையோடு இதை எழுதுகிறேன்.

டிரைய்லரே பச்சை மிளகாயை மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு கடித்தாற் போல் விறுவிறுவென்று இருக்கிறது. 'எண்டர் தி டிராகன்' பார்த்துவிட்டு வெளியே வந்த போது பல்லி மாதிரி இருக்கிற யாரையாவது தேர்ந்தெடுத்து 'ஹூர்ரே' என்று கையால் வெட்ட வேண்டும் போலிருக்கிறது' என்று 'வாத்தியார்' முன்பு எழுதினது ஞாபகம் வருகிறது.

நாடகத்தின் நீட்சியாகவே நிகழ்ந்துக் கொண்டிருந்த இந்திய சினிமாவை இருளும் வெளிச்சமுமான சரியான கலவையில் அதன் காட்சியமைப்பை மாற்றியமைத்தவர்களில் மணிரத்னம் முதன்மையானவர் என்றாலும் ஒருவகையில் ராமுவை மணியின் முன்வரிசையில் வைப்பேன். ஏனெனில் ஒரு பாத்திரம் பழிவாங்குதல் குறித்து வெளிப்படுத்தும் வன்முறை மிக நேர்மையாகவும் அதன் உக்கிரத்துடனும் ராமுவின் உருவாக்கங்களில் இருக்கும். ராமுவின் முதல்படமான 'உதயத்தில்' (தெலுங்கில் ஷிவா) கல்லூரி மாணவனான நாயகன், ரவுடி மற்றும் அரசியல் பின்னணி பலம் தரும் தைரியத்தில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் சக மாணவனுக்கு எதிராக ஒரு ரெளத்திரமான கணத்தில் தன்னுடைய சைக்கிளின் செயினை ஆவேசமாக உருவும் கணத்தில், அந்த அனுபவக் கடத்தலை பார்வையாளனுக்கு மிகக் கச்சிதமாக கொண்டு சேர்த்தற்காக ராமுவை நினைவுகூரும் அதே சமயத்தில் அந்தக் காட்சியையும் இப்போது நினைவுகூரும் போது உள்ளுக்குள் ஒரு நரம்பு துடித்து அடங்குகிறது.

மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தம்முடைய படங்களின் வெளிப்பாட்டிற்கு சம்பந்தமேயில்லாமல்  ஒரு ரோபோ போலவே அமர்நதிருக்கிறார் ராமு. சில்லறை ரவுடிகளின் அபத்தமான கூக்குரல்களுக்கு இடையில் வன்முறையின் பின்னுள்ள அனைத்து நியாய/அநியாயங்களை சாத்தியங்களை உணர்ந்திருக்கிற ஒரு முதிர்ச்சியான வன்முறையாளனைப் போன்ற சித்திரமே அதைப் பார்த்தவுடன் தோன்றுகிறது.

'பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு' -  மஹாபாரதம் ' என இந்தப் படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் டேக் லைனாக வெளிவந்த போது இந்து மக்கள் கட்சி இதை எதிர்த்ததாக பத்திரிகைகளில் வாசித்தேன். இந்த எதிர்ப்பிற்குப் பிறகு இந்த வாசகத்தை உபயோகிப்பதை படநிர்வாகம் கைவிட்டு விட்டது போலிருக்கிறது.

சரி. பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா? ஒருவகையில் ஆம். நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்முறைகளின் போதும் சிந்தனைகளின் போதும் கூட நமக்குள் முழுமையாக நிகழாத ஒருமுகப்படுத்தப்பட்ட மனக்குவிப்பும் வலிமையும் செயலும், பழிவாங்குதலின் போது நிகழ்கிறது என்பதை எத்தனை பேர் ஆச்சரியத்தோடு கவனி்த்திருப்போம்.

OLD BOY என்கிற கொரிய நாட்டுத் திரைப்படம் 'பழிவாங்குதல்' என்பதை ஒரு தத்துவமாகவே கொண்டு இயங்குகிறது. மாணவப்பருவத்தில் நிகழ்ந்த ஒரு மனக்கசப்பின் காரணமாக அந்தப் பகையுணர்வை பல ஆண்டுகள் அதன் வெம்மை குறையாமல் பாதுகாத்து, அதற்குக் காரணமானவனை  கடத்திச் சென்று பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கிறான் ஒருவன். எதற்காக தனக்கு இந்த தண்டனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைவாசி அங்கிருந்து வெளிப்படுத்தப்பட்டவுடன் தன்னுடைய பழிவாங்குதலை நிறைவேற்றுகிறான்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்.


ஆனால் பழிவாங்குதல் என்பது பரிசுத்தமான உணர்வாக இருந்தாலும் நாம் இதை நியாயப்படுத்த முடியுமா? இந்தப் பரிசுத்தம் எத்தகையது? ஏதோவொரு  குற்றவுணர்வின் காரணமாக ஏற்படும் நோய்க்கூறு மனநிலையில் உளப்பாதிப்பில் திரும்பத் திரும்ப கைகழுவுகிற பரிசுத்தத்தைப் போன்றது

ஒருவரை பழிவாங்குவதற்காக முனைப்புடன் செயற்படும் அந்தத் தருணங்களில் நாம் அந்தப் பரிசுத்த உணர்வோடு இருந்தாலும் அதே சமயத்தில் மிருகத்தன்மையோடு இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மிருகங்களிடமிருந்து நாம் வேறுபடும் முக்கியமான புள்ளியிது என்று தோன்றினாலும் உண்மையில் மிருகங்களிடம் கூட பழிவாங்கும் உணர்வு கிடையாது. உணவுப் போட்டிக்காகவும் தம்முடைய பாதுகாப்பிற்காகவும்தான் இன்னொரு மிருகத்தோடு மோதுகிறதே ஒழிய பழிவாங்குவதற்காக அல்ல. 'யானை தன் வாலை இழுத்தவனை பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும்', 'கண்கொத்தி பாம்பு தான் சாகடித்தவனை சுடுகாடு வரை சென்று பார்க்கும்' என்பதெல்லாம் மிருகங்களைக் குறித்த சுவாரசியமான அவதூறுகள்.

ஆனால் பரம்பரை பரம்பரையாக தங்களின் பகையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை இன்றும் கூட பார்க்கிறோம். இதற்குப் பின்னாலிருக்கும் மூலக் காரணத்தை பின்னோக்கி ஆராய்ந்தால் அது மிக நுண்ணியதாகவும் எளிதில் தீர்த்துக் கொண்டிருப்பதாகவும் சமயங்களில் நகைப்பிற்கு உரியதாகவும் கூட இருக்கும். நாம் இதுவரை போட்டிருக்கும் சண்டைகளை சில ஆண்டுகள் கழித்து அதன் முதிர்ச்சியோடு  நினைவு கூர்ந்தால் அது பெரும்பாலும் சிறுபிள்ளைத்தனமாக உணரச் செய்வதோடு அதை வெட்கச் சிரிப்புடன் ஒப்புக் கொள்கிறதாகவும் 'இதற்கு்ப போயா?'  என்பதாகவும் இருக்கும்.

இப்படியான தருணங்களில் ஒரு சராசரி மனிதனாக நானும் மாட்டிக் கொண்டிருக்கிறேன். சக மனிதனின் மீது கோபம் கொள்கிற சமயங்களில் மற்ற சமயங்களை விட நான் மிக உண்மையானவாக இருக்கிறேன். (பழிவாங்குதலை கோழைத்தனமாக மறைமுகமாக செய்வதைப் போன்ற ஒர் அயோக்கியத்தனம் இருக்கவே முடியாது.) ஆனால் அந்த ஆவேசம் அடங்கின பிறகு நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது நான் செயல்பட்டதை நினைத்து குற்றவுணர்வும் வெட்கமும் அடைகிறேன். இந்த இரு நிலைகளுக்குள் கடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

மனிதன் இத்தனை வருடங்கள் வளர்த்து வருகிற சமூக நாகரிகங்களும் அமைப்பும் நம்முடைய பழிவாங்கும் குணங்களை அநாகரிகங்களை வன்மங்களை மட்டுப்படுத்தி மாத்திரமே வைத்திருக்கின்றன. 'உர்'ரென்று சீறும் வனமம் நம் அடிமனதில் அதன் உக்கிரத்தோடு அமர்ந்திருக்கிறது. இதைக் கடந்து வருவது அசாத்தியமானதுதான் என்றாலும் இந்த உணர்வொடு சக மனிதனின் மீதான நேசத்தை சிதைக்காமலிருப்பதில்தான் அடங்கியிருக்கிறது இதனுள்ளிருக்கும் மறைமுக சவால்.

இந்த உணர்வோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். ராமுவின் ரத்தசரித்திரம் அதனைக் காண்பதற்கான ஆவலையும் எதிர்பார்ப்பையம் ஏற்படுத்துவதில் நிறைவு பெற்றிருக்கிறது. அந்தப்படத்தைப் பார்த்தவுடன் ஒருவேளை என்னுள் எழும் 'பரிசுத்தவுணர்வில்' அதைப் பற்றி விரைவில் எழுத முயல்கிறேன்.

suresh kannan

21 comments:

R. Gopi said...

\\'பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு' - மஹாபாரதம் ' \\

\\மூலக் காரணத்தை பின்னோக்கி ஆராய்ந்தால் அது மிக நுண்ணியதாகவும் எளிதில் தீர்த்துக் கொண்டிருப்பதாகவும் சமயங்களில் நகைப்பிற்கு உரியதாகவும் கூட இருக்கும். நாம் இதுவரை போட்டிருக்கும் சண்டைகளை சில ஆண்டுகள் கழித்து அதன் முதிர்ச்சியோடு நினைவு கூர்ந்தால் அது பெரும்பாலும் சிறுபிள்ளைத்தனமாக உணரச் செய்வதோடு அதை வெட்கச் சிரிப்புடன் ஒப்புக் கொள்கிறதாகவும் 'இதற்கு்ப போயா?' என்பதாகவும் இருக்கும். \\

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நான் பார்க்கவில்லை.

பஞ்ச பாண்டவர், குந்தி, பாஞ்சாலி அளவிற்கு ஒருவர் அலைக்கழிக்கப்பட்டு இருந்தால், துன்பப்பட்டு இருந்தால் பழி வாங்குதல் ஒரு பரவச உணர்வே.

pichaikaaran said...

பழி வாங்கும் உணர்வுக்கும், கோபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது...
உடனடி கோபம் பரிசுத்தமானது என்பதை மறுக்க முடியாது.. ஆனால் பழிவாங்கும் உணர்வு மனம் சார்ந்த்து... அதில் பரிசுத்தம் இல்லை..
மேலோட்டமாக பார்த்தால் கோபமும், பழிவாங்குதலும் ஒன்று போல தோன்றும்.. அந்த புரிதலில் எழுதி இருக்கிறீர்கள்.
பரவாயில்லை... சில திரைப்படங்களை அறிமுகம் செய்த்து பயனுள்ள்தாக இருந்த்து

கானகம் said...

தமிழ்ப்படத்தில் ஒரு வசனம் வரும்.. காபி வார்ரதுக்குள்ளையா? அப்படினு..

அதுமாதிரி,, ட்ரெயிலருக்கேவா எனக் கேட்கத் தூண்டினாலும்.. நன்றாய் இருக்கிறது..

KKPSK said...

vicious circle-ல(last blog) இருந்து நீங்கள் வந்ததற்கு, எல்லாம் வல்ல இயற்கைக்கு நன்றி. விரைவில் full form-க்கு வர வாழ்த்துக்கள்.
pl reduce ur twitter time too. we need more articles.

Mohandoss said...

எனக்குச் சொல்லப்பட்டது, நான் உங்களுக்குச் சொல்கிறேன். பழிவாங்குதலைத் தள்ளிப்போடுங்கள், பழிவாங்க நீங்கள் காத்திருப்பவர் மறக்கும் வரை. உங்களுக்கு அபாரமான ஒரு இலக்கியம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, அப்படியே பழிதீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பும். ;)

vinthaimanithan said...

//பஞ்ச பாண்டவர், குந்தி, பாஞ்சாலி அளவிற்கு ஒருவர் அலைக்கழிக்கப்பட்டு இருந்தால், துன்பப்பட்டு இருந்தால் பழி வாங்குதல் ஒரு பரவச உணர்வே.//

ஆமோதிக்கிறேன். பாதிக்கப்பட்டவன் தன் வலியைத் திருப்பிச் செலுத்தும் ஒரு நேர்த்திக்கடன் அது.

வன்முறையும், காமமும் மட்டுமே மனிதனின் ஆதார குணங்கள் என்று ஜெமோ ஓரிடத்தில் சொல்கிறார்.

Anonymous said...

ராமுவை முன் வரிசையில் வைப்பேன், நான் எழுதியிருந்தேன், நான் என்ன சொல்ல வருகிறேன் ..... என்ற ரீதியில் இப் பதிவில் பல நான்கள் வருகிறது. ஆமா நீ யார்?

Unknown said...

ஒல்ட்பாய் பாத்துட்டு எனக்கு ரெண்டு நாள் தூக்கமே வரல,இப்படியெல்லாமா பழி வாங்குவாங்கனு......
நல்ல பதிவு நண்பரே

pichaikaaran said...

”வன்முறையும், காமமும் மட்டுமே மனிதனின் ஆதார குணங்கள் என்று ஜெமோ ஓரிடத்தில் சொல்கிறார்.”

உண்மைதான்,,, குழந்தைகள் கோபம் கூட அழகுதான், அவை இயற்கையாகவும் , உண்மையாகவும் இருப்பதால்.. காம்மும் இயற்கையே ..
ஆனால் பழிவாங்குதல் என்பது முற்றிலும் வேறானது.. பழிவாங்குதலில் நியாயம் இருக்கலாம்.. ஆனால் பரிசுத்தம் இருக்காது

ராம்ஜி_யாஹூ said...

சூர்யாவை இந்த மாதிரி படங்களில் என்னால் நினைத்து பார்க்க முடிய வில்லை.

உதயம் நாகார்ஜுனா கருப்பு சட்டை எங்கே.

எண்ணங்கள் 13189034291840215795 said...

'பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு'

------

Certain times, & to certain extent.. Based on situation..

எண்ணங்கள் 13189034291840215795 said...

உடனடி கோபம் பரிசுத்தமானது என்பதை மறுக்க முடியாது..

-------------

true.

Ashok D said...

Back to form...
But Nice form :)

லதாமகன் said...

நகரில் அலையும் வனப்பேச்சி ஆச்சர்யம். சமீபத்தில் ஓல்ட்பாய் பற்றி இதே தலைப்புடன் நான் எழுதி யிருக்கிறேன். இங்கே

http://silarojakkal.wordpress.com/2010/10/11/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

Ashok D said...

ஒரு ஏழை பணக்காரனால் வஞ்சிக்கப்படும்போது... ஏழையும் துரதிஷ்டமாக போராடி பணக்காரனாகிவிடுவது..(இதுவும் ஒருவித பழிவாங்கலே)...(ஹிஹி .. அண்ணாமலை போலயிருக்கே என்று நினைக்கக்கூடாது)

ஒருதாழ்ந்த ஜாதியை சேர்ந்த இந்தியகுடிமகன்.. பல உயர்ந்த சாதி நல்ல குடிமகன்களால் மட்டம் தட்டி ஒதுக்கப்பட்டாலும் அவர்களை தூக்கி சாப்பிட்டுவிட்டு அறிவாலும் சிந்தனையாலும் மேலே வந்துவிட்டால் அதுவும் பழிவாங்குதலே...

ஒரு பேட்டியில் மணிரத்தினம்... “என்னை மட்டம் தட்டியவர்களை மேலே வந்ததும் பழிவாங்க வேண்டும் என்று எண்ணினேன்..ஆனால் பேரும் புகழும் கிடைத்தவுடன் பழிவாங்குதல் எனை விட்டு மறைந்தது” என்று கூறினார்.

so பழிவாங்குதல் என்பது..எதிரியை விட உயர்வதே.. சாலச் சிறந்தது :)

முகமூடி said...

// டிரைய்லரே பச்சை மிளகாயை மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு கடித்தாற் போல் விறுவிறுவென்று இருக்கிறது //

”ட்ரைலர்” என்று குறிப்பிட வேண்டியதை ”ட்ரைலரே” என்று குறிப்பிடுவதிலேயே ராம் கோபால் வர்மா (ராமு?) மீதான உங்கள் நம்பிக்கை, அதன் காரணமாக ஏற்கனவே படத்தை பற்றி நீங்கள் எடுத்த முன்முடிவு எல்லாம் தெரிகிறது. ட்ரைலரால் தூண்டப்பட்டு படத்துக்கு போய் வெறுத்துப்போய் வெளியே வந்த பல படங்களை போல் இல்லாமல் உங்கள் 'பரிசுத்தவுணர்வை’ எழுப்பும் வண்ணம் இப்படம் இருக்க வாழ்த்துக்கள்.

// ராமுவை முன் வரிசையில் வைப்பேன், நான் எழுதியிருந்தேன், நான் என்ன சொல்ல வருகிறேன் ..... என்ற ரீதியில் இப் பதிவில் பல நான்கள் வருகிறது. ஆமா நீ யார்? //

பதிவை படிக்கும்போது எனக்கும் தோன்றியது.. என்னடா இந்தாள் பாலகுமாரன் ரேஞ்சுக்கு “நானை” முன்னிலை படுத்தி எழுத துவங்கிவிட்டாரே என்று.

// பஞ்ச பாண்டவர், குந்தி, பாஞ்சாலி அளவிற்கு ஒருவர் அலைக்கழிக்கப்பட்டு இருந்தால், துன்பப்பட்டு இருந்தால் பழி வாங்குதல் ஒரு பரவச உணர்வே. //

கேசினோவுக்கு போய் மொத்த சொத்தையும் இழந்துவிட்டு கேசினோ ஓனரை பழிவாங்க புறப்படுவது பரவச உணர்வா. கிருஷ்ணனில் வழிகாட்டுதல்கள், சூழ்ச்சிகள் இல்லையென்றால் வெறும் கைப்புள்ளையாக போயிருக்க வேண்டிய பாண்டவர்கள் ரொம்ப நல்லவர்கள், கவுரவர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றே போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம். பொதுபுத்தியில் பாண்டவர்களின் கஷ்டம் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. எரிதழல் கொண்டுவா தம்பி என்பதை பீமன் தன் அண்ணன் தன் குடும்பத்தையே பணயம் வைத்து தோற்பதற்கு முன்னாடி சொல்லவில்லை. மனைவியை சூதாடி தோற்றவனைத்தான் நாம் “தருமர்” என்று அழைக்கிறோம். என்னதான் பட்டத்து ராணியாக இருந்தாலும் சகல வல்லமை பொருந்திய மகாராஜாவான துரியனை தன் அரண்மனைக்கு வரவழைத்து அவன் தடுமாறியதை பார்த்து சிரித்த திரவுபதி, ஜெயலலிதாவுக்கு எதிரில் (தன்) கால் மேல் (தன்) கால் போட்ட வட்ட செயலாளர் மாதிரிதான். அதற்கு பதிலடியாக அவளை சபையில் துகிலுரிந்த துரியனின் பழிவாங்குதலும் பரவச உணர்வா??

ஜோ/Joe said...

முகமூடி :))

Anonymous said...

அடடே.. வெறுப்பை காக்காமல் கூட உங்களால் பதிவெழுத முடிகிறதே.. வாழ்த்துக்கள்.

Sridhar Narayanan said...

//அதற்கு பதிலடியாக அவளை சபையில் துகிலுரிந்த துரியனின் பழிவாங்குதலும் பரவச உணர்வா??//

:)) கண்டிப்பாக. துரியன் சார்பா யாராவது எழுதி வச்சிருந்தா அதுவும் பரவசமான வரலாறாகத்தான் பதியப்பட்டிருக்கும்.

நியாயமாப் பாத்தா துரியோதனன் ‘ஐந்து அடிமைகளின் மனைவியே’ என்று திரௌபதியை இகழ்ந்ததற்கு அவள் குந்தி தேவியைத்தான் முதல்ல பழி வாங்கியிருக்க வேண்டும். இல்லையா?

பழிவாங்குதலில் பரவசம் ஒன்றும் இல்லை. அதை பதிவு செய்து வரலாற்றாக ஆக்குவதில்தான் இருக்கிறது.

’நாயகன்’ போல ‘உதயம்’ (தெலுங்கு ’சிவா’) ஒரு pathbreaking படம்தான். ஆனா அதுக்கப்புறம் ராமு பண்ணினது எல்லாம் பிஸினெஸ்தான்.

அவருடைய பிந்தைய படங்கள்ல எனக்கு Road பிடிக்கும். சிம்பிள் அண்ட் ஸ்டைலிஷ்.

ரத்த சரித்ரா கவுந்திடும்னு இப்பவே மனசுல ஒரு பட்சி சொல்லுது :)

Anonymous said...

Suresh,

I see some comments posted with intention to insult you.

My suggestion would be please reject those comments.

You can write whatever you feel in your blog and if somebody think that is not correct, they can express their views in decent way and not by hurting you.

Thanks,
Venu

அன்பேசிவம் said...

தலைவரே நான் கூட இந்த படத்தின் ட்ரெய்லரால் ஈர்க்கப்பட்டு ஒரு பதிவெழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் வாசியுங்கள். உதயமின் சத்யாவின் வன்முறை அழகியலை இங்கேயும் பார்க்க முடியுமென நினைக்கிறேன்.