Sunday, December 05, 2004

நானும் வலைப்பதிவு ஆரம்பித்த கதை

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட வலைப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமெதுவுமில்லை.

ஒரு நாள் அலுவலகத்தில் அரைமணி நேர ஓய்வு கிடைத்த போது யதேச்சையாக காசியின் தமிழ்மணத்தில், வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கான தகவல்களை அடங்கிய சுவையான கட்டுரை ஒன்றை (இ-சங்கமத்தில்) படிக்க நேர்ந்தது. குரங்கிலிருந்து பரிணாமித்த மனிதனுக்கே உரிய நோண்டிப் பார்க்கும் ஆர்வத்துடன், இதை சோதித்துப் பார்க்கலாமே என்கிற எண்ணத்துடன் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தேன். தலைப்பு என்ன இடலாம் என்று யோசித்த போது என் மனதில் வந்து நின்ற வார்த்தை 'பிச்சைப்பாத்திரம்'. கொஞ்சம் ஏடாகூடமான பெயராக இருக்கிறதே என்று தயங்கி வேறு பெயர் யோசித்த போதுகூட இந்தப் பெயரே மனதில் பிடிவாதமாக வந்து நின்றது. இணையத்தொடர்பு இயங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் சற்றும் தயங்காமல் இந்தப் பெயரையே வைத்துவிட்டேன்.

எங்கிருந்து இந்தத் தலைப்பு நம் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது என்று இரவு சாவகாசமாக யோசித்துப் பார்த்தப்போது, நீண்ட வருடம் கழித்து மறுஉயிர் பெற்றிருக்கிற 'புதிய பார்வை' இதழில் பாமரன் இந்த தலைப்பில் ஒரு பத்தி எழுதி வருவதை உணர முடிந்தது. எந்தவித அலங்காரமுமில்லாமல், முகத்துக்கு நேராக உண்மையை சொல்கிற பாமரனின் எழுத்துக்களை ஆரம்பத்திலிருந்து விருப்பமுடன் வாசித்து வந்திருக்கிறேன். எனவே இந்தப் பெயரை வைத்ததில் எவ்வித வருத்தமுமில்லை இப்போது.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றாள் ஒளவைப் பாட்டி. 'இந்த பிச்சைக்காரனிடமிருந்து என்ன வேண்டும்?' என்று தன்னையே பிச்சைக்காரனாக வருணித்துக் கொள்வாராம், திருவண்ணாமலை விசிறி சாமியார். (எல்லோரும் சமீபத்திய சர்ச்சையில் சிக்கிய சாமியாரைப் பற்றி எழுதும் போது நான் ஒரு மாறுதலுக்கு வேறு சாமியாரைப் பற்றி எழுதுகிறேன்). குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர் கூறியது: 'பல வருடங்கள் செல்வந்தனாக இருந்த நான் ஒரு சிலநிமிடங்களில் பிச்சைக்காரனாகி விட்டேன்.'

யோசித்துப் பார்த்தால் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே. இயற்கை வழங்குகிற எல்லா சலுகைகளையும் காசில்லாமல்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த நன்றி இல்லாமல் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக, நாகரிகம் என்ற பெயரில் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கையை ஒட்டிய நாகரிக வளர்ச்சி இல்லாமல் போவது, நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வதை போலத்தான்.

O

இந்த வலைப்பதிவு இப்போதுதான் ஜனித்த குழந்தை. குழந்தை பிறந்த உடனே பார்த்தால் அழகாகவா இருக்கும்? பனிக்குட நீரும், நிணமும் இரத்தமும் மேலெல்லாம் வழிந்து சதைக்கொடி போலிருக்கிற தொப்புள்கொடி அறுபடாமல் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கும். இந்த வலைப்பதிவின் தோற்றமும் அப்படித்தானிருக்கும் என்று யூகிக்கிறேன்.

தொழில்நுட்ப விஷயங்களின் நான் எப்போதுமே பூஜ்யம். காசி, ராஜா, பத்ரி போன்ற சில தொழில்நுட்ப ஜில்லாலங்கடி நண்பர்களின் உதவியோடுதான் இந்தப் பதிவை இன்னும் சீர்படுத்த வேண்டும்.


suresh kannan

9 comments:

Anonymous said...

§Â¡ù À¢î¨º,

À¡ò¾¢Ãò¨¾ ²ó¾¢ì¸¢ðÎ Åó¾¢Õ츣Õ!!
¿øÄ¡ þÕõ§Å!!

±øÄ¡Õõ '¸¢ÚìÌÈ' Á¡¾¢Ã¢ ²üÀ¡Î Àñ½¢ò ¦¾¡¨ÄÔõ§Å!!

¬º¢ô Á£Ã¡ý

துளசி கோபால் said...

வாங்க சுரேஷ்கண்ணன்!


//எனவே நானும் இன்று முதல் களத்தில் குதித்துவிடலாம் என்றுதான் மடற்குழுக்களிலிருந்து தற்காலிக
விடைபெற்று இங்கே வந்திருக்கிறேன்//

இதுக்கு எதுக்காக மடற்குழுக்களில் இருந்து லீவு எடுக்கணும்? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

அது சரி, ராப்பிச்சையா பகல் பிச்சையா?

எங்க ஊர்ப் பக்கத்துலே 'அன்னக்காவடி'ன்னு ராத்திரியிலே பிச்சைக்கு வருவாங்க. அந்தப் பிச்சைப்
பாத்திரம், பாத்திரம்ன்னு சொல்ல முடியாது. நல்லா 'பளபள'ன்னு தேச்சு மின்னுகிற பித்தளை
குடம்/டேக்ஸாவாக இருக்கும். காவடி மாதிரி ரெண்டுபக்கமும் ஒரு உலக்கை மாதிரி இருக்கற
மரத்தடியிலே இணைச்சிருப்பாங்க. அந்தத் தடியிலே பித்தளை மணிங்க 'ஜல்ஜல்'லுனு குலுங்க
பாகறதுக்கே ரொம்ப நல்லா இருக்கும்!

என்றும் அன்புடன்,
துளசி.

Unknown said...

என் பலநாள் ஆசை நிறைவேறிடுச்சு. இணையத்திலே வலைப்பதிவு ஆரம்பிக்காம இருக்காங்களேன்னு நான் கவலைப்பட்ட ஆளுங்கள்ல நீங்களும் ஒருவர். வாங்க, வந்து அடிச்சு ஆடுங்க.

-/பெயரிலி. said...

யாஹ¤! குழுமங்களிலே நீங்கள் எழுதியவற்றினைப் படித்திருக்கிறேன். வலைப்பதிவுக்கு நகர்ந்ததற்கு வரவேற்பு.

Chandravathanaa said...

///இந்த வலைப்பதிவு இப்போதுதான் ஜனித்த குழந்தை. குழந்தை பிறந்த உடனே பார்த்தால் அழகாகவா இருக்கும்? பனிக்குட நீரும்இ நிணமும் இரத்தமும் மேலெல்லாம் வழிந்து சதைக்கொடி போலிருக்கிற தொப்புள்கொடி அறுபடாமல் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கும். இந்த வலைப்பதிவின் தோற்றமும் அப்படித்தானிருக்கும் என்று யூகிக்கிறேன்.///

உங்கள் எழுத்து அழகாக இருக்கிறது. தொடருங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Arul said...

வாழ்த்துக்கள்
அன்புடன்,
இர.அருள் குமரன்

பிச்சைப்பாத்திரம் said...

வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

எம்.கே.குமார் said...

வாங்க சுரேஷ்!
வலைப்பதிவு ஆரம்பிக்கிறது தாலி கட்டுறது மாதிரி ஈஸியான விஷயம். தொடர்ந்து "அதை" "அங்கே" மெயின்டைன் பண்ணனும். அதான் கொஞ்சம் கஷ்டம்! கலக்குங்க!

எம்.கே.குமார்

Anonymous said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.....யாஹூ குழுமத்தில் உங்களின் எழுத்துக்களை படித்திருக்கிறேன். கேட்க வேண்டியதை கேட்டு வையுங்கள் போட்டு நிரப்ப வேண்டியதை (கமெண்ட்ஸ் பாக்ஸில் தான்) நிரப்பி விட ஏகப்பட்டோர் இருக்கிறார்கள். என்ன... முகமூடி அணிந்து ஊசிப்போனவகளையும் வீசுவார்கள். அந்த அசௌகரியத்தை தவிர எல்லாம் நல்லப் படியானதாகத்தானிருக்கும். வாழ்த்துக்கள் பல.

இஸ்மாயில். சிங்கை.