Thursday, March 04, 2010

ஊடகங்களின் விபச்சாரம்


அன்று வீட்டுக்குத் தாமதமாகத்தான் திரும்பியதால் சமீபத்திய பரபரப்பான அந்த 'வீடியோக் காட்சிகள்' செய்தியில் ஒளிபரப்பாவது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலை என்னுடைய ஒன்பது வயது மகள் தூங்கி எழுந்தவுடனே என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எனக்குப் புரியவில்லை. முந்தைய நாள் மாலை பார்த்த அந்தச் சாமியார் செய்தியைக் குறிப்பிட்டு கேட்டாள். "நீங்க கூட முன்ன அவங்கள்லாம் கெட்டவங்கன்னு சொல்லியிருந்தீங்கல்ல. நெஜம்தான். அவங்க கெட்டவங்கங்கதான்னு ப்ரூவ் ஆயிடுச்சு" என்றாள்.

சில மாதங்களுக்கு முன்பு ஏதோவொரு சானலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நித்யானந்தா பிரசங்கித்துக் கொண்டிருந்த காட்சிகளை தற்செயலாக நாங்கள் பார்க்க நேர்ந்தது. "யாருப்பா இவரு" என்று கேட்ட மகளிடம் "பொதுவா இந்த மாதிரி ஆளுங்கல்லாம் பிராடாத்தான் இருப்பாங்க. நம்பி ஏமாறக்கூடாது" என்றேன். உடனிருந்த மனைவி "அப்படியெல்லாம் ஒருவரைப் பற்றி தெரியாமல் பேசி விடக்கூடாது" என்றார். பிறகு சாமியார்கள் பொதுவாக நல்லவர்களா, கெட்டவர்களா என்ற விவாதத்தில் நான் கெட்டவர்கள் பக்கத்தில் நின்றேன்.

அதைத்தான் அவள் "கெட்டவங்கதாம்ப்பா" என்று குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒளிபரப்பான செய்தியைப் பற்றி கூறி விட்டு உடனடியாக மறுபடியும் கேட்டாள். "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எஸ்எம்எஸ் புதிர் போட்டிகள் மாதிரி வார இதழ்களில் எழுதப்படும் இந்த மாதிரி கிசுகிசுக்களில் நடுத்தர வயது நபர்களே அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். இது இப்போது இளைய தலைமுறைக்கும் பரவி விட்டதை நினைத்து ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. எனக்கும் அது குறித்த குறுகுறுப்பு இருந்தாலும் அலுவலகம் போகும் வழியில் ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்ததை கவனித்தேன். பின்பு அலுவலக இணையத்தில் அந்தக் காட்சிகளை பார்த்த போது "அடப்பாவிகளா! இதையா ஒளிபரப்பினார்கள்?" என்று அதிர்ச்சியாக இருந்தது.

நம் சினிமாக்களில் இல்லாத ஆபாசமா? என்று இது குறித்து எழும் கேள்வி சரிதான் என்றாலும் இம் மாதிரியான உண்மைச் சம்பவங்களில் உள்ள ஆபாசம் அதிக அழுத்தத்துடனும் பரபரப்புடனும் நம் மனங்களில் பதிவாகும். அதுதான் ஒரு கேள்வியாக உருவெடுத்து மகளுடைய வடிவில் என் முன் நிற்கிறது. தார்மீகப் பொறுப்புடன் இயங்க வேண்டிய ஊடகங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவும் அதன் அரசியல் காரணமாகவும் எல்லாவற்றையும் மிதித்துக் கொண்டு நடக்கும் போது வெறுப்பு மண்டுகிறது.

சாமியாரை வெளிப்படுத்தியதையாவது போலி பிம்பங்களின் மீதான மெலிதான அறச்சீற்றமாக எடுத்துக் கொண்டு சமாதானமடையலாம். ஆனால் முதல் நாள் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட அந்த பெண்ணின் முகம், அடுத்த நாளில் வெளிப்படையாகவே பெயர் குறிப்பிடப்பட்டு ஒளிபரப்பியதில் என்ன அறம் இருக்கிறது?

பொதுவெளியில் கலாச்சார பாசாங்குகளுடன் இயங்கும் நம் மனம், திரை இருட்டில் நடிகைகளின் அங்கங்களை எச்சிலொழுக வெறித்துப் பார்க்கும் அதே உணர்வுடன்தான் இந்த செய்திக் காட்சிகளையும் பார்க்கும். பளபளப்பான தோல்களின் பின்னால் உள்ள அவர்களின் வலியையும் வேதனையையும் பற்றி நாம் கற்பனை செய்து கூடப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயது வரை எல்லாப் பெண்களைப் போலவே வளரும் அவர்கள், நடிகையான பின்னர் பணம் செய்யும் இயந்திரமாகவே அவரது சுற்றத்தால் பெரும்பாலும் பார்க்கப்பட்டு அதிகபட்ச உழைப்பால் சுரண்டப்படுகிறார்கள். ஒருநிலையில் இதைக் கண்டு கொள்ளும் நடிகைகள் மன அழுத்ததிற்கும் உளப்பிரச்சினைகளுக்கும் ஆளாகி அவை அவர்களை பல்வேறு குழப்பமான நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. உலகத்தை ரட்சிக்க வந்திருப்பதாக தம்மை முன்நிறுத்திக் கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்கள், இந்தக் குழப்பத்துடன் வருபவர்களை ஆன்மீக போர்வைக்குள் நிர்வாணமாக தள்ளுகின்றனர். தமக்கு ஆதாயமுள்ள சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் தருவதாக பாவனை செய்யும் நடிகர் சங்கம், இவர்களைப் போன்றவர்களை அவர்களின் உளவியல் ரீதியான அழுத்தங்களிலிருந்து வெளிவரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

()

ஓர் ஆணும் பெண்ணும் தாமாகவே விரும்பி உடல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுக்கிடையில் சட்டமே நுழைய எந்தவித முகாந்திரமும் இல்லாத போது, அதை ஊரெங்கும் பரப்பும் அதிகாரத்தை ஊடகங்கள் தாமாகவே எடுத்துக் கொள்வது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய தருணமிது. குறிப்பிட்ட சானல் இந்தச் செய்தியை பெண்ணின் மறைக்கப்பட்ட முகத்துடன் வெளிப்படுத்தியது, இன்னொரு பத்திரிகையின் இணைய தளம் அந்தப் பெண்ணை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. "முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம். நீலப்படங்களை ஒளிபரப்பும் பே சைட்டுக்களாவது, நிர்வாணக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நபர்களின் காட்சிகளைத்தான் காட்டுகிறது. யாரோ ஒருவரின் நிர்வாணத்தை உபயோகப்பபடுத்திக் கொண்டு காசு பறிக்கும் இந்த மாதிரியான ஊடகங்களின் விபச்சாரத்தனம் அருவருப்பூட்டுகிறது. இந்த சாமியாரை பல வருடங்களாக முன்நிறுத்திக் கொண்டிருந்த ஒரு வார இதழ், இப்போது அது குறித்த வெட்கமோ குற்றஉணர்வோ இல்லாமல் அவர்களின் தளத்தில் சாமியாரின் லீலைகள்" என்று அதையும் பரபரப்பாக விற்பனை செய்யும் போது இவர்கள் எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஒரு வீடியோ காட்சி,  அதுவரை வழிபட்டுக் கொண்டிருந்த பிம்பத்தின் மீதான எதிர்மறை வன்முறையை ஒரே கணத்தில் நம்மிடம் தூண்டும் நிலையைப் பார்க்கும் போது  ஆன்மீக தளத்தில்  நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்று தோன்றுகிறது. எந்தவொரு மனிதனாலும் இறக்கும் வரை கூட காமத்தை கடந்து வர முடியாத நிலை இருக்கும் போது சாமியார்களிடம் இதை எப்படி நம்மால் நம்பி ஏமாற முடிகிறது? இம்மாதிரியான சாமியார்களை ஆரம்ப நிலையில் பணச்செல்வாக்கும் ஊடகங்களும் பொதுவெளியில் முன்நிறுத்தினாலும் அவர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க காரணமாயிருப்பவர்கள் யார்? இந்தச் சமூகம்தான். அதாவது நாம்.

சாமியார்களைத் தேடிப் போவதில் அடித்தட்டு, மேல்தட்டு, படித்தவன், அல்லாதவன் என்று எந்தவித வித்தியாசங்களும் இருப்பதில்லை. மேல்தட்டு மக்களுக்கு 'ஏஸி அறை கார்ப்பரேட் சாமியார்கள்' என்றால், அடித்தட்டு மக்களுக்கு இருக்கவே இருக்கிறார்கள் பீர் சாமியார்களும் தேங்காயை நச்சென மண்டையில் உடைக்கும் பூசாரிகளும். இம்மாதிரியான போலிகளை அடையாளங் கொண்டு விலகியிருக்கும் பகுத்தறிவு நபர்களும் எல்லாத் தட்டுக்களிலும் இருக்கிறார்கள். "சாமி கும்பிடணும்னா நேரா போயி கும்பிடு. இதுக்கு எதுக்கு சார் நடுவுல புரோக்கர்?. நாமளாத்தான் போயிதானே அவன்க கால்ல வுழறோம்" என்று ஆவேசமாக பேசிக் கொண்டு வந்தார் ஒர் ஆட்டோ ஓட்டுநர்.

தவிர்க்கவேயியலாத பட்சத்தில் இந்தச் சாமியார்களை எப்படி அணுக வேண்டுமென்றால், அவர்களிடமிருந்து யோகாவோ, தியானமோ அல்லது எந்தவித பயிற்சியோ கற்றுக் கொண்டு எந்தவொரு தொழில்முறைக்காரர்களையும் போல அவர்களை அந்த நிலையிலேயே நிறுத்தி விட வேண்டும். மாறாக அவர்களை கடவுளாகவோ அவதாரமாகவோ பரவச நிலையில் நாமாக உருவகப்படுத்திக் கொண்டு பிறகு அவர்கள் நிர்வாணமாக படுக்கையில் புரள்வதை காணும் போது அதிர்ச்சியும் சினமும் கொள்வதில் எவ்வித உபயோகமுமில்லை.

இச் சமூகதின் பெரும்பான்மையே அனைத்து வித விகாரங்களுடன் இயங்கும் போது அச்சமூகத்தின் ஒரு அங்கமாகிய சாமியார்களிடம் மாத்திரம் புனிதத் தன்மையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆன்மீக இடைத்தரகர்களை முற்றிலுமாக நாம் புறக்கணிக்கும் வரை இம்மாதிரியான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

suresh kannan

22 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//ஆன்மீக இடைத்தரகர்களை முற்றிலுமாக நாம் புறக்கணிக்கும் வரை இம்மாதிரியான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.//



சரியாக சொன்னீர்கள்.

அரன் - கோவை said...

குருடர்களாக நாம்தான் அவர்களை ஏற்றி அப்புறம் இறக்குகிறோம் , ஜெ கட்டுரை படித்தீர்களா ?

Krishnan said...

"ஆன்மீக இடைத்தரகர்களை முற்றிலுமாக நாம் புறக்கணிக்கும் வரை இம்மாதிரியான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்." Very true, but our gullible public are never sick of Godmen unfortunately.

அக்னி பார்வை said...

நாம் தவறு செய்யாமல் இருக்க காராணம் 1. விருபமில்லை 2. பயம், யாருக்குமே தெரியாது என்று நம்பிக்கை வந்தால் தவறு செய்யகூடியவர்கள் தான்.

சன் டீவி இதை வெளியிட்டார்கள் என்பதை தவிற மற்ற அனைத்துமே ஒரு வியாபார நிறுவனத்தின் செய்ல்பாடு தான்.தன் வியாபார நோக்கத்தில் ஒரு குட்டு வெளிப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான் மற்றப்படி சன் டீவி, சன் டீவி தான்.

இப்பொழுது தான் என் நண்பனிடம் ஜக்கியை ஈஷா யோக குரு என்பத்துடன் நிறுத்திக்கொள், சாமி அது இது என்று சொல்லிகொண்டிருக்காதே நாளை மாட்டினால் வருத்த்படாதே என்று சொல்லிவிட்டு வந்தேன் உங்கள் கடைசி பத்தி என் கருத்துடன் ஒன்றியது...

நாம் விழிப்புடன் இருப்பது ஒன்று தான் ஒரே வழி, என்ன பிரச்ச்னையென்றால் நாம் இதையெல்லாம் மறந்துவிடுவோம் "மறதி நம் தேசிய வியாதி".

யரோ புது சாமியார் வந்திருக்கிறாம் நான் பார்த்துவிட்டு வருகிறேன்..

manjoorraja said...

ஆன்மீக இடை தரகர்கள் மட்டுமல்ல, ஈனத்தனமாக அதை வியாபாரமாக்கும் ஊடகங்களையும் புறக்கணிக்கவேண்டும்.

ராம்ஜி_யாஹூ said...

இந்த மாதிரி பத்திரிக்கைகளில் , தொலைக்காட்சிகளில் நம் பதிவும், கவிதை வருவதையும் தான் நாம் சாதனையாக இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

லைட்டா தாக்கி எழுதுங்க- இல்லா விடில் உங்க கவிதை, பதிவை அவுங்க பத்திரிக்கைல போடா மாட்டாங்க இனிமேல்.

Vijay said...

தனி மனிதர்களை என்ன சொன்னாலும் அவர்கள் தம் மனசு என்ன சொல்கிறது அதன்படி நடப்பர். சிட் ஃபண்டில் பணம் போடாதே என்றாலும், அங்கு தான் பணத்தைப் போட்டு, பிற்பாடு வருத்தப் படுவர். ஆனால் சன் டி.வி போன்ற ஒரு ஊடகம் பொறுப்புள்ளத்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

சாமியார் என்று சொல்லிக் கொண்டு காவி உடுத்திக் கொள்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இ.பி.கோ வில் சொல்லப் படவில்லை. இல்லை கடவுள் பெயரைச் சொல்லி தர்ம காரியங்கள் மற்றும் யோகா தியானம் போன்றவற்றையும் செய்யக் கூடாது என்று சொல்லப்படவில்லை. அப்படியிருக்கு சன் டி.வி எதற்காக இப்படியொரு வீடியோ படத்தைத் திருப்பி திருப்பி போட்டுக் காட்ட வேண்டும். ஏதோ உள் குத்து இருக்கிறது.

நேசமித்ரன் said...

Same pinch

:)

http://nesamithran.blogspot.com/2010/03/blog-post.html

Joe said...

நண்பனுடன் மதிய உணவு இடைவேளையில் நித்யா சாமியாரின் காணொளி குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, "எதற்கு இதனை அனைவரும் பார்க்கும் சன் செய்திகளில் வெளியிட்டார்கள்? வெளிநாடுகளில் இது போன்ற காணொளிகள் கிடைத்தால் அது குறித்து ஒரு செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகலாம், முழுப்படமும் இணையத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குழந்தைகள் எல்லாம் இதனை பார்த்தால் என்ன புரிந்து கொள்வார்கள்? அவர்கள் மனதை இது வெகுவாக பாதிக்கும் இல்லையா?" என்று கேட்டார்.

குழந்தைகளை இந்த நாகரீக உலகம் குழந்தைத்தனத்துடன் வாழ விடுவதில்லை என்பதே ஜீரணிக்க முடியாத நிஜம்.

ரவி said...

சரியா சொன்னீங்க !!!!!!!

barathi said...

"ஓர் ஆணும் பெண்ணும் தாமாகவே விரும்பி உடல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுக்கிடையில் சட்டமே நுழைய எந்தவித முகாந்திரமும் இல்லாத போது, அதை ஊரெங்கும் பரப்பும் அதிகாரத்தை ஊடகங்கள் தாமாகவே எடுத்துக் கொள்வது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய தருணமிது. குறிப்பிட்ட சானல் இந்தச் செய்தியை பெண்ணின் மறைக்கப்பட்ட முகத்துடன் வெளிப்படுத்தியது, இன்னொரு பத்திரிகையின் இணைய தளம் அந்தப் பெண்ணை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. "முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம். நீலப்படங்களை ஒளிபரப்பும் பே சைட்டுக்களாவது, நிர்வாணக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நபர்களின் காட்சிகளைத்தான் காட்டுகிறது. யாரோ ஒருவரின் நிர்வாணத்தை உபயோகப்பபடுத்திக் கொண்டு காசு பறிக்கும் இந்த மாதிரியான ஊடகங்களின் விபச்சாரத்தனம் "
well Said...

சீனு said...

//"முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம்.//

நக்கீரன் தான் அந்த மானங்கெட்ட பத்திரிக்கை. இதுக்கு பேசாம ஏதாவது போர்ன் லைப்ரெரி ஆரம்பிக்கலாம். தூ...

//இப்பொழுது தான் என் நண்பனிடம் ஜக்கியை ஈஷா யோக குரு என்பத்துடன் நிறுத்திக்கொள், சாமி அது இது என்று சொல்லிகொண்டிருக்காதே நாளை மாட்டினால் வருத்த்படாதே என்று சொல்லிவிட்டு வந்தேன்//

ஜக்கியிடமே இதை பற்றி கேட்டிருக்கிறார்கள், "நீங்கள் கடவுளா?" என்று. அவர் "நானும் உங்களை போன்ற ஒருவர் தான்" என்று பதிலலித்தார். (டிஸ்கி: நான் அவர் ஃபாலோயரோ/பக்தரோ அல்ல...அல்ல...அல்ல...)

//அப்படியிருக்கு சன் டி.வி எதற்காக இப்படியொரு வீடியோ படத்தைத் திருப்பி திருப்பி போட்டுக் காட்ட வேண்டும். ஏதோ உள் குத்து இருக்கிறது.//

ஏதோ சொத்து பிரச்சினை என்று கேள்விப்பட்டேன். வழக்கமாக சன் டிவியில் ஒரு பாடலில் இருக்கும், மற்ற சேனல்களில் காட்டிய, காட்சியை கூட தானே முன்வந்து வெட்டியிருக்கிறார்கள். உதா, "தேவதையை கண்டேன்" பாடலில் வரும் முத்தக்காட்சி. ஆனால், இதை அப்பட்டமாக ஒளிபரப்பியதில் கண்டிப்பாக ஏதோ உள்குத்து இருக்கிறது. அதுவும், ப்ரைம் டைமில், குடும்பத்துடன் அமர்ந்து அந்த காட்சியை பார்த்து தொலைத்தவர்கள் நிலமை தான் பாவம். பார்த்த மாத்திரத்தில் அந்த சாமியார் மேல் கோபம் வரவேண்டும் என்று தான் அப்படி ஒளிபரப்பியிருக்கிறார்கள். மேலும், அந்த வர்னனை, அதுவும் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை வைத்து சொல்ல வைத்திருப்பது...சன் டிவிக்கு கூசவே கூசாதா?

தனபால் said...

///இன்னொரு பத்திரிகையின் இணைய தளம் அந்தப் பெண்ணை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. "முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம். நீலப்படங்களை ஒளிபரப்பும் பே சைட்டுக்களாவது, நிர்வாணக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நபர்களின் காட்சிகளைத்தான் காட்டுகிறது. யாரோ ஒருவரின் நிர்வாணத்தை உபயோகப்பபடுத்திக் கொண்டு காசு பறிக்கும் இந்த மாதிரியான ஊடகங்களின் விபச்சாரத்தனம் அருவருப்பூட்டுகிறது///
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சார்..

ரோஸ்விக் said...

ஊடகங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

மக்கள் பல நேரங்களில் மாக்களாகத் தான் உள்ளனர். மீண்டும் ஒரு பாவியை காவியில்(மட்டுமல்ல...) தேடுவார்கள்.

மணிஜி said...

வீரப்பனை வைத்து காசு சம்பாதித்தவர்கள் நக்கீரன்.. வெட்கமே இல்லாமல் தன் ஊழியர்கள் மூன்று பேர்களின் சாம்பலில் இதயம் இனித்தவர்கள்..எதிக்ஸ் எல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்கலாமா? இன்றுதான் முதல்வரே அறிக்கை விடுகிறார்.

Ashok D said...

தலைப்பு :)

Anonymous said...

It is high time to revise and strict Media Law. I am really concerned about the girl. The man will abscand or somehow escape from this scandal. I pity for the girl and her family!
I wish the techonology is not developed this much

Anonymous said...

Nobody could have said it better than you. Your points are right on the money. Public figures in a society are a reflection of the society. If somebody fools you, instead of being ashamed of getting fooled, you get angry with the person who fooled. That is what is happening here, millions of his disciples got fooled by him and now they are angry at him for fooling them. Where is these idiots sense of responsibility?

I cannot understand the sense of outrage against the Swami and the Actress. If anything the public should be outraged against the media. What stops them from putting a camera on a opposition leaders bedroom or somebody they don't like and broadcasting it on TV.

P.S, You are a mature writer and I for one read your writing regularly. Keep up the good work.

என் நடை பாதையில்(ராம்) said...

பொது நலத்தில் கொஞ்சம் சுயநலம் இருந்தால் பரவாயில்லை! இங்கு எல்லாரும் சுய நலத்தைத் தான் பார்க்கிறார்கள். எப்படியும் இனி ஓரிரண்டு வாரத்திற்கு வார, மாத இதழ்கள் விற்பனை சக்கை போடு போடும்.

பாபு said...

//அதை ஊரெங்கும் பரப்பும் அதிகாரத்தை ஊடகங்கள் தாமாகவே எடுத்துக் கொள்வது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய தருணமிது.//

சரியாக சொன்னீர்கள்

Anonymous said...

"ஓர் ஆணும் பெண்ணும் தாமாகவே விரும்பி உடல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுக்கிடையில் சட்டமே நுழைய எந்தவித முகாந்திரமும் இல்லாத போது, அதை ஊரெங்கும் பரப்பும் அதிகாரத்தை ஊடகங்கள் தாமாகவே எடுத்துக் கொள்வது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய தருணமிது. குறிப்பிட்ட சானல் இந்தச் செய்தியை பெண்ணின் மறைக்கப்பட்ட முகத்துடன் வெளிப்படுத்தியது, இன்னொரு பத்திரிகையின் இணைய தளம் அந்தப் பெண்ணை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. "முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம். நீலப்படங்களை ஒளிபரப்பும் பே சைட்டுக்களாவது, நிர்வாணக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நபர்களின் காட்சிகளைத்தான் காட்டுகிறது. யாரோ ஒருவரின் நிர்வாணத்தை உபயோகப்பபடுத்திக் கொண்டு காசு பறிக்கும் இந்த மாதிரியான ஊடகங்களின் விபச்சாரத்தனம் "


Rightly said.. wondering why no one is asking about it.. it is setting a very bad example.

Senthil Ramalingam said...

Hello Boss, Your thoughts are Okay but you also pasted that so called bad "pictures" at the top of your columns. What is your justification on this...