அந்தப் புத்தகம் ஒரு கருப்பு பிசாசு போல் என் முன் அமர்ந்திருந்தது.
சில பக்கங்களை வாசிப்பேன். வயிற்றைப் பிசையும் உணர்வும் நெஞ்சை அடைக்கும் உணர்வும் எழும். மனதுக்குள் அழுகை பொங்கி வரும். உடனே புத்தகத்தை மூடி விடுவேன். உடல் மற்றும் மனரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் கதறலும் கூப்பாடும் விசும்பலும் அழுகையும் கலந்து ரத்தக்கறைகளுடனும் வாதையின் ஓலங்களுடனும் எல்லாப்பக்கங்களிலும் நிறைந்திருக்கும் அதை வாசிக்காமலே விட்டுவிட்டால்தான் என்ன என்று தோன்றும். ஆனால் விபத்தில் குடல் சரிந்து ரத்த சகதியில் விழுந்து கிடப்பவனை குறுகுறுப்புடன் வேடிக்கை பார்க்க நினைக்கும் குரூர மனம் 'எடுத்து வாசி' என்று கட்டளையிடும். தட்ட முடியாமல் மீண்டும் சில பக்கங்கள். திரும்பவும் மூடல். இவ்வாறாகத்தான் அந்தப் புதினத்தை வாசிக்க முடிந்தது. யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல் வாசிப்பு அனுபவத்தைத்தான் குறிப்பிடுகிறேன். ஜெயமோகனின் 'ஏழாம் உலகத்தையும்' தி.ஜானகிராமனின் 'மரப்பசுவையும்' (இதற்கு காரணம் வேறு) இவ்வாறாகத்தான் வாசிக்க முடிந்தது.
ஏறத்தாழ மேற்குறிப்பிட்ட அதே அனுபவத்தை இந்தத் திரைப்படத்தை காணும் போது அனுபவிக்க நேர்ந்தது. An Amercican Crime (2007). அமெரிக்க மாவட்டமான இண்டியானாவில் 1965-ல் Sylvia Likens என்கிற சிறுமி அவள் தங்கியிருந்த வீட்டுப் பெண்மணியான Gertrude Baniszewski-ன் மூலம் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாள். "The most terrible crime ever committed in the state of Indiana" என்று இந்த வழக்கை விசாரணை செய்தவரால் கூறப்படுமளவிற்கு இந்த வழக்கு அப்போது மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த உண்மைச் சம்பவத்தையும் வழக்கின் நீதிமன்ற விசாரணைக் குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் An Amercican Crime.
சில்வியாவின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தி பொருள் ஈட்டுபவர்கள். அவளுக்கு போலியோ காலுடன் ஜென்னி என்கிற சகோதரியுமுண்டு. குழந்தைகளின் படிப்பு காரணமாக அவர்களை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாமல் பெற்றோர் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் Gertrude Baniszewski என்கிற பெண்மணியின் அறிமுகம் தற்செயலாக நேர்கிறது. ஏற்கெனவே ஆறேழு குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து வறுமையில் வாடும் அவள், இவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதாக முன்வருகிறாள். மாதம் 20 டாலர் தந்தால் போதும் என்றும் தமக்கு அது உதவிகரமாக இருக்கும் எனவும் வேண்டுகிறாள்.
எல்லாக் குழந்தைகளும் ஆனந்தமாக விளையாடும் காட்சிகளோடு திரைப்படம் நகர்கிறது. ஆனால் மாத தவணைப் பணம் வரத் தாமதமாகும் தருணத்தில் Gertrude Baniszewski-ன் குரூர முகம் வெளிப்படுகிறது. இரண்டு சிறுமிகளையும் நிலவறைக்கு அழைத்துச் சென்று புட்டத்தில் பெல்ட்டால் அடிக்கிறாள். சில்வியா தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஜென்னியால் இதை சகித்துக் கொள்ள முடிவதில்லை.
மணமான ஒருவனிடம் கர்ப்பமாகிவிடுகிற அந்தக் குடும்பத்தின் மூத்த பெண், தன்னிடமுள்ள குறையை மறைக்க 'சில்வியா தன்னைப் பற்றி ஊரெங்கும் அவதூறு சொல்கிறாள்' என்று தாயிடம் பொய்ப் புகார் செய்ய சில்வியாவிற்கு சிகரெட் சூடு கிடைக்கிறது. ஒரு முறை சில்வியா ஆண் நண்பனுடன் சர்க்கஸிற்கு சென்று வர அதை தவறாக யூகிக்கும் Gertrude Baniszewski அவளுடைய யோனியுள் குளிர்பான பாட்டிலை திணிக்கிறாள். தாய் செய்யும் கொடுமை போதாதென்று அந்த வீட்டின் சிறுவ/சிறுமிகளும் பக்கத்து வீட்டுப் பையன்களையும் அழைத்து வந்து சுவாதீனமின்றி கிடக்கும் சில்வியாவை கொடுமை செய்கின்றனர். இவ்வாறான பல வதைகளுக்குப் பின் "I'M A PROSTITUTE AND PROUD OF IT" என்ற எழுத்துக்களுடன் வயிற்றில் சூடு போடப்பட்ட சில்வியா ஒரு உச்சக்கட்ட பரிதாப கணத்தில் இறந்து போகிறாள். (நிஜ சம்பவங்களில் சில்வியா மலம் தின்னப்படுத்தப்பட்டாள் என்கிற தகவல் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. நல்ல வேளையாக படத்தில் இது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பசோலினியின் 120 Days of Sodom திரைப்படத்தில் இவ்வாறான மலம் தின்ன வைக்கப்படும் காட்சியும் பின்னர் கூட்டாக மல விருந்து நடத்தப் பெறும் காட்சிகளையும் கண்டு சில மணி நேரத்திற்கு ஒரு மார்க்கமாகவே இருந்தது).
Gertrude Baniszewski-க்கு 18 வருட சிறைத்தண்டனையும் சில்வியாவை இரக்கமின்றி துன்புறுத்தின சிறுவர்களுக்கு சில வருட சீர்திருத்தப் பள்ளித் தண்டனையும் அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையின் போது தாம் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும் தொடர்ந்து அருந்தி வந்த இருமல் மருந்து காரணமாக தாம் எப்போதும் ஒருவித மன உளைச்சலிலேயே இருந்ததாகவும் தம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதை அறியவில்லை என்றும் கூறுகிறார்.
Gertrude Baniszewski பாத்திரத்தை மிக அற்புதமாக நடித்துள்ளார் Catherine Keener. முதலில் இந்த கொடூரமான பாத்திரத்தை ஏற்கத் தயங்கியதாகவும் பின்னர் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறார். இவரது பாத்திரம், நமது தமிழ்த் திரைப்படங்களைப் போல் முழுக்க கருப்பில் அல்லாது இரண்டிற்குமான சமனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது முன்னாள் கணவன் ஒரு போலீஸ்காரன். இவளை அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறான் என்பது உரையாடலின் மூலம் வெளிப்படுகிறது. இவளது தற்போதைய சின்னஞ்சிறு குழந்தைக்கு தகப்பன், இவளது மகன் வயதே இருப்பவன். இவளிடமிருந்து நைச்சியமாக பணத்தைப் பறித்துச் செல்கிறான். ஐந்தாறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வறுமையில் சிரமப்படும் இவளுக்கு தன்னுடைய மகளான பவுலா கர்ப்பமாயிருக்கும் விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. என்றாலும் அதை ஊரார் முன்னால் ஒப்புக் கொள்ளாமல் தனிமையில் அழுகிறாள். சில்வியாவை தண்டிக்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விட்டு அழுகிறாள். எந்த வித கொடூர முகபாவங்களுமின்றி இவள் தண்டனையை நிறைவேற்றும் போதெல்லாம் பார்வையாளர்களுக்குத்தான் வயிற்றைப் பிசைகிறது. 'தம்முடைய குழந்தைகள்தான் தம்முடைய வாழ்க்கையின் ஒரே ஆதாரம்' என்று ஒரு முறை சில்வியாவிடம் கதறுவதிலிருந்து கொடூர மனத்தின் பின்னேயுள்ள தாய்ப்பாசம் தெரிகிறது.
சில்வியாவைத் தவிர அவளது சகோதரியின் பாத்திரமும் இயக்குநரால் (Tommy O'Haver) திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. போலியோ கால் காரணமாக இயல்பிலேயே தாழ்வு மனப்பான்மை உள்ள அவள், தம்முடைய சகோதரி கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு மெளனமாக அழுகிறாள். என்றாலும் Gertrude Baniszewski மீதுள்ள பயம் காரணமாக இதை வெளியுலகிற்கு வெளிப்படுத்தாமலேயே இருக்கிறாள். தாமும் அவ்வாறே கொடுமைப்படுத்தப்படலாம் என்கிற நியாயமான எண்ணம் காரணமாக சகோதரியின் மீதுள்ள பாசத்தை விட தண்டனைகளின் மீதுள்ள பயமே ஜெயிக்கிறது.
நிஜ சம்பவத்தில் இல்லாத ஒன்றை திரைப்படத்தில் இணைப்பதின் மூலம் படைப்பாளியின் சுதந்திரத்தையும் வலிமையையும் உணர்த்துகிறார் இயக்குநர். ஒரு நிலையில் அந்த வீட்டிலிருந்து பவுலாவின் உதவியுடன் தப்பிக்கிறாள் சில்வியா. எப்படியோ தன் பெற்றோரை அடைந்து அழுகைக்கு நடுவில் அனைத்தையும் சொல்கிறாள். பெற்றோர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். மீண்டும் அதே வீட்டிற்கு வருகிறார்கள். சில்வியா மிகுந்த தயக்கத்துடன் உள்ளே நுழைகிறார். அங்கே சில்வியாவின் இறந்து போன உடல் கிடப்பதையும் Gertrude Baniszewski குடும்பத்தினரும் ஜென்னியும் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் சில்வியா காண நேருகிறது.
அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் சில்வியாவினுள் பிரம்மாண்ட எண்ணமாக எழுந்து அது பிரமையாக அவள் முன் நிற்கிறது என்பதை இயக்குநர் மிக திறமையாக இந்தக் காட்சிக் கோர்வைகளின் மூலம் உணர்த்துகிறார்.
()
'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது நம் தமிழ் மரபின் சூழலில் விளைந்த பழமொழி. என்றாலும் அந்நியர்களிடம் தம்முடைய குழந்தைகளை ஒப்படைக்கும் முன் தீர யோசிக்க வேண்டும் என்ற செய்தியை இந்தப்படம் முன்வைக்கிறது. தாயும் பணிக்குச் செல்ல நேரும் இந்த பொருளீட்டு யுகத்தில் பணியாட்களினால் கொடுமைப்படுத்தப்படும் எத்தனை சில்வியாக்கள் இருக்கிறார்களோ? இதே சம்பவத்தை வைத்து The Girl Next Door என்கிற புதினமும் எழுதப்பட்டிருக்கிறது.
மிகுந்த மனச்சங்கடத்தை ஏற்படுத்திய திரைப்படமென்பதால் மெல்லிய உணர்வுள்ளவர்கள் இதை தவிர்த்துவிடலாம்.
suresh kannan
6 comments:
//உடல் மற்றும் மனரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் கதறலும் கூப்பாடும் விசும்பலும் அழுகையும் கலந்து ரத்தக்கறைகளுடனும் வாதையின் ஓலங்களுடனும் எல்லாப்பக்கங்களிலும் நிறைந்திருக்கும் அதை வாசிக்காமலே விட்டுவிட்டால்தான் என்ன என்று தோன்றும்//
யூமா வாசுகியின் "ரத்த உறவு" நாவல் படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இதுவே.இன்றளவும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.அந்த நாவல் குறித்து எனது தளத்தில் எழுதவும் தயங்கி விட்டுவிட்டேன்.
திரைப்படம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.
//சில பக்கங்களை வாசிப்பேன். வயிற்றைப் பிசையும் உணர்வும் நெஞ்சை அடைக்கும் உணர்வும் எழும். மனதுக்குள் அழுகை பொங்கி வரும். உடனே புத்தகத்தை மூடி விடுவேன். //
முதல் பத்தி படிச்சதும் என்னடா இவ்வளோ நாளாவா டிஸ்கிரிட் மேத்தமேட்டிக்ஸ் அரியர் வெச்சு இருக்கிங்க என்று நினைச்சேன்!:)
இந்தமாதிரி படம் எல்லாம் நமக்கு சரிவராது சாமி! மீ தி எஸ்கேப்பு!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியே. வாசிப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டேன். இந்தப் படம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.
"அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் சில்வியாவினுள் பிரம்மாண்ட எண்ணமாக எழுந்து அது பிரமையாக அவள் முன் நிற்கிறது என்பதை இயக்குநர் மிக திறமையாக இந்தக் காட்சிக் கோர்வைகளின் மூலம் உணர்த்துகிறார்"
எனக்கு இது மாதிரியான காட்சிகளுடன் முடியும் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்....ஆனால் அதை இப்படி விளக்குபவர்களைக் கண்டால் கொலைவெறி வரும்:-)
Escapist என்ற படம் கிடைத்தால் அவசியம் பார்க்கவும்...மிகவும் சாதாரணமான ஒரு படம் போலத்தான் தெரியும், கிளைமாக்ஸை தவிர்த்தால்...
//அந்நியர்களிடம் தம்முடைய குழந்தைகளை ஒப்படைக்கும் முன் தீர யோசிக்க வேண்டும் என்ற செய்தியை இந்தப்படம் முன்வைக்கிறது. //
Nanny sedates baby, 'rents' him out to beggars
:) யூமா வாசுகி படித்த கலங்காத ஆள் இருக்கமுடியவே முடியாது. அவரின் கதைமாந்தர்கள் சொல்லில் அடங்க முடியாத மென்மையானவர்கள்.
Post a Comment