Wednesday, June 03, 2020

The Girl on the Train (2016) - ‘மூன்று துரோகம் - ஒரு கொலை






இதுவொரு சைக்காலஜிக்கல் திரில்லர்.  மூன்று பெண்களின் வாழ்வை அவர்களுக்கே தெரியாமல் ஒருவன் சீரழிக்கிறான். இதற்கான பழி முழுவதும் அப்பாவிப் பெண்ணின் மீது விழுகிறது. சுவாரசியமான திரைக்கதையின் மூலமாக காட்சிகள் விரிவது இத்திரைப்படத்தின் பலம்.

***


ராச்சல் விவாகரத்து ஆனவள்.  மனக்குழப்பங்களும் குடிப்பழக்கமும் உள்ளதால் அனைவராலும் விநோதமாக பார்க்கப்படுகிறாள். தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்த படி  தினம்  ரயிலில் பயணிக்கிறாள். பழைய வீட்டை ரயில் கடந்து செல்லும் சிறிய தருணத்தில் முன்னாள் கணவனின் குடும்பத்தை, அவனுடைய புதிய மனைவி அன்னாவை குறிப்பாக அவர்களின் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தபடி செல்வாள்.


தன் குழந்தையை தூக்கிச் சென்று விடுவாள் என்று ராச்சல் மீது அன்னாவிற்கு  பயமும் சந்தேகமும் உண்டு. தன் கணவனுக்கு  ராச்சல் போனில் மெசேஜ் அனுப்புவது, போன் செய்வது ஆகியவையும் பிடிப்பதில்லை.


ராச்சல் ரயிலில் இருந்து  வெளியே வேடிக்கை பார்க்கும் சமயத்தில் ஓர் அந்நிய இளம் பெண்ணை தினமும் பார்ப்பாள். அவள் தன் கணவனுடன் அன்பாக பழகும் விதத்தை தினமும் பார்க்கும்  ராச்சலுக்கு ஏக்கம் உண்டாகும்.  'அன்பான வாழ்வு அமைந்திருக்கிற  குடும்பத்தலைவி' என்று அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது பிரியம் உண்டாகும்.

உண்மையில் ராச்சல் காண்பது கானல் நீர் காட்சிதான். அவளால் வேடிக்கை பார்க்கப்படும் 'மேகன்' என்கிற  இளம்பெண் தன்னுடைய இயந்திரத்தனமான கணவனுடன் வெறுமையான வாழ்வை வாழ்கிறவள். ராச்சலின் பழைய வீட்டில் 'தாதி' வேலை பார்ப்பவள். அவளும் தன் வாழ்க்கை குறித்த மனக்குழப்பங்களைக் கொண்டவள்.




***

ஒரு நாள் - ராச்சல் வழக்கம் போல இளம் பெண்ணின் வீட்டை கவனிக்கும் போது ஒரு காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டிருப்பவன், அவளுடைய கணவன் அல்ல. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வைத்திருந்த புனிதமான பிம்பம் நொறுங்கி விட்டதில்,  அவளைக் கொன்று விடலாமா என்கிற வெறி ராச்சலுக்கு வருகிறது.


ஒருநாள் குடி மயக்கத்தில் ராச்சல் வீடு திரும்பும் சமயத்தில் அந்த இளம் பெண்ணை காண்கிறாள். ஆத்திரத்துடன் அவளை நோக்கி கூவிக் கொண்டே செல்லும் போது  'மடார்' என்று தான் தாக்கப்பட்டது மட்டும்தான் அவளுக்கு தெரியும். விடிந்த போது ரத்தக் காயங்களுடன்  சாலையில் கிடப்பதை உணர்வாள். என்ன நடந்தது என்பதை அவளால் நினைவு கூரவே முடியாது.


சில நாட்கள் கழித்து அவளைத் தேடி போலீஸ் வரும். இளம் பெண் காணாமற் போயிருக்கும் தகவல் அப்போதுதான் அவளுக்கு  தெரிய வரும். "குறிப்பிட்ட நாளின் நேரத்தில் நீ எங்கு இருந்தாய், என்ன செய்து கொண்டிருந்தாய்?'  போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு ராச்சலால் சரியாக பதில் சொல்ல இயலாது. அவள் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது என்று தோன்றும். 'இனிமேல் நீ உன் முன்னாள் கணவனின் வீட்டருகே செல்லக்கூடாது' என காவல்துறை அதிகாரி எச்சரிப்பாள்.

***

ராச்சலுக்கு ஒரே குழப்பம். 'அந்த நாளின் இரவில் என்னதான் நடந்தது?'  தான் யாரால் தாக்கப்பட்டோம்? அந்தப் பெண் ஏன் காணாமல் போனாள்?

இளம்பெண்ணின் வீட்டிற்கு ராச்சல் செல்கிறாள். முரட்டுத்தனமாக தோன்றுகிற அவளுடைய கணவனிடம் "உன் மனைவியை வேற்று ஆடவன் முத்தமிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்' என்கிறாள். போலீஸ் அவனையும் சந்தேகப்படுகிறது என்பதால் இந்த தகவல் அவனுக்கு ஆச்சரியத்தை தரும். மட்டுமல்ல, தன் மனைவியின் துரோகம் குறித்து கோபமும் வரும்.

சில புகைப்படங்களைக் காட்டி அடையாளம் காட்டச் சொல்வான் அந்த முரடன். ராச்சல் அவற்றில் ஒருவனை சரியாக அடையாளம் சொல்வாள். அந்த நபர் - மேகனுக்கு உளச்சிகிச்சை தந்து கொண்டிருந்த மருத்துவர்.


***

சில நாட்களில் மேகனின் சடலம் அழுகிய நிலையில் புதர்ப்பகுதியிலிருந்து கிடைக்கிறது. அவள் காணாமல் போகவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறாள். மேகனின் கணவனின் மீீது போலீஸின் சந்தேகம் அதிகமாகும். பத்திரிகைகளில் பரபரப்பு ஏற்படும்.

ராச்சல் அந்த நாளின் சம்பவங்களை மெல்ல மெல்ல நினைவுக்கு கொண்டு வர முயல்வாள்.. ஆம்.. அன்று அவளை  தாக்கியது, அவளுடைய முன்னாள் கணவன். தன் குடும்பத்தையே ராச்சல் சுற்றிச் சுற்றி வருவதால் எரிச்சலடைந்து இவளைத் தாக்கி விடுவான். அதே நாளில்தான் மேகனின் மரணமும் நடக்கிறது.

தனது வீீட்டில் தாதியாக பணிபுரிந்து கொண்டிருந்த 'மேகனுடன்' அவன் ரகசிய உறவு வைத்திருக்கிறான். தான் கர்ப்பமுற்றிருப்பதாக மேகன் சொல்லும் போது எரிச்சல் அடைகிறான். ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இவர்களின் சர்ச்சை நடக்கும் போது ஆத்திரத்துடன் அவளைக் கொன்று விடுகிறான்.


***

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட ராச்சல் நேராக தன் பழைய கணவனின் வீட்டிற்கு செல்வாள். அவனிடம் இது குறித்து கேட்கும் போது ராச்சலையும் அவன் கொல்ல முயல்கிறான். பதிலுக்கு ராச்சல் தாக்கியதில் அவன் ஏறத்தாழ இறந்து போகிறான். அவனுடைய தற்போதைய மனைவி அன்னாவும் வந்து தாக்கி அவனுடைய கதையை முழுவதுமாக முடிக்கிறாள். அவன் தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்கும்.

இருவரும் காவல்நிலையத்திற்கு செல்வதோடு படம் நிறையும்.  ராச்சலுக்கு இருந்த மனக்குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு எல்லாப் பழியையும் ராச்சல் மீது போட்ட கயவனை பழிவாங்கிய திருப்தி அவர்களுக்கு இருக்கும்.

ராச்சலாக நடித்த Emily Blunt-ன் நடிப்பு அற்புதம். குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாத தடுமாற்றம், தன் வாழ்வு குறித்த வெறுமை ஆகிய உணர்ச்சிகளை மிக அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான  திரைக்கதையின் மூலம் இயக்கியிருந்தவர் Tate Taylor.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

நல்ல அறிமுகம். இந்தப் படம் வெற்றி பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
ஆனால், வாசிப்பின் சுவையைப் படம் தரவில்லை.