Thursday, June 25, 2020

A Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'




ஓவே -வை சந்தியுங்கள். வயது 59.  ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று  பாய்ந்து விடுவார். பயங்கர சிடுமூஞ்சி ஆசாமி.  குடியிருப்பு வளாகத்தில் தான் ஏற்படுத்திய விதிகளை யாராவது மீறுகிறார்களா என்பதை கறாராக கண்காணித்துக் கொண்டேயிருப்பார். எவராவது தேவையில்லாமல் சத்தம் எழுப்பினாலோ, கண்ட படி வாகனங்களை உள்ளே எடுத்து வந்தாலோ அவர்கள் மீது விழுந்து பிறாண்டி விடுவார். 'இந்தப் பெரிசு கூட ஒரே ரோதனைப்பா" என்று மற்றவர்கள்  பதிலுக்கு முணுமுணுப்பது வழக்கம்.


பெரியவருக்கு ஆத்திரம் தலைக்கேறும் போதெல்லாம் இறந்து போன மனைவியின் புன்னகையை புகைப்படத்தில் பார்த்து அமைதியடைவார் . வயதாகி விட்டதால் ஒருநாள் பணியிலிருந்து மரியாதையுடன் துரத்தி விட்டு விட்டார்கள். அது சார்ந்த கடுப்பிலும் துயரத்திலும் இருக்கிறார் ஓவே. இதோ.. இப்போதுதான் சுடச்சுட ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அது நிறைவேறாமல் தோல்வியடைந்து தரையில் விழுந்து கிடக்கிறார். "என்னய்யா, கயிறு விக்கறீங்க.. தரமேயில்லாம" என்று கடைக்காரரிடம்  அதற்காக பிற்பாடு சண்டையும் போட்டு விட்டார்.

தற்கொலை செய்யுமளவிற்கு பெரியவருக்கு என்னதான் பிரச்சினை?

***

ஓவே-வின் தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார். தந்தை அதிகம் பேசமாட்டார். அப்படியே பேசினாலும் கார் என்ஜின்களைப் பற்றிதான் மணிக்கணக்கில் பேசுவார். கூடவே நேர்மையையும் கற்றுத் தந்தார். ஓவே படித்து முடித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற அதே நாளில் தந்தை விபத்தில் சிக்கி மரணமடைகிறார். எனவே தந்தையின் வேலை கிடைக்கிறது.

நகரை நவீனமயமாக்குகிறோம் என்று அதிகாரவர்க்கம் ஓவே-வின் வீட்டைப் பறித்துக் கொள்கிறது. சுற்றியலையும் ஓவே ரயிலில் படுத்து தூங்கி விடுகிறார். கண்விழிக்கும் போது தன் வருங்கால தேவதையை சந்திக்கிறார். அவள் பெயர் சோன்ஜா. என்ன காரணத்தினாலோ அவளுக்கு ஓவே -வை பிடித்துப் போகிறது. தாழ்வு மனப்பான்மையால் சுருங்கும் ஓவே -விடம் தம் காதலை தெரிவிக்கிறாள்.  ஓவே -வின் வறண்ட வாழ்க்கையில் வந்த புதிய வசந்தம்.

முறையான தொழிற்கல்விக்கு ஓவே -வை ஊக்கப்படுத்துகிறாள் சோன்ஜா. அது முடிந்ததும் இருவரும் திருமணம் செய்கிறார்கள். மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. மனைவி மீது  தன்னுடைய அத்தனை அன்பையும் கொட்டுகிறார் ஓவே. சோன்ஜா கர்ப்பமுற்றிருக்கும் நிலையில் விதி மறுபடியும் குறுக்கிடுகிறது. அவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளாக சோன்ஜாவின் கால்கள் பறிபோகின்றன. இதனால் அவளது ஆசிரியர் கனவிற்கு சோதனையேற்படுகிறது. சக்கர நாற்காலி பள்ளிக் கட்டிடத்திற்குள் செல்ல முடியாது. எனவே பணியில் சேரமுடியாத சிக்கல். மழை பெய்யும் இரவு முழுவதும் உழைத்து சாய்வுப் பாதையை ஏற்படுத்துகிறார் ஓவே.

சிறந்த ஆசிரியையாக விளங்கும் சோன்ஜா சில நாட்களிலேயே கேன்சர் வந்து இறந்து விடுகிறாள். மனைவியை இழந்த துக்கம் தாங்காத ஓவே -விற்கு பணியிழப்பும் சேர்ந்து கொள்ள .... இறந்த போன மனைவியிடன் சென்று சேர்வதற்காக தற்கொலை முடிவு. அவர் மற்றவர்களிடம் எரிந்து விழுவதற்கும் இதுதான் காரணம்.


***

வெளியில் சிடுமூஞ்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓவேவின் இன்னொரு பக்கத்தை பக்கத்து வீட்டில் புதிதாக குடியேறும் பெண்மணி கண்டுபிடிக்கிறாள். ஓவே தன்னிடம் எரிந்து விழுவதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் அவ்வப்போது உதவி கேட்கிறாள். அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஓவே -வின் தற்கொலை முயற்சி பாழாகிறது. பிறகு மெல்ல இருவருக்கும்  இடையில் புரிதலுணர்வும் அன்பும் உருவாகிறது. அவளுக்குத் தந்தையாகவும் அவளது குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் ஆகிறார் ஓவே.

பலமுறை முயன்றும் தற்கொலையால் சாகாத ஓவே, ஒரு நாளின் அதிகாலையில் இயற்கையாக செத்துப் போகிறார். இதுநாள் வரை மனைவியின் கல்லறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தவர், இனிமேல் நேரடியாகப் பேசக்கூடும்.

***


சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இருந்த ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் இது. ஓவே -வாக Rolf Lassgård அற்புதமாக நடித்திருந்தார். எல்லோரிடமும் எரிந்து விழுபவராகவும், மனைவியின் கல்லறைக்குச் சென்று தினமும் புலம்புவராகவும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் மோதலில் துவங்கி அன்பின் நெகிழ்ச்சியில் நிறையும் உறவைச் சித்தரிப்பதாக இருக்கட்டும், அனைத்துக் காட்சிகளிலும் அபாரமாக நடித்திருக்கிறார்.

'என் மனைவிக்கு முன்னாலும் பின்னாலும் உலகம் இல்லாமல் இருந்தது' என்கிற துக்கத்துடன் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு கிழவரின் வாழ்க்கையில் புதிய உறவை நுழைப்பதின் மூலம் அன்பின் வெளிச்சம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது என்கிற செய்தியை நெகிழ்வாகச் சொல்லும் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Hannes Holm.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: