Saturday, June 27, 2020

Manchester by the Sea (2016) - ‘தலைமுறை இடைவெளி'








அமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு.  தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து உருவாகும் பிரியாணி உணவகமாக ஹாலிவுட் இருக்கும் போது, எளிமையாக கிளறப்பட்ட ரவா கிச்சடியாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் கனமானதாகவும் நுட்பமானதாகவும் ஐரோப்பிய திரைப்படங்கள் இருக்கும். இரண்டு பக்கமும் விதிவிலக்குகள் உண்டுதான் எனினும் இதுதான் தோராயமான வரைமுறை.

ஆனால் சமீபத்தில் பார்த்த அமெரிக்கத் திரைப்படமான 'Manchester by the Sea', ஓர் அற்புதமான ஐரோப்பியத் திரைப்படம் போல இருந்ததைக் கண்டு வியந்தேன். இயக்குநர் Kenneth Lonergan, நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த திரைப்படம் சிக்கலான, அதே சமயத்தில் அதிகம் குழப்பாத திரைக்கதையைக் கொண்டது. Lee Chandler என்பவனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் முன்னும் பின்னுமாக காட்டப்படுகின்றன. உடைந்த கண்ணாடியின் வழியாக சிதறித் தெரியும் பிம்பங்கள் போல அவனைப் பற்றிய கலவையான சித்திரங்கள் நமக்குத் தெரிகின்றன.  அவனுக்கும் அவனுடைய அண்ணன் மகனுக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் மூலம் தலைமுறை இடைவெளியைப் பற்றிய சினிமாவாகவும் இது இருக்கிறது.


***

குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் எடுபிடி ஆளாக இருக்கிறான் லீ. அதிகம் பேசாதவன். சட்டென்று கோபம் வந்து விடும். மதுக்கடையில் தம்மைப் பார்த்து ஏதோ பேசுகிறார்கள் என்று நினைத்து இரண்டு கனவான்களின் மூக்கில் குத்தி ரத்தம் பார்க்கிறான். குடியிருப்பு வாசிகளிடம் கூட ஒரளவிற்குத்தான் பொறுமையை அவனால் கடைப்பிடிக்க முடியும்.


லீ -க்கு அழகான குடும்பம் ஒன்று முன்பு இருந்தது. அன்பான மனைவி, அழகான மூன்று குழந்தைகள். இவனுடைய குடிப்பழக்கத்தால் வீட்டில் ஏற்படும் தீ விபத்தில் குழந்தைகள் இறந்து போகின்றனர். வெறுப்புறும் மனைவி பிரிந்து போய் வேறு திருமணம் செய்து கொள்கிறாள். காவல் நிலையத்தில் நிகழும் விசாரணையின் போது அதிகாரியின் துப்பாக்கியைப் பிடுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான் லீ. ஆனால் அது தடுக்கப்பட்டு விடுகிறது. குழந்தைகளின் ஞாபகம் வந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. லீ சிடுமூஞ்சியாக மாறினதற்கு இந்த துயரமும் குற்றவுணர்வும் கூட காரணமாக இருக்கலாம்.

தன்னுடைய அண்ணன் மருத்துவமனையில் இருப்பதாக ஒருநாள் லீ-க்கு ஒரு தகவல் வருகிறது. தம்முடைய பணிகளை ஒப்படைத்து விட்டு கிளம்புகிறான். அங்கு சென்றால் அண்ணனின் பிணத்தைத் தான் பார்க்க முடிகிறது.

அண்ணனின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் லீ-க்கு வழக்கறிஞரின் மூலம் ஓர் அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. தனியாக இருக்கும் அண்ணன் மகனான பாட்ரிக்கை, அவன் மேஜர் ஆகும் வரை லீ-தான் காப்பாளராக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணன் உயில் எழுதி வைத்திருக்கிறார். சில நாட்களில் கிளம்பி விடலாம் என்று நினைத்திருந்த லீ சங்கடமடைகிறான். அண்ணன் உயிருடன் இருந்த போது தன்னிடம் காட்டிய அன்பு காரணமாக இதைச் சகித்துக் கொள்ள முடிவு செய்கிறான்.

இளைஞனான பாட்ரிக் மற்றும் அவனது சித்தப்பாவான லீ -க்கும் இடையேயான சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

***

பாட்ரிக் சரியான அராத்தாக இருக்கிறான். தன் கூட படிக்கும் இரு பெண்களிடம்  ஒருவருக்கொருவர் தெரியாமல் பார்த்துக் கொண்டு இருவரிடமும் ஜாலியாக இருக்க நினைக்கிறான். "நீ அவங்க அம்மா கிட்ட பேசிட்டு இர்றேன். அதுக்குள்ள என் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்" என்று லீ-யிடமே கெஞ்சுகிறான். ஏற்கெனவே தாமரை இலை தண்ணீர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் லீ -க்கு பாட்ரிக்கின் நடவடிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. அவனிடம்  நண்பனாக நடந்து கொள்வதா அல்லது அண்ணன் மகன் என்கிற முறையில் கறாராக தன் நிலையைப் பின்பற்றுவதா என்று குழப்பமாக இருக்கிறது.

லீ எடுக்கும் முடிவுகள் பலவற்றையும் பாட்ரிக் ஆட்சேபிக்கிறான். 'இதெல்லாம் எங்க சொத்து. என் இஷ்டப்படிதான் நடக்கணும்' என்று அடம் பிடிக்கிறான். இல்லையென்றால் 'என்னைக் கழட்டி விட்டுட்டு ஓடிடலாம்னு பாக்கறியா' என்று சண்டையிடுகிறான்.

love & hate வகையிலான உறவு இருவரிடமும் நீடிக்கிறது. ஒருவரை விட்டு ஒருவர் விலக நினைக்கிறார்கள். ஆனால் இன்னமும் அறுந்து போகாத பாசமும் அன்பும் அந்த உறவை பிரிக்க அனுமதிப்பதில்லை. இரண்டிற்கும் இடையேயான தத்தளிப்பு. பாட்ரிக் அராத்தாக இருந்தாலும் தன் தந்தையின் மரணத்தை எண்ணி பயத்தில் அழும் ஓர் இரவில் அவனுக்குள்ள குழந்தைத்தனத்தை லீ-யால் உணர முடிகிறது.


இந்த சிக்கலான உறவை இன்னமும் தொடர முடியாத லீ, மாற்று ஏற்பாடு ஒன்றை செய்து விட்டு தன் ஊருக்கு கிளம்புகிறான். பாட்ரிக்கும் இதை எண்ணி கலங்குகிறான். 'என்னுடைய ஒற்றை அறை வீட்டை காலி செய்து விட்டு எக்ஸ்ட்ரா ரூம் இருக்கிற வீடாகப் பார்த்து வைக்கிறேன். நீ ஊருக்கு வரும் போது தங்குவதற்காக.. ' என்று லீ இறுதிக் காட்சியில் சொல்வதன் மூலம் அந்த உறவு பட்டுப் போகாமல் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.


***

லீ -யாக நடித்திருக்கும் Casey Affleck-ன் நடிப்பு அற்புதம். பெரும்பாலான காட்சிகளில் சலனமே அற்ற உடல்மொழியுடனும்  ஆத்திரம் ஏற்படும் போது அதற்கு மாறாக பொங்கி வெடிப்பவனாகவும் பாட்ரிக்கை வெறுக்கவும் முடியாமல் அன்பு செலுத்தவும் முடியாதமல் தத்தளிப்பவனாகவும் உள்ள  லீ பாத்திரத்தை சிற்ப்பாக கையாண்டிருந்தார். 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கர் விருதை இவர் பெற்றது முற்றிலும் நியாயமான தேர்வே.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: