Sunday, June 07, 2020

Moonlight (2016) - ‘கருப்பு நிலா'




கருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நிறவெறுப்பு சார்ந்த உளவியலை திரைப்பட இயக்குநர்களும் அப்படியே பிரதிபலித்தார்கள். ஆனால் அந்தச் சமூகத்தின் இன்னொரு பக்க பரிதாப சித்திரத்தை இயல்பாக முன்வைக்கிறது இந்த திரைப்படம்.

சிரோன் என்கிற கருப்பின நபரின் வாழ்க்கையை  அவன் சிறுவனாக இருக்கும் பருவம் முதல் வாலிபனாகும் வரையான காலக்கட்டமாக மூன்று பகுதிகளில் விவரிக்கிறது.

ஆஸ்கர் விருதிற்காக  எட்டு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருப்பதில் இருந்தே இத்திரைப்படத்தின் சிறப்பை யூகிக்க முடியும். சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் குளோடன் குளோப் விருதையும் ஏற்கெனவே வென்றுள்ளது.


**

சிறுவனான  சிரோனை தாக்குவதற்காக  சக மாணவர்கள் துரத்தி வருகிறார்கள்.  ஜூவானும் அவனுடைய காதலியும் சிரோனுக்கு அடைக்கலமும் ஆதரவும் தருகிறார்கள். ஜூவான் போதைப் பொருள் விற்பவன்.  எனவே சிரோனின் தாய் 'அவனிடம் செல்லாதே' என்று எச்சரிக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவள் போதை மருந்தின் அடிமை. தந்தையில்லாத சிரோனுக்கு வீட்டில் அமைதியில்லாத சூழலினால் அடிக்கடி ஜூவானின் வீட்டிற்கு சென்று தங்குகிறான்.

சிரோன் உருவத்தில் சிறியவனாகவும் பலவீனமாகவும் இருப்பதால் சக மாணவர்கள் சீண்டிக் கொண்டேயிருக்கிறார்கள். தாழ்வுணர்வில் அவதிப்படும் அவனுக்கு கெவின் என்பவன் மட்டுமே நண்பனாக இருக்கிறான். ஜூவான் இவனுக்கு நீச்சல் கற்றுத் தந்து தன்னம்பிக்கையை வளர்க்கிறான்.

**

சிரோன் சற்று வளர்ந்து விட்டாலும் நிலைமையில் பெரிதும் மாற்றமில்லை. போதை மருந்திற்கு அடிமையான தாய் இவனிடமிருந்து காசு பிடுங்குகிறாள். அந்த வெறியில் இவனிடம்  சண்டையிட்டு கத்துகிறாள். அடைக்கலம் சென்ற இடத்திலும் அதிகம் தங்க முடியாமல் தெருவில் சுற்றித் திரிகிறான் சிரோன். அப்போது நண்பனான கெவினிடம் விநோதமான அனுபவம் ஏற்படுகிறது. தான் யார் என்கிற அடையாளச் சிக்கலும் சிரோனுக்கு உண்டாகிறது.

பள்ளியில் ஒரு முரட்டு மாணவன் சிரோனை சீண்டிக் கொண்டேயிருக்கிறான். ராக்கிங்கின் போது கெவினை வைத்தே சிரோனை தாக்க வைக்கிறான். படுகாயமுறும் சிரோன் சற்று தேறின பிறகு பள்ளிக்குச் சென்று பதிலுக்கு தன் எதிரியை பயங்கரமாகத் தாக்குகிறான். காவல்துறை கைது செய்கிறது. சிறைக்குச் செல்லும் சிரோனை, நண்பன் கெவின் பரிதாபமாக பார்க்கிறான்.


**

சிரோன் இப்போது வளர்ந்த வாலிபனாகி விட்டான். திடகாத்திரமான உடம்பு. சிறையில் தொழில் கற்றுக் கொண்டதால் ஜூவானைப் போலவே போதைப் பொருள் டீலராகி விட்டான். என்றாலும் கூட சிறுவயதின் பாதிப்பு மனதில் இருக்கத்தான் செய்கிறது. போதைப்பழக்கத்தில் இருந்து மீளும் முயற்சியில் இருக்கும் தாய் 'என்னை மன்னிப்பாயா சிரோன்?' என உருகுகிறாள். சிரோனுக்கு கண்ணீர் வருகிறது.

இந்த நிலையில் பழைய நண்பன் கெவினிடம் இருந்து போன் வருகிறது. பழைய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறான். சந்திக்கச் சொல்லி வரச் சொல்கிறான். அவன் மீதுள்ள ஈர்ப்பு சிரோனுக்கு குழப்பத்தை தருகிறது. பழைய நண்பர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். தங்களின் நிலையை பரஸ்பரம் விசாரித்துக் கொள்கிறார்கள். கெவின் குடும்பத்தோடு செட்டில் ஆகியிருக்கிறான். தன் நிலைமை என்ன என்கிற துயரம் சிரோனுக்கு ஏற்படுகிறது. கெவின் அவனை ஆதரவாக அணைத்துக் கொள்வதோடு படம் நிறைகிறது.


***

சிரோன் மற்றும் கெவின் பாத்திரங்களுக்கு மூன்று காலக்கட்டங்களிலும் அதே மாதிரியான தோற்றப் பொருத்தமுடையவர்களை தேடிப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிரோனின் தாயாக நடித்திருக்கும் Naomie Harris -ன் இயல்பான நடிப்பு அபாரமானது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு இவர் நாமினேட் ஆகியிருக்கிறார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனம், பாடல், நடிப்பு என்று அனைத்து துறைகளிலும் இத்திரைப்படத்தின் உருவாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.


சிரோன் என்பவனின் ஒரு குறிப்பிட்ட கால வாழ்க்கையை நாம் நெருக்கமாக பின்தொடர்ந்து கவனிக்கும் அனுபவத்தை இந்தத் திரைப்படம் அற்புதமாக தருகிறது. கருப்பினத்தவர்களின் வாழ்வியல் சிக்கல்களை புரிந்து கொள்ள உதவுகிறது. கருப்பினத்தவர்கள் என்றல்லாது உலகமெங்கும் உள்ள விளிம்பு நிலைச் சமூகத்தினரைப் பற்றிய பார்வையை பொதுத்தளத்தினர் உணர்ந்து கொள்ளும் நுட்பமான படைப்பாக இது உருவாகியுள்ளது.

Moonlight Black Boys Look Blue எனும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை இயக்கியவர் Barry Jenkins.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: