Saturday, June 06, 2020

La La Land (2016) - ‘காதல் திருவிழா'







ஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான  கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் இது. ஆஸ்கர் விருதின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு, அதாவது 14 பிரிவுகளில் நாமினேஷனுக்கு தகுதி பெற்றிருக்கிறது. போலவே ஏழு கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளது. இதன் சாதனைப் பட்டியல் இன்னமும் கூட முடியாத அளவிற்கு நீளமானது.

இயக்குநரான Damien Chazelle இதன் திரைக்கதையை 2010-லேயே உருவாக்கி விட்டு தயாரிப்பாளரைத் தேடி அலைந்தாலும் துவக்கத்தில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. 2014-ல் வெளிவந்த இதே இயக்குநரின் திரைப்படமான  'Whiplash' பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் வென்றதால் 'அட இந்த ஆள் பரவாயில்லையே' என்று இவர் மீது கவனம் திரும்பியது.

என்றாலும் கூட La La Land உருவாகி வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த பெரும்பாலோனோர் 'ம்ஹூம்.. தேர்றது கஷ்டம்தான்' என்பது போல் உதட்டைப் பிதுக்கினார்கள். ஆனால் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது மட்டுமல்லாது திரைவிழாக்களிலும் மகத்தான வெற்றி பெற்றது அதன் பின்னர் நிகழ்ந்த வரலாறு.

அப்படியென்ன  இந்தப் படம் ஸ்பெஷல்?

'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் பிரபுதேவாவும் கஜோலும் அற்புதமாக நடனமாடிய பாடலான 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலை எவரும் மறந்திருக்கவே முடியாது. பாடலின் வரிகள், இசை, ஒளிப்பதிவு, நடனம், நடிப்பு என்று அனைத்திலும் காதலின் தவிப்பும் ஏக்கமும் பொங்கி வழிந்து  உருவான அற்புதமான பாடல் அது. இந்தப் பாடல் நம்மிடம் எழுப்பிய  ரொமாண்ட்டிக்கான உணர்வானது ஒரு திரைப்படம் முழுவதும் வந்தால் எப்படி ரகளையாக இருக்கும்? அதுதான் La La Land.


**


நாயகனான செபாஸ்டியன் இசைக்கலைஞன். பாரம்பரிய ஜாஸ் இசை மீது மதிப்பும் விருப்பமும் உள்ளவன். தனக்கான அடையாளத்தையும் சொந்தமான இசைக்குழுவையும் உருவாக்க அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறான். போலவே இதன் நாயகி 'மியா'வும். பல தோல்விகளுக்குப் பின்னரும் சிறந்த நடிகையாக ஆவதற்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பவள்.

தமிழ் சினிமாவைப் போலவே ஒரு சிறிய மோதலில்தான் இவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. அவர்களின் தேடல்களைப் பற்றி பரஸ்பரம் அறிந்து கொண்டவுடன் ஈர்ப்பு உண்டாகிறது. ஒருபுறம் காதல், இன்னொரு புறம் தங்களின்  கனவுகளுக்கான தேடல் என்று அவர்களின் வாழ்க்கை தொடர்கிறது.

தனக்கென ஒரு நிலையான ஊதியம் இருந்தால்தான் மியாவை அடைய முடியும், பாதுகாப்பான வருங்காலம் அமையும் என செபாஸ்டியன் நினைக்கிறான். எனவே தன்னுடைய விருப்பத்தை மீறி ஜாஸ் இசையை நவீன வடிவத்தில் இசைக்கும் குழுவில் இணைகிறான். மியாவிற்கு கோபம் வருகிறது. 'இதுவா உன் கனவு, ஏன் சமரசம் செய்து கொள்கிறாய்?' என்று கோபிக்கிறாள்.

நடிகையாகும் முயற்சியில் தொடர்ந்த நிராகரிப்புகளுக்குப் பிறகு தானே ஒரு நாடகம் எழுதி நடிக்கிறாள்  மியா. செபாஸ்டியனால் அதற்கு வரமுடியாமல் போகிறது. நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களும் குறைவு. வெறுப்பின் உச்சத்திற்கே போகிறாள் மியா. இதனால் இருவருக்குள்ளும் பிரிவு உண்டாகிறது.


**

ஒரு நாள்.. செபாஸ்டியனுக்கு ஒரு போன் வருகிறது. மியாவை தொடர்பு கொள்ள முடியாததால் அவனை அழைத்திருக்கின்றனர். ஒரு பிரபலமான பட நிறுவனத்தில் நடிகைக்கான தேர்வு. மியாவைத் தேடிப் போகிறான். தோல்வியால் துவண்டிருக்கும் அவள் இதற்கு வர சம்மதிப்பதில்லை. நம்பிக்கையூட்டி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவர்களுக்குள் மறுபடியும் இணக்கம் வருகிறது.


ஐந்து வருடங்களுக்குப் பிறகான காட்சிகள் வருகின்றன. இருவருக்கும் திருமணமாகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மியா பிரபலமான நடிகையாகியிருக்கிறாள். வேறொருவருடன் திருமணமாகி குழந்தை இருக்கிறது. அவர்களின் காதல் தோல்விற்கு எந்த விதக் காரணமும் படத்தில் விவரிக்கப்படுவதில்லை. நாம்தான் அந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ஒருவகையில் காதல் வெற்றி பெறாத அந்தக் கசப்புதான் இந்த திரைப்படத்தை காவியமாக்கியிருக்கிறது என்று கூட சொல்லலாம். மியா கணவனுடன் ஜாஸ் பாருக்கு வருகிறாள்.. அங்கு செபாஸ்டியன் இசைத்துக் கொண்டிருக்கிறான். இருவரின் பார்வைகளும் உணர்ச்சிகரமாக சந்திக்கின்றன. அவர்களின் நிறைவேறாத கனவுகளும் விருப்பங்களும் இணைந்து வருகிற காட்சிக்கோர்வையொன்று பிறகு வருகிறது, பாருங்கள்.... ரகளை. ரோலர் கோஸ்டரில் பயணித்த பரவசத்தை தருகிறது.  இதுதான் இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றதற்கு காரணமாக இருக்கலாம்.

**


ஏறத்தாழ Damien Chazelle-ன் அனைத்து திரைப்படங்களுமே இசையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிப்பாக ஜாஸ் இசையின் காதலன் அவர். எனவே இந்த திரைப்படத்திலும் இசையும் காதலும் ஒவ்வொரு காட்சியிலும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது. இசையமைப்பாளர் Justin Hurwitz அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

காதலுக்கு மரியாதை மட்டுமல்ல,  இசையின் மூலம் மகத்தான கொண்டாட்டத்தையும் தந்திருக்கும் திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)



suresh kannan

No comments: