Tuesday, October 29, 2019

Loveless | 2017 | Russia | இயக்குநர் - Andrey Zvyagintsev






அயல் திரை  - 5


அன்பால் கட்டப்படாத வீடு

**

 

பெற்றோர்களின் அன்பு கிடைக்காமல், குடும்ப வன்முறையில் சிக்கி துயர் அடையும் சிறுவனொருவன் காணாமல் போய் விடுவதுதான் இந்த ரஷ்ய திரைப்படத்தின் மையம். கலையமைதியுடனும் கவித்துவமான சித்திரப்புகளுடனும் மிக இயல்பானதொரு படைப்பாக இதை உருவாக்கியுள்ளார் ,இயக்குநர் Andrey Zvyagintsev. கான் திரைப்பட விழாவில், ‘நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரிவில்’ 2017-ம் ஆண்டுக்கான விருதை வென்ற இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதிற்காக ‘வெளிநாட்டு திரைப்பட’ பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

குடும்பம் என்கிற நிறுவனத்தின் மூலம்தான், ஒரு மனிதனுக்குள் ஆதாரமாக இருக்கும் அன்பு, பாசம், கருணை போன்ற உணர்வுகள் மேலும் வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஆனால் இதன் மறுமுனையில், குடும்பம் என்கிற அமைப்புதான் வன்முறையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் முரணும் இருக்கிறது. இளம்வயதில் ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புதான் வருங்கால குற்றங்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது என்கிறார்கள். குடும்பத்திற்குள் நிகழும் சச்சரவுகள், வன்முறைகள், பிரிவுகள் போன்றவைதான் இதற்கு அடிப்படையான விஷயங்களாக இருக்கின்றன.

இந்த சமூகப் பிரச்சினையை நுட்பமாக அணுகும் திரைப்படம் இது.

**

நவீன ரஷ்யாவின் மேற்குப்புறமுள்ள நகரில் உள்ள பள்ளிக்கூடம் அது. மணி அடித்ததும் வீட்டுக்குப் போகும் உற்சாகத்தில் சிறுவர்கள் ஓடிவருகிறார்கள். 12 வயது சிறுவனான அல்யோஷா தனது நண்பனிடம் விடை பெற்றுக் கொள்கிறான். மற்றவர்களைப் போல வீட்டுக்குச் செல்வதில் அவன் உற்சாகம் காண்பிப்பதில்லை. குடியிருப்பின் அருகேயுள்ள வனப்பகுதியில் சாவகாசமாக நடந்து செல்கிறான். பட்டத்தின் வால் போல கீழேயிருக்கும் ஒரு பிளாஸ்டிக் கயிற்றை வைத்து விளையாடுகிறான். பின்னர் அதை கொம்பில் கட்டி அருகேயுள்ள மரத்தின் மீது விசிறியடிக்க, கயிறு மரத்தில் சுற்றிக் கொண்டு காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது.

வீட்டுக்குத் திரும்பும் சிறுவன், வெளியேயிருக்கும் மைதானத்தில் சில சிறுவர்கள் விளையாடுவதை ஜன்னல் வழியாக மெளனமான துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் தங்கியிருக்கும் வீடு விற்கப்படவிருக்கிறது. அதைப் பற்றி விசாரித்து வாங்குவதற்காக சிலர் வருகிறார்கள். அவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டவுடன், தன் அறையின் கதவை ஓங்கி சாத்திக் கொள்கிறான் சிறுவன். இவனுடைய அறையையும் சுற்றிப் பார்க்க அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு முகமன் கூறவில்லையே என்று சிறுவனை அவனுடைய தாய் கண்டிக்கிறாள். அடிபட்ட உணர்வுடன் கோபத்துடன் வெளியே செல்கிறான் அல்யோஷா.

சிறிது நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை வருகிறார். தம்பதியினருக்குள் சண்டை நிகழ்கிறது. அவர்களுக்கிடையில் பல வருடங்களாக நீடிக்கும் பரஸ்பர வெறுப்பின் தொடர்ச்சியது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. சிறுவனை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்து அவர்களுக்குள் கசப்பான விவாதம் நடைபெறுகிறது. இருவருமே அவனை நிராகரிப்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள். மறைவாக இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவன், சுயபச்சாதாபத்தோடு மெளனமாக கதறி அழுகிறான்.

மிக மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த துவக்க காட்சிகளின் மூலம் அந்த வீட்டில் சிறுவன் அடைந்து கொண்டிருக்கும் துயரத்தையும் மனஉளைச்சலையும் நம்மால் உணர முடிகிறது. சிறுவனின் தந்தை மற்றும் தாய் இருவருக்குமே வேறு துணையுடன் உறவு இருக்கிறது.

சிறுவனின் தந்தையான போரிஸ், ஓர் இளம்பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவள் கர்ப்பமாக இருக்கிறாள். ‘என்னை கை விட மாட்டீர்கள் அல்லவா?” என்று கண்ணீருடன் கேட்கிறாள் அவள். போரிஸ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால், இது சார்ந்த பாதுகாப்பற்ற உணர்ச்சியில் அவள் அல்லாடுகிறாள்.

இதைப் போலவே சிறுவனின் தாயும் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பணக்காரருடன் நெருக்கமாக இருக்கிறாள். பணக்காரருக்கு வெளியூரில் தங்கிப் படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். விவாகரத்து முடிந்த பிறகு தம்பதியினர் அவரவர்களின் திசையில் செல்வதற்கான ஏற்பாடுகளில் உள்ளனர். ஆனால் சிறுவனின் நிலைமை? இருவருக்குமே அது குறித்தான கரிசனம் மனதில் ஓரத்தில் இருந்தாலும் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.

சோவியத் யூனியனின் உடைவு மற்றும் கம்யூனிச வீழ்ச்சிக்குப் பிறகான நவீன ரஷ்ய சமூகத்தின் சமகால உலகின் ஒரு பக்கத்தை இத்திரைப்படம் நுட்பமாக முன்வைக்கிறது. ரஷ்யா என்றல்ல, உலக மயமாதலுக்குப் பிறகு, ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் மனித சமூகத்தின் இடையேயுள்ள விலகலும் சுயநலமும் அதிகமாகியிருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

சிறுவனின் தந்தையான போரிஸ் பணியாற்றும் நிறுவனத்தின் தலைவர் ஒரு கிறித்துவர். நிறுவன ஊழியர்களின் குடும்ப விவகாரங்களில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது என்கிற கண்டிப்பை உடையவர். ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள், பணியை விட்டு உடனே விலக்கப்படுவார்கள். எனவே போரிஸ் இது குறித்த கவலையுடன் இருக்கிறார். சக ஊழியரிடம் இது பற்றி பதட்டமுடன் பேசிக் கொண்டேயிருக்கிறார். தாயான ஜென்யா, தன் புதிய கணவருடன் நெருக்கமாக இருக்கிறாள். ‘அன்பு என்கிற ஒன்றையே என் முன்னாள் கணவனிடம் உணர்ந்ததில்லை. உங்களின் மூலம் ஒரு புதிய உலகை காண்கிறேன்’ என்று உருகுகிறாள்.

இந்த நிலையில், ஜென்யா ஒரு நாள் வீட்டுக்கு வரும் போது, தன் மகன் அல்யோஷா இல்லாமலிருப்பதைக் கவனிக்கிறாள். எங்காவது நண்பனின் வீட்டில் தங்கி வந்திருப்பான் என்று யூகித்திருந்தவளுக்கு, அவன் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்பது பதட்டத்தைத் தருகிறது. கணவனை அழைத்து இந்த விஷயத்தைச் சொல்கிறாள். அவன் அதிக கவனமின்றி இந்தத் தகவலைக் கேட்கிறான். கோபத்துடன் தொலைபேசியைத் துண்டிக்கும் ஜென்யா, காவல்துறைக்கு தகவல் தருகிறாள். அவர்கள் சம்பிரதாயத்திற்கு இந்தப் புகாரை பதிந்து கொள்கிறார்கள். தேடுவதற்கு அதிகம் மெனக்கிடுவதில்லை. “பாருங்க மேடம், இதைவிடவும் முக்கியமானதா, ஆயிரத்தெட்டு கேஸ் இருக்கு. இந்த மாதிரி ஓடிப் போன பசங்க கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவாங்க நாங்க பார்க்காததா,?” என்று நம் நாட்டு காவல்துறையைப் போலவே அலட்சியமாக பேசுகிறார்கள்.

அவர்களின் மெத்தனத்தைப் பார்த்து கோபமடையும் ஜென்யாவிடம் காவல்துறை அதிகாரியே ஒரு யோசனை சொல்கிறார். “இது போல் காணாமல் போகும் சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தன்னார்வல அமைப்பு இருக்கிறது. இதைப் போன்ற வழக்குகளைக் கையாளும் அனுபவமும் திறமையும் உள்ள அவர்களால் திறமையாகத் தேட முடியும்” என்கிறார். அந்த அமைப்பிடம் தெரிவிக்கிறார் ஜென்யா.

தேடுதல் படலம் துவங்குகிறது. தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அனைத்து வழிகளையும் முயல்கிறார்கள். ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். இது சார்ந்த காட்சிகள் பொறுமையாக நீள்கின்றன. இதற்கிடையில் தம்பதியினர் இடையே நிகழும் சண்டை ஓய்வதாயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். ‘ஒருவேளை பாட்டி வீட்டிற்கு (ஜென்யாவின் தாய்) சென்றிருப்பானோ’ என்று இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தொலைவில் உள்ள இடத்திற்கு நள்ளிரவில் செல்கிறார்கள். தனது தூக்கம் கலைந்த எரிச்சலில் கத்துகிறாள் பாட்டி. “கர்ப்பம் அடைஞ்சப்பவே கலைச்சுடுன்னு சொன்னேன். நீ கேட்கலை. இவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டே. இப்ப ஏன் என்னை வந்து தொந்தரவு பண்றே?” என்று எரிந்து விழுகிறாள். கோபத்துடன் கிளம்புகிறாள் ஜென்யா. திரும்பும் வழியில் ஜென்யாவிற்கும் போரிஸிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நிகழ்கிறது. பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். கோபத்தில் ஜென்யாவை பாதி வழியிலேயே இறக்கி விட்டுச் செல்கிறார் போரிஸ்.

காணாமல் போன சிறுவனான அல்யோஷாவுடன் படிக்கும் சக மாணவனை விசாரிக்கிறார்கள். முதலில் மென்று விழுங்கும் அவன், ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சுற்றித் திரியும் வழக்கம் தங்களுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறான். தன்னார்வ அமைப்பின் ஆட்கள்  அந்தக் கட்டிடம் முழுவதையும் பொ’றுமையாகத் தேடுகிறார்கள். அங்கு சிறுவனின் ஆடை கிடைத்தாலும் எந்தவொரு பலனும் இல்லை.  குடியிருப்பின் அருகிலுள்ள வனப்பகுதி முழுவதையும் ஓர் இடம் கூட விடாமல் அக்கறையுடன் தேடிப் பார்க்கிறார்கள். ஒரு தடயமும் இல்லை.

இதற்கிடையில் காவல்துறையிடமிருந்து ஓர் அழைப்பு. வருகிறது. சேதமுற்ற நிலையில் ஒரு சிறுவனின் பிணம் கிடைத்திருப்பதாகவும் அடையாளம் காட்டச் சொல்லியும் அழைக்கிறார்கள். பெற்றோர் இருவரும் கலக்கத்துடன் அங்கு வருகிறார்கள். ‘அது தம் மகனாக இருக்காது’ என்று ஜென்யா தீர்மானத்துடன் இருக்கிறாள். தந்தையோ குற்றவுணர்வுடன் நிற்கிறார். அது தங்களின் மகன் இல்லை என்பதை அறிந்ததும் உடைந்து அழுகிறார்கள். இருவருக்குள்ளும் உறைந்திருக்கும் மகனின் மீதுள்ள அன்பு தன்னிச்சையாக வெளிப்படும் இந்தக் காட்சி நெகிழ்வூட்டும் படியாக அமைந்திருக்கிறது.

வருடங்கள் கடக்கின்றன. வீடு விற்கப்பட்டு விடும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினர், முன்னரே தீர்மானித்தபடி  தங்களின் இரண்டாவது இணையோடு தேர்வு செய்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். சிறுவனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் பழைய சுவரொட்டியை வெறித்து நோக்குகிறாள் ஜென்யா. இரண்டாவது மனைவி மூலம் பிறக்கும் மகனை முழுமையான மகிழ்ச்சியுடன் கொஞ்ச முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறார் போரிஸ்.

சிறுவன் அல்யோஷா முன்னர் மரத்தில் கட்டிய பிளாஸ்டிக் கயிறு காற்றில் ஆடுவதை நிதானமாக காட்டும் காட்சியுடன் திரைப்படம் நிறைவுறுகிறது. அவனுடைய இருப்பின் கடைசி சாட்சியம் அந்த பிளாஸ்டிக் கயிறு என்பது போல் தோன்றுகிறது. அவனைப் பற்றி பிறகு எந்தவொரு சுவடுமில்லை. அவன் கிடைத்தானா, என்னவானான் என்பதையெல்லாம் பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருக்கிறார் இயக்குநர். சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இல்லையென்றாலும் அவனுடைய நினைவுகளை பார்வையாளர்கள் படம் முழுவதும் உணருமாறு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

 
**

இயக்குநர் Andrey Zvyagintsev, இயல்பான திரைக்கதையுடன் மிக மிக நிதானமாக நகரும் காட்சிகளை இணைத்து உருவாக்கியிருக்கும் தன்மைதான் இத்திரைப்படத்தை தனித்துவமாக உணரச் செய்கிறது.. எந்தவொரு காட்சியிலுமே நடிகர்கள் நடிப்பது போல் தோன்றவில்லை. ஒரு குடும்பத்தின் சிக்கலை, ஜன்னலின் வழியாக பார்ப்பது போலவே அத்தனை யதார்த்தத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு பனிக்காலத்தில் துவங்கி வேறொரு பனிக்காலத்தில் முடியும் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு அபாரமானதாக உள்ளது. துவக்கத்திலும் இறுதியிலும் மெல்லிய அதிர்ச்சியை தரும் பின்னணி இசையைத் தவிர, படம் முழுவதும் இயற்கையான சப்தங்களால் நிறைந்திருக்கிறது.

நேரடியாக அல்லது மறைமுகமாக, பெற்றோர்களால் கொடுமைப்படுத்தப்படும், கைவிடப்படும் குழந்தைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பதற்குமான கண்டிப்பான சட்டங்கள், வழிமுறைகள் மேலைய நாடுகளில் உள்ளன. ஒரு குழந்தையை அத்தனை எளிதில் அங்கு கைவிட்டு விட முடியாது. இத்திரைப்படத்திலும், இது குறித்தான அச்சம் சிறுவனின் பெற்றோர்களுக்கு ஒருபுறம் இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வெற்றுச் சம்பிரதாயங்களுக்கு சில சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் எதுவும் உறுதியாக இல்லை. குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமும், கொடுமைப்படுத்தப்படும் குழந்தைகள் தங்களின் புகாரை பதிவு செய்ய 1098 என்கிற தொலைபேசி எண்ணும் இருந்தாலும் இது சார்ந்த குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாத வழக்குகளையும் சேர்த்தால் இதன் சதவீதம் இன்னமும் உயரக்கூடும். வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறார்கள் பல்வேறு வன்முறைகளுக்கும் சமூகவிரோத காரியங்களுக்கும் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆரோக்கியமான குடிமகன்களை, வாரிசுகளை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் முறையே அரசாங்கத்திற்கும் குடும்பத்திற்கும் இருக்கிறது. இதில் குடும்பம் என்கிற நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. தனிநபர் சுதந்திரம் என்கிற விஷயம் முக்கியமானதுதான். மணவாழ்க்கையின் கசப்புகளை வாழ்நாள் பூராவும் சகித்துக் கொள்ளத் தேவையில்லைதான். சரியான துணையைத் தேடி தங்களின் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இது சார்ந்த ஏற்பாடுகளில், சம்பந்தப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு எவ்வித மனபாதிப்பும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது. அன்பும் பாசமும் உள்ள வீடுகளில் இருந்துதான் மனஆரோக்கியமுள்ள குழந்தைகள் வெளிவருவார்கள். இது போன்ற குடிமகன்களின் மூலம்தான் ஆரோக்கியமான சமூகமும் உருவாக முடியும்.

இந்த நோக்கில், குடும்பத்திற்குள் நிலவ வேண்டிய அன்பு எத்தனை முக்கியமானது என்பதை இத்திரைப்படம் மிக அழுத்தமாக நிறுவுகிறது. 


(குமுதம் தீராநதி -  ஜூலை  2018 இதழில் பிரசுரமானது)  

suresh kannan

1 comment:

nachchiyar said...

சிறப்பு.இருந்தாலும் நம்ம ஊருக்கு இது போன்ற கதைகளில் ஏதாவது ஒரு முடிவைக் காட்டி விடுவதுதான் வழக்கம்..நம் நாட்டில் இது போன்ற சிறுவர்கள் ஏராளம்.ஆனால் இது போன்ற படங்கள் இல்லை