Wednesday, October 16, 2019

மெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்





உலக அளவில் புராதனமானவற்றில் ஒன்று பாலியல் தொழில். இதை தொழில் என்பதை விடவும் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான குறியீட்டு நிகழ்வு என்று  சொல்வது இன்னமும் பொருத்தமாக இருக்கும். பெண்ணை சக ஜீவியாக கருதாமல் வெறும் உடலாக கையாண்டு  அவர்களை பண்டத்தைப் போல நுகரும், வணிகம் செய்யும் அவலத்தின் பின்னணியில் ஆண் சமூகத்தின் வக்கிரங்களுக்கே பெரும்பாலான பங்குண்டு. இளம் பெண்கள், குழந்தைகள் என்று வயது வித்தியாசமில்லாமல் இந்த அவலத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்தியா போன்ற பாலியல் வறட்சி பெருகியோடும் தேசத்தில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக ஆக்கவேண்டுமா, வேண்டாமா என்கிற விவாதம் நீண்ட காலமாக நடைபெறுகிறது. பாலியல் தொழி்லில் ஈடுபடுவர்களுக்கும், அது சார்ந்த திரைப்படங்களில நடிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக முறையான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன என்று நம்பப்படுவது கூட ஒருவகையில் பொய்யே.

'I am Jane Doe' என்கிற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சில அமெரிக்கத் தாய்மார்களுக்கும் ஓர் இணையத்தளத்திற்கும் இடையே பல வருடங்களாக நிகழ்ந்த ஒரு வழக்கின் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம். சராசரி குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய அப்பாவி மகள்கள் பாலியல் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அவர்களின் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் கண்சிமிட்டல்களுடன் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் உடனே அதிலுள்ள தொடர்பு எண்களை ஆவலுடன் குறித்துக் கொள்கிறார்கள். மறைமுகமாக பாலியல் வணிகத்திற்கு அந்த இணையத்தளம் துணைபோகிறது. வருமானம் டாலர்களில் கொட்டுகிறது.

அந்த இணையத்தளத்தை தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் பெற்றோர்கள். வெளிப்படையாகவே தெரியும் அநீதிதான். ஆனால் நீதிமன்றம் தனது கண்களை இறுக மூடிக் கொண்டு சட்டப்புத்தகத்தை விரல்களால் தடவிப்பார்த்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஏனெனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களில் நீதிபதிகள் முதற்கொண்டு மதகுருமார்கள், அரசு அதிகாரிகள் வரை பல பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவின் துணை கொண்டு இணையத்தளத்தால் மிக துணிச்சலுடன் தன் அராஜகத்தை தடங்கல் ஏதுமின்றி தொடர முடிகிறது. பல வருடமாக நீளும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்பே அந்த இணையத் தளத்தை முடக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பாலியல் மாஃபியா கும்பலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர்கள் ஆகிய பல நபர்களின் உழைப்பிற்குப் பின்புதான் நீதி மெலிதாக கண்விழித்து பார்க்கிறது.

தனிநபர்களுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாக நம்பப்படும் மேற்கத்திய நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியா மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை என்ன? இங்கு நிகழும் பாலியல் வணிகம் என்பது ஏறத்தாழ இறைச்சிக்காக அடிமாடுகளை வண்டியில் நெருக்கி ஏற்றிச் செல்வது போன்ற பரிதாபமான வணிகம்தான்.  கேள்வி கேட்பவர்களே கிடையாது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்த வணிகத்தை அரசு, நீதி, காவல் என்று எல்லாத்துறைகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. மறைமுகமாக இதன் கூட்டாளிகளே இருப்பவர்களும் இவர்களே. மிகப் பிரதானமாக இதன் வாடிக்கையாளர்களும். அதாவது பொதுசமூகத்தின் பெரும்பகுதி.

**

பாலியல் தொழிலும் அது சார்ந்த பல விஷயங்களும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் சர்வதேச வலைப்பின்னலாகி விட்டது. எவராலும் தடுக்க முயலாத, கட்டுப்படுத்த இயலாத ஒரு வணிகம். திரைப்படங்கள், பத்திரிகைகள், வெகுசன இதழ்கள், தொலைக்காட்சிகள் என்று பல்வேறு ஊடகங்களும் பெண்ணுடலின் கவர்ச்சி பிம்பத்தை மையமாக்கி பிழைப்பு நடத்துகின்றன. பாலியல் தொழிலின் இன்னொரு வகையான வணிகம் இது.

பாலியல் தொழிலில் சிக்கி பல்வேறு அவஸ்தைகளுக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தைப் பேசும் இலக்கியம் மிகக் குறைவானது. விளிம்புநிலை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கலைஞர்களும் எழுத்தாளர்களும் அச்சமூகத்தின் துயரத்தை தங்களின் அபாரமான எழுத்தாற்றலின் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கிய சூழலில், “கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னரகம்’ என்று யதார்த்தத்தை போட்டுடைத்த முன்னோடிக் குரல் புதுமைப்பித்தனுடையது. இவ்வகையான கலைஞர்களின் குரல்கள், இந்தியாவெங்கும் ஒலித்திருக்கின்றன.

பாலியல் பெண்களின் துயரத்தை மையமாகக் கொண்டு உரையாடும் இருபத்தோரு இந்தியச் சிறுகதைகளை தொகுத்திருக்கிறார் ருச்சிரா குப்தா. ஹிந்தி, மராத்தி, மலையாளம், கொங்கணி, அஸ்ஸாம், ஒடியா என்று பல மாநிலங்களைச் சார்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. ஆங்கிலச் சிறுகதையும் உண்டு. கமலாதாஸ், புதுமைப்பித்தன், சாதத் ஹசன் மண்ட்டோ, பிரேம்சந்த், இந்திரா கோஸ்வாமி என்பது போன்ற சிறந்த எழுத்தாளர்களின் அபாரமான வரிசை. 

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ருச்சிரா குப்தா ஒரு பெண்ணியவாதி. பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்திச் செல்வதை எதிர்த்துப் போராடும் அமைப்பொன்றை (Apne Aap Women Worldwide) நிறுவியிருக்கிறார். ஏறத்தாழ இருபதாயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்படுவதற்கு உதவியிருக்கிறார்.

‘River of Flesh and other Stories’ (சதை நதி மற்றும் இதர கதைகள்) என்கிற ருச்சிரா குப்தாவின் ஆங்கில தொகுப்பு நூலின் தமிழாக்கம், கிழக்கு பதிப்பகத்தின் மூலமாக தமிழில் வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் இந்தச் சிறுகதைகளை அபாரமாக மொழிபெயர்த்துள்ளார்.

**

‘குட்டி வேசிக்கு ஒரு பொம்மை’ என்கிற கமலாதாஸின் முதல் சிறுகதையே இந்தத் தொகுப்பின் உள்ளடக்கத்தை துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுகிறது. பராமரிக்க ஆளில்லாத காரணத்தினால் தன் மகளை ஒரு வேசை விடுதியில் ஒப்படைத்து விட்டு பணம் வாங்கிக் கொண்டு செல்கிறாள் தாய். தன்னைப் போல் வேறொரு சிறுமியும் அங்கிருப்பதை பார்க்கிறாள் ருக்மணி. இருவரும் தோழி்களாகி விளையாடுகிறார்கள். தங்கள் மீது நிகழ்த்தப்படும் அவலம் குறித்து கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ‘அந்த’ நேரத்தில் மட்டும் வலியைப் பொறுத்துக் கொண்டு மறுபடியும் உற்சாகமாக விளையாட்டைத் தொடர்கிறார்கள்.

விடுதியின் தலைவியான லட்சுமி அங்குள்ள பெண்களை தன்னுடைய மகள்களைப் போல பார்த்துக் கொள்ளும் பெருமையுடன் இருக்கிறார். அதுவொரு இயல்பான தொழில் என்பது போன்ற மனோபாவமே அங்கு படிந்திருக்கிறது. மீரா என்கிற அழகுள்ள பெண்ணுக்கு பிரத்யேகமான இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதர பெண்கள் அவள் மீது பொறாமையுடன் இருக்கிறார்கள். மீரா தன் காதலனுடன் ஓடிப் போய் காவல்துறையினரின் உதவியிடம் பிடிபட்டு மறுபடியும் விடுதிக்கே வருகிறாள். ருக்மணியின் தோழியான சீதா முறையற்ற கருச்சிதைவின் போது இறந்து போகிறாள். தாத்தா வயதுள்ள இன்ஸ்பெக்டர் சிறுமி ருக்மணியின் மீது பிரத்யேகமான விருப்பத்துடன் இருக்கிறார். ‘அப்பா’ என்றழைக்கும் ருக்மணிக்கு பேசும் பொம்மை வாங்கித் தருகிறார். இறுதியில் மட்டும் ஒருவகையான குற்றவுணர்வை அடைகிறார். பாலியல் தொழில் நிகழும் உலகத்தின் ஒரு பகுதி மிகையுணர்ச்சியின்றி இச்சிறுகதையில் அபாரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வாசகர்களிடமிருந்து அனுதாபத்தையோ அதிர்ச்சியையோ கோரும் எவ்வித செயற்கைத்தனங்களுமில்லை.

‘தெருவீதிப் பெண்கள்’ என்கிற பாபுராவ் பாகுல் எழுதிய மராத்திச் சிறுகதை, ஒரு முதிர்ந்த பாலியல் தொழிலாளியின் அவலத்தைச் சித்தரிக்கிறது. ஊரில் தன் மகன் சாகக் கிடக்கிறான் என்கிற தகவலை அறிந்து அதிர்ச்சியடையும் கிரிஜா, அந்த தகவலைச் சொன்ன ஹோட்டல் முதலாளியிடம் கிராமத்திற்குச் செல்ல பணம் கடனாக கேட்கிறாள். ஏற்கெனவே கடன் இருப்பதால் பணம் தர முதலாளி மறுக்கிறான். ஏதாவது ஒரு கிராக்கியை கவர்ந்தேயாக வேண்டியிருக்கிற கட்டாயம் கிரிஜாவிற்கு. தன்னுடைய இத்தனை வருட தொழில் அனுபவத்தையெல்லாம் திரட்டி ஒரு வாடிக்கையாளனையாவது கவர முடியுமா என்று பார்க்கிறாள். அது அத்தனை எளிதாக இருப்பதில்லை. அனுபவமில்லாத, இளம் பருவத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை தரும் விசித்திரமான விதி இருக்கிற தொழில். உண்மையில் தந்தியில் இருந்த வாசகம் வேறு. ‘அவனுடைய மகன் இறந்து விட்டான்’.

‘கடைசி வாடிக்கையாளன்’ என்கிற கன்னடச்சிறுகதையை நிரஞ்சனா எழுதியிருக்கிறார். தன்னுடைய வறுமையான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க, ஊனமுற்ற இளைஞனை நம்பி ஊரை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ‘அவள்’. அபலைகளுக்கு பெயர் அவசியமா என்ன? அழைத்து வந்தவன் காணாமல் போக வேறு வழியின்றி சாலையோரங்களில் தன்னை விற்க வேண்டிய கட்டாயம். நோயாளிகள், வயோதிகர்கள், குஷ்டரோகிகள் என்று சகலரும் அவளை நுகர்வதால் நோய் வந்து பலவீனமடைகிறாள். அவளுடைய இயலாமையைப் பயன்படுத்தி பணம் தராமல் ஓடிவிடும் கயவர்களும் இருக்கிறார்கள். சாலையிலேயே இறந்து போகும் அவளது சடலத்தின் மீது ஒரு கழுகு வந்து அமர்கிறது. அதுவோர் ஆண் கழுகாக இருக்கக்கூடும். கதையின் தலைப்பு கச்சிதமாகப் பொருந்துகிறது.

இந்தத் தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளும் பாலியல் பெண்களின் துயரத்தை கண்ணீர் வடிய பேசும் படைப்புகள் அல்ல. மைய சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட பெண்களின் கதைகளையும் பேசுகிறது. ராணி மாதிரி வாழ்ந்த பெண்கள் சந்தர்ப்ப சூழலால் அகதிகளாக மாறும் அவலத்தைப் பற்றியும் பேசுகிறது.

பிபூதிபூஷன் பந்தியோபாத்யாய் அறியப்பட்ட வங்க எழுத்தாளர். இவர் எழுதிய ‘ஹிங் கச்சோரி’ சுவாரசியமான சிறுகதை. கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெரும் ஓர் எளிய பிராமணக் குடும்பம். வாசுதேவ் என்கிற சிறுவனின் பார்வையிலிருந்து இந்தச் சிறுகதை நகர்கிறது. அவனுடைய குடும்பம் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் வரிசையாக சில வீடுகள். அவர்கள் யார் என்று புரியாத வயதில் இருக்கிறான் சிறுவன். அவர்கள் தங்களை சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருப்பது இவனைக் கவர்கிறது.

வாசுதேவ் ஒரு தீனிப்பண்டாரம். குடும்பத்தின் வறுமையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எதிரிலுள்ள வீடுகளின் மீது உருவாகும் பிரியத்தால் அங்கு செல்கிறான். குஸூம் என்கிற செல்ல அக்காவின் பிரியத்தைப் பெறுகிறான். அவள் தரும் தின்பண்டங்களை ஆவலாக உண்கிறான். அவளுடைய ‘பாபு’ வாங்கி வரும் கச்சோரி என்றால் இவனுக்கு அதிக பிரியம். அதற்காகவே காத்திருக்கிறான். இத்தனை பிரியம் காட்டும் குஸூம் தனக்கு ஏன் குடிக்க தண்ணீர் தர மறுக்கிறாள் என்கிற ரகசியம் வாசுதேவிற்கு புரியவில்லை. எளிய சமூகத்தைச் சேர்ந்த தாம் பிராமணச் சிறுவனுக்கு தண்ணீர் தந்து மேலும் பாவத்தைச் சுமக்க வேண்டுமா என்பது குஸூமின் பாமர எண்ணம். அங்கிருந்து இடம் பெயர்ந்து வளர்ந்து பெரியவனாகும் வாசுதேவ், மறுபடியும் அந்தப் பிரதேசத்திற்கு வர நேரும் போது மறக்காமல் தன் அக்காவைத் தேடுவதும் முதியவளாகி விட்ட குஸூம் பிரியத்துடன் கச்சோரியை உண்ணத் தருவதுடன் சிறுகதை நிறைகிறது. நம்மால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் ஊறும் தீராத அன்பையும் பிரியத்தையும் இச்சிறுகதை அற்புதமாக விவரிக்கிறது.

பிரேம்சந்த்தின் ‘கீர்த்தி பங்கம்’ ஒரு நல்ல சிறுகதை. தன் மீது பிரியத்துடன் இருந்த கணவன், புதிய பெண்ணுடன் உருவாகும் தொடர்பினால் தன்னை மெல்ல ஒதுக்குவதைக் கண்டு வெகுண்டெழும் மனைவி, புதுப்பெண்ணால் அடித்து அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டின் முதலாளி அந்துஸ்துடையவளாக இருந்தவள் ஒரே நாளில் அபலையாகிறாள். தன் அன்புக்குரியவனாக இருந்தவனை பழிவாங்கும் நோக்கில், பதிலுக்கு அவமானப்படுத்தும் விதமாக அவள் வேசையாகி விடும் பரிதாபத்தை விவரிக்கிறது இந்தப் படைப்பு.

ஒப்பனைகளுடன் மேலுக்கு கவர்ச்சியாக தோன்றும் பாலியல் பெண்கள் உள்ளுக்குள் அடையும் உடல் உபாதைகளை, வேதனைகளை ரத்தமும் சதையுமாக விவரிக்கிறது ‘சதை ஆறு’ என்கிற ஹிந்தி மொழிச் சிறுகதை. இரக்கமேயற்ற முறையில் அந்த துயரத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார் கமலேஷ்வர்.

இந்தத் தொகுப்பின் சிறப்பான கதைகளுள் ஒன்று ‘வம்சாவளி’. குராத்-உல்-ஐன் ஹைதர் எழுதிய உருது மொழிக்கதை. பிரேம்சந்த்தின் கதையைப் போலவே இதுவும் நிராகரிக்கப்பட்ட ஓர் இல்லத்தரசியின் கதை. இளம் வயதுக் காதலானான அஜ்ஜூ தன்னை திருமணம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறாள் சம்மி பேகம். ஆனால் சந்தர்ப்ப சூழல் அவளுக்குச் சாதகமாக இல்லை. வழக்கொன்றை கையாள்வதற்காக லக்னோ செல்லும் அஜ்ஜூ அங்கேயே ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்ட விஷயம் நீண்ட காலத்திற்குப் பிறகே இவளுக்குத் தெரிய வருகிறது. அதிர்ச்சியடையும் சம்மி பேகம், திருமணம் செய்து கொள்ளாமல் தன் சிறிய கூட்டில் ஒடுங்கிக் கொள்கிறாள். ஆனால் காலம் அவளை பல்வேறு விதமாக வெவ்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கிறது. ஆனால் எங்கும் தன் கம்பீரத்தைக் குறைத்துக் கொண்டு அவள் கீழிறங்குவதில்லை. கடைசியாக மும்பை நகரத்தில் ரசியா பானுவிடம் கொண்டு சேர்க்கிறது. ஆடம்பரமான குடியிருப்பில் ரசியா பானு செய்யும் தொழில் வாசகனான நமக்குப் புரியும் போது அப்பாவி மூதாட்டியான சம்மி பேகம் அதை அறிவதில்லை. அவர் குறித்து பெருமூச்சொன்றைத்தான் நம்மால் விட முடிகிறது.

இந்தச் சிறுகதையை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது சம்மி பேகம் போன்ற பெண்கள் அடையும் நிராகரிப்பின் துயரம் தாங்காமல் அழுது விட்டதாக மொழிபெயர்ப்பாளர் அடைப்புக்குறிக்குள் தெரிவத்திருக்கிறார்.

புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ இந்தத் தொகுப்பிற்கு மிகவும் பொருத்தமுடையது. இருபத்தோரு சிறுகதைகளும் விளிம்புநிலை சமூகத்தின் பெண்கள் படும் பாட்டை விவரிக்கின்றன. மிக குறிப்பாக பாலியல் தொழில் உலகில் சிக்கி அவதியுறும் பெண்கள். சில கதைகள் நேரடியான விவரிப்புடன் இயங்குகின்றன. வேறு சில கதைகள் இதையொட்டி பெண்களின் பொதுவான அவலத்தைச் சுட்டுகின்றன. தங்களின் எதிர்கால வாழ்க்கைகாக தன்னிடமுள்ள நகையையெல்லாம் கணவனிடம் கழற்றித்தரும் சாயாராணி, அந்தக் கயவன் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான் என்பதையும் இதுதான் அவனுடைய வழக்கமான தொழில் என்பதையும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஆதரவற்ற அவள் இனி என்ன செய்வாள்? (சந்தை விலை – நபேந்து கோஷின் வங்க மொழிச் சிறுகதை)

இந்தியப் பிரிவனையின் போது எழுந்த மதவாத வன்முறையால் அநாதைகளாகி விட்ட இரு சிறுமிகள். ஒருத்தி இந்து. இன்னொருவர் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவள். பாலியல் தொழில் செய்யும் பெண்ணொருத்தி தரகனிடமிருந்து அவர்களை விலைக்கு வாங்கி வீட்டின் பின்புறம் வாடிக்கையாளர்களின் கண்படாமல் ஒளித்து வைத்திருக்கிறாள். அவள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கும், பாகிஸ்தானின் ஜின்னாவிற்கும் ஒரு கடிதம் எழுதுகிறாள். ‘இவர்களை என்ன செய்யட்டும்?

கிருஷ்ண சந்தரின் இந்த உருது மொழி சிறுகதை, மதவாத மோதல்களால் அதற்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்று இதைச் சொல்லலாம். சத்தியப்பிரியனின் இலகுவான மொழிபெயர்ப்பு வாசிப்பனுபவத்தை உன்னதமாக்குகிறது.

**

மெய்ப்பொய்கை – பாலியல் பெண்களின் துயரம்
தொகுப்பு: ருச்சிரா குப்தா – தமிழில் சத்தியப்பிரியன்
கிழக்கு பதிப்பகம், 352 பக்கங்கள், விலை. ரூ.325

(குமுதம் தீராநதி -  டிசம்பர்  2017 இதழில் பிரசுரமானது)  



suresh kannan

No comments: