Sunday, October 27, 2019

The Post | 2017 | United States | இயக்குநர் - Steven Spielberg






அயல் திரை  -3

“‘நான்காவது தூணின் சாகசம்’”




என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த memes சிலதை இணையத்தில் பார்த்தேன். ஒரு வாகனத்தில் இருந்து பெட்ரோல் சிறிது வழிந்து சாலையில் சிறுகீற்றாக ஓடுகிறது. உடனே அமெரிக்க ராணுவப் படையைச் சார்ந்த சில வீரர்கள் பாராசூட்டில் அங்கு வந்து இறங்குகிறார்கள். இன்னொரு காட்சி.  ஒரு தட்டில் எண்ணைய் வழிய வழிய இருக்கும் மெதுவடைகளின் மீதும் அவர்கள் தென்படுகிறார்கள். சற்று மிகையாக இருந்தாலும், அமெரிக்காவின் ‘எண்ணைய்’ வெறியின் பல்லாண்டு வரலாற்றை மிக நேர்த்தியாக எள்ளல் செய்த சித்திரங்களாக இவை எனக்குத் தோன்றின.

இதர பிரதேசங்களின் இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிடுதல், ‘உலகின் நாட்டாமை யார்?’ என்கிற அதிகாரப் போட்டியில் தம் தரப்பை நிலைநாட்டுவதற்காக செய்யும் தில்லுமுல்லுகள், தங்களின் வர்த்தகத்தை உலக அளவில் பரவச் செய்வதற்கான வணிகத் தந்திரங்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வல்லரசு நாடுகள் பல மோசடிகளை நிகழ்த்துகின்றன. மிக குறிப்பாக, ‘உலகின் நிரந்தர பெரியண்ணனாக’ தம்மை நிலைநாட்டிக் கொள்ள காலம் காலமாக அமெரிக்கா நிகழ்த்தும் முறைகேடுகளின் வரலாறு என்பது மிகப் பெரியது.

இந்த நீண்ட வரலாற்றின் ஒரு துளியை ஓர் அமெரிக்கப் பத்திரிகை அம்பலப்படுத்த துணிகிறது. பரபரப்பும் சுவாரசியமும் கலந்த இந்தச் சம்பவங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கிற அமெரிக்கத் திரைப்படம் ‘The Post’. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க் இதை இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல திரைவிழாக்களில் நாமினேட் ஆன இந்த திரைப்படத்தை, 2017-ம் ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ இதழும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

**

இந்த திரைப்படத்திற்குள் செல்வதற்குள் முன்னால் இது தொடர்பான சில பின்னணி விவரங்களை சுருக்கமாகவாவது நினைவுகூர்ந்து விடலாம். ‘இரண்டாவது இந்தோசீன போர்’ என்று அழைக்கப்படும் ‘வியட்நாம் போர்’ ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நிகழ்ந்தது. 1955 முதல் 1975 வரை நிகழ்ந்த இந்தப் போரில் ராணுவ வீரர்கள், புரட்சிப் படையாளர்கள், சிவில் சமூகம் என்று பல தரப்பிலும் லட்சக்கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள்; காயமுற்றார்கள். போர் முடிந்து பல வருடங்களாகிய இன்றைய நிலையிலும் கூட காணாமல் போனவர்களாக அறியப்பட்டவர்களின் நிலைமை என்னவாயிற்று என்பது கண்டுபிடிக்கப்பட முடியாமலேயே இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜப்பானின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரான்சின் காலனி நாடாக இருந்தது வியட்நாம். 1945-ல் ஹோசிமினின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது. ஆனால் தனது காலனியாதிக்கத்துக்குள்  வியட்நாமை தொடர்ந்து தக்கவைக்க முயன்றது பிரெஞ்சுப் படை. ‘முதல் இந்தோசீனப் போர்’ என்று அழைக்கப்படும் இந்தப் போர் 1946 முதல் 1954 வரை நிகழ்ந்தது. அளவில் சிறியதாக இருந்தாலும் சுதந்திர தாகத்துடன் வியட்நாம் மக்கள் படை ஆக்ரோஷமாக போரிட்டதால் பிரான்ஸ் பின்வாங்கியது. ஆயிரக்கணக்கான பிரெஞ்சுப் படையினர் வியட்நாமிடம் சரண் அடைந்தார்கள். ஜெனிவா ஒப்பந்தம் காரணமாக 1954-ல் வியட்நாமை சுதந்திர நாடாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

தற்காலிக ஏற்பாடாக வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் என அந்த தேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைக்கு ஆதரவாக இருந்த வடவியட்நாமிற்கும் அதற்கு எதிராக இருந்த தெற்கு வியட்நாமிற்கும் மோதல் அதிகரித்தது. இந்த உள்நாட்டுப்போரில் அப்பாவியான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இதர நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் போருக்குள் தலையிட்டன. தெற்கு வியட்நாமிற்கு, கம்யூனிச எதிர்ப்பு நாடுகளான வடஅமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகள் துணை நின்றன. வடக்கு வியட்நாமிற்கு கம்யூனிச ஆதரவு நாடுகளான சோவியத் யூனியன், சீனக்குடியரசு, வட கொரியா போன்றவை பக்கபலமாக இருந்தன. ஒருவகையில் இது பொதுவுடமை சித்தாந்தத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் நாடுகளுக்கிடையே நிகழ்ந்த பதிலிப் போர் எனலாம்.

இந்தப் போரில் வடஅமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது. தென் வியட்நாமிற்கு ஆதரவு தருவதின் மூலம் கம்யூனிச கொள்கை பரவுவதை தடுக்கும் சந்தர்ப்பமாக இந்தப் போரை உபயோகித்துக் கொண்டது. படைபலமும் பணபலமும் கொண்ட அமெரிக்காவை, வடவியட்நாமின் படைவீரர்கள் துணிச்சலாக எதிர்கொண்டார்கள். ராணுவத் தளபதி வோ கியென் கியாப்பின் பல்வேறு போர்த் தந்திரங்களை, கொரில்லா தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் வடஅமெரிக்கா தவித்தது. தங்களின் வல்லரசு பிம்பத்திற்கும் அகங்காரத்திற்கும் இதை சவாலாக எடுத்துக் கொண்டு மூர்க்கமாக செயலாற்றியது.

`ஏஜெண்ட் ஆரஞ்சு` என்ற, ரசாயன முறையில் இலைகளை உதிர்க்கச் செய்யும் ஒரு தாவரக்கொல்லியை அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியது. மண், இலை, புல், மிருகங்கள், மனிதர்கள் போன்ற உயிரிகளின் மேல் நிரந்தரமாகப் படிந்து பெரிய அளவில் தீங்குகளை இந்த ரசாயனம் விளைவிக்கும். பல ஆண்டுகள் கழித்து இப்போதும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவச் சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாத அகங்காரம் காரணமாக இந்தப் போரை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்கள் கசியத் துவங்கிய போது உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. மிக குறிப்பாக அமெரிக்க மக்கள் தங்களின் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். தோல்வி ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் அதை பூசி மெழுகி மேலும் பல அமெரிக்க ராணுவ வீரர்களை பலி கொடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசின் மீது தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். ‘எங்களின் வரிப்பணத்தைக் கொண்டு எங்கள் மக்களையே கொல்லும் அரசு தேவையில்லை’ என்று தார்மீக ஆவேசத்துடன் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

வியட்நாம் மக்கள் படையின் ஆவேசமாக எதிர்ப்பை சமாளிக்க முடியாததாலும், தங்களின் சொந்த நாட்டு மக்களின் பலத்த எதிர்ப்பினாலும் இந்தப் போரில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. பல போர்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய அமெரிக்கா, வியட்நாமின் எளிய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் தோற்று ஓடிய இந்தச் சம்பவம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அவப்பெயரினை தேடித்தந்தது. ‘வியட்நாம் போரில் இருந்து இன்னமுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை?” என்கிற வாசகம் இன்றும் கூட அமெரிக்காவிலும் பிரான்சிலும் பிரபலமான மேற்கோளாக உள்ளது.

**

வியட்நாம் போரில் தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த மனித உயிர் இழப்பு மற்றும் பொருளியல் இழப்புகளை மறைத்து ‘நாம் வென்று கொண்டிருக்கிறோம்’ என்கிற போலிப் பெருமிதப் பொய்களை தம் சொந்த நாட்டு மக்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது அமெரிக்கா. ஆனால் இந்தக் குட்டு அம்பலமாகத் துவங்கிய போது அமெரிக்க சிவில் சமூகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தது. வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய பல்வேறு மனித உரிமை மீறல்கள் காட்சிகளாக கசிந்த போது மக்களிடையே இந்தக் கொந்தளிப்பு உயர்ந்தது.

வியட்நாம் போர் தொடர்பான 30 ஆண்டு கால நிகழ்வுகளை, ராபர்ட் மெக்நமரா என்கிற அமெரிக்க ராணுவச் செயலாளர் பல்வேறு ஆவணங்களாக தொகுத்தார். வருங்கால ஆராய்ச்சிக்காக தொகுக்கப்பட்ட இந்த ஆவணங்கள் (பெண்ட்டகன் பேப்பர்ஸ்) அமெரிக்கா அரசாங்கத்தால் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. போர் தொடர்பான பொய் தகவல்களின் மூலம் தம் சொந்த தேசத்து மக்களையே ஏமாற்றும் அரசாங்கத்தின் மோசடியால் மனம் நொந்து போகும் டேனியல் எலிஸ்பெர்க் என்பவர் இந்த ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார். வியட்நாம் போரின் போது அரசு தரப்பில் பார்வையாளராக களத்தில் நின்று பல்வேறு செய்திகளை நேரில் கண்டு பதிவு செய்தவர்தான் இந்த டேனியல். ராணுவ ரகசியங்களை பொதுவில் வெளியிடுவதின் மூலம் பல்லாண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தாலும் தேசநலன் கருதி இந்த சாகசத்தில் அவர் ஈடுபட்டது மிக மிகத் துணிச்சலான காரியம்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ எனும் அமெரிக்கப் பத்திரிகை பெரும் முயற்சிக்குப் பின் இந்த ஆவணங்களின் பகுதியை டேனியலிடமிருந்து வாங்கி தங்களின் நாளிதழில் பிரசுரிக்கத் துவங்குகிறது. அப்போதைய அதிபர் நிக்சனின் தலைமையிலான அரசு பதறிப் போய் ஆவணங்கள் வெளியாவதற்கான தடையை விதிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு  ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ எனும் போட்டிப் பத்திரிகை அந்த ஆவணங்களை அதே டேனியலிடமிருந்து வாங்கி தங்களின் இதழில் பிரசுரிக்கத் துவங்குகிறது. நிக்சனின் அரசு இந்தப் பத்திரிகையையும் முடக்கத் திட்டமிடுகிறது.

அரசாங்கத்தின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவதற்காக ஊடகங்கள் எடுக்கும் முயற்சிகளையும் அவற்றிற்குள் நிகழும் போட்டிகளையும் அரசு இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்வதான தவிப்புகளையும் ஸ்பீல்பெர்க்கின் ‘தி போஸ்ட்’ திரைப்படம் மிக கச்சிதமாகவும் பரபரப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் ஆசிரியர் குழுவிற்கும் அதன் பதிப்பாளருக்கும் இடையே நிகழும் வாதப் பிரதிவாதங்களை மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்வதா அல்லது உண்மையை வெளியிட்டு மக்களிடம் நன்மதிப்பை பெறுவதா என்பது தொடர்பான சிக்கல்களே பெரும்பான்மையான காட்சிகளின் மையமாக இருக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை நம்பகத்தன்மையோடு கூடிய திரைப்படமாக அளித்திருப்பதுதான் ஸ்பீல்பெர்க்கின் மேதமைக்கு சான்று. பலரால் அறியப்பட்ட கடந்த கால வரலாறு என்றாலும் ஒருதுளி கூட சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பான அரசியல் திரில்லராக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

**

வியட்நாமின் போர்க் காட்சிகளோடு திரைப்படம் துவங்குகிறது. அரசு தரப்பில் பார்வையாளராக அமர்த்தப்பட்டிருக்கும் டேனியல் அதன் நிகழ்வுகளை மிக கவனமாக பதிவு செய்கிறார். அமெரிக்கத் துருப்புகளின் மூர்க்கமான தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான வியட்நாமியர்கள் மடிகிறார்கள். ரசாயன வெடிகுண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கரும்புகை போல வியட்நாமைச் சூழ்கிறது. வியட்நாம் மக்கள் படை துணிச்சலாக எதிர்கொள்வதின் காரணமாக அமெரிக்கத் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்படுகிறது. தோல்வியை ஒப்புக் கொள்ளாத வீறாப்புடன் தொடர்ந்து தனது வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது அமெரிக்கா.

ராணுவச் செயலாளரான  ராபர்ட் மெக்நமராவிற்கு தாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் நன்கு தெரிகிறது. இந்த விஷயத்தை அரசாங்கத்தின் செயலாளருக்கு தெரிவிக்கிறார். சாட்சிக்காக டேனியலையும் அழைக்கிறார். “டேனியல், உண்மையான நிலவரத்தைச் சொல்”. ராபர்ட் சொல்லும் அதே கருத்தையே டேனியலும் பிரதிபலிக்கிறார். போர்க்களத்தில் அவர் கண்ட உண்மையும் அதுவே.

ஆனால் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ‘அமெரிக்கா வெற்றியை நோக்கி பெருமிதத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்று உண்மைக்கு மாறான செய்தியை தெரிவிக்கிறார் ராணுவச் செயலாளர். கடந்து செல்லும் டேனியல் அமெரிக்காவின் இந்த இரட்டைநிலையைக் கண்டு மனம் நோகிறார். அரசாங்கத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களைத் திருடி அவற்றின் முதல் பகுதியை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் மூலம் கசிய விடுகிறார். அதுவொரு தீப்பற்றின நாளாக அமைகிறது. அமெரிக்க அரசு பதறிப் போய் சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தியை மேற்கொண்டு வெளியிடாமல் முடக்கி வைக்கிறது.

நியூயார்க் டைம்ஸின் போட்டிப் பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டின் ஆசிரியர் குழு விரக்தியின் உச்சிக்கே போகிறது. இப்படியொரு முக்கியமான செய்தியை தாம் பிரசுரிக்காமல் அமெரிக்க அதிபர் மகளின் திருமணத்தைப் பற்றி எழுதியிருக்கிறோமே என்று வெறுப்படைகிறார் அதன் ஆசிரியர் பென் பிராட்லீ. டைம்ஸின் செய்தியாளரான நீல் ஷீகன் பல நாட்களாக எதையும் எழுதாமல் இருந்ததைக் கண்டு ‘அவர் ஏதோவொரு முக்கியமான திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று யூகித்த பிராட்லீயின் சந்தேகம் இப்போது உறுதியாகி விட்டது.


போட்டிப் பத்திரிகையின் இந்த வெற்றியை சகிக்க முடியாமல் ‘என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று தமது உதவி ஆசிரியர்களிடம் எரிந்து விழுகிறார். பென் பாக்திகியான் என்கிற துணை ஆசிரியர் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார். மிக சிரமப்பட்டு டேனியலைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணங்களின் பிற பகுதிகளை கைப்பற்றுகிறார். பிராட்லீ உற்சாகமாகிறார். ‘வாஷிங்டன் போஸ்ட்’டில் இதைப் பிரசுரிப்பதற்கான பணிகள் மிக ரகசியமாகவும் பரபரப்பாகவும் நிகழ்கின்றன.

ஆனால் இதை பிரசுரிப்பதற்கான அனுமதி அதன் பதிப்பாளரிடமிருந்து கிடைத்தாக வேண்டும். இது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. வெற்றியை நோக்கிச் செல்லும் கனி கையில் கிடைத்தாலும் அதை ருசிக்க முடியாத தடைகளை பிராட்லீ எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

**

‘வாஷிங்டன் போஸ்ட்’டின் தற்போதைய பதிப்பாளர் கேத்தரின் கிரஹாம். இது அவருடைய தந்தையாரின் பத்திரிகை. அவருடைய மறைவிற்குப் பின்னால் கேத்தரினின் கணவரான ஃபில் கிரஹாம் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சில காரணங்களால் ஃபில் தற்கொலை செய்து கொள்ள அந்தப் பொறுப்பு கேத்தரீனை வந்து சேர்கிறது. தங்களின் குடும்ப பெருமையாக விளங்கும் பத்திரிகையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒருபுறம், குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கடமை ஒருபுறம், அரசாங்கத்தையும்  உயர்மட்ட அளவில் இருக்கும் தன் நண்பர்களையும் பகைத்துக் கொள்ள முடியாத சங்கடம். இந்த எல்லைகளுக்குள் அவரின் தத்தளிப்பு அமைகிறது.

ஆசிரியர் பென் பிராட்லீ ஆவணங்களை சிரமப்பட்டு தேடிப் பிடித்து விட்டாலும் அதைப் பிரசுரிக்கலாமா என்கிற முடிவை நோக்கி நகர்வதில் கேத்தரின் பெரிதும் சிரமப்படுகிறார். பத்திரிகை நிறுவனம் அந்தச் சமயத்தில் நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே தன் நண்பர்களின் ஆலோசனையின் படி பங்குச் சந்தையில் இணைவதற்கான திட்டத்தில் இருக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்வது சொந்த செலவில் வைத்துக் கொள்ளும் சூன்யம் போன்றது. நிதியுதவி செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபடும் வங்கிகளும் கைவிரித்து விடும். இது மட்டுமல்ல, அரசாங்கத்தின் தடையால் பத்திரிகை முடக்கப்பட்டால் அதன் ஊழியர்களின் கதியும் கேள்விக்குறியாகி விடும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் ராணுவச் செயலாளரான ராபர்ட் மெக்நமரா, கேத்தரினின் நெருங்கிய நண்பரும் கூட. இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி பிரசுர முடிவை கேத்தரின் எடுக்க வேண்டும்.

இந்த முடிவை நோக்கி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆவணங்களை பிரசுரிக்கும் நிலையில் உறுதியாக நிற்கும் ஆசிரியர் பென் பிராட்லீ, அதன் எதிர்முனையில் தவிக்கும் பதிப்பாளர் கேத்தரீன் ஆகிய  இருவருக்குமான போராட்டங்களுக்கான விடைக்கான கடைசிக்காட்சிகள் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

**

ஜாஸ், ஜூராசிக் பார்க், போன்ற பிரம்மாண்ட பொழுதுபோக்குத் திரைப்படங்களை ஒருபுறம் உருவாக்கினாலும், கருப்பினத்தவர்களின் துயரங்களைச் சொல்லும் ‘தி கலர் பீப்பிள்’ போன்ற உன்னதமான திரைப்படங்களையும் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ளார். ‘தி போஸ்ட்’ திரைப்படத்தையும் இந்த வரிசையில் இணைக்கலாம். அரசாங்கத்திற்கு எதிரான விஷயங்களை பிரசுரிப்பதற்காக ஊடகங்கள் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படம், அதே சமயத்தில் செய்திகளை முந்தித் தருவதில் ஊடகங்களுக்கு இடையில் நிகழும் போட்டிகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவரான டாம் ஹாங்க்ஸ், பத்திரிகை ஆசிரியர் பென் பிராட்லீயாக தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மேஜையின் மீது கால்களைப் போட்டுக் கொண்டு தனது உதவி ஆசிரியர்களுடன் விவாதிப்பது, “ராபர்ட் மெக்நமரா, உங்களது நண்பர்தானே, அவரிடம் பேசி ஆவணங்களின் பிரதியை வாங்கலாமே” என்று பதிப்பாளருக்கு நெருக்கடி தருவது, செய்தியை வெளியிட்டேயாக வேண்டும் என்கிற தவிப்புடன் ஒவ்வொரு தடையையும் சாமர்த்தியமாகவும் உறுதியாகவும் தாண்டுவது, பத்திரிகை வெளியிடப்படும் கடைசி நிமிடத்தில் கூட ஏற்படும் தடையை பரபரப்புடன் எதிர்கொள்வது என பல காட்சிகளில் அசத்தியுள்ளார்.

பதிப்பாளர் கேத்தரீனாக மெரில் ஸ்ட்ரீப். ஆஸ்கர் விருதிற்காக அதிக முறை நாமினேட் செய்யப்பட்டவர் என்கிற பெருமை இவருக்குண்டு. இத்திரைப்படத்திற்காகவும் ‘சிறந்த நடிகைகக்கான’ பிரிவில் நாமினேட் ஆகியிருந்தார். அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் வெளிப்பட்ட படங்களில் ‘தி போஸ்ட்’ முக்கியமானதாக இருக்கும்.

ஒரு பொறுப்புள்ள பதிப்பாளராக இருக்க வேண்டிய அதே சமயத்தில் குடும்ப பாதுகாப்பை கைவிடாத ஜாக்கிரதை, நண்பர்களுக்கு சங்கடம் தர விரும்பாத கண்ணியம், பத்திரிகை தொடர்ந்து இயங்குவதற்கான கவலை என்று பல்முனை தத்தளிப்புகளில் சிக்கித் தவிப்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களின் ஆலோசனை ஒருபுறம், அரசாங்கத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அச்சம் இன்னொருபுறம், இதற்கு நடுவில் பென் பிராட்லீயின் தார்மீகமான கோபம் ஆகியவற்றின் இடைவெளியில் தத்தளிக்கும் தனது பாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் மெரில் ஸ்ட்ரீப். சுயபாதுகாப்பிற்கான முடிவுகளை எடுக்கும் அதே சமயத்தில் உள்ளுக்குள் ஆதாரமாக இயங்கும் அறவுணர்வு காரணமாக ஆவணங்களை பிரசுரிப்பதற்கான முடிவை எடுக்கும் இறுதிக் காட்சியில் இவரது நடிப்பு கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது. துணையாசிரியாக நடித்திருக்கும் பாப் ஓடன்கிர்க்கின் பங்களிப்பும் சிறப்பானது.

ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜான் வில்லியம்ஸ், வழக்கம் போல் தன்னுடைய உன்னதமான இசையைத் தந்துள்ளார். மிக குறிப்பாக பத்திரிகை அச்சாகும் இறுதிக்காட்சியில் இவர் உருவாக்கியிருக்கும் இசை, அந்தக் காட்சியின் பரபரப்பை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக கடத்தியுள்ளது. Janusz Kamiński-ன் அபாரமான ஒளிப்பதிவையும் பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். நீதிமன்றக் காட்சிகளில் காமிராவின் அசைவுகள் அதன் தன்மைக்கேற்ப சிறப்பாக அமைந்திருப்பதை உதாரணமாக சொல்லலாம்.

**


இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் மீதான சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. ரகசிய ஆவணங்களை சிரமப்பட்டு தேடித் தொகுத்து முதலில் வெளியிடுவது ‘நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகைதான். அதன் பிறகே ‘வாஷிங்டன் போஸ்ட்”  விழித்துக் கொள்கிறது அரசாங்கத்தின் தடை காரணமாக போட்டிப் பத்திரிகை செய்திகளை வெளியிட முடியாத சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது ‘வாஷிங்டன் போஸ்ட்’. ஆனால் இந்த திரைப்படத்தில் இந்தப் பத்திரிகைக்குத்தான் பிரதான இடம் தரப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் உயர் மட்டத்தில் நிகழும் சிக்கல்கள் தொடர்பான காட்சிகள்தான் பிரதானமாக பதிவாகியுள்ளது. இந்த சர்ச்சையை முதலில் வெளிப்படுத்திய ‘நியூயார்க் டைம்ஸின்’ பங்களிப்பு சாதாரணமாகவே இடம்பெற்றுள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் ‘நியூயார்க் டைம்ஸில்’ பணிபுரிந்த ஆசிரியர் குழுவும் இது சார்ந்த அதிருப்திகளை வெளிப்படுத்தியுள்ளது. ‘இந்த திரைப்படம் சிறப்பான உருவாக்கத்தில் அமைந்திருந்தாலும் எங்களின் முக்கியத்துவத்தை குறைத்து காட்சிப்படுத்தியிருப்பதின் மூலம் அதன் நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது” என்று புகார் கூறியுள்ளனர்.

ஓர் அரசாங்கத்தின் முறைகேட்டை, அந்த நாட்டைச் சேர்ந்த பத்திரிகையே வெளிப்படுத்துவது என்பது ஏறத்தாழ தற்கொலைக்கு ஈடானது. கடுமையான அடக்குமுறைகள் கொண்ட நாடுகளில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரமும் சகிப்புத்தன்மையும் உள்ளதாக கூறப்படும் அமெரிக்கா போன்ற தேசங்களிலும் இதுதான் நிலைமை என்கிற நிதர்சனத்தை இத்திரைப்படத்தை பட்டவர்த்தனமாக போட்டுடைக்கிறது. “ஊடகங்கள் தேசத்தை ஆள்பவர்களுக்காக  அல்ல, தேச நலனிற்காகத்தான் செயல்பட வேண்டும்’ என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்படும் வாசகம் மிக உண்மையானது. ஒரு சாமானியனின் கடைசி அடைக்கலமாக நீதித்துறையின் மீது உருவாகும் நம்பிக்கைகளை, இது போன்ற தீர்ப்புகள்தான் உறுதிப்படுத்துகின்றன.

வழக்கு தொடர்பான விசாரணைக்காக பதிப்பாளர் கேத்தரின் நீதிமன்றத்திற்குள் நுழைகிறார். அவரை இடைமறித்து சிறப்பு நுழைவின் வழியாக அழைத்துச் செல்லும் ஒரு பெண், கேத்தரினிடம் ரகசியமாக சொல்கிறாள். “உங்கள் வழக்கு வெற்றி பெற வேண்டும். எனது சகோதரன் இந்தப் போரில் பணிபுரிவதற்காக அனுப்பப்பட்டுள்ளான்” அவள் அரசுத்துறை சார்ந்த ஊழியை என்பதால் இதை ரகசியமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவரைப் போன்ற சாமானியர்களின் குரலை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தை இத்திரைப்படம் மிகச் சிறப்பாக வலியுறுத்துகிறது. அந்த வகையில் சமீபத்தில் உருவாகியுள்ள மிகத் தரமான திரைப்படம் என்று ‘தி போஸ்ட்’டை உத்தரவாதமாக சொல்லலாம்.

அரசு தரப்பிலான உயர்மட்ட அளவில் நிகழும் ஊழல்களுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஆயுத பேர ஊழலில் ஒரு முன்னாள் பிரதமரின் பெயரும் பலமாக அடிபட்டது. இது தொடர்பான ஆவணங்களை ஓர் ஆங்கில தேசியப்பத்திரிகைதான் முதன்முதலில் வெளியிட்டது. இந்த முடிவை எட்டுவதற்காக ஆசிரியர் குழுவில் ஏற்பட்ட மோதல்களும் பின்னால் அறியப்பட்டன. ‘தி போஸ்ட்’டைப் போலவே இதுவும் திரைப்படமாக ஆவதற்கான சரியான கச்சாப் பொருள். அப்படியொரு முயற்சி இங்கு சாத்தியமா? ஆனால் அப்படியொரு திரைப்படம் இங்கும் உருவாக வேண்டியதின் அவசியத்தை ‘தி போஸ்ட்’ நமக்கு உணர்த்துகிறது.


(குமுதம் தீராநதி -  மே 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: