Monday, October 14, 2019

நம்பிக்கையேற்படுத்தும் நவீன தமிழ் சினிமாக்கள்






ஏறத்தாழ நூறு வயதாகும் தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதை மிகப் பெரியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே சினிமா எனும் நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகியது. இதர மாநிலங்களைப் போலவே கூத்து மற்றும் நாடக மரபிலிருந்து தனது உள்ளடக்கத்தையும் பாணியையும் தமிழ் சினிமா ஸ்வீகரித்துக் கொண்டது. பக்தி, புராணம் மற்றும் ராஜா-ராணி கதைகளுக்குப் பிறகு சமூகத் திரைப்படங்களுக்கு நகர்ந்தது. தமிழக அரசியலுக்கும் சினிமா ஊடகத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்களுக்கு சினிமாவின் பின்னணி பெரிதும் உதவியாக இருந்தது. மக்களுக்கு சினிமாவின் மீது உருவான கவர்ச்சியை திராவிட இயக்கம் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டது.



ஆனால் காட்சி ஊடகத்தின் பிரத்யேகமான சாத்தியங்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொண்டதா என்கிற கேள்விக்கு, சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்க வேண்டியிருக்கிறது. நாலைந்து பாடல்கள், இரண்டு மூன்று சண்டைக்காட்சிகள், சென்ட்டிமென்ட் அழுகைகள் என்று தேய்வழக்கான ஒரு கலவைதான் ஏறத்தாழ இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா என்றல்ல, ஒருவகையில் இந்திய சினிமாவின் அடிப்படையான வடிவமே இதுதான். இவ்வகையான வெகுசன திரைப்படங்களே சலிக்க சலிக்க மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.



பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற சொற்பமான முயற்சிகள் மட்டுமே தமிழில் குறிப்பிடத்தக்கதாக நிகழ்ந்தன. உலகின் இதர பிரதேசங்களில் உருவாகும் நல்ல சினிமாக்களைப் பார்த்து தமி்ழர்களால் பெருமூச்சுதான் விட முடிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுவாக கேரளம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிரதேசங்களில் கவனத்துக்குரிய முயற்சிகள் தொடர்ச்சியாக உருவாகின. அங்கே உருவானதைப் போன்று தமிழில் ஒரு ரித்விக் கட்டக்கோ, சத்யஜித்ரேயோ, அடூர் கோபாலகிருஷ்ணனோ, அரவிந்தனோ இல்லை. எண்பதுகளில் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் மெல்ல உருவாக்கிய பொன்னுலகத்தை எஸ்.பி,முத்துராமன் போன்ற வணிகப்பட இயக்குநர்கள் அழித்தொழித்தார்கள்.  இந்தப் போக்கை கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு போன்றவர்கள் இன்னமும் மோசமாக வளர்த்தெடுத்தார்கள்.



மணிரத்னத்தின் வருகை ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. தமிழ் சினிமாவின் திரைமொழியை மணிரத்னத்திற்கு முன், மணிரத்னத்திற்கு பின் என்று இருபிரிவாக பிரிக்கலாம் என்ற அளவிற்கு அவர் தமிழ் சினிமாவின் உருவாக்க பாணியை வெகுவாக பாதித்தார். சுருக்கமான வசனங்கள்,  பாடல் காட்சிகளை அழகியல்பூர்வமாக உருவாக்குவது என சில மாற்றங்கள் அவரால் நிகழ்ந்தன. சில தேய்வழக்கு விஷயங்கள் ஒழிந்தன. பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பார்த்து பல தமிழக இளைஞர்கள் இயக்குநராகும் கனவுடன் நகருக்குள் வந்தததைப் போல நவீன இளைஞர்களை மணிரத்னம் பாதித்தார். குறிப்பாக அவருடைய உருவாக்கத்தில் வெளியான ‘நாயகன்’ காட்ஃபாதரின் தழுவலாக இருந்தாலும் பல இளம் இயக்குநர்களை பித்து பிடிக்க வைத்தது. ‘இந்த திரைப்படத்தைப் பார்த்துதான் இயக்குநராக விரும்பினேன்’ என்று வெற்றி பெற்ற பல இளம் இயக்குநர்கள் பிறகு நேர்காணலில் கூறினார்கள்.



தமிழ் எழுத்தாளர்களுக்கும் சினிமாவிற்குமான இடைவெளி நிரப்பப்படாமலேயே இருந்தது. ஓர் இயக்குநரே திரைக்கதை, வசனம் என்று பல விஷயங்களை எழுதினால்தான் மதிப்பு என்கிற வறட்டுப் பெருமை இங்கு இருந்தது. இப்போதும் இருக்கிறது.  திரைக்கதைக்கென்று பிரத்யேகமான எழுத்தாளர்கள் இல்லை. பாலகுமாரன், சுஜாதா போன்ற வெகுசன எழுத்தாளர்களை மணிரத்னம் பயன்படுத்திக் கொண்டார். பிறகு ஷங்கரும் இந்தப் போக்கை பின்பற்றினார்.



ஆனால் இலக்கிய எழுத்தாளர்களும் அவர்களது படைப்புகளும் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுவது அரிதாக இருந்தது. வசந்தபாலன் போன்ற இளம் இயக்குநர்களுக்கு இலக்கிய வாசிப்பும் ருசியல் இருந்ததால் அது சார்ந்த சில அசைவுகள் ஏற்பட்டன. ‘காவல் கோட்டம்’ என்கிற வரலாற்றுப் புதினத்தின் ஒரு பகுதியை ‘அரவான்’ என்கிற சினிமாவாக வசந்தபாலன் உருவாக்கினார். ஜெயமோகன் போன்ற நவீன இலக்கிய எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் வர இவர்கள் காரணமாக இருந்தனர். திரைக்கதையின் உருவாக்கத்திற்காக எழுத்தாளர் சுஜாதாவை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த ஷங்கர், சுஜாதாவின் மறைவுக்குப் பின்னால் தனது சமீபத்திய அறிபுனைவு திரைப்படத்திற்கு (2.0) ஜெயமோகனை பயன்படுத்துவது குறிப்பிடத்தகுந்தது.



திரைமொழியிலும் உருவாகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களால் வெகுசன திரைப்படங்களின் தரத்தை சற்று மேம்படுத்த முடிந்தது. அவ்வளவுதான். வெகுசன திரைப்படத்திற்கு இணைகோடாக மாற்று முயற்சிகள் இங்கு அவ்வளவாக உருவாகவில்லை. பாலுமகேந்திராவின் சீடர்களான பாலா, அமீர், ராம், விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறன் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை உருவாக்கினார்கள். மிக குறிப்பாக பாலாவின் படைப்புலகம் குறிப்பிடத்தகுந்தாக அமைந்தது. அதுவரை தமிழ் சினிமா பெரிதும் சீண்டாத விளிம்புநிலை மக்களின் இருண்மையான, வன்முறை கலந்த வாழ்வியலை பாலா அதிகம் பொருட்படுத்தினார். நவீன உலகத்தின் ஆண், பெண் உறவுச்சிக்கலை ஆராயும் ராமின் ‘தரமணி’ சமீபத்திய குறிப்பிடத்தகுந்த முயற்சி. போலவே வெற்றிமாறனின் ‘விசாரணை’. திரைப்படமும் கவனிக்கத்தகுந்த படைப்பு.



மிஷ்கின், செல்வராகவன், கெளதம் வாசுதேவ மேனன் போன்ற இயக்குநர்கள் தங்களின் தனித்துவமான முயற்சிகளின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தார்கள். தமிழ் வெகுசன சினிமாவின் முகத்தின் நிறமும் தரமும் இவர்களால் சற்று மேம்பட்டது.



**



இவர்களுக்குப் பின்னால் வந்த புதிய இளம் இயக்குநர்கள் வேறு வகையான அலையை உருவாக்கினார்கள். ஏதாவது ஒரு மூத்த இயக்குநரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக் கொண்ட பிறகுதான் இயக்குநராக முடியும் என்கிற நீண்ட கால விதியை இவர்கள் உடைத்தார்கள். (இதற்கு முன்னால் மணிரத்னம் போன்ற அரிதான உதாரணங்கள் மட்டுமே இவ்வாறு இருந்தன). உலக சினிமாக்களை தீவிரமாக கவனிப்பதின் மூலம் தங்களின் கற்றலை வளர்த்துக் கொண்டார்கள். குறும்படங்களை உருவாக்கி இணையத்தில் பரப்புவதின் மூலம் தங்களுக்கான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.



தமிழ் சினிமாவின் திரைக்கதை உருவாக்கங்களில் கணிசமாக மாற்றம் ஏற்பட இவர்கள் காரணமாக இருந்தார்கள். படைப்பாளிகள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் இத்தகைய மாற்றத்தில் ஏற்படுத்துவதில் ஒரு பங்காக இருந்தார்கள். பைரஸி என்பது சட்டவிரோதமான, எதிர்மறையான விஷயம்தான் என்றாலும் இந்திய சினிமாவிற்கு அது இன்னொரு வகையில் நல் விளைவுகளை உருவாக்கியது எனலாம். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி பிலிம் சொசைட்டி, பிலிம் பெஸ்டிவல் போன்ற இடங்களில் மட்டுமே பார்க்க முடிந்த அயல் சினிமாக்கள் இணையம் வழியாகவும் கள்ள நகல்கள் வழியாகவும் வெள்ளமெனப் பாய்ந்தது. ஒருசில அறிவுஜீவிகளும் இயக்குநர்களுமே பார்த்துக் கொண்டிருந்த இந்த சினிமாக்களை, நல்ல சினிமா மீது ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள் சதவீதம் பார்க்கும் வாய்ப்பு உருவாகியது.



இவ்வகையான சிறந்த சினிமாக்கள் ஏன் தமிழில் உருவாகவில்லை என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் கேள்வியும் இந்தப் பார்வையாளர்களிடம் ஏற்பட்டது. தேய்வழக்கான சினிமாக்கள் மீது சலிப்பும் வெறுப்பும் இவர்களுக்கு உருவானது.  இந்த மாற்றத்தை சினிமா இயக்குநர்களும் உணரத் துவங்கினார்கள். அவர்களுக்கும் இதுவொரு நெருக்கடியாக அமைந்தது. புதுமையான கோணங்களில் ஒரு திரைக்கதை உருவாகாவிட்டால் அது கருணையின்றி உடனே நிராகரிக்கப்படும் என்கிற அச்சம் இயக்குநர்களுக்கு ஏற்பட்டது. வழமையான விஷயங்கள் இனிமேல் செல்லுபடியாகாது என்கிற கட்டாயத்தை இவ்வகை இளம் பார்வையாளர்கள் உருவாக்கினார்கள்.



பழமையான திரையரங்கங்கள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்க, மல்டிபெக்ஸ் திரையரங்கங்கள் இன்னொருபுறம் வளர்ந்து கொண்டிருந்தன. குறைந்த எண்ணிக்கையிலான இருக்கை, தரமான திரையிடல், உணவு வசதிகள் போன்றவை உயர் நடுத்தரவர்க்க பார்வையாளர்களை ஈர்த்தன. இவ்வகையான பார்வையாளர்களுக்கென ஒரு வணிகச் சந்தை உருவாகியது. இந்தப் போக்கு சினிமாவின் உருவாக்கத்திலும் திரைக்கதையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தமிழ் சினிமாவிற்கு அடிப்படை என நீண்ட காலமாக இருந்த பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் போன்றவை மெல்லக் குறைந்து கொண்டு வருகின்றன.



வெகுசன சினிமாக்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் திரையில் அதற்கு இணையாக மாற்று முயற்சிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சர்வதேச அளவுகோலில் ஒரு தமிழ் சினிமா உருவாவதென்பது இன்னமும் ஓர் ஏக்கமாகவும் கனவாகவுமே இருக்கிறது. நல்ல சினிமாக்களின் மீது ஆர்வமுள்ள பார்வையாளர்களும் இயக்குநர்களும் பெருகப் பெருக அப்படியொரு சாதனை வருங்காலத்தில் உருவாகும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.



**



தமிழ் சினிமா கடந்த பத்து வருடங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க கீழ்கண்ட இளம்  இயக்குநர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (அறிமுக வருடம் அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருக்கிறது)



மிஷ்கின் (2006), ராம், வெற்றிமாறன், வெங்கட்பிரபு  (2007), சுசீந்திரன், ராஜேஷ், பாண்டிராஜ் (2009), தியாகராஜன் குமாராஜா, சாந்தகுமார்  (2011) பாலாஜி மோகன், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன், கமலக்கண்ணன்  (2012) G.N.R. குமரவேலன், நலன் குமாரசாமி, நவீன், R.S.பிரசன்னா, அல்போன்ஸ் புத்திரன், விக்ரம் சுகுமாரன் (2013) S.U. அருண்குமார் (2014) மணிகண்டன், G.பிரம்மா (2015) நெல்சன், அஸ்வினி திவாரி, உஷா கிருஷ்ணன், விஜயகுமார் (2016).



இந்தக் காலக்கட்டத்தில் உருவாகி வந்த மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மிஷ்கினைச் சொல்லலாம். அயல் திரைப்படங்களிலிருந்து தம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும் திரைமொழியை அவர் கையாளும் விதம் பொதுவான தமிழ் சினிமாவிலிருந்து வேறுபட்டிருக்கிறது. அதுவரை எதிர்மறையாகவே சித்தரித்துக் கொண்டிருந்த பேய் என்கிற கருத்தாக்கத்தை நேர்மறையாக சித்தரித்தது 'பிசாசு'. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு பேய் பிடித்த விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஹாரர் காமெடி என்கிற வகைமை தமிழ் சினிமாவிற்கு புதிதானது என்றாலும் 2011-ல் வெளியான 'காஞ்சனா' பேயோட்டம் ஓடி அதிகமான லாபத்தைத் தந்ததால் பிறகு அது போன்ற பாணியிலேயே  தொடர்ந்து எக்கச்சக்கமான படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னமும் கூட பேய் நம்மை விட்டபாடில்லை.



'ஆரண்ய காண்டம்' என்கிற ஒரேயொரு திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடம் அழுத்தமான அடையாளத்தைப் பெற்று விட்டார் தியாகராஜன் குமாரராஜா. தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா என்று இதை வகைப்படுத்தலாம். காட்சிகளின் உருவாக்கம், கதை சொன்னதின் முறை, ரகளையான பின்னணி இசை என்று  எல்லாமே அதுவரையான மரபுகளை இத்திரைப்படம் கலைத்துப் போட்டது.. இவா் அடுத்த திரைப்படத்தை இயக்க மாட்டாரா என்று பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வெளிவந்து ஐந்தாண்டுகள் கடந்தும் கூட சமீபத்திய சென்னை திரைப்பட விழாவில் 'ஆரண்ய காண்டம்' வெளியிடப்பட்ட போது ஏதோ ரஜினியின் புதுப்படம் வந்தது போல அரங்கு நிறைந்திருந்தது.



ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல குறும்பட உலகிலிருந்த வந்த இயக்குநர்கள் அதுவரையான பழைய இயக்குநர்களை சற்று ஓரம் தள்ளி விட்டு வெற்றிக் கொடி நாட்டினார்கள். பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி' இதன் துவக்க வாசல். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி என்று பல இளம் படைப்பாளிகள் இப்படியாக தமிழ் சினிமாவிற்குள் வந்தார்கள்.



'பருத்தி வீரன்' மூலம் அழுத்தமான நம்பிக்கையை உருவாக்கிய அமீர் பின்பு நீர்த்துப் போய் காணாமற் போனது துரதிர்ஷ்டம். இந்தக் காலக்கட்டத்தில் வெற்றி மாறன் ஒரு குறிப்பிடத்தகுந்த இயக்குநராக உருவாகி வந்து கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் சர்வதேச அரங்குகளில் கலந்து கொள்வதையும் வெற்றி பெறுவதையும் ஒரு நல்ல மாற்றமாக சொல்லலாம். 'விசாரணை' அப்படியொரு நல்ல படைப்பு. போலவே 'காக்கா முட்டை'. இரானிய திரைப்படங்களைப் போல எளிமையான உருவாக்த்துடன் ஆனால் அதற்குள் ஆழமான அரசியலை உரையாட முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்தது. ஸ்டார் நடிகராக இருந்தாலும் இது போன்ற திரைப்படங்களை தயாரிக்கும் தனுஷ் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். விருதுப் படங்களின் வரிசையில் 'குற்றம் கடிதல்' ஒரு நல்ல முயற்சி.



'மதுபானக்கடை' மூலம் அழுத்தமான அரசியல் உரையாடலை நிகழ்த்தினார் கமலக்கண்ணன். துரதிர்ஷ்டமாக இது பரவலாக கவனிக்கப்படவில்லை. உலகமயமாக்கலின் அரசியலை தம் திரைப்படங்களில் நுட்பமாக உரையாடுபவர் 'ராம்'. இவருடைய திரைப்படங்களையும் வெகுசன ரசிகர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைநிலைச் சாதிகளின் பெருமிதங்கள் விதந்தோதப்படும் ஆபத்தான சூழலில் தலித் அரசியலை தனது 'மெட்ராஸ், கபாலி' திரைப்படங்களின் மூலம் முன்வைத்த ரஞ்சித் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.



***



இந்தச் சூழலில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் நிகழ்ந்த சில நல்ல முயற்சிகளைப் பார்ப்போம்.



சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் உருவான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சமீபத்தில் வந்த அருமையான முயற்சி. சர்வதேச திரை அரங்குகளில் தொடர்ந்து அங்கீகாரம் பெறும் இரானிய திரைப்படங்களின் பாணியை நாம் வியந்து கொண்டிருக்கிறோம் அல்லவா?. எளிமையின் வசீகரம் நிரம்பிய அப்படியொரு இயல்பான பாணியிலான திரைப்படம் தமிழில் உருவாகாதா என்கிற நீண்ட கால ஏக்கத்தைப் போக்க முயன்றிருக்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு’.



நடுவப்பட்டி என்கிற கிராமத்துக் குடும்பத்தைச் சார்ந்த ஓர் இளைஞனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்திருப்பதால் அவனுடைய குடும்பத்தார் சுற்றத்தார்களுடன் இணைந்து குலதெய்வக் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். நேர்த்திக் கடனுக்காக ஒரு கிடாவை பலி கொடுக்க எடுத்துச் செல்கிறார்கள். வழியில் ஓர் அசந்தர்ப்பமான சூழலை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. அதன் பிறகு நிகழும் சம்பவங்கள், அவல நகைச்சுவையுடன் விரிகின்றன..



ஒரு கூட்டுக்குடும்பத்தின் நெரிசலுக்கு இடையில் புதுமண தம்பதியினர் நெருக்கமாக பழக முடியாததன் அவஸ்தை முதற்கொண்டு, இந்த நிகழ்விற்காக ஊரார் அழைக்கப்படுவதும் அவர்கள் ஓர் அதிகாலையில் லாரியில் கோயிலுக்கு கிளம்புவதும் என மிக இயல்பான, சாவகாசமான காட்சிகள் திறமையாக சொல்லப்பட்டிருக்கின்றன.



படம் துவங்குவதற்கு முன்பே அதன் மையம் ஒரு கதைப்பாடலின் வழியாக நுட்பமாக விவரிக்கப்படுகிறது. நடுவப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மக்கள் ஒரு மானைக் கொன்ற கதை, பாடலின் வழியாக விரிகிறது. குலதெய்வத்திற்கு பலியாக்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கிடா இறுதியில் தப்பித்துக் கொள்ள, வேண்டுதலுக்கு செல்லும் மனிதர்கள் ஒரு தீராத சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இது சார்ந்த முரண்நகையின் வாசனை படமெங்கிலும் வீசுகிறது.



ஏறத்தாழ இது ‘ரஷோமான்’ திரைக்கதையின் தேசலான சாயலைக் கொண்டது. உண்மை என்பது ஒருநிலைக்குப் பிறகு அதன் பொருள் இழந்து வெற்றுச் சக்கையாகிப் போகிற அபத்தத்தை இறுதிக் காட்சிகளில் யதார்த்தமாக முன்நிறுத்துகிறது. ஏதோ ஒரு காரணத்தினால் விஷம் அருந்திய ஓர் இளைஞன், கோவில் கோஷ்டி வருகிற லாரிக்கு முன்னால் வந்து விழுந்து செத்துப் போகிறான். புது மனைவி முன்னால் ஜம்பம் காட்டுவதற்காக லாரியை அப்போது ஓட்டி வருகிற மாப்பிள்ளை மீது பழி விழிகிறது. பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது அந்தக் கும்பல்.



‘வக்கீல் மாமா’ என்று தான் அழைக்கிற உறவினரை உதவிக்கு அழைக்கிறான் மாப்பிள்ளை. பூனைகளுக்கு அப்பத்தை பங்கிட்டுத் தர குரங்கை நாட்டாமையாக அழைக்கிற வினையாகிப் போகிறது. உறவினர்களாகவே இருந்தாலும் சில வழக்கறிஞர்களின் அடிப்படையான புத்தி மாறாது என்பது இந்தக் காட்சிகளில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ஜார்ஜ் வக்கீல் பாத்திரத்தை அபாரமாக கையாண்டிருக்கிறார். தற்கொலையால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை அவர் அறிந்திருந்தாலும், தன்னுடைய தொழில் ஆதாயத்திற்காக மறைத்து இறுதிவரை அவர்களை பதட்டத்திலேயே வைத்திருப்பதின் மூலம் தன்னுடைய இருப்பையும் முக்கியத்துவத்தையும் நிறுவிக் கொள்கிறார். கிராமத்தில் நிகழும் பல அற்பமான பகைகளும் பஞ்சாயத்துக்களும் நீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்படுவதையும் வக்கீல்கள் அதை தங்களுக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்கிற சாமர்த்தியத்தையும் இத்திரைப்படம் நுட்பமாக பகடி செய்திருக்கிறது.



மிக எளிமையான சம்பவத்தை எடுத்துக் கொண்டு இறுதிவரைக்கும் அதன் சுவாரசியமும் பரபரப்பும் குறையாதபடியான திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் பாராட்டத்தக்கவர். இந்த திரைப்படத்தின் இன்னொரு முக்கியமான பலம், இதன் நடிகர்கள் தேர்வு. ஒரு பிரேமில் குறை்நதது பத்து, பதினைந்து நபர்களாவது இருக்கிறார்கள். அச்சு அசலான கிராமத்து முகங்கள். ஏழரை, கொண்டி, சேவல், ஊர்முழுங்கி, குஞ்சுக்கறி, அரும்பாடு என்று கதாபாத்திரங்களின் பெயர்களே அத்தனை சுவாரசியமாக இருக்கின்றன. சம்பவங்களின் போக்கை கிடாயின் பார்வைக் கோணங்கள் வழியாக சித்தரித்தது அற்புதமான யுத்தி.



நிகழ்ந்த அசந்தர்ப்பமான சம்பவத்தைப் பற்றி ஒவ்வொருவரும்  மற்றவர்களை இடைமறித்து பதட்டத்துடன் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒருவர் பேசி முடித்தவுடன் அடுத்தவர் பேசும் நாடகத்தனமான பாணி இதில் முற்றாக கைவிடப்பட்டிருக்கிறது. சிக்கலான சூழலுக்கு இடையிலும் ஒருவரையொருவர் வாரிக் கொள்ளும் நகைச்சுவையும் இயல்பாக கலந்துள்ளது.



விருந்துகளில் உண்பதையே பழக்கமாக கொண்டு திரியும் இருவர் கூட்டணி சுவாரசியம். தங்கையின் வாழ்விற்காக, மச்சான் செய்யும் தவறை தான் ஏற்றுக் கொள்ளும் தன்மை, உறவுகளின் அவசியத்தை ஒருபுறம் சுட்டிக் காட்டுகிறது. தன் மீது தவறில்லையென்றாலும் இறுதிக்காட்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்கிறான் நாயகன்.



தவறுகளும் குற்றங்களும் நிகழ்வது மனித வாழ்வில் இயல்புதான். பாதிப்பை ஏற்படுத்தியவருக்கும் பாதிப்பு அடைந்தவருக்கும் இடையில் பரஸ்பர புரிதல் ஏற்பட்டு விட்டால் நீதிமன்றங்களின் அவசியம் என்ன என்கிற கேள்வியையும் திரைப்படம் நுட்பமாக முன்வைக்கிறது. இதன் நாயகனாக வித்தார்த் சிறப்பாக நடித்திருக்கிறார். குறைவான வசனங்களே பேசியிருந்தாலும் புதுக்கணவன் மீதுள்ள பாசத்தையும் அன்பையும் முகபாவங்களாலேயே அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார் அறிமுக நாயகி ரவீணா ரவி. இயக்குநர் சுரேஷ் சங்கைய்யாவிடமிருந்து மீண்டுமொரு இயல்பான திரைப்படத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும் என்கிற உத்திரவாதத்தை தருகிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு.



**



அடுத்த திரைப்படமான ‘குரங்கு பொம்மை’யிலும் விதார்த்தே நாயகன் என்பது ஆச்சரியமான தற்செயல். இதன் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். குறும்பட உலகிலிருந்து பெரிய திரைக்கு வருகை தந்திருக்கும் இளம் இயக்குநர்களின் பட்டியலில் இணைகிறார். நான் –லீனியர் வடிவ திரைக்கதையைக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம், குரங்கு படம் போட்டிருக்கும் ஒரு பையின் பயணத்தின் வழியாக தன் அற்புதமான கதையாடலைக் கொண்டிருக்கிறது.



இயக்குநர் என்கிற பிரதான அடையாளத்தைத் தாண்டி, ஒரு நடிகராக பாரதிராஜா சில படங்களில் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறார். கல்லுக்குள் ஈரம் முதற்கொண்டு சில முயற்சிகள். மிக குறிப்பாக ஆய்த எழுத்து, பாண்டிய நாடு, ரெட்டச்சுழி போன்ற திரைப்படங்களில் அவருக்கு கவனிக்கத்தக்க இடம் அளிக்கப்பட்டிருந்தது. மேடைகளில் உரையாற்றுவதைப் போலவே திரையிலும் மிகையுணர்ச்சியோடும் அதீதமான முகபாவங்களினாலும் தன் நடிப்பை வெளிப்படுத்துபவர் பாரதிராஜா அந்த பாணியே அந்த திரைப்படங்களில் வெளிப்பட்டன. இது குறித்தான அதிருப்தி எனக்குண்டு.



ஆனால் ‘குரங்கு பொம்மையில்’ வெளிப்பட்ட அவரது இயல்பான நடிப்பு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. ஒரு வயதான முதியவர் வாய் குழறலுடன் எப்படி வாக்கியங்கள் முழுமையாக அமையாமல் பதிலளிப்பாரோ, அந்த தன்மையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். தான் கொல்லப்படவிருப்பதை நுட்பமாக உணர்ந்து கொலையாளியிடம் தன் பின்னணியைச் சொல்லும் பகுதியை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார்.



இத்திரைப்படத்தின் இன்னொரு ஆச்சரியம் குமரவேல். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட இவரை, மாறுதாலாக ஒரு கொடூரமான நபராக உபயோகித்த துணிவிற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். இந்த வாய்ப்பை குமரவேல் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். குற்றவாளிகளும் குற்றம் நிகழும் இடங்களும் எங்கோ ரகசியமான இடத்தில் நிகழ்வதாக அதுவரை தமிழ் சினிமா சித்தரித்திருந்து கொண்டிருந்த தேய்வழக்கிலிருந்து விலகி நம்முடைய பக்கத்து வீட்டு நபர்களைப் போல அவர்களைக் காட்டியிருந்தது அருமையான விஷயம்.



விதார்த்தின் நடிப்பு இதில் இயல்பாக அமைந்திருந்தது. ‘பஞ்ச்’ டயலாக் பேசாத இயல்பாக, சாமானிய நாயகர்களைப் பார்க்கவே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நாயகி டெல்னா டேவிஸ், அடுத்த வீட்டுப் பெண்ணைப் போல மிக இயல்பாக இருக்கிறார். சுவாரசியமான முகபாவங்களால் கவர்கிறார். தயாரிப்பாளர் தேனப்பனின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக அமைந்திருக்கிறது. குற்றவுலகில் ஈடுபவராக இருந்தாலும் நட்பிற்கு முக்கியத்துவம் தரும் இவரது பாத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.



இத்திரைப்படத்தின் குற்றங்கள் மிக அநாயசமாக நிகழ்கின்றன. குமரவேல் சில நபர்களைக் கொன்று விட்டு மிக சொகுசான வாழ்க்கையை சில காலத்திற்கு வாழ்கிறார். அவரைப் பழிவாங்கும் நாயகனும் எவ்வித விசாரணையும் தண்டனையையும் எதிர்கொள்வதில்லை. காவல்துறை, நீதித்துறை ஆகிய நிறுவனங்களைக் குறித்த பிரக்ஞையே இதில் இல்லை. தனிநபர் பழிவாங்கலுக்காக தண்டனை தரும் அதிகாரத்தை தாங்களே எடுத்துக் கொள்ளும் செயல் மிக இயல்பானது, நியாயமானது, பின்விளைவுகள் இல்லாதது என்பது போன்ற ஆபத்தானசித்தரிப்புகள் இதில் உள்ளன. தனது கண்காணிப்பில் பல்வேறு அபத்தங்களை நிகழ்த்தும் சென்சார், இது போன்ற அடிப்படையான, ஆபத்தான கருத்தியல் பிழைகளை அனுமதிப்பது முறையானதல்ல.



**



தமிழ் சினிமாவின் வழக்கமான கோணங்கித்தனங்களை கைவிட்டு, ஏறத்தாழ ஆங்கில திரைப்படங்களுக்கு இணையாக உருவாகிய ஹாரர் சினிமாவாக ‘அவள்’ திரைப்படத்தைச் சொல்லலாம். நேர்த்தியான ஒளிப்பதிவு, ஹாரர் திரைப்படத்திற்கு அவசியமான சிறப்பு சப்தங்கள், ஒப்பனை, போன்றவற்றோடு நேர்மையான திரைக்கதையோடு உருவாகிய நல்ல முயற்சி. ஆனால் சுவாரசியத்தனம் போதுமான அளவு இல்லாததால் ஈடுபாட்டுடன் ரசிக்க முடியவில்லை.



கோபி நயினார் இயக்கத்தில் மிக சமீபத்தில் வந்த ‘அறம்’ பொதுப்பார்வையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பாராட்டை ஒருசேரப் பெற்றிருக்கிறது. இதுவோர் ஆச்சரியமான நிகழ்வு.



ஆழ்துளைக் கிணறுக்காக போடப்படும் குழியில் ஒரு கிராமத்து சிறுமி விழுந்து விடுகிறாள். இந்த விபத்துதான் படத்தின் மையம். இதையொட்டி நீர் அரசியல், அதிகார அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இத்திரைப்படம் தீவிரமாக உரையாடுகிறது. (ஏறத்தாழ இதே உள்ளடக்கத்தில், பரதன் இயக்கத்தில் 1990 வெளியான ‘மாலூட்டி’ திரைப்படத்தையும் இங்கு நினைவுகூரலாம். ஆனால் அறம் பேசும் அரசியல் வேறு)



ஒரு மாவட்ட ஆட்சியர்தான் இதன் பிரதானமான பாத்திரம். அதுவரை பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா இந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருந்தார். இந்தியில் ஒரு வித்யாபாலன் போன்று தமிழிற்கு நயன்தாரா என்று ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.



உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டிய தவிப்பு ஒருபுறம், ஆவேசமடைந்திருக்கும் கிராம மக்களின்  கோபம் இன்னொருபுறம், பெற்றோர்களின் பதட்டம், அழுகை. இதற்கு நடுவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று மேலிட அதிகாரங்கள் தரும் இடைஞ்சல்கள், அழுத்தங்கள் என்று அனைத்தையும் சமாளித்து மாவட்ட ஆட்சியர், சிறுமியைக் காப்பாற்றினாரா என்பதை பரபரப்பும் விறுவிறுப்புமாக சொல்லியிருக்கிறார்கள்.



சாமானிய மக்களின் ஆதாரமான பிரச்சினைகளை அரசு இயந்திரமானது மாற்றாந்தாய் மனோபாவத்துடனும் அலட்சியத்துடன் அணுகுவதைப் பற்றிய அரசியலை இந்த திரைப்படம் துல்லியமான வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் பதிவு செய்கிறது.



பல கோடி ரூபாய் செலவு செய்து மண்ணிலிருந்து விண்ணில் பாயும் ராக்கெட் வசதிகள் இருக்கும் இதே தேசத்தில், அதற்கு நேர்எதிராக மண்ணுக்குள் அமிழ்ந்திருக்கும் ஓர் ஏழைச்சிறுமியின் பிரச்சினை தொடர்பான அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் முரண் படத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது.



ஓர் அரசு இயங்குவதற்கு மிக அடிப்படையான காரணியாக இருப்பவர்கள் bureaucrats எனப்படும் அதிகார வர்க்கத்தினர். மக்களால் ஜனநாயகத்தின் வழியாக தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் இவர்களின் உதவியுடன் மக்களின் அடிப்படையான விஷயங்களை நேர்மையாக கையாள வேண்டும். ஆனால் இதற்கு மாறாக அரசியல்வாதிகள் + அதிகார வர்க்க கூட்டுக் கொள்ளைதான் பெரும்பாலும் நடைபெறுகிறது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற கனவுடன் அரிதாக வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இவர்களின் மூலமாக பல இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.



சகாயம், உதயச்சந்திரன் போன்ற அரிதான, நேர்மையான மாவட்ட ஆட்சியர்களை மதிவதனியின் பாத்திரம் (நயன்தாரா) நினைவுப்படுத்துகிறது. அதிகார அரசியலை கைப்பற்றுவதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற மதிவதனி முடிவு செய்யும் காட்சியுடன் படம் நிறைவுறுகிறது.



‘அறம்’ திரைப்படத்தில் தேவையற்ற பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லை. சிறுமியின் விபத்து சம்பவத்தையொட்டியே திரைக்கதை பெரும்பாலும் நகர்கிறது. அதுதான் இத்திரைப்படத்தின் மையம். அதையொட்டி அரசின் அலட்சியம் பற்றிய பல கிண்டல்கள், விமர்சனங்கள் மிக நுட்பமாகவும் வலுவாகவும் வைக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவின் சிறந்த வரவு என்று ‘அறத்தை’ குறிப்பிடலாம்.



இறுதியாக, தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் வடிவமும் மேம்பட வேண்டிய தூரம் இன்னமும் அதிகமிருக்கிறது என்றாலும் சமீபத்திய ஆரோக்கியமான மாற்றங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இதே திசையில் பயணப்பட்டால் நீண்ட கால கனவான ‘ஆஸ்கர்’ விருதை வெல்வதற்கு கூட தமிழ் திரை காரணமாக இருக்கக்கூடும்.

(மலையாள இதழ் 'தேசாபிமானி'யின் கேரள சர்வதேச திரைவிழா சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத தமிழ் வடிவம்)

(குமுதம் தீராநதி -  ஜனவரி 2018 இதழில் பிரசுரமானது)


suresh kannan

No comments: