Tuesday, October 22, 2019

Hostages | 2017 | ஜார்ஜியா, ருஷ்யா | இயக்குநர் - Rezo Gigineishvili



அயல் திரை -1

“அவர்களுக்கு என்னதான் வேண்டும்?”


பின்தங்கிய மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலுள்ள இளம்தலைமுறையினருக்கு எப்போதுமே ஒரு தீராத கனவு இருந்து கொண்டே இருக்கும். எப்பாடுபட்டாவது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தன்னுடைய வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியாதா என்கிற ஏக்கம்தான் அது. எளிதில் கிட்டாத அந்த சொர்க்க பூமியை எட்டி அடைந்தே தீர வேண்டுமென்கிற தவிப்பு அவர்களின் உரையாடல்களிலும், திட்டமிடல்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.



அமெரிக்காவிற்கு ஒருமுறை சென்று திரும்பியிருப்பதே பெருமிதமான நிகழ்வாக எண்பதுகளில் கருதப்பட்டது. உலகமயமாக்கத்தின் விளைவாக பொருளியல் மாற்றங்கள் கணிசமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் கூட நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் கனவுப் பிரதேசங்களாக இருக்கின்றன. தங்களின் ஆசைகள் நிறைவேறாத மூத்த தலைமுறையினர் இளம் தலைமுறையினருக்கு இந்தக் கனவை சிறுவயது முதலே ஊட்டி அதற்கேற்ப திட்டமிட்டு வளர்க்கின்றனர். மூன்றாம் உலக நாடுகளில் தாம் அடைய முடியாத பல அன்றாட வசதிகளை தங்களின் வாரிசுகள் அடைய வேண்டுமென்று பெற்றோர்கள் விரும்புகின்றனர்.



பெரியவர்களின் நோக்கு இப்படி இருக்கிறதென்றால், நுகர்வுக்கலாசாரத்தின் பளபளப்பு, கட்டற்ற சுதந்திரம், பாலியல் சார்ந்த விருப்புகள், தனிநபர் ஏக்கங்கள், பொருளாதார வாய்ப்புகள் போன்றவை இளைஞர்களின் கனவாக இருக்கின்றன. அதுவொரு கானல்நீர் என்கிற தெளிவு சில சதவீதத்தினருக்கே இருக்கிறது. கலாசார இழப்பு, சொந்த அடையாளத்தை தொலைத்தல், தம்முடைய வேர்களில் இருந்து துண்டிக்கப்படுதல் போன்ற அபாயங்களை உணர்ந்தவர்கள் மிகச்சிலரே.



தாங்கள் பிறந்து வளர்ந்த தேசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகளின் தியாகம் போன்றவை செய்தியாகவோ, ஆதாரமான உணர்வாகவோ கூட பெரும்பாலான இளம் தலைமுறையினருக்கு இருப்பதில்லை. தங்களின் கலாசார வேர்களைத் துண்டித்துக் கொண்டு லெளகீக வாழ்வின் அற்பமான சுகங்களுக்காக அடையாளமில்லாத முகங்களாக வாழவும் தங்களின் நகல்களை அடையாளச் சிக்கல் சார்ந்த குழப்பங்களுடன் அங்கே உருவாக்கவும் தயாராக இருக்கிறார்கள்.



இந்த மனோநிலையைக் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்றைப் பற்றியும் தங்களின் ‘விடுதலைக்காக’, அவர்கள் எடுக்கும் ஆபத்தான முடிவைப் பற்றியும் இந்த திரைப்படம் மிக நுட்பமாக உரையாடுகிறது. உண்மைச் சம்பவத்தின் மீதான படைப்பு.



**



வருடம் 1983. சோவியத் யூனியன் பிளவுபடாதிருந்த காலக்கட்டம். அந்த இளைஞர்கள் ஜார்ஜியாவின் உயர்வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவன் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த அறியப்பட்ட நடிகன். இன்னொருவன் மருத்துவன். இப்படி ஒவ்வொருவருமே வசதியான, கண்ணியமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றவர்கள். என்றாலும் அவர்களால் உணர முடியாத விஷயம் ஒன்றிருந்தது. – அது சுதந்திரம்.



கம்யூனிசக் கதவுகளால் சோவியத் யூனியன் தன்னை இறுகச் சாத்திக் கொண்டிருந்த வரலாறு நமக்குத் தெரியும். மேற்கத்திய இசை, அமெரிக்க பிராண்ட் சிகரெட், பத்திரிகைகள் போன்றவை அங்கு தடை செய்யப்பட்டிருந்தன. அவசியமான காரணம் அல்லாது நாட்டை விட்டு எவரும் அத்தனை எளிதில் வெளியேற முடியாது. இப்படி கடுமையானதொரு கண்காணிப்பு சமூகத்தில் வாழும் அந்த இளைஞர்களுக்கு மூச்சுத் திணறுகிறது. தங்களுக்குப் பிடித்த ‘பீட்டில்ஸ்’ குழுவினரின் இசைத்தட்டை சட்டவிரோதமாகத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. தேச விரோதமாக ஒரு சொல்லையும் கூட உச்சரித்து விட முடியாது. உளவுத்துறை இவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்து விடும்.



இந்த இளைஞர்கள் (இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு) கடற்கரையில் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு குளிக்கும் காட்சியில்தான் படம் துவங்குகிறது. அங்கு இரண்டு ராணுவ வீரர்கள் வருகிறார்கள். ‘குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கடற்கரையில் எவரும் இருக்கக்கூடாது” என்கிற உத்தரவை மென்மையான கண்டிப்புடன் சொல்லி உடனே விலகச் சொல்கிறார்கள். இது தொடர்பான வழக்கும் பதிவாகிறது. அவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். “ உங்களின் பிள்ளைகள் சில  அந்நியர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்களா, கடற்கரை வழியாக தப்பிச் செல்லும் உத்தேசம் இருக்கிறதா?” என்றெல்லாம் சந்தேகக் கணைகள் எழுகின்றன. பெற்றோர்கள் சங்கடம் அடைய இளைஞர்களும் எரிச்சல் அடைகிறார்கள்.



இது போன்று எத்தனை நாள்தான் மனப்புழுக்கத்தோடு வாழ்வது, வெளிநாட்டு பிராண்ட் சிகரெட் பிடிக்கக்கூட உரிமையில்லையா? என்னய்யா தேசம் இது என்கிற சலிப்புடன் அனைவரும் கூடி ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். ஆபத்தான திட்டம்.






நிக்கா என்கிற இளைஞனுக்கு அவனுடைய காதலியான அன்னாவோடு திருமணம் நிகழவிருக்கிறது. அந்தச் சாக்கையொட்டி, திருமணக் குழுவின் பாவனையில் அதற்கு மறுநாள் லெனின்கிராட் செல்லும் விமானத்தில் ஏறுவது. விமானம் கிளம்பியவுடன் பைலட்டை துப்பாக்கி முனையில் மிரட்டி துருக்கிக்கு ஓட்டச் செல்வது. பின்பு அங்கிருந்து தப்பி.. அமெரிக்கா.. தங்களின் கனவு தேசம். விருப்பம் போல புகையை, இசையை நுகர்ந்து மகிழலாம். கேள்வி கேட்க எவருமில்லை.



துப்பாக்கிச் சனியன்களையும் கிரானைட் குண்டுகளையும் சேகரித்து அவர்கள் அந்தச் சதிக்கு மெல்ல மெல்ல தயாராகும் காட்சிகளுடன் படம் நகர்கிறது. இதுவே ஹாலிவுட் திரைப்படமாக இருந்தால் அதற்கேற்ப பரபரப்புடனும் சாகசங்களுடன் காட்சிகள் உருவாகியிருக்கக்கூடும். ஐரோப்பிய திரைப்படங்களுக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் அடிப்படையிலேயே உள்ள வித்தியாசம் இதுதான். அந்த இளைஞர்களுக்கு போன்ற வன்முறை சாகசங்களில் முன்அனுபவம் இல்லை என்பது அவர்களின் மனநடுக்கங்களின் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இளமையின் வீறாப்புடன் தைரியமாக இருப்பது போல் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருமே உள்ளுற அச்சத்தின் பிடியில் இருக்கிறார்கள். தங்களின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுமா என்கிற ரகசிய சந்தேகம் ஒவ்வொருக்கும் உண்டு.



**



விமானத்தைக் கடத்த வேண்டிய முகூர்த்த நாள் நெருங்குகிறது. இரு குழுவாக பிரிந்து விமானநிலையத்தை அடைகிறார்கள். ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கும் ஒருத்தி இவர்களுக்கு உதவுவாள். இவர்களின் சதி பற்றி எதுவும் அறியாத அவள், தன்னுடைய பணியை பிறகு இழக்கப் போகிறாள் என்பது, பாவம் அவளுக்குத் தெரியாது. இவர்களின் குழு மட்டும் அமரப் போகும் சிறிய விமானத்தை எதிர்பார்த்திருக்கும் இவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் வேறு பெரிய விமானம் வருகிறது. அதில் இவர்களோடு இதர பயணிகளும் இருப்பார்கள். தங்களின் அதிர்ச்சியை மறைத்துக் கொள்ளும் இளைஞர்கள், ‘ஆனது ஆகட்டும்’ என்று விமானத்தில் ஏறுகிறார்கள்.



விமானத்தின் இந்த உட்புறக் காட்சிகள் மிகத் திறமையாக பதிவாக்கப்பட்டுள்ளன. சிக்கலான வானிலை காரணமாக விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பத் துவங்குகிறது. தங்களின் திட்டம் ஒருவேளை அரசாங்கத்திற்கு தெரிந்து விட்டதோ என்று பதட்டமடைகிறார்கள். “ஆரம்பிக்கலாமா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு அச்சத்தின் காரணமாக தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அவர்கள் சட்டென்று தீர்மானித்து விமானத்தில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியைத் தாக்குகிறார்கள். பிறகு பைலட்டின் அறைக்குள் வலுக்கட்டாயமாக புகுந்து கண்மூடித்தனமாக அவரைச் சுடத் துவங்குகிறார்கள்.



ஆனால் இவர்கள் எதிர்பாராதவிதமாக அங்கிருக்கும் இன்னொரு அதிகாரி இவர்களை நோக்கி பதிலுக்கு சுடத் துவங்க முறையான ஆயுதப்பயிற்சி இல்லாத இவர்கள் தரப்பில் கடுமையான சேதம் ஏற்படுகிறது. தங்களின் அறையை தாளிட்டுக் கொள்ளும் பைலட்டுகள், நிலையத்திற்கு எச்சரிக்கை அறிவிப்பை தந்து விட்டு பதட்டத்துடன் விமானத்தை கிளம்பிய இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்தக் களேபரத்தில் விமான பணிப்பெண் உள்ளிட்டு சில அப்பாவி பயணிகளின் உயிரும் இணைந்து பறிபோகிறது.



இளைஞர் குழுவில் காயமடைந்தவர்கள் ஒருபுறம் துடித்துக் கொண்டிருக்க, இதர சதிகாரர்கள் என்ன செய்வது என்று பதட்டமும் பயமுமாய் அமர்ந்திருக்கிறார்கள். தங்களின் அரசு தரப்போகும் தண்டனை மீதான அச்சம் ஒருபுறம், பெற்றோர்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடம் இன்னொருபுறம் என்கிற தவிப்பு அவர்களை ஆட்கொள்கிறது. “என்னைக் கொன்று விடு” என்று படுகாயமடைந்த இளைஞன், இன்னொருவனை வேண்டுகிறான். ‘எவராவது பைபிளை படியுங்கள்” என்றொரு இளைஞன் பயணிகளை மிரட்டுகிறான். இனியும் தப்பிக்க முடியாது என்பதை உணரும் ஒருவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சாகிறான்.



விமானம் நிலையத்தை அடைந்ததும் அதைச் சுற்றிலும் ராணுவ வீரர்கள் வந்து நிற்கிறார்கள். ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பும் ஒரு அதிகாரி, ‘உள்ளே இருப்பவர்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள்’ என்று ராணுவத்திற்கு தகவல் தருகிறார். எனவே தாக்குதலை உடனே நடத்தாமல் தாமதிக்கிறார்கள். அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளின் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபடுகிறது. பையன்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் மூலமாக அவர்களை வெளியே வரச்சொல்லலாம் என்று முயன்று பார்க்கிறார்கள். திருமண விழாவின் களை இன்னமும் கலையாத நிக்காவின் வீட்டை போலீஸ் வளைக்கிறது. அவனது தாயார் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ‘என்னவாயிற்று?” என்கிற அவரின் பதட்டத்திற்கு எவரும் விடை அளிப்பதில்லை.



ஆனால் ஒரு கட்டத்தில் ‘இந்த வேண்டுகோள்கள் சரிவராது’ என்கிற முடிவை எட்டுகிறார்கள். ராணுவம் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்கிறது. இளைஞர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி சரணடைகிறார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்பும் இருப்பதில்லை.



மணப்பெண்ணான அன்னாவிற்கு பதினைந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கிறது. மூவருக்கு மரண தண்டனை. துர்உபதேசம் மூலம் இவர்களை கெட்ட வழியில் தள்ளியதாக சந்தேகப்படும் ஒரு மதகுருவிற்கும் தண்டனை.



பல வருட தண்டனைக்குப் பிறகு அன்னா சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். நிக்காவின் தாயைச் சந்தித்து விடைபெறும் அவள், துயரமும் குழப்பமும் கலந்த உணர்வோடு விமானத்தில் பயணிக்கும் காட்சியோடு படம் நிறைகிறது.



**



விமானக்கடத்தலையொட்டிய திரைப்படம்தான் என்றாலும் படத்தில் இது குறித்து செயற்கையான பரபரப்போ, பாவனைகளோ இல்லை. ஐரோப்பிய திரைப்படங்களின் பலமே இதுதான். உண்மைச் சம்பவத்தின் மீதான உருவாக்கம் என்பதால் அது சார்ந்த கவனத்துடனும் நம்பகத்தன்மையுடனும் காட்சிகள் நிதானமாக நகர்கின்றன. அவர்களின் சதித்திட்டம் பார்வையாளர்களுக்கு மிக இயல்பாக மெல்லத்தான் அம்பலப்படுத்தப்படுகிறது.



நிக்காவின் திருமணம் தொடர்பான காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு நிகழும் குதூலகத்தின் இடையே இளைஞர்களின் குழுவின் உள்ளே உறைந்திருக்கும் அச்சமானது உறைந்த பனி போல அந்த இடத்தைச் சூழ்ந்திருக்கிறது. மணப்பெண்ணான அன்னா, விருந்தாளி ஒருவர் தன்னை முறைத்துப் பார்ப்பதாக பொய்க் குற்றம் சாட்டுகிறாள். திருமணக்கூடத்தை விட்டு கோபத்துடன் வெளியேறும் அவள், சாலையில் தென்படும் காவல்துறையினரைப் பார்த்ததும் ஒருகணம் தயங்கி பிறகு சுதாரித்துக் கொள்கிறாள். நிக்கா அவசரம் அவசரமாக வந்து அழைத்துச் செல்கிறான்.



மிகச் சொற்பமான காட்சிகளிலேயே நிக்காவிற்கும் அவனது தாயாருக்கும் இடையிலான அன்பும் நேசமும் துல்லியமாக நிறுவப்பட்டு விடுகிறது. தன் தந்தையுடன் நிக்கா உரையாடும் காட்சி மிக முக்கியமானது. கண்காணிப்பு சமூகத்தில் வாழும் மனப்புழுக்கம் அவனது தந்தைக்கும் இருக்கிறது. அது குறித்து தன் மகனிடம் மறைமுகமாக அவ்வப்போது பேசி வந்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனால் அரசாங்கத்தின் மீதான தன்னிச்சையான விசுவாசமும் அச்சமும் காரணமாக அதை மறைத்து வந்திருக்கிறார்.



‘ஒருவேளை இந்த தேசத்திலிருந்து நாங்கள் தப்பிக்க நினைத்தால் நீங்களும் எங்களோடு இணைவீர்களா?” என்று பாவனையாக கேட்கிறான் நிக்கா. இவனைச் சந்தேகமாக பார்க்கும் அவர் ‘என்ன விளையாடுகிறாயா, அது எளிதான விஷயமா?” என்று கடுகடுக்கிறார். நிக்காவிற்கு மரணதண்டனை அளிக்கப்படும் போது இவர் நீதிமன்றத்தில் சங்கடமும் துக்கமுமாக அமர்ந்திருக்கும் காட்சி உருக்கமானது.



விமானத்தை கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்திருக்கும் இளைஞர்களிடம் அவர்களின் பெற்றோர்களின் வழியாக விடப்படும் வேண்டுகோள் அறிக்கையை அரசு அதிகாரிகள் தயாரிக்கிறார்கள். அதைப் பார்க்கும் நிக்காவின் தாய், ‘இது இல்லாமல் எனது சொந்த வார்த்தைகளில் பேசலாமா?” என்கிறார். “சொந்த வார்த்தைகளின் மூலம் உங்களின் மகனை வளர்த்திருக்கும் லட்சணம்தான் தெரிகிறதே” என்று ஆத்திரப்படுகிறார் காவல்அதிகாரி. தனது பிள்ளையின் தவறுக்காக நிக்காவின் தாய் தலைகுனியும் காட்சி பெற்றவர்களின் கையறு நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது.



மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்கிற விவரத்தைக் கூட அரசாங்கம் தருவதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு நிக்காவின் உடலைத் தேடி அவனது பெற்றோர் செல்லும் காட்சி உருக்கமானது. ஏதோவொரு உடல் தோண்டப்படும் போது விலகியிருந்த நிக்காவின் தாய், பதட்டத்துடன் நெருங்கி வரும் போது, ‘அது அவனுடைய உடல் அல்ல’ என்று தந்தை கூறுவது இன்னமும் கொடுமையானது.



**



அந்த இளைஞர் குழுவின் மனோபாவம் எந்தக்காலக்கட்டத்து இளைய தலைமுறைக்கும் படிந்திருப்பதை இறுதிக்காட்சி வெளிப்படுத்துகிறது. “அவர்களுக்கு என்னதான் வேண்டும்?. இங்கேயே எல்லா வசதிகளும் இருக்கின்றன. பின்பு வேறெங்கோ எதைத் தேடி அலைகிறார்கள்?” என்று ஒரு தந்தை, தன் நண்பரிடம் வெடிக்கும் காட்சியை இத்திரைப்படத்தின் மையமாக எடுத்துக் கொள்ளலாம். அவரது மகனும் அதே விதமான மனப்புழுக்கத்தில் இருக்கிறான். தந்தையுடன் கோபமாக விவாதிக்கிறான். “மேற்கில் என்ன சொர்க்கமா இருக்கிறது?” என்று பதிலுக்கு ஆத்திரப்படும் அவர், மகனை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டுச் செல்கிறார்.



கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சமூகத்தில் வாழும் இளைய தலைமுறை, மேற்குலகைப் பார்த்து பெருமூச்சு விடும் மனோபாவத்தை இத்திரைப்படம் மிகச்சிற்ப்பாக பதிவாக்கியிருக்கிறது. தங்களின் சொந்த தேசங்களுக்காக குறைந்தபட்ச தியாகத்தையும் செய்யத் துணியாத இளைஞர்களை இடித்துரைக்கிறது. அதே சமயத்தில் கண்காணிப்பு சமூகத்தில் வாழ்பவர்களின் அகப்புழுக்கத்தையும் நுட்பமாக பதிவாக்கியுள்ளது.



இளம் இயக்குநரான Rezo Gigineishvili இயக்கியுள்ள இந்த திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. நிக்காவாக நடித்த Irakli Kvirikadze முதற்கொண்டு அனைத்து நடிகர்களுமே தங்களின் மிக இயல்பான பங்களிப்பை தந்துள்ளனர். எந்தவொரு இடத்திலுமே ஒரு ‘சினிமா’வைப் பார்க்கும் உணர்வே வருவதில்லை. Giya Kancheli-ன் பின்னணி இசை மிக அவசியமான இடங்களில் ஒலித்து படத்திற்கு துணைபுரிந்திருக்கிறது.



‘Aeroflot Flight 6833’ என்று அழைக்கப்படும், 1983-ல் நிகழ்ந்த உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இளம் தலைமுறையினருக்கு ஆதாரமான சில விஷயங்களை நுட்பமாகச் சொல்லியுள்ளது. கவனிக்கத்தக்க திரைப்படம். 

(குமுதம் தீராநதி -  பிப்ரவரி 2018 இதழில் பிரசுரமானது)  


suresh kannan

No comments: