Monday, October 28, 2019

A Fantastic Woman | 2017 | Chile | இயக்குநர் - Sebastián Lelio



அயல் திரை  - 4

“ஆண் கூட்டில் சிறைப்பட்டிருக்கும் பெண்மை”


தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் கூட LGBT சமூகத்தைப் பற்றிய பொதுப்புத்தியின் புரிதல்களிலும் பார்வைகளிலும் கணிசமான மாற்றம் ஏற்படவில்லை. இந்த துரதிர்ஷ்டமான நிலைமையைப் பதிவு செய்திருக்கும் ஸ்பானிய மொழித் திரைப்படம் இது. மேற்கத்திய நாடுகளில் கூட இது சார்ந்த தவறான கற்பிதங்கள், முன்தீர்மான வெறுப்புகள் நிலவுகிற போது இந்தியா போன்ற நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. தங்கள் சமூகத்தினர் குறித்து பொதுப்பார்வையில் உருவாக வேண்டிய மாற்றங்கள், தாங்க அடைய வேண்டிய அங்கீகாரங்கள் போன்றவைகளைப் பற்றி அவர்களேதான் போராட வேண்டியிருக்கிறது.

ஒரு சராசரி நபர், LGBT சமூகத்தினரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்ததால் அவர்களின் உறவு இயற்கைக்கு முரணானது; அவ்வுறவு காமத்தை மட்டுமே மையமாக கொண்டது; தடை செய்யப்பட வேண்டியது; அருவருக்கத்தக்கது என்பது போன்று பல தவறான அபிப்ராயங்கள் உள்ளன. இயற்கை சுழற்சிக்கு அடிப்படையாக இருக்கும் ஆண்-பெண் சார்ந்த உறவு மட்டுமே சரியானது என்றும் இதர பாலின உறவுகள் எல்லாம் முறையற்றவை என்கிற எண்ணங்களும் உலவுகின்றன.

ஒரு சராசரியான ஆண்-பெண் உறவில் உள்ள அத்தனை இன்ப துன்பங்களும் மாற்றுப்பாலின உறவுகளிலும் உள்ளன என்பது பொதுச்சமூகத்தால் அறியப்பட வேண்டும். அது காமத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. அந்த உறவுகளிலும் காதல், அன்பு. பாசம், பிரிவு, ஏக்கம் என்று அனைத்து விதமான உணர்வுகளும் உள்ளன. ஆண் – பெண் உறவைப் போலவே அவைகளும் மதிக்கப்படவும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். அவையும் இயற்கை சார்ந்தவையே என்பது பொதுச் சமூகத்தால் உணரப்பட வேண்டும்.

Blue Is the Warmest Colour என்கிற பிரெஞ்சு திரைப்படம் 2013-ல் வெளியானது. அடெல் என்கிற இளம்பெண்ணுக்கு எம்மா என்கிற மூத்த மாணவியின் மீது தன்னிச்சையான ஈர்ப்பு உருவாகிறது. ஆண் நண்பருடனான சிநேகம் அவளுக்கு ருசிப்பதில்லை. எம்மாவின் மீதுதான் காதல். இருவரும் நட்பாகிறார்கள். மனமொத்த தம்பதியினரைப் போல இணைந்து வாழ்கிறார்கள். வழக்கமான திருமண உறவுகளில் நேர்வதைப் போல இதிலும் ஊடலும் சர்ச்சையும் நேர்கிறது. இருவரும் பிரிகிறார்கள். அடெலினால் இந்த பிரிவைத் தாங்க முடிவதில்லை. எம்மாவை நினைத்து உருகிக் கொண்டேயிருக்கிறார். 

இது வழக்கமான காதல் திரைப்படங்களின் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். என்னவொன்று இரு பெண்களுக்கு இடையேயான காதலை அடிப்படையாகக் கொண்டது. காதல் காவியக் கதைகளை உருகி உருகி வாசிக்கும் ஒரு சராசரி நபர்  இந்தக் காதலையும் அதே உருக்கத்துடன் பார்ப்பாரா என்பது சந்தேகம்தான். அவருடைய நோக்கில் இது இயற்கைக்கு மாறான உறவு என்கிற எண்ணம் இருப்பதால் அருவருப்புடன்தான் நோக்குவதற்கான சாத்தியம் அதிகம். ஒரு சராசரி காதலில் ஏற்படக்கூடிய அத்தனை ஏக்கங்களும் சோகங்களும் கண்ணீரும் தற்பால் ஈர்ப்பில் உருவாகும் காதலிலும் இருக்கும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது, Blue Is the Warmest Colour.




 
A Fantastic Woman என்கிற இந்த ஸ்பானிய மொழித் திரைப்படமும் இந்த வகையைச் சார்ந்ததே. வயது முதிர்ந்த ஓர் ஆணுக்கும் ஒரு திருநங்கைக்கும் ஏற்படும் உறவில் நிகழும் சிக்கல்களையும் சமூகத்தின் பார்வைகளையும் மிக இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறது. ‘சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்’ என்கிற பிரிவில் 2017-க்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல சிறந்த விருதுகளைப் பெற்ற திரைப்படம் இது.

சிலி தேசத்தின் சான்டியாகோ நகரில் வசிக்கும் மரினா ஒரு திருநங்கை. ஓர் உணவகத்தில் பரிசாரகராக பணிபுரியும் மரினா, பாடகியும் கூட. தன்னுடைய பாலின மாற்றத்தை சட்ட ஆவணங்களில் பதிவு செய்து அந்த அங்கீகாரத்திற்காக காத்திருப்பவள். ஓர்லாண்டோ என்கிற அறுபத்தைந்து வயது நபருடன் மரினாவிற்கு காதலும் உறவும் உண்டாகிறது. ஆடை நிறுவனத்தின் உரிமையாளரான ஓர்லாண்டோ விவாகரத்தானவர். மரினாவின் பிறந்த நாளுக்காக ஓர்லாண்டோ விருந்து உபசரிப்பு தரும் நிகழ்வுடன் இந்த திரைப்படம் துவங்குகிறது. அடுத்த சில நாட்களில், ஒரு பிரபல சுற்றுலா மையத்திற்கு செல்வதற்காக முன்பதிவு செய்வு செய்திருக்கும் தகவலையும் ஓர்லாண்டே கூறுகிறார். மரினா மகிழ்கிறாள். வழக்கம் போல் ஓர்லாண்டோவின் வீட்டில் அவர்கள் இரவைக் கழிக்கிறார்கள்.

நள்ளிரவில் ஓர்லாண்டோ உடல் சார்ந்த அசெளகரியத்தை உணர்கிறார். பதறிப் போகும் மரினா அவரை கைத்தாங்கலாக கொண்டு வந்து குடியிருப்பின் வாசலில் நிறுத்தி வீட்டைப் பூட்டி விட்டு வருவதற்குள் படிக்கட்டுகளில் சரிந்து வீழ்கிறார் ஓர்லாண்டோ. இதனால் அவருடைய தலையிலும் உடல் பாகங்களிலும் சிறு காயங்கள் ஏற்படுகின்றன. அவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறாள் மரினா. ஓர்லாண்டோவின் குடும்பத்தினருக்கும் தகவல் தருகிறாள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மரினா தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓர்லாண்டோவின் உடலில் இருக்கும் காயங்களால் சந்தேகம் அடையும் மருத்துவர், காவல்துறைக்கு தகவல் தந்து விடுகிறார். தனக்கு ஏதோ சிக்கல் நேரப் போகிறது என்பதை உள்ளுணர்வால் உணரும் மரினா, ஓர்லாண்டோவை மருத்துவமனையில் சேர்த்து விட்ட ஆறுதலுடன் அங்கிருந்து விரையும் போது காவல்துறை வழிமறித்து விசாரணை செய்கிறது. மறுபடியும் மருத்துவனைக்கு அழைத்து வருகிறார்கள்.

ஓர்லாண்டோவின் வாழ்வில் ஒரு திருநங்கை இருப்பதை வெளியுலகம் அறியக்கூடாது என கருதும் அவரது சகோதரர், காவல்துறையிடனரிடமிருந்து மரினாவை விடுவித்து அனுப்புகிறார். என்றாலும் ஓர்லாண்டோவின் குடும்பத்தினர் வழியாக பல அவமதிப்புகளையும் சட்டச்சிக்கல்களையும் மரினா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஓர்லாண்டோவின் மகன் இவளை பல நுட்பமான வழிகளில் அவமானப்படுத்துகிறான். குடுபத்தினர் தரும் அழுத்தத்தால் காவல்துறையைச் சேர்ந்த பெண்ணொருத்தி விசாரணை என்கிற பெயரில் மரினாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறாள்.  மரினா தங்கியிருக்கும் வீடு, கார் உட்பட ஓர்லாண்டோவின் அனைத்து உடமைகளையும் பறித்துக் கொள்கிறார்கள். அவற்றைத் திருப்பித் தருவதில் மரினாவிற்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

அனைத்து விதமான அவமதிப்புகளையும் சகித்துக் கொள்ளும் மரினா, ஓர்லாண்டோவின் குடும்பத்தினரிடம் விடுக்கும் ஒரே வேண்டுகோள், ‘ஓர்லாண்டோவின் இறுதிச் சடங்களில் பங்கேற்க வேண்டும்’ என்பதே. ஆனால் ஓர்லாண்டோவின் முன்னாள் மனைவியிடமிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு வருகிறது. “எக்காரணத்தைக் கொண்டும் அங்கு வந்து நின்று எங்களை அவமதிக்காதே” என்று சீறுகிறாள். மரினாவால் இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் இருக்க முடியவில்லை. ஓர்லாண்டோ மீது அவள் வைத்திருக்கும் அன்பு அத்தகையது. எதிர்ப்புகளை மீறி இறுதிச் சடங்கிற்குச் சென்று அவமானத்தை எதிர்கொள்கிறாள். ஓர்லாண்டோவின் மகனும் அவனது நண்பனும் இணைந்து மரினாவின் மீது உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்தி எச்சரிக்கிறார்கள்.

பல அவமதிப்புகளை சகித்துக் கொள்ளும் மரினா, ஒரு கட்டத்தில் கொதித்தெழுகிறாள். ஓர்லாண்டோ தனக்குப் பரிசாக அளித்த வளர்ப்பு நாயை திருப்பித்தர வேண்டும் என்று போராடுகிறாள். அதனுடன் தனிமையான வீட்டில் வசிக்கும் மரினா, தன்னுடைய பாடகி வாழ்க்கைக்கு திரும்புவதோடு இத்திரைப்படம் நிறைகிறது.

**

விவாகரத்தான ஓர் ஆணின் இரண்டாவது திருமணத்தை சட்டம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் ஒப்புக் கொள்கின்றன; ஏற்றுக் கொள்கின்றன. ஒரு மனைவிக்கான அங்கீகாரமும் உரிமைகளும் அவளுக்கு வழங்கப்படுகின்றன. மரினாவின் வாழ்க்கையில் நிகழ்வதும் அதுதான். ஆனால் அவள் ஒரு திருநங்கை என்கிற ஒரே காரணத்திற்காக அத்தனை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் கூடுதலாக பல அவமதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரு மனிதருக்கு அடிப்படையாக தரப்பட வேண்டிய மரியாதை கூட அவளுக்கு காட்டப்படுவதில்லை.

மரினா என்கிற திருநங்கையின் பாத்திரத்தில் டேனியலா வேகா மிக அற்புதமாக நடித்துள்ளார். உண்மையிலேயே இவர் ஒரு திருநங்கை என்பதால் தன் பாத்திரத்தின் உணர்வுகளை கச்சிதமாகவும் ஆத்மார்த்தமாகவும் வெளிப்படுத்த முடிந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவரது அபாரமான நடிப்பிற்காக பல பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றார். ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே, திருநங்கை என்று தம்மை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஒருவர் மேடையேறுவது டேனியலா வேகாவின் மூலமாகத்தான் நிகழ்ந்தது. அவரின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் அது சார்ந்த தூண்டுதல்களும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தன்னுடைய பாலின அடையாளத்தை பதிவு செய்ய மரினா முயற்சிக்கும் போராட்டம்தான் இத்திரைப்படத்தின் மையம். தம்மைச் சாய்க்க நினைக்கும் புயல் காற்றில் மரினா தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு காட்சி இதைச் சரியாக உணர்த்துகிறது. ஏறத்தாழ படம் முழுவதும் இறுக்கமான முகத்துடனே மரினா தோன்றுகிறார். பாலினச் சிறுபான்மையோர் சமூகத்தால் எதிர்கொள்ளும் பல்விதமான சிக்கல்களையும் அவமதிப்புகளையும் மரினாவின் இறுக்கமான முகம் நமக்கு உணர்த்துகிறது. காற்றில் கைகளை வீசி குத்துவதின் மூலம் கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்தும் தற்காலிக ஆசுவாசத்தை மரினா அவ்வப்போது அடைகிறாள். விசாரணை என்கிற காவல்துறை நிகழ்த்தும் அவமதிப்புகளும் மனிதஉரிமை மீறல்களும், உலகெங்கும் பாலினச் சிறுபான்மையோர் எதிர்கொள்ளும் சிறுமைகளுக்குச் சாட்சியமாக நிற்கின்றன.

ஓர்லாண்டாவிற்கும் மரினாவிற்கும் இடையிலான உறவும் காதலும் மிக கண்ணியமாகவும் ஆத்மார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஓர்லாண்டே மறைவிற்குப் பின்னரும் அவர் தோன்றும் மாயக்காட்சிகள் மரினாவிற்குத் தோன்றுகின்றன. ஓர்லாண்டேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மரினா செல்லும் காட்சியில் அவர் உயிருடன் தோன்றி மரினாவிற்கு முத்தமிடும் காட்சி நெகிழ்வுபூர்வமானதாக உள்ளது. சம்பிரதாயத்திற்காக குடும்பத்தினர் செய்யும் அஞ்சலியை விடவும் மரினாவின் அஞ்சலி உண்மையானதாக இருக்கிறது. தன் காதலரை மரினாவால் மறக்க முடியவில்லை என்பதை பல காட்சிகள் உணர்த்துகின்றன. இந்தக் காதலில் உள்ள உண்மையை சமூகம் உணர்வதற்கு தடையாக இருப்பது மரினாவின் பாலின அடையாளமே. பாலினச் சிறுபான்மையோர் மீதுள்ள முன்தீர்மான வெறுப்புகளும் கற்பிதங்களும் இந்தக் காதலின் புனிதத்தை உணர்ந்து கொள்ள தடையாக நிற்கின்றன.

படத்தின் துவக்க காட்சியில் ஓர் இசை மேடையில் மரினா பாடுவாள். ‘உனது காதல் நேற்றைய செய்தித்தாளைப் போல. யார் அதை வாசிக்க விரும்புவார்? இறுதியில் அது குப்பைக்குத்தான் போகும்’ என்பது போன்ற வரிகள் மரினாவின் காதலை துல்லியமாக அடையாளப்படுத்துகின்றன. பொங்கி வழியும் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகியலை அபாரமாக பதிவு செய்திருக்கும் துவக்க காட்சி முதற்கொண்டு ஒளிப்பதிவின் உன்னதம் படமெங்கும் தென்படுகிறது. காட்சியின் பின்புலத்திற்கு நெருக்கமான. அளவான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் மாத்யூ ஹெர்பெர்ட்.

ஓர்லாண்டே வைத்திருந்த ஒரு சாவியின் ரகசியம் மரினாவிற்கு பிடிபடுவதில்லை. ஒரு கட்டத்தில் அதன் உபயோகத்தை அறிந்து நாடிச் செல்கிறாள். சுற்றுலாவிற்கான பயணச்சீட்டோ என்கிற யூகம் நமக்குள் தோன்றுகிறது. ஆனால் மரினாவின் காதலைப் போலவே அந்த ரகசிய அறையும் வெறுமையாகக் காட்சியளிக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு ‘இயற்கைக்கு மாறான உடலுறவை’ தண்டனைக்குரிய குற்றமாகச் சொல்கிறது. பாலினச் சிறுபான்மையினரின் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இது சார்ந்த சட்டத்திருத்தங்களைப் பற்றி நீதித்துறை பரிசீலிக்கத் துவங்கியிருக்கிறது. சில விதிவிலக்குகளைத் தாண்டி ஏறத்தாழ உலகமெங்கிலும் இதே நிலைமைதான். சட்டரீதியான மாற்றங்களைத் தாண்டி, பொது சமூகத்தின் மனங்களிலும் இந்த மாற்றம் உருவாக வேண்டும் என்கிற செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த திரைப்படம். Call Me by Your Name என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு திரைப்படமும் இந்த வகைமையைச் சேர்ந்ததே. இரு ஆண்களுக்குள் உருவாகும் காதலையும் பிரிவுத் துயரத்தையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் திரைப்படம் அது.

மாற்றுப் பாலினத்தவர்களின் மனச்சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் உரையாடும் இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். 

(குமுதம் தீராநதி -  ஜூன் 2018 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

No comments: