Wednesday, October 30, 2019

Beyond the Clouds | 2017 | India | இயக்குநர் - Majid Majidiஅயல் திரை  - 6


மேகங்களுக்குப் பின்னே ஒரு முழு நிலவு

மஜித் மஜிதி – உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர். இரானிய சினிமாவின் புகழ் மற்றும் பெருமையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் ஒருவர். அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள பாசத்தை இயல்பான திரைமொழியில் சித்தரித்த ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்கிற எளிமையான சினிமாவின் மூலம் உலகத்தின் சராசரி ரசிகனையும் சென்றடைந்தவர். தற்போது ‘Beyond the Clouds’ என்கிற இந்தி சினிமாவின் மூலம் இந்தியத் திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

கவித்துவமான காட்சிகளால் ‘சில்ரன் ஆஃப் ஹெவனில்’ சித்தரிக்கப்பட்ட அதே போன்றதொரு சகோதர அன்பு ‘இருண்மையான பின்னணியின்” வழியாக ‘‘Beyond the Clouds’–ல்  பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அல்லாடும் ஒரு சராசரி மனிதனின் அறவுணர்வையும் அதன் தத்தளிப்பையும் இத்திரைப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது. அடித்தட்டிற்கே உண்டான அனைத்து சிக்கல்களுடன் விளிம்பு நிலையில் வாழ்ந்தாலும் ஆதாரமான விழுமியங்களை கைவிடாத மனிதர்கள் இதில் உலா வருகிறார்கள். கடுமையான சூழல்களுக்கு இடையேயும் தங்களிடம் எஞ்சியிருக்கும் அன்பெனும் விளக்கு கொண்டு இருளை பிரகாசமாக்கி விடும் மனிதர்களின் அறம் மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தில் வலியுறுத்தப்படுகிறது.

நவீன மும்பையின் பரபரப்பான சாலை மற்றும் செல்போன் விளம்பரப் பலகையை  முதலில் காட்டும் காமிரா, அப்படியே கீழிறங்கி சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்களை சித்தரிக்கும் துவக்க காட்சியிலேயே படத்தின் தன்மை பார்வையாளர்களுக்கு துல்லியமாக உணர்த்தப்பட்டு விடுகிறது. தாராவி இளைஞர்களின் இருட்டு உலகமும் நிழலான காரியங்களும் இயல்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

**

மும்பையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞனான அமீர், போதைப் பொருட்களை விநியோகிக்கும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். சற்று பணம் ஈட்டி தனது அக்காளான தாராவுடன் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பது அவனுடைய கனவு. அமீரின் சிறுவயதிலேயே அவனுடைய பெற்றோர்கள் விபத்தில் இறந்து விட்டனர். அக்காள் கணவனின் அடி, உதையை தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி விடுகிறான் என்கிற பின்னணியை அவன் மூலமாக பின்னர் அறிந்து கொள்கிறோம்.

கொடுமை தாங்காமல் கணவனை விட்டுப் பிரியும் தாரா, சாலையோரங்களில் வசித்து துன்புறுகிறாள். பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள். போதை மருந்துடன் அமீர் ஒருமுறை காவல்துறையிடம் பிடிபட இருக்கும் போது அக்ஸி என்கிற நடுத்தர வயது ஆசாமி அமீரைக் காப்பாற்றுகிறான். சிறிது இடைவெளிக்குப் பிறகு அப்போதுதான் தன் சகோதரியைச் சந்திக்கிறான் அமீர். விரிசல் விழுந்த உறவு மறுபடியும் இணையத்துவங்கும் போது அக்ஸியின் வழியாக ஆபத்து வருகிறது.

அக்ஸிக்கு தாராவை அடைய வேண்டும் என்கிற எண்ணமுண்டு. ஆனால் தாரா இதை மெளனமாக எதிர்க்கிறாள். ஒரு கட்டத்தில் தாராவை பலவந்தம் செய்யத் துணிகிறான் அக்ஸி. இதில் ஏற்படும் தகராறில் தற்காப்பிற்காக அக்ஸியை தாக்க அவன் உயிர் போகும் ஆபத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். காவல்துறை தாராவை கைது செய்கிறது. அக்ஸியின் உயிர் போனால் தாரா ஆயுள் தண்டனையை அடைய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தன் அக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக வேறு வழியின்றி அக்ஸியின் மருத்துவ ஏற்பாட்டை கவனித்துக் கொள்கிறான் அமீர்.

அக்ஸியைத் தேடி அவனுடைய குடும்பம் மும்பைக்கு வருகிறது. அவர்களுக்கும் அடைக்கலம் தருகிறான் அமீர். சிறையில் இருக்கும் தாரா, சோட்டு என்கிற சிறுவனிடம் அன்பு செலுத்துகிறாள்.

நல்லிதயம் வாய்த்த மனிதர்களை துயரத்தின் ஆழத்திற்குள் தள்ளினாலும் அவர்களுக்குள் ஆதாரமாக இயங்கும் மனிதம் காரணமாக அவர்கள் அன்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற செய்தியை பல காட்சிகளின் மூலமாக இத்திரைப்படம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.

தன்னுடைய அக்காள் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த அக்ஸியின் மீதுள்ள கோபத்தில் குடும்பத்தை முதலில் துரத்துகிறான் அமீர். ஆனால், அக்ஸியின் வயதான தாய், இரண்டு மகள்கள் கொண்ட அந்தக் குடும்பம் இடி, மழையில் சாலையோரத்தில் ஒதுங்கியிருப்பதைக் கண்டு அமீரால் தூங்க முடிவதில்லை. மனச்சாட்சியின் உறுத்தலை சகிக்க முடியாமல் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் தருகிறான்.

அக்காளின் ஜாமீன் செலவிற்காக, அக்ஸியின் மகளை பாலியல் சந்தையில் விற்று விட முடிவு செய்கிறான் அமீர். ஒரு திரில்லர் படத்தை விடவும் பதைபதைப்பை ஏற்படுத்துகிற காட்சிக்கோர்வை இது. இளம் சிறுமிக்கேயுரிய களங்கமில்லாத முகத்துடன் அமீரைப் பின்தொடர்ந்து செல்கிறாள் தனிஷா. ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுடைய அறவுணர்வு விழித்துக் கொள்கிறது. குண்டர்களிடம் செம்மையாக அடிவாங்குகிறான். அமீரைக் காட்டிக் கொடுத்த உயிர் நண்பன்,  அமீர் ரத்தக்காயத்துடன் தொடர்ந்து அடிவாங்குவதை காணச் சகிக்க முடியாமல் அவனைக் காப்பாற்றச் சென்று தானும் அடிவாங்குகிறான். மறுபடியும் அதேதான். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அல்லாடும் சராசரிகளின் மனங்களை இந்த திரைப்படம் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது.


சிறையிலேயே தான் செத்துப் போய் விடுவோமோ என அஞ்சுகிற தாராவின் இருளான உலகம், அங்குள்ள சோட்டு என்கிற சிறுவனின் மூலமாக பிரகாசம் கொள்கிறது. கொடுமைப்படுத்திய குடிகாரக் கணவனைக் கொன்று விட்டு சிறைக்கு வந்திருக்கிறாள் சோட்டுவின் தாய். உடல்நலம் குன்றி அவள் மருத்துவமனைக்குச் சென்று விட தன்னிடமுள்ள மொத்த அன்பையும் கொட்டி சோட்டுவை பாதுகாக்கிறாள் தாரா.

குழந்தைகளின் உலகை அதன் இயல்பு கெடாமல் பதிவாக்குவதில் மஜித் மஜிதி விற்பன்னர் என்பதை அவரது முந்தைய திரைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த திரைப்படத்திலும் அது போன்ற கவித்துவமான காட்சிகள் இருக்கின்றன. இளம் சிறுமியான தனிஷா மற்றும் அவளது தங்கையான ஆஷா இருவருடன் இணைந்து வீடெங்கும் அமீர் வரையும் ஓவியங்கள் தொடர்பான காட்சி நெகிழ்ச்சியை ஊட்டுவதாக இருக்கிறது. துவக்கத்தில் இவனைக் கண்டு அஞ்சும் ஆஷா, இவன் அடிபட்டு வந்திருக்கும் காட்சியைக் கண்டு, குழந்தைக்கேயுரிய குணாதிசயத்துடன் அழத் துவங்குகிறாள்.

சிறையில் தள்ளப்படும் பெண்களால் அவர்களின் குழந்தைகளும் அங்கிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை சோட்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தன் களங்கமின்மையால் தாராவை அன்பைப் பெறும் சோட்டுவின் காட்சிகள் அபாரமான அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி கவித்துவமானது. தன் தாய் இறந்து விடுவதை அறிய முடியாத வயதில் இருக்கும் சோட்டு, அவளைப் பற்றி தாராவிடம் விசாரிக்கிறான். “அவள் மேகங்களைத் தாண்டி நிலவிற்கு சென்றிருக்கிறாள்’ என்று பொய்யான சமாதானத்தை சொல்கிறாள் தாரா. ‘என்னை அங்கு அழைத்துச் செல்வாயா?” என்று கேட்கிறான் சோட்டு. தன்னிடம் எஞ்சியிருக்கும் மோதிரத்தை காவலாளியிடம் தருகிறாள் தாரா. வானத்திலிருக்கும் நிலவை சோட்டுவிற்கு காண்பிப்பதற்காக இந்த லஞ்சம் தரப்படுகிறது. சோட்டுவின் மீது தாராவிற்கு உள்ள இந்த அன்பை உணரும் பெண் காவலாளி, மனம் கூசி மோதிரத்தை திருப்பி வைத்து விடும் காட்சி அருமையானது.

இடியும் மழையுமான அந்த நேரத்தில் நிலவைப் பார்க்க முடியாத சூழல். “இவை சற்று நேரத்தில் ஓய்ந்து விடும். அது வரை காத்திருக்கலாம்” என்று சொல்கிற தாரா, சோட்டுவுடன் விளையாடத் துவங்கி விடுகிறாள். அனைத்துச் சிக்கல்களும் ஒரு நாள் தீரும் என்கிற நம்பிக்கையை இறுதிக்காட்சி உணர்த்துகிறது. ‘மேகங்களுக்கு அப்பால்’ என்கிற படத்தின் தலைப்பும் இதையேதான் பிரதிபலிக்கிறது.

**

முரட்டு இளைஞன் அமீராக, இஷான் கட்டர் அற்புதமாக நடித்துள்ளார். பணம் சேர்க்கும் கனவுடன் துள்ளலுடன் இவர் போதை விற்பனையில் ஈடுபடும் துவக்க காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன. சகோதரி தாராவை சிறையில் இருந்து விடுவிக்க இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அக்கறையும் நெகிழ வைக்கின்றன. ஒரு கட்டத்தில் தனக்கு உருவாகும் மனஉளைச்சலில், வீட்டிலுள்ள புறாக்களை வெளியே எறிந்து விட்டு ‘நம்முடைய எல்லா சிக்கல்களுக்கு உங்கள் அப்பாதான் காரணம்’ என்று அக்ஸியின் குடும்பத்திடம் வெடிக்கும் காட்சியில் இவரது நடிப்பு அபாரமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்திற்காக வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திரைக்கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார் மஜித் மஜிதி. அக்ஸியாக, பிரபல வங்காள இயக்குநர் கெளதம் கோஸ் நடித்துள்ளார். படத்தில் இவருக்கு பெரும்பாலும் வசனங்கள் இல்லை. சலனமின்றி மருத்துவமனையில் படுத்திருக்கும் காட்சிகளே அதிகம். அமீர் தன்னிச்சையாக தன் கதையை தானே பேசிக் கொள்ளுவதைக் கண்டு மெளனமாக கண்ணீர் விடும் காட்சி அற்புதமானது.

தாராவாக, மலையாள திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சில இடங்களில் இவரது தோரணை மிகையாகவும் நாடகத்தனமாகவும் தோன்றினாலும் இதர காட்சிகளில் தன் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார். சோட்டுவிற்கும் இவருக்குமான அன்பு உலகம் சிறப்பாக உருவாகியுள்ளது. அக்ஸியின் குடும்பம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் பேசுகிற தமிழ் வசனங்களின் மூலம் உணர முடிகிறது. அக்ஸியின் தாயாக, சாரதா சிறப்பாக நடித்திருந்தாலும் அவர் தமிழ் உச்சரிப்பு அந்நியமாக உள்ளது. அக்ஸியின் மகள்களாக நடித்திருப்பவர்களின் தோற்றம் தமிழ் மண்ணிற்கு பொருத்தமில்லாததாக இருந்தாலும் களங்கமில்லாத முகங்களின் மூலம் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள்.

அமீரின் நண்பன் பாத்திரத்திற்காக, தாராவியைச் சேர்ந்த இளைஞனையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அனில் மேத்தாவின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறது. மும்பையில் நிழல் கலாசாரத்தையும் அதன் சந்து பொந்துகளையும் மிகத்திறமையாக பதிவாக்கியுள்ளார். அமீர் குண்டர்களால் தாக்கப்படும் காட்சியின் பின்னணியில் விரியும் அகண்ட நிலவெளி சிறப்பு.

‘பொம்மலாட்டம்’ போன்று திரைக்குப் பின்னால் தோன்றும் நிழலுருவங்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாராவிற்கும் அக்ஸிற்கும் நிகழும் போராட்டம், அக்ஸியின் குடும்பத்தை தன் வீட்டிற்குள் அனுமதித்த இரவில் அவர்களை திரையின் வழியாக கவனிக்கும் அமீர், ஆஷாவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திரைக்குப் பின்னால் ஆடும் ‘முக்காபுலா’ ஆட்டம், சிறுவன் சோட்டுவிற்கு தாரா காண்பிக்கும் நிழலுருவ சித்திரங்கள்.. என பல இடங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான். ‘Muhammad: The Messenger of God’ என்கிற மஜித் மஜிதியுடன் முந்தைய திரைப்படத்தில் அமைந்த இந்த இசைக்கூட்டணி இதிலும் தொடர்கிறது. ரஹ்மானின் பின்னணி இசை பல இடங்களில் அபாரமாக அமைந்துள்ளது. காட்சிகள் தரும் மனவெழுச்சியை இசை கூட்டுவதாக உள்ளது. ஆனால் பல காட்சிகளின் பின்னணியில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் மிகைத்தன்மையையும் கொண்டிருப்பது நெருடலானது. பொதுவாக மஜித் மஜிதியின் திரைப்படங்களில் இயற்கையான சப்தங்களே ஒலிக்கும். சர்வதேச சினிமாக்களின் தன்மைகளுள் ஒன்று இது. ஆனால் இத்திரைப்படத்தின் பின்னணி இசையின் அளவு மிகையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

**

இத்திரைப்படத்தில் பல உணர்ச்சிகரமான கட்டங்களும் அபாரமான நாடகீயத் தருணங்களும் இருந்தாலும் ஒட்டுமொத்த பார்வையில் ‘இது மஜித் மஜிதி’யின் படம்தானா என்கிற மெல்லிய ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக மஜிதியின் முந்தைய உன்னதமான திரைப்படங்களை பார்த்தவர்கள் அதிக ஏமாற்றத்தை அடையக்கூடும். இது ‘இந்தி சினிமா’ என்பதால் இந்தியத் திரைப்படங்களின் மிகைத்தன்மையை பின்பற்றுவது சரியாக இருக்கும் என்று மஜிதி தவறாக தீர்மானித்து விட்டாரோ என்று தோன்றுகிறது.

எளிதாக யூகிக்க வைக்கும் காட்சிக்கோர்வைகளும் திரைக்கதையும் சற்று சலிப்பூட்டுகின்றன. அயல் இயக்குநர்கள் இந்தியா தொடர்பான திரைப்படங்களை உருவாக்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு சேரியையும் குற்றவுலகையும் தவிர வேறெதுவும் கண்ணில் படாதோ என்றும் தோன்றாமலும் இல்லை. சலாம் பாம்பே, ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற முன்மாதிரிகளால் மஜிதியும் இந்த மயக்கத்திற்கு ஆட்பட்டு விட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

என்றாலும் சில அபாரமான தருணங்களுக்காகவும், மனிதர்களின் ஆதார அறவுணர்வை வலியுறுத்தும் இதன் உன்னதமான மையத்திற்காகவும் இந்த திரைப்படம் பாராட்டப்பட வேண்டிய முயற்சியே. 


(குமுதம் தீராநதி -  ஆகஸ்ட்  2018 இதழில் பிரசுரமானது)   

suresh kannan

No comments: