Tuesday, October 05, 2010

ஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்ஜி.நாகராஜன் என்றதோர் எழுத்தாளரின் பெயர், பெரும்பான்மையான தருணங்களைப்  போலவே சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப்பக்கத்தில்'தான் அறிமுகமாகியது. ஜி.நா.வின் 'குறத்தி முடுக்கு' 'நாளை மற்றொரு நாளே' போன்றவற்றை அவசியம் வாசிக்க வேண்டிய படைப்புகளென' என அவர் பரிந்துரைத்திருந்த ஞாபகம். அவர் விவரித்ததலிருந்து ஜி.நா., என் அலைவரிசைக்கு ஒத்த எழுத்தாளராக இருப்பார் என்று ஏனோ தோன்ற, காலச்சுவடு அப்போது வெளியிட்டிருந்த 'ஜி.நாகராஜனின் படைப்புலக' தொகுதியை வி.பி.பி-யில் வரவழைத்தேன். சுமார் 22 வயதில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக பணிபுரிந்துக் கொண்டிருந்த எனக்கு, அந்த நூலின் விலை அப்போதைய என் சம்பளத்தின் கால் பங்குக்கு ஈடாக இருந்தது. மேலாளரிடம் கடன் வாங்கி தபால்காரரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்ட போது 'ஏண்டா இதெல்லாம் உனக்குத் தேவையா' என்கிற பார்வைகளையும கேள்விகளையும் எதிர்கொண்டது நினைவில் உள்ளது.

நானறிந்தவரை நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் விளிம்பு நிலை மனிதர்களை தன் படைப்புகளில் சித்தரித்தவர்  புதுமைப்பித்தன். அவருக்குப் பிறகு ஜி.நாகராஜன்தான் அவர்களின் இருண்ட பிரதேசங்களின் மீது இலக்கிய வெளிச்சமிட்டுக் காட்டியவர். பின்னர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனாவது நடுத்தர வர்க்க மனிதர்களுள் ஒருவராக சற்று உயர்ந்த இடத்தில் நிற்பதான தோற்றத்துடன் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். ஜி.நாகராஜனோ விளிம்பு நிலை மனிதர்களுள் ஒருவராகவே வாழ்ந்தவர். சுந்தரராமசாமி அவரது நினைவோடை நூலிலும் அசோகமித்திரன் ஒரு கட்டுரையிலும் ஜி.நா -வை சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் எதிர்கொண்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய நிலையில் அது புரிந்து கொள்ளக்கூடியதே.

அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத  பழைய புதினங்களைப் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை இதழில் எழுதி வரும் தொடரில் 'குறத்தி முடுக்கு' புதினத்தைப் பற்றிய கட்டுரையை வாசித்த போது, அதே புதினத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த போது எத்தனை நுட்பமான விஷயங்களைக் காணத் தவறியிருக்கிறேன் என்பதும் எந்தவொரு முக்கியமான புதினத்தையும் தகுந்த இடைவெளியில் மீள்வாசிப்பு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் அக்கட்டுரை எனக்கு உணாத்திற்று.


ஜி.நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' எனும் புதினம் க்ரியா ராமகிருஷ்ணனி்ன் பங்களிப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி (Tomorrow one more day) எனும் நூலாக பெங்குவின் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது. இந்த நூல் வெளியீட்டில் பேசியது குறித்து தீராநதி அக்டோபர் 2010 இதழில் சி.மோகன் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையில் உள்ள கீழ்க்கண்ட, எனக்கு மிகவும் பிடித்ததொரு பத்தியை கீழே பகிர்ந்துள்ளேன். ஜி.நாவின் இலக்கியச் சித்திரத்தை மிகக் கச்சிதமான வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்துள்ள பத்தியிது எனக் கருதுகிறேன்.

.......ஜி.நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றி பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி.நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும் பொறுக்கிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல் தீர்க்கமான குரல் ஜி.நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுக்களையும் வழித்துத் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி.நாகராஜனுடையது. பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தின் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி.நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர். .....

ஜி.நாகராஜன் உயிர் நீத்த கடைசி தினத்தில் அவருடனான அனுபவங்களையும் இக்கட்டுரையில் சி.மோகன் பகிர்ந்துள்ளார். அதையே கட்டுரையின் தலைப்பும் சுட்டுகிறது.

ஆங்கில நூல் சுட்டி. :
http://www.penguinbooksindia.com/category/Classic/Tomorrow_Is_One_More_Day_9780143414124.aspx

suresh kannan

5 comments:

கமல் said...

அருமை நண்பரே

Unknown said...

:)

thamizhparavai said...

பகிர்விற்கு நன்றி...

Raj Chandra said...

Hi Suresh,

If you get a chance, read Jeya Mohan's long article about G. Nagarajan's work. So far I have considered that as the best. That article is in one of his Literary critic collection (he had written his views about other notable authors too).

I think it is from "Thamizini Publications".

Thanks
Rajesh

பிச்சைப்பாத்திரம் said...

மேற்குறிப்பிட்டுள்ள சி.மோகனின் முழுக்கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.
http://abedheen.wordpress.com/2010/10/16/taj-g_nagarajan/