Friday, March 26, 2010

நெல்சன் மண்டேலா நடித்த திரைப்படம்


மேலே படத்திலுள்ளவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அட! மார்கன் ப்ரீமேன்தானே என்று சொல்வீர்களேயானால் நீங்கள் இன்னும் INVICTUS திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து மண்டேலாவின் உருவத்தில் மார்கன் ப்ரீமேனே என் மண்டைக்குள் பதிந்திருக்கிறார். பரவசமாக கூக்குரலிடும் ஜனத்திரளை நோக்கி கையசைப்பதாகட்டும், கடுமையான சவாலையும் மிருதுவாகவும் அழுத்தமாகவும் எதிர்கொள்வதாகட்டும்...அத்தனை அற்புதமாக மண்டேலாவின் அந்த ஆளுமையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ப்ரீமேன். அகாதமியின் சிறந்த நடிகருக்கான விருதை இவருக்கு வழங்கியிருக்கலாம். என்றாலும் Crazy heart-ஐ இன்னும் பார்க்காததால் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை.

ஷாரூக்கான் நடித்த 'சக்தே' போல விளையாட்டையும் அரசியலையும் மிக நுட்பமாக இணைக்கும் திரைப்படங்களில் இதுவுமொன்று. தென் ஆப்ரிக்காவில் மண்டேலா அதிபராக இருந்த காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலான சிறை வாழ்விலிருந்து 1990-ல் விடுவிக்கப்படும் மண்டேலா, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1994-ல் தென் ஆப்ரிக்காவின் அதிபராகிறார். அதுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் மனத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக ஏற்படும் பயத்தைப் போக்குவதும் வெள்ளை மற்றும் கறுப்பர் இனத்திவரிடையே நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பகையையும் நிறவெறியையும் போக்குவதே பிரதான பணி என்பதை உணர்கிறார்.

ரக்பி விளையாட்டு உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் போது அதற்காக நடத்தப் பெறும் தகுதி ஆட்டங்களில் வெள்ளையர்கள் அவர்களது பாரம்பரிய அணியான Springboks-க்கு ஆதரவாக குரலெழுப்பும் போது கறுப்பர்கள் எதிரணிக்கு ஆதரவாக - அதாவது தங்களின் சொந்த நாட்டு அணிக்கு எதிராக - குரலெழுப்புகின்றனர். Springboks அணியில் ஒரே ஒரு கறுப்பர் இருந்தாலும் இத்தனை ஆண்டு காலமாக தங்களை ஆதிக்கம் செய்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களை அவர்கள் அத்தனை சீக்கிரம் மன்னிக்கத் தயாராக இல்லை.

இந்தப் பகைமை உணர்ச்சியை விளையாட்டுப் போட்டியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் போக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறார் மண்டேலா. நிற வேறுபாட்டை மறந்து 'தன்னுடைய தேசம்' என்று இரு பிரிவினரையுமே உணரச் செய்ய விரும்புகிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே பின்னர் நிகழும் காட்சிகளாக விரிகிறது.

()

இரண்டு கூறாக பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்தும் ஒரு பொறுப்புள்ள தலைவனாக மண்டேலா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நெகிழ்வையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றது. 'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' என்கிற நோக்கில் காந்தி கொண்டு வந்த அகிம்சை போராட்டத்தை இந்தியர்களே கைவிட்ட நிலையில் மண்டேலா அதைச் செயல்படுத்தி வெற்றி பெறும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ளும் விளையாட்டு ஆணையக்குழுவிலுள்ள பெரும்பாலான கறுப்பர்கள், Springboks அணியின் நிறம் கொடி போன்றவற்றை மாற்ற தீர்மானம் கொண்டுவருகின்றனர். மண்டேலா இதை விரும்புவதில்லை. இது மேலும் பகைமை உணர்ச்சியையே வளர்க்கும் என்று கருதுகிறார். தடுக்க வேண்டும் என விரைகிற தருணத்தில் அவரைத் தடுக்கும் அரசாங்க காரியதரிசி, “இது பெரும்பான்மையான மக்கள் விரும்புவது, இதற்கு எதிராக நீங்கள செயல்படுவது உஙகள் பதவிக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது” என எச்சரிக்கிறார். “மக்கள் தவறு செய்கிறார்கள். இந்தச் சமயத்தில் அதை எதிர்க்கும் துணிவில்லையென்றால் நான் தலைமைப் பொறுப்பில் இருக்கவே லாயக்கற்றவன்” என்கிறார் மண்டேலா.

இந்த மாதிரி நபர்களை இனி நாம் மியூசியத்தில் மாத்திரமே காண முடியும். பின்னர் அவர் விளையாட்டு ஆணையக்குழுவிடம் ஆற்றும் சிறிய அழுத்தமான உரை பரவசத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான பல நுட்பமான காட்சிகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.

()

Springboks அணியின் கேப்டனாக Matt Damon. அதிபர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்பதை இவனால் நம்பவே முடியவில்லை. “இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டியது அவசியம்” என்று மண்டேலா இவனை கேட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்த போது தம்மை ஊக்கப்படுத்தின ஆங்கிலக் கவி William Ernest Henley எழுதிய Invictus என்கிற கவிதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அணி கேப்டனின் தந்தை கறுப்பர்களை வெறுக்கும் வெள்ளையர்களின் ஒரு பிரதிநிதி. “இனி இந்த தேசத்தில் நமக்கு இடமிருக்காது” என்கிறார்.

உண்மையில் திரைப்படமே இம்மாதிரியானதொரு காட்சியுடன்தான் துவங்குகிறது. மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வாகனத்தில் வரும் போது கறுபபினச் சிறுவர்கள உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். எதிர் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வெள்ளையச் சிறுவர்களில் ஒருவன் கேட்கிறான். “யார் சார் அது?. அந்தத் தீவிரவாதி மண்டேலாவை விட்டு விட்டார்களா?” அவர்களின் கோச் சொல்கிறார். “ஆமாம் பசங்களா! இனி இந்த தேசம் அந்த நாய்களின் கையில்தான் போகப் போகிறது”.

கறுப்பினத்தவர்களின் பிரதேசத்தை முதல் முறையாக பார்க்க நேரும் விளையாட்டுக் குழுவிலுள்ள ஒரு வெள்ளையர் சொல்கிறார். "நல்ல வேளை, நான் இங்கு வாழ நேரவில்லை"

இதற்கும் மேலான சுவாரசியமான காட்சிகள், மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்டது. அதிபரின் பாதுகாப்பை பொறுப்பை கறுப்பின அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் ஆட்கள் தேவை என்று அவர்கள் அரசிடம் விண்ணப்பிக்கும் போது மண்டேலா வெள்ளையர்களை அனுப்புகிறார். இரு குழுக்களுக்குமான நுட்பமான விரோதமும் பின்பான சிநேகமும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

()

மண்டேலாவும் பார்வையாளர்களும் எதிர்பார்ப்பது போலவே அந்த விளையாட்டுப் போட்டியின் வெற்றியை கறுப்பர்களும் வெள்ளையர்களும் இணைந்து கொண்டாடுவதுடன் படம் நிறைகிறது. ஆனால் யதார்த்ததில் இந்த பகைமை உணர்ச்சி தேய இன்னும் பல ஆண்டுகளாகலாம்.

மண்டேலாவின் உறவினர்கள் உட்பட அனைவரும் வெள்ளையர்கள் தங்களுக்கிழைத்த கொடுமைகளை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். "எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டிய தருணமிது. இனி நம் சிந்தனை இந்த தேசத்தைப் பற்றினதாக இருக்க வேண்டும்" என்கிறார் மண்டேலா. பழிவாங்குகிற நோக்கில் கறுப்பர்கள் வெள்ளையர்களிடம் வன்முறையைக் காட்டினால், இருவர்களும் நிற்கும் இடம்தான் மாறியிருக்குமே ஒழிய, வன்முறையும் பகைமையும் அப்படியேதானிருக்கும் என்பதாகத்தான் அவர் சிந்தனை இயங்குகிறது.
எங்காவது யாராவது தியாகம் செய்து இதை நிறுத்தித்தான் ஆக வேண்டும்.

படத்தின் சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், இவ்வாறான நீதிபோதனைக் கதைகள், நமக்கு தொடர்ந்து தேவைப்படுமளவிற்கு நம்மிடம் வன்முறையுணர்வும் பகைமையுணர்ச்சியும் ஆழமாகப் பதிந்துள்ளது. கிளின்ட் ஈஸ்ட்வுட் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  ஒரு காலத்தில் துப்பாக்கியால் சுட்டு புகையை ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்த ஆக்ஷன் நடிகர், இப்படியொரு மென்மையான இயக்குநராக உருமாறியிருப்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது. 

suresh kannan

15 comments:

கானகம் said...

//'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' என்கிற நோக்கில் காந்தி கொண்டு வந்த அகிம்சை போராட்டத்தை இந்தியர்களே கைவிட்ட நிலையில் மண்டேலா அதைச் செயல்படுத்தி வெற்றி பெறும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது. //

:-) வருத்தமும் படவேண்டும், நமது சீரழிவை எண்ணி.

கதிர் said...

சு.க

அவர் எத்தனைதான் வன்முறைப்படங்கள் எடுத்திருந்தாலும் அவர் இயக்கியுள்ள படங்கள் மனிதநேயத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும் உதாரணமாக மில்லியன் டாலர் பேபி, க்ராண்ட் டொரினோ, ப்ரிட்ஜஸ் ஆஃப் மாடிசன் கவுண்டி, மிஸ்டிக் ரிவர், சேஞ்சலிங், ப்ளட் வொர்க் என எல்லாமே அன்பு காதல் பாசம் போன்றவற்றை வலியுறுத்தும் படங்கள்தான், போர் சம்பந்தப்பட்ட படமான லட்டர்ஸ் ஃப்ரம் ஐவோ ஜிமா கூட பிரதானமாக மனிதநேயம்தான் பிரதானம். அவர் பிறர் இயக்கத்தில் நடித்த படங்களில்தான் துப்பாக்கி, சிகரெட், ஸ்டைல் எல்லாம் இருக்கும்.

இன்விக்டஸ் எடுக்கும்போது அவருக்கு 80 வயது இருக்கும் இந்த வயதில் இப்படிப்பட்ட படங்களை இதுக்கு முன்னாடி இயக்கியிருக்காங்களான்னு தெரியல. எனக்குப் பிடித்த ஹாலிவுட் இயக்குனர்களில் முதன்மையானவர் ஈஸ்ட்வுட்.

நர்சிம் said...

பகிர்விற்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்.

Jegadeesh Kumar said...

உலக சினிமா பற்றி மேதாவித்தனமில்லாது
ஒரு சக ரசிகனின் பார்வையில் எழுதுகிறீர்கள்.
பாசாங்கில்லாத நேர்மையான எழுத்தை மிகவும் ரசிக்கிறேன்.

jekay

Anonymous said...

வணக்கம் சுரேஷ்!
நல்ல பகிர்வு! அதுவும் மீட்டிங்கில் இருக்கும் போது கூட அவருக்கு விளையாட்டு மீதான கவனமும், வெற்றியை ஒரு குழந்தையை போல வெளியே வந்து கொண்டாடி விட்டு மீடிங்கில் மீண்டும் இணைவதும் அருமை! மதீபாவாக மார்கன் மனதில் நிறைந்து விட்டார்.

Crazy Heart - Jeff bridges- அவரு வாழ்ந்து கேட்டவராவே வாழ்ந்துட்டார், அவருக்கு வழங்கப்பட்டது நியாயமே!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

இத்தகைய இனம் சார்ந்த கதைகள் இங்கும் உண்டு. கறுப்பர்களின் வாழ்க்கையை அழித்து அவர்களை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை நாம் நியாயப்படுத்திட முடியாது. அப்படி யார் நியாப் படுத்தினாலும் அது கறுப்பர்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.

வெள்ளையர்களுக்கு உதவி செய்வது, கறுப்பர்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயக்காது.

Ashok D said...

up in the airக்கு அப்புறம் ஒரு இண்ட்ரஸ்டிங் one.

clint Eastwood எப்பவும் கலக்கல்தான்..சார். (நம்ப ரஜினி ஸ்டெயிலின் நதிமூலம்)

good, bad & ugly எனக்கு பிடிக்கும்..அதுக்கும் ஒரு விமர்சனம் போடுங்க.. சீரியஸாதான் சொல்லறன் சார்.. :)

Prasanna said...

Nice flow :)

சுப்பராமன் said...

நல்ல விமர்சனம், சுரேஷ் கண்ணன்.
மார்கன் ப்ரீமேனின் ஸ்க்ரீன் ப்ரஸென்ஸ் எனக்கு பிடித்தமான் ஒன்று. Shawshank Redemption அதில் முதன்மையானது.

மயிலாடுதுறை சிவா said...

இந்த படத்தை பார்க்க வேண்டும் சீக்கரம், உங்கள் பதிவு பார்க்க தூண்டுகிறது. M Freeman குரலும், நடிப்பும் என்னை மிக மிக கவர்ந்தவை.

நண்பர் கதிர் சொன்னது போல, "இன்விக்டஸ் எடுக்கும்போது அவருக்கு 80 வயது இருக்கும் இந்த வயதில் இப்படிப்பட்ட படங்களை இதுக்கு முன்னாடி இயக்கியிருக்காங்களான்னு தெரியல. எனக்குப் பிடித்த ஹாலிவுட் இயக்குனர்களில் முதன்மையானவர் ஈஸ்ட்வுட்....." - அப்படியே அமோதிக்கிறேன்!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Bala said...

நானும் இன்னும் crazy heart பார்க்கவில்லை.. ஆனால், நீங்கள் சொல்வது போல, இந்த படத்திற்காக் விருதுக்கு morgan freeman தகுதியானவர்தான்..

butterfly Surya said...
This comment has been removed by the author.
butterfly Surya said...

மன்னிக்கவும்.. அங்காடி தெருவுக்கு போட வேண்டிய பின்னூட்டம்.

Krishnan said...

"இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். இந்த மாதிரியான விதிவிலக்குத் திரைப்படங்களையாவது தியேட்டருக்கு சென்று பாருங்கள்." கண்டிப்பாக சுரேஷ்.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Latest tamil blogs news