A serious man பார்த்த பாதிப்பில் 'கோயன்'களின் இன்னுமொரு படத்தை பார்த்தேயாக வேண்டுமென்கிற உத்வேகம் எழுந்தது. சேகரிப்பிலிருந்து கைக்குக் கிடைத்ததை உருவினதில்... BURN AFTER READING.
பிளாக் காமெடி என்கிற வகையான சமாச்சாரத்தில் நம்முடைய தமிழ்ப்படங்களில் ஏதாவதிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். ம்...ஹீம்... (கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸை வேண்டுமானாலும் ஓரத்தில் சேர்க்கலாம்) நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன் போன்றவர்களை ஒரு மார்க்கமாக சொல்ல முடியும்.
ஆனால் நூற்றுக்கும் அதிகமாகவுள்ள டார்க் ஹியூமர் ஹாலிவுட் படங்களில் இதுவுமொன்று. மிதமான வன்முறையும் குரூரமும் கலந்த இவ்வகை கறுப்பு நகைச்சுவையை ஒரு மாதிரி அவஸ்தையுடன்தான் ரசிக்க முடியும். அதுவும் ஒரு சுவைதான். பொதுவாக நம்மூர் காமெடிப் படங்களில் துப்பாக்கி வெடித்தால் அது போலித் துப்பாக்கியாகவோ குண்டாகவோ அல்லது குறிதவறி விட்டத்தில் பாய்வதாகவோதான் இருக்கும். ஆனால் இம்மாதிரி ஹாலிவுட் படங்களில் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் திடீரென்று நிஜமாகவே ரத்தத்துடன் சிதறி செத்துப் போவார்.
சரி. இப்போது BAF-க்கு வருவோம். தன்னை அழகற்றவளாக உணரும் ஒரு நடுத்தர வயது பெண். அதிலிருந்து மீள காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ய பணத்திற்காக அல்லாடிக் கொண்டிருப்பவள், CIA-விலிருந்தும் வீட்டிலிருந்து மனைவியாலும் துரத்தப்பட்டு நிராகரிப்பின் வேதனையை முழுமையாக அனுபவிக்கும் ஒருவன், அவளுடைய டாக்டர் மனைவி, அவளைச் சுற்றும் ஒரு பெண் பித்தன், அவனுடைய எழுத்தாள மனைவி, மேற்சொன்ன காஸ்மெட்டிக் கிழவியின் துடிப்பான, பிறகு குருரமாக இறக்கப்போகும் உதவியாள், இவர்கள் பணிபுரியும் ஜிம்மின் மேனேஜர். இவரும் பின்னால் இறக்கப் போகிறவர். இவர்கள் அனைவரின் நடவடிக்கையும் மெளன அபத்தமாக வேடிக்கைப் பார்க்கும் CIA-வின் தலைமை...
இப்படி கலந்து கட்டின குழப்பமான பாத்திரங்களை வைத்துக் கொண்டு அதிதிறமையானதொரு திரைக்கதையை எழுதி நடுநடுவே பார்வையாளர்களை சிரிக்கவும் திகைக்கவும் வைத்துக் கொண்டு hats off ... coen's. நடுவே அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு உள்ள பனிப்போரும் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.
குடிப்பழக்கம் காரணமாக CIA-வில் இருந்து துரத்தப்படும் காக்ஸ் (John Malkovich) வெறுப்பில் தன்னுடைய பணிஅனுபவங்களை நூலாக எழுதி சர்ச்சையை கிளப்ப முயற்சிக்கிறார். அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்பும் அவரது மனைவி கேட்டி காக்ஸ் (Tilda Swinton) வக்கிலீன் ஆலோசனைப்படி கணவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து தர அந்த ஆவணங்களில் ஒரு குறுந்தகட்டை வக்கிலீன் உதவியாளர் ஜிம்மிற்கு போகும் போது தவற விட, ஜிம்மில் பணிபுரியும் லிண்டாவும் அவளது உதவியாளனான சாட்டும் அதிலுள்ள தகவல்கள் CIA சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்று தவறாக யூகித்து காக்ஸை பணம் கேட்டு மிரட்டுகின்றார்கள்.
அவர்களுக்குத் தெரியாத விஷயம், அந்த குறுந்தகட்டில் உள்ளது காக்ஸின் பணியனுபவக் குறிப்புகள் மாத்திரமே என்கிற சமாச்சாரம். ஏற்கெனவே வெறுப்பிலிருக்கும் காக்ஸ் பணம் தர மறுக்க, லிண்டா அதை எடுத்துக் கொண்டு ரஷ்ய தூதரகத்திற்கு செல்ல... மீதமுள்ள காட்சிகளெல்லாம் சிரிப்பும் ரத்தமுமான அதகள காட்சிகள்தான்.
தன் அழகு மேம்பாடு குறித்த அதீத பிரக்ஞையுள்ள காஸ்மெட்டிக் கிழவியாக Frances McDormand (இயக்குநர்களில் ஒருவரான் ஜோயலின் மனைவி). கோமாளியான தோற்றத்திலிருக்கும் இவர், மிக சீரியஸான மிரட்டல்களில் ஈடுபடும் போதும் அது தோல்வியடையும் போதெல்லாம் எரிச்சலும் அழுகையுமாக வெடிக்கும் போதும் மிக நகைச்சுவையாக இருக்கிறது. முன்னாள் சிஐஏ அதிகாரியாக ஜான் மால்கோவிச். ஒவ்வொரு முறையும் ஹை-டெசிபல் குரலில் எரிச்சலைக் காட்டுகிறாற் போலவே சூழ்நிலைகள் அமைகின்றன.
பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் கணவர்கள் மனைவியால் ஒரு பூச்சியாகவே மதிக்கப்படுகின்றனர் என்பதற்கு ஒரு காட்சி. நடுஇரவில் வரும் மிரட்டல் தொலைபேசியால் எரிச்சலடையும் காக்ஸை, அவர் மனைவி என்னவென்று விசாரிக்க "நான் நூலாக எழுதிக் கொண்டிருக்கும் தகவல்களை எவனோ வைத்துக் கொண்டு மிரட்டுகிறான்' என்கிறார். 'அதில் என்ன எழவு இருக்கப் போகிறதென்று அதைப் போய் எவனோ மெனக்கெட்டு எடுத்துச் சென்றிருக்கிறான்?" என்கிறார் மனைவி கூலாக.
இறுதிக் காட்சியில் சிஐஏ தலைமை அதிகாரியும் துணை அதிகாரியும் உரையாடிக் கொள்ளும் காட்சி... இந்தப் படத்தின் உச்சபட்டசமான நகைச்சுவைக்காட்சி. நடந்திருக்கும் இடியாப்பச் சிக்கல் குழப்பங்களையும் மரணங்களையும் துணை விவரிக்க, தலைமை "ஒண்ணும் புரியல. எப்படியோ பிரச்சினை முடிஞ்சுதுல்லயா, ஆள விடு" என்கிறார்.
தமிழில் இம்மாதிரியான பிளாக் காமெடி படங்களை ஒருவேளை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ள இயக்குநர்கள் யாரென்று யூகித்துப் பார்த்தேன். பாலா, செல்வராகவன் மற்றும் வெங்கட்பிரபு.
suresh kannan
10 comments:
கோயன் சகோதரர்கள் மற்றவர்களைப் போலவே என்னையும் பாதித்தவர்கள்.
இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்கத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட இந்த இடுகைக்கு நன்றி...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மிக நல்ல பகிர்வு சுரேஷ் கண்ணன். பார்க்கவேண்டும்.
Can you please see the movie Love Sex aur Dhoka (LSD) by Dibakar Banerjee and post your review?
பார்த்திடுவோம்
கிர்ர்ர்.. after Reading
Tnx for sharing Suresh.Interesting!
Am not getting clear idea abt Black comedy..I have seen a movie called "Mixed Nutz",hope tat comes under this criteria...
வெங்கட் பிரபு செல்வராகவன்,பாலாவுடன் எந்தக் கோட்டில் இணைகிறாரென்று தெரியவில்லையே?
பாலா, செல்வராகவனை விட வெங்கட் பிரபுதான் சிறப்பாக எடுப்பார் எனத் தோன்றுகிறது.
சரோஜா ரீமேக்கை பார்த்ததால் நம்புகிறேன். வெங்கட் சிறப்பாக நகலெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
(நானே சொந்தமா யோசிச்சு எடுத்த கதைன்னு மாத்திரம் சொல்ல வேணாம்னு சொல்லிடுங்க.)
Black Magic தெரியும், Black Comedy
புது அறிமுகம்.
"men who stare at goats" பார்த்தீர்களா? வெளியே சிரிக்கமுடியாமல் அடக்கிக் கொண்டு முழுப்படமும் பார்க்கும் அவஸ்தையை அனுபவிக்கலாம்.
அதிலும் George Clooney முக்கிய பாத்திரம். ஒரு நகைச்சுவைக் காடம்சியைப் படைத்துவிட்டு, எங்கே மக்களுக்கு விளங்காமல் விட்டுவிடுமோ என்று அதையே திரும்ப விளங்கப்படுத்திக் கொண்டிருப்பதுதான் நமது தமிழ்ச்சினிமா.
-கொண்டோடி.
Post a Comment