Saturday, March 06, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -2 (தி பிளைன்ட் சைட்)


 இந்த வரிசையில் இரண்டாவது படம்  THE BLIND SIDE.

செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் வகுப்பறையில் தூங்கி ஆசிரியரிடம் துடைப்பானால் அடிவாங்கி பின்பு கரும்பலகையில் தன்னுடைய ராமானுஜத் திறமையை நிரூபித்து விட்டு மறுபடியும் சென்று தனுஷ் தூங்குவார் அல்லவா? அந்தக் காட்சி உங்களிடம் அப்போது ஏற்படுத்திய உணர்வை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். இந்தப் படத்திலும் அதே மாதிரியான உணர்வுகளை நீங்கள் மீட்டெடுக்க நேரிடும். ‘உருப்படாத கேஸ்’ என்று சமூகம் புறக்கணிக்கும் மந்தமானவர்களையும் முறையான படி பட்டை தீட்டினால் வைரமாக்கி விட முடியும் என்கிற வழக்கமான கதை சென்டிமென்ட் காட்சிகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

Michael Oher, உயரத்திலும் அகலத்திலும் பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கும் ஓர் இளைஞன். மனதளவில் சிறுவன். பெரும்பாலான நீக்ரோ  கருப்பினச் சிறுவர்களுக்கான வறுமைப் பின்னணி. தந்தை சிறையில். தாய் போதைப் பொருள் விற்பனை. விளைவாக இவன் அநாதையாகிறான். இவனுடைய உறவினரொருவர் கால்பந்தில் இவனிருக்கிருக்கும் திறமையைக் காண்பித்து நல்லதொரு பள்ளியில் சேர்த்துவிட்டு கழன்று கொள்கிறார். மிக மந்தமாக இருக்கும் அவனுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது என்று ஆசிரியர்கள் சலித்துக் கொள்கின்றனர். பள்ளி முடிந்த நேரங்களில் பொது இடங்களில் தன்னுடைய நாட்களைக் கழிக்கிறான் Michael Oher.

அதே பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனின் தாய் அநாதையாக சுற்றித்திரியும் இவனைக் கண்டு பரிதாபப்பட்டு தற்காலிகமாக இருக்கட்டும் என்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தின் அன்புமிக்க ஒரு உறுப்பினனாக ஆகிப் போகிறான். இவனுக்குள் இருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டுபிடித்து அதில் அவனை அதில் உலகப் புகழ்பெற்றவனாக மாற்றுகிறாள் அவனுடைய வளர்ப்புத் தாய். 

Michael Oher என்பவரின்  உண்மையான கால்பந்து விளையாட்டு வீரரின்  வாழ்க்கையை குறிப்பிட்டு மைக்கேல் லூயிஸ் எழுதின The Blind Side: Evolution of a Game என்கிற நூலின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. John Lee Hancock இத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

புதைந்திருக்கும் வைரமான Michael Oher-ஐ தத்தெடுத்து அவனை மீட்டெடுக்கும் தாயாக நடித்திருக்கும் Sandra Bullock-ன் அற்புதமான நடிப்பு இந்தத் திரைப்படத்தின் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். எனவேதான் அகாதமி 2010 விருதின் 'சிறந்தநடிகை' பிரிவில் இவரது பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 'ஒரு நீக்ரோ கருப்பினச் சிறுவனை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டோமே' என்று சந்தேகப்படும் போதும்,  ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும் கணவரை convince செய்யும் போதும், ஒவ்வொரு தடையையும் தாண்டி அந்தச் சிறுவன் உயரும் போது மகிழும் போதும் .. என்று பல காட்சிகளில் இவரது நடிப்பு மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

Michael Oher-ஆக  Quinton Aaron நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் தம்முடைய பாத்திரத்திற்கு தேவையானதை போதுமான அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க கால்பந்து விளையாட்டின் விதிமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதில் Michael Oher தடுமாறும் போது "நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தத் திசையிலிருந்து எப்படி ஆபத்து வந்தால் எப்படி எதிர்கொள்வாய் என்பதை நினைவில் கொண்டு ஆடு" என்று அவனுடைய அம்மா சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப விளையாட்டில் வெற்றி கொள்ளும் காட்சிகள் சுவாரசியமானவை. இந்தக் காட்சிக் கோர்வையின் ஆரம்பத்தில் அவன் எதிரே மோத வருபவனை விட்டுவிட்டு திடீரென்று வானத்தில் பறக்கும் காற்றாடியில் மனம் லயிப்பது அவனுள்ளிருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தும் காட்சி.

வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்குமான தீராத பகைமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஒரு கருப்பனையா தத்தெடுத்துக் கொள்ளப் போகிறாய்" என்று அந்த அம்மாவின் தோழிகள் கேட்கிறார்கள். அவர்களின் உரையாடலின் போது கறுப்பர்கள் வசிக்கும் பகுதிக்கே அவர்கள் சென்றதில்லை என்பதை உணர முடிகிறது. வறுமை காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு பாழாகும் சிறுவர்களை மீட்டெடுத்து முறையாக பராமரித்தால் Michael Oher போல அவர்களும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதையும் இந்தப்படம் அடிநாதமாக சுட்டிக் காட்டுகிறது.

நிஜமான Michael Oher-ன் புகைப்படங்கள் பட இறுதியில் காண்பிக்கப்படுகிறது.

இந்த மாதிரியான சென்டிமென்ட் படங்களை நாம் தமிழிலேயே அதிகம் பார்த்துவிட்டதால் எந்தவொரு பெரிதான ஆச்சரியத்தையோ பரவசத்தையோ இந்தப்படம் நமக்குத் தராது என்றுதான் நான் கருதுகிறேன். என்றாலும் காட்சிகளின் இடையில் வெளிப்படும் சில கவிதைக் கணங்களுக்காக இது 'சிறந்த திரைப்படத்திற்கான' பிரிவில் நாமினேஷன் ஆகியிருக்கலாம். முன்னரே சொன்னது போல் Sandra Bullock 'சிறந்த நடிகை' விருதைப் பெறக்கூடும். Golden Globe விருதை இதே தகுதிக்காக ஏற்கெனவே அவர் பெற்றிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. 

suresh kannan

11 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி சுரேஷ்

Ashok D said...

நடு நடுவே நீங்க கொடுக்கற ப்ரேக்கு
சூப்பருங்கோ..

லேகா said...

சுரேஷ்,

பகிர்விற்கு நன்றி.

சான்ட்ரா புல்லக் இப்படத்தின் தயாரிப்பாளரா?
எனக்கு பிடித்த நடிகை அவர்.

லேகா said...

Suresh,

Ignore my question..got it!!
Sorry :-(

பிச்சைப்பாத்திரம் said...

லேகா, நான்தான் sorry. :)

copy+paste-ல் சொதப்பி விட்டது. டிராப்டில் திருத்தாமல் அப்படியே போட்டுவிட்டேன். பிரதான பாத்திரமான வளர்ப்புத் தாயாக நடித்தவர் Sandra Bullock என்று இந்நேரம் தேடிப் பார்த்திருப்பீர்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

"இந்த மாதிரியான சென்டிமென்ட் படங்களை நாம் தமிழிலேயே அதிகம் பார்த்துவிட்டதால் எந்தவொரு பெரிதான ஆச்சரியத்தையோ பரவசத்தையோ இந்தப்படம் நமக்குத் தராது என்றுதான் நான் கருதுகிறேன்".


உண்மைதான் பெரும்பாலான நம்ப படங்கள்லாம் அங்கேயிருந்து சுட்டதுதானே!.

என்ன... சில தேவையற்ற திணிப்புகள் ஆங்கில படங்களில் இருக்காது.

Ramesh said...

//முன்னரே சொன்னது போல் Sandra Bullock 'சிறந்த நடிகை' விருதைப் பெறக்கூடும்//

Unfortunately, she picked up the Razzie personally, bemoaning that she has to acknowledge the "mean" people too! Poor thing.

:-)

I liked her in The Proposal, nice move, any movie club can show.

கல்வெட்டு said...

சுரேஷ்,

//பெரும்பாலான நீக்ரோ சிறுவர்களுக்கான வறுமைப் பின்னணி. //

கருப்பின மக்கள்/ கருப்பினச் சிறுவர்கள் என்று சொல்வது சரியானது.

நீக்ரோ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களுக்கு அவமானச் சொல் /வசைச்சொல் . அமெரிக்காவில் Black or African American தான் பயன்பாட்டில் உள்ளது.

அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களை அழைப்பதே அவர்களுக்கு செய்யும் மரியாதை.

அதுபோல எஸ்கிமோ என்று சொல்வதும். "நானுக்" என்பதே அவர்களின் அடையாளம். எஸ்கிமோ என்பது சிலருக்கு வசைச்சொல்.

http://www.isteve.com/2002_name_game_inuit_or_eskimo.htm

திரைப்படங்களில் இருந்து மண் சார்ந்த பழக்கவழக்கங்கள்,பேச்சு.நடை உடை போன்ற செயல்கள் கவனிக்கப்படவேண்டும். திரைப்படம் ஒரு ஊடகம். ஆனால் அது வெறும் கதை சொல்லும் களமாகமட்டுமே பார்க்கப்படுவது அதன் தலையில் அதுவே போட்டுக் கொள்ளும் மண். :-((

**

பிச்சைப்பாத்திரம் said...

கல்வெட்டு:

நீங்கள் கூறியது மிகச்சரி. அப்படியே ஒப்புக் கொள்கிறேன். எழுதுகிற ப்ளோவில் அப்படியே வந்துவிட்டது. தவறுதான். திருத்தி வி்ட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

கல்வெட்டு said...

.

நன்றி சுரேஷ் !

.

ஹரன்பிரசன்னா said...

இந்தப் படம் பெரிய ‘பிராண்டல்.’ சாண்ட்ரா புல்லாக்குக்கு, இந்தப்படத்துக்கெல்லாம் சிறந்த நடிகை விருது கொடுத்ததெல்லா ஓவர்.