இலையுதிர் காலத்தில் ஒரு காலை நேரம். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். எதிரே சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள்.... பராக்குப் பார்த்துக் கொண்டே வந்தவர்களுக்கு என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டது. ..
உள்ளூர்க்காரர்கள் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவது எனக்குப் புதிதல்ல. *ஹீடாங்கில் தங்கள் மத்தியில் ஒரு வெளிநாட்டுக்காரி சர்வ சாதாரணமாக வசிப்பது ஆரம்பத்தில் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஆனால் மேல்நாட்டுக்காரர்களும் இந்த மாதிரியே வாயைப் பிளப்பது இதுவே முதல் முறை.
அவர்களுடைய கோணத்திலிருந்து என்னைப் பார்க்க முயன்றேன். சுத்த உள்ளூர்ப் பகுதியில் ஓர் அந்நியப் பெண். கலர் பைஜாமா. அதற்கேற்ற மாதிரி ஒரு ஜிப்பா. வாய் ஓரத்தில் சிகரெட் தொங்குகிறது. வலது கையில் ஒரு பூனையை இடுக்கிக் கொண்டு பாத்ரூம் சப்பல் படக் படக்கென்று சத்தம் செய்ய நடந்து போகிறாள் என்றால் எப்படி இருக்கும்? ஹீடாங் என்னை முழுவதும் தன் கலாசாரத்துக்குள் இழுத்துக் கொண்டு விட்டது.
* ஹீடாங் - சீனாவின் அசுரத்தனமான நகரமயமாக்கலில் தப்பிப் பிழைத்திருக்கிற, பெரும்பாலும் வயதானவர்கள் வாழும் அமைதியான புராதனப் பகுதி.
பொதுவாக தமிழின் பயணக்கட்டுரைகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து திரும்பிய துணிச்சலின் அடிப்படையில் எழுதப்படும். பயணம் மேற்கொண்டதின் விவரங்கள், அதில் ஏற்பட்ட இடையூறுகள், தகுந்த உணவு கிடைக்காமலிருந்ததின் அலைச்சல்கள், மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கப்படும் அரசின் கையேடு விவரங்கள் .. போன்றவற்றின் அபத்தங்களோடு கட்டுரையாளர் விதவிதமான போஸில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் அந்தக் கட்டுரைகளில் அமைந்திருக்கும். இந்த தகவல்களிலிருந்து சம்பந்தப்பட்ட இடத்தைப் பற்றின சரியான சித்திரத்தை, அந்தப் பிரசேத்தின் ஆன்மாவை நிச்சயம் நம்மால் அறிய முடியாது. (இதயம் பேசுகிறது) மணியன் என்கிறதொரு முன்னோடி பயணக்கட்டுரையாளர் இதில் விற்பன்னராக இருந்தார். இட்லியும், சாம்பாரும் கிடைக்காமல் தவித்ததையும் பிறகு தூதரகத்தில் பணிபுரியும் உயர்அதிகாரியின் முயற்சிக்குப்பின் அந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை ஒரு அத்தியாயத்திற்கு விவரிப்பதற்கு இவரைப் போல் யாரும் இன்னும் தோன்றவில்லை என்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
ஆனால் சீனாவைப் பற்றின நூலை எழுதியிருக்கிற பல்லவி (அய்யர்) அப்படியல்ல. அறியாத பிரதேசம் என்கிற காரணத்தினால் மிகுந்த தயக்கத்திற்குப் பின் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட பத்திரிகையாளரான அவர், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக (2002 - 2007) அங்கு விருப்பத்துடன் தங்கி அங்கிருந்த சூழலுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டு அப்போதைய நிகழ்வுகளை அந்த நாட்டின் கலாசார, வரலாற்று, பொருளாதாரப் பின்னணியில் கூர்மையான அவதானிப்புகளாக எழுதின ஆங்கில நூல் Smoke and Mirros: An Experience of China. வெறுமனே புள்ளிவிபரங்களை மாத்திரம் அடுக்காமல் மக்களுடன் நெருங்கிப் பழகி எழுதப்பட்டிருக்கிற காரணத்தினாலேயே இது ஒரு முக்கியமான பயணக்கட்டுரை நூலாகிறது. இது சீனா:விலகும் திரை எனும் தமிழ் மொழி பெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.
.. சீனாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை... என்று முன்னட்டையில் குறிப்பிடப் பட்டிருக்கிற வார்த்தைகள் 'வாசகனை' சீண்டுவது போல் தெரிந்தாலும் புத்தகத்தில் உள்ளே இறங்கிய பின் அவ்வாறு குறிப்பிட்டிருப்பதின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சீனாவைப் பற்றியும் வல்லரசு கனவுகளோடு முன்னேறிக் கொண்டிருக்கும் சீனா மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சிகளைப் பற்றியும் பல ஆங்கில மொழி நூல்கள் இருந்தாலும், சீனாவின் சமகால சூழ்நிலையைப் பற்றி துல்லியமான விவரணைகளுடன் வந்திருக்கும் முதல் தமிழ் நூல் இதுவே.
()
பல நூறு வருடங்களாக மன்னராட்சி; அதற்குப் பின்னர் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்கள்; 1949-ல் இப்போது சீனா என்று அறியப்படுகிற சீன மக்கள் குடியரசின் தோற்றம், மாவோவின் காலத்தில் மக்கள் சந்தித்த இழப்புகள் மற்றும் லாபங்கள், டியானன்மென் சதுக்க படுகொலைகள்...
பிறகு 1990-களில் சீனா தன்னுடைய கடுமையான முகமுடியை சற்று தளர்த்தி பொருளாதார சீர்திருத்தங்களை அமைத்துக் கொண்ட பின்னர் அசுர வளர்ச்சியின் வேகத்தில் திரும்பிப் பார்ப்பதற்கு அதற்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.
கண்டொனீஸ் மற்றும் (பெரும்பான்மையான புழக்கத்தில் இருக்கும்) மாண்ட்ரின் என்ற இரண்டு மொழிகள் பிரதானமாக இருந்தாலும், பேச்சு வடிவத்தில் வெவ்வேறு ஒலிக்குறிப்புகளுடனும் எழுத்து வடிவத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியுமிருக்கிற விநோதம், 2003 வரை இருந்த 'ஹீகோவு' என்கிற உள்ளூர் பாஸ்போர்ட் முறை, 2008 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிக்காக தன்னை சர்வதேச ஒப்பனை செய்யும் கொள்ளும் முயற்சியில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடியிருப்புகள்; புராதன கட்டிடங்கள், கடுமையாக பிரயோகிக்கப்பட்ட; படுகிற மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்தை சந்தேகமே படாமல் இயந்திரங்கள் போல் செயல்படும் இளைய தலைமுறை, வில்லன் நடிகர் நம்பியார் போல் சித்தரிக்கப்படுகிற 'நாட்டுடைப்பி' தலாய் லாமா', கம்யூனிசம் அனுமதிக்கப்படுகிற எல்லை வரைக்கும் புழங்கும் பெளத்தம் உள்ளிட்ட மதங்கள், அதனுடன் பிணைந்திருக்கும் பொருளாதார நோக்கங்கள், உலகமே வியந்து பார்த்த பெய்ஜிங் - திபெத்தின் முதல் ரயில் ...
இவற்றையெல்லாம் இந்த நூலில் பல்லவி மிக சுவாரசியமான நடையில் சொல்லியிருக்கிறார்.
1980-வரை வணிகமே இல்லாதிருந்த ஒரு தேசம் சுமார் இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பது எப்படி என்கிற சிக்கலான கேள்வியைப் பற்றி யோசிப்பதற்கு ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. உலக மைய நீரோட்டத்தில் இணைய பொருளாதார சீர்திருத்தங்களை சீனா ஏற்றுக் கொண்டது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் அதன் ஒற்றைக்கட்சி சர்வாதிகார அமைப்பு. ஆம் அதுதான்.
உதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு பெரிய தொழிற்சாலையை அமைப்பதற்கோ, ஒரு பாலத்தைக் கட்டுவதற்கோ 'கட்சி' தீர்மானித்தது என்றால் அதைத்தடுக்கவோ கேள்வி கேட்கவோ யாருமிருக்க மாட்டார்கள்; இருக்கவும் முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிந்துவிடும். எந்த வேலையையும் இழிவாக நினைக்காத, 'அரசாங்கம் நம்முடைய நன்மைக்குத்தான் செய்யும்' என்று நம்பும் அல்லது நம்பக் கட்டாயப்படுத்தப்படும் மக்கள், அகலமான சாலைகள் முதற்கொண்டு எல்லாவிதமான அடிப்படை கட்டுமானங்களும் கொண்ட நாடு... கட்டி வைக்கப்பட்டிருந்த பொருளாதார மிருகம் திமிறிக்கொண்டு அசுரத்தனமாக ஓடினதில் ஆச்சரியமில்லை. சீனாவின் பிரதான பலமும் பலவீனமும் அதன் சர்வாதிகாரம். ஆனால் அதே சமயம் இந்தியாவை நோக்கினால் பலகட்சி ஜனநாயகத்தில் எந்தவொரு வேலையையும் ஆரம்பிப்பதற்குள்ளாகவே பாராளுமன்றத்தில் குடிமிப்பிடி சண்டை ஆரம்பமாகிவிடும்.
இன்னொரு நுட்பமான விஷயமும் உண்டு. சர்வாதிகாரம் என்பதாலேயே டியானன்மென் சதுக்க போராட்டம் போல் 'எப்போது வேண்டுமானாலும்' மக்கள் பொங்கி எழக்கூடிய வாய்ப்புண்டு. அதனாலேயே மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது; அதை நிகழ்த்தியும் கொண்டுமிருக்கிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற 'பெரிய பெயரை' மாத்திரம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவில் அந்தப் பிரச்சினையில்லை. ஒரு முறை டிவி பெட்டியை லஞ்சமாகக் கொடுத்து சிரமப்பட்டு ஆட்சியில் அமர்ந்துவிட்டால் போதும்; ஐந்து வருடத்திற்கு ஜாம் ஜாமென்று சுரண்டிக் கொண்டிருக்கலாம். அதிர்ஷ்டமிருந்தால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதை நீட்டித்துக் கொள்ளலாம். பெயருக்கு பாலத்தைக் கட்டிவிட்டு அதன் பெரும்பாலான செலவை சுருட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒன்று... இங்கேயும் ஜனநாயகம் அப்படியொன்றும் பொங்கி வழிந்துவிடவில்லை என்பதை பல மனித உரிமை மீறல் சம்பவங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்தியக் காவல் நிலையத்தின் ஏதாவதொன்றில் ஒரு நாள் இரவைக் கழித்தால் கூடப் போதும்.
ஆசியாவின் இருபெரும் நாடுகளான சீனாவையும் இந்தியாவையும் அடிப்படையான விஷயத்தில் சுருக்கமாக ஒப்பிடுவேமேயானால்.. முன்னது சர்வாதிகாரத்தின் பலவீனம் மற்றும் பொருளாதாரத்தின் பலம் ஆகியவற்றின் கலவை. பின்னது ஜனநாயகத்தின் பலம் மற்றும் பொருளாதார பலவீனம்.. என்று மேம்போக்காக சொல்லாம். இரண்டு நாடுகளிலுமே ஊழல் பொதுவானதாக இருந்தாலும் சீனாவின் தனிநபர் வருமானம் இந்தியாவைப் போல இருமடங்கு. இந்தியாவும் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற நாடுதான் என்றாலும் அது நிதானமாக ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் சீனா, அமெரிக்காவை இலக்காகக் கொண்டு ஒரு மைல் வேகத்திற்கு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. சீனாவின் வளர்ச்சியும் இந்தியாவின் ஜனநாயகத்தையும் இணைத்துக் கொண்ட ஒரு பிரதேசம் ஒன்று இருக்குமானால் அதுதான் அடித்தட்டு மக்களின் சொர்க்கமாக இருக்க முடியும் எனக் கருதுகிறேன்.
சீனாவின் காட்டுத்தனமான அடக்குமுறையை இந்தியாவின் ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு நம்மால் பெருமை அடைய முடிந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு எல்லாவித அடிப்படை வசதிகளையும் அமைத்துத் தந்திருக்கிற சீனாவையும் குப்பைத் தொட்டியில் தன்னுடைய அடுத்த வேளைச் சோற்றை தேடிக் கொண்டிருக்கிற குடிமக்களை 'அப்படியே' வைத்திருக்கிற இந்தியாவின் அரசியலையும் நினைக்கிற போது நம்முடைய உடனடித் தேவை 'கருணையுள்ள ஒரு சர்வாதிகார' அமைப்புத்தானோ என்று தோன்றுகிறது.
()
ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல் பல்லவியின் மிதமான நகைச்சுவை கலந்த சுவாரசியமான எழுத்து சுகமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும், தன்னுடைய அனுபவங்களையும் நூல்நெடுக இந்தியாவோடு ஒப்பிட்டுக் கொண்டே செல்கிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களில் வழக்கமாக நிகழும் எந்தவித சங்கடமும் நேராமல் மிக நேர்த்தியாக தமிழிற்கு மாற்றியிருக்கும் ராமன் ராஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. இது ஒரு நேரடி தமிழ் நூலோ என்கிற மயக்கத்தை அந்த சிறப்பான மொழிபெயர்ப்பு ஏற்படுத்துகிறது. பொருத்தமான 'சிவப்பு' நிற அட்டையைக் கொண்டிருக்கும் இந்த நூல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 'கிழக்கு' வெளியீடுகளில் இந்நூல் மிக முக்கியமானதொன்றாக இருக்கும். சீனாவைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற ஆர்வத்தை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது.
வருகிற புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூற்களின் பட்டியலில் இந்நூலை நிச்சயமாக இணைத்துக் கொள்ளலாம் என்கிற பரிந்துரையை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
இந்நூலை இணையத்தில் வாங்க http://nhm.in/shop/978-81-8493-164-8.html
ப்ரீத்திக்கு.... மன்னிக்கவும்.. பல்லவிக்கு நான் கியாரண்டி. :-)
suresh kannan
14 comments:
I deliberately opted for the original version. This book give much more insight into China and the life of Chinese than what one gets from atimes.com, Francois Gautier, B.Raman columns.
Will recommend as a good read to any one that wants to know about contemporary China.
நூலறிமுகத்திற்கு நன்றி
நூலறிமுகத்திற்கு நன்றி. இன்னும் அதிக அறிமுகங்களை தர வேண்டுகிறேன்.
இப்படிக்கு
-புத்தக திருவிழாவிற்க்கென்று சேர்ந்துள்ள சேமிப்பு
நல்லதொரு அறிமுகம் சுரேஷ்.
ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பினும் வழக்கமான பயணக்கட்டுரையாக இருக்குமோ என தவிர்த்திருந்தேன்.
நிச்சயம் வாசிக்கும் ஆவலை தூண்டியிருக்கிறது...
நாடு இப்போது போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் அண்டை அயலாரை பற்றியும் தெரிந்துகொள்வது அவசியமல்லவா..
உங்களின் இந்த வாசகம்தான் மிகப்பிடித்தது :
நம்முடைய உடனடித் தேவை 'கருணையுள்ள ஒரு சர்வாதிகார' அமைப்புத்தானோ என்றும் தோன்றுகிறது
சுரேஷ்,
நூல் அறிமுகத்திற்கு நன்றி.புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய பட்டியலில் இப்புத்தகத்தை சேர்த்து கொள்கின்றேன்.
உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
சுரேஷ் கண்ணன்
இந்த நூலைப் பற்றி முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், உங்களின் அறிமுகம் படிக்க வாங்க தூண்டுகிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நல்ல அறிமுகம் அண்ணே!
it was a good book...
jeyamohan
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நூலறிமுகத்திற்கு நன்றி.
//
(இதயம் பேசுகிறது) மணியன் என்கிறதொரு முன்னோடி பயணக்கட்டுரையாளர் இதில் விற்பன்னராக இருந்தார். இட்லியும், சாம்பாரும் கிடைக்காமல் தவித்ததையும் பிறகு தூதரகத்தில் பணிபுரியும் உயர்அதிகாரியின் முயற்சிக்குப்பின் அந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை ஒரு அத்தியாயத்திற்கு விவரிப்பதற்கு இவரைப் போல் யாரும் இன்னும் தோன்றவில்லை என்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
//
வெளிநாட்டுக்கு சென்றாலும், அவர்களது கலாச்சாரத்தோடு ஒன்றாமல், நம்முடைய விஷயங்களையே தேடி அலைந்து கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு சரியான சாட்டையடி! ;-)
ரொம்பநாளா வாங்கனும்னு நெனச்சுகிட்டு இருக்கேன் உங்க விமர்சனம் அருமை
பயணக்கட்டுரைகள்லையே நான் மொதல்ல படிச்சதுன்னு பாத்தா மாணியன் தென்னமேரிக்க பயணக்கட்டுரை தாங்க.
அவருடைய எழுத்தும் நல்லா சுவாரசியமாத்தாங்க இருக்கும்.
எந்த சித்தாந்த மனநிலையோ , எதிர்ப்பு மனநிலையோ இல்லாமல் சீனாவை உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் ,
பல இடங்களில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு இருப்பார் , சார்ஸ் பயத்தில் ஒரு தேசமே காணாமல் போக இருந்ததை அழகாக சொல்லியிருந்தார் ,
நல்ல புத்தகம் , நல்ல விமர்சனம்
நல்ல புத்தகம். எனது வாசிப்பனுபவம் இங்கே. https://kadaisibench.wordpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/
Post a Comment