Sunday, June 07, 2009

கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..

நண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய ஆரம்பித்தது. தாமதிக்கிற நண்பர் மீது எரிச்சலாய் வந்தது. வீட்டிற்கு தொலைபேச முயன்று தொடர்பு கிடைக்காததால் எரிச்சல் இன்னும் கூடியது. சற்று நேரம் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். திரும்பவும் நண்பர் வருகிறாரா என்று ஒரு தொலைநோக்கு பார்வை பார்த்தேன். வருவதாய் காணோம்.

எரிச்சலின் உச்சக்கட்டத்தில் நண்பருக்கே தொலைபேசி, "என்னங்க, எவ்ளோ நேரம்" என்றேன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன். என் குரலில் தெரிந்த குரூரம் எனக்கே பீதியூட்டியது.

()

பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்துப் பேர்து ஏன் அவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தில் கணினியில் வேலை முடிந்த பிறகும் தேவையேயில்லாமல் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறேன். சற்று நேரம் இணையத் தொடர்பிலோ அல்லது மின்தொடர்பிலோ துண்டிப்பு ஏற்பட்டால் கை நடுக்கத்துடன் எப்போது அது சரியாகும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் போது கூட ஒரு சானலில் சற்று நேரம் தொடர்ந்து தங்கவிடாமல் ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தத் தோன்றுகிறது. திரைப்பாடல்களின் ஒரு தொகுப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனம் சட்டென்று இன்னொரு தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை கேட்டு தாவச் சொல்கிறது.

"சும்மா இரு" என்று தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படும் வார்த்தையைக் கடைப்பிடிப்பது என்பது கேட்ட கணத்தில் எளிதாக தோன்றினாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது புலனாகிறது.

(மீள்பதிவு. http://sureshkannan.posterous.com/-69-ல் பிரசுரமானது)

suresh kannan

6 comments:

சென்ஷி said...

சும்மா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு வடிவேலு ஒரு படத்துல நடிச்சுக் கூட காமிச்சுருப்பாரு.. ஆனா பாருங்க நம்ம மக்கள் வேலையில்லாம இருந்தா சும்மாவா இருக்கேன்னு நக்கலடிப்பானுங்க! :)

குசும்பன் said...

சும்மா இருக்கமுடியாமல் மீள்பதிவு செய்யும் பொழுதே தெரிகிறது...சும்மா இருப்பதும் எம்புட்டு கஷ்டம் என்று:)))

பிச்சைப்பாத்திரம் said...

சென்ஷி: நன்றி.

குசும்பன்: உங்கள் கமெண்ட்டை ரசித்தேன். :-)

குப்பன்.யாஹூ said...

ஆமா இப்போ நாம் இனைய அடிமை ஆகி விட்டோம். இனைய இணைப்பு நின்று விட்டால் எதிர் படும் மனிதர்களிடம் அந்த கோபத்தை எரிச்சலை வெளி படுத்துகிறோம்.


இணையமும் கூகுளையும் நம் சிந்தனை போக்கை, மாற்றி விட்டன.

குப்பன்_யாஹூ

Beski said...

இத படிச்சதுக்கு அப்புறமாதான் யோசிச்சுப் பாத்தேன். உண்மைலேயே சும்மா இருக்குறது கஷ்டம்தான். இந்த மாதிரி உண்மையெல்லாம் எப்படித்தான் உங்களுக்கெல்லாம் புரியுதோ தெரியல. மிக அருமை.

ஷண்முகப்ரியன் said...

சும்மா என்ற சொல்லே வேறு மொழியில் இல்லை என்று நினைக்கிறேன்.