Monday, January 02, 2006

அருவியின் ஆய்வு நூல்களுக்கான பரிசுகள்

'அருவி' ஆய்வு மையம் மற்றும் பதிப்பகம், சில ஆய்வு நூல்களை தேர்வு செய்து பரிசுகளை வழங்கியது. அதற்கான விழா 27.12.2005 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் நூல்நிலைய அரங்கில் நடைபெற்றது. பரிசு பெற்ற நூல்ளையும் அதன் ஆசிரியர்களின் பட்டியலையும் மற்றும் விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்களின் பட்டியலையும் பார்க்க.:

()

என்னுடைய சுமார் பதினைந்து ஆண்டு கால வாசிப்பனுபவத்தில் புனைவு அல்லாத படைப்புகளின் வாசிப்பு சமீப காலமாக அதாவது ஐந்தாண்டுகள் முன்புதான் ஆரம்பித்தது. அதுவரை கதாபாத்திரங்களின் உணர்வுச் சிக்கல்களுக்கு இடையே ஊடாடிக் கொண்டிருந்த எனக்கு, நிஜமான, யதார்த்தமாக சமூகம் சார்ந்த உருவாக்கங்களைப் படிக்க ஆரம்பிக்கும் போது எவ்வளவு வருடங்களை வீணடித்திருக்கிறோம் என்கிற வருத்தமேற்பட்டது. நூல் நிலையங்களுக்குச் செல்கிற போதெல்லாம் கண்ணில் படுகிற எல்லா நூல்களின் தலைப்புகளையும் பார்ப்பது என் வழக்கம். அவ்வாறு என் கண்ணில் இடறிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய பல நூல்களின் தலைப்புகள், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவில்லை அல்லது அவ்வாறு படிக்கத் தூண்டிய நூட்களை முயன்று பார்க்கும் போது அதனுடைய கடுமையான மற்றும் வறட்சியான மொழியின் காரணமான நூலின் உட்புக முடியாமல் சோர்ந்து போய், ஆய்வுக் கட்டுரை என்றாலே முகம் திருப்பிக் கொள்கிற ஒவ்வாமைக்கு ஆளானேன். 'பண்டிதர்களுக்காக பண்டிதர் மொழியில் எழுதப்படும் ஆவணங்கள்' என்பதே ஆய்வுக்கட்டுரை நூல்களின் வரையறை என்பதான ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானத்திற்கு வந்தேன்.

என்றாலும் பிற்பாடு சில ஆய்வு நூல்கள், உதாரணமாக வேங்கடாசலபதியின் 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' போன்ற புத்தகங்கள் சுவாரசியமான மற்றும் தகவல்பூர்வமான உள்ளடக்கத்துடன் எழுதப்பட்டு படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவையாக இருந்தன என்பதையும் மறுக்கவியலாது. இவ்வாறிருக்க, வழக்கமான நாவல், சிறுகதை போன்றவற்றிற்கு பரிசு என்பது அல்லாமல் ஆய்வு நூல்களின் பரிசளிப்பு விழாவிற்கு சென்றது இதுவே முதன் முறை. இந்த விழாவில் கலந்து கொண்டதின் மூலம் பல களங்களில், பல தளங்களில் எழுதப்படும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாகியுள்ளது.

()

(வழக்கமான Disclaimer: நினைவில் தங்கின பகுதிகளை எழுதுவதால் தகவல் பிழைகளோ, கருத்துப் பிழைகளோ இருக்கக்கூடும்)

5.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விழா, 6.30 மணிக்கு ஆரம்பித்ததை குறை என்று சொல்லலாம் என்றாலும், நிகழ்ச்சியின் ஆக்கப்பூர்வமான நோக்கத்தை பார்க்கும் போது இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று தோன்றியது. 'அருவி' அமைப்பை அறிமுகப்படுத்தி பேச ஆரம்பித்த பேராசிரியர் ச.மாடசாமி,

"'அருவி' அமைப்பானது இப்போது தளிர்நடை போட்டு ஆரம்பமாகியிருக்கிறது. அறிவொளி இயக்கத்திற்காக கிராமப்புறங்களில் பயணம் செய்கிற போது அங்குள்ள மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் பல்வேறு திறமைகள் இருப்பதை கண்டு பிரமிக்க நேர்ந்தது. அவர்களின் 'சொலவடை'களும் போடும் விடுகதைகளும் (ஆத்தா நெஞ்சில முட்டி பால் குடிச்ச மகன் செத்துப் போனான் - விடை: தீப்பெட்டி) மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவ்வாறு அடையாளம் காணப்படாமலிருக்கிற பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் முகமாகத்தான் அருவி என்கிற இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட ஆண்டில் எழுதப்பட்டிருந்த ஆய்வு நூல்களை பரிசீலித்து சிறந்த நூல்களைப் பாராட்டி பரிசு கொடுக்கவாரம்பித்திருக்கிறோம். இனிவரும் வருடங்களிலும் இது தொடரும்" என்று முடித்தார்.

பேராசிரியர் வே. வசந்தி தேவி தலைமை உரையாற்றும் போது (இன்றைய கல்வி முறை குறித்து வெளிப்பட்டிருக்கிற இவரது சிந்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவருடன் சுந்தரராமசாமி நிகழ்த்திய கல்வி குறித்த உரையாடல்கள் 'காலச்சுவடு' வெளியீடாக வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள்)

"இங்கு பரிசு வழங்கப்படப்போகிற நூல்களைப் பற்றி ஏதும் பேச முடியாத நிலையிருக்கிறேன். காரணம், சம்பந்தப்பட்ட எந்த புத்தகங்களும் என் கைக்கு வந்து சேரவில்லை. சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது பொதுவாக தமிழில் ஆய்வு நூல்களின் தரம் உயர்ந்ததாக இல்லை. மேற்கத்திய நாடுகளில் ஒருவர் ஒரு தலைப்பைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வேண்டுமானால் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது ஆகும். அவர் ஆய்வுக்கு எடுத்திருக்கிற தலைப்பைப் பற்றி இதுவரை எழுதப்பட்டிருக்கிற அனைத்து நூல்களையும் படித்து முடித்தால்தான் அவர் பட்டம் பெறும் வாசலுக்கே நுழைய முடியும். ஆனால் இந்தியாவிலோ 'Fast Food culture' போல் அரையும் குறையுமாக இரண்டு ஆண்டுகளிலேயே பி.எச்டி வாங்கிவிட முடிகிறது. இந்நிலை மாற வேண்டும். இதைப் பற்றி என் சக ஆசிரியர்களிடம் கூறும் போது அவர்கள் கூட இதை ஏற்க மறுப்பது வேதனை தருவது. மேலும் விமர்சனக்கலை என்பதும் தமிழில் வளர வேண்டும்" என்று கூறி முடித்துக் கொண்டார்.

()

அடுத்ததாக பரிசு பெற்ற நூல்களை அறிமுகப்படுத்தும் விதமாக படைப்பாளி ச.தமிழ்ச்செல்வன் பேசினார். (இவரும் அறிவொளி இயக்கப் பணிக்காக கிராமப் புறங்களில் களப் பணி செய்தவர் என்பதை அறிந்திருப்பீர்கள். 'இருட்டு எனக்குப்பிடிக்கும்' 'ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' போன்ற சிறு சிறு கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் மொத்த தொகுதிகளாகவும் வந்திருக்கின்றன. பொதுவாக நான் அவதானித்ததில் களப்பணி செய்கிறவர்களின் பேச்சு மிக இயல்பானதாகவும், சுவாரசியமானதாகவும் தாங்கள் சொல்ல வந்தததை சொல்கிறார்கள்). பரிசு பெற்ற புத்தகங்களில ஐந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தகத்தின், கட்டுரையின் சிறப்பமசங்களை சுவையாக கூறினார். (குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் இவரது பேச்சு நீண்டுக் கொண்டே போக ஒருங்கிணைப்பாளர் பாரதி பாலன் அனுப்பிய துண்டுச் சீட்டு கூட இவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.)

இவர் முதலில் எடுத்துக் கொண்ட புத்தகம்: கரசூர் பத்மவாதி எழுதிய 'நரிக்குறவர் இனவரைவியல்'. நமது சமூகத்தால் அதிகம் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்படுகிற, அருவருக்கிற, முறையாக ஆவணப்படுத்தப் படாத நரிக்குறவர்களின் வாழ்வியலைப் பற்றின நூல். தமிழ்ச் செல்வன் இதுகுறித்து பேசியதில் இருந்து பொதுவாக:

"அநாகரிகமான மனிதர்கள் என்று நாம் அவர்களை குறிப்பிடுகிறோம். அவர்களிடத்திலேதான் வரதட்சணைக் கொடுமையோ, கணவனை இழந்த பெண்ணை விதவையாக்கி கொடுமைப்படுத்துவதோ போன்ற நம்முடைய உள்ள தீய பழக்கங்கள் இல்லை. ஆனால் நாம், இயற்கையோடு இயைந்து வாழ்கிற அவர்களை அநாகரிகமானவர்கள் என்கிறோம். இது போன்ற பல முன்தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை மறுபரீசீலனைக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. பத்மாவதி இந்த நூலை கவனத்தோடும், மிகுந்த உழைப்போடும் ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. என்றாலும் சில இடங்களில் தன்னையறியுமால் பழக்கப்பட்ட சமூக உணர்வில் 'நாகரிகமில்லாத அவர்கள்....' என்று குறிப்பிட்டுருந்ததை தவிர்த்திருக்கலாம்."

இந்த நூலைப் பற்றின வெங்கட்டின் பதிவு.

(to be continued)