Wednesday, January 18, 2006

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள்

இது ஒரு தொடர் பதிவாக இருக்கும். நீண்ட நாட்களாகவே யோசனையிலேயே இருந்து இப்போதுதான் சாத்தியமாகியிருக்கிறது. தலைப்பு இவ்வளவு இலக்கியத்தனமாக இருந்தால்தான் ஒரு 'கெத்தாக' இருக்கும் என்கிற திட்டத்தில் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டது. உள்ளடக்கமும் அதே போல் இருக்கும் என்று எண்ணி யாரும் ஏமாற வேண்டாம். என் இயந்திர வாழ்வில் அபூர்வமாக கடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றியும், என்னை பாதிக்கின்ற சமூக நிகழ்வுகளைப் பற்றிய என் எண்ணங்களைப் பற்றியும், நான் படித்த நூல்களைப் பற்றியுமாக எல்லாவற்றையும் இந்தத் தொடர் உள்ளடக்கியிருக்கும். இதற்கு முன்னோடியாக நான் கருதுவது ஆ.வியில் க.பெ.எழுதுபவர் என்றாலும் சமீபத்தில் என் பழைய டைரிகளை புரட்டிப் படித்துக் கொண்டிருந்த போது அது மிகுந்த சுவாரசியமானதாக இருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன். அப்போதே தொலைக்காட்சியிலும், விழாக்களிலும் பார்த்த நிறைய விருது பெற்ற படங்களைப் பற்றின குறிப்புகளை என் டைரிக்களில் எழுதியிருக்கிறேன். நிறைய fiction வகையறாக்களை படித்திருக்கிறேன். (ஜெயமோகனின் 'ரப்பர்' நாவலை சிலாகித்து எழுதியிருக்கிறேன்). நிறைய பியர் குடித்து அதற்கு கணக்கும் எழுதி வைத்திருக்கிறேன். காமம் என்கிற உணர்வினால் நிறைய அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். (எந்தெந்த நாள் masturbate செய்தேன் என்கிற குறிப்பை கூட எழுதியிருப்பது விநோதம்தான்). இன்னும் பல அந்தரங்கமான (எல்லோருக்கும் தனித்தனியாக இது அந்தரங்கமாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனுக்கு நிகழக்கூடிய பொதுவான அனுபவங்கள்தாம்) குறிப்புகள்........

இப்போது அதை மீண்டும் படிக்கும் போது நிறைய அனுபவங்கள் எதுவுமே ஞாபகம் இல்லாமல் ஆச்சரியமாக உணர்வது ஏனென்று புரியவில்லை. மூளையில் உள்ள நியூரான்களுக்கு வயதாகிவிட்டதா அல்லது பெரும்பாலானவை துக்ககரமான கனவுகளில் கழுவித் துடைக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. எப்படியோ அந்த கணங்களில் கொஞ்சம் மீண்டும் வாழ்ந்தது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அதையே சற்று நாகரிமாக இணையத்தில் தொடரலாமா என்கிற யோசனையைத்தான் நீண்ட தயக்கத்திற்கு பிறகு இப்போது சாத்திமாக்கியிருக்கிறேன். மீண்டும் பேனா பிடித்து டைரி எழுதுவது சாத்தியமில்லை என்கிற முடிவினால் இப்படியொரு யோசனை.

ஆகவே நண்பர்களே, இந்தத் தொடர் உங்களை விட எனக்கு நானே எழுதிக் கொள்வதுதான் பிரதானமாக இருக்கப் போகிறது. இதில் உங்களுக்கும் பயனுள்ளதான செய்தி எங்காவது ஒளிந்து கொண்டிருக்கலாம். கண்டுபிடித்து பயன்பெறுங்கள். :-)

()

சுஜாதாவின் க.பெ.தான் இதற்கு தூண்டுதல் என்பதால் அவரையே திட்டி ஆரம்பிப்பதுதான் முறையாக இருக்கும்.

ஆனந்த விகடனின் தளத்தை நிறைய உருப்படியான விஸயங்களுக்கு பயன்படுத்தினாலும் அவ்வப்போது தன் சுயதம்பட்டங்களுக்காகவும், உபயோகத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆழமாக எழுத வேண்டிய விஸயத்தை மேலோட்டமாக எழுதிவிட்டு (வெகுஜன வாசகர்களிடம் தன் அறிவுஜீவி பிம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி இது) சம்பந்தப்பட்ட விஸயத்தில் அதிகம் அறிந்தவர்கள் கேள்வி எழுப்பினால், "நான் எத எழுதினாலும் தப்பு கண்டுபிடிக்கறதிலேயே சில பேர் இருக்காங்க" என்று அலுத்துக் கொள்வதும் அவர் வழக்கம்.

சமீபத்தில் நடந்த பிராமண மாநில மாநாட்டில் அவர் பெற்ற விருதை குறிப்பிட்டு 'தன்யனானேன்' என்று எழுதியவர் தொடர்ந்து இதுவரை அடக்கப்பட்ட அவர்களின் பொறுமையையும் அது விளிம்பிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு அவர்களின் ஆதிமூலங்களை ஆராய்ந்து யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று சரித்திர ஆராய்ச்சி செய்து ....... வளர்த்துவானேன். தன்னை ஒரு வைணவர் என்று பல சமயங்களிலும் படைப்புகளிலும் எப்போதும் நிறுவிக் கொண்டிருந்தவர், சற்றே பரிணாம வளர்ச்சி பெற்று பிராமணியத்திற்கு வந்திருக்கிறார். இதையே சொல்லிக் கொண்டிருந்தால் வாசகர்கள் தவறாக நினைத்து விடப் போகிறார்களே என்று நினைத்தோ என்னவோ, அந்த தீட்டு போக தலித்களின் பிரச்சினையையும் போகிற போக்கில் லேசாக கவலைப்பட்டிருக்கிறார்.

ஒரு தனிமனிதனாக அவர் தன் சுய ஜாதி குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளட்டும்; அதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளனாக, பல்வேறு இனத்தவர்களை தன் வாசகர்களாக கொண்டிருக்கும் சுஜாதா, தன் இனம் குறித்த சிந்தனைகளை பொதுமேடையில் எந்தவித கூச்சமுமின்றி வைப்பாராயின் அவர் இது வரை கற்ற கல்வி எதற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. கொஞ்சமாக யோசிக்கத் தெரிகிற எனக்கே, ஜாதி என்கிற அடையாளமும், அமைப்பும் எவ்வாறு மனிதனை சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்றும் அதைக் கடந்து வருவதுதான் முற்போக்காக சிந்திக்க, செயல்படுகிற ஒருவனின் கடமையாக இருக்கும் என்றும் என்னை யாராவது ஜாதியுடன் சம்பந்தப்படுத்தி பேசும் போது மலக்கிடங்களில் விழுந்தது போன்று அருவருப்பாக தோன்றும் போது, மெத்தப்படித்த சுஜாதா இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

()

சண்டக்கோழி என்கிறதொரு படம் வந்திருப்பதே 'குட்டி ரேவதி' விவகாரத்திற்கு பிறகுதான் பல அறிவுஜீவிகளுக்கு தெரிந்திருக்கும் எனும்படி சிற்றிதழ் சார்ந்த சூழலில் இது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. ஒரு படத்தின் வசனத்திற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்தான் தார்மீக பொறுப்பு என்றாலும், எஸ்.ரா வசனம் எழுத கிடைத்த வாய்ப்பை தன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தியிருப்பது துரதிர்ஸ்டவசமானதுதான். அதை பொது மேடையில் மறுத்திருப்பது இன்னும் மோசமான சூழ்நிலை. இப்படியான அவர் குட்டிரேவதியை பழிவாங்க என்ன முகாந்திரம் என்று இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை தீவிரமாக அறிந்திருக்கிற இலக்கிய 'பெரிசுகள்' இதைப் பற்றி வரும் சிற்றிதழ்களில் குமுறப் போகிறார்கள்.

தவமாய் தவமிருந்து படத்தில் சேரன் இதே போல் குஸ்பு என்கிற பெயரை வெளிப்படையாய் பயன்படுத்தி கிண்லடித்ததை ஏனோ எந்த பெண்ணுரிமை இயக்கங்களோ, அமைப்புகளோ எதிர்க்காதது ஆச்சரியம்தான். (சம்பந்தப்பட்ட குஸ்பு சாதாரண நேரமாக இருந்தால் எதிர்த்திருப்பார். அவரே தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம் என்கிற நிலையில் இருக்கிறார்.)

இது தவிர சேரனின் இந்த சென்டிமென்ட் குப்பைப் படத்தை சிற்றிதழ்களில் முறையே உயிர்மையில் ஜெயமோகனும் காலச்சுவடில் தேவிபாரதியும் புகழ்ந்து தள்ளியிருப்பது ஆச்சரியம்தான். வழக்கமாக இந்த மாதிரியான காமெடியை அ.ராமசாமிதான் செய்வார். (அது ஒரு கனாக்கலாத்தையும், கஸ்தூரி மானையும் குமுதம் தீராநதியில் பாராட்டியிருக்கிறார்). காட்டமான விமர்சனங்களை சேரன் எதிர்கொள்கிற தொட்டாற்சுணுங்கித்தனமான அணுகுமுறை என்னை நகைக்க வைக்கிறது. மட்டமான சூழலில் இவர் எடுத்திருப்பது புனிதப்படமாம். அதை யாரும் விமர்சிக்கக்கூடாதாம். ஜனவரி 2006 தீம்தரிகிடவில் ப்ரியா தம்பி என்கிறவர் இந்தப்படத்தை மிகுந்த யதார்த்த நோக்குடன் எழுதியிருப்பதை சேரன் முதலில் படிக்கட்டும்.

()

ஆங்கிலம் என்கிற மொழி எப்போதுமே எனக்கு பிடித்தமானதாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கிறது. அது என்னை நிரம்பவும் அலட்சியப்படுத்தினாலும் அதன் மீதான பிரேமை எனக்கு குறைந்தபாடில்லை. I will be taken leave என்றெல்லாம் எடுத்த விடுமுறைக்கு லீவ்லெட்டர் எழுதி மற்றவர்களால் நகைக்கப்பட்டு அவமானமாய் உணர்ந்தாலும் அந்த மொழியை தீவிரமாக ஸ்பரிசிக்க மனம் விழைகிறது. இப்படியான கல்வி கற்ற நாட்களில் பட்ட அவஸ்தையை என்னுடைய மகள் மூலமாக மீண்டும் பட வேண்டியிருக்கிறது. வீட்டிலும் ஆங்கிலத்தில் பெற்றோர்கள் பேசினால்தான் ஆங்கில அறிவு வளரும் என்கிற ஆசிரியையின் உத்தரவு காரணமாக "Talk Englishப்பா" என்று மகள் நச்சரிக்க மறுபடியும் ரெபிடெக்ஸை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியின் மூலமாகவே இதற்கொரு விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு மாலை வேளையில் தொலைக்காட்சியை surf-ப்பிக் கொண்டிருக்கும் போது ஆவேசமும் அழுத்தமாய் ஒரு குரல் ஆங்கிலத்தில் ஒலிக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் மற்றொரு குரல் ஆவேசத்துடன் அதே வாக்கியத்தை தமிழில் உச்சரித்துக் கொண்டிருந்தது. அடடா அடித்தது ஜாக்பாட்! இத்தனை நாள் இதைக் கவனிக்காமல் போய்விட்டோமே என்று தோன்றி அவர்கள் பாட்டிற்கு பரிசுத்த ஆவியை பிடித்துக் கொண்டிருக்கட்டும், நாம் பாட்டிற்கு இதை உபயோகித்து ஆங்கில உரையாடல் அறிவை வளர்த்துக் கொள்வோம் என்று தோன்றிற்று. இதைத்தான் கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்."......... வேண்டாம். நாகரிக மனிதர்களுக்கு அது அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கிறேன்.

()

பயணம் தொடரும்.........

8 comments:

Anonymous said...

(எந்தெந்த நாள் masturbate செய்தேன் என்கிற குறிப்பை கூட எழுதியிருப்பது விநோதம்தான்).
If you publish that alone you will become a literary star overnight :).

Boston Bala said...

இந்த ஆரம்பம் பிடித்திருக்கிறது. (மூன்றாவது பகுதி மட்டும் புரியவில்லை... எந்த நிகழ்ச்சியோ, என்ன பழமொழியோ ஹ்ம்ம்ம்)

---குஸ்பு என்கிற பெயரை வெளிப்படையாய் பயன்படுத்தி கிண்லடித்ததை ---

'சினிமாக்காரி' என்று விளிக்கப்படும் விதம், விவேக்/சத்யராஜ் போன்றோரின் நகைச்சுவையில் வரும் name-droppings, peppy குத்துப்பாடல்களில் வரும் ரம்பா/ஷகீலா போன்ற உவமைகள் என்று எல்லாவற்றுக்கும் கன்டணங்கள் போட்டு மாளாது என்னும் அயர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்.

வானம்பாடி said...

//சுஜாதாவின் க.பெ.தான் இதற்கு தூண்டுதல் என்பதால் அவரையே திட்டி ஆரம்பிப்பதுதான் முறையாக இருக்கும்.//

:))

Jayaprakash Sampath said...

varavErkiREn

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

//(மூன்றாவது பகுதி மட்டும் புரியவில்லை... எந்த நிகழ்ச்சியோ, //

பாலா,

பரிசுத்த ஆவி என்கிற வார்த்தையை சற்று யோசித்தால் புரிந்து போகும். :-)

Anonymous said...

சுரேஷ்,

அழகாய்த் தொகுத்து இருக்கிறீர்கள். இணைய பாப்பார்கள்(ர்=மரியாதைக்குரிய விகுதி) சண்டைக்கு வந்துவிடப் போகின்றனர்!!!

ஜெ. ராம்கி said...

//தன்னை ஒரு வைணவர் என்று பல சமயங்களிலும் படைப்புகளிலும் எப்போதும் நிறுவிக் கொண்டிருந்தவர், சற்றே பரிணாம வளர்ச்சி பெற்று பிராமணியத்திற்கு வந்திருக்கிறார்

:-)

//கோயிஞ்சாமி

:-) :-)

Anonymous said...

அதுசரி, சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு இருந்தபோது, இந்த மாஸ்டர்பேட் இச்சை வந்ததா, அதை எப்படித் தவிர்க்க முடிந்தது என்றும் எழுதுங்கள். உதவியாய் இருக்கும். :-))