நடிகர், நடிகைகள் மட்டுமே உலகம் என்பதாய் அவர்கள் ஒண்ணுக்கு போவதைக் வைத்துக் கூட நிகழ்ச்சி அமைப்பதை பண்டிகைக் கால சிறப்பு நிகழ்ச்சிகளாக அமைத்து அபத்தமாக இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியிலிருந்து விலகியிருக்க சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வழக்கமாக கண்காட்சி தொடக்கத்திலேயே சென்று விடும் நான் இந்த வருடம் தாமதமானதிற்கு சமீபத்தில் சபரிமலைக்கு சென்றிருந்ததுதான் காரணம். (இதுபற்றி என் பதிவில் பின்பு விரிவாய் எழுதுகிறேன்).
வழக்கமான அதே காயிதே மில்லத் கல்லூரி. வெள்ள நிவாரண உதவியை இங்கே வழங்குவதாக யாராவது புரளியை கிளப்பி விட்டுவிட்டார்களோ என்று எண்ணும்படி ஒரே கூட்டம். மதிய நேரம் சென்றால் கூட்டத்தை தவிர்த்து விடலாம் என்று நான் முன்யோசனையாக செயல்பட்டதெல்லாம் வீணாகிவிட்டது. கண்காட்சியின் உள்ளே இருக்க வேண்டிய கூட்டத்தில் பாதி, வெளியே நடைபாதைக் கடைகளில் Pirated Books-களையும் நூல்நிலையத்திலிருந்து திருடி வைத்திருந்த நூல்களையும் சீப்பான விலையில் வாங்க போட்டி போட்டது.
போன வருட கண்காட்சியில் வாங்கின புத்தகங்களையே இன்னும் படிக்காத நிலையில் இந்த வருடமும் புத்தகம் வாங்க ஏன் வந்தேன் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். இத்தனைக்கும் நான் கலந்து கொள்கிற இலக்கிய கூட்டங்களில் வெளியே போடப்படும் புத்தகங்களையும் வாங்குகிறேன். இரண்டு, மூன்று நூல்நிலையங்களிலும் உறுப்பினராகவும் இருக்கிறேன். அப்புறமும் ஏன்? கொழுப்புதான் என்று தோன்றுகிறது. நண்பர்களிடேயே நடைபெறும் விவாதங்களில் தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்பதும் 'இதெல்லாம் படித்திருக்கிறேன் பார்' என்று பீற்றிக் கொள்வதற்காகவும்தான் இதெல்லாமுமோ? சக மனிதனை விட ஒரு அடி அதிக உயரம் நிற்கும் ஆசைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறதோ என்று தோன்றுகிறது. அடுத்த வேளை உணவிற்கு உத்தரவில்லாமல் நடைபாதையில் ஒருவன் துடித்துக் கொண்டிருக்கும் போது ஐந்நூறு கொடுத்தெல்லாம் புத்தகம் வாங்குவது குற்ற உணர்வைத் தூண்டுகிறது என்றால் அது உங்களுக்கு நாடகத்தனமாகக்கூட தோன்றலாம். :-) சரி. இதை அப்புறம் பார்ப்போம். நான் தவறாகவும் இருக்கலாம்.
()
உள்ளே நுழைந்தவுடன் போண்டா கடைகளும் நடிகர்களையும் மிஞ்சும் கவிஞர்களின் பிரம்மாண்ட flex-களும் வரவேற்றன. அரிமா சங்கம் சார்பில் ஒரு பெரிய வேன் வைக்கப்பட்டு ரத்ததானம் பெறப்பட்டுக் கொண்டிருப்பதும் அதன் முன்னால் சில புண்ணியாத்மாக்கள் க்யூவில் நின்று கொண்டிருந்ததும் வரவேற்கத்தக்க அம்சங்கள். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்திலேயே தன் விளம்பரத்தை கிழக்கு பதிப்பகம் அமைத்திருந்தது புத்திசாலித்தனமான காரியமாகப் பட்டது. பாய்ஸ் படத்தில் அந்த இளைஞர்கள் கூட்டமான இடங்களில் மாமிகளை உரச குறிப்பிடும் இடங்களில் இனி புத்தக கண்காட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம் எனும்படி உரசலான நெரிசல். ராட்டினனும் பஞ்சுமிட்டாயும் இல்லாத குறையாக திருவிழா கூட்டம். பல கடைகளில் உள்ளே நுழையத் தயங்கும்படியான நெரிசல். அமைப்பாளர்கள் இன்னும் சற்று அதிக இடத்தை ஒவ்வொரு கடைக்கும் ஒதுக்கியிருக்கலாம் என்று தோன்றியது. பெரும்பாலான கடைகளில் கல்லாவில் அமர்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியோடு சில்லறையை எண்ணிக் கொண்டிருக்க, சில கடைகளில் மட்டும் சுடுகாட்டில் பிரியாணி கடை வைத்தவர்கள் மாதிரி ஈயடித்துக் கொண்டு சோகமான அமர்ந்திருந்தனர்.
கிழக்குப் பதிப்பகத்தில் நண்பர்கள் பா.ராகவன் (இவரை இனி (பா)ன்பராக் ராகவன் என்று அழைக்கலாம்), பத்ரி, முத்துராமன், சத்யா, கிருபா, கனடா வெங்கட்ரமணன், வெங்கடேஸ், ஆகியோர்களையும் anyindian.com-ல் பிரசன்னாவையும் சந்தித்து உரையாடியது சற்று ஆறுதலான விடயம். உயிர்மையில் பிரசன்னா புண்ணியத்தில் மனுஸ்யபுத்திரனை சந்தித்து போது என்னுடைய வலைப்பதிவை படிப்பதாக கூறி ஆச்சரியப்படுத்தினார்.
()
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் (ஏற்கெனவே இவரைப் பற்றி அறிந்திருந்தாலும் சாருநிவேதிதாவின் உசுப்பலில் ஆர்வம் அதிகமாகி நீண்ட நாட்கள் தேடிக் கொண்டிருந்த புத்தகம்)
நினைவோடை - பிரமிள் - சுந்தரராமசாமி
இல்லாத ஒன்று - சு.ரா சிறுகதைகள் (50சதவீத கழிவு என்பதால் வாங்கியது)
நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன்
உறுபசி - எஸ்.ரா (நாவல்) (எந்த கதாபாத்திரமாவது யாரையாவது திட்டுகிறதா என்று கவனித்துப்படிக்க வேண்டும்)
இவன்தான் பாலா - ஆ.வி. தொடர்
கண்டதைச் சொல்லுகிறேன் - ஞாநி
கேள்வி பதில்கள் - ஞாநி
சிற்றிதழ்கள்:
திரை, கவிதா சரண், ரசனை, தீம்தரிகிட, புது எழுத்து, தொனி (பழையது) பன்முகம்.
()
இதைத் தவிர வெளியே நடைபாதையில் முதுகெலும்பு ஒடிய தேடி அதிசயமாக கிடைத்த புத்தகங்கள்:
வேடந்தாங்கல் - ம.வெ.சிவக்குமார்
அக்கா - அ.முத்துலிங்கம்
கிணறு - ஆர்.சூடாமணி
படைப்பியல் - சி.சு. செல்லப்பா.
()
இதையும் தவிர எனக்குக் கிடைத்த விலைப்பட்டியல்களின் படி, என்னுடைய ரசனையின் அடிப்படையிலும் சிறப்பாக இருக்கக்கூடும் என்கிற ஊகத்தின் அடிப்படையிலும் நான் வாங்க விழையும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யும் நூல்கள்:
உயிர்மை:
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
சுந்தரராமசாமி - நினைவின் நதியில் - ஜெயமோகன்
நதிமூலம் - மணா (கட்டுரைகள்)
சாம்பல் நிற தேவதை - ஜீ.முருகன் (சிறுகதைகள்)
காவ்யா:
இலக்கிய விசாரங்கள் - க.நா.சு கட்டுரைகள் 1, 2
தமிழ் இலக்கிய வரலாறு - தெ.பொ.மீ
தமிழினி:
கொற்றவை - ஜெயமோகன்
ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன் (கட்டுரைகள்)ஏவாளின் இரண்டாவது முடிவு - பாவண்ணன்
வ.உ.சி. நூலகம்:
மகாத்மா காந்தி வரலாறு - வின்சென்ட் ஹீன்
சேகுவேராவின் கொரில்லா யுத்தம் - ரெஜி டெப்ரே
உலகம் மாற வேண்டும் - எம்.என்.ராய்
கிழக்கு பதிப்பகம்:
கண்ணீரும் புன்னகையும் - நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை
ஜப்பான் : ஒரு ·பீனிக்ஸின் கதை
துப்பாக்கி மொழி - தீவிரவாத இயக்கங்களைப் பற்றின நூல்
ஆதவன் கதைகள் - மொத்த தொகுப்பு (இலக்கிய ரசிகர்கள் தவற விடக்கூடாத நூல்)
சொல்லில் இருந்து மெளனத்திற்கு - அய்யனார் (நேர்காணல்களின் தொகுப்பு)
காலச்சுவடு:
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு (மறுபதிப்பு)
தமிழகத்தில் அடிமை முறை - ஆய்வு நூல்
எனது இந்தியா - ஜிம் கார்ப்பெட் (தமிழல் யுவன் சந்திரசேகர்)
நிழல்முற்றம் - பெருமாள் முருகன் (நாவல்)
பொய்த்தேவு - க.நா.சு (மறுபதிப்பு)
ஒற்றன் - அ.மி. (மறுபதிப்பு)
ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் - டி.வி.ஈச்சுவாரியார்
அடையாளம்:
·பிராய்ட் - அந்தோனி ஸ்டோர் - தமிழில் சி. மணி
உலகமயமாக்கல் - மான்·பிரட் பி.ஸ்டெகர் - தமிழில் க.பூர்ணச்சந்திரன்பின்நவீனத்துவம் - கிறிஸ்தோபர் பட்லர் - தமிழில் பிரேம்பயங்கரவாதம் - சார்லஸ் டிவுன்சென்ட் - தமிழில் ஞாநி
13 comments:
தங்களின் எளிய கட்டுரைக்கும் நூல்களின் அறிமுகத்திற்க்கும் நன்றி.
// நடிகர், நடிகைகள் மட்டுமே உலகம் என்பதாய் //
இனிய சுரேஷ்,
குசும்புதான்.
*
// அடுத்த வேளை உணவிற்கு உத்தரவில்லாமல் நடைபாதையில் ஒருவன் துடித்துக் கொண்டிருக்கும் போது //
அது சரி,
நகைக்குறி வரைகின்ற சித்திரமோ - அங்கு
நானென்னும் தூரிகை வண்ணங்களோ!
பாவம் நா.காமராசன். இரண்டு எழுத்துகளை மாற்றிப்போட்டிருக்கிறேன்.
அன்புடன்
ஆசாத்
Suresh Kannan,
Thanks for the books intro. But cut out humour.
- Siva.
Suresh Kannan,
Thanks for the books intro. But cut out humour.
- Siva.
thx!
என்னங்க, ஒரு பதிப்பகம் தனது விலைப்பட்டியலில் ஒரு நடிகருடைய படம் போட்டு விளம்பரம் செய்து இருந்தது கண்ணில் படவில்லையா?
அல்லது...............
Suresh,
Thanks for the (prescribed)list.
Regards,
Raj
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
பதிவில் சொல்ல விட்டுப் போனது:
கிழக்கு பதிப்பகத்தில் பங்குச்சந்தை மற்றும் பணம் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவைப் பற்றி பரபரப்பாக கட்டுரைகள் எழுதி வரும் சோம.வள்ளியப்பனை சந்தித்தேன். அவரிடம் பேச நினைத்திருந்த விஸயங்கள் பரபரப்பில் மறந்து போயிற்று. மற்றும் 'மார்க்கெட்டிங் மாயாஜாலம்' நூல் எழுதின சதீஸ் என்பவரையும் நண்பர் சத்யா அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடமும் ஏனோ சாவகாசமாக பேச முடியவில்லை. விருட்சம் பதிப்பகத்தில் அழகிய சிங்கரையும் ரா.ஸீனிவாசன் என்பவருடனும் உரையாட முடிந்தது.
மற்றபடி இந்த வருடம் புதிய பதிப்புகள் அதிகம் வரவில்லை என்றே நினைக்கிறேன். நண்பர்கள் தெளிவுப்படுத்தவும். அடையாளம் பதிப்பகத்தில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய சார்த்தரைப் பற்றின புத்தகமும் முக்கியமானதொன்று. பிரசன்னா பரிந்துரையின் பேரில் இசுலாமிய நூல்கள் விற்கும் கடையில் குர்-ஆன் புத்தகம் தமிழில் இலவசமாக கிடைப்பதற்கு பெயரை பதிந்து கொண்டேன்.
//இனிய சுரேஷ்,
குசும்புதான்.//
ஆசாத்,
நமது சமூகம் நடிகருக்கு அளிக்கும் அநியாய முக்கியத்துவம் பற்றி நாஞ்சில் நாடன் ஜனவரி 06 உயிர்மையில் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ரத்தம் சற்றே சூடேறும்.
//ஒரு நடிகருடைய படம் போட்டு விளம்பரம் செய்து இருந்தது கண்ணில் படவில்லையா?//
குமரேஸ்:
இதுபற்றி அவர்களிடமே கிண்டலாக கேட்டே விட்டேன். "அடுத்த புத்தகம் விக்ரமின் வாழ்க்கை வரலாறா?" :-)
----ஒரு நடிகருடைய படம் போட்டு விளம்பரம் செய்து இருந்தது---
Which one... some clues please! or send me a personal email ;-)
பாலா,
சூரியன் உதிக்கும் திசையை பாருங்கோ தெரியும்
Nanri Kumaress.
Post a Comment