Saturday, January 28, 2006

பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 3

புத்தக கண்காட்சியில் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் சுந்தரராமசாமியின் பிரமிளைப் பற்றின நினைவோடை நூலையும், எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' நாவலையும், இயக்குநர் பாலாவின் ஆ.வி. தொடர் அடங்கின புத்தகத்தையும் வாசித்து முடித்துவிட்டேன். முந்தைய இரு நூல்களைப் பற்றி பிற்பாடு சாவகாசமாக எழுத உத்தேசம். பாலாவின் தொடரை ஏற்கெனவே ஆ.வி.யில் வாசித்திருந்தாலும் இப்போது படிக்கும் போதும் என்னால் புன்னகையையும், உணர்ச்சிவசப்படுதலையும், உள்ளுக்குள் பொங்கும் அழுகையையும் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தத் தொடரை படித்தவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். பல சமயங்களில் என்னையே நான் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலிருந்தது. வாழ்க்கையில் சிரமப்பட்டு ஜெயித்த ஒவ்வொருவரும் தன்னுடைய அனுபவங்களை இவ்வாறு பதிவு செய்து வைப்பது நல்லது.

கல்லூரி படிக்கும் போது என்னுடைய வருங்கால லட்சியம் மற்றும் கனவு, ஒன்று பத்திரிகையாளனாக ஆவது, இல்லையென்றால் சினிமாவில் சேருவது. (behind the screen). (உருப்படாத பயல்கள் எல்லாம் சினிமாவில் சேருவதையே லட்சியமாக ஏன் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை) ஆனால் எல்லாம் வல்ல காலம் என்னை புரட்டிப் போட்டு சுழற்றி அடித்ததில் இரண்டுமே நிறைவேறாமல் போனதில் எனக்கு சற்று வருத்தம்தான். இப்போது பூவாவுக்கு பிரச்சினை இல்லாத வாழ்க்கை முறை என்றாலும் கூட இன்னமும் அடிமனதில் மேற்குறிப்பிட்ட துறைகளில் நுழைய முடியாமற் போன ஆதங்கம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

அதற்கும் முன்னதாக என்னிடமிருந்த இன்னொரு லட்சியம் எழுத்தாளனாக ஆவது. இதற்கான ஆசையையும், சாத்தியப்படலாம் என்கிற நம்பிக்கையையும் என்னுள் தோற்றுவித்தவர் சாட்சாத் பெருமதிப்பிற்குரிய சுஜாதா பெருமகனார் அவர்கள்தான். சமையலறைக்குள்ளேயும், வரதட்சணை, சமுதாயப் பிரச்சினைகள் போன்றவற்றிற்குள்ளும், இல்லையென்றால் சேகர்-மாலா காதலைச் சுற்றியும் உழன்று கொண்டிருந்த சிறுகதை வடிவத்தை வெளியே கொண்டு வந்து சிறுகதை வாசிப்பு என்கிற அனுபவத்தை இலகுவாகவும், சுவாரசியமானதாகவும் ஆக்கினவர். சிறுகதை என்கிற வடிவத்தைப் பற்றின ஒரு outline அவரிடமிருந்துதான் எனக்குக் கிடைத்தது. அந்த வடிவத்தில் பல பரிசோதனைகளை முயன்று பார்த்திருக்கிறார். ஆனால் அவை முழுவதுமே வெகுஜன வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டே - அவர்களுக்குப் புரிய வேண்டும் - நிகழ்த்தியதால் தரம் என்கிற விஷயத்தில் நிறைய சமரசம் செய்து கொண்டிருக்கிறார். இதனாலேயே சிற்றிதழ் வட்டத்தில் அவர் பெயர் சற்று தயக்கத்துடனே உச்சரிக்கப்படுகிறது. என்றாலும் இன்று எனக்கு அறிமுகமாகியிருக்கும் பல இலக்கிய ஆளுமைகள் சாத்தியமானது அவரின் மூலமாகத்தான் என்பதுதான் விநோதம்.

அவர் தந்த மானசீக உற்சாகத்திலும், பாதிப்பிலும் நானும் சிறுகதை எழுதுவது என்று முடிவு செய்வது என்று உள்ளே புகுந்தேன். இப்போது பரிச்சயமாகியிருக்கும் வேறுவிதமான இலக்கியப் படைப்புகள் அப்போது அறிமுகமாகியில்லாததால் என்னுடைய முன்மாதிரியாக வெகுஜன பத்திரிகைகளில் வந்திருந்த சிறுகதைகளே முன்நின்றன. அதற்கும் முன்னால், அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் நண்பனின் வேண்டுகோளின் பேரில் சென்னை வானொலியில் 'இளையபாரதம்' என்கிற நிகழ்ச்சிக்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக்கொடுத்தேன். மிக்சியில் தேங்காய் அரைப்பது போலவும் கூட்ஸ் ரயில் ஓடுவது போலவும் வந்த சப்தங்களுக்கு நடுவில் அந்த நாடகத்தை ஒரு மாலை நேரத்தில் கேட்டு மகிழ்ந்தோம். அது போலி டாக்டர் ஒருவரைப் பற்றின நாடகம். "இந்த ஞாபகமறதி நோய் எத்தனை வருஷமா இருக்குது?" "ஞாபகமில்லீங்களே" என்கிற மாதிரியான அசட்டுத்தனமான நகைச்சுவை துணுக்குகள் அடங்கினது. நாடகத்தின் முடிவில் இதை ஆக்கினவரின் பேராக நண்பனின் பெயர் ஒலித்த போது என் புன்னகை மறந்து போனது. அடுத்த வருடமும் அதே மாதிரி இன்னொரு நாடகம் எழுதி (நியூமராலஜியில் அசட்டுத்தனமாக நம்பிக்கை வைத்து அவஸ்தைப் படுகின்ற ஒருவனைப் பற்றியது) அது படு கேவலமாக மேடையில் நிகழ்த்தப்படுவதை நேரிலேயே காணக்கிடைத்தது இன்னொரு நகைச்சுவையான அனுபவம்.

சரி. சிறுகதை எழுத முடிவு செய்தாயிற்று. எப்படி எழுதுவது? எல்லாப் பத்திரிகையையும் உன்னிப்பாக அவதானித்து அந்தப் பத்திரிகையின் பாணியில் அதற்கேற்றாற் போல் எழுத வேண்டும் என்கிற உபதேசத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (அம்புலிமாமாவிற்கு எழுத வேண்டுமென்றால் கட்டை விரலை சப்பிக் கொண்டே எழுத வேண்டுமா?) என்றாலும் பல சிறுகதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தேன். பல பத்திரிகைகள் என்னை உதாசீனப்படுத்தினாலும் என் எழுத்துலகத்தின் வாசலை திறந்து வைத்தது 'சாவி'. சாவகாசமாக புரட்டிக் கொண்டிருந்த ஒரு வாரத்தில் சட்டென்று யாரோ என்னை நெற்றிப்பொட்டில் தாக்கினாற் போல் என் சிறுகதையையும் என் பெயரையும் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அந்த விசித்திரமான உணர்வு இன்னமும் கூட என் நியூரான்களில் பதிந்திருக்கிறது. ஒருவன் தன் வாழ்க்கையின் அன்றாட தினங்களில் காத்திருக்க நேருகிற கணங்களைப் பற்றின கதை. மிக்க சந்தோஷம். சுஜாதா பாணியில் சொன்னால் 'நகரமே அலம்பி விட்டாற் போலிருந்தது'. சந்தோஷத்துடன் இந்தச் செய்தியை சுற்றத்திடமும் நட்பிடமும் பகிர்ந்து கொண்ட போது கிடைத்த எதிர்வினைகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.

ஆனால் இதில் அதிக சந்தோஷமடைந்தவள் என் அம்மாதான். தயிர்க்காரி முதற்கொண்டு அனைவரிடமும் நான் ஏதோ இமாலய சாதனையைப் படைத்து விட்டதாக புளகாங்கிதமடைந்தார். என் அடுத்தடுத்த சிறுகதைகளும் அந்த பத்திரிகையிலேயே வெளியாயிற்று. இதற்கிடையில் முதல் கதை வெளியானதற்காக 25 ரூபாய்க்கான காசோலை ஒன்று வந்து சேர, என்னவோ ஏதோ என்று பரபரப்பில் கவரை பதட்டத்துடன் கிழித்ததில் காசோலை இரண்டாக கிழிந்து போனது. (நான் எழுதிக் கிழித்ததற்கு கிழிந்து போன காசோலை). ஏதோ இந்திய-சீன ஒப்பந்தத்தின் நகல் கிழிந்து போனது போல் என் அம்மா பதட்டப்பட, அதை வங்கியில் எடுத்துப் போன போது அங்கிருந்தவர் என்னை சந்தேகத்துடன் பார்த்ததை நான் ரசித்துச் சிரித்தேன். பின்னர் பிரசுரமான கதைகளுக்கு ஏன் பணம் அனுப்பவில்லை என்று ஏதோ 3 கோடி ரூபாய் முதல் போட்டவன் பங்குதாரருக்கு அனுப்பும் நோட்டீஸ் போல அதிகாரமாக ஒரு கடிதம் அனுப்பினேன். "எழுத்தாளர்கள் மணி மணியாக எழுத வேண்டுமேயன்றி 'மணி'க்காக எழுதக் கூடாது என்று பின்னாளில் அவர் ஏதோ ஒரு கேள்வி-பதிலில் எழுதியது என்னைக் குறித்துத்தானா என்று தெரியாது.

இவ்வாறாக வருமான வரி கட்டும் அளவிற்கு எழுதிக் குவித்து பெரிய எழுத்தாளனாக ஆகியிருக்க வேண்டிய எனக்கு வாழ்க்கை தன் குரூர முகத்தை ஒரு பெண் வடிவில் காட்டியது. 'அமிலங்களின் கோஷம் பசி' என்கிற புதுக்கவிதையைப் போல 'ஹார்மோன்களின் கோஷம் காதல்' என்கிற உணராத அப்பாவியாய் பேனாவைத் தூக்கிப் போட்டு விட்டு உடலின் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதில் மும்முரமானேன். பின்னர் தாடியும் பீருமாக 'பெண் என்கிற மாயப்பிசாசு' என்கிற சித்தர் பாடல்கள் தேனாக ஒலித்ததில் என்ன ஆகியிருக்கும் என்று அதிகம் விளக்க வேண்டாம். அனுபவஸ்தர்கள் அதிகமிங்கே. இதிலிருந்து பெண்களை குரூரமான நகைச்சுவையுடனும், ஆபாசமான வார்த்தைகளுமாக எதிர்கொள்ளத் துவங்கினேன். பெண்கள் சீட்டில் அமர்ந்து எழுந்திருக்காமல் கலாய்ப்பது, அவர்களது அங்கங்கள் குறித்து காட்டமான என் அபிப்பராயங்களை தெரிவிப்பது என நன்றாகவே அவர்களது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டேன்.

ஆனால் இம்மாதிரியான துர்எண்ணங்கள் என்னிடமிருந்து விலகிப் போகத் துவங்கினது பாலகுமாரனைப் படிக்கத் துவங்கியதும்தான். பெண் என்கிற சக வாழ்க்கைப் பயணியின் ஆதார உணர்ச்சிகள், அவர்களின் உடல் மன ரீதியான பிரச்சினைகள், சிக்கல்கள், ஆணாதிக்க சமூகம் அவர்களை அரக்கத்தனமாக அழுத்திக் கொண்டிருக்கும் அவலம், குடும்பம் என்கிற ஆதார அமைப்பின் முதுகெலும்பான பெண்ணின் அத்தியாவசியம் என்று பெண்களை குறித்தான என் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்தது பாலகுமாரனின் படைப்புகள்.

மேற்சொன்ன இரு எழுத்தாளர்களிடமிருந்தும் விலகி சிறிது தூரம் நான் வந்துவிட்டேனென்றாலும் என்னை திசை திருப்பியவர்கள் என்கிற முறையில் இருவருக்கும் நன்றி.

4 comments:

PKS said...

This post is shown as most read in Thenkoodu. As expected, no comments :-). To break that tradition, I am posting this comment.

Keep writing. very interesting. Konjam vekaama odukireerkalo enru thonuthu. Ovvoru para-vaiyum extend and elaborate panni inum ezuthalaame.

Thanks and regards, PK Sivakumar

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
சுவாரசியமான ஒரு பதிவு. நீங்கள் நடந்து வந்த பாதையின் சில சுவடுகளை உற்று நோக்கத் தந்ததற்கு நன்றி !!

உங்கள் நடையில் ஆங்காங்கு தெறிக்கும் மெல்லிய நகைச்சுவை உங்கள் பலம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

rajkumar said...

very interesting

rajkumar

Boston Bala said...

எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்திருக்கிறதே... சுவையான ட்ரான்ஸ்ஃபர்மஷேன்கள்