வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 2
"எழுத்திலும் வாழ்விலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை மறுபரிசீலிப்பதும், நிராகரித்துக் கொண்டே இருப்பதும், பின்பெஞ்சுகளில் அமர்வதும் பிடித்த காரியங்கள்" (அட நம்ம ஆளு!) என்று தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் தமிழவனைப் பற்றி ஏற்கெனவே 'லேசுபாசாக' அறிந்து வைத்திருந்தாலும், இலக்கியக் கோட்பாடுகள் பற்றின அவரது பல்லை உடைக்கும் கட்டுரைகளை மட்டும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அவரின் புனைவு இலக்கியங்களை இதுவரை முயன்றதில்லை. ஒரு கலகவாதியாக என்னுள் படிந்திருக்கும் அவரின் பிம்பம் காரணமாக அவரின் புனைவெழுத்தை படிக்க மிக்க ஆவலோடு இருந்தேன். அண்மையில் அவர் எழுதிய நாவலான 'ஜி.கே எழுதிய மர்மநாவல்' என்கிற புதினத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆரம்ப கால சரித்திர புனைவு எழுத்தாளனால் எழுதப்பட்ட நாவலைப் போலிருந்த அந்தப் படைப்பு எனக்குள் ஏமாற்றத்தையும் சோர்வையும் அளித்தது. அத்தியாயங்களின் நடுவே ஆசிரியரால் எழுதப்பட்ட குறிப்புகள் போல் சிலதை எழுதி, இது ஒரு மரபு மீறிய நாவல் என்கிற மாதிரியான ஒரு மாயத் தோற்றத்தை ஆசிரியர் எழுப்ப முனைந்திருக்கிறார்.
சில குறிப்புகளில் சக எழுத்தாளனை மறைமுகமாக கிண்டல் செய்யும் தொனியும் காணப்படுகிறது. ('நாகர்கோயிலில் ஜங்ஸனில் இருந்து புளியமரத்தின் அடியில் ஒரு கடைவைத்து நடத்துகிறார் என்று அறிந்து ஒரு அபூர்வமான கேரள சரித்திரம் கிடைக்குமென்று இ.எம்.எஸ்.நம்பூதரி பாட் சொல்லி அனுப்பப் போயிருந்தேன். போனபிறகுதான் தெரிந்தது அப்படி ஒரு கடை புளியமரத்தின் கீழ் இருக்கவில்லை என்று.' பிரமித்து நின்ற எனனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி 'ஜிப்பாவை தொட்டுக்கொண்டே சொன்னார் போத்தி. "கேளுங்கள் கவனமாக, கோலப்ப பிள்ளை என்று ஒருத்தர் இருக்கவில்லை. இலக்கிய அபிமானி கோலப்ப பிள்ளை ஒரு கற்பனைப் பாத்திரம்".)
இவரின் மற்ற படைப்புகள் குறித்தான வாசக அனுபவம் குறித்து நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
()
அருவி என்கிற அமைப்பு சார்பாக ஆய்வு நூல்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பற்றி சமீபத்தில் எழுதியிருந்தேன். சரணம் ஐயப்பாவிற்கு வருகிற பின்னூட்டங்கள் கூட அதற்கு இல்லாமல் ஈயடித்தது குறித்து எனக்கு வருத்தம்தான். இதனாலேயே அதன் தொடர்ச்சியை எழுத எண்ணம் வரவில்லை. பரவாயில்லை. அந்த நிகழ்ச்சியில் மாலன் பேசின சில பகுதிகள் குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.
பரிசு வாங்கின ஆய்வாளர்களை வாழ்த்தி பேசும் போது மாலன் கூறியதாவது: "புதுமைப்பித்தன் படைப்புகளில், அவரது சமகாலத்திய எந்தவொரு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைப் பற்றின எதிரொலி மறைமுகமாகக்கூட இல்லை. புதுமைப்பித்தன் மட்டுமல்ல எந்தவொரு மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இது இல்லை." (நினைவிலிருந்து எழுதுவதால் சரியான வார்தைப் பிரயோகங்களை எழுத முடியவில்லை. ஆனால் அவர் சொல்லிய கருத்து இதுதான்) இந்தியா டுடே இலக்கிய மலர் 2000-ல் பதிவாகியிருக்கிற கலந்துரையாடலின் படி சாருநிவேதிதாவும் இதே மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் எழுகிறது. மாலன் மற்றும் சாரு கூறினபடி, அந்தந்த கால பிரச்சினைகளின் எதிரொலி படைப்புகளில் இருந்தால்தான் நல்ல இலக்கியமா? இல்லையென்றால் அந்த எழுத்து இலக்கியமாதா?
இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதல் என்னவெனில் ஒரு படைப்பு காலத்தை, இனத்தை, மொழியை தாண்டி, உலகமயமானதாகவும், எந்தக் காலத்திற்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். எந்தவித சமூக பிரச்சினைகளும் அந்தந்த பிராந்தியத்தை தாண்டி எல்லா மனிதருக்கும் பொதுவானதாகத்தானிருக்கும். பிரச்சினைகளின் பெயர்களும், ஆழமும், தீவிரமும் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் சமூக பிரச்சினைகளை தொடாமல் எழுதப்படும் எழுத்தினால் பொழுதுபோவதை தவிர ஒரு உபயோகமுமில்லை. மேலும் அது காலத்தினால் நிலைப்பதுமில்லை.
இது குறித்து உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன்.
9 comments:
'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' படியுங்க சுரேஷ். எனக்கு நிறைவைத் தந்தது; உங்களுக்குப் பிடிக்கலாம்.
பாலா,
'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' என்கிற நாவலையும் தமிழவன் எழுதியிருக்கிறார் என அறிகிறேன்.
//சமூக பிரச்சினைகளை தொடாமல் எழுதப்படும் எழுத்தினால் பொழுதுபோவதை தவிர ஒரு உபயோகமுமில்லை. மேலும் அது காலத்தினால் நிலைப்பதுமில்லை.//
இங்கு இலக்கியம் என்பது ஒரு பொழுது போக்கு கதையாக மட்டுமே இருக்கிறது. கோபப்படாதீர்கள்.
1.எழுதுபவன் எழுத வேண்டும் என்ற உந்துதலில் எழுதுகிறான்.
2.படிப்பவன் சும்மா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படிக்கிறான். நான் இந்த இந்தப் புத்தகங்களைப் படித்தேன்... என்று கூறுவது சென்னையில் சரவணபவன் நல்ல இருக்கும், மதுரையில் முனியாண்டி விலாஸ் நல்லா இருக்கும் என்று பேசுவதற்கும் தர்க்கம் செய்யவுமே பயன்படும்.
படிப்பவர்களுக்கு அறிவுப்பசி, புத்தகங்கள் அவர்களின் உணவு. அவ்வளவே.
3.எழுதுபவன் சமூதாயத்தை பற்றி எழுதினாலும் , படிப்பவன் அதே சமுதாயத்தைப் பற்றிப்படித்தாலும் சமூகம் அப்படியேதான் இருக்கிறது.
4.அதாவது எழுதுபவனாலும் அதைப் படிப்பவனாலும் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை.
சாரு எழுதும் கட்டுரைகளில் பிற நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி படிக்கும் போதும் போது பெரும்பாலும் அவர்களின் எழுத்து எதோ ஒரு வகையில் அந்த சமுதாயத்தில் மாற்றத்தை/ விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. ஒரு வேளை அவர் அப்படிப்பட்ட எழுத்துக்களை மட்டுமே படிக்கிறாரோ?
சுதந்திரப் போராட்டக்கால எழுத்துக்களினால் சமூக மாற்றங்களோ அல்லது விழிப்புணர்வோ அந்தக்காலத்தில் ஏற்பட்டு இருக்கலாம்.அது தவிர்த்து இந்தியாவில் அல்லது தமிழகத்தில் யாருடைய எழுத்தினாலும் சமூகத்துக்கு எதுவும் நிகழ்ந்து இருக்கிறதா? உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் சமூக பிரச்சினைகளை தொட்டு எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவர்களுக்கோ சமுகத்திற்கோ ஒரு இழப்பும் இல்லை.வேண்டுமானல் சமூக பிரச்சினைகளை தொட்டு எழுதப்படும் எழுத்து அது எழுதப்பட்ட காலத்தின் சமூதாய நிகழ்வைப் பதிவு செய்யப் பயன்படுகிறது என்று மட்டும் சொல்லலாம்.
Suresh,
I have been thinking for a longtime about writers being activists or reflecting the activism of the society they live in. I was not having any clear views on it. And then one day I read a book by retired justice M. M. Ismail. I found very convincing answers there. Will try to share it sooner or later.
Regarding feedbacks, dont get into feedback mania :-). Keep writing.
Thanks and regards, PK Sivakumar
சாருவும், மாலனும் சொன்னது சரியா என்று பார்ப்பதை விட தன் மனதைக் கேட்டுக்கொண்டால் புரியும்.
வெறுமே அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்களை கோர்த்து பதிவு செய்வதில் படைப்பினுள்ளே வாசகனை இழுக்க, ஒரு நேட்டிவிடி அல்லது நம்பகத்த்னமை கொண்டு வரும் உத்தியாக பார்க்கலாம்.
ஆனால் அவர்கள் சொல்வது உத்தி பற்றியதல்ல.
சமூகப் பொறுப்பு பற்றி.நடக்கின்ற அரசியல் அல்லது சமூகநிகழ்வுகளின் மீது எழுத்தாளன் (என்கிற சிந்தனையாளனுக்கு) இருக்கக்கூடிய அபிப்ராயங்கள். ஒரு எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா என்று வினவ விரும்புபவர்கள், சமூகப் பொறுப்பு தாண்டி அழகியல் சார்ந்து எழுதுகிறவர்கள் இருக்கலாம் என்று சொல்ல விரும்புபவர்கள் இதை நிராகரிக்கலாம். சமூகப் பொறுப்பு/சிந்தனை இல்லாத எழுத்து என்ன புடலங்காய் எழுத்து..? அது வெறும் pulp!!! அவர்களுக்கு எழுத்தாளர்கள் என்று பெயர் எதற்கு என்றுதான் நடிகை படம் போட்டு பதிவெழுதும் மூக்கு சுந்தர் கேட்கிறான் :-)
உங்களுடைய இந்த தொடர் நன்றாக இருக்கிறது. ஆனால் வாழ்வின் ஊடான பயனங்கள் என்று இந்த தொடருக்கு தனியாக ஏன் பெயர் வைத்தீர்கள் என விளங்கவில்லை. இத்தனை நாள் இதைத் தானே செய்து கொண்டிருந்தீர்கள்? :-) அல்லது பெருவாரியானவர்கள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்.
மெளண்ட்ரோட்டுல கட்டவுட்டுக்கு பெயிண்டு அடிக்கிறவன்லாம் எலக்கியம் பேசுறான். நோனிஇண்டியன் வெச்சிருக்கவன்லாம் அதுக்கு கட்டியம் கூறுறான்.
சிரிப்பு சிரிபால்ல வருது.
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
கல்வெட்டு:
உங்கள் கருத்துடன் முழுவதும் மாறுபடுகிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகத்தான் இலக்கியம் என்பது ஏற்க முடியாதது. ஆதிமனிதன் பொழுதுபோவதற்காகத்தான் கற்பனையும் யதார்த்தமும் கலந்த கதை சொல்லல் என்கிற முறையை ஆரம்பித்திருக்கக்கூடும். ஆனால் அது வெவ்வேறு தளங்களுக்கு நகர்ந்து வருகிறது என்பதை இன்றைய இலக்கிய நிகழ்வுகளை கவனித்தால் உணர்ந்து கொள்ள முடியும். சமூக மாற்றம் என்பது ஒரு படைப்பை படித்தவுடன் உடனடியாக ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் நல்ல எழுத்தால் மெல்ல மெல்ல ஒருவனை தன் வசம் கொண்டுவரச் செய்ய முடியும். உதாரணமாக ஜாதி பற்றிய எண்ணங்களையெல்லாம் மனதளவில் என்னால் கடந்து வர முடிந்ததற்கு நான் படித்து வந்த புத்தகங்களே காரணம். எங்கோ மேற்கத்திய நாடுகளில் மாற்றங்களில் நிகழுவதை நம்பத்தயாராக இருக்கும் நீங்கள் ஏன் அது இங்கும் நிகழ்ந்தது / நிகழந்து கொண்டிருக்கிறது என்பதை நம்பத் தயாராக இல்லை? பல இடதுசாரிகள் தங்கள் அரசியல் ரீதியான தெளிவுகளை அடைந்தது புத்தகங்களின் மூலமாகவே என்பதை அவர்களின் நேர்காணல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். புத்தகங்களின் மூலமாக எந்த எதிர்வினையும் நிகழாது அது பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றால் சில புத்தகங்கள் சில நாடுகளில் தடை செய்யப்படுவது ஏன்?
சமூக பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வுகள் சொல்வது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல என்றே நான் நம்புகிறேன். அப்படி செய்தால் அது பிரச்சார எழுத்தாகி விடும். இந்த மாதிரியான எழுத்துக்கள் பொதுவாக இலக்கிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றின பிரச்சினைகளை தன்னுடைய எழுத்தில் மறைமுகமாக வாசகன் நன்கு உணர்கிறாற் போல் சொல்ல முடியும். எந்தவிதமான பிரச்சினையைப் பற்றியும் பேசாமல் வெறும் அழகியலுக்காக எழுதுவதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் புதுமைப்பித்தனின் எழுத்தும் மணிக்கொடி எழுத்தாளர்களின் எழுத்தும் அவ்வாறுதான் இருந்ததா என்பது விவாதத்திற்கும் ஆய்விற்கும் உரியது.
//I have been thinking for a longtime about writers being activists or reflecting the activism of the society they live in//
பி.கே.எஸ்:
வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல் களத்திலும் இறங்கி போராடுகிற அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் தமிழில் எந்தளவிற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் என்றால் தெருவில் இறங்கி போராடுவது மட்டும் அல்ல. ச.தமிழ்ச்செல்வன் போல் அறிவொளி இயக்கத்திற்காக கிராமப்புறங்களில் கல்வியைப் பரப்புவது போராடுவதே.
/// இத்தனை நாள் இதைத் தானே செய்து கொண்டிருந்தீர்கள்? :-) ///
சுந்தர்:
பழைய மொந்தையில் புதிய கள் அல்லது vice versa என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்களேன். :-)
Post a Comment