Monday, December 19, 2005

சேரனும் விருதுக்கான தவமும்

வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல சினிமாவின் அடிப்படையாக இருக்க வேண்டும்; மறுக்கவில்லை. ஆனால் சேரன் இதை வேறு விதமாய் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. கலைப்படங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் திரைப்படங்கள் பற்றி சினிமாவின் தீவிர ரசிகர்கள் அல்லாதவர்களிடம் ஒரு பிம்பம் உள்ளது. "ஒருத்தன் பல்லு வெளக்கறான்னா... அதை அரைமணி நேரம் காட்டுவானுங்கடா". சேரன் அந்த அளவிற்கு போகவில்லையென்றாலும் கூட கதையை ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே போவது திரைக்கதையின் அடிப்படை என்பதை மறந்து போய் உணர்ச்சிகரமான சம்பவங்களினாலேயே நிதானமாக இந்தப் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்து விட்டார்.

மென்மையான படங்களுக்கு நிதானமான காட்சியமைப்புகள் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் பயன்படுத்தி மற்ற காட்சிகளை ஒரு தவளைப் பாய்ச்சலில் சொல்ல வேண்டும். தனது மூத்த மகனிடம் ஏற்கெனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இளைய மகனிடம் 'நீ தனிக்குடித்தனம் போயிடுப்பா' என்று சொல்லும் போது "அவ்வாறில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தந்த துன்பத்திற்கு ஆறுதலாக உங்களிடமேதான் இருக்கப் போகிறேன்' என்று சேரன் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதை மறுக்கும் இடத்திற்கு நிச்சயம் அந்த நிதானம் தேவைதான்.

சேரன் தன்னுடைய 'ஆட்டோகிராப்' பட வெற்றியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதையே 'தவமாய் தவமிருந்து' உணர்த்துகிறது. ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையின் நினைவுகளை, வலி, வேதனைகளை, சந்தோஷங்களை அசை போட்டுப் பார்ப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் முந்தைய வெற்றி தந்த அனுபவத்தைக் கொண்டு மீண்டும் அதே பாணியை பயன்படுத்துவது சரியானது அல்ல. (இந்த இடத்தில் மற்றொரு இயக்குநர் லிங்குசாமியின் நினைவு வருகிறது. 'ஆனந்தம்' என்கிற குடும்பப் பாங்கான வெற்றிப் படத்தை கொடுத்து விட்டு அடுத்ததாக அதிலிருந்து விலகி 'ரன்' என்கிற ஆக்ஷன் படத்தை தந்த தைரியத்தை வியந்தேன்)

()

இந்தப் படக்கதையின் அவுட்லைன் என்னவென்று உங்களில் பலருக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஒரு பாசமுள்ள தகப்பனின் 35 ஆண்டுகால வரலாற்றை அவனுடனே பயணம் செய்து நமக்கு காட்சிகளாய் விரித்திருக்கும் படம். பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாக பேசப்படுவதில்லை. அந்தக்குறையை இந்தப் படம் நீக்கியிருக்கிறது.
என்றாலும் இந்தப்படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்தாய் நான் நினைக்கிறேன்.

()

ஒரு சராசரி கிராமத்து தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். இம்மாதிரியான நடிகர்கள் சரியாக உபயோகப்படுத்தப் படாமலிருப்பது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. வயதாவதற்கேற்ப அவருடைய ஒப்பனையும், body language-ம் மாறிக் கொண்டே வருவது சிறப்பு. தீபாவளிக்கு மகன்களுக்கு சட்டை துணி வாங்கிக் கொடுக்க பணமில்லாமல் தவிக்கும் போதும், மகனை இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க வட்டிக் கடைக்காரரிடம் கெஞ்சி பணம் வாங்கிக் கொண்டு கண்ணீரும், தன்னை அழுத்திக் கொண்டிருந்து துயரத்திலிருந்து விடுபட்ட உணர்வுப் புன்னகையுடனும் வெளியே வரும் போதும், எந்தப் பெண்ணுடனோ ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும்... என்று சில பல காட்சிகளில் ராஜ்கிரண் தன் பாத்திரத்தை சரியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார். ஆனால் இவர் கதாபாத்திரத்தை ஏதோ வரலாற்று நாயகர்கள் போல் அல்லாமல் அவருக்கு இருந்திருக்கக்கூடிய இயல்பான குறைகளுடனேயே சித்திரித்திருந்திருக்கலாம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரமாக சரண்யா. அறிமுகப்படமான 'நாயகனுக்குப்' பிறகு யாரும் சரியான பாத்திரம் தராத வேளையில் இந்தப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகன்கள் கேட்கும் பட்டாசுப்பட்டியலை கணவனிடம் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதாகட்டும், 'சினிமாத் தாயாக' இல்லாமல் மருமகளை எரிச்சலும் கோபமுமாய் கடிந்து கொள்வதாகட்டும், கணவனை எதிர்த்துப் பேசும் மூத்த மகனை பாய்ந்து அடிப்பதாகட்டும், சொல்லாமல் ஓடிப் போய் காதல் திருமணம் செய்து குழந்தையுடன் வந்திருக்கும் இளையமகனைப் பார்த்து 'படாரென்று' கதவை அறைந்து மூடுவதகாட்டும்.... ஒரு சராசரித்தாயை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

சேரனின் மூத்த சகோதரனாய் வரும் நபர் இயல்பாய் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரின் மனைவியாக வரும் மீனாள், புது மனைவியாக கணவனிடம் கொஞ்சுவதும், மாமியார் கூப்பிடும் போது எரிச்சலடைவதும், பிற்பாடு வசதியாக வாழும் கொழுந்தனின் வீட்டை பொறாமையும் இயலாமையுமாக நோட்டமிடுவதும்.. என ஒரு சராசரி தமிழ்நாட்டு மருமகளை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.

சேரன் அதிக காட்சிகளில் அழுகிறார் என்ற மாதிரி விமர்சனம் இருந்தது. எனக்கு அப்படித் தோன்றவில்லை. தேவையான காட்சிகளில் மட்டுமே அவர் அழுதாலும், அவர் முகம் அதற்கு ஒத்துழைக்காமல் கோணலும் மாணலுமாய் போவதால் நமக்கு அனுதாபத்திற்கு பதில் சிலசமயம் எரிச்சலே வருகிறது.

ராஜ்கிரணனின் அச்சகத்திற்கு உதவியாளராக வரும் இளவரசு, வட்டிக்கு பணம் தருபவர், சேரன் வேலை செய்யும் அச்சக உரிமையாளர் (வி.கே.டி.பாலன்) என்று சிறுசிறு பாத்திரங்கள் கூட இயல்பாய் வலம் வந்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் மிக முக்கியமான பங்கு கலை இயக்குநர் ஜே.கேவுடையது. 1970-ல் இருந்து சமகாலம் வரும் நடைபெறும் இந்தப் படத்தின் காலச்சூழலுக்கேற்ப ஒவ்வொரு களத்தையும் அமைத்திருப்பது சிறப்பு. ( அந்தந்த கால சினிமா போஸ்டர்கள், பட்டாசு, மார்க்கெட், என்று பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்). சேரனின் கல்லூரி நண்பர்கள் group study செய்யும் அந்த பிரம்மாண்டமான 'நகரத்தார் டைப்' வீட்டின் பிரம்மாண்டமும் கலைநயமும் அந்தக்காலத்தில்தான் மனிதர்கள் 'வாழ்ந்திருக்கிறார்கள்' என்று உணர்த்துகிறது.

இசை ஸ்ரீகாந்த் தேவா. 'உன்னைச் சரணைந்தேன்' என்கிற பாடலும் சேரன் தன் பெற்றோர்களை மகிழ்வாக வாழவைக்கும் காட்சிகளின் 5 நிமிட க்ளாசிகல் பின்னணி இசையும் என மெருகூட்டியிருந்தாலும் இளையராஜா போன்றவர்களின் கூட்டணி இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் உயரத்திற்கு சென்றிருக்குமே என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

()

சேரன் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அந்தந்த கால கட்டத்தை வானொலி சினிமாப்பாடல்கள், மற்றும் சம்பவங்கள் மூலம் உணர்த்துவது, தன் காதல் மனைவியுடன் குடிபோகும் அந்த அடித்தட்டு மக்களின் குடியிருப்பின் யதார்த்தமான இயல்பு, என்று பல காட்சிகளில் சிறப்பாக அமைத்திருந்தாலும் வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இவ்வளவு மெனக்கெட்டிருக்கிற சேரன் அந்தக்காலத்து 'பீம்சிங்' மற்றும் 'கே.எஸ் கோபாலகிருஷ்ணன்' காலத்து பாணி குடும்பப் பாங்கான படங்களையே மறுபடி தூசிதட்டி கொடுத்திருக்கிறார் எனும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதாநாயக ஆதிக்க ஆக்ஷன் படங்களையே அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிற சமகால சூழ்நிலைக்கு இந்த படம் வித்தியாசமாய் காட்சியளித்தாலும் உள்ளடக்கத்தில் எந்தவித வித்தியாசமுமில்லை. அடுத்த படத்தை 'அண்ணன் தங்கை' பாசமலராக சேரன் எடுக்காமல் இதிலிருந்து இன்னொரு கோணத்தில் சிறப்பான படத்தை தருவரார் என்று நம்புவோம். அவரால் அது நிச்சயம் இயலும்.

'ஆட்டோகிராப்' தந்த விருதுகளின் வெற்றி மயக்கத்தில் அதே மாதிரியானதொரு படத்தை தந்து இன்னும் அதிக விருதுகளுக்காக 'தவமாய் தவமிருக்கும்' சேரன் விழித்தெழுந்து தன்னுடைய இயல்பு பாணிக்கு மாற எல்லாம் வல்ல இயற்கையை பிராத்திக்கிறேன்.

8 comments:

Unknown said...

சுரேஷ்,
நான் சொல்வது சேரனின் படத்திற்கோ அல்லது உங்கள் விமர்சனத்திற்கும் சம்பந்தமில்லாத ...உங்களின் (உங்களைப்போல் பலர்) சமூக பார்வை பற்றிய எனது கருத்து.

//வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.//

நம்ம ஊருல ஒரு நாலெழுத்துப்படிச்சிட்டா அவர்கள் "வேலை" என்று நினைப்பது ஒரு சில வேலைகளைத்தான். அதைத் தவிர எது செஞ்ச்சாலும் அது சமூகத்தில் படிச்சிடு இதப்போய் செய்றானே என்ற ஒரு வியாக்யானம்தான் வரும்.

கல்லூரி படிப்பு படிக்கும் போதே வால்-மார்ட் கடையில் வண்டி(ஷாப்பிங் கார்ட்) தள்ளுவதும் மெக்-டொனாலாட்ஸ் ல் செய்யும் யாவும் வேலையாகவே அமெரிக்காவில்( ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா) கருதப்படுகிறது. யாரும் அதை அதிசியமாக பார்ப்பதும் என்ன இந்த வேலை பாக்குற என்று கேட்பதும் இல்லை.

அதிக சம்பளம் தரும் வேலை கிடைக்கும் வரை வெட்டியாக இருக்காமல் குறைந்த சம்பளம் தரும் வேலை கிடைத்தால் அதை வேலையாக நினைத்துச் செய்யும் மனப்பான்மை நமக்கு வளர வேண்டும்.
அப்படி இருந்தால் இது நாடகத்தனமாக தெரியாது.

கல்லூரி முடித்தவுடன் சென்னை வந்து நானும் எல்லோரும் போல் வேலை தேடிக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்தேன்.சென்னை ஜாம் பஜாரில் எண்ணைய்க்கடையில் வேலை பார்த்து இருக்கிறேன். கொத்தவால் சாவடியில் எண்ணை வாங்கி மாட்டு வண்டி, மீன்பாடி வண்டியில் பயணம் செய்து பிற கடைகளுக்கு விநியோகம் செய்தும் இருக்கிறேன்.
தங்குவதற்கு இடம் கொடுத்தார்கள் என்பதற்காக வீடீயோ கேம்ஸ் (சென்னையில இப்பவும் இருக்கா ?) கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ வாங்கித் தரும் வேலையை பார்த்திருக்கிறேன். எப்போதும் வெட்கப்பட்டதில்லை. எனக்கு ஒரு நாளும் இவை நாடகத்தனமாக தெரிந்தது கிடையாது. அனைத்தும் வேலைதான்.

ஒரு சாதாரண வேலை பார்ப்பதை சேரன் வேண்டுமானால் நாடகத்தனமாக எடுத்திருக்கலாம், ஆனால் பலருக்கு இது வாழ்க்கையில் ஏற்படும் நிசம்.

Anonymous said...

MAMUU RUMMPA KAADEEKATHINKA

APPA ONNU PAANUUINKA NEINKA ORU PADAM PANNUINKA SIR

SUMMA VUUIDEELA IRUINTHU THIS AND THAT PAANATHIKKA MAANU
VEEMARSANAM ELLARUMM SAAIYLALAM ANNA ACTION KAIIDAYAM THEEVAI

Anonymous said...

விரிவான படப்பகுப்பாய்வு. நன்றி

b said...

என்னை மறந்து நான் அழுத படம் இது என்றால் அது உண்மை. கஸ்தூரிமான் அருமையான படம். ஆனால் அது மொழிமாற்றப் படம். ஆட்டோகிராப்புக்குப் பிறகு தமிழில் வந்த அற்புதமான படம் என்றால் அது இதுதான்.

என் வாழ்வில் இவ்வாறு நடந்தது இல்லை என்றாலும் சேரன் என்னை இந்த படத்தில் வாழச் செய்தார். என் குடும்பத்தில் நடப்பது போன்ற உணர்வினைத் தந்தது அவரின் வெற்றி என்றே சொல்லுவேன்.

சென்னையில் "அவா"க்களோடு பழகிப் பழகி பின்நவீனத்துவம் என்ற பெயரில் எது நல்ல படம் எது கெட்ட படம் என்றே தெரியாமல் விமர்சனம் செய்யும் உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்!

Anonymous said...

//வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.//

not only that few more sceans also.

any way this is an excellent movie. such movies could change taste aswell as thoughts towards life.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

கல்வெட்டு:

நீங்கள் குறிப்பிட்டதின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. குறைந்த பட்சம் தனது பட்டப்படிப்பை முடித்தவர்கள் கூட குறிப்பிட்ட சில பணிகளையே செய்ய விரும்புகின்றனர். அவர்களால் எளிதில் பெறக்கூடிய வேலையை தற்காலிமாகக்கூட செய்ய அவர்களது ஈகோ அனுமதிப்பதில்லை. நான் கூட என் பள்ளிநாட்களின் ஆண்டு விடுமுறைகளின் போது எல்லா வித வேலைகளையும் செய்து எனது கல்விச் செலவிற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் நான் குறிப்பிட்ட காட்சியைப் பற்றி சொல்ல வந்தது, அது இந்தப் படத்திற்கு அந்தச் சூழ்நிலைக்கு சரியாக பொருந்தாமல் நாடகத்தன்மையுடன் இருந்தது என்பதுதான். இன்ஜினியரிங் படித்து முடித்திருக்கிற சேரன், ஒரு சிக்கலான சூழ்நிலையில் சென்னைக்கு ஓடிவந்து பொருளாதாரச் சுமையை தாங்க முடியாமல் தவிக்கிறார். அவர் படித்த படிப்பிற்கு உடனே வேலை கிடைக்கவில்லையென்பதால், அவசர தேவையை பூர்த்தி செய்ய அவர் உடனே செய்திருக்கக்கூடியது அவருக்கு ஏற்கெனவே பழக்கமான வேலையான அச்சகம் சம்பந்தப்பட்ட வேலையை தேடியிருப்பது. (அதை பிற்பாடு செய்கிறார்) ஆனால் அதை விட்டு தலையில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு கை வண்டி இழுத்திருப்பது (இந்த வண்டி கூட வடசென்னைப் பக்கத்தில் அபூர்வமாகத்தான் தென்படுகிறது) பார்வையாளர்களின் அனுதாபத்தை உடனடியாகப் பெற வேண்டி எடுக்கப்பட்ட cheap-ஆன உத்தியாகும்.

()

இளைய தலைமுறை இயக்குநர்களின் சேரன் குறிப்பிடத்தகுந்தவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சமகாலப் படங்களை ஒப்பிடும் போது இம்மாதிரியான முயற்சிகள் - குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு - தேவைதான் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் பல்வேறு பரிசோதனை உத்திகளை செய்து பார்க்க வேண்டிய இயக்குநர்கள் ஒருவிதமான cliche-வான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்கிற ஆதங்கத்தில்தான் என்னுடைய பார்வை சற்று கடுமையாக அமைந்திருந்தது.

சர்வதேசத் தர படங்களை ஒப்பிடும் போது நாம் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இம்மாதிரியான படங்கள் அதற்கு பின்னடைவையே ஏற்படுத்துகின்றன.

siva gnanamji(#18100882083107547329) said...

hey,consider the time in which cheran came to madras...then what were the jobs available t the educated unemloyed in madras?nothing wrong in that scene(cart-pulling scene) cheran came to "madras' not to "chennai"
sivagnanamji

siva gnanamji(#18100882083107547329) said...

cart pulling by Ramlingam exibits his character...respecting dignity f labour. CHENNAI has wide employent ooppertunities but nt MADRAS. Consider when ramalingam came to Madras