Monday, July 25, 2005

கிழித்துப் போடப்பட்ட கட்டுரைகள்

பக்கத்திற்கு பக்கம் ரத்தம் சொட்டும் பொழுதுபோக்கு படைப்புகளிலிருந்து என் வாசிப்பனுபவம் இயல்பாக இலக்கியங்களின் பால் திரும்புகையில் என்னை அதிகம் கவர்ந்தது புனைவு இலக்கியங்கள்தான். அதிலும் வரலாற்றையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்படும் புதினங்களை நான் அதிகம் விரும்புவேன். சிறந்த உதாரணம்: காந்தியின் கொலை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட 'ஜனகனமண', 'கல்லுக்குள் ஈரம்' போன்ற நாவல்கள். (பல பேரால் அதிகம் சிலாகிக்கப்படும் 'பொன்னியின் செல்வனை' ஏனோ என்னால் ரசிக்க முடியவில்லை)

இந்த சுவாரசியத்தில், கட்டுரைகளை படிக்காமலிருந்து விட்டேன். நூலைப் பற்றின விமர்சனங்களையோ ஆக்கப்பூர்வமாக நிகழ்த்தப்படும் விவாதங்கள், சர்ச்சைகள் போன்றவைகளையோ கவனமாக தாண்டிவிடுவதில் எனக்கு அதிக அனுபவமுண்டு. ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்த்தது போல் சிலர் எழுதிய கடினமான நடையைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் என்னை மிரளச் செய்துவிட்டன. மிகவும் தீவிரமாக அலைந்து திரிந்து தேடிப்பொறுக்கிய சிற்றிதழ்களில் கூட என்னைக் கவர்ந்த சிறுகதை, குறுநாவல்களை மட்டும் கிழித்தெடுத்து மற்றவற்றை தூக்கிப்போட்டு விடுவேன். ஒரு காலகட்டத்தில் மெல்ல மெல்ல என் கவனம் non-fiction பக்கம் திரும்பலாயிற்று. அப்போதுதான் நிறைய விஷயங்களை தவறவிட்டுவிட்டதன் அபாயத்தை உணர்ந்தேன். சமீப காலங்களில் ஐந்தாண்டுகளாக கட்டுரைத் தொகுப்புகளை பெருமளவில் தேடிப்பிடித்து படித்துவருகிறேன். தம்முடைய கருத்துக்களை ஒரு புனைவுக் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வாசகனை மயங்க வைக்காமல், அவனிடம் நேரடியாக பேச கட்டுரைகளையே சிறந்த வடிவமாக நினைக்கிறேன். பாரதியார் முதல் சுகுமாரன் வரை பல பேர் எழுதும் கட்டுரைகளையும், அவை தரும் அபூர்வமான விவரங்களையும், நுண்மையான நோக்கையும், அவற்றின் நேரடி, மறைமுக அர்த்தங்களையும் படிக்கப்படிக்க பிரமிப்பாக இருக்கிறது.

சமீபத்தில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான 'உடைபடும் மெளனங்கள்' என்கிற கட்டுரைத் தொகுப்பை படித்து முடித்தேன். இதில் மெளினியின் சிறுகதைளைப் பற்றின அவர் பார்வையை உள்ளடக்கிய கட்டுரை மிக முக்கியமானது. (அ.மார்க்ஸின் உரைநடை சில இடங்களில் தலையை 80 டிகிரிக்கு சுற்ற வைத்தாலும் சற்று சிரமப்பட்டு உள்ளே புகுந்து விட்டோமானால், பிரமிப்பான, விவரணையான ஓர் உலகிற்குள் நம்மால் பயணிக்க முடியும்)

சமீபத்தில் நண்பர் பத்ரி அவரது வலைப்பதிவில் சில கட்டுரைத் தொகுதிகளை சிபாரிசு செய்திருந்தார். அது போல் வேறு பல நல்ல கட்டுரையாளர்களையும் கட்டுரைத் தொகுதிகளையும் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.

()

இந்தியா டுடே, ஜீலை 27 2005 இதழில் விமர்சனப் பக்கத்தில் எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின மதிப்புரையை எழுதியிருக்கிறார். 'அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்', 'கடமை அறியோம் தொழில் அறியோம்', 'சொல்வதால் வாழ்கிறேன்', 'இந்துத்துவத்தின் இருள்வெளிகள்' என்கிற நான்கு கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின பார்வை அது. அதிலிருந்து 'கடமை அறியோம் தொழில் அறியோம்' என்கிற கட்டுரைத் தொகுப்பின் விமர்சனத்தை மாத்திரம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (நன்றி: இந்தியா டுடே)

()

கடமை அறியோம், தொழில் அறியோம் என்ற தலைப்பே வாசகனை திடுக்கிட வைப்பது. 'கடமை கண் போன்றது', 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' 'கடமை, அது கடமை' என்பது போன்ற கருத்தாக்கங்களினால் கெட்டித்தட்டிப் போன சராசரி வாசகனின் பொதுப்புத்தியை இந்தத் தலைப்பு கொட்டிக் கவிழ்க்கவே செய்யும். இந்தத் தலைப்பு ஒருவித அதிர்ச்சி மதிப்பீட்டை (shock value) கோரி நிற்பது. எண்பதுகளில் நாகார்ஜீனனின் அதிரடி நடவடிக்கைகளும் மார்க்ஸ் போன்றவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுச் செயல்பாடுகளும்தான் தமிழ்ச்சூழலில் பின்-நவீனத்துவத்தை பின்னுக்குத் தள்ளப்பட்ட நவீனத்துவமாக ஆக்கின, கட்டவிழ்ப்பு என்ற பெயரில்.

'பாண்ட் சட்டை அணிபவரா நீங்கள்?' நாங்கள் லுங்கிதான் அணிவோம்'
'கண்ணகியைக் கொண்டாடியது போதும்'; நாங்கள் வேசியைக் கொண்டாடுவோம்' - என்ற ரீதியில் இவர்கள் வைத்த பிரகடனங்கள் பின்-நவீனத்துவம் என்பது 'கெட்ட வார்த்தை'; பின்-நவீனத்துவாதிகள் 'கெட்ட ஆசாமிகள்' என்பது போன்ற எதிர்மறையான படிமத்தை வாசகர்களின் மனதில் உருவாக்கின. இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் அணுகுமுறைகளைத் தவிர அ.மார்க்ஸின் பிற அணுகுமுறைகள் நன்றாகவே வந்துள்ளன.

சமூகத்தின் படிநிலைப்பிரிவுகள் உருவாகும் போது உழைப்பு, கடமை, ஒழுங்கு, இச்சை, மறுப்பு, திருப்தி, பொறுமை, சிக்கனம், அடக்கம் போன்றவை அறங்களாகக் (Ethics) கட்டமைக்கப்பட்டு அடிமைகளின் மேல் சுமத்தப்படுகின்றன. கேளிக்கை, ஓய்வு, சோம்பேறித்தனம் போன்றவை ஆண்டைகளின் அறங்களாக கைக்கொள்ளப்படுகின்றன. நீட்ஷே 'அடிமைகளே, உங்கள் அறங்களைத் தூக்கி எறிந்துவிட்டு ஆண்டைகளின் அறங்களைக் கைப்பற்றுங்கள்' என்றார். இதுபோன்ற விவாதங்களை மார்க்ஸ் தனது கட்டுரைகளில் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மொபைல் போன்கள், தோற்ற நிலை மெய்மை, தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறார். ஜீன் பொத்ரியார், பியரி பூர்தா போன்றவர்களை அடியற்றி, இவர் முன்வைக்கும் கருத்துக்கள் இன்றைய தமிழ்ச் சூழலில் கவனம் பெற வேண்டியவை.

குடிப்பழக்கம் தொடர்பாக தமிழ்ச்சூழலில் நடந்த விவாதம் பற்றி 'குடியும் குடித்தனமும்' என்ற தலைப்பில் விவரிக்கும் மார்க்ஸ், குடி தொடர்பான சனாதனக் கருத்துக்களை பகடி செய்கிறார். இது பத்தி, கட்டுரை போன்ற எல்லைகளைத் தாண்டி ஒரு ஆய்வுக் கட்டுரையாக விரிந்து, விகசிக்கிறது.

இயல்பாக பகடித் தன்மையுடன் எழுதும் மார்க்ஸ் 'குடியும் குடித்தனமும்' கட்டுரையில் சுந்தரராமசாமியைக் கோபமாகச் சாடுவது சற்று இயல்பற்று இருப்பதாகப்படுகிறது. பகடி செய்வது பின்-நவீனத்துவக்கூறு. கோபப்படுவது பாசிசத்தின் நுண் அலகு. புத்தர் தர்க்கம் புரியும் போது எதிராளியின் போற்றுதலுக்குரிய நம்பிக்கைகள் எதையும் தாங்குவதில்லை. எதிராளியின் நம்பிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு அவரது சொற்களைக் கொண்டே தனது தர்க்கத்தை கட்டமைப்பவர் புத்தர். எனவே அ.மார்க்ஸ் போன்ற ஒரு தேர்ந்த பின்-நவீனத்துவவாதி, புத்தரின் பற்றாளர் எவரையும் கோபத்துடன் சாடுவது சரியானதாகப் படவில்லை.

()

நூலைப் பற்றின விவரங்கள்:

வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை-5. விலை முறையே ரூ.60, ரூ.45, ரூ.50, ரூ.55.

1 comment:

Anonymous said...

மார்க்ஸின் புத்தகம் குறித்த அறிமுகத்துக்கு நன்றி; உங்களது பிற சில பொதுவான கருத்துக்களைப் பற்றி:

//எண்பதுகளில் நாகார்ஜீனனின் அதிரடி நடவடிக்கைகளும் மார்க்ஸ் போன்றவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுச் செயல்பாடுகளும்தான் தமிழ்ச்சூழலில் பின்-நவீனத்துவத்தை பின்னுக்குத் தள்ளப்பட்ட நவீனத்துவமாக ஆக்கின, கட்டவிழ்ப்பு என்ற பெயரில்.//

பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. அதிரடி நடவடிக்கைகள் என்பதைத்தாண்டி, நாகார்ஜூனன் தமிழவன் போன்றவர்கள் தமிழுக்குக் கொணர்ந்த அயல்கலாச்சாரக் கருத்தாக்கங்கள் புனைவு/அ-புனைவு இரண்டுக்குமே முக்கியமானவை. அதிர்ச்சிமதிப்பீட்டுக்காகச் செய்யப்பட்டவை என்பதைவிட, தேங்கிக் கிடந்த சூழலைப் புதுப்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று கொள்ளலாம். இன்று அனைவரும் சரமாரியாக உபயோகப்படுத்தும் 'கட்டவிழ்த்தல், கட்டுடைத்தல், சொல்லாடல்' போன்ற வார்த்தைகளெல்லாம், சமாச்சாரங்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழில்கூடக் கிடையவே கிடையாது என்றுதான் நினைக்கிறேன். அது கொணர்ந்த மாற்றம், கண்ணுக்குத் தெரியும், கையால் பற்றமுடியும் tangible consumerist outcome அல்ல. அதனால், பொதுவாகச் சொல்வது மேலும்மேலும் ஒருசார்பான அபிப்ராயங்களை வளர்த்தெடுக்க மட்டுமே உபயோகப்படும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

//'பாண்ட் சட்டை அணிபவரா நீங்கள்?' நாங்கள் லுங்கிதான் அணிவோம்'
'கண்ணகியைக் கொண்டாடியது போதும்'; நாங்கள் வேசியைக் கொண்டாடுவோம்' - என்ற ரீதியில் இவர்கள் வைத்த பிரகடனங்கள் பின்-நவீனத்துவம் என்பது 'கெட்ட வார்த்தை'; பின்-நவீனத்துவாதிகள் 'கெட்ட ஆசாமிகள்' என்பது போன்ற எதிர்மறையான படிமத்தை வாசகர்களின் மனதில் உருவாக்கின.//

மேலும் உதாரணங்களுடன் இவற்றை விளக்க முடியுமா? Kitsch எனப்படும் அதிபயங்கரக் குப்பைகளுக்குக்கூட விழுமியங்களைப் பொருத்தி நுணுக்கமாக ஆராயும் வசதியை அளித்தது இப்போது நீங்கள் குற்றம்சாட்டும் பின் நவீனத்துவம் போன்றவையே. அதற்கு முன்னெனில், "அட குப்பை" என்று தந்தக் கோபுர அறிவுஜீவிகள் ஒதுக்கும் விஷயங்களையெல்லாம் ஒதுக்கும் மேட்டிமை அறிவுஜீவித்தனம்தான், அதை அப்படியே அடியொற்றிக் குப்பை என ஒத்துக்கொள்ளும் பூர்ஷூவா அறிவுஜீவித்தனமும்தான் (இங்கல்ல, பொதுவாக) இருந்துவந்ததென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. Cartoon guide to Baudrillard என்ற ரீதியில் புத்தகங்கள் வந்துகொண்டிருக்கும் இந்நிலைமையில், பயமுறுத்திவிட்டார்கள் என்று பொதுவாகச் சொல்வது, வெளியுலகுக்கான கதவுகளை நாமே மூடிக்கொள்வது போலத்தான்.