Monday, July 18, 2005

'அன்னியன்' சொல்லும் ஆதாரச் செய்தி

இதுவரை '·பேண்டஸி' படங்களாக எடுத்து வந்துக் கொண்டிருந்த சங்கர்.. மன்னிக்கவும், ஷங்கர், கொஞ்சம் கீழே இறங்கி கொஞ்சம் மிகையதார்த்தமாக தற்கால இளைஞர்களைப்பற்றி 'பாய்ஸ்' எடுத்ததில் பத்திரிகைகள் ஒரே வார்த்தையில் 'ச்சீ' என்றும், மக்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாக பார்க்க நேர்ந்த குற்ற உணர்வில் தமக்கேயுரிய பிரத்யேக பாசாங்குகளோடு 'தூ" என்றும் காறித்துப்பியதில் மிரண்டு போன ஷங்கர், தம்மிடமுள்ள ஒரே பாதுகாப்பான பார்முலாவான 'ராபின்ஹீட்' டைப் கதையை முந்திரி, ஏலக்காய், பட்டை, லவங்கம், மசாலா எல்லாம் போட்டு உப்பும் உறைப்புமாய் சொல்லியிருக்கும் படம்தான் 'அன்னியன்'.

Image hosted by Photobucket.com

'அன்னியன்' என்கிற பாத்திரத்தின் வடிவம் ஏறக்குறைய நம் எல்லோர் மனதிலும் உள்ள ஆனால் சமூக கட்டுப்பாடுகளினாலும் தண்டனைகளினாலும் பயந்து கொண்டு வெளிவரத் தயங்குகிற, பயப்படுகிற ஒரு வடிவம்தான்.

()

ராமசாமி பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பயணிச்சீட்டை வாங்கிவிட்டு மிச்சம் ஐம்பது காசை ஞாபகமாக கேட்கிறான். நடத்துனரோ அவனை நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரி பார்த்துவிட்டு "அப்ப கரெக்டா சில்லறை கொடு" என்று சொல்லி விட்டு இவன் பதிலுக்காக எதிர்பாராமல் கூட்டத்தில் கரைந்து போகிறார். அவர் பையில் உத்தரவாதமாக சில்லறை இருப்பதை இவனால் யூகிக்க முடிகிறது. இவன் அவரையே தொடர்ந்து பார்க்க, அவர் பக்கத்திலிருந்த யாரிடமோ சிரித்து இவனை நோக்கி அசிங்கமாக கையில் சைகை காட்டுகிறார்.
உடனே ராமசாமி என்ன செய்கிறான்?

கூட்டத்தை பிளந்து கொண்டு, நடத்துனரின் சட்டையைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைந்து "ஏண்டா, பரதேசி நாயே, இப்படி ஒத்தொருத்தர் மிச்ச காசையும் கொடுக்காம ஏமாத்துற. இதுக்கு ரோட்ல உக்காந்து பிச்ச எடுக்கலாமேடா. நான் கஷ்டப்பட்டு சேத்த காச கொடுக்காம ஏண்டா ஏமாத்துற' என்று மற்றவர்கள் தடுக்க, தடுக்க அவனை பந்தாடி, .....

இப்படியெல்லாமா நடக்கிறது. இல்லை.

இவற்றையெல்லாம் ராமசாமி தம் மனத்தில் ஒரு முறை நிகழ்த்திப்பார்க்கிறான். இப்படியெல்லாம் செய்ய அவனுக்கு தைரியம் போதாது. அப்படியே அவன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்துவிட்டாலும் அதன் பின்விளைவுகளைப் பற்றி அவனுக்கு தெரியும். காவல் நிலையத்தில் அன்றைய இரவை கழிக்க அவன் விரும்பவில்லை. சாயந்தரம் ரேஷன் க்யூவில் நின்று கெரோஸின் வேறு வாங்க வேண்டும். இப்போதே மணியாகிக் கொண்டிருக்கிறது.
எனவே "பாருங்க சார். நம்ம காசா கேட்டா முறைக்கிறான்." என்றே அவனுக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு, கேட்க யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையில் ஜன்னல் சீட்டை தேடி பரிதாபமாக அமர்ந்து கொள்கிறான்.

()

ஆக.. தினப்படி நாம் நம்மேல் பாயும் பலவித சமூக வன்முறைகளை எந்தவித கேள்வியும் ஏற்றுக் கொள்ள பழகியிருக்கிறோம். நம்மை விட ஒல்லியாக ஒருவன் கிடைத்தால் தலையில் தட்டி "கால் வெச்சுருக்கிறது தெரியல. மிதிக்கறயே" என்று இன்னொருவனிடம் அதே வன்முறையை உபயோகிக்க நாம் தயங்குவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக அம்பி என்கிற ரூல்ஸ் ராமானுஜம் இவ்வாறெல்லாம் பழகாமல், சமூக ஒழுக்கத்தை தாம் ஒழுங்காக பின்பற்றுவது போதாதென்று மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென்று அநியாயத்திற்கு எதிர்பார்க்கிறான். இவன் எதிர்பார்ப்பதை உலகம் பரிகசிக்க, மனஅழுத்தம் தாங்காது இவனுடைய இன்னொரு ஆளுமை உயிர்பெறுவதும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தாமே தண்டனை வழங்குவதும், இந்த நீதியை புரிந்து கொள்ளாமல் சட்டம் இதில் குறுக்கிட, சாமர்த்தியமாக சட்டத்தை ஏமாற்ற தெரிந்து கொண்டு தன் பணியை தொடர்வதும்தான் இதன் முக்கிய பாத்திரமான ......அன்னியன்.

அம்பி என்கிற கதாபாத்திரம் மிகத்திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் கடிதத்ததை கூட பெண்ணின் பெற்றோர்களிடம் முறைப்படி கொடுப்பதில் இருந்து, அவளிடம் பேச பெற்றோர்களிடம் அனுமதி கேட்பது, தன் காதல் ஏற்கப்படாததைக் கண்டு தற்கொலைக்கு முயற்சிப்பது, பிறகு தற்கொலை சட்டப்படி தப்பு என்பதால் அதை நிறைவேற்றாமல் திரும்புவது என்று இந்தப்பாத்திரம் அக்மார்க் நேர்மையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தமான இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இந்த பாத்திரம் முற்றிலும் அன்னியமாகயிருப்பதால் திரையரங்கில் பார்வையாளர்கள் கூட சிரிக்கிறார்கள்.

()

பொதுவாக ஷங்கரின் படங்கள் அநாவசியத்திற்கு பிரம்மாண்டனவை என்று சொல்லப்படுவதில் சில சதவீத உண்மையிருந்தாலும், அவருக்கு அந்த பிரம்மாண்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. திருவல்லிக்கேணி அக்ரஹாரத்து இளைஞனையும் Multiple Personality disorder என்கிற உளகுறைபாடையும், International School of Marshal Arts School-ஐயும் எந்தப்புள்ளியில் இணைக்க வேண்டும் என்கிற திரைக்கதை வித்தை தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்புள்ளிகள் சரியாக சங்கமிக்காத இடங்களில் படம் திருவிழாவில் காணமாற் போன குழந்தை மாதிரி அம்போவென்று விழிக்கிறது. (சில விநாடி இடைவெளிக்குள் மாறுபட்ட ஆளுமைகள் சட்சட்டென்று தோன்றி மறைவதாக கிளைமாக்சில் காட்டப்படும் அந்தக்காட்சி, சினிமாவில் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு gimmics.)

எந்தவித அறிவிப்புமில்லாமல் வருகிற பாடல்கள் ஒருபுறம் எரிச்சலூட்டுகின்றன என்றால், ஆளுமை மாற்றத்தில் அம்பி என்கிற கதாபாத்திரத்தின் உடை மற்றும் தலைமுடியுமா மாறும் என்கிற கேள்வியை எழுப்புகிற அபத்தமான லாஜிக் அத்துமீறல்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. என்றாலும் 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' என்கிற நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்ட பாடலும், அந்த பாடலின் பின்னணியில் தார்ரோடு, பாலச்சுவர், வீட்டுச் சுவர் என்று எல்லாமும் வண்ணமயமாக காட்சியளிப்பது நல்ல முயற்சி. (ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு தம்மால் இயன்ற maximum output-ஐ அளித்திருந்தாலும் ரஹ்மான் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது). சுஜாதா வழக்கம் போல் ஜொலித்திருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணணை ஒரு வரியில் இணைத்தது ரசிக்கும்படி இருக்கிறது என்றால் ஆசிய நாடுகள் சிலவற்றோடு இந்தியாவை ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் வசனங்களில் இடியும், மின்னலும் வெடிக்கிறது.

()

இந்தப்படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பற்றியே ஒரு கட்டுரை எழுதலாம். ஆஹா ஓஹோ என்றோ அல்லது அடச்சீ என்றோ ரெடிமேட் விமர்சனம் எழுதும் வெகுஜனப்பத்திரிகைகளின் விமர்சனங்களை ஒதுக்கிவிடுவோம். படத்தின் காட்சிகளின் அமைப்பை அந்த இயக்குநரே எதிர்பார்த்திருக்காத ஒரு கோணத்தில் கட்டுடைக்கும் சிற்றிதழ்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எனக்கு பெருத்த நகைப்பை உண்டாக்குகிறது. 'காதல்' என்கிற படத்தில் வரும் பெரியார் சிலை காட்டப்படும் காட்சியை அ.ராமசாமி 'தனக்கேயுரித்தான பார்வையில்' விமர்சிக்கும் போது இவர்களது மனநிலையின் ஆரோக்கியத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது. (அ.ராமசாமி, ஷகீலா படம் ஒன்றிற்கு விமர்சனம் எழுதினால் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்ய மிக சுவாரசியமானதாக இருக்கிறது). சமீபத்தில் பழைய காலச்சுவடு இதழ்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இருவர்' திரைப்படத்திற்கு ஒரு பேராசிரியர் எழுதியிருக்கும் விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. ஒரு கேமரா கோணத்திற்கு அவர் கொடுத்திருக்கும் 2 பக்க விளக்கத்தை மணிரத்னம் படிக்க நேர்ந்தால் எவ்வாறு திகைத்துப் போவாரோ என்று யூகிக்க முடியவில்லை. "ஏம்ப்பா அந்தப் பக்கம் clouds pass ஆவுது. கேமராவை இந்தப்பக்கம் வையி" என்று சாதாரணமாக சொன்னதற்கு பின்னால் எடுக்கப்பட்ட காட்சியை இவ்வாறு கூட வகைப்படுத்த முடியுமா என்பதுதான் அவரின் திகைப்பிற்கு காரணமாயிருந்திருக்கும்.

()

இந்தப்படம் சொல்லும் ஆதாரக்கருத்து நம் மனச்சாட்சியை தூண்டி சற்றே குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவித இயற்கை வளங்களுமில்லாமல் உள்ள பக்கத்து குட்டிகுட்டி நாடுகள் எல்லாம் தம் கடும் உழைப்பில் குறுகிய காலத்தில் முன்னேறியிருக்கும் போது, 110 கோடி மனிதவளத்தையும், எல்லா இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் அடுத்த வேளை உணவிற்கு உத்திரவாதமில்லாதவர்கள் சில கோடிப் பேர் இருக்கிறாற் போல் இருக்கிற நம் பொறுப்பில்லாத்தன்மையை இந்த படம் கடுமையாக சுட்டிக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் சுட்டிக் காட்டுக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு தனிமனிதனும் அதிகபட்ச பொறுப்புடனும் சமூக கடமையுடனும் நடந்து கொண்டால் இந்தியா தானாகவே முன்னேறும் என்பதும் அவ்வாறு நடக்கும் வரை சட்டங்கள் இன்னும் கடுமைப்படுத்த வேண்டும் என்பதும் அன்னியன் சொல்லும் ஆதார கருத்து. ஏறக்குறைய பரணில் தூக்கிப் போட்டுவிட்ட, மீயூசியத்தில் மட்டுமே பார்க்கிற, நாம் பரிகசிக்கிற அந்த குணங்களை நாட்டின் நலம் கருதி நாம் ஏற்க வேண்டும் என்பதுதான் இந்தப்படத்தின் நீதி.

ஆனால் மிட்டாயைச் சப்பி விட்டு மருந்தை ஞாபகமாக தூக்கிப் போட்டுவிடுவதில் சமர்த்தர்களான நாம், சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான் யதார்த்தமான சோகம்.

27 comments:

Anonymous said...

pinniittiinga!
sureesh kaNNanin innoru ALumaiyaa ithu?
- BABU

சன்னாசி said...

//International School of Marshal Arts//
Martial.

Anonymous said...

///இவற்றையெல்லாம் ராமசாமி தம் மனத்தில் ஒரு முறை நிகழ்த்திப்பார்க்கிறான்///

Are you telling about which ramasamy? Ramasamy Naicker of Erode? :-)))))

_ Balaji

Anonymous said...

Excellent Review.

- Priya

Anonymous said...

/*மிகையதார்த்தமாக தற்கால இளைஞர்களைப்பற்றி 'பாய்ஸ்' எடுத்ததில் */

??????

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
Narain Rajagopalan said...

//இந்தப்படம் சொல்லும் ஆதாரக்கருத்து நம் மனச்சாட்சியை தூண்டி சற்றே குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவித இயற்கை வளங்களுமில்லாமல் உள்ள பக்கத்து குட்டிகுட்டி நாடுகள் எல்லாம் தம் கடும் உழைப்பில் குறுகிய காலத்தில் முன்னேறியிருக்கும் போது, 110 கோடி மனிதவளத்தையும், எல்லா இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் அடுத்த வேளை உணவிற்கு உத்திரவாதமில்லாதவர்கள் சில கோடிப் பேர் இருக்கிறாற் போல் இருக்கிற நம் பொறுப்பில்லாத்தன்மையை இந்த படம் கடுமையாக சுட்டிக் காட்டுகிறது.//

இவ்வளவுதான் விஷயம். பிராமண கருத்துருவாக்கம், அபத்தமான லாஜிக் அதைவிட அபத்தக் களஞ்சியமான அ.ராமசாமியின் விமர்சனம் இதையெல்லாம் தாண்டி, கொஞசமே சமூக அக்கறையும், சுயபுரிதலும் இருப்பின் படம் பார்த்து முடிந்தபின் எங்கோ சுருக்கென்று தைக்கும். தைத்தால்... போதும். இப்படத்திற்கான என்னுடைய விமர்சனம் வேறு மாதிரியாக இருக்கின்ற போதிலும், நீங்கள் சொன்ன இந்த புள்ளியில் தான் படத்தினை நானும் பார்த்தேன். ஒரு தனிமனித அலட்சியம், கவனக்குறைவு, சலிப்பு, முயற்சியற்ற தன்மை எவ்வாறு பல்கி பெருகி "இந்திய குணமாக" நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போய்விட்டது என்பதை நினைவுறுத்தியதற்காகவாவது ஷங்கருக்கு சபாஷ் போடலாம். அதைத் தாண்டி, இது வழக்கமான பிரமாண்டமான, பார்மூலா மசாலா.

Anonymous said...

Seems Zorro with a jackal and hyde gene ;-)

ROSAVASANTH said...

//அந்த இயக்குநரே எதிர்பார்த்திருக்காத ஒரு கோணத்தில் கட்டுடைக்கும் சிற்றிதழ்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எனக்கு பெருத்த நகைப்பை உண்டாக்குகிறது. 'காதல்' என்கிற படத்தில் வரும் பெரியார் சிலை காட்டப்படும் காட்சியை அ.ராமசாமி 'தனக்கேயுரித்தான பார்வையில்' விமர்சிக்கும் போது இவர்களது மனநிலையின் ஆரோக்கியத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது. //

பாரதியின் வரிகளை ஒரு நேரடி மேற்கோளாய் மாலன் தந்திருந்ததை, அவர் திரித்து ஜெயகாந்தன் மீது பழி போட்டதாக அபாண்டமாய் எழுதி அது குறித்து எந்த விளக்கமும் தராத போதும், அன்னியன் படத்தில் வரும் சித்தரிப்புகள் குறித்து பேசாத பேசுபவர்களை குறை கூறும் இந்த பதிவு, இதன் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் என்னால் புரிந்துகொள்ள முடியாத மன ஆரோக்கியத்தை, அ.ராமசாமியின் ஒரு விமர்சனத்தில் வரும் ஒரு விஷயத்தை வைத்து சிற்றிதழின் கட்டுடைக்கும் விமர்சனம் வைப்பவர்களின் மன ஆரோக்கியம் பற்றி (இன்னும் தெரிதா பற்றி கூட சொல்லியிருக்கலாம்) சுரேஷ் முடிவுக்கு வரும் வேகம் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதை விட இப்படி மேலோட்டமான கருத்துக்களை, பொது புத்தியில் மிக எளிதாய் படுகிற/ உவப்பளிக்கிற கருத்துக்களை மட்டும் தொடர்ந்து முன் வைத்து விட்டு, தான் ஏதோ ஆழமான விஷயங்களை எழுதியிருப்பதாகவும் ஆனால் தன் சர்ச்சை பதிவுகளுக்கு மட்டும் 'ஹிட் கிடைக்கிறதே' என்று அங்கலாய்ப்பதும் இன்னும் சிலிர்க்க வைக்கிறது.


//ஒரு தனிமனித அலட்சியம், கவனக்குறைவு, சலிப்பு, முயற்சியற்ற தன்மை எவ்வாறு பல்கி பெருகி "இந்திய குணமாக" நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போய்விட்டது என்பதை நினைவுறுத்தியதற்காகவாவது ஷங்கருக்கு சபாஷ் போடலாம். //

நாராயணன் அதற்கு மட்டும் சபாஷ் போடுவாரா, அல்லது பிரச்சனை இத்தனை எளிதானது என்று சித்தரித்ததற்கும், உண்மையான அழுகல்களை பார்க்காமல் இப்படி திசை திருப்புவதற்கும் கூட 'சபாஷ்' போடுவாரா என்று தெரியவில்லை. ஏதோ நல்லாயிருந்தா சரி.


நான் இந்த படத்தை அதிகம் எதிர்க்கவில்லை. பாராட்டக்கூட செய்வேன். ஆனால் அதற்கான காரணம்தான் முற்றிலும் வேறு. அது சுரேஷ் கண்ணன் கடைசியில் சொன்னதுதான் அது, "சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான் ."

Anonymous said...

சுரேஷ் நான் உங்கள் பார்வையுடன் முற்றிலும் மாறுபடுகிறேன். நாரயணன் எழுதிய/ பார்க்கிற விதமும் ஆச்சர்யமூட்டுகிறது. சமூக மாற்றத்துக்கான வழி இத்தனை எளிதா என்பதும் சிங்கப்பூரும் அமெரிக்காவும்தான் நவ இந்தியாவின் இலக்குகளா என்பதும் மிக ஆரம்பநிலை கேள்விகளும், சந்தேகங்களும். இவைகூட இங்கு தோன்றாமை ஆச்சர்யமளிக்கிறது. அம்பது ஆண்டுகளில் மாறாத விசயங்கள் இங்கு அன்னியனுக்கு அவ்வளவு கோபத்தை, மனப்பிறழ்வை ஏற்படுத்தியிருந்தால் 2000 ஆண்டுக்கொடுமைகள் இப்போதும் நடப்பதைக் கண்டு இந்த நாடே நரகமாயிருக்கும். ஏனெனில் பெரும்பான்மையோர்களின் செய்கைகளை பயித்தியக்காரத்தனம் என்று சொல்லமுடியாதல்லவா?

Anonymous said...

ப்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டி அந்நியன் பேசும் வசனங்கள் அபத்தம், ஒரு மேடைப்பேச்சு என்ற அளவில் கூடசகிக்க முடியாதவை.50களில்,60களில் திமுக முன் வைத்த வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, அங்கே சிந்திரியில் உரத் தொழிற்சாலை, இங்கே முந்திரி தொழிற்சாலை
ரகத்தினி விட அபத்தமானவை.
அதை கேட்டு ஆமோதிக்கிற நீங்கள் முதலில் பொருளாதார வளர்ச்சி குறித்த அடிப்படைகளையும், கிழக்காசிய வளர்ச்சி முன்மாதிரி குறித்த் விவாதங்களையும் அறிய முயற்சி செய்யுங்கள்.ஜ்ப்பான் இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது நவீனமடையத்துவங்கியது போருக்கு வெகு முன்பாகவே.சிங்கப்பூர் பெரும் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது.ஒரு நகரக் குடியரசில் அது சாத்தியம், ஆனால் அங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது.சீனாவில் ஒரு கட்சி ஆட்சி , நீங்கள் நினைத்தபடி திரைப்படம் எடுக்க முடியாது, அரசை விமர்சித்தால் சீர்த்திருத்த மையங்கள், அதாவது சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டியிருக்கும்.மலேசியாவிலோ அல்லது தைவானிலோ அல்லது சீனாவிலோ இது மாதிரி படம் எடுக்க முடியுமா. இந்தியாவில் சாத்தியம். சுஜாதாவிற்கோ சங்கருக்கோ சமூக அக்கறை கிடையாது. எதையாவது வைத்து காசு பார்க்க வேண்டும்,.இவர்கள் சராசரி இந்தியனை விட மோசமானவர்கள்தான். இவர்கள் ஒட்டுண்ணிகள் என்றே கருதுகிறேன்.

பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் வசனம் எவ்வளவு அபத்தம் என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதலாம். ஆனால் இங்கு சுஜாதா என்கிற ஒரு மனிதன் எழுதுகின்ற அபத்தங்களுக்கும், அதற்கு கிடைக்கிற மரியாதையும் பார்க்கும் போது உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.
முட்டாள்கள் இருக்கும் வரை சுஜாதாவிற்கும், சங்கருக்கும் கவலையில்லை.
ravi srinivas

பிச்சைப்பாத்திரம் said...

தங்கமணி,

பெரும்பான்மை என்கிற ஒரே காரணத்திற்காகவே, முன்னேற்றமல்லாத நிலையில் நாம் நீடிப்பதிருப்பதை நியாயப்படுத்தி விட முடியுமா? இந்தியர்களின் இந்த தனித்தன்மையான குணத்தை ஐம்பது ஆண்டுகளுக்குள் வகைப்படுத்தி பார்க்க முடியாது. நமக்குள் ஒற்றுமையில்லாத காரணங்களினால்தான் வெள்ளையர்களால் வெகு எளிதாக நுழைந்து நம்மை கைப்பற்ற முடிந்தது. மேலும் நாம் சுதந்திரம் பெறுவதற்காக போராடின முறையே தவறானதாக எனக்குத் தோன்றுகிறது. நாம் தியரிட்டிக்கலாக அஹிம்சையை புனிதப்படுத்தி பேசிக் கொண்டிருந்தாலும் வன்முறை என்பது நாம் அறிந்தோ அறியாமலோ நம் தினசரி வாழ்க்கையில் ஊறிப்போனதாக இருக்கிறது. எனவே முப்பது கோடி மக்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக போராடி எதிர்த்திருந்தால் சுதந்திரப் போராட்டம் என்பது குறுகியதாகவே இருந்திருக்கும் எனக்கருதுகிறேன். ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு உயிரை இழந்திருக்கும் பட்சத்தில் சுதந்திரத்தின் அருமையை இன்னும் ஆழமாக உணர்ந்து பொறுப்பாக எதிர்வினையாற்றிருப்போம் என்றும் தோன்றுகிறது.


ரவி ஸ்ரீனிவாஸ்,

உங்களது கேள்வி காட்டமாக இருந்தாலும் ( :-) ) ஷங்கர் மற்றும் சுஜாதா சொன்ன ஒரே காரணத்திற்காக இந்தப்படத்தில் கூறப்படும் கருத்துக்களை புறக்கணித்துவிடாமல் இது பாமரர்களையும் உள்ளடக்கிய ஊடகத்தில் சொல்லப்பட்ட எளிய கருத்து என்ற புரிதலுடன் இதைப் பார்க்க வேண்டுகிறேன். இந்த ஆரம்பத்தை தொடர்ந்து 'அதானே, ஏன், எப்படி அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் நம்மைத் தாண்டிச் சென்றன?' என்று ஒரு பாமரனையும் யோசிக்க வைப்பதையே இந்தப் படத்தின் வெற்றியாக கருதுகிறேன், இது அவ்வாறான நோக்கத்தை முதன்மையாக கொள்ளாமல், வணிக நோக்கத்தையே பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும்.

நாம் தினமும் சாலைகளில் பார்த்து அருவருக்கிற தனிமனித ஒழுக்கமின்மைகளை குறித்து இந்தப்படம் கேள்வி எழுப்புகிறது. அதிகமான கழிப்பிடங்களை கட்டித்தராமல் பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதே என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாடு தவறென்றால், பக்கத்திலேயே கட்டண கழிப்பிடமிருந்தும் ஐம்பது காசுக்கு யோசித்துக் கொண்டு பக்கத்து சுவரில் சிறுநீர் கழிக்கும் நம்முடைய நிலைப்பாடும் தவறுதான். சின்ன சின்ன அக்கம்பக்கத்து நாடுகள் நம்மை தாண்டிச் செல்லும் வேளையில் நாம் யோசிக்காமலேயே உட்கார்ந்திருப்பதை விட ஒரு ஆரம்பம் தேவைதானே?

பிச்சைப்பாத்திரம் said...

///பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் வசனம் எவ்வளவு அபத்தம் என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதலாம்.////

தயவுசெய்து எழுதுங்கள். இவ்வாறான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய, இந்தப்படம் எவ்வாறு பிராமண ஆதரவு நிலையை நிலைநாட்டுகிறது என்பதெல்லாம் தேவையற்றது.

ROSAVASANTH said...

ரவி எழுதியுள்ளதை அப்படியே ஒப்புகொள்கிறேன் -கடைசி வரியை தவிர. இந்த விமர்சனம் அபத்தமானது. ஆனால் சுஜாதாவும், சங்கரும் தரும் கதையின்பத்தை ரசித்துவிட்டு மக்கள் திரும்புவதால் முட்டாள் என்று என்னால் எண்ண முடியவில்லை.

இந்த விமர்சனம் சங்கர் ஏதோ உன்னத கருத்தை சொல்லிவிட்டதாகவும், ஆனால் அதை பாட்டு, சண்டை பிரமாண்டம் என்ற 'இனிப்பு' கலந்து அளிப்பதாகவும் சொல்கிறது. மக்கள் இனிப்பை மட்டும் சுவைத்துவிட்டு மருந்தை துப்பிவிட போகிறார்களே என்று கவலைப்படுகிறது. எனக்கு அந்த காரணத்தினால் மட்டுமே இந்த படத்தினால் ஆபத்து எதுவும் விளையப் போவதாய் தோன்றவில்லை.

ROSAVASANTH said...

//இவ்வாறான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய, இந்தப்படம் எவ்வாறு பிராமண ஆதரவு நிலையை நிலைநாட்டுகிறது என்பதெல்லாம் தேவையற்றது.//

தேவை எதற்கானது என்பதை முன்வைத்தே தேவை/தேவையற்றது தீர்மானிக்கபடமுடியும்.

rajkumar said...

உங்கள் விமர்சனம் ஏமாற்றம் அளிக்கிறது.

rajkumar said...

சினிமாவை பற்றிய உங்கள் அளவுகோல்கள் இரட்டையாக இருப்பதைதான் இவ்விமர்சனத்திலிருந்து என்னால் உணரமுடிகிறது.

ரஜினி படமென்றால் சாகடிக்கப்பட்ட யதார்த்தம், சங்கர் படமென்றால் சவுகர்யமாக பேண்டஸி. தனிமனித ஒழுக்கம் என முழக்கமிடும் சங்கரும், திங்கள் கிழமை காலையில் வேலைவெட்டி இல்லாமல் சினிமா பார்க்கும் தமிழர்களை நம்பிதானே படம் எடுத்திருக்கிறார். இதில் என்ன ஆதார செய்தி.

இதற்கெல்லாம் மேலாக 27 கோடி ரூபாய் செலவழித்தித்தான் ஆதார செய்திகள் சொல்ல வேண்டுமென்றால் ந்ம்ம நாட்டிற்கு தேவைப்படும் செய்திகளுக்கு படமெடுக்க உலக வங்கியிடம்தான் கடன்வாங்க வேண்டியிருக்கும்.

விஜயகாந்த படத்தை போல யதார்த்தம் இல்லாமல் முழங்கும் விக்ரமின் அபத்தங்களை உங்களைப் போன்ற நல்ல சினிமா ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்வது எனக்கு வேதனையை அளிக்கிறது.

ரஜினிகாந்தால் சினிமா உலகம் அழிகிறது என்ற உங்கள் வாதத்தில் உண்மை இருந்தால் அதைக்க்காட்டிலும் பலமடங்கு அதிகமாக சங்கரும் காரணம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் இரட்டை நிலை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

வேதனையுடன்

ராஜ்குமார்

Jayaprakash Sampath said...

சுரேஷ், இதுக்கு பின்னூட்டம் தரணும்னு நெனைச்சு, எழுத ரொம்ப பெரிசாப் போச்சு. அதனால, தனிப்பதிவா, என் வலைப்பூவிலே போட்டிருக்கிறேன்.

http://icarus1972us.blogspot.com/2005/07/blog-post_19.html

Anonymous said...

கழுதைப்புலிகளின் கத்தல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் பதிவுகளை தொடருங்கள் சுரேஷ் கண்ணன்.

- Balaji

SnackDragon said...

நரைனின் பின்னூட்டம் ஆச்சரியமாயிருந்தது.
அந்நியனியனில் எங்கே அ.ராமசாமி வந்தார்? அது அநாவசியமாக இருக்காதபோது ஏன் ,
சார்லியின் பாத்திரப்படைப்பு உங்கள்_புகழ்_சங்கர்_கலைஞனால் தலித்திய குறியீடோடு இருக்கிறது என்ற கேள்வி மட்டும் எப்படி அநாவசியமானது?


உங்கள்_புகழ்_சங்கர்_கலைஞனால் , அந்நியன் மூலம் சமூகத்தை பாதிக்கும் படியான "கருத்து_பருப்பு"
சொல்லமுடியும் போது "பிராமண குறியீடுகளும்" + "பிற குறியீடுகளும்" மட்டும் இந்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை என்று எப்படி பார்ர்க்க முடியும் என்று யோசித்தால் தான் புல்லரிக்கிறது.

/"சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான் ."
/
இந்த தைரியத்தில்தான் உங்கள்_புகழ்_சங்கர்_கலைஞனால் இந்த மாதிரி படங்களை எடுக்கமுடியும்.

சங்கர் கருத்து சொல்லி சமூகத்துக்கு சேவை செய்வதை விட, வாழ்நாள் முழுதும் லஞ்சம் வாங்கிய ஒரு எம் எல் ஏவே நம் சூழலில் பெரிய சமூக சேவகனாகத்தான் தெரிகிறான் எனக்கு. ;-)

enRenRum-anbudan.BALA said...

suresh kannan,
//திருவல்லிக்கேணி அக்ரஹாரத்து இளைஞனையும் Multiple Personality disorder என்கிற உளகுறைபாடையும், International School of Marshal Arts School-ஐயும் எந்தப்புள்ளியில் இணைக்க வேண்டும் என்கிற திரைக்கதை வித்தை தெரிந்திருக்கிறது.
//
இதில் திரைக்கதை வித்தை(!) இருப்பதாக நீங்கள் (கூட) கருதுவது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது !!!

//ஆனால் மிட்டாயைச் சப்பி விட்டு மருந்தை ஞாபகமாக தூக்கிப் போட்டுவிடுவதில் சமர்த்தர்களான நாம்
//
அன்னியன் போன்ற படத்துக்காக வேண்டி, நீங்கள் இப்படியெல்லாம் சொல்வது சற்று TOO MUCH தான் ;-)

ரவி,
//இங்கு சுஜாதா என்கிற ஒரு மனிதன் எழுதுகின்ற அபத்தங்களுக்கும், அதற்கு கிடைக்கிற மரியாதையும் பார்க்கும் போது உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.
முட்டாள்கள் இருக்கும் வரை சுஜாதாவிற்கும், சங்கருக்கும் ...
//
சினிமாவை ஒரு பொழுதுபோக்காக (95% பேர் அப்படித் தான் நினைக்கிறார்கள் !!!) பார்ப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா என்ன ? ரோசா கூறுவது போல, சுஜாதாவும், சங்கரும் தரும் கதையின்பத்தை ரசித்துவிட்டு மக்கள் திரும்புவதால் முட்டாள் என்று என்னாலும் எண்ண முடியவில்லை. அன்னியனில் ஏதோ ஒரு பெரிய மெஸேஜ் இருப்பதாக (அல்லது மெசேஜை சரியாக தராததாக!)நினைப்பவர்களை ஏன் முட்டாள்களாக கொள்ளக் கூடாது ?????

மேலும், சுரேஷ் கண்ணன் கூறியது போல், (பொழுதுபோக்கிற்காக!) "சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி" ப்போவதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Anonymous said...

Suresh,

People doesn't expect messages from films. They should realise the situations themselves only. But in this film, the message which is told is very essential for the today's situations.

- Ganesh

Anonymous said...

A Creatior should not tell any solutions in their creativities. Whereas they can indicate the solutions. In that shankar is making only the commercial items.

- Kumar

Anonymous said...

Anyone having some sense would have realized that Anniyan is a racist film. Suresh Krishnamacharyaiyengar should realize it too.

manasu said...

hallo ravi srinivas...

i red ur comments for anniyan vimarsanam.....

china,taiwan,malasiya, singapore ellam intha mathiri padam edukka mudiyathunnu solreenga....

avunga edukka vendiay avasiayam illa, yenna ange ithu pola avalangal nadappathillai....

china vil oru kathci aatchi..... ok accepted... what is use of 1000 parties here??????

ondro... aayiramo.... vazkkai tharam eppadi irukkirathu athu than mukkiyam

Anonymous said...

India should become like Singapore or America if we go and paint colourfully all over the roads :-) that too the paintings should be of cine-stars only.

KKPSK said...

படம் சொல்லும் சேதி..நான் நினைத்த அதே கருத்து..மிக மகிழ்ச்சி..மற்றபடி(abt comments)..நாம் பார்ப்பதில் உள்ள நிறம் பொருட்களின் நிறமே அல்ல..நம் கண்-கண்ணாடியின் நிறமே.
on movie:
எல்லாவற்றிறகும் நாமும் காரணம். மக்களை காரணப்படுத்தியது சரியே. சினிமாவில் இதை நன்றாக சொல்லியது அருமை.
நன்றி (i mean it!)