ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவை (Akira Kurosawa) உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன். அகிராகுரோசாவை அறியாதவர்கள் அறிவுஜீவிகள் பட்டியலில் இடம் பெற முடியாது. :-) திரைப்படம் என்கிற ஊடகத்தினை அதற்கேயுரித்தான பொருத்தமான மொழியோடும், கலை நுணுக்கங்களோடும் கையாண்ட சர்வதேச தர இயக்குநர்களில் குரோசாவா முக்கியமானவர். அவர் இயக்கிய படங்களில் Rashomon (1950) The Seven Samurai (1954) போன்றவை முக்கியமானவை.
அவருடைய SOMETHING LIKE AN AUTOBIOGRAPHY என்கிற நூலை இளையபாரதியும், மு.நடராஜனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். (புதுமைப்பித்தன் பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக்நகர், சென்னை-600 083. முதல்பதிப்பு 2002, 320 பக்கங்கள், விலை ரூ.150)
இந்திய திரைப்பட மேதையான சத்யஜித்ரே, தான் எழுதியிருக்கும் முன்னுரையில் தான் ரஷோமான் படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
....... தனிப்பட்ட முறையில் எனக்கு அந்தப் படம் மின்சாரத் தாக்குதல் கொடுத்தது. அதை மூன்று முறை அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு பார்த்தேன். ஒவ்வொரு முறையும் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். வேறு எந்தப் படமாவது இப்படி இயக்குநரின் ஆளுமையைத் தீவிரமாக ஒவ்வொரு பிரேமிலும் தொடர்ந்து வெளிப்படுத்துமா என்பது சந்தேகமே. பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் அந்தப் படத்தினுடைய ஒவ்வொரு பகுதியும் தெளிவாக அதன் ஒளியும், ஒலியும் மனதுக்குள் விரிகின்றது. ..............
சுயசரிதம் எழுதுவதில் ஆர்வமே இல்லாத குரோசாவா, இந்த நூலை பெரும்பாலும் தன் சினிமா வாழ்க்கையை பேசிக் கொண்டு போகிற போக்கில் தன் சொந்த வாழ்க்கையையும் சொல்லிக் கொண்டு போகிறார். இதை சுயசரிதையாக ஏற்க மறுக்கும் அவரது நோக்கை இந்த நூலின் தலைப்பிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
.... வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னை அறியாமலே நான் இன்று எழுபத்தியோரு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறேன். நான் கடந்து வந்த காலத்தையும், பாதைகளையும் சற்றே திரும்பிப் பார்க்கும் போது, சொல்வதற்கு என்ன இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. நிறைய நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் சுயசரிதம் எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலரும் என்னை நிர்ப்பந்தித்தார்கள். எனக்கு அதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. காரணம், எனக்கு மட்டுமே பிரத்யேகமான விஷயங்களைச் சம்பவச் சரமாக தொடுத்து எழுதி வைத்துவிட்டுச் செல்வது சுவாரஸ்யமான ஒன்றாகத் தோன்றவில்லை. அதைவிட முக்கியமான காரணம், நான் எதை எழுதினாலும் அது சினிமாவைப் பற்றித்தான் இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் என்னிலிருந்து சினிமாவை நீக்கிவிட்டால் பூஜ்யம்தான் மிஞ்சும். ............
()
பெரும்பான்மையான கலைஞர்களைப் போலவே, குரோசாவும் சிறுவயதில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும், அவமானப்படுத்தப்படும் கசப்பை சுவைத்திருக்கிறார். ஆசிரியர்களால் 'மக்குக் குழந்தை' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார். (.....ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், இடை இடையே, "ஒரு வேளை இது அகிராவுக்குப் புரியாமல் போகலாம். .. அல்லது அகிராவால் இதைச் செய்ய முடியாது." என்று சொல்லுவார். ஆசிரியர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் மற்ற குழந்தைகள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.....). என்றாலும் இந்த புறக்கணிப்பை அவர் விளையாட்டில் முழு ஆர்வம் காட்டுவதன் மூலமாகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மூலமாகவும் நிராகரித்திருக்கிறார். ஜப்பானிய நாட்டுக்கேயுரிய நிலப்பகுதியின் அமைப்புப்படி அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களும், அதன் மூலம் அவர் பார்த்த பிணக்குவியல்களும் அவரை மிகவும் பாதித்திருக்கிறது.
ஒரு வரலாற்றுத் தேர்வில் அவர் ஒரு கேள்விக்கு விடை அளித்த விதம், அவர் ஆட்டு மந்தையாக இல்லாமல் எவ்வளவு சுயத்துடன் யோசிக்கிறார் என்பதை புரிய வைக்கிறது.
(அது பற்றியும் அவர் திரைப்படங்களைப் பற்றியுமான அனுபவங்கள் அடுத்த பகுதியில் ......)
5 comments:
interesting effort...please do continue.
i dont know why i cudnt bring myself to buy this book eventhough i have been seing this book in the past three book fairs. may be i will buy it after ur postings.
நல்ல பதிவு. சந்தர்ப்பம் வாய்க்கையில் மேலும் விரிவாக எழுதவும். நன்றி.
good review
நல்ல பதிவு.
விரிவாக எழுதுங்கள் சுரேஷ் கண்ணன்...
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
சுரேஷ்,
நன்றி, அகிராவை பற்றிய பதிவிற்கு. எமது நண்பர்கள் குழுவிற்கு மிகவும் பிடித்த படைப்பாளிகளில் ஒருவர் அகிரா.
தொடருங்கள். என் நண்பர்களிடமும் படிக்க சொல்லியிருக்கிறேன்.
Post a Comment