Friday, July 08, 2005

நெய்வேலி புத்தக கண்காட்சியும் ரவா உப்புமாவும்

கடந்த 3-ந் தேதியன்று நடுராத்திரி (?!) 4 மணிக்கு - அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் - என்னை எழவைத்த பா.ராகவனுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை போட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். :-) இந்த வருடம் நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு நீங்கள் வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 4 மணிக்கு எழுந்ததும் புதிய அனுபவமாகத்தான் இருந்தது. சினிமாவில் விடியற்காலை காட்சி என்பதற்காக சூரிய உதயத்தை காண்பித்து விட்டு, சிறுபறவைகளின் கூச்சல்களை ஒலிப்பார்களே, அந்த மாதிரி பறவைகளின் ஒலிகளை பால்கனியில் நின்று கொண்டு அரையிருட்டில் கேட்டது நன்றாகத்தான் இருந்தது. அந்த புத்தம் புதுக் காலையின் அடர்த்தியான குளிர்காற்றை ஆழமாக சுவாசிப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. நன்றி ராகவன்.

முக்கியமான செய்தி ஏதாவது இருக்குமா என தொலைக்காட்சியை இயக்கி பார்த்ததில் எதுவுமில்லாததற்கு பதிலாக பேஷன் டி.வி.யை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததில் கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறந்து போனது.

()

காலை 7.30 மணி கோயம்பேடு பேருந்து நிலையம். முதன்முறையாக வருகிறேன்.
மிகவும் விஸ்தாரமாக இருந்த நிலையத்தில், கண்ணாடிக் கதவுகளை தள்ளிக் கொண்டு பிரமிப்புடன் உள்ளே நுழைய, எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பிளாட்பாரங்களில், எந்தெந்த எண்கள் கொண்ட பேருந்து என்று குழந்தைக்கும் புரியுமாறு அங்கங்கே போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

பத்ரி வந்தவுடன் ஆரம்பித்தது பூகோளத்தில் இடம்பெற வேண்டிய அந்த உரையாடல். (வழக்கமாக 'சரித்திரத்தில் இடம்பெற வேண்டியது' என்று எழுதுவதை சற்று மாற்றியிருக்கிறேன்)

இரா.முருகனின் தினமணிகதிர் தொடரான 'சற்றே நகுக' (அட! என்ன ஒரு தலைப்பு!), மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude நாவலில் முதல் வரியிலேயே முழு நாவலும் சொல்லி முடிக்கப்பட்டு விட்ட யுக்தி, நகரத்தார்களின் புத்தக பிரசுர பாரம்பர்யம், (பின்னர் பிரகாஷ் வந்து இணைந்து கொண்டார்) குருசரண்தாஸின் புத்தகம், உலகமயமாக்கலின் விளைவுகள், திரைக்கதையின் இலக்கணம், பத்ரியின் சுவாரசியான personality கொண்ட உறவினர் ஒருவர், பதிப்பகத்தில் எடிட்டரின் பங்கு, வலைப்பதிவுகளில் நடக்கும் அபத்தங்கள், பத்திரிகை சர்க்குலேஷன், சில வம்பு தும்புகள், டிவிடியில் எப்படி எழுதுவது? ........... என்று ஒரு முழு ரவுண்டு வந்த அந்த உரையாடலை பேருந்தின் ஜன்னல் வெளியில் கிடைத்த கொய்யா, பலாப் பழங்களோடு சேர்த்து மென்று தின்றோம். வெயில் புழுக்கத்தாலும், ரொம்ப நாட்கள் கழித்து பேருந்தில் நீண்ட பயணம் செய்வதாலும் சற்று அலுப்பாக இருந்தது. பேருந்து ஓட்டுநரோ டீஸல் காலியாகும் வரை நிறுத்துவதில்லை என்று ஆவேசமாக ஓட்டிக் கொண்டிருக்க, எரிச்சலில் இந்த பாழாய்ப் போன நெய்வேலி எப்போது வரும் என்று எரிச்சலாக இருந்தது.

ஒருவழியாக பேருந்தில் இருந்து இறங்கி, நிலையத்தின் அருகாமையில் இருந்த ஏ.சி உணவகத்திற்கு சென்றோம். அங்கே ஏ.சி. நேற்று இயக்கப்பட்டு இன்று மிச்சமிருந்த 10 சதவீத ஜில்லில் அருமையான மதிய உணவை முடித்தோம். வெளியூரில் உணவு எப்படியிருக்குமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு அந்த அருமையான உணவு திருப்தியளித்தது. (அந்த வத்தக்குழம்பிற்காகவே மறுபடி போக வேண்டும் போலிருக்கிறது)

()

அந்த வெயிலிலும், சற்று உள்ளே அமைந்திருந்த புத்தக கண்காட்சிக்காக சில கிலோ மீட்டர்கள் நடந்து வந்த நெய்வேலிக்காரர்களை - முக்கியமாக சிறுவர்களை - பாராட்ட வேண்டும் போலிருந்தது. அழகான நுழைவாயிலுடன் அமைந்திருந்த கண்காட்சி, மேலே வெயில் மறைக்க கூரை, கீழே செம்மண்ணால் பாதிக்கப்படாமல் பிளாஸ்டிக் விரிப்புகள் என்று நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூடவே மெகா ராட்டினங்களும், மிளகாய் பஜ்ஜி கடைகளுமாய் திருவிழா எபெக்டில் இருந்தது. நிறைய முக்கியமான பதிப்பாளர்கள் (ஏனோ) கடை போடாததால் புத்தக கண்காட்சி சற்று டல்லடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் பா.ராகவன், தொள தொள சட்டையும், ஷார்ட்ஸீமாக மெர £னாவில் நடைப்பயிற்சி செல்கிறவர் தோற்றத்தில் இருந்தார்.

பாரா அறிமுகப்படுத்த எஸ்ஸார்சி (இவரின் குறுநாவல்களை கணையாழியில் படித்திருக்கிறேன்) வேர்கள் ராமலிங்கம், தினமணி சிவகுமார் (இரா.முருகன், இவர் எழுதிய இசைமலரைப் பற்றி காப்பிகிளப்பில் எழுதியிருக்கிறார்)
ஏற்கெனவே மடற்குழுவின் மூலமாக அறிமுகமாகியிருந்த வே.சபாநாயகத்தை சந்தித்தேன். அவருடைய 'மீட்பு' போன்ற சில பழைய சிறுகதைகளை நான் நினைவு கூர மனிதர் மிக உற்சாகமாக அந்தக் கதைகளின் பின்னணிகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். இவருடன் பேசிக் கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

()


கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

(1) தி.ஜானகிராமனின் 'அடி' குறுநாவல் - மணிவாசகர் பதிப்பகம் - விலை ரூ.16

ரொம்ப நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம் இது. ஆர்.வெங்கடேஷீம் அவருடைய 'நேசமுடன்' மின்னிதழில் இதை குறிப்பிட்டிருந்த ஞாபகம். வீட்டுக்கு வந்தவுடன் படித்து முடித்துவிட்டேன். தி.ஜாவின் பேவரிட் ஏரியாவான 'Adultery' - ஐ சற்று தொடும் குறுநாவல். (இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்)

(2) சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிற 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசை

இந்த வரிசையில் ந.பிச்சமூர்த்தி பற்றி அசோகமித்திரனும், மெளனி பற்றி கி.அ. சச்சிதானந்தமும், க.நா.சு பற்றி தஞ்சை பிரகாஷீம், அம்பேத்கர் பற்றி ராகவேந்திர ராவும் எழுதியுள்ள புத்தகங்களை வாங்கினேன். ஒவ்வொன்றும் ரூ.25. எந்தவித Gimmics-ம் இல்லாத நேர்மையான வடிவமைப்பு மற்றும் தரமான தாளில் அச்சாகியிருக்கிற இந்த புத்தகங்கள் விலையோடு ஒப்பிடும் போது மிக மலிவாக தோன்றுகிறது. ஒரு எழுத்தாளரைப் பற்றின முறையான அறிமுகத்திற்கு இந்த புத்தகங்கள் மிக உபயோகமாயிருக்கும் என நம்புகிறேன். சம்பந்தப்பட்ட படைப்பாளியைப் பற்றின அறிமுகம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சில சுவாரசியமான சம்பவங்களை நினைவுகூர்தல், விமரினச நோக்கில் அவருடைய படைப்புகள், அவரைப் பற்றிய மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்கள், அவரின் படைப்புப்பட்டியல் என்று மிக அழகாக இந்தப் புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த வரிசை நூல்கள் மிக பயனுள்ளதாயிருக்கும்.

(அம்பேத்கர் எப்படி இலக்கியவாதிகள் வரிசையில்?.. என்று பத்ரி ஒரு சிறிய சந்தேகத்தை எழுப்பினார். அடித்தட்டு மக்களின் மேலுள்ள பரிவுடனான அவரது அரசியல் சிந்தனைகளை இலக்கியம் என்கிற வரிசையில் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது)

(3) பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிற பல்வேறு உபயோகமான தலைப்புகளில் சிறுசிறு நூல்கள்.

சிறிய அளவில் 100 புத்தகங்கள் விதவிதமான தலைப்புகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. விலை ரூ.5 மற்றும் ரூ.10 மட்டுமே. நான் வாங்கிய சில உதாரண தலைப்புகள்

நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்
தமிழர் திருமணம் நேற்று முதல் இன்று வரை - பேரா.ச.மாடசாமி
மனிதனும் உரிமையும் - ச.பாலமுருகன்
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் - விஜயன்
தற்கால தமிழகத்தில் சமூக வன்முறைகள் - டாக்டர்.கா.அமணிக்குமார்.
செப்டம்பர் நினைவுகள் - அருந்ததிராய்
ஏகாதிபத்ய ஜனநாயகம் - அருந்ததிராய்
அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச. தமிழ்ச் செல்வன்
ஆயிஷா - இரா.நடராஜன்
ரோஸ் - இரா.நடராஜன்
உலகமயமாக்கலின் எதிர்விளைவுகள் - பிரபாத் பட்நாயக்
20ஆம் நூற்றாண்டு அரசியலில் இந்தியா - அய்ஜாஸ் அகமது
பழங்குடியினர் பண்பாடு சிதைவுகள் - ஆதவன் தீட்சண்யா

மேலும் விவரங்களுக்கு: www.tamizhbooks.com

இந்த புத்தகங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஒரு நூதனமான உலகைப் பற்றின சுருக்கமான அறிமுகத்தை நமக்கு தருகின்றன. இதை ஆரம்பமாகக் கொண்டு நாம் நம் பயணத்தை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் செயல்படுத்தலாம். இதில் 'ஆயிஷா' என்கிற சிறுகதை 'கணையாழி'யில் வெளியாகி பரவலாக பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. சுயமாக சிந்திக்கிற புத்திசாலியான ஒரு சிறு மாணவி, ஆட்டு மந்தைகளையே மேய்த்து பழகிப் போன முதிர்ச்சியற்ற ஆசிரியர்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள் என்பதைப் பற்றியது. பின்னர் இது குறும்படமாகவும் வந்தது.

()

கிழக்குப் பதிப்பகம் சார்பில் பத்ரி 'சிறந்த பதிப்பாளர்' விருது வாங்கும் காட்சியைப் பார்க்கும் வரை பொறுத்திருக்க நேரம் அனுமதி தராததால் பா.ராகவன், பிரகாஷ், நான் ஆகியோர் நகைச்சுவை எழுத்தாளரான ஜே.எஸ்.ராகவனின் காரில் சென்னை திரும்பினோம். (அண்ணாநகர் டைம்ஸில் ஜே.எஸ்.ராகவனுடைய பத்தியை விடாமல் படிக்கிறேன்).

வழியில் எங்கும் இரவு உணவை சாப்பிட இயலாமல், பதினொன்றைக்கு மனைவியை தொந்தரவு செய்து எழுப்பி, அவசரத்திற்கு என் ஜென்ம விரோதியான 'ரவா உப்புமாவை' விழுங்கி விட்டு தூங்கப் போனேன்.

2 comments:

Anonymous said...

///ஏ.சி. நேற்று இயக்கப்பட்டு இன்று மிச்சமிருந்த 10 சதவீத ஜில்லில் ///

:-))))

அன்பு said...

என்னப்பா ஒரு 5 மணிநேர நெய்வேலி பயணத்துக்கு இப்படி அலுத்துக்கிறீங்க!? உங்களையெல்லாம் மதுரை-அருப்புக்கோட்டை-புதூர்-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரின்னு ஒரு டிரிப் அனுப்பனும்...:(