நண்பர் ஆனந்த் ராகவ் எழுதிய 'சுருதி பேதம்' என்கிற நாடகத்தை 'நாரத கான சபாவில்' பாரா அழைப்பின் பேரில் காண முடிந்தது. ஆனந்த ராகவின் வெகுஜன இதழ்களில் வெளிவந்திருக்கிற சிறுகதைகளை மட்டுமே படித்து (நீச்சல் குளம் என்கிற நகைச்சுவைப் படைப்பை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்) அவர் படைப்புகளைப் பற்றின ஒரு பிம்பத்துடன் ஒரு நகைச்சுவை நாடகத்தை எதிர்பார்த்து போயிருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. விருதுக்குரிய குறும்படத்துடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு கனமான விஷயத்தை நாடகத்தின் களமாக எடுத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.
ஆனால் இந்த நாடகத்தை பார்த்து முடித்தவுடன், இது அமெரிக்காவில் மேடையேறின போது அங்கிருக்கிற பெண்ணுரிமை இயக்கங்கள் யாரும் இந்த நாடகத்தின் உட்கருத்தை ஆட்சேபிக்கவில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது.
ஏன்? சொல்கிறேன்....
அதற்கு முன் கதாசிரியர் ஆனந்த ராகவைப் பற்றி.
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அவர் எழுதின கதை ஒன்றை நான் சற்று லேசாக விமர்சிக்கப் போக, என்னை தனிமடலில் தொடர்பு கொண்டு நான் குறிப்பிட்ட குறையைத் தெளிவுபடுத்தினார். பிறகு எடிட் செய்யப்படாத முழுக்கதையையும் எனக்கு அனுப்பி வைத்தார். 'யாரோ தன் கதையை விமர்சித்து விட்டுப் போகிறார்' என்றெல்லாம் அலட்சியப்படுத்தாமல் அதற்கான விளக்கத்தை சொல்லி தன் படைப்பின் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளும் அவரின் உன்னதமான போக்கு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
()
சுருதி பேதம் நாடகத்தைப் பற்றி:
ஆனந்த் ராகவ் எழுதி தீபா ராமானுஜம் இயக்கியிருக்கும் இந்த நாடகம், சங்கீத வித்வான் ஒருவருடைய திரைமறைவு வாழ்க்கையைப் பற்றியது. இளையாங்குடி பஞ்சாபகேசன் என்கிற புகழ்பெற்ற, திறமையான கர்நாடக சங்கீத வித்வானின் இரண்டாவது மனைவி (கொச்சையாக சொன்னால் வைப்பாட்டி) கல்யாணி. அவர்களின் ஒரே பெண்ணான நித்யா எப்போதாவது ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்லும் அந்த நபரை தன் அப்பா என்று ஏற்க மறுக்கிறார். தன் அம்மாவும் அவர் மீது மரியாதையுடன் இருப்பதை கண்டு எரிச்சலடைகிறார். வித்வான் அந்த பெண்ணின் மீது பாசமாக இருந்தாலும், அவரை ஏற்க மறுத்து அப்பா என்கிற அங்கீகாரத்தை தர மறுக்கிறாள்.
நாளடைவில் அவள் வெளியுலகத்தில் புழங்கும் போது கூட சுயமாக வெளிப்பட இயலாமல் அவள் அப்பாவின் அறிமுகத்துடனே சமூகத்தால் அறியப்படுகிறாள். இந்த நிலை அவளை எரிச்சலூட்டுகிறது. எந்தவித பின்னணி அடையாளமுமில்லாமல் சுயமாக ஏதாவது சாதனை புரிந்து வித்வானை விட அதிக புகழுடன் விளங்கி இந்த சமுகத்திற்கு தன்னை நிரூபிக்க சபதமேற்கிறாள். இயல்பான தனக்கு உள்ள பாட்டுத்திறமையை உபயோகித்து புகழ்பெற்ற பாடகியாகி சினிமாக்களிலும் பாடுகிறாள். என்றாலும் இந்த சமூகம் இது அவளது அப்பாவிடமிருந்து வந்த திறமை என்றே சொல்கிறது. நாளாக நாளாக இவளும் அதை நம்பி மனமார ஏற்று, அப்பாவுக்கான அங்கீகாரத்தை தந்து அவருடன் ஒரே மேடையில் பாட விரும்பும் போது, திருப்பமாக வித்வான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு விடுகிறார். எல்லோரும் பாச மழையில் நனைந்து கொண்டே அழ, திரை விழுகிறது.
()
ஆனந்த ராகவ், இந்த நாடகத்தை 'சிந்து பைரவி' திரைப்படத்தின் நீட்சியாக யூகித்து எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. இதில் என்னால் ஏற்க முடியாத கருத்து, ஒரு பெண் சுயத்துடன் வெளிப்பட விரும்பி அதை சாதிக்க, அந்த சமூகம் அதை அங்கீகாரம் தராமல் போவதும், அவளும் அதை ஏற்றுக் கொண்டு தன் அப்பாவுடைய திறமைதான் என்று நம்பத் தொடங்குவதும், பெண் என்பவள் சுயமாக எதையும் செய்யத் தெரியாமல் எதற்கும் ஒரு ஆணை சார்ந்து இருப்பதே உலக நியதி என்கிற பிற்போக்குத்தனமான கருத்தை இந்த நாடகம் அடிநாதமாக வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. இந்த ஒரு கருத்தை மாற்றி அமைத்தால் இந்த நாடகம் இன்னும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
()
இந்த நாடகத்தில் என்னை உடனே உடனே கவர்ந்த அம்சம், அரங்கத்தின் ஒளியமைப்பும், அரங்க அமைப்பும். ஒரு நாடகத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டிய அளவிற்கு இந்நாடகத்தில் ஒளி மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஒளியமைப்பு 'கலை' ரவி) இரண்டு, மூன்று சுவாமி படங்களையும், கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஒரு பிராமண வீட்டின் வரவேற்பறையாகவும், அந்தக் காலக்கட்டம் வெளிப்படும்படியாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது (அரங்க அமைப்பு - 'உஷா ஸ்டேஜ்' விஜயகுமார்) நிறைவாக இருக்கிறது. காலம் மாறியிருப்பதை தொலைக்காட்சி பெட்டி மற்றும் கலர் புகைப்படம் கொண்டு தெரிவித்திருப்பது நன்றாக இருக்கிறது.
சங்கீத வித்வானாக நடித்த ராஜீவ் ஜெயராமன், பின்னணியில் ஒலிக்கும் ஆலாபனைகளுக்கு (பரமேஷ் கோபி) ஏற்ப மிகத்திறமையாக வாயசைத்திருப்பதோடு, தன் மகளின் அன்பிற்காக ஏங்கி கலங்கும் காட்சியிலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். (தற்கால சூழ்நிலையிலும், சங்கீத வித்வான் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று கதாசிரியர்கள் யோசிப்பது விநோதமாக இருக்கிறது. ஆனால் இந்த நாடகம் 50 வருடத்திற்கு முன்பு இருக்கிற கால கட்டமாக இருப்பதினால் மன்னித்துவிடலாம்) நித்யாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம் அந்த பாத்திரத்திற்கு சற்று முதிர்ந்த தோற்றத்தில் தோன்றினாலும் (பெண்ணை விட அம்மா இளமையாக இருக்கிறார்) தனது உன்னதமான நடிப்பால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவர் பாடுவதற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிற ஆஷா ரமேஷின் குரல் மிக இனிமையாக இருக்கிறது.
வித்வானுக்கு உதவியாளரான அம்பியாக வரும் நவீன்குமார் நாதன் இயல்பான நகைச்சுவையின் மூலம் சற்று தொய்வாக செல்லும் நாடகத்தின் போக்கை சமாளித்திருக்கிறார். (நாடகம் முடிந்து கலைஞர்கள் மேடையேறின போது இவருக்குத்தான் பலத்த கைத்தட்டு கிடைத்தது). சிறுசிறு பாத்திரங்களில் வருகின்றவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருந்தனர்.
()
ஆனந்த ராகவ்வின் வசனங்கள் பல இடங்களில் மின்னலடிக்கிறது. சில உதா:
வீட்டிற்கு வந்திருக்கும் அப்பாவை மகள் நிற்க வைத்தே எரிச்சலுடன் பேசிக் கொண்டிருக்க, உள்ளேயிருந்து வரும் அம்மா கேட்கிறார். "ஏண்டி அவரை உட்காரச் சொல்லாம நிக்க வெச்சா பேசிண்டு இருக்கறது"
மகள் சட்டென்று தன் பேச்சின் இடையே இயல்பாக ஆனால் கோபத்துடன் சொல்கிறாள்.
"அவர் இங்க உக்கார்றதுக்கா வர்றார்"
*******
வித்வானின் உதவியாளர் அம்பி நித்யாவை கரிசனமாக விசாரிக்கிறார்
"இவ்வளவு புத்திசாலித்தனமான பொண்ணா இருக்கறயே. ஒரு கல்யாணத்தை பண்ணிக்கப்படாதா?"
"புத்திசாலியா இருக்கறதனாலதான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறேன்."
********
என்றாலும் சில இடங்களில் வசனம் சொதப்புகிறது. இரண்டாவது மனைவியாக இருந்தாலும் தன் கணவனின் மீது அதீத மரியாதை வைத்திருக்கும் கல்யாணி அம்மாள் ஒரு இடத்தில் தன் கணவன் பெயரை 'இளையாங்குடி பஞ்சாபகேசன்' என்று கணவர் பெயரை ஸ்பஷ்டமாக சொல்வது அந்த பாத்திரத்தின் இயல்புத் தன்மையை சற்று பாதிக்கிறது.
இந்தக் காலத்துல சொல்வா.. அந்தக் காலத்துல சொல்வாளோ....
()
நித்யா சிறு பெண்ணாக இருக்கும் போது இருக்கிற அதே கெட்டப்போடு வருகிற வித்வான், அவர் வளர்ந்து பெரியவளாகிவிட்டபிறகும் அதே தோற்றத்தில் வருவது சற்று சங்கடமாக இருக்கிறது. சட்டென்று பார்க்கும் போது நகைச்சுவை நடிகர் விவேக் மாதிரி இருக்கும் அவரின் இளமையை ஒப்பனையால் (கலைமாமணி சுந்தரமூர்த்தி) மறைக்க முடியவில்லை. ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் பாத்திரங்கள், புத்தம் புது ஆடைகளுடனும் அதீத ஒப்பனையுடனும் தோன்றும் போது, இவர்கள் கழிவறைக்கு செல்லும் போது கூட இப்படித்தான் இருப்பார்களா என்று எரிச்சலடைய வைக்கிறது.
காட்சிகள் மாறும் இடைவெளியை திரையை மூடாமல் பாடகர் பாடுவதை காட்டுவது புதுமையாக இருந்தாலும், பாகவதர் படம் மாதிரி அடிக்கடி ஆலாபனை ஆரம்பித்துவிடுவதால், கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாத என்னைப் போன்றோர்கள் இருக்கையில் நெளிய வேண்டியதாயிருந்தது.
()
நாடகம் முடிந்த பின் 'நாரத கான சபாவின்' செகரட்டரி (கிருஷ்ணசாமி (?) ) சில உபயோகமான தகவல்களைச் சொன்னார். இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாலும் தமிழை கொலை செய்யாமல் சிறப்பாக உச்சரித்ததை பாராட்டினார். (அமெரிக்காவில இருக்கறவங்கள விடுங்க! இங்க சென்னையில மட்டும் என்ன வாழுது என்று பிறகு பேசிய பாம்பே ஞானம் சென்னைக்காரர்களை வாரினார். அதற்கும் பெருந்தன்மையாக கைத்தட்டினார்கள் நம் மக்கள். தீபா ராமானுஜம் இவருடைய சிஷ்யையாம்).
செகரட்டரி சில பழைய தகவல்களை சொன்னார். நாரத கான சபா ஏற்படுத்தப்பட்ட போது இங்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாம். அவர்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மனோகர் என்று சில குறிப்பிட்ட பேரே அரங்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்களாம். அந்த வரிசையில் 'கிரியா கிரியேஷன்ஸ்' இருப்பதாக பாராட்டினார். சில தொழில்நுட்ப குறைகளை சுட்டிக் காட்டிய இவர், காலர் மைக்கை விட அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிற மைக்கின் முன் பேசினால் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும் என்றார். (இந்தக் கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வளர்ந்திருக்கும் தொழில்நுடபத்தை பயன்படுத்தி காலர் மைக்கை பயன்படுத்தி பேசுவதால் பாத்திரங்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கும் மைக்கின் முன் செயற்கையாக வந்து பேசுவதை தவிர்த்து இயல்பாக பேசலாம்.)
என்றாலும் ஆரம்ப கட்டங்களில் உரையாடல் சரியாக கேட்காததால் 'வால்யூம் இல்ல' என்று பார்வையாளர்களிடமிருந்து பலத்த குரல்கள் எழுந்தன. நாடகத்தின் மூலம் பார்வையாளாகளின் ரியாக்ஷன் உடனே கிடைக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம் போலிருக்கிறது.
()
நாடகத்தின் இடைவேளையில் பாரா அறிமுகப்படுத்தி வைக்க எழுத்தாளர் பாஸ்கர் சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பழைய ஆனந்த விகடனில் அவர் எழுதிய 'ரூட் பஸ்' என்னும் இயல்பான தொடரை நினைவுப்படுத்தி உரையாட மனிதர் உற்சாகமாகிப் போனார். அவரின் சிறுகதைத் தொகுதியான 'பழுப்பு நிற புகைப்படம்' பற்றியும், தமிழ்நாட்டையே ஒன்பது மணிக்கு கட்டிப் போட்ட 'மெட்டி ஒலியின்' வசனங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது நிறைவான அனுபவமாக இருந்தது.
11 comments:
Gr8 to read this post.
Back to form again.
Regs,Arun
Nalla Vimarsanam
சுரேஷ் கண்ணன்
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நீங்கள் இதுப் போல நிறைய எழுத வேண்டும்.
இதை படித்தவுடன் நாடகத்தை நேரில் பார்த்தது போலவே இருந்தது.
ஓவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் நீங்கள் சிறு குறிப்பாக சொன்னது மிக அருமை.
மிக்க நன்றி...
மயிலாடுதுறை சிவா...
நேற்றைய நாடகத்தின் உச்சகட்ட காட்சி ஒன்று
-பாரா.
தனி மடல்களில் ஆனந்தும், தீபாவும் என்னை அழைத்திருந்தார்கள். தற்சமயம் சென்னை வர இயலாத சூழ்நிலை. 'இப்படி ஆகி விட்டதே' என்று கொஞ்சம் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.
உங்கள் விமர்சனம் அந்தப் புழுக்கத்தைப் போக்கி விட்டது. மிக்க நன்றி, சுரேஷ்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
ஒரு கொசுறுத் தகவல்: வருகின்ற ஜனவரியில் இந்த நாடகத்தை எல்லேயிலும் அரங்கேற்றுகிறோம்.
அன்புள்ள பாரா, உங்கள் லிங்கை யாரோ அசிங்கமாகத் திருப்பி விட்டிருக்கிறார்கள். உடனே சரி செய்யவும்.
சுரேஷ் கண்ணன்,
தகவலுக்கு நன்றி.
சுரேஷ், நல்ல விமர்சனம்
முதல் சில காட்சிகளில், ரொம்ப தொய்வாக இருந்தது போலத் தோன்றினாலும், இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாகச் சென்றது. பல இடங்களில், வசனம் பளிச்சென்று இருந்தது. எனக்கு சிந்துபைரவி ஞாபகம் எல்லாம் வரவில்லை. இது கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமான கருவைக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். பஞ்சாபகேசன், புகழ் பெற்ற சங்கீத வித்துவானாக இருந்த போது, தன் illegitimate குழந்தையை , தன் மகள் தான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவரைப் பழிவாங்குவதற்காக, மகள் ( தீபா), பிடிக்க வில்லை என்றாலும், சங்கீதம் பயின்று, அப்பாவை விட அதிக புகழ் பெற்றதும், நிலைமை தலைகீழாக மாறிவிடுகின்றது. இந்த பிரிமைஸைக் கொண்டு, இன்னும் புகுந்து விளையாடியிருக்கலாம் என்று தோன்றினாலும், ஆனந்தும் அப்படி ஒன்றும் ஏமாற்றி விடவில்லை. நித்யாவாக நடித்த அக்ஷயா ராமானுஜம் ( தீபாவின் மகளாம்) ரொம்ப இயல்பாக நடித்திருந்தார். அம்பியாக நடித்த நவீன்குமார் நாதன், அனுபவஸ்தர் என்று தோன்றுகிறது.
ராம், அது பாரா எழுதியதில்லை
Geetali "Norah Jones" Shankar [ பண்டிட் ரவிசங்கரின் புதல்வி ] கதையின் Inspiration போலத் தெரிகிறது. நிஜ கதை நீங்கள் குறிப்பிட்டதைப் போலத்தான். //ஒரு பெண் சுயத்துடன் வெளிப்பட விரும்பி அதை சாதிக்க// சாதித்து விட்டார் Norah !
ராசு
எனக்கும் நோரா ஜோன்ஸ்தான் நினைவுக்கு வந்தார். ஆனால் காரணமில்லாமல் கனிமொழியும் நினைவுக்கு வந்தார்!
நல்ல பதிவு சுரேஷ்!
.:டைனோ:.
Nice Review
- Kumar
Post a Comment