Monday, August 01, 2005

காக்டெயிலும் சிங்கிள் டீயும்

நேற்று மாலை நடிகை நமீதாவை சந்தித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்று 'சுஜாதா' பாணியில் நான் எழுத வேண்டுமெனில் ஒன்று, சத்யராஜ், சரத்குமார் போன்ற வயதான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் அல்லது எதிரில் அமர்ந்திருக்கிற நண்பரை விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டுப்பார்க்கிற நிறைய 'டப்பு' வைத்திருக்கிற தயாரிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்பதால், நேற்று தாஜ் கோரமண்டல் ஓட்டலின் போர்ட்டிகோவில் எனது சகாவோடு அவரது காருக்காக காத்திருக்க நேரிடுகையில், என் ஜென்மத்தை சாபல்மடைய வைக்கும் நிகழ்வான நமீதா தனது காரில் இருந்து இறங்கி உள்ளே போனதை பார்த்தேன். (ஆரம்ப வரிகளை சுவாரசியமாக எழுதி உங்களை படிக்க வைக்க ஒரு முயற்சி) :-)

மலையாள நாளிதழான 'மாத்ருபூமி' தனது போட்டியாளரான 'மலையாள மனோரமா'வை விட எவ்வாறு சர்க்குலேஷனிலும், ரீடர்ஷிப்பிலும் உயர்ந்திருக்கிறோம் என்பதை 'பிலிம் காட்ட' (Audio Visual) எங்களை தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அழைத்திருந்தனர். இதன் மூலம் வருகிற மலையாள பண்டிகையான ஓணத்திற்கு பிராண்ட்களின் விளம்பரங்களை கவர்வதும் அவர்களது நோக்கம். நான் அதைப் பற்றியெல்லாம் எழுதி உங்களை சோதிக்க விரும்பவில்லை.

நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே, அவர்கள் அந்த மூன்று மணிநேர நிகழ்ச்சிக்கு மிகவும் சிரத்தையுடன் அந்த இடத்தை அலங்கரித்திருந்தது என்னை பிரமிக்க வைத்திருந்ததால். Ball Room எனப்படும் அந்தப் பகுதியில் நுழைந்தவுடனே ஏதேர ஐயப்பன் கோவில் நுழைந்தாற் போல் பூக்கோலம் போட்டு, ஒரு சிறுவன் ஓதுவார்கள் பாடுகிறாற் போல் ஏதோ ஒன்றை மலையாளத்தில் தண்டையை அடித்துக் கொண்டு பாடி வரவேற்றான். வரவேற்பு பெண் எங்கள் நெற்றியில் சந்தனத்தை தடவி விட, சந்தனத்திற்கு இவ்வளவு குளிர்ச்சி இருக்கிறது என்பது நேற்றுதான் தெரிந்தது.

நிகழ்ச்சி நடக்கப் போகிற இடத்தை ஒரு டிப்பிகல் கேரள வீடு போல் ஓடுகளை அமைத்து, முற்றம் அமைத்து, நாற்புறத்தையும் சுவர் போல் ஏற்படுத்தி ஜன்ன¦ல்லாம் வைத்து அசத்தியிருந்தனர். நுழைவாயிலும் ஒரு வீட்டிற்குள் நுழைவது போல் சின்னதாக தலையை குனிந்து கொண்டு போக வேண்டியிருந்தது. கீழே வாசப்படியில் தடுக்கி விழப் போகிறீர்கள் என்று புன்னகையுடன் எச்சரிக்க ஒரு பெண்ணை வேறு நிறுத்தியிருந்தனர். உத்தரத்திற்கு அடிக்கும் பெயிண்ட் சகாய விலைக்கு கிடைக்கிறாற் போல் ஒரு ஆள் மூஞ்சியில் காரேபூரே பூசிக் கொண்டு பயமுறுத்திக் கொண்டு நிற்க, அவர் தலையில் கீரீடத்தை மாட்டிய பின்புதான் தெரிந்தது அவர் ஒரு கதகளி கலைஞர் என்பது. பக்கத்து வீட்டில் ஆணி அடிக்கிறாற் போல் ஆரம்பித்த சங்கீதத்தை போகப் போக தாளகதியுடன் ரசிக்க முடிந்தது.

பின்பு மாத்ருபூமிக்காரர்கள் அவர்களுடைய பிரதாபங்களையெல்லாம் ஆங்கிலத்தில் அளந்துவிட்டு, நாங்கள் எல்லோருமே முக்கிய வேலையாக வந்திருந்த cocktail & dinner-ருக்கு கலந்து கொள்ள அழைத்தனர். என்னைப் பொறுத்த வரை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சொந்த காசை செலவு செய்து சாப்பிடுவதற்கு வீட்டுப் பத்திரத்தையெல்லாம் எடுத்துப் போக வேண்டும் என்பதால் இந்த மாதிரி ஓசியில் வரும் வாய்ப்புகளை தவறவிடுவதே கிடையாது. சிலர் அவர்கள் வீட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

()

Cocktail & dinner-ல் கலந்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், நம்மாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஏதோ அணுகுண்டுக்கு தப்பி ஓடுபவர்கள் போல் பதறியடித்துக் கொண்டு பாட்டில்களின் பக்கம் பாயவாரம்பித்துவிட்டனர். பார்ட்டிக்கு உள்ளே வரும் போது ஆங்கிலேயர்களுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுப்பவர்கள் போல் வழியில் நிற்போரை மென்மையாக Excuse me-க்களோடு வழி கேட்பவர்கள், இப்போது அவர்களா இவர்கள் என்னுமளவிற்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து கொண்டு, அம்மன் கோயிலில் கூழுக்கு நிற்பவர்கள் கூட தோற்குமளவிற்கு இடித்து தள்ளிக் கொண்டு சென்றனர். என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களாக சொல்லிக் கொண்டாலும் நம்முள் கற்கால மனித குணாசியங்களின் எச்சங்கள் இன்னும் ஆழ்மனதில் எந்த பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை இந்த மாதிரி நிகழ்வுகளின் மூலம் உணர முடியும்.

என்னைப் பொறுத்தவரை பியர்தான் அருந்துவேன் என்பதால் (பியர் என்பது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தாலும் ஏனோ என்னால் மற்ற குடிவகைகளின் மீது நாட்டம் கொள்ள இயலவில்லை. பியர் குடிக்க ஆரம்பித்ததற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த சுவாரசியமான கதையை பின்னொரு சமயத்தில் சொல்கிறேன்) கூட்டத்தில் 2 கிளாஸ் பியர் வாங்கி சாப்பிடுவதற்குள் எரிச்சல் உச்ச அளவிற்கு சென்று விட்டது.

இதே நிலைதான் சாப்பிடும் இடத்திலும். ஏதோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு பொட்டலங்களுக்கு பாய்கிறாற் போல்தான் பெரும்பாலோனோர் நடந்து கொண்டனர். மலையாள பத்திரிகை கொடுக்கிற விருந்து என்பதால் நிறைய கேரள உணவு வகைகள் இருந்தன. சக்கா அல்வா, பழப் பிரதாமன் (பிதாமகன் அல்ல) தேங்காய் ஐஸ்கீரீம், புட்டு, இடியாப்பம் என்று எல்லாவற்றிலும் கேரள வாடை. நான், நான்-வெஜ் பக்கம் போய் ஒரு பிடிபிடித்தேன். கிளம்பும் போது ஏலக்காய், லவங்கம், பட்டை போன்ற மசாலா வகைகள் அடங்கிய பரிசுப் பொதியை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பாஸ்கர் என்கிற பழைய நண்பர் ஒருவரை சந்திக்க முடிந்தது. நானும் அவரும் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் கிராபிக் ஆர்டிஸ்டுகளாக பணிபுரிந்து கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு பஞ்சத்தில் அடிபட்டவர் போல் மிக ஒல்லியாக இருப்பார் அவர். எப்போதும் தனது துரதிர்ஷ்டத்தை நொந்து கொண்டு புலம்பிக் கொண்டேயிருப்பார். நான் அவ்வப்போது அவருக்கு திரைப்படப் பாடல்களையெல்லாம் சொல்லி ஆறுதல் சொல்லுவேன். இப்போது அவர் பெரிய விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று அறிந்து கொண்டேன். ஆள் நல்ல குண்டாகி தெளிவாகவும் மலர்ச்சியாகவும் இருந்தார். பார்க்க சந்தோஷமாக இருந்தது. சற்று நேரம் பேசலாம் என்று பார்த்தால் விஸ்கி போதையில் என்னிடம் சரியாக ஒன்றரை நிமிடமே பேசிவிட்டு "அப்புறம் பாக்கலாண்டா மச்சான்" என்று அவருடைய விசிட்டிங் கார்டை என்னுடைய பாக்கெட்டில் சொருகிவிட்டு கூட்டத்தில் கரைந்து போனார்.

()

வீட்டுக்குத் திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் ஷேர் ஆட்டோவில் வந்து விட்டு அதற்குப் பின்னால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நின்ற போது சில நாட்களாக சந்திக்காதிருந்த என் சமீப கால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் பெயர் முனுசாமி. புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார். சிற்றிதழ்களில் அவ்வப் போது புத்தக விமர்சனங்கள் எழுதுவாராம். ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் புத்தக விமர்சனக்கூட்டத்தில் கலந்து கொள்வாராம். நான் வேண்டாமென்று மறுத்தும் ரோட்டோர கடையில் டீ ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார். ஏற்கெனவே புல்கட்டில் இருந்த நான், அவர் அன்பை மறுக்கவியலாமல் சாப்பிட்டு, பிறகு மூடப்பட்டிருந்த கம்பெனி படிக்கட்டுகளில் அமர்ந்து வெட்டி இலக்கியம் பேசிவிட்டு போரடித்ததும் கிளம்பினோம். போலி நாகரிக மனிதர்கள் மத்தியில் சாப்பிட்ட அந்த அறுசுவை விருந்தை விட எளிமையான இந்த சிங்கிள் டீ சுவையாக இருந்தது என்பதை சொல்லியேயாக வேண்டும்.

6 comments:

Suresh said...

>>என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களாக சொல்லிக் கொண்டாலும் நம்முள் கற்கால மனித குணாசியங்களின் எச்சங்கள் இன்னும் ஆழ்மனதில் எந்த பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை இந்த மாதிரி நிகழ்வுகளின் மூலம் உணர முடியும்

Well said..

Alex Pandian said...

அதெப்டி நமீதாவின் டீஷர்டுடன் கூடிய படம் போடாமல் இந்த பதிவை வெளியிட்டீர்கள் :-)

இதிலாவது கேரள கலாச்சாரம், உணவு முறைகளைப் பின்பற்றினார்கள். கணினி தொழில்நுட்பக் கம்பெனிகளின் இது மாதிரியான பார்டிகளில் பார்த்தால் - எல்லா இடத்திலும் அதே மெனுதான் இருக்கும் - வட இந்திய உணவுவகைகள் + சாம்பார், ரசம், ஐஸ்கிரீம்.


- அலெக்ஸ்

மயிலாடுதுறை சிவா said...

அன்பு நண்பர் சுரேஷ் கண்ணன்

சுவையாக அழகாக விவரித்து இருந்தீர்கள்.
கடைசி ரெண்டு வரி நச்சென்று இருந்தது.
இதுப் போல வாழ வேண்டிதான் தமிழகம் மீண்டும் குடியேறத் துடிப்பது.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

rajkumar said...

சுரெஸ்,

// மூடப்பட்ட கம்பெனி வாசலில் இலக்கியம் பேசி/ இவ்வரிகளுக்குள் ஒரு கவிதை தூங்குகிறது.

இவ்வகையான அனுபவங்கள் உரைக்கும் வாழ்வியல் தத்துவங்கள் பதிவு செய்யப்ப்டாமலே இருக்கின்றன. நீங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

அன்புடன்

ராஜ்குமார்

Voice on Wings said...

இதனை இப்பொழுதுதான் படித்தேன். உங்கள் வழக்கமான நடையில் அருமையாக வந்துள்ளது பதிவு.

துளசி கோபால் said...

அருமையான பதிவு. சக்கப் ப்ரதமன் நல்லா இருந்ததா?

என்றும் அன்புடன்,
துளசி.