Monday, August 01, 2005

காலச்சுவடு, ஆகஸ்டு 2005 - ஓர் அவசரப் பார்வை

இந்த மாத காலச்சுவடை ஒரு பருந்துப் பார்¨வியில் வாசித்த போது என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகஸ்டு மாத காலச்சுவடில் இரண்டு தலையங்கள்: குடும்பம் என்கிற அமைப்பின் பெயரால் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும், அவற்றிலிருந்து மீள்வதற்கான சட்ட வழிவகைகளைப் பற்றியும் முதல் தலையங்கம் அலசுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நிறுவனம் பல்வேறு ஊடக அமைப்புகளை தன்வசமாக்கிக் கொள்வதனால் ஏற்படும் சமூக அபாயத்தை குறித்து இரண்டாவது தலையங்கம் அலசுகிறது.

()

ராஜேஷ் என்கிற புதிய கவிஞரின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. இவை காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றவையாம். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று:

நாள்காட்டி முருகன்
===============

முருகன் படம் அச்சிட்ட நாள்காட்டி
இனாமாய் தெரிந்தவர் கொடுத்தார்

இடக்கையில் வேலும் வலக்கையில் ஆசியுமாக
கம்பீரமாகப் புன்னகைத்து நின்றார்

செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணித் தூபம்
சிரித்துக் கொண்டே அவரும் பிடிப்பார்

தேதிகள் கழிய தாள்கள் கிழிய
முருகன் மேனி மெருகு குறைந்தார்

வருடம் முடிந்தும் மச்சு வீட்டில்
இன்னும் அருள்பாலிக்கிறார் நாள்காட்டி
முருகன்.

()

தமிழின் சிறந்த நாவல்கள் என்று என்னளவில் நான் பட்டியிலிடும் போது அதில் தவறாமல் இடம்பெறக்கூடிய நாவலான 'புலிநகக்கொன்றை' நாவலை எழுதின பி.ஏ.கிருஷ்ணனுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி உள்ளது என்பது இத்தனை நாள் தெரியாமல் போனது. தொலைக்காட்சி தொடர்கள் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை பற்றின அவரின் கட்டுரையை ஒரு வையாவது வாய்விட்டு சிரிக்காமல் உங்களால் படித்து முடிக்க முடியாது. சிரிக்க வைப்பது மட்டுமல்ல, கட்டுரையை படித்து முடித்ததும் சற்று நேரம் தனிமையில் சிந்திக்க வைப்பதுமாயும் இருக்கிறது, அந்தக்கட்டுரை. தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

()

நான் ஏற்கெனவே வாங்கி வைத்து படிக்காமலிருக்கும், பெருமாள் முருகனின் "பீக்கதைகள்" என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியிருக்கிறார் பாவண்ணன். பாவண்ணனின் அற்புதமான எளிமையான மொழியில் அமைந்திருக்கும் இந்த விமர்சனம் நூலை வாங்கிப்படிக்கத் தூண்டுகிறது.

()

சுஜாதா மறுபடியும் ஒரு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவர் ஆனந்தவிகடனில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் 'கோயில் ஓழுகு' என்கிற நூலைப்பற்றி குறிப்பிடும் போது கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின் போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி..... என்று எழுதியிருப்பதை இரண்டு இசுலாமிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்து ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கின்றனர். பிற்பாடு இதையும் தனது கட்டுரைத் தொகுதியில் இதைக்குறிப்பிட்ட சுஜாதா இதனாலேயே இசுலாமியத்தை பற்றி எழுத தயக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த இரண்டு கடிதத்தின் முழுப்பகுதியையும் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் உண்மையான வரலாற்று விவரங்கள் நமக்கு தெரிய வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் செய்தித்தாளில் வெளியாகும் ஒரு சம்பவத்தை புலனாய்வுப் பத்திரிகைகள் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆராய்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் அதே பாணியைத்தான் காலச்சுவடும் பின்பற்ற முயல்கிறது என்று தெரியவந்தால் சிற்றிதழ்களின் மீதான நம்பிக்கை இன்னும் இறங்கிவிடும்.

()

'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சிறுகதையை ஜாதி என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படித்து அதனை தனக்கு சாதகமாக திரித்து, இந்தக்கதை ஜாதி வெறியின் வெளிப்பாடு என்று அபத்தமாக நிறுவ முயல்பவர்கள், அம்பை எழுதியிருக்கும் 'பெண்ணின் தலை மேல் தொங்கும் கத்தி' என்கிற கட்டுரையை அவசியம் படித்தாக வேண்டும். கல்வி என்கிற விஷயம் சில குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த பெண்களுக்கு ஆயுதமாக விளங்காமல், அவர்களையே திருப்பித்தாக்குகிற ஒரு எதிர் ஆயுதமாக மாறிவிடும் அபாயத்தையும் அதற்கு காரணமாக இருக்கும் அதே இனத்தவர்களையும் யதார்தத உதாரணங்களைக் கொண்டு ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

()

சிற்றிதழ்களிலும் அபூர்வமாக சிரிக்கக்கூடிய வகையில் சில வரிகள் இடம் பெறுகின்றன. நீரோட்டம் என்கிற தலைப்பில் கடைசிப்பகுதியை இந்த மாதம் பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். அதில் சில வரிகள்.

..... காலச்சுவடு, கடவு ஆகியவை இணைந்து மதுரையில் நடத்திய நாவல் கருத்தரங்கில் எழுத்தாளர் 'கறிச்சோறு' சி.எம்.முத்துவும் கலந்து கொண்டார். அவரோடு பேச்சுக் கொடுத்த போது என் ஊரைக் கேட்டார். 'திருச்செங்கோடு' என்றேன். அவர் முகத்தில் அடியார்க்குரிய பரவசம் பெருகியது. "நான் கம்யூனிட்ஸ்டுதான். ஆனாலும் கடவுள் நம்பிக்கை எல்லாம் எனக்குண்டு" என்றார். ரொம்பவும் எதார்த்தமான மனிதர் முத்து. திருச்செங்கோட்டில் அவருடைய மைத்துனர் ஒருவர் வேலை பார்த்ததாகவும் அவரைப் பார்க்க அங்கே வந்தபோது மலையேறிக் கோவிலுக்குப் போனதாகவும் சொன்னார். "முதன் முறை கோவிலுக்குப் போய் வேண்டிக் கொண்ட வந்த ஒரு வருசத்திற்குள் ஆம்பளப் பிள்ளை பிறந்தான்" என்றார். அதன் பிறகு இரண்டாம் முறை வணங்கிச் சென்றார். இரண்டாவது 'ஆம்பளப் பிள்ளை". மூன்றாம் முறை வந்து போனார். மூன்றாவது ஆம்பிளைப் பிள்ளை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், "இடையில் நீங்க ஏதாவது முயற்சி பண்ணினீங்களா" என்று கேட்டார். முத்து உட்பட எல்லோரும் ரசித்துச் சிரித்தோம்.

()

நன்றி: காலச்சுவடு

10 comments:

Jsri said...

கோயில் *ஒ*ழுகு. இந்தப் புத்தகம் நான் முயற்சி செஞ்சபோது கடைல எங்கயும் கிடைக்கலை. மிகக் குறைஞ்ச ப்ரிண்ட்தான் போட்டாங்களாம். ஸ்ரீரங்கத்துல ஒருத்தர் இங்கயே படிச்சுட்டு தரதானா தரேன்னு புத்தகத்தை கண்ணுலயே காண்பிக்கலை. :(

எந்தப் பதிப்பகம், எங்க கிடைக்கும்னு ஏதாவது தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Jsri said...

உங்ககிட்ட கேட்ட நேரம், புத்தகம் கிடைச்சு வாங்கிட்டேன். நன்றி. :)

Anonymous said...

JSRI
You can share that info. about the book with others.
Try to read Arjun Appadurai's book
'Worship and Conflict Under Colonial Rule: A South Indian Case'
if you manage to get access to a copy.

Jsri said...

Anonymous:
புத்தகத்தின் உள்ளே எழுதியிருக்கும் விபரங்கள் என்றால்
இன்னும் 20 நாள்கள் பொறுத்திருக்க வேண்டும். புத்தகம்
இன்னும் என் கைக்கு வரவில்லை.

புத்தகம் கிடைக்குமிடம் பற்றி கேட்கிறீர்கள் என்றால்: :)

"ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ"
214, கீழ உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
திருச்சி- 620 006.
Ph: (0431) 2434398
mob: 9884289887
email: kicha19@sify.com

விலை ரூ. 250 (2 வால்யூம்)

சுரேஷ்: பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டுகளுக்கு மன்னிக்கவும்.

பிச்சைப்பாத்திரம் said...

Sorry for the late reply.

ஸ்ரீரங்கம் தல வரலாறு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கிற ஜெயஸ்ரீன்னா எங்கேயோ கேட்ட பேர் மாதிரி இருக்குதே?:-) நல்லாயிருக்கீங்களா?

சரி. புத்தகம் வந்தவுடனே சொல்லுங்க. கோயில் ஒழுகா இல்ல ஓழுகான்னு? :-) காலச்சுவடுல ஓழுகுன்னுதான் போட்டிருக்காங்க. அப்படியரு வார்த்தை தமிழ்ல இருக்கான்னு தெரியல.

//சுரேஷ்: பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டுகளுக்கு மன்னிக்கவும். //


இதெல்லாம் சம்பந்தம் இருக்கற பின்னூட்டம்தான். அதனால் மன்னிப்பை திருப்பி கொடுத்தர்றேன். :-)

Anonymous said...

காலச்சுவடுல ஓழுகுன்னுதான் போட்டிருக்காங்க. அப்படியரு வார்த்தை தமிழ்ல இருக்கான்னு தெரியல.

it is high time you go
back to elementary school and learn atthichuvadi

பிச்சைப்பாத்திரம் said...

English-ல திட்டியிருக்கிற ஆத்திச்சூடி தெரிஞ்ச அனானிமஸ் அண்ணாச்சி அல்லது தங்காச்சி,

நீங்க எந்த ஸ்கூல்ல படிக்கறீங்கன்னு சொல்லுங்க. அங்கனயே வந்து சேந்துக்கறேன். :-)

நான் தமிழ்ல புலின்னு எப்பவும் சொல்லிக்கிட்டது இல்ல. அப்படி சொல்லிக்கறவங்களுக்கும் எப்பவாவது சந்தேகம் வராம போவுமா என்ன? காலச்சுவடு பொஸ்வதுத்துல ரெண்டு மூணு எடத்துல அப்படி போட்டு இருந்தததால சந்தேகம் வந்துடுச்சு. அத தெளிவு படுத்திக்கலாமேன்னு ஒரு கேள்வியை போட்டேன். பழைய கல்வெட்டு எழுத்துக்கள்ல வர்ற வார்த்தைகள பாத்தீங்கன்னா பிழையோட இருக்கோன்ற மாதிரி தோணும். ஆனா அகராதிய புரட்டிப் பாத்தா அதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதனாலதான் தெரியாம கேட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்கண்ணா.

Anonymous said...

cool down sir, have a chilled beer
(king fisher?). i forgot to put a smiley there
:) :) :)
smile please

Anonymous said...

அந்தப் பதிவினை எழுதியது நான் தான் ஒரு பாட்டி. ஆத்திசூடி சொல்லிக் கொடுத்தாங்க.7 வய்சில் கல்யாணம் அதனாலே மேலே படிக்கவில்லை. கோயிச்சுகாதே ராசா. வா சேர்ந்து பீர் குடிக்கலாம்,
சீயர்ஸ் :)

பிச்சைப்பாத்திரம் said...

பாட்டிங்க கூடல்லாம் சேந்து பியர் சாப்பிடறதுல்லன்னு செத்துப் போன என் பாட்டி உசுரோட இருக்கும் போது அவங்க கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். அதனால... :-))))