Saturday, July 02, 2005

அகிரா குரோசாவா - சுயசரிதம் - பகுதி 2

சென்ற பதிவின் தொடர்ச்சி:

ஒரு வரலாற்றுத் தேர்வில் அவர் ஒரு கேள்விக்கு விடை அளித்த விதம், அவர் ஆட்டு மந்தையாக இல்லாமல் எவ்வளவு சுயத்துடன் யோசிக்கிறார் என்பதை புரிய வைக்கிறது.

... ஒரு முறை வரலாற்றுத் தேர்வைச் சந்தித்தேன். பத்து கேள்விகளைக் கொணட தேர்வு அது. அதில் ஒன்றுக்குக்கூட எனக்கு விடை தெரியவில்லை. இவாமட்சு வரலாற்று ஆசிரியர் என்பதால் அவர் பார்வையாளராக வரவில்லை. அவரால் நடத்தப்பட்ட பாடத்தில், பதிலளிக்க முடியாமல் இருக்கிறோமே எனப் பதட்டமடைந்தேன். ஒரு கேள்வியையாவது பதம் பார்த்துவிட முடிவு செய்தேன். "இம்பீரியல் நீதிமன்றத்தின் மூன்று புனித பொக்கிஷங்களைப் பற்றி உன் கருத்துக்களைத் தெரிவி" என்பதுதான் கேள்வி. சுமாராக மூன்று பக்கங்களுக்கு முட்டாள்தனமாக இப்படிக் கிறுக்கி வைத்தேன்: "மூன்று பொக்கிஷங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை ஒரு போதும் கண்களால் கண்டது இல்லை. பா¡க்காத ஒன்றைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுவது உண்மையில் இயலாத ஒன்று. எடுத்துக்காட்டாக, 'யாடா-நோ-ககாமி' புனித கண்ணாடி, மிகவும் புனிதமான ஒன்று என்பதால் யாரும் இதுவரை அதனைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, உண்மையில் அது வட்டமானதாக இல்லாமல் இருக்கலாம். நான் என் கண்களால் நுட்பமாகப் பார்த்து உறுதி செய்தவற்றைப் பற்றி மட்டுமே எழுத இயலும். நிரூபணம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே எனக்கு நம்பிக்கையிருக்கிறது."

இவாமட்சு விடைத்தாள்களைத் திருத்தி, மதிப்பெண்கள் அளித்து, மாணவர்களிடம் தரும்நாள் வந்தது. அவர் தடித்த குரலில் சொன்னார்.

"ஒரு விடைத்தாள் மட்டும் எனக்கு ஆர்வமளிக்கிறது. அந்த விடைத்தாளில் பத்து கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் மிகவும் அழகான பதில். இப்படியரு மிக இயல்பான பதிலை இப்போதுதான் நான் பார்க்க நேரிட்டுள்ளது. எழுதியவன் உண்மையிலேயே நம்பிக்கையூட்டுபவனாக உள்ளான் நூறு மதிப்பெண்கள் பெறுபவன் குரோசாவா" அவர் என்னிடம் விடைத்தாளைத் தந்தார். எல்லா கண்களும் என்னையே மொய்த்தன. நான் சிவந்து போனேன். அசையக்கூட முடியாமல் நெடுநேரம் என் நாற்காலியில் முடங்கிப் போனேன். ...........

இதுமாதிரியான ஒரு பதிலை ஒரு முதிர்ச்சியற்ற ஆசிரியர் எதிர்கொண்டால் குரோசாவின் நிலை பரிதாபமானதாயிருக்கும் என்று தோன்றுகிறது. ஆட்டு மந்தைகளை உருவாக்கும் கல்விமுறை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதானிருக்கும் போலிருக்கிறது. மனப்பாடம் செய்து உருவேற்றி அதை அப்படியே தேர்வில் சிறந்த முறையில் வாந்தியெடுப்பவன்தான் சிறந்த மாணவன் என்கிற இந்த கல்வி முறை என்று தொலையுமோ தெரியவில்லை. ஏற்கெனவே சொல்லப்பட்டவைகளை மறுபேச்சில்லாமல் மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கு மாறாக சுயமாக யோசித்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதில் "உட்கார். அதிகப்பிரசங்கி".

()

ராணுவப் பயிற்சிகளின் போது தம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் குறும்புகள் செய்து பழிதீ¡த்துக் கொள்வார் குரோசாவா. இடையில் தைல ஒவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்று கண்காட்சியில் பரிசு பெற்றிருக்கிறார். கம்யூனிஸ்டு அனுதாபியாக இருந்து அவர்களுக்காக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உதவிகள் புரிந்திருக்கிறார். பெரும்பாலான புத்தகங்களைப் படிக்கும் ஆர்வமும் சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. (அந்தச் சமயத்தில் அவர் பார்த்து ரசித்த சிறந்த நூறு படங்களை பட்டியலிட்டிருக்கிறார்) ஒரு முறை அரசின் அடக்குமுறை தாங்காமல் கடுமையான சுரத்துடன் தாக்குப்பிடிக்க முடியாமல் தன் சகோதரனை சென்றடைகிறார். இதிலிருந்து அகிராவின் சினிமாப் பயணம் அவரறியாமலே ஆரம்பிக்கிறது.

அகிராவின் மூத்த சகோதரர் தொழில்நுட்பம் வளர்ந்திராத அந்தக்கால மெளனப்படங்களுக்கு பின்னணயில் கதை சொல்லியாக பணியாற்றிருக்கிறார். அவர் வசிப்பது ஏழைத் தொழிலாளர்கள் வசிக்கும் ஒரு பகுதி. ஆனால் வறுமை நிலையிலும் அவர்கள் வாழ்வை நகைச்சுவையுடன் கழித்தார்கள் என்பதற்கு இரு முதியவர்களிடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

"இன்று காலை நான் வீட்டிற்கு வெளியே சூரிய ஒளியில் படுத்திருந்தேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சுருட்டிய மெத்தையோடு பறந்து வந்ததை என் கண்களால் பார்த்தேன். அவரின் மனைவி இப்படி மூர்க்கமாகவா வீட்டைச் சுத்தம் செய்வது?"

இப்படிக் கூறியவருக்கு மற்றவரின் பதில்:

"இல்லை. இல்லை. அவள் சற்று கருணையுள்ளம் கொண்டவள்தான். அவரை மெத்தையில் சுருட்டியல்லவா வீசியிருக்கிறாள்"

உலகெங்கிலும் மனைவிமார்கள் ஒரேமாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது.

(தொடரும்)

3 comments:

Pavals said...

//சுயமாக யோசித்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதில் "உட்கார். அதிகப்பிரசங்கி".//
அவர்களை ஊக்குவித்து பதில் சொல்லும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெயர்.. "சும்மா பசங்க அவனயே சுத்தனும்னு அதிகப்பிரசங்கித்தனம் பண்றான்" :-(

Vijayakumar said...

சுரேஷ், இந்த தொடரை நான் வரவேற்கிறேன். அமரர் குரோசோவாவின் வாழ்க்கை சரிதத்தை பாதி படித்திருக்கிறேன். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட படங்களுக்கு மேல் எழுதவில்லை. அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் இயக்கிய சில படங்களை பற்றி தெரிந்துகொள்ள மிக ஆவலாக நூலகத்தில் அந்த புத்தகத்தை எடுத்தேன். ஒரு குறிப்பிட்ட கால கட்டம் (படம்) வரை சொல்லியிருந்தாலும் அவருக்கு ஜப்பானிய சாமுராயின் மீது இருந்த காதல் அவர் இயக்கிய எல்லா வரலாற்று படங்களிலும் காணலாம். நல்ல பதிவு.

Shankar said...

நல்லா இயல்பா போகுது தொடர். சுவாரசியமான விஷயங்களை எடுத்து வைக்கிறீங்க. தொடருங்க. புத்தக வாசம் மணக்குது <wink> :))