எல்லா மனிதர்களிடமும் கடவுள் குணமும் மிருக குணமும் நிர்ணயிக்கவியலா சதவீதத்தில் கலந்துள்ளது. எந்த சதவீதம் அதிகமோ அதைப் பொறுத்தே அவரைப்பற்றிய பிம்பமும், அனுமானங்களும் அவரைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்படுகின்றது.
கடவுளுக்கு அடுத்தபடியாக ஜெயேந்திரரை நினைத்திருந்த பல அப்பாவி இந்துக்கள் (மற்ற மதத்தினர் கூட) அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே அவரின் அணுகுமுறைகள் குறித்தான பல விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு அவரை பூஜித்தவர்கள் இப்போது தங்கள் எண்ணங்களை மறுபரிசீலனைக்குள்ளாக்க விரும்புகின்றனர். இன்னும் குற்றம் நிருபிக்கப்படவில்லையே என்று வாதிடுவோரும் உண்டு. சந்தேகத்தின் பிடியில் சிக்குமாறு தன் செயல்பாடுகளை அமைத்ததே ஒரு துறவிக்கு களங்கம் என்பதை ஏற்க மறுக்கின்றனர் இவர்.
இவ்வாறு பல பெரிய மனிதர்களைப் பற்றின மற்றொரு முகத்தை தரிசிக்க நேரும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
O
1950-ல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சில வருடங்கள் தன்னுடைய பயணத்தை நடத்திய சரஸ்வதி இதழை சிற்றிதழ் பிரியர்கள் அறியக்கூடும். இடதுசாரி இயக்கத்தை சா¡ந்த வ.விஜயபாஸ்கரன் இதை தொடங்கி 1962 வரை இதை மிகுந்த சிரமத்திற்கிடையில் நடத்தியிருக்கிறார். இவர் கம்யூனிஸ்டாக இருந்தாலும் இதை ஒரு நல்ல இலக்கியப்பத்திரிகையாகவே நடத்த முயன்றிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், ரகுநாதன், சுந்தரராமசாமி, ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த இதழின் முக்கியமான படைப்புகள் விஜயபாஸ்கரனாலேயே தொகுக்கப்பட்டு பிரசுரமாயிருக்கிற சரஸ்வதி களஞ்சியம் என்கிற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தனது உரையில், அந்த இதழ் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலைகளையும், இடர்ப்பாடுகளையும் விவரித்திருக்கிறார்.தான் ஒரு இடதுசாரியாக இருந்ததினால், கம்யூனிஸ்ட் பிரஸ்ஸான ஜனசக்தி அச்சகத்திலேயே இதையும் பிரசுரிக்க ஆரம்பித்திருக்கிறார், இதனால் கட்சிக்கு வருமானம் வரட்டுமே என்ற நல்லெண்ணத்தினால்.
குறுகிய காலத்திலேயே விற்பனையில் வெற்றிகரமாக விளங்கிய சரஸ்வதியின் வளர்ச்சியை 'தோழர் ஜீவா'வால் பொறுக்க இயலவில்லை. மேலும் அவர்களின் பத்திரிகையான 'ஜனசக்தி' விற்பனையில் பின்தங்கிக்கிடந்தது. இனி ஆசிரியரின் வார்த்தைகளிலேயே கவனிப்போம்.
..... முற்போக்கு இலக்கிய வாதிகளோ, இடதுசாரி இயக்கங்களோ தொடங்கிய எந்த இலக்கியப் பத்திரிகையும் ஆயிரம், இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையை எட்டவில்லை என்பது வரலாற்று உண்மை. சரஸ்வதியின் வளர்ச்சியைக் கவனித்து வந்த பெருமதிப்புக்குரிய மூத்த தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சரஸ்வதியைக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்துவிட்டார்.
சரஸ்வதியில் வெளியிடப்படும் கதை, கட்டுரைகளையெல்லாம் கட்சி தலைமையிடம் காட்டி முன்னனுமதி பெற்றுத்தான் - அதாவது அவரிடம் அனுமதி பெற்று - வெளியட வேண்டும் என்று முதலில் ஆலோசனையாகக் கூறினார். அதற்கு நான் உடன்படாததால் கட்சிக் கட்டளை என்ற ரீதியிலும் கூறினார். கட்சி அங்கத்தினர் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்றார். 'சரஸ்வதி' அரசியல் பத்திரிகையல்ல, இலக்கியப் பத்திரிகை. இலக்கிய வழிகாட்டுதல்கள் என்று கட்சி ஏதும் வகுக்கவில்லை. தவிரவும் நான் முழு நேர கட்சி ஊழியரும் அல்ல. ஆகவே கட்சிக் கட்டுப்பாட்டுக்கு இங்கே இடமில்லை என்று வாதிட்டேன். சரஸ்வதியில் வெளியிடப்படும் எந்த ஒரு கட்டுரைக்கோ, கதைக்கோ மாற்றுக்கருத்து அவருக்கு இருக்குமானால் அதையும் நான் வெளியிடத் தயாராக இருப்பதாகக்கூறி அவரது ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அது அவருக்கு ஒரு கவுரவப் பிரச்சினையாகிவிட்டது என்பது போகப் போகத் தெரிந்தது. ........
கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களின் ஆதரவு இந்தப்பத்திரிகைக்கு இருக்கக்கூடாது என்பதற்காக 'கட்சி உறுப்பினர்கள் இந்தப்பத்திரிகையை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை' என்று வார்த்தைகளைப் பரவவிட்டதாக விஜயபாஸ்கரனுக்கு தகவல்கள் கிட்டியிருக்கிறது. இதன் விற்பனையை தடுக்க, இதற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் 'தாமரை' என்றும் இந்த தொகுப்பில் தெரிவிக்கப்படுகிறது.
O
தோழர் ஜீவாவின் நேர்மையை அனைவரும் அறிவர். ஏதோ ஒரு ஊருக்கு கட்சி நிதி வசூலிக்க சென்றவர், தன்னிடம் காசில்லாமை காரணமாக பசியால் அவதிப்பட்டும் கூட நிதியிலிருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் பசியை பொறுத்துக் கொண்டு, கட்சி நிதியை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார் என்று அறிகிற போது மனது நெகிழத்தான் செய்கிறது. இன்னும் பல நிகழ்ச்சிகள் அவரின் பெருமையை நமக்கு தெரிவிக்கிறது.
ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரையைப் படித்தபிறகு ஜீவாவின் பிம்பத்தில் சற்றே சலனமெழுவதை தவிர்க்க முடியவில்லை.
O
முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனைப் பற்றி பலர் அறிவார்கள். நேர்மையின் மறுஉருவம் என்று அவரைப்பற்றி வர்ணிக்கப்படுவதுண்டு. அமைச்சராக விளங்கிய போது கூட சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணமேற்கொள்ளுவார் என்று கூறப்படுவதுண்டு. தன் இறுதிக்காலத்தில் மருத்துவ உதவி கிடைக்கப்படாமல் அரசு மருத்துவமனையின் வராண்டாவில் தன் இறுதி மூச்சை விட்டவர் என்னும் போது இப்போதையை அரசியல்வாதிகளோடு இதை ஒப்பிடும் போது பெருமூச்சே விடநேர்கின்றது.
இவரைப் பற்றி முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய சர்ச்சைக்குண்டான சம்பவம் என்னை திகைக்க வைத்தது.
கக்கன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சேஷன் வருவாய்துறையில் உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார். இருவரும் கிராமப்பணி ஆய்வுக்காக குக்கிராமம் ஒன்றை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, கக்கன் சேஷனிடம் அவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஒரு வேலையை முடித்துதரும் படி பணித்ததாகவும், 'விதிகளின் படி அது சாத்தியமில்லை' என்று சேஷன் மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த கக்கன் அவரை அந்த செம்மண் புழுதி எழும்பும் ரோட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் அந்தப்பேட்டியில் சேஷன் கூறுகிறார்.
இம்மாதிரியான செய்திகளில் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுடைய குரல்களையும் நிராகரிக்கப்பதற்கில்லை. காந்தியைப் பற்றியும் இம்மாதிரியான பல சர்ச்சைகள் உண்டு. நம் நாட்டின் முதல் பிரதம மந்திரிக்கும் ஆங்கிலேயே அரசின் கடைசி ஜனாதிபதியின் மனைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிலர் கூறும் போது நம்பமுடியாமல் போகிறது.
எல்லா மனிதர்களும் குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள்தான். எவரையும் தெய்வமென்று தலையில் தூக்கிக் கொண்டாடுவதோ தெருமலமாக கருதி கீழே போட்டு மிதிப்பதோ அறியாமையின் வெளிப்பாடுகள். அவரவர்களை அந்த நிறை, குறைகளோடு ஏற்றுக் கொள்வதே நலமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.
suresh kannan
6 comments:
சேஷன் , இந்த விஷயத்தை முன்பே தன் 'சுயவரலாறில்' (ரிட்டையரான புதிசில் ஆனந்த விகடனில் வந்தது). எழுதி இருக்கிறார்.சேஷன் சொல்வதை முழுதும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.அந்த சமயத்தில்,சேஷன் அமைச்சர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டிய ஒரு அரசுஅதிகாரி. அந்தச் சம்பவத்துக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது, முன்பே ஏதேனும் பிரிஜுடிஸ் இருந்ததா என்று தெரிந்தால் அன்றி எந்த முடிவுக்கும் வர முடியாது. சேஷன் திறமையான அதிகாரி என்று தெரியும்.. ஆனால் நேர்மையானவரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மயிலாபூர் இடைத்தேர்தலை நான் இன்னும் மறக்கவில்லை
By: icarus
நாங்கள் மேலூரில் இருந்தபோது, காலரா ஊசி போடும் முகாமுக்காக என் அம்மா, அருகிலுள்ள
சில கிராமங்களுக்குப் போகவேண்டியிருந்தது. அப்போது அம்மா அங்கே ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்
மருத்துவர்.
ஒவ்வொருநாளும் முகாம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அன்று நடந்த சில நிகழ்ச்சிகளை எங்களிடம் சொல்வார்.
அப்படி ஒரு நாள் சொன்னது இது.
ஊசி போடுமுன் பெயர் பதிவு செய்யும்போது ஒருவர் தன் பெயரை 'பெரிய கக்கன்' என்று சொன்னாராம்
அப்போது திரு கக்கன் அவர்கள்தான் சுகாதார அமைச்சர். பெயர் தெரிந்த பெயராக இருந்ததால், அம்மா கேட்டார்களாம்,
உங்க பேருலே உள்ள அமைச்சரைத் தெரியுமா என்று.
அதற்கு வந்த பதில், 'அவரு என் மகன்' என்று!
எவ்வளவு எளிமையான ஜனங்கள் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள் அம்மா!
//'பெரிய கக்கன்' //
தப்பா எழுதிட்டேன். அவர் பேரு 'வெள்ளை கக்கன்'
//கக்கன் அவரை அந்த செம்மண் புழுதி எழும்பும் ரோட்டில் இறக்கிவிட்டு சென்றதாக//
சேஷனை சன் தொலைக்காட்சிப் பேட்டிக்காக சந்திக்கச் சென்ற ரபி பெர்னாட் மற்றும் குழுவினரை அவர் நடத்திய விதத்தை விட இது ஒன்றும் மோசமில்லை.
By: கோபி
ஜவகர்லால் நேருவுக்கும் சமீபத்தில் மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் கூட தொடர்பு இருந்ததாக கூறப்படுவது எந்தளவு நிஜமென்று தெரியவில்லை.
பாலாஜி
By: balaji
கடைசி வரிகளில் உள்ளதுதான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு தலைவர்கள் / நடிகர்கள் தெய்வங்களாக பார்க்கப்படுகிறார்களே..!
Post a Comment