Monday, December 06, 2004

வலைப்பதிவர்கள் சந்திப்பு

அண்மையில் நேசமுடன் வெங்கடேஷ் வலைப்பதிவில் நடிகர் கமல்ஹாசனைப் பற்றின கட்டுரை ஒன்றிற்கு வந்திருந்த பின்னூட்டங்கள் என்னை முகஞ்சுளிக்க வைத்தன. நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு குழாயடிச் சண்டையையே போட்டிருந்தார்கள். இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய திரைப்பட படைப்பாளிகள் சொற்பமானவர்களே. அதில் மணிரத்னமும் கமலஹாசனும் முக்கியமானவர்கள். அவரின் நடிப்புத்திறனையும், நாயகன் முதல் அவர் எடுத்திருக்கிற பல பரிமாணங்களையும் பற்றி விவாதித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். அதைவிட்டு அவர் சட்டைக்குள் பூணூல் தெரிகிறதாவென்று ஆராய்ந்திருப்பது தேவையற்றது.

இன்றைக்கு இணையத்தின் மூலம் நான் பல நண்பர்களை பெற்றிருக்கிறேன். மடற்குழுக்களில் அவர்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவதும் ஆரோக்கியமான விவாதங்களை எடுத்துச் செல்வதும் இணையம் மூலமாகத்தான் சாத்தியமாகியிருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னர் என் நிலைமையே வேறு.
கிட்டத்தட்ட பதினைந்து காலமாக, நான் படித்ததையும், என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவும், என் அலைவரிசையிலேயே இயங்குகிற நண்பர்களை தேடிப் போய் தோற்றிருக்கிறேன். பியர் சாப்பிடுவதும், ஷகீலா படங்களுக்கு போவதும், படிக்கிறதென்று பார்த்தால் மிஞ்சிப்போனால் குழுதம் பத்திரிகை படிக்கிற நண்பர்களையே நான் பெற்றிருந்தேன். ஜெயகாந்தனைப் பற்றி பேசலாம் என்றால், "ஜெயலலிதாவைப் பற்றி வேண்டுமானால் பேசலாம். இல்லன்னா நீ இடத்தக் காலி பண்ணு" என்கிறவர்களே துரதிர்ஷ்டவசமாக என் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை மட்டும் சொல்லி மட்டும் குற்றமில்லை. அதற்கு முன்னால் நானும் அவர்களில் ஒருவனாகவே இருந்திருக்கிறேன். எனவே அவர்களின் நிறை, குறைகளை தாண்டியே அவர்களை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது.

O

இணையம் மூலம் பல நண்பர்களைப் பெற்றபின் என் வாசிப்பு அனுபவம் கூடியிருக்கிறது. நண்பர்களின் விவாதங்களின் மூலம் பல படைப்புகளும், படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமாயிருக்கின்றார்கள். "பரிட்சைக்கு கூட இப்படி படிச்சிருக்க மாட்டீங்க போலிருக்கே?" என்று என் மனைவி என்னை கிண்டல் செய்யுமளவிற்கு தீவிரமாக படிக்கவாரம்பித்திருக்கின்றேன். என்னுள் இருந்த குறுகிய உலகம் விரிந்து பல ஜன்னல்கள் திறந்து கொண்டன. இன்று ஒரு சக மனிதனை எந்தவித அடையாளங்களுமின்றி ஒரு பரந்துபட்ட பார்வையில் பார்க்க கற்றுத்தந்தவை புத்தகங்களே.

எனவே இவ்வாறான ஒரு புனிதமான அனுபவத்தை வழங்குகிற இணையத்தில் நாம் ஏன் வீண் சர்ச்சைகளில் இறங்கி நம்மை பாழ்படுத்திக் கொள்ள வேண்டும்?

இதைத்தவிர்க்க எனக்கொரு யோசனை தோன்றுகிறது. ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பு இல்லாததும், புரிதல் இல்லாததும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று யூகிக்கிறேன். இணையத்திற்கு வந்த புதிதில் சிலரின் எழுத்துக்களை படித்து நான் அவர்களைப் பற்றி என்னுள் உருவாக்கி வைத்திருந்த எதிர்மறையான பிமபங்கள், நான் அவர்களை நான் நேரில் சந்தித்தபிறகு இடம் வலமாக மாறிப் போயிற்று. இவர்களையா நாம் தவறாகப் புரிந்து கொண்டிருந்தோம் என்கிற குற்ற உணர்ச்சி ஏற்படலாயிற்று.

எனவே இவ்வாறான தனிமனித குரோத ஆபத்தை தவிர்க்க, எல்லா வலைப்பதிவர்களும், மடற்குழுவர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதமொருமுறையோ, இரண்டு மாதங்களுக்கொரு முறையோ) நேரில் சந்தித்து விவாதித்தால் நட்புணர்ச்சி பலப்படும் என நான் உறுதியாகவே நம்புகிறேன். அந்தந்த நகரங்களில் இருப்பவர்கள் அனைவரும் சந்தித்து இந்த ஏற்பாட்டை செய்து கொள்ளலாம். வருடமொருமுறை எல்லா வலைப்பதிவர்களும் ஒரு பொதுவான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு சந்திப்பு விழா எடுக்கலாம். இதற்காகின்ற செலவை அனைவருமே பகிர்ந்து கொள்ளலாம்.

மரத்தடி குழுமத்தில், பெங்களுரில் இருக்கின்ற உறுப்பினர்கள் இவ்வாறு சந்திக்கின்றார்கள் என்று அவர்களின் மடல்களின் மூலம் நான் யூகிக்கின்றேன். ஒருவரின் தனிப்பட்ட குணநலன்களை புரிந்து கொள்ள இயலுவதால், விவாதங்களின் போது கூட எதிரான கருத்துக்களை தனிமனித கோபமில்லாமல் மென்மையாக சொல்ல முடிகிறது. (இந்த மாதிரி ஏற்கெனவே பலர் செய்துக் கொண்டிருக்கும் அல்லது முயன்றிருக்கும் பட்சத்தில் இன்னும் இதை விரிவுபடுத்தலாம் என்பதே என் யோசனை)

இப்போதுதான் வலைப்பதிவு உலகிற்குள் நுழைந்திருக்கிறேன். ஆனால் நீண்ட நாட்களாக இந்த மாதிரியான பின்னூட்ட போர்களை கவலையோடு கவனிப்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தினால் இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இது சரியா அல்லது நடைமுறையில் சாத்தியமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் முயன்றால் எதுவும் சாத்தியமே.

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

suresh kannan

7 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

in one sense these are inevitable for the technology facilitates not only reading but also instant comments.yes sometimes the comments are irrelevant,vulgar and distort the view of the blogger.
but these happen in many other fora ranging from posts
in discussion lists to little magazines.just ignore them.face to face meetings can clarify some matters but that need not result in end of behavior for some of those who post may not reveal that it was they who posted it even in face to face conversations.the annoynimity works both ways.

ஜெ. ராம்கி said...

Atlast.... u've come! Welcome Suresh!

பிச்சைப்பாத்திரம் said...

I agree you with ravi.


ஜெ.
ஒருவர் நண்பர் என்பதால் விவாதம் எந்தவகையிலும் காரசாரக்குறைவாக இருக்காது. அவரிடம் இன்னும் அதிக அளவு உரிமை எடுத்துக்கொண்டு மிக உண்மையாக விவாதிக்க முடியும் என்றே நம்புகிறேன்.

நன்றி ராம்கி.

Anonymous said...

ரஜனி ராம்கி நீங்கள் சொல்வதோடு நான் உடன்படுகிறேன்.
நண்பர்களைத்தான் 'நாறடிக்க' முடியும் :-) மகிழ்ச்சியாக..

ஆசிப் மீரான்

Unknown said...

சுரேஷ், நீங்க ஒரு சின்ன தப்புக்கணக்கு போட்டுட்டிங்க. நீங்க நினைக்கிற மாதிரி சந்திப்பு, நட்பு எல்லாம் இருந்தாலும் இப்படி சமயம் கிடைக்கிறப்போ சந்துல சிந்து பாட முகமூடி போட்டுக்கிட்டு வந்து அடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு முன்பின் பழக்கமெல்லாம் ஜுஜூபி.

சரி, ஜனவரி 31ம் தேதி ஒரு குட்டி வலைஞர் சந்திப்பு சென்னையிலே இருக்கு, மறந்துடாதிங்க.

Muthu said...

சுரேஸ்,

பிச்சை பாத்திரமாக இருந்தாலும் நீங்கள் இயங்கும் தளம் சற்று இலக்கிய வாசனை உடையது.

அரசியல் அதில் இலலை என்பதால் உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்காது என்று தோன்றுகிறது.

ஆனால் நீங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கும் கருத்துக்கள் முற்றிலும் வாஸ்தவமானவை.

வலைப்பதிவாளர்கள் கூட்டம் நிறைய நடக்கவேண்டும்.

- யெஸ்.பாலபாரதி said...

?!?!?!?!?!?

இது எனன திடீரென தமிழ்மணத்தின் முன்பக்கம் முழிக்குது????