Sunday, June 28, 2020

Ali and Nino (2016) - ‘வரலாற்றுக் காதல்'




வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு அபாரமான காதல் கதை இது. தேசம், மொழி, கலாசாரம், அந்தஸ்து என்று பல தடைகளைத் தாண்டி ஒன்று சேர்ந்த ஒரு காதலுக்கு முன்னால் அரசியல் வில்லனாக நிற்கிறது. ஒரு தேசம் உருவாவதற்கு பின்னால் எத்தனையோ தனிநபர்களின் கனவுகளும் காதல்களும் இழக்கப்பட்டிருக்கின்றன என்பதை நெகிழ்வாக சொல்லியிருக்கிற திரைப்படம் இது. காதலும் வீரமும் பொங்கி வழிகிற இந்த பிரிட்டிஷ் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

**

வருடம் 1914. காக்கசஸ் பிரதேசத்தில் உள்ள  அசர்பைசான் நாட்டின் தலைநகரம் பக்கூ. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடம். எண்ணைய் வளம் மிகுந்த பகுதி. எண்ணைய் என்றாலே உடனே மூக்கில் வியர்க்கும் வல்லரசு நாடுகள் இதை விட்டு வைத்திருக்குமா என்ன? எனவே பல ஆண்டுகளாக ரஷ்யாவின் வசத்தில் இருக்கிறது.

அலி என்கிற இஸ்லாமியன். நினோ என்கிற கிறிஸ்துவள். இருவருக்கும் காதலிக்கும் வயதுதான். எனவே திகட்டத் திகட்ட காதலிக்கிறார்கள். மதமோ அந்தஸ்தோ அவர்களுக்குள் தடையாக இல்லை. ஆனால் பெற்றோர்களுக்கு இருக்குமே? இருக்கிறது. பெண் கேட்கச் சென்ற அலியிடம் மென்று முழுங்கி 'என்ன அவசரம், போர் வரப்போவதாக சொல்கிறார்கள். அப்புறம் பார்க்கலாமே' என்கிறார் பெண்ணின் தந்தை. தன்னுடைய ஆர்மீனிய நண்பனிடம் பொங்கி வெடிக்கிறான் அலி. "பார்த்தாயா, பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பம்தான் இங்கு ஆண்டு வந்தது. அதிகாரம் போனவுடன் கிள்ளுக் கீரையாகி விட்டோம். எண்ணைய் வியாபாரத்திற்காக வந்திருக்கிறவன், என்னிடமே சாக்கு சொல்கிறான்"

"கவலையை விடு மச்சி. அந்த அப்பன்காரன் கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன்" என்று ஆறுதல் சொல்கிறான் அவன். நண்பன் என்றால் சமயங்களில் துரோகமும் செய்வார்கள் அல்லவா? அவன் செய்கிறான். நினோவின் அழகில் மயங்குகிற அவன் திடீரென்று தீர்மானித்து அவளைக் கடத்திச் செல்கிறான். விஷயத்தைக் கேள்விப்பட்ட அலி கொதித்துப் போய் துரத்துகிறான். இருவருக்கும் கடுமையான சண்டை. தன்னைக் தற்காத்துக் கொள்வதற்காக துரோகியைக் கொல்கிறான் அலி.

காட்சிகள் மாறுவதால் விஷயங்களும் தலைகீழாகின்றன. கலாட்டாவில் சம்பந்தப்பட்ட பெண் என்பதால் நினோ -வை எவரும் திருமணம் செய்ய மாட்டார்கள். எனவே பெண்ணின் தந்தை வந்து கெஞ்சுகிறார். முதலில் ஒப்புக் கொண்ட அலியின் தந்தை இப்போது மறுக்கிறார். அதற்கு காரணம் இருக்கிறது. செத்துப் போனவனும் செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அலியின் உயிருக்கு விலை வைக்கிறார்கள்.. எனவே அவன் எங்காவது மறைந்திருக்கத்தான் வேண்டும்.

அலியைக் காணாமல் நினோ துடித்துப் போகிறாள். வீட்டிலிருந்து ரகசியமாக புறப்பட்டு அலி மறைந்திருக்கும் இடத்திற்கே செல்கிறாள். திருமணம் நிகழ்கிறது. சந்தோஷமான வாழ்க்கை. காதலர்கள் சந்தோஷமாக இருந்தால் இந்த விதி என்கிற ஆசாமிக்குத்தான் பிடிக்காதே? போர் சூழல் வருகிறது. தன் தேசத்தின் கனவிற்காக அலி போராட வேண்டும். ஊர் திரும்புகிறான். நண்பர்கள் கட்டியணைத்துக் கொள்கிறார்கள். 'சரியான நேரத்துக்கு வந்தேடா".

எதிரிகளுடன் கடுமையான போர். ஆனால் அவர்களின் கை ஓங்குகிறது. சமாளிக்க முடியவில்லை. கருவுற்றிருக்கும் நினோவை தனது தந்தையுடன் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கிறான் அலி. மேற்கத்திய பாணியில் வாழ்ந்த நினோவிற்கு அங்குள்ள கலாசார சூழல் பிடிப்பதில்லை. 'எப்போடா கிளம்புவோம்' எரிச்சலுடன் காத்திருக்கிறாள்.

ஒருவழியாக அலியின் தேசம் சுதந்திரம் பெறுகிறது. தன்னுடைய பெண் குழந்தையைப் பார்க்க துள்ளலுடன் திரும்பி வருகிறான் அலி. அவர்களின் வாழ்வில் மறுபடியும் வசந்தம் திரும்புகிறது. சுதந்திர தேசத்தில் திருப்தியான வாழ்க்கை. ஆனால் நமது நண்பர் விதிக்குத்தான் இது பிடிக்காதே. மறுபடியும் போர் பதட்டம். ரஷ்யர்கள் மறுபடியும் வருகிறார்கள். எண்ணைய் வளத்தை ருசி பார்த்திருந்தவர்கள் சும்மா விடுவார்களா?

நினோவை பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு எதிரிகளை சந்திக்க ஆயுத்தமாகிறான் அலி. 'மீண்டும் சந்திப்போம்' என்று பிரியாவிடையுடன் பிரிந்தாலும் அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு என்பது இருவருக்குமே உள்ளூற தெரிந்திருக்கிறது. ஆம். தன் தேசத்திற்கான விடுதலைப் போரில் பரிதாபமாக உயிரை இழக்கிறான் அலி.


***

படத்தின் தலைப்பின் பெயரால் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த நாவலையொட்டி இந்த திரைப்படத்தை அபாரமாக உருவாக்கியிருக்கிறார் Asif Kapadia. படத்தில் பெரிதும் கவர்வது ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் ஓவியம் போலிருக்கின்றன. அப்போதைய காலக்கட்டம் சிறப்பாக உருவாக்கப்பட்டு திறமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அலியாக Adam Bakri -ம் நினோவாக María Valverde-ம் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை அபாரமானதாக இருக்கிறது.


காதலைப் பிரிக்க எத்தனையோ வில்லன்கள். அதில் ஒன்று அதிகார அரசியல்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, June 27, 2020

Manchester by the Sea (2016) - ‘தலைமுறை இடைவெளி'








அமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு.  தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து உருவாகும் பிரியாணி உணவகமாக ஹாலிவுட் இருக்கும் போது, எளிமையாக கிளறப்பட்ட ரவா கிச்சடியாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் கனமானதாகவும் நுட்பமானதாகவும் ஐரோப்பிய திரைப்படங்கள் இருக்கும். இரண்டு பக்கமும் விதிவிலக்குகள் உண்டுதான் எனினும் இதுதான் தோராயமான வரைமுறை.

ஆனால் சமீபத்தில் பார்த்த அமெரிக்கத் திரைப்படமான 'Manchester by the Sea', ஓர் அற்புதமான ஐரோப்பியத் திரைப்படம் போல இருந்ததைக் கண்டு வியந்தேன். இயக்குநர் Kenneth Lonergan, நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த திரைப்படம் சிக்கலான, அதே சமயத்தில் அதிகம் குழப்பாத திரைக்கதையைக் கொண்டது. Lee Chandler என்பவனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் முன்னும் பின்னுமாக காட்டப்படுகின்றன. உடைந்த கண்ணாடியின் வழியாக சிதறித் தெரியும் பிம்பங்கள் போல அவனைப் பற்றிய கலவையான சித்திரங்கள் நமக்குத் தெரிகின்றன.  அவனுக்கும் அவனுடைய அண்ணன் மகனுக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் மூலம் தலைமுறை இடைவெளியைப் பற்றிய சினிமாவாகவும் இது இருக்கிறது.


***

குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் எடுபிடி ஆளாக இருக்கிறான் லீ. அதிகம் பேசாதவன். சட்டென்று கோபம் வந்து விடும். மதுக்கடையில் தம்மைப் பார்த்து ஏதோ பேசுகிறார்கள் என்று நினைத்து இரண்டு கனவான்களின் மூக்கில் குத்தி ரத்தம் பார்க்கிறான். குடியிருப்பு வாசிகளிடம் கூட ஒரளவிற்குத்தான் பொறுமையை அவனால் கடைப்பிடிக்க முடியும்.


லீ -க்கு அழகான குடும்பம் ஒன்று முன்பு இருந்தது. அன்பான மனைவி, அழகான மூன்று குழந்தைகள். இவனுடைய குடிப்பழக்கத்தால் வீட்டில் ஏற்படும் தீ விபத்தில் குழந்தைகள் இறந்து போகின்றனர். வெறுப்புறும் மனைவி பிரிந்து போய் வேறு திருமணம் செய்து கொள்கிறாள். காவல் நிலையத்தில் நிகழும் விசாரணையின் போது அதிகாரியின் துப்பாக்கியைப் பிடுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான் லீ. ஆனால் அது தடுக்கப்பட்டு விடுகிறது. குழந்தைகளின் ஞாபகம் வந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. லீ சிடுமூஞ்சியாக மாறினதற்கு இந்த துயரமும் குற்றவுணர்வும் கூட காரணமாக இருக்கலாம்.

தன்னுடைய அண்ணன் மருத்துவமனையில் இருப்பதாக ஒருநாள் லீ-க்கு ஒரு தகவல் வருகிறது. தம்முடைய பணிகளை ஒப்படைத்து விட்டு கிளம்புகிறான். அங்கு சென்றால் அண்ணனின் பிணத்தைத் தான் பார்க்க முடிகிறது.

அண்ணனின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் லீ-க்கு வழக்கறிஞரின் மூலம் ஓர் அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. தனியாக இருக்கும் அண்ணன் மகனான பாட்ரிக்கை, அவன் மேஜர் ஆகும் வரை லீ-தான் காப்பாளராக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணன் உயில் எழுதி வைத்திருக்கிறார். சில நாட்களில் கிளம்பி விடலாம் என்று நினைத்திருந்த லீ சங்கடமடைகிறான். அண்ணன் உயிருடன் இருந்த போது தன்னிடம் காட்டிய அன்பு காரணமாக இதைச் சகித்துக் கொள்ள முடிவு செய்கிறான்.

இளைஞனான பாட்ரிக் மற்றும் அவனது சித்தப்பாவான லீ -க்கும் இடையேயான சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

***

பாட்ரிக் சரியான அராத்தாக இருக்கிறான். தன் கூட படிக்கும் இரு பெண்களிடம்  ஒருவருக்கொருவர் தெரியாமல் பார்த்துக் கொண்டு இருவரிடமும் ஜாலியாக இருக்க நினைக்கிறான். "நீ அவங்க அம்மா கிட்ட பேசிட்டு இர்றேன். அதுக்குள்ள என் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்" என்று லீ-யிடமே கெஞ்சுகிறான். ஏற்கெனவே தாமரை இலை தண்ணீர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் லீ -க்கு பாட்ரிக்கின் நடவடிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. அவனிடம்  நண்பனாக நடந்து கொள்வதா அல்லது அண்ணன் மகன் என்கிற முறையில் கறாராக தன் நிலையைப் பின்பற்றுவதா என்று குழப்பமாக இருக்கிறது.

லீ எடுக்கும் முடிவுகள் பலவற்றையும் பாட்ரிக் ஆட்சேபிக்கிறான். 'இதெல்லாம் எங்க சொத்து. என் இஷ்டப்படிதான் நடக்கணும்' என்று அடம் பிடிக்கிறான். இல்லையென்றால் 'என்னைக் கழட்டி விட்டுட்டு ஓடிடலாம்னு பாக்கறியா' என்று சண்டையிடுகிறான்.

love & hate வகையிலான உறவு இருவரிடமும் நீடிக்கிறது. ஒருவரை விட்டு ஒருவர் விலக நினைக்கிறார்கள். ஆனால் இன்னமும் அறுந்து போகாத பாசமும் அன்பும் அந்த உறவை பிரிக்க அனுமதிப்பதில்லை. இரண்டிற்கும் இடையேயான தத்தளிப்பு. பாட்ரிக் அராத்தாக இருந்தாலும் தன் தந்தையின் மரணத்தை எண்ணி பயத்தில் அழும் ஓர் இரவில் அவனுக்குள்ள குழந்தைத்தனத்தை லீ-யால் உணர முடிகிறது.


இந்த சிக்கலான உறவை இன்னமும் தொடர முடியாத லீ, மாற்று ஏற்பாடு ஒன்றை செய்து விட்டு தன் ஊருக்கு கிளம்புகிறான். பாட்ரிக்கும் இதை எண்ணி கலங்குகிறான். 'என்னுடைய ஒற்றை அறை வீட்டை காலி செய்து விட்டு எக்ஸ்ட்ரா ரூம் இருக்கிற வீடாகப் பார்த்து வைக்கிறேன். நீ ஊருக்கு வரும் போது தங்குவதற்காக.. ' என்று லீ இறுதிக் காட்சியில் சொல்வதன் மூலம் அந்த உறவு பட்டுப் போகாமல் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.


***

லீ -யாக நடித்திருக்கும் Casey Affleck-ன் நடிப்பு அற்புதம். பெரும்பாலான காட்சிகளில் சலனமே அற்ற உடல்மொழியுடனும்  ஆத்திரம் ஏற்படும் போது அதற்கு மாறாக பொங்கி வெடிப்பவனாகவும் பாட்ரிக்கை வெறுக்கவும் முடியாமல் அன்பு செலுத்தவும் முடியாதமல் தத்தளிப்பவனாகவும் உள்ள  லீ பாத்திரத்தை சிற்ப்பாக கையாண்டிருந்தார். 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கர் விருதை இவர் பெற்றது முற்றிலும் நியாயமான தேர்வே.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, June 25, 2020

A Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'




ஓவே -வை சந்தியுங்கள். வயது 59.  ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று  பாய்ந்து விடுவார். பயங்கர சிடுமூஞ்சி ஆசாமி.  குடியிருப்பு வளாகத்தில் தான் ஏற்படுத்திய விதிகளை யாராவது மீறுகிறார்களா என்பதை கறாராக கண்காணித்துக் கொண்டேயிருப்பார். எவராவது தேவையில்லாமல் சத்தம் எழுப்பினாலோ, கண்ட படி வாகனங்களை உள்ளே எடுத்து வந்தாலோ அவர்கள் மீது விழுந்து பிறாண்டி விடுவார். 'இந்தப் பெரிசு கூட ஒரே ரோதனைப்பா" என்று மற்றவர்கள்  பதிலுக்கு முணுமுணுப்பது வழக்கம்.


பெரியவருக்கு ஆத்திரம் தலைக்கேறும் போதெல்லாம் இறந்து போன மனைவியின் புன்னகையை புகைப்படத்தில் பார்த்து அமைதியடைவார் . வயதாகி விட்டதால் ஒருநாள் பணியிலிருந்து மரியாதையுடன் துரத்தி விட்டு விட்டார்கள். அது சார்ந்த கடுப்பிலும் துயரத்திலும் இருக்கிறார் ஓவே. இதோ.. இப்போதுதான் சுடச்சுட ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அது நிறைவேறாமல் தோல்வியடைந்து தரையில் விழுந்து கிடக்கிறார். "என்னய்யா, கயிறு விக்கறீங்க.. தரமேயில்லாம" என்று கடைக்காரரிடம்  அதற்காக பிற்பாடு சண்டையும் போட்டு விட்டார்.

தற்கொலை செய்யுமளவிற்கு பெரியவருக்கு என்னதான் பிரச்சினை?

***

ஓவே-வின் தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார். தந்தை அதிகம் பேசமாட்டார். அப்படியே பேசினாலும் கார் என்ஜின்களைப் பற்றிதான் மணிக்கணக்கில் பேசுவார். கூடவே நேர்மையையும் கற்றுத் தந்தார். ஓவே படித்து முடித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற அதே நாளில் தந்தை விபத்தில் சிக்கி மரணமடைகிறார். எனவே தந்தையின் வேலை கிடைக்கிறது.

நகரை நவீனமயமாக்குகிறோம் என்று அதிகாரவர்க்கம் ஓவே-வின் வீட்டைப் பறித்துக் கொள்கிறது. சுற்றியலையும் ஓவே ரயிலில் படுத்து தூங்கி விடுகிறார். கண்விழிக்கும் போது தன் வருங்கால தேவதையை சந்திக்கிறார். அவள் பெயர் சோன்ஜா. என்ன காரணத்தினாலோ அவளுக்கு ஓவே -வை பிடித்துப் போகிறது. தாழ்வு மனப்பான்மையால் சுருங்கும் ஓவே -விடம் தம் காதலை தெரிவிக்கிறாள்.  ஓவே -வின் வறண்ட வாழ்க்கையில் வந்த புதிய வசந்தம்.

முறையான தொழிற்கல்விக்கு ஓவே -வை ஊக்கப்படுத்துகிறாள் சோன்ஜா. அது முடிந்ததும் இருவரும் திருமணம் செய்கிறார்கள். மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. மனைவி மீது  தன்னுடைய அத்தனை அன்பையும் கொட்டுகிறார் ஓவே. சோன்ஜா கர்ப்பமுற்றிருக்கும் நிலையில் விதி மறுபடியும் குறுக்கிடுகிறது. அவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளாக சோன்ஜாவின் கால்கள் பறிபோகின்றன. இதனால் அவளது ஆசிரியர் கனவிற்கு சோதனையேற்படுகிறது. சக்கர நாற்காலி பள்ளிக் கட்டிடத்திற்குள் செல்ல முடியாது. எனவே பணியில் சேரமுடியாத சிக்கல். மழை பெய்யும் இரவு முழுவதும் உழைத்து சாய்வுப் பாதையை ஏற்படுத்துகிறார் ஓவே.

சிறந்த ஆசிரியையாக விளங்கும் சோன்ஜா சில நாட்களிலேயே கேன்சர் வந்து இறந்து விடுகிறாள். மனைவியை இழந்த துக்கம் தாங்காத ஓவே -விற்கு பணியிழப்பும் சேர்ந்து கொள்ள .... இறந்த போன மனைவியிடன் சென்று சேர்வதற்காக தற்கொலை முடிவு. அவர் மற்றவர்களிடம் எரிந்து விழுவதற்கும் இதுதான் காரணம்.


***

வெளியில் சிடுமூஞ்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓவேவின் இன்னொரு பக்கத்தை பக்கத்து வீட்டில் புதிதாக குடியேறும் பெண்மணி கண்டுபிடிக்கிறாள். ஓவே தன்னிடம் எரிந்து விழுவதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் அவ்வப்போது உதவி கேட்கிறாள். அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஓவே -வின் தற்கொலை முயற்சி பாழாகிறது. பிறகு மெல்ல இருவருக்கும்  இடையில் புரிதலுணர்வும் அன்பும் உருவாகிறது. அவளுக்குத் தந்தையாகவும் அவளது குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் ஆகிறார் ஓவே.

பலமுறை முயன்றும் தற்கொலையால் சாகாத ஓவே, ஒரு நாளின் அதிகாலையில் இயற்கையாக செத்துப் போகிறார். இதுநாள் வரை மனைவியின் கல்லறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தவர், இனிமேல் நேரடியாகப் பேசக்கூடும்.

***


சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இருந்த ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் இது. ஓவே -வாக Rolf Lassgård அற்புதமாக நடித்திருந்தார். எல்லோரிடமும் எரிந்து விழுபவராகவும், மனைவியின் கல்லறைக்குச் சென்று தினமும் புலம்புவராகவும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் மோதலில் துவங்கி அன்பின் நெகிழ்ச்சியில் நிறையும் உறவைச் சித்தரிப்பதாக இருக்கட்டும், அனைத்துக் காட்சிகளிலும் அபாரமாக நடித்திருக்கிறார்.

'என் மனைவிக்கு முன்னாலும் பின்னாலும் உலகம் இல்லாமல் இருந்தது' என்கிற துக்கத்துடன் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு கிழவரின் வாழ்க்கையில் புதிய உறவை நுழைப்பதின் மூலம் அன்பின் வெளிச்சம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது என்கிற செய்தியை நெகிழ்வாகச் சொல்லும் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Hannes Holm.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, June 24, 2020

Lion (2016) - ‘தாய் அறியாத தாமரை'




நாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து  எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் பற்றிய நெகிழ்வான  செய்திகளை பத்திரிகைகளில் படித்திருப்போம். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் இது. இந்த விஷயத்தை அல்வா மாதிரி பல தமிழ் சினிமாக்களில் கதறக் கதற உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அழுகாச்சி சீன்கள் எல்லாம் இல்லாமல் அந்த துயரத்தை இயல்பான தொனியில் விவரிக்கிறது இந்த திரைப்படம்,

ஆஸ்கர் விருதிற்காக ஆறு நாமினேஷன்களில் இடம்  பெற்றிருந்தது. படத்தின் பாதி சம்பவங்கள் இந்தியாவில் நடப்பதால் இதை ஏறத்தாழ நம்மூர் படம் என்றே சொல்லி விடலாம். போதாக்குறைக்கு ரஹ்மானின் 'டேக் ஈஸி ஊர்வசி' பாட்டு வேறு ஓரிடத்தில் திடீரென வந்து பரவசப்படுத்துகிறது.

***

வருடம் 1986. மத்திய பிரதேசத்திலுள்ள காந்த்வா எனும் பழமையான  நகரம். சரூ என்னும் சிறுவனின்  வறுமையான குடும்பம். தந்தை இல்லை. தாய், தங்கை, அண்ணன் உண்டு. 'காக்கா முட்டை' திரைப்படத்தில் வருவதைப் போல தன் அண்ணன் குட்டுவுடன் சேர்ந்து ஓடும் ரயிலில் இருந்து நிலக்கரி திருடக் கற்றுக் கொள்கிறான் சரூ. அண்ணன் எங்கேயோ வேலைக்குச் செல்லும் போது 'தானும் வருகிறேன்' என அடம்பிடிக்கிறான். 'அது கஷ்டமான வேலைடா, உன்னால முடியாது' என்று அண்ணன் தடுத்தாலும் மறுத்து அடம்பிடிக்கிறான். தாய் பணிக்குச் சென்றிருக்க, தங்கையை வீட்டில் விட்டு இருவரும் கிளம்புகிறார்கள்.

ஒரு ரயில்நிலையத்தை அடைந்தவுடன் 'இங்கேயே பத்திரமாக இரு' என்று  சொல்லி விட்டு அண்ணன் எங்கோ இருளில் மறைகிறான்.  தூங்கியெழும் சிறுவன் அண்ணனைக் காணாமல் ரயிலுக்குள் ஏறி தேட சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டு விடுகிறது. ஓடும் ரயிலின் சத்தத்தில் சிறுவன் கத்துவது எவருக்கும் கேட்பதில்லை. இரு நாட்கள் கழித்து கல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்குகிறான். 'வீட்டுக்குப் போகணும்' என அங்குள்ள பலரிடம் கெஞ்சியும் பலனில்லை. மொழிப் பிரச்சினை வேறு.

சாலையோரச் சிறுவர்களுடன் இணைந்து தூங்க முயல்கிறான். அவர்களை சிலர் தூக்க முயல அங்கிருந்து தப்பி ஓடுகிறான். ஒரு பெண் அடைக்கலம் அளித்து உணவளிக்கிறாள். ஆனால் அங்கும் ஏதோ பிரச்சினை  என்பதை உணர்ந்து தப்பியோடுகிறான். சாலையில் திரிந்து கொண்டிருக்கும் இவனை ஓர் இளைஞன் கவனித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறான். அங்கிருந்து சிறுவர் முகாமிற்கு செல்கிறான் சரூ. சற்று பாதுகாப்பான இடம் கிடைத்தாலும் அங்கும் சில அநியாயங்கள் நடைபெறுகின்றன.

வெளிநாட்டுத் தம்பதியொருவர் சரூவை தத்தெடுக்க முடிவு செய்கின்றனர். அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறான் சரூ. அவனுடன் இன்னொரு சிறுவனையும் தத்தெடுக்கின்றனர். அவன்  தன்னையே தண்டித்துக் கொள்ளும் உளப்பிரச்சினை உள்ளவனாக இருக்கிறான். இரு சிறுவர்களும்  மெல்ல புதிய சூழலுக்கு பழகுகிறார்கள். தத்தெடுத்தவர்கள் தங்களின் பிள்ளைகளைப் போலவே இவர்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள்.


ஆயினும் சரூவிற்கு உள்ளூற நிம்மதியோ சந்தோஷமோ இல்லை.



***


புதிய இடத்தில் செளகரியமான வசதிகளும் வாய்ப்பும் இருந்தாலும் சரூவின் மனது முழுக்க தன் இந்தியக் குடும்பத்தைப் பற்றிய நினைவுகளே ஓடுகின்றன. தாயைப் பற்றிய கனவுகள். தன் அண்ணன் எங்கிருந்தோ நின்று அழைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமைகள்.

தன் வளர்ப்புத் தாய் இதையெல்லாம் அறிந்தால் வருத்தப்படுவாளே என்று தன் உணர்வுகளை மறைத்துக் கொள்கிறான். தன் குடும்ப வாழ்க்கையில் கூட அவனால் ஒன்ற முடியவில்லை. நண்பர்களின் தரும் யோசனையின் பெயரில் இந்தியாவிலுள்ள தன் ஊரைப்  பற்றி கூகுள் எர்த் வழியாக தேடிப் பார்க்கிறான். விவரங்கள் சரியாக நினைவில்  இல்லாததால் தேடுவது சிரமமாக இருக்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகான தொடர் முயற்சியில் தன் ஊரின் சரியான பெயரை கண்டுபிடிக்கிறான். மெல்ல மெல்ல  அவனது ஊர் தொடர்பான விவரங்கள், சந்து பொந்துகள், வீடு அமைந்திருக்கும் இடம் போன்றவை நினைவிற்கு வருகின்றன. தன் வளர்ப்புத் தாயிடம் தெரிவித்து விட்டு ஆவலுடன் ஊருக்கு வருகிறான்.

'சரூ உயிருடன்தான் இருப்பான், என்றைக்காவது வருவான்' என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாயைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்து அழுகிறான். அண்ணன் இறந்து விட்டாலும் தங்கையைக் கண்டு மகிழ்கிறான்.

உண்மையில் அவன் பெயர் 'சரூ' அல்ல, 'ஷெரூ'. சிங்கம் என்று அர்த்தம்.


***

சரூவாக நடித்த சிறுவன் சன்னி பவார் தன் அற்புதமான நடிப்பால் கலக்கியிருக்கிறான். இந்தச் சிறுவன் ஆஸ்கர் விருது விழாவிலும் கலந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். பெரிய சரூவாக  நடித்த இளைஞர் தேவ் பட்டேல். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் வந்த சிறுவன். வளர்ப்புத் தாயாக நிக்கோல் கிட்மேன் அபாரமான நடிப்பைத் தந்திருந்தார். தங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் தத்தெடுத்தற்கான காரணத்தை அவர் சொல்லுமிடம் நெகிழ்வான காட்சி.

இந்திய ரயில் நிலையக் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னணி இசையும் சிறப்பு. Saroo Brierley என்பவரின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்களை அவர் புத்தகமாக எழுத, அதிலிருந்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தனது முதல் திரைப்படத்தையே ஆஸ்கர் செல்லும் அளவிற்கு சிறப்பாக இயக்கியுள்ளார் Garth Davis.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Monday, June 22, 2020

Hacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'






போர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயம். அமெரிக்காவும் ஜப்பானும் கடுமையாக மோதிக் கொள்கின்றன.

ஆபத்தான அந்தப் போர்முனையில் ஓர் இளைஞன் கையில் எவ்வித ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக அங்குமிங்கும் ஓடி காயம்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். யார் அவன்? துப்பாக்கி ஏதுமின்றி எப்படி அவனை அனுமதித்தார்கள்? அவனுக்கு அச்சம் என்பதேயில்லையா?


***

டெஸ்மாண்ட் டாஸ் ஓர் அமெரிக்கன். இரண்டாம் உலகப் போரின் போது  நாட்டுக்காக ராணுவ சேவை செய்ய விரும்புகிறான். உடலளவில் வலுவானவாக இல்லாவிட்டாலும் மனதளவில் உறுதியாக இருப்பவன்.  ராணுவப் பயிற்சியின்  போது மற்ற பயிற்சிகளை முடித்து விட்டாலும் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது கறாராக சொல்லுகிறான். 'இல்லை. நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதத்தை தொட மாட்டேன்'. பயிற்சி தரும் அதிகாரிக்கும் சரி, சக வீரர்களுக்கும் சரி, இவன் முரண்டு பிடிப்பது எரிச்சலாக இருக்கிறது. 'அப்புறம் ஏன்யா ராணுவத்துல சேர்ந்து தொலைச்சே?' என்று கோபத்துடன் கேட்கிறார்கள்.

'நாட்டுக்காக சேவை செய்ய விருப்பம். சண்டையில் காயம் ஏற்படும் வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்வேன்" என்கிறான் டெஸ்மாண்ட். ''சரிப்பா. நல்ல விஷயம்தான். ஆனா துப்பாக்கி இல்லாம எப்படி,  ராணுவ விதிகள் அதற்கு அனுமதிக்காதே, உன்னையே நீ காப்பாத்திக்கணும்னா கூட என்ன செய்வே?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். இதர வீரர்கள் இவனை சமயம் கிடைக்கும் போதெல்லாம் அடித்து  அவமானப்படுத்துகிறார்கள். 'நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்டே. ஒழுங்கா ஊரைப் பார்த்து கிளம்பு'.  ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான் டெஸ்மாண்ட்.

துப்பாக்கி சுடும் பயிற்சியை முடிக்காமல் அவனுக்கு விடுமுறை தர மறுக்கிறார்கள். இதனால் அவனுடைய திருமணம் நின்று போகிறது. பிரியமான காதலி வேறு காத்திருக்கிறாள். 'சரி, ஒருமுறையாவது துப்பாக்கியைப் பிடித்து அதை உபயோகிக்கத் தெரியும் என்பதையாவது நிரூபித்து விடு. விடுமுறைக்கு அனுமதிக்கு அளிக்கிறேன்" என்கிறார் உயர் ராணுவ அதிகாரி. "ம்ஹூம். எக்காரணம் கொண்டும் துப்பாக்கியைத் தொட மாட்டேன்"

***

டெஸ்மாண்டின் இந்த முரட்டுப் பிடிவாதத்திற்கு என்ன காரணம்? அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்தான் வன்முறையின் மீது பயங்கரமான கசப்பை ஏற்படுத்துகின்றன. இளம் வயதில் தன் சகோதரனோடு சண்டையிடும் போது ஏற்படும் விபத்தில் அண்ணன் ஏறத்தாழ செத்துப் போய் உயிர் பிழைக்கிறான். அவனுடைய தந்தை ஒருமுறை தாயுடன் சண்டை போடும் போது துப்பாக்கியை காட்டி மிரட்ட, அதைப் பிடுங்கி தந்தையை ஏறத்தாழ சுடப் போய் பிறகு கண்ணீர் விட்டு அழுகிறான். இனி தன் வாழ்வில் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்று உறுதி எடுக்கிறான்.

கீழ்ப்படியாமை காரணமாக ராணுவ கோர்ட்டில் டெஸ்மாண்டின் மீது விசாரணை வருகிறது. அவன் சிறை செல்லவும் நேரலாம். அப்போது கூட ராணுவத்திலிருந்து விலகவோ அல்லது துப்பாக்கியைத் தொடவோ என இரண்டிற்குமே டெஸ்மாண்ட் சம்மதிப்பதில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அவனுடைய தந்தை வருகிறார்.. அவரும் ராணுவத்தில் முன்பு பணிபுரிந்தவர் என்பதால் தலைமை அதிகாரியிடம் எப்படியோ பேசி  டெஸ்மாண்டைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, போரின் போது துப்பாக்கி இல்லாமல் அவன் வர சிறப்பு அனுமதி  கிடைக்கிறது. ஆனால் ஒன்று, அவன் உயிரை அவன்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.'

***

அதுவொரு மலை முகடு. மேலே ஜப்பான் ராணுவ வீரர்கள். கீழே அமெரிக்க ராணுவம். எதிரிகள் சுடுவதற்கு வாகான இடம் என்பதால் அவர்களின் கை ஓங்குகிறது. அமெரிக்கத் தரப்பில் ஏகப்பட்ட சேதம். அந்த மலைமுகட்டை கைப்பற்றினால்தான் ஜப்பானியர்களின் கொட்டத்தை அடக்க முடியும். டெஸ்மாண்டின் படைப்பிரிவு சிரமப்பட்டு ஏறுகிறது. இரண்டு பக்கமும் கடுமையான சண்டை. பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு  பாய்ந்து பாய்ந்து மருத்துவ உதவி செய்கிறான் டெஸ்மாண்ட். அவனுடைய நல்லெண்ணம்தான் அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறதோ, என்னமோ.  உயிர் பயமே இல்லாமல் மருத்துவ சேவை செய்யும் இவனைக் கண்டு சக வீரர்கள் வியக்கிறார்கள். இவன் மீது அவர்களுக்கு மரியாதை வருகிறது.

மறுநாளும் பயங்கரமான சண்டை. ஜப்பானியர் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கப் படை பின்வாங்குகிறது. இன்னொரு பக்கம் அவர்களின் பீரங்கிப் படை தாக்குவதால் எல்லோரையும் பின்னுக்கு வரச்சொல்கிறார்கள். ஆனால் டெஸ்மாண்ட் மட்டும் வருவதில்லை. சண்டையில் காயம் பட்டு உயிருக்குப் போராடும் வீரர்களை தேடித் தேடி முதுலுதவி செய்கிறான். அந்த இடத்தை ஜப்பானியப் படை ஆக்ரமித்திருந்தாலும் ரகசியமாக ஒவ்வொரு வீரரின் உடலையும் மலை முகட்டிலிருந்து போராடி கீழே இறக்குகிறான். ஒன்றல்ல, இரண்டல்ல. இரவு முழுவதும் இப்படி தன்னந்தனியாக 75 வீரர்களைக் காப்பாற்றுகிறான். மறுநாள்தான் இந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிய வருகிறது. அவனுடைய வீரத்தைப் பாராட்டி பதக்கம் வழங்குகிறார்கள்.

**

'பயங்கரமான  சண்டைக்கு நடுவுல எப்படிய்யா ஒருத்தன் இப்படி, உட்டாலக்கடியா இருக்கே' என்று நாம் சந்தேகப்படவும் வழியில்லை. ஏனெனில் இது டெஸ்மாண்ட் என்கிற உண்மையான நபரையும் சம்பவங்களையும் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளன. டெஸ்மாண்ட் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் சுவாரஸ்யமானவை.

சிறந்த எடிட்டிங் மற்றும் ஒலிக்கலவை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிரபல நடிகர் மெல் கிப்சன். அஹிம்சையே தீர்வு, போர் அல்ல என்கிற நீதியை வலுவாக பதிவு செய்திருக்கிற படைப்பு.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)



suresh kannan

Thursday, June 11, 2020

North Country (2005) - ‘வேட்டையாடும் மான்'




ஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்டல்களையும் நிகழ்த்தும் ஆணாதிக்கப் பேர்வழிகள் வெட்கி கூசும்படியாக முகத்தில் அறையும் காட்சிகள் உள்ளன. பெரும்பாலும் ஆண்கள் பணிபுரியும்  ஒரு நிலக்கரி சுரங்கத்தில் தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒரு பெண் போராடி உரிமையை நிலைநாட்டும் உணர்வுபூர்மான திரைப்படம்.

***


கணவனின் கொடுமையை  பொறுக்க முடியாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு செல்கிறாள்  ஜோஸி.  தகப்பன் இவளை வெறுப்புடன் பார்க்கிறார். "நீ வேற எவன் கூடயாவது தப்பு செஞ்சிருப்பே, அதான்" என்று இவளையே குற்றம் சாட்டுகிறார். மாணவப் பருவத்திலேயே ஜோஸி கர்ப்பமுற்றதால் அவருக்கு அப்போதிலிருந்தே ஜோஸியின் மீது வெறுப்பு. அவளுடைய சக மாணவன் பாபி என்பவன்தான் ஜோஸியின் முதல் குழந்தைக்கு தகப்பன் என்று நம்பப்படுகிறது.

தகப்பனுக்கு சுமையாக இல்லாமல் வெளியேறி விட வேண்டும் என்று ஜோஸிக்கு தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் தன் இரண்டு குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும்.  அதற்கு பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும். தன்னுடைய பழைய தோழியான குளோரியைச் சந்திக்கிறாள் ஜோஸி. "நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிய சம்மதமா, நல்ல சம்பளம் கிடைக்கும். நானும் அங்கு யூனியனில் இருக்கிறேன்" என்று குளோரி கேட்க உற்சாகத்துடன் உடனே சம்மதிக்கிறாள் ஜோஸி.


***

சுரங்கத்தில் பணிபுரிவது பெரும்பாலும் ஆண்கள். சேவல் பண்ணை. எனவே அவர்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. சில பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிகிறார்கள். பாலியல் ரீதியிலான சீண்டல்களும் கிண்டல்களும் அத்துமீறல்களும் சகஜமாக இருக்கின்றன. பெண்களால் எதையும் தட்டிக் கேட்க  முடியாது. கேட்டால் இன்னமும் அவமானப்படுத்துவார்கள். ஜோஸிற்கு முதலில் திகைப்பும் கோபமும் வந்தாலும் தன் குழந்தைகளுக்காக சகித்துக் கொள்கிறாள்.

ஜோஸியுடன் பள்ளியில் படித்த பாபியும் அங்குதான் பணிபுரிகிறான். பழைய உறவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறாள் ஜோஸி. எனவே இவளை பயமுறுத்தும் வகையில் சுரங்க வேலையின் ஆபத்தொன்றில் சிக்க வைத்து பழிவாங்குகிறான். ஜோஸிக்கு மட்டுமல்லாமல் இதர பெண்களுக்கும் நிறைய அவமானங்கள் நிகழ்கின்றன.

ஒருநிலையில் பொறுக்க முடியாமல் நிர்வாகத்திடம்  புகார் செய்கிறாள் ஜோஸி. அவர்கள் இதைக் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. "இது ஆண்களின் பணி. இஷ்டமில்லாவிட்டால் வேலையில் இருந்து கிளம்பு" என்று அலட்சியமாக சொல்கிறார்கள்.

***

ஒரு நாள் பாபி ஜோஸியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முயல்கிறான். அவள் எதிர்ப்பு தெரிவிக்க கடுமையாகத் தாக்குகிறான். கோபத்துடனும் அழுகையுடனும் சக ஊழியர்களிடம் இதைப் பற்றி சொல்கிறாள் ஜோஸி. ஆண் ஊழியர்கள் கண்டு கொள்வதி்ல்லை. பெண்கள் பயப்படுகிறார்கள். ஜோஸியின் தகப்பனும் அந்தச் சுரங்கத்தில்தான் பணிபுரிகிறார்.

கோபத்தின் எல்லைக்கே செல்லும் ஜோஸி வேலையை ராஜினாமா செய்து விட்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நிறுவனத்தின் மீது வழக்கு போடுகிறாள். நிர்வாகம் தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி நீதிமன்றத்தில் சாமர்த்தியமாக நடக்கிறது. ஜோஸியின் பழைய ரெக்கார்டுகள் கிளறப்படுகின்றன. "நீ ஸ்கூல் படிக்கும் போதே கர்ப்பமாயிட்டியாமே?" என்று கேட்பதின் மூலம் இப்போதையை பிரச்சினையை அவளுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறார்கள்.


ஜோஸியின் மீது நம்பிக்கை ஏற்படாத சூழலில் நீதிபதி  ஒரு நிபந்தனையை  விதிக்கிறார். 'சுரங்கத்தில் பணிபுரியும் வேறு சில பெண்கள் நீதிமன்றத்தில் புகார் செய்தால் இந்த வழக்கை விசாரிப்பேன்'

***

நிர்வாகத்திற்கு எதிராக புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணும் தயங்குகிறார்கள். வேலை போய் விடும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கஷ்டங்கள். ஜோஸி நீதிமன்றத்தில் தன்னந்தனியாக போராடுகிறாள். அவளை மேலும் சங்கடப்படுத்துவதற்காக பழைய பள்ளி ஆசிரியரை வரவழைக்கிறார்கள். 'படிக்கும் போதே இந்தப்  பெண் இப்படியாமே' என்று நிரூபிக்க.

ஜோஸியின் வழக்கறிஞர் மிகத் திறமையாக இந்த திருப்பத்தை எதிர்கொள்கிறார். பழைய உண்மைகள் வெளிப்படுகின்றன. அதன்படி ஜோஸியின் ஆசிரியர்தான் அவளை மிரட்டி உறவு கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த பாபி பயந்து ஓடி விடுகிறான். இந்த உண்மையை பாபியின் வாயாலேயே வரவைக்கிறார். நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைகிறது.

நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் இதர பெண் பணியாளர்கள் ஒவ்வொருவராக ஜோஸிக்கு ஆதரவாக எழுந்து நிற்கிறார்கள். மனச்சாட்சி உறுத்தலுடன் சில ஆண்களும் இணைகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்ட மகிழ்ச்சியில் ஜோஸி அழுகிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிர்வாகம் நஷ்டஈடு தருகிறது. அது மட்டுமல்லாமல் பெண் பணியாளர்களின் மீது பாலியல் அத்துமீறல்கள் நடைபெறாதவாறு விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதற்கு 1984-ல் நடந்த இந்த வழக்குதான் அடிப்படையான காரணமாக இருக்கிறது.


***


ஜோஸியாக Charlize Theron அற்புதமாக நடித்திருக்கிறார். யூனியன் கூட்டத்தில் பேசும் ஜோஸியை ஆண்கள் அவமானப்படுத்தும் போது அவளது தந்தை திடீரென்று ஜோஸிக்கு ஆதரவு தருவது நெகிழ்வான காட்சி. இதைப் போலவே நீதிமன்றக் காட்சிகளும். படத்தை சிறப்பாக இயக்கிருப்பவரும் ஒரு பெண்தான். Niki Caro.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)




suresh kannan

Wednesday, June 10, 2020

Loving (2016) - ‘வரலாற்றுக் காதல்'





மனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள்  மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திரைப்படம் இது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த திரைப்படம், 'சிறந்த நடிகை'க்கான ஆஸ்கர் நாமினேஷனுக்கும் தகுதி பெற்றுள்ளது.

காதலுக்கு தடையாக மதம்,  சாதி, பணம் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. சில மேற்கத்திய நாடுகளில் நிறமும் ஒரு கூடுதல் தடையாக இருக்கிறது. வெள்ளையினத்தவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வதும் அதனாலேயே கருப்பினத்தவர்களை தாழ்வாக நோக்குவதுமே இந்தப் பாரபட்சத்திற்கு காரணம்.

வெள்ளையினத்தவர், கருப்பினத்தவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிற சட்டம், அமெரிக்காவின் சில மாவட்டங்களில் அமலில் இருந்த காலக்கட்டம் அது. கலப்பின தலைமுறை உருவாகி விடக்கூடாது என்கிற பிற்போக்கு எண்ணமே காரணம்.  நீண்ட கால சட்டப் போரட்டங்களுக்குப் பின்னால் இந்தத் தடையை உடைத்தெறிகிறது ஒரு காதல் தம்பதி.

அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? பார்ப்போம்.


***


மில்ட்ரெட் ஒரு கருப்பினப் பெண். திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். அவளுடைய காதலன் ரிச்சர்ட் வெள்ளையினத்தைச் சார்ந்தவன். கட்டிடத் தொழிலாளியான அவன் தங்களின் கனவு வீட்டை கட்டுவதற்காக வாங்கிய நிலத்தை அவளுக்கு காட்டுகிறான். மில்ட்ரெட்டிற்கு அளவில்லாத சந்தோஷம். வெள்ளையினக் காதலர்கள், கருப்பினப் பெண்களை கை கழுவி விடுவதே அப்போதைய பொதுவான வழக்கம். ஆனால் ரிச்சர்ட் தன்னுடைய காதலில் உண்மையானவனாக இருக்கிறான்.

அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் வெள்ளையினத்தவர், கருப்பினத்தவர்களை திருமணம் செய்ய சட்டபூர்வமான தடை உள்ளதால் பக்கத்து மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்கிறார்கள். ஊருக்குத் திரும்பி வந்து ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் துவங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி எவரோ காவல்துறைக்கு சொல்லி விடுவதால் உள்ளூர் போலீஸ் வந்து கைது செய்கிறது. 'ஒழுங்காக பிரிந்து விடுங்கள்' என்கிற மிரட்டலுக்குப் பிறகு ஜாமீன் கிடைக்கிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதிக்க மனோபாவமுள்ள வெள்ளையின நீதிபதி ஒரு குரூரமான தீர்ப்பைத் தருகிறார்.  'சட்டத்தை மீறியதற்காக இருவருக்கும் ஒரு வருட சிறைத் தண்டனை. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இருவரும்  இந்த மாநிலத்தில் 25 வருடங்களுக்கு இணைந்து வாழக்கூடாது.'

***

தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு பக்கத்து மாநிலத்திற்கு துயரத்தோடு இடம் பெயர்கிறாள் மில்ட்ரெட். நண்பரின் வீட்டில் தங்குகிறார்கள். தன்னுடைய குழந்தை மாமியாரின் மேற்பார்வையில்தான் பிறக்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்துகிறாள் மில்ட்ரெட். எனவே  ரகசியமாக தங்களின் சொந்த மாநிலத்திற்கு செல்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கத் துவங்கும் முன்பே காவல்துறை அவர்களை கைது செய்கிறது.  மறுபடியும் வழக்கு. அபராதத்துடன் எச்சரித்து விடுவிக்கப்படுகிறார்கள். மறுபடியும் பக்கத்து மாநிலம்.

இவர்களுக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. வாழ்க்கை ஒரு மாதிரியாக போய்க் கொண்டிருந்தாலும் மில்ட்ரெட்டின் மனதில் விலக்க முடியாத துயரம் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. தங்களுடைய சொந்த மாநிலத்தில் குழந்தைகளை சுதந்திரமாக வளர்க்க முடியவில்லையே என்று. தாங்கள் அப்படி என்ன பாவம் செய்து விட்டோம் என்று வருத்தப்படுகிறாள்.

உரிமைப் போராட்டம் ஒன்று அமெரிக்காவில் நடக்கிறது. அதைப் பார்த்த உத்வேகத்தில் தங்களின் பிரச்சினை குறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதுகிறாள் மில்ட்ரெட். அது தொடர்பாக மில்ட்ரெட்டை ஒரு வழக்கறிஞர் சந்திக்கிறார். அவர் தரும் யோசனை சற்று விபரீதமாகத்தான் இருக்கிறது.

"நீங்கள் மறுபடியும் உங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். போலீஸ் கைது செய்யும். அப்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். நிச்சயம் நல்ல வழி கிடைக்கும்"


***

ரிச்சர்ட்டிற்கு இந்த ஏற்பாட்டில் நம்பிக்கையில்லை. தேவையில்லாத ஆபத்தில் ஏன் சிக்க வேண்டும் என நினைக்கிறான். ஆனால் இந்த வழக்கு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என மில்ட்ரெட் தீர்மானமாக  நம்புகிறாள். அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புகிறார்கள். இந்த வழக்கு பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக எழுதுகின்றன. மில்ட்ரெட்டை தேடி வந்து பேட்டி எடுக்கிறார்கள். ரிச்சர்ட் எரிச்சலுடன் ஒதுங்கி நிற்கிறான்.


பரபரப்பான நாட்களுக்குப் பிறகு வரலாற்று மகத்துவம் கொண்ட அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளிக்கிறது. அதன்படி அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலுமே கலப்பின திருமணங்களின் மீதான தடை நீக்கப்படுகிறது. மில்ட்ரெட்டின் நம்பிக்கைக்கும் ரிச்சர்ட்டின் உண்மையான காதலிற்கும் கிடைத்த வரலாற்றுப் பரிசு இது.

***

மில்ட்ரெட்டாக Ruth Negga அபாரமாக நடித்திருக்கிறார். விமர்சகர்களின் பாராட்டு மழை இவர் மீது பொழிகிறது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது இவருக்கு கிடைக்கலாம். எப்போதும் இறுக்கமான முகமும் பதட்டத்துடன் கூடிய உடல்மொழியுமாக  நடித்திருக்கும் Joel Edgerton-ன் நடிப்பும் சிறப்பு.

இந்த காதல் தம்பதியினருக்கு என்ன நடக்குமோ என்கிற பதட்டமும் கவலையும் நமக்கு தோன்றிக் கொண்டே இருக்குமளவிற்கான திரைக்கதையுடன் சிறப்பாக இயக்கியிருப்பவர் Jeff Nichols.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Sunday, June 07, 2020

Moonlight (2016) - ‘கருப்பு நிலா'




கருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நிறவெறுப்பு சார்ந்த உளவியலை திரைப்பட இயக்குநர்களும் அப்படியே பிரதிபலித்தார்கள். ஆனால் அந்தச் சமூகத்தின் இன்னொரு பக்க பரிதாப சித்திரத்தை இயல்பாக முன்வைக்கிறது இந்த திரைப்படம்.

சிரோன் என்கிற கருப்பின நபரின் வாழ்க்கையை  அவன் சிறுவனாக இருக்கும் பருவம் முதல் வாலிபனாகும் வரையான காலக்கட்டமாக மூன்று பகுதிகளில் விவரிக்கிறது.

ஆஸ்கர் விருதிற்காக  எட்டு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருப்பதில் இருந்தே இத்திரைப்படத்தின் சிறப்பை யூகிக்க முடியும். சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் குளோடன் குளோப் விருதையும் ஏற்கெனவே வென்றுள்ளது.


**

சிறுவனான  சிரோனை தாக்குவதற்காக  சக மாணவர்கள் துரத்தி வருகிறார்கள்.  ஜூவானும் அவனுடைய காதலியும் சிரோனுக்கு அடைக்கலமும் ஆதரவும் தருகிறார்கள். ஜூவான் போதைப் பொருள் விற்பவன்.  எனவே சிரோனின் தாய் 'அவனிடம் செல்லாதே' என்று எச்சரிக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவள் போதை மருந்தின் அடிமை. தந்தையில்லாத சிரோனுக்கு வீட்டில் அமைதியில்லாத சூழலினால் அடிக்கடி ஜூவானின் வீட்டிற்கு சென்று தங்குகிறான்.

சிரோன் உருவத்தில் சிறியவனாகவும் பலவீனமாகவும் இருப்பதால் சக மாணவர்கள் சீண்டிக் கொண்டேயிருக்கிறார்கள். தாழ்வுணர்வில் அவதிப்படும் அவனுக்கு கெவின் என்பவன் மட்டுமே நண்பனாக இருக்கிறான். ஜூவான் இவனுக்கு நீச்சல் கற்றுத் தந்து தன்னம்பிக்கையை வளர்க்கிறான்.

**

சிரோன் சற்று வளர்ந்து விட்டாலும் நிலைமையில் பெரிதும் மாற்றமில்லை. போதை மருந்திற்கு அடிமையான தாய் இவனிடமிருந்து காசு பிடுங்குகிறாள். அந்த வெறியில் இவனிடம்  சண்டையிட்டு கத்துகிறாள். அடைக்கலம் சென்ற இடத்திலும் அதிகம் தங்க முடியாமல் தெருவில் சுற்றித் திரிகிறான் சிரோன். அப்போது நண்பனான கெவினிடம் விநோதமான அனுபவம் ஏற்படுகிறது. தான் யார் என்கிற அடையாளச் சிக்கலும் சிரோனுக்கு உண்டாகிறது.

பள்ளியில் ஒரு முரட்டு மாணவன் சிரோனை சீண்டிக் கொண்டேயிருக்கிறான். ராக்கிங்கின் போது கெவினை வைத்தே சிரோனை தாக்க வைக்கிறான். படுகாயமுறும் சிரோன் சற்று தேறின பிறகு பள்ளிக்குச் சென்று பதிலுக்கு தன் எதிரியை பயங்கரமாகத் தாக்குகிறான். காவல்துறை கைது செய்கிறது. சிறைக்குச் செல்லும் சிரோனை, நண்பன் கெவின் பரிதாபமாக பார்க்கிறான்.


**

சிரோன் இப்போது வளர்ந்த வாலிபனாகி விட்டான். திடகாத்திரமான உடம்பு. சிறையில் தொழில் கற்றுக் கொண்டதால் ஜூவானைப் போலவே போதைப் பொருள் டீலராகி விட்டான். என்றாலும் கூட சிறுவயதின் பாதிப்பு மனதில் இருக்கத்தான் செய்கிறது. போதைப்பழக்கத்தில் இருந்து மீளும் முயற்சியில் இருக்கும் தாய் 'என்னை மன்னிப்பாயா சிரோன்?' என உருகுகிறாள். சிரோனுக்கு கண்ணீர் வருகிறது.

இந்த நிலையில் பழைய நண்பன் கெவினிடம் இருந்து போன் வருகிறது. பழைய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறான். சந்திக்கச் சொல்லி வரச் சொல்கிறான். அவன் மீதுள்ள ஈர்ப்பு சிரோனுக்கு குழப்பத்தை தருகிறது. பழைய நண்பர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். தங்களின் நிலையை பரஸ்பரம் விசாரித்துக் கொள்கிறார்கள். கெவின் குடும்பத்தோடு செட்டில் ஆகியிருக்கிறான். தன் நிலைமை என்ன என்கிற துயரம் சிரோனுக்கு ஏற்படுகிறது. கெவின் அவனை ஆதரவாக அணைத்துக் கொள்வதோடு படம் நிறைகிறது.


***

சிரோன் மற்றும் கெவின் பாத்திரங்களுக்கு மூன்று காலக்கட்டங்களிலும் அதே மாதிரியான தோற்றப் பொருத்தமுடையவர்களை தேடிப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிரோனின் தாயாக நடித்திருக்கும் Naomie Harris -ன் இயல்பான நடிப்பு அபாரமானது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு இவர் நாமினேட் ஆகியிருக்கிறார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனம், பாடல், நடிப்பு என்று அனைத்து துறைகளிலும் இத்திரைப்படத்தின் உருவாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.


சிரோன் என்பவனின் ஒரு குறிப்பிட்ட கால வாழ்க்கையை நாம் நெருக்கமாக பின்தொடர்ந்து கவனிக்கும் அனுபவத்தை இந்தத் திரைப்படம் அற்புதமாக தருகிறது. கருப்பினத்தவர்களின் வாழ்வியல் சிக்கல்களை புரிந்து கொள்ள உதவுகிறது. கருப்பினத்தவர்கள் என்றல்லாது உலகமெங்கும் உள்ள விளிம்பு நிலைச் சமூகத்தினரைப் பற்றிய பார்வையை பொதுத்தளத்தினர் உணர்ந்து கொள்ளும் நுட்பமான படைப்பாக இது உருவாகியுள்ளது.

Moonlight Black Boys Look Blue எனும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை இயக்கியவர் Barry Jenkins.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, June 06, 2020

La La Land (2016) - ‘காதல் திருவிழா'







ஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான  கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் இது. ஆஸ்கர் விருதின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு, அதாவது 14 பிரிவுகளில் நாமினேஷனுக்கு தகுதி பெற்றிருக்கிறது. போலவே ஏழு கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளது. இதன் சாதனைப் பட்டியல் இன்னமும் கூட முடியாத அளவிற்கு நீளமானது.

இயக்குநரான Damien Chazelle இதன் திரைக்கதையை 2010-லேயே உருவாக்கி விட்டு தயாரிப்பாளரைத் தேடி அலைந்தாலும் துவக்கத்தில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. 2014-ல் வெளிவந்த இதே இயக்குநரின் திரைப்படமான  'Whiplash' பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் வென்றதால் 'அட இந்த ஆள் பரவாயில்லையே' என்று இவர் மீது கவனம் திரும்பியது.

என்றாலும் கூட La La Land உருவாகி வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த பெரும்பாலோனோர் 'ம்ஹூம்.. தேர்றது கஷ்டம்தான்' என்பது போல் உதட்டைப் பிதுக்கினார்கள். ஆனால் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது மட்டுமல்லாது திரைவிழாக்களிலும் மகத்தான வெற்றி பெற்றது அதன் பின்னர் நிகழ்ந்த வரலாறு.

அப்படியென்ன  இந்தப் படம் ஸ்பெஷல்?

'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் பிரபுதேவாவும் கஜோலும் அற்புதமாக நடனமாடிய பாடலான 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலை எவரும் மறந்திருக்கவே முடியாது. பாடலின் வரிகள், இசை, ஒளிப்பதிவு, நடனம், நடிப்பு என்று அனைத்திலும் காதலின் தவிப்பும் ஏக்கமும் பொங்கி வழிந்து  உருவான அற்புதமான பாடல் அது. இந்தப் பாடல் நம்மிடம் எழுப்பிய  ரொமாண்ட்டிக்கான உணர்வானது ஒரு திரைப்படம் முழுவதும் வந்தால் எப்படி ரகளையாக இருக்கும்? அதுதான் La La Land.


**


நாயகனான செபாஸ்டியன் இசைக்கலைஞன். பாரம்பரிய ஜாஸ் இசை மீது மதிப்பும் விருப்பமும் உள்ளவன். தனக்கான அடையாளத்தையும் சொந்தமான இசைக்குழுவையும் உருவாக்க அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறான். போலவே இதன் நாயகி 'மியா'வும். பல தோல்விகளுக்குப் பின்னரும் சிறந்த நடிகையாக ஆவதற்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பவள்.

தமிழ் சினிமாவைப் போலவே ஒரு சிறிய மோதலில்தான் இவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. அவர்களின் தேடல்களைப் பற்றி பரஸ்பரம் அறிந்து கொண்டவுடன் ஈர்ப்பு உண்டாகிறது. ஒருபுறம் காதல், இன்னொரு புறம் தங்களின்  கனவுகளுக்கான தேடல் என்று அவர்களின் வாழ்க்கை தொடர்கிறது.

தனக்கென ஒரு நிலையான ஊதியம் இருந்தால்தான் மியாவை அடைய முடியும், பாதுகாப்பான வருங்காலம் அமையும் என செபாஸ்டியன் நினைக்கிறான். எனவே தன்னுடைய விருப்பத்தை மீறி ஜாஸ் இசையை நவீன வடிவத்தில் இசைக்கும் குழுவில் இணைகிறான். மியாவிற்கு கோபம் வருகிறது. 'இதுவா உன் கனவு, ஏன் சமரசம் செய்து கொள்கிறாய்?' என்று கோபிக்கிறாள்.

நடிகையாகும் முயற்சியில் தொடர்ந்த நிராகரிப்புகளுக்குப் பிறகு தானே ஒரு நாடகம் எழுதி நடிக்கிறாள்  மியா. செபாஸ்டியனால் அதற்கு வரமுடியாமல் போகிறது. நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களும் குறைவு. வெறுப்பின் உச்சத்திற்கே போகிறாள் மியா. இதனால் இருவருக்குள்ளும் பிரிவு உண்டாகிறது.


**

ஒரு நாள்.. செபாஸ்டியனுக்கு ஒரு போன் வருகிறது. மியாவை தொடர்பு கொள்ள முடியாததால் அவனை அழைத்திருக்கின்றனர். ஒரு பிரபலமான பட நிறுவனத்தில் நடிகைக்கான தேர்வு. மியாவைத் தேடிப் போகிறான். தோல்வியால் துவண்டிருக்கும் அவள் இதற்கு வர சம்மதிப்பதில்லை. நம்பிக்கையூட்டி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவர்களுக்குள் மறுபடியும் இணக்கம் வருகிறது.


ஐந்து வருடங்களுக்குப் பிறகான காட்சிகள் வருகின்றன. இருவருக்கும் திருமணமாகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மியா பிரபலமான நடிகையாகியிருக்கிறாள். வேறொருவருடன் திருமணமாகி குழந்தை இருக்கிறது. அவர்களின் காதல் தோல்விற்கு எந்த விதக் காரணமும் படத்தில் விவரிக்கப்படுவதில்லை. நாம்தான் அந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ஒருவகையில் காதல் வெற்றி பெறாத அந்தக் கசப்புதான் இந்த திரைப்படத்தை காவியமாக்கியிருக்கிறது என்று கூட சொல்லலாம். மியா கணவனுடன் ஜாஸ் பாருக்கு வருகிறாள்.. அங்கு செபாஸ்டியன் இசைத்துக் கொண்டிருக்கிறான். இருவரின் பார்வைகளும் உணர்ச்சிகரமாக சந்திக்கின்றன. அவர்களின் நிறைவேறாத கனவுகளும் விருப்பங்களும் இணைந்து வருகிற காட்சிக்கோர்வையொன்று பிறகு வருகிறது, பாருங்கள்.... ரகளை. ரோலர் கோஸ்டரில் பயணித்த பரவசத்தை தருகிறது.  இதுதான் இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றதற்கு காரணமாக இருக்கலாம்.

**


ஏறத்தாழ Damien Chazelle-ன் அனைத்து திரைப்படங்களுமே இசையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிப்பாக ஜாஸ் இசையின் காதலன் அவர். எனவே இந்த திரைப்படத்திலும் இசையும் காதலும் ஒவ்வொரு காட்சியிலும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது. இசையமைப்பாளர் Justin Hurwitz அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

காதலுக்கு மரியாதை மட்டுமல்ல,  இசையின் மூலம் மகத்தான கொண்டாட்டத்தையும் தந்திருக்கும் திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)



suresh kannan

Friday, June 05, 2020

Hell or High Water (2016) - ‘செய் அல்லது செத்துமடி'







குற்றங்களை கறாராக விசாரித்து தீர்ப்பும் தண்டனையும் சொல்வது வேறு, குற்றங்களுக்கான ஆணி வேர் காரணங்களை கண்டறிவது வேறு. ஒரு குறிப்பிட்ட இடத்தின் சமூகவியல் பின்னணி கூட குற்றங்களுக்கு காரணமாக அமையலாம். சகோதர்களாக இருக்கும் இரு சில்லறைத் திருடர்களின் மூலமாக இத்திரைப்படம் அதைத்தான் சொல்கிறது.

**

இடம் மேற்கு டெக்சாஸ். அண்ணன் டேனர், தம்பி டோபி. 'சூது கவ்வும்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி  ஐந்து கட்டாயமான விதிகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பு காரணமாக குறைந்த அளவு பணத்தைக் கொள்ளையடிப்பார் அல்லவா? அது போலவே இவர்களும் சில்லறை நோட்டுக்களை மட்டும் திருடுபவர்கள். இவர்களுக்கும் சில பாலிசிகள் உண்டு.  வங்கிகளில் மட்டுமே கொள்ளையடிப்பார்கள்.  முதல் ஊழியர் வரும் காலை நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டி சிறிய மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். பெரிய நோட்டுக்களைத் தொட்டால் பிரச்சினை ஏற்படும் என தெரியும். கொள்ளையடிக்கப் பயன்படுத்தும் கார்களை மண்ணில் புதைத்து விடுவார்கள். இவர்களின் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தாலும் எந்த தடயமும் கிடைக்காததால் காவல்துறை திணறுகிறது.

**

இவர்களின் கொள்ளைகளுக்கு பின்னால் ஒரு புனிதமான நோக்கம் உண்டு. அவர்களின் தாய்க்குச் சொந்தமான பண்ணையொன்று கடனில் மூழ்கியிருக்கிறது. அதை மீட்க வேண்டும். அண்ணன் ஏற்கெனவே சில திருட்டுக்களில் சிறை சென்றவன் என்பதால்  அவனுக்கு குடும்பம் என்று ஏதுமில்லை. ஆனால் தம்பிக்கு பணத் தேவை இருக்கிறது. விவாகரத்து ஆனவன் என்றாலும் தங்களின் மகன்கள் வருங்காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறான். குறிப்பாக தன்னைப் போல் ஆகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். அதற்காக அடமானத்தில் இருக்கும் பண்ணை நிலத்தை எப்படியேனும் மீட்டாக வேண்டும். மேலும் சில வங்கிகளில் கொள்ளையடிக்கிறார்கள். திருடிய பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக வெள்ளையாக்குகிறார்கள்.

மார்கஸ் சில நாட்களில் ரிடையர்ட் ஆகப் போகும் போலீஸ்காரர். அவருடைய உதவியாளர் ஆல்பர்ட்டோ. இருவரும் இணைந்து இந்த சில்லறைத் திருடர்களை பிடிக்க வியூகம் வகுக்கிறார்கள். மார்கஸ் அனுபவஸ்தர் என்பதால் அவர்கள் திருடும் முறையை அலசுகிறார். 'இந்தந்த இடத்தில்தான் அடுத்து வருவார்கள்' என்று யூகித்து சொல்கிறார். உதவியாளருக்கு இது பிடிபடவில்லையென்றாலும் அவருடன் வேண்டாவெறுப்பாக செல்கிறார்.


**

அண்ணனும் தம்பியும் வழக்கம் போல் ஒரு வங்கிக்கு காலை நேரத்தில் வேட்டைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அனைவரையும் மிரட்டி விட்டு கொள்ளையடிக்கத் துவங்குகிறார்கள். வங்கியின் காவலாளியும் வாடிக்கையாளர் ஒருவரும் தங்களிடம் துப்பாக்கியில் இவர்களை சுட முயல பதிலுக்கு  சுட்டு அவர்களை சாகடிக்கிறார்கள். தப்பி வெளியே வந்தால் அங்கும் பொதுமக்களில் சிலர் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். எப்படியோ அவர்களிடமும் தப்பி வரும் போது தம்பிக்கு  குண்டு பாய்ந்து விடுகிறது.  பின்னாலேயே  காவல்துறையின் வாகனங்கள்.

தம்பியிடம் பணத்தை தந்து விட்டு அண்ணன் வேறொரு வாகனத்தில் செல்கிறான். காவல்துறையிடமிருந்து சாமர்த்தியமாக தப்பி ஒரு குனறின் மீது ஏதேறி அங்கிருந்து போலீஸ்காரர்களை துப்பாக்கியால் சுடுகிறான். இரு தரப்பிலும் சண்டை நடக்கிறது. இந்த தகவல் மார்கஸூக்குப் போகிறது. 'நான் சொன்னேன் பாத்தியா, வா, போகலாம்' என்று ஆல்பிரெட்டை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார். அங்கு நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஆல்பிரெட்டின் தலையில் குண்டு பாய்ந்து உடனே இறந்து போக மார்கஸூக்கு பயங்கர கோபம் வருகிறது.

உள்ளூர்க்காரர் உதவியுடன் குன்றின் இன்னொரு பக்கமாகச் சென்று அண்ணன் திருடனை சுட்டு வீழ்த்துகிறார். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்டது குறித்து அறிந்து தம்பி வருத்தப்படுகிறான். ஒருவகையில் அந்தச் சாவு எதிர்பார்த்துதான். பணம் தம்பிக்குச் செல்லட்டும் என தன் உயிரையே தந்திருக்கிறான் அண்ணன். கொள்ளையடித்த பணத்தை வைத்து கடனில் இருந்த பண்ணையை தம்பி மீட்கிறான். அந்த நிலத்தில் எண்ணைய் வளம் இருப்பதால் அவனுக்குப் பிறகு அவனுடைய வாரிசுகளுக்கு நிலையான வருமானம் வரும் நிம்மதி ஏற்படுகிறது. அவனுடைய கணக்கு வழக்குகள் சுத்தமாக இருப்பதால் காவல்துறையால் அவனை  எதுவும் செய்ய முடிவதில்லை.

**

ரிடையர்ட் ஆகும் மார்க்ஸ், தம்பி திருடனை தேடிப் போகிறார். தன்னுடைய கூட்டாளி இறந்து போனதை அவர் அத்தனை  எளிதில் மறக்கத் தயாராக இல்லை. அவன் துப்பாக்கியுடன் நிற்கிறான். "உன் கூட  கொஞ்சம் பேசத்தான் வந்திருக்கேன். உட்காரலாமா?" இருவரும் உரையாடுகிறார்கள். "ஏன் செஞ்சீங்க?"

டோபி தன்னுடைய குடும்பத்தின் வறுமையான பின்னணி பற்றி சொல்கிறான். அவர்களின் தாய் சமீபத்தில் இறந்து போனதைப் பற்றியும் அண்ணன் திருடனாக இருந்தது பற்றியும் தன் மகன்களுக்காக இந்த நிலத்தை மீ்ட்க பணம் சேர்த்தது பற்றியும் என எல்லாவற்றையும் சொல்கிறான். அவனுடைய மனைவியும் மகன்களும் வருகிறார்கள். அவர்களின் முன்னால் உரையாட விரும்பாத மார்கஸ் கிளம்புகிறார். 'இந்த உரையாடலை வேறொரு சமயத்தில் முடித்துக் கொள்ளலாம்' என்கிறான் டோபி.


**

காலனி ஆதிக்கத்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்த பழங்குடிகளின் இளைய தலைமுறை தங்களின் பாரம்பரிய வறுமையிலிருந்து மெல்ல மீள்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் துயரத்தின் வரலாற்றைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. வயதான போலீஸ்காரர் மார்கஸாக நடித்திருக்கும் Jeff Bridges-ன் நடிப்பு அருமை. இவரும் உதவியாளரும் பேசிக் கொள்ளும் வசனங்கள் சுவாரசியமானது. டோபியாக Chris Pine கலக்கியிருக்கிறார். டெக்ஸாஸின் அபாரமான பாரம்பரிய இசை படமெங்கும் ஒலிக்கிறது. பல விருதுகளைப் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தை திறமையாக இயக்கியிருப்பவர் David Mackenzie.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, June 04, 2020

The Book Thief (2013) - ‘நூல்களின் காதலி'





கலை, இலக்கியம் போன்ற உன்னதமான விஷயங்கள் மக்களின் துன்பமான சமயங்களில்  எத்தனை அருமையான மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை நெகிழ்வாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் திரைப்படம் இது. யூதர்களுக்கு நாஜிக்களுக்கு  இழைத்த வரலாற்றுக் கொடுமைகளின் பின்னணியில் ஓர் அழகான மெல்லிய கோடு  போல இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

***


வருடம் 1938. சிறுமி லீஸல் தன் தாயை விட்டுப் பிரிந்து தன் வளர்ப்பு பெற்றோாரிடம் சென்று சேர்வதற்காக பயணித்துக் கொண்டிருக்கிறாள். வழியில் அவளது தம்பி இறந்து போகிறான். புதைக்கும் இடத்தில் கல்லறை ஊழியர் விட்டுச் செல்லும் புத்தகம் ஒன்றை தன்னோடு லீஸல் எடுத்துச் செல்கிறாள். ஆனால் அவளுக்கு வாசிக்கத் தெரியாது.

புதிய இடத்தில் வளர்ப்பு தாய் கடுகடுவென நடந்து கொள்கிறாள். ஆனால் தந்தையான ஹான்ஸ் பிரியமுடன் லீஸலை கவனித்துக் கொள்கிறார். அவளுக்கு எழுதத் தெரியாததைக் கண்டு பள்ளியில் பிள்ளைகள் சிரிக்கின்றனர். லீஸல் வைத்திருக்கும் புத்தகத்தின் மூலம் புதிய தந்தை வாசிப்பை கற்றுத் தருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ரூடி என்கிற துறுதுறு சிறுவன் லீஸலுக்கு நண்பனாகிறான். "உங்க அம்மா கம்னியூஸ்டாமே, நெஜம்மாவா?"

தன்னிடமிருக்கும் புத்தகத்தின் மூலம் வாசிக்கவும் எழுதவும் லீஸல் கற்றுக் கொள்கிறாள். அவளுக்கு புத்தகங்களின் மீதான விருப்பம் பெருகுகிறது. தங்களின் அரசியல் கொள்கைகளுக்கு விரோதமான நூல்களை நாஜிக்கள் தீயில் இட்டு எரிக்கிறார்கள். லீஸலையும் அவ்வாறாக  புத்தகத்தை எரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறான் ஒரு சிறுவன். வேறு வழியில்லாமல் அதைச் செய்கிறாள். அனைவரும் சென்றதும் தீயிலிருந்து எரியாமல் தப்பித்த ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறாள். அந்த ஊர் மேயரின் மனைவி இதைப் பார்த்து விடுகிறாள்.

***

லீஸல் தங்கியிருக்கும் வீட்டில் மேக்ஸ் என்கிற இளைஞன் விருந்தாளியாக வருகிறான்.  யூத இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் நாஜிக்களிடமிருந்து தப்பிக்க அடைக்கலம் தேடி வந்திருக்கிறான். இளைஞனின் தந்தை ஒரு காலத்தில் லீஸலின் தந்தைக்கு உதவியிருக்கிறார். இப்போது பதில் உதவி செய்ய வேண்டிய நிலைமை. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நாஜிக்கள் லீஸலின் குடும்பத்தையே காலி செய்து விடுவார்கள். 'எவரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சு விடக்கூடாது' என்று லீஸலிடம் சொல்கிறார்கள்.

புதிய விருந்தாளியான மேக்ஸூம் லீஸலும் நட்பாகிறார்கள். இருவருமே ஒருவகையில் நாஜிக்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதால் அவர்களின்  நட்பு இறுகுகிறது. துவைத்த துணிகளை தருவதற்காக மேயரின் வீட்டிற்கு செல்கிறாள் லீஸல். மேயரின் மனைவியைப் பார்த்து திகைக்கிறாள். ஆனால் அவரோ லீஸலை தன்னுடைய நூலகத்திற்கு அன்புடன் அழைத்துச் செல்கிறார். "நீ விரும்பும் போதெல்லாம் இங்கு வந்து படிக்கலாம்"

மேக்ஸ் லீஸலுக்கு பல விஷயங்களைச்  சொல்லித் தருகிறான். அவன் தலைமறைவாக இருப்பதால் வெளியுலகம் எப்படியிருக்கிறது என்பதை பதிலுக்கு லீஸல் சொல்கிறாள். மேக்ஸ்ஸின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அவன் நோயில் வீழ்ந்திருக்கும் சமயத்தில் தான் எடுத்து வரும் புத்தகங்களையெல்லாம் வாசித்துக் காண்பிக்கிறாள் லீஸல். அதிர்ஷ்டவசமாக மேக்ஸ்  பிழைத்துக் கொள்கிறான். "நான் வாசித்ததையெல்லாம் நீீ கேட்டாயா?" என்கிறாள் லீஸல். "ஆமாம். அதனால்தான் நான் உயிர் பிழைத்தேன்"

***

புத்தகங்களை வாசிக்கும் போது மேயரால் கண்டுபிடிக்கப்பட்டு துரத்தப்படுகிறாள் லீஸல். என்றாலும் எவருக்கும் தெரியாமல் மேயரின் வீட்டின் பின்புறமாக நுழைந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்கிறாள். யூதர்கள் எவராவது பதுங்கியிருக்கிறார்களா என நாஜிக்கள் ஒவ்வொரு வீடாக சோதனையிடுகிறார்கள். சாமர்த்தியமாக மேக்ஸை தப்பிக்க வைக்கிறாள் லீஸல். 'தான் இனியும் இங்கிருந்தால் எல்லோருக்கும் பிரச்சினை' என்றபடி மேக்ஸ் அங்கிருந்து சென்று விடுகிறான். லீஸல் உட்பட அவளுடைய குடும்பமே கண் கலங்குகிறது.

இரண்டாம் உலகப் போர் துவங்குகிறது. போர் விமானங்கள் மூலமாக குண்டு மழை பொழிகிறது. மக்கள் பதுங்கு குழியில் அச்சத்துடன் உட்கார்ந்திருக்கின்றனர். லீஸலின் தந்தை ஹார்மோனியத்தின் மூலம் அழகான இசையை வாசிக்கிறார். அவர்களுக்கு சற்று ஆசுவாசம் ஏற்படுகிறது. ராணுவத்தில் பணிபுரிவதற்காக அவரை அழைத்துச் சென்று விடுகிறார்கள். மீண்டும் அதே போல பதுங்கு குழியில் இருக்க நேரும் போது தானே உருவாக்கிய ஒரு கதையை லீஸல் அனைவருக்கும் சொல்கிறாள். போர்ச்சூழலின் பயத்தை தற்காலிகமாக மறந்து மக்கள் கதையைக் கேட்கிறார்கள்.


போர்த் தாக்குதல் தீவிரமடைகிறது. குண்டு விழுந்து பல வீடுகள்  சேதமாகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. லீஸலின் வளர்ப்பு தாயும் தந்தையும் கூட இறந்து போகிறார்கள். பக்கத்து வீட்டு சிறுவன் ரூடியும் இறக்கிறான். லீஸல் உயிர்தப்புகிறாள். மேயரின் மனைவி அவளைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறாள்.

பல வருடங்கள் கழித்து லீஸல் ஓர் அற்புதமான எழுத்தாளராகியிருக்கும் தகவலோடு படம் நிறைகிறது.


***

சிறுமி லீஸலாக அற்புதமாக நடித்திருக்கும் Sophie Nélisse -ன் பார்வையில் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. வன்முறையை நேரடியாக காட்டாமல் நாஜிக்களின் கொடுமையை அழுத்தமாக பதிவு செய்திருப்பது திரைக்கதையின் சிறப்பு. ஜான் வில்லியம்ஸின் பின்னணி மென்மையான பின்னணி இசை படத்திற்கு அழகைக் கூட்டியிருக்கிறது. பல விருதுகள் பெற்ற இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Brian Percival.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, June 03, 2020

The Girl on the Train (2016) - ‘மூன்று துரோகம் - ஒரு கொலை






இதுவொரு சைக்காலஜிக்கல் திரில்லர்.  மூன்று பெண்களின் வாழ்வை அவர்களுக்கே தெரியாமல் ஒருவன் சீரழிக்கிறான். இதற்கான பழி முழுவதும் அப்பாவிப் பெண்ணின் மீது விழுகிறது. சுவாரசியமான திரைக்கதையின் மூலமாக காட்சிகள் விரிவது இத்திரைப்படத்தின் பலம்.

***


ராச்சல் விவாகரத்து ஆனவள்.  மனக்குழப்பங்களும் குடிப்பழக்கமும் உள்ளதால் அனைவராலும் விநோதமாக பார்க்கப்படுகிறாள். தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்த படி  தினம்  ரயிலில் பயணிக்கிறாள். பழைய வீட்டை ரயில் கடந்து செல்லும் சிறிய தருணத்தில் முன்னாள் கணவனின் குடும்பத்தை, அவனுடைய புதிய மனைவி அன்னாவை குறிப்பாக அவர்களின் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தபடி செல்வாள்.


தன் குழந்தையை தூக்கிச் சென்று விடுவாள் என்று ராச்சல் மீது அன்னாவிற்கு  பயமும் சந்தேகமும் உண்டு. தன் கணவனுக்கு  ராச்சல் போனில் மெசேஜ் அனுப்புவது, போன் செய்வது ஆகியவையும் பிடிப்பதில்லை.


ராச்சல் ரயிலில் இருந்து  வெளியே வேடிக்கை பார்க்கும் சமயத்தில் ஓர் அந்நிய இளம் பெண்ணை தினமும் பார்ப்பாள். அவள் தன் கணவனுடன் அன்பாக பழகும் விதத்தை தினமும் பார்க்கும்  ராச்சலுக்கு ஏக்கம் உண்டாகும்.  'அன்பான வாழ்வு அமைந்திருக்கிற  குடும்பத்தலைவி' என்று அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது பிரியம் உண்டாகும்.

உண்மையில் ராச்சல் காண்பது கானல் நீர் காட்சிதான். அவளால் வேடிக்கை பார்க்கப்படும் 'மேகன்' என்கிற  இளம்பெண் தன்னுடைய இயந்திரத்தனமான கணவனுடன் வெறுமையான வாழ்வை வாழ்கிறவள். ராச்சலின் பழைய வீட்டில் 'தாதி' வேலை பார்ப்பவள். அவளும் தன் வாழ்க்கை குறித்த மனக்குழப்பங்களைக் கொண்டவள்.




***

ஒரு நாள் - ராச்சல் வழக்கம் போல இளம் பெண்ணின் வீட்டை கவனிக்கும் போது ஒரு காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டிருப்பவன், அவளுடைய கணவன் அல்ல. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வைத்திருந்த புனிதமான பிம்பம் நொறுங்கி விட்டதில்,  அவளைக் கொன்று விடலாமா என்கிற வெறி ராச்சலுக்கு வருகிறது.


ஒருநாள் குடி மயக்கத்தில் ராச்சல் வீடு திரும்பும் சமயத்தில் அந்த இளம் பெண்ணை காண்கிறாள். ஆத்திரத்துடன் அவளை நோக்கி கூவிக் கொண்டே செல்லும் போது  'மடார்' என்று தான் தாக்கப்பட்டது மட்டும்தான் அவளுக்கு தெரியும். விடிந்த போது ரத்தக் காயங்களுடன்  சாலையில் கிடப்பதை உணர்வாள். என்ன நடந்தது என்பதை அவளால் நினைவு கூரவே முடியாது.


சில நாட்கள் கழித்து அவளைத் தேடி போலீஸ் வரும். இளம் பெண் காணாமற் போயிருக்கும் தகவல் அப்போதுதான் அவளுக்கு  தெரிய வரும். "குறிப்பிட்ட நாளின் நேரத்தில் நீ எங்கு இருந்தாய், என்ன செய்து கொண்டிருந்தாய்?'  போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு ராச்சலால் சரியாக பதில் சொல்ல இயலாது. அவள் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது என்று தோன்றும். 'இனிமேல் நீ உன் முன்னாள் கணவனின் வீட்டருகே செல்லக்கூடாது' என காவல்துறை அதிகாரி எச்சரிப்பாள்.

***

ராச்சலுக்கு ஒரே குழப்பம். 'அந்த நாளின் இரவில் என்னதான் நடந்தது?'  தான் யாரால் தாக்கப்பட்டோம்? அந்தப் பெண் ஏன் காணாமல் போனாள்?

இளம்பெண்ணின் வீட்டிற்கு ராச்சல் செல்கிறாள். முரட்டுத்தனமாக தோன்றுகிற அவளுடைய கணவனிடம் "உன் மனைவியை வேற்று ஆடவன் முத்தமிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்' என்கிறாள். போலீஸ் அவனையும் சந்தேகப்படுகிறது என்பதால் இந்த தகவல் அவனுக்கு ஆச்சரியத்தை தரும். மட்டுமல்ல, தன் மனைவியின் துரோகம் குறித்து கோபமும் வரும்.

சில புகைப்படங்களைக் காட்டி அடையாளம் காட்டச் சொல்வான் அந்த முரடன். ராச்சல் அவற்றில் ஒருவனை சரியாக அடையாளம் சொல்வாள். அந்த நபர் - மேகனுக்கு உளச்சிகிச்சை தந்து கொண்டிருந்த மருத்துவர்.


***

சில நாட்களில் மேகனின் சடலம் அழுகிய நிலையில் புதர்ப்பகுதியிலிருந்து கிடைக்கிறது. அவள் காணாமல் போகவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறாள். மேகனின் கணவனின் மீீது போலீஸின் சந்தேகம் அதிகமாகும். பத்திரிகைகளில் பரபரப்பு ஏற்படும்.

ராச்சல் அந்த நாளின் சம்பவங்களை மெல்ல மெல்ல நினைவுக்கு கொண்டு வர முயல்வாள்.. ஆம்.. அன்று அவளை  தாக்கியது, அவளுடைய முன்னாள் கணவன். தன் குடும்பத்தையே ராச்சல் சுற்றிச் சுற்றி வருவதால் எரிச்சலடைந்து இவளைத் தாக்கி விடுவான். அதே நாளில்தான் மேகனின் மரணமும் நடக்கிறது.

தனது வீீட்டில் தாதியாக பணிபுரிந்து கொண்டிருந்த 'மேகனுடன்' அவன் ரகசிய உறவு வைத்திருக்கிறான். தான் கர்ப்பமுற்றிருப்பதாக மேகன் சொல்லும் போது எரிச்சல் அடைகிறான். ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இவர்களின் சர்ச்சை நடக்கும் போது ஆத்திரத்துடன் அவளைக் கொன்று விடுகிறான்.


***

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட ராச்சல் நேராக தன் பழைய கணவனின் வீட்டிற்கு செல்வாள். அவனிடம் இது குறித்து கேட்கும் போது ராச்சலையும் அவன் கொல்ல முயல்கிறான். பதிலுக்கு ராச்சல் தாக்கியதில் அவன் ஏறத்தாழ இறந்து போகிறான். அவனுடைய தற்போதைய மனைவி அன்னாவும் வந்து தாக்கி அவனுடைய கதையை முழுவதுமாக முடிக்கிறாள். அவன் தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்கும்.

இருவரும் காவல்நிலையத்திற்கு செல்வதோடு படம் நிறையும்.  ராச்சலுக்கு இருந்த மனக்குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு எல்லாப் பழியையும் ராச்சல் மீது போட்ட கயவனை பழிவாங்கிய திருப்தி அவர்களுக்கு இருக்கும்.

ராச்சலாக நடித்த Emily Blunt-ன் நடிப்பு அற்புதம். குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாத தடுமாற்றம், தன் வாழ்வு குறித்த வெறுமை ஆகிய உணர்ச்சிகளை மிக அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான  திரைக்கதையின் மூலம் இயக்கியிருந்தவர் Tate Taylor.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Tuesday, June 02, 2020

Elle (2016) - ‘அவள் அப்படித்தான்'






ஹாலிவுட் திரைப்படங்களை் பெரும்பாலும்  சாகசங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போது, ஐரோப்பிய திரைப்படங்கள் மனிதர்களின் பல்வேறு உணர்ச்சிகளை, அதன் சிக்கல்களை மையமாகக் கொண்டிருக்கும். 'அவள்' என்ற அர்த்தம் வரும்படியான தலைப்பைக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் ஒரு சைக்காலஜி திரில்லர். மிஷேல் எனும் நடுத்தர வயதுப் பெண்ணுக்கு நிகழும் ஓர் அசாம்பாவிதத்தையொட்டி நகரும் திரைக்கதை. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற இத்திரைப்படம், பிரான்சின் சார்பாக ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

***

'வீடியோ கேம்' தயாரிக்கும் நிறுவனத்தை, தனது தோழி அன்னாவுடன் இணைந்து நடத்துகிறாள் மிஷேல். விவாகரத்தான அவளுக்கு அன்னாவின் கணவனுடன் ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவனால் மிஷேல் மூர்க்கமாக வன்கலவி செய்யப்படுகிறாள். அவனால் தாம் மறுபடியும் தாக்கப்படக்கூடும்  என்கிற  அச்சம் மிஷேலுக்கு இருக்கிறது. எனவே அது குறித்தான எச்சரிக்கையுடன் இருக்கிறாள். தன் பகற்கனவுகளில், தன்னைத் தாக்கியவனை பதிலுக்கு விதம்விதமாய் தாக்குவது போல கற்பனை செய்கிறாள்.

இந்த அசம்பாவிதம் குறித்து தனது நண்பர்களிடம் சொல்கிறாள் மிஷேல். 'போலீஸிற்கு போ" என்கிற அவர்களின் ஆலோசனையை ஏற்க அவள் தயாராக இல்லை. அதற்கான காரணம் அவளது இளமைப்பருவத்தில் உறைந்திருக்கிறது. மிஷேல் சிறுவயதாக இருக்கும் போது அவளது தந்தை அக்கம்பக்கம் வீடுகளில் உள்ள நபர்களை கொடூரமாகக் கொன்று காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார். அந்த பரபரப்பான வழக்கின் விசாரணை, பல வருடங்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதற்காக தனது தந்தையை கடுமையாக வெறுக்கும்  மிஷேலுக்கு போலீஸ் என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.

மிஷேலுக்கு நிகழ்ந்த சம்பவம் எப்படியோ பரவி, அவளது கம்பெனியிலேயே எவரோ அது குறித்ததொரு 'அனிமேஷன்' படத்தை உருவாக்குகிறார்கள். தன்னைத் தாக்கியவன் அவனாக இருக்கும் என்று மிஷேல் சந்தேகப்படுகிறாள். அது குறித்து ரகசியமாக ஆராய்கிறாள்.


***

எதிர் வீட்டில் இருக்கும் பாட்ரிக் எனும் ஆசாமி மீது மிஷேலுக்கு ஈர்ப்பு இருக்கிறது. சமயங்களில் ஒளிந்திருந்து அவனை ரகசியமாக கவனித்து மகிழ்கிறாள். பாட்ரிக்கின் குடும்பத்தை விருந்திற்காக தன் வீட்டிற்கு அழைக்கிறாள்.  தன் விருப்பத்தை சூசகமாக அவனிடம் தெரிவிக்கிறாள். இருவருக்குள்ளும் நட்பும் இணக்கமும் உண்டாகிறது.

மிஷேலின் தாய் ஓர் இளைஞனை திருமணம் செய்ய உத்தேசிக்கிறாள். மிஷேலுக்கு இது பிடிப்பதில்லை. விருந்தின் போது தன்னுடைய எதிர்ப்பை கிண்டலாக எதிரொலிக்கிறாள். மிஷேலின் மகனுக்கு ஓர் அடங்காப்பிடாரி மனைவி. பொருளாாதாரக் காரணங்களுக்காக தாயைச் சார்ந்திருக்கிறான் மகன். இது குறித்த சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் முகமூடி மனிதனின் வருகை மீண்டும் நிகழ்கிறது.  மிஷேலை தாக்கி அவளுடன் கட்டாயமாக உறவுகொள்ள முயல்கிறான். மிஷேல் இதை மனதளவில்  எதிர்கொள்ள தயாராக இருந்ததால் , இம்முறை பதிலுக்கு துணிச்சலுடன் அவனைத் தாக்குகிறாள். அவன் யாரென்று அடையாளம் தெரிவதில் அவளுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. எதிர்வீட்டு பாட்ரிக்.

***

எதிரி யாரென்கிற அடையாளம் தெரிந்து விட்ட போதிலும் அவனுடன் தொடர்ந்து பழக வேண்டிய நிலைமை மிஷேலிற்கு. காவல்துறையிடமும் செல்ல முடிவதில்லை.. ஆகவே பூனை - எலி விளையாட்டைத் துவங்குகிறாள். அவனைப் பழிவாங்க வேண்டும் என்று தோன்றினாலும்  ஒருபக்கம் அவன் மீது ஈர்ப்பும் இருக்கும் விசித்திரமான நிலைமை.

மிஷேல் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் போது உதவ யாருமில்லாத நிலையில் பாட்ரிக் வந்து காப்பாற்றுகிறான். ஒரு நாளின் தனிமையில் உறவிற்காக பாட்ரிக் அழைக்கிறான். மிஷேல் மனதளவில் அதற்கு தயாராக இருந்தாலும் முந்தைய சம்பவத்தைப் போலவே அவளை அடித்துத் துன்புறுத்தி வக்கிரத்தனமாக தன் வேலையை முடிக்கிறான். மிஷேலுக்குள் வெளிக்காட்டாத வன்மம் பொங்குகிறது.

தன்னுடைய நிறுவனத்தின் புதிய 'வீடியோ கேம்' ஒன்று சிறப்பாக அமைந்ததையொட்டி விருந்திற்கு ஏற்பாடு செய்கிறாள் மிஷேல். பாட்ரிக் குடும்பம் உட்பட அனைவரையும் அழைக்கிறாள். தன் தோழி அன்னாவிடம் 'உன் கணவருடன் எனக்கு தவறான உறவுமுறை இருந்தது' என்று உண்மையை ஒப்புக் கொள்கிறாள். விருந்தின் இடையே 'நான் கிளம்புகிறேன்' என பாட்ரிக்கை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

வீட்டிற்கு செல்லும் வழியில் 'உன்னைப் பற்றி போலீஸில் சொல்லலாம் என்றிருக்கிறேன்'  என்று பாட்ரிக்கிடம் செல்கிறாள். அவள் எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் பாட்ரிக் அவளது வீட்டிற்கு வருகிறான். வழக்கம் போல அவளை மூர்க்கமாக அடித்து உறவு கொள்ள முயற்சிக்கிறான். பாட்ரிக்கின் தலையில் 'மடார்' என்று எவரோ அடிக்கிறார்கள். மிஷேலின் மகன். பாட்ரிக் இறந்து போகிறான்.

'இந்த ஆம்பளைங்கே இப்படித்தான்' என்றபடி மிஷேலும் அன்னாவும் நடந்து செல்லும் காட்சியோடு படம் நிறைவுறுகிறது.

***

'பெண்ணின் மனது ஆழம்' என்பது சலிக்க சலிக்க சொல்லப்பட்டு விட்ட வாக்கியம் என்றாலும் அதில் பெரும்பாலும் உண்மையுள்ளது. பெண்களின் மனது எவ்வாறெல்லாம் விசித்திரமாக இயங்கும் என்பதை அழுத்தமாக  நிரூபிக்கும் திரைப்படம் இது. மிஷேலாக நடித்த Isabelle Huppert-ன் அற்புதமான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 'Black Book'  போன்ற பல சிறப்பான திரைப்படங்களை இயக்கியிருக்கும் டச்சு இயக்குநர் Paul Verhoeven, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் முதல் பிரெஞ்சு திரைப்படம் இது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Monday, June 01, 2020

The Accountant (2016) - ‘இயந்திரக் கணிதன்'





இத்திரைப்படம் வழக்கமானதொரு ஆக்ஷன் திரில்லர் அல்ல.  ஆட்டிஸம் போன்ற மாற்றுத்திறன் கொண்ட நபர் தொடர்பான திரைப்படம் என்றால் பொதுவாக அழுகாச்சியாக அல்லது மெலோ டிராமாக இருக்கும். ஆனால் அத்தகைய நபர் ஒருவரை சாகசங்களோடு இணைத்ததே இத்திரைப்படத்தின் சுவாரசியமான அம்சம். Ben Affleck  இந்தப் பாத்திரத்தை ரகளையாக கையாண்டுள்ளார்.


***


ஆட்டிஸ குறைபாடுள்ள சிறுவனான கிறிஸ் அதிக ஆக்ரோஷமானவனாக இருக்கிறான். 'அதிக வெளிச்சம், சப்தம் இவர்களை பாதிக்கும். சிறிது காலத்திற்கு அவனை என்னிடம் விட்டு விடுங்கள்' என்கிறார் சிறப்பு மருத்துவர். ஆனால் ராணுவத்தில் பணிபுரியும் தந்தை, அதற்கு முரணான கருத்தைச் சொல்கிறார். 'எது அவனைப் பாதிக்கிறதோ, அதனை நோக்கியே அவன் தீவிரமாகச் செல்ல வேண்டும். அதுதான் சரியான மருந்து' என்று கிறிஸ்ஸையும் அவனது சகோதரனையும் கடுமையான சண்டைப் பயிற்சியில் ஈடுபடுத்துகிறார். இதனால்் கிறிஸ்ஸின் தாய் இவர்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்.

வளர்ந்த கிறிஸ் கணக்கில் அசகாய சூரப்புலியாக இருக்கிறான். எத்தனை சிக்கலான கணக்குகளையும் மனதிலேயே போட்டு விடைகாணும் திறமையுள்ளவன். குறி பார்த்து சுடுவதிலும் கெட்டிக்காரன். பயங்கரவாதிகளின் கணக்குகளில் சீர்திருத்தம் செய்து சம்பாதிக்கும்  ஆபத்தான பணியில்  இருக்கிறான். அனாமதேய பெண் குரலொன்று அவனுக்கு உதவியாளராக இருக்கிறது.  ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று, தங்களின் கம்பெனி கணக்குகளில் உள்ள கோளாற்றை சீர்செய்வதற்காக கிறிஸ்ஸை அணுகுகிறது.

இது ஒருபுறமிருக்க, டிரெஷரி ஏஜெண்ட்டான ரேமண்ட் கிங், பயங்கரவாதிகளின் கணக்குகளை ஆராய்கிறார். அவர்களுக்கு உதவும் 'அக்கவுண்டண்ட்' என்கிற பெயர் மட்டும் கிடைக்கிறது. தனது உதவியாளராக மெடினாவை அழைக்கிறார். "நீ இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். இல்லையென்றால் உன் வேலை போய் விடும். உன்னுடைய பழைய க்ரைம் ரெக்கார்டுகள் என்னிடம் இருக்கின்றன". எனவே மெடினா தேடுதலில் தீவீரமாக ஈடுபடுகிறாள்.

***

ரோபோட்டிக்ஸ் நிறுவன கணக்குகளில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை கிறிஸ் கண்டுபிடிக்கிறான். அந்தக் கம்பெனியின் உயர்அதிகாரி கொல்லப்படுகிறார். கிறிஸ் மோசடிகளை முழுவதுமாக முடிக்கும் முன்பு நிறுவனத்தின் தலைவர்  இவனிடம் வந்து அதை நிறுத்துமாறு கூறுகிறார். கிறிஸ்ஸின் இயல்புப் படி ஒன்றை துவக்கி விட்டால் அதை முழுவதுமாக முடிக்காமல் அவனால் இயல்புத்தன்மையை அடைய முடியாது. எனவே இந்த வேலையை தனக்கு தந்த பெண்மணியைப் பார்க்கச் செல்கிறான். ஆனால் அவளும் கொல்லப்பட்டிருக்கிறாள்.

கிறிஸ்ஸையும் கொல்வதற்கான சம்பவங்கள் நடக்கின்றன. மிகத் திறமையாக தப்பிக்கிறான். ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தில் தனக்கு உதவியாளராக இருந்த இளம்பெண்ணை கொல்லப் போகிறார்கள் என்று அறிகிறான். அவளும் நிதி மோசடி பற்றி அறிந்தவள். அவளைக் காப்பாற்றுகிறான். அவளைத் தன் ரகசிய இடத்திற்கு அழைத்து வந்து  தன் பழைய வரலாற்றைக் கூறுகிறான்.

'அக்கவுண்டன்ட்' யார் என்கிற தேடுதலில் ஈடுபட்டிருக்கும் மெடினா, மிகச் சிரமப்பட்டு கிறிஸ்ஸின் பெயரை கண்டுபிடித்துவிடுகிறாள். அவளும் டிரெஷர் ஏஜெண்ட் ரேமண்ட் கிங்கும், கிறிஸ்ஸின் வீட்டிற்கு செல்கிறார்கள். கிறிஸ் அங்கு இருப்பதில்லை.

***

மெடினாவிடம், ரேமண்ட் கிங்   சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவம் ஒன்றை பகிர்கிறார். பயங்கரவாதிகளை கண்காணித்துக் கொண்டிருந்த சமயத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டு உள்ளே நுழைகிறார். வழியெங்கும் பயங்கரவாதிகள் இறந்து கிடக்கிறார்கள். அவருடைய தலையின் பின்னால் ஒரு துப்பாக்கி. "நீ உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்தாயா?" என்று  கேள்வி கேட்கப்படுகிறது. "ஆம்" என்கிறார் ரேமண்ட் பயத்துடன். அவரைக் கொல்லாமல் விடுகிறான் 'அக்கவுண்டன்ட்' ஆன கிறிஸ்.

ரோபாட்டிக்ஸ் நிறுவன தலைவரின் வீட்டிற்கு செல்கிறான் கிறிஸ். அங்கு பலத்த பாதுகாப்பு. நவீன துப்பாக்கிகளுடன் ஆட்கள். எல்லோரையும் வீழ்த்தினாலும் கூட்டத்தின் தலைவனுடன் சண்டையிட நேர்கிறது. அவன் கிறிஸ்ஸின் சகோதரன். பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்கள் சந்திக்கிறார்கள். நிறுவனத் தலைவரை கிறிஸ் சுட்டுக் கொல்கிறான். ரேமண்ட் கிங் வகித்த பதவியை மெடினா அடைகிறாள்.

***

'அவர்கள் குறைபாடுள்ளவர்கள்'  என்றும் 'நாம் இயல்பானவர்கள்' என்று எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்? என்கிற தத்துவார்த்தமான கேள்வியுடன் படம் நிறைகிறது. இவ்வாறான சிறப்புத் தன்மையுள்ள நபர்கள் ஒருவகையில் அசாதாரணமானவர்கள். பொங்கி வழியும் அவர்களின் செயலாற்றல் சரியான வழியில் திசை திருப்பப்பட்டால் பல அசாதாரணமான விஷயங்களை அவர்கள் செய்வார்கள். ஆனால் அது தவறான திசையாக இருக்கக்கூடாது என்பதை படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

ஆட்டிஸக் குறைபாடுள்ள கிறிஸ் ஆக பென் அஃப்லெக் அற்புதமாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் இறுக்கமான முகத்துடன் சுருக்கமான வார்த்தைகளில் அந்தப் பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார். சற்று குழப்பமான திரைக்கதையாக இருந்தாலும்  சுவாரசியமான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் Gavin O'Connor.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan