Monday, November 29, 2010

கிகுஜிரோ - நகைச்சுவையின் துயரம்

மிஷ்கினின் 'நந்தலாலா' உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது ஜப்பானிய திரைப்படமான 'கிகுஜிரோவின்' தழுவல் என்பதான பேச்சு எழுந்தது. ஆனால் அதை மிஷ்கின் அப்போது ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நந்தலாலா வந்தபின் இதை பார்த்துவிட்டு உறுதி செய்வோம் எனக் காத்திருந்தேன். 'வரும்.. ஆனா வராது.. என்கிற நிலையில் வணிகச் சிக்கல்களினால் படம் திணறி, வரவே வராதோ என்ற ஏமாற்றத்தை அடையும் நேரத்தில் ஒருவழியாக படம் வெளிவந்து விட்டது. எனவே இதை பார்ப்பதற்கு தயாரான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக, (ஒரு வார்ம்-அப்பிற்காக) முன்னர் பார்த்திருந்த 'கிகுஜிரோவை' மறுபடியும் நேற்று பார்த்தேன். அதற்கு முன்பாக என் மகளிடம் இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது அவள் சில காட்சிகளை மிகத் துல்லியமாக நினைவு கூர்ந்தது (அந்த அங்கிள் பையனை ஊருக்கு கூட்டிட்டுப் போவாம ரேஸூக்கு போவாங்களே) எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு அவளையும் அமர வைத்து இதை பார்த்திருந்தேன்.

நந்தலாலாவிற்காக பார்க்க நேர்ந்த 'கிகுஜிரோவை'ப் பற்றி எழுத வேண்டிய உந்துதலை அந்தப்படமே தந்நது. மேலும் நந்தலாவைப் பார்த்து கிகுஜிரோவை இதுவரை பார்க்காதிருப்பவர்களுக்கு ஓர் ஒப்பிட்டளவில் இந்தப் பதிவு உதவலாம்


   
மாசோ என்கிற பள்ளிச் சிறுவன் தன்னுடைய கடந்த கோடை விடுமுறையில் கழிந்த நெகிழ்ச்சிகரமான தருணங்களை புகைப்பட ஆல்பத்தின் மூலம் நினைவு கூர்வது போல் அத்தியாயம் அத்தியாயமாக விரிகிறது இத் திரைப்படம்.

இது வரை தன்னுடைய பெற்றோரையே கண்டிராமல் பாட்டியின் நிழலில் வளரும் இச்சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாயைக் காணும் உந்துதலுடன் பக்கத்து வீட்டு 'வீண் ஜம்ப' மாமாவுடன் நெடுந்தொலைவு பயணமாவதும் அந்தப் பயணத்தில் நிகழும் அனுபவங்களுமே இத்திரைப்படத்தின் காட்சிகளாக நீ்ள்கின்றன. 

இதில் சிறுவனுக்கு துணையாகச் செல்லும் மனிதரின் பெயர்தான் 'கிகுஜிரோ'. (இயக்குநர் டகேஷி கிடானோவே இந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்). படம் பூராவும் அந்தச் சிறுவன் இவரை 'மிஸ்டர்' என்றே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில்தான் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தில்  'உங்க பேர் என்ன?' என்கிறான்.

கிகுஜிரோ என்கிற அந்த மனிதரின் பாத்திரம் மிகக் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் தன் இயல்பின் குணாதியங்களை அது மீறுவதேயில்லை. இவ்வகையான மனிதர்களை நாமும் கூட கண்டிருப்போம். பெரியவர்களானாலும்  தம்முடைய குழந்தை மனோநிலையிலேயே பெரும்பர்லும் தேங்கி விட்டிருப்பவர்கள்.லெளதீக வாழ்வின் பொறுப்புகள் எதையும் ஏற்காதவர்கள். சுவாரசியமான பொய்களை உருவாக்குபவர்கள். அந்தந்த நேர மனநிலைகளில் வாழ்பவர்கள். அவசரத் தேவை பணத்தை அற்பமாக செலவு செய்து விட்டு வந்து நிற்பவர்கள். வெட்டி பந்தா செய்பவர்கள். இவர்கள் மீது சமயங்களில் கோபம் வந்தாலும் சிரிப்பும் வரும்.

ச.தமிழ்ச்செல்வனின் 'கருப்பசாமியின் அய்யா' என்கிற சிறுகதையை வாசித்துப் பாருங்கள். இந்த மனிதர்களின் சரியான பிரதிநிதி அந்த பாத்திரம்.

உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃபிராய்ட், மனதின் செயற்பாடுகளை, இட், ஈகோ, சூப்பர் ஈகோ என்று மூன்று விதங்களாக பிரிக்கிறார். இதில் இட் என்பது குழந்தையின் மனோநிலையைக் கொண்டது. ஒரு பொருள் வேண்டும் என்றால் அது அந்தக் கணமே கிடைக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முன்வைப்பது. பகுத்தறிவு நிலைகளான ஈகோவும் சூப்பர் ஈகோவும் அது தற்சமயம் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதுதானா, கிடைத்தால் என்ன நிகழும், கிடைக்காவிட்டால் என்ன ஆகும் என்கிற பல்வேறு சூழ்நிலைகளையும சாத்தியங்களையும் ஆராய்ந்து 'இட்'டை கட்டுப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட கிகுஜிரோ 'இட்' மனநிலையிலேயே வாழ்கிறார். பக்கத்து வீட்டுப் பையனை அவன் தாயைக் காண ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மனைவி தரும் பணத்தை வாங்கிக் கொண்டு நேரடியாக சைக்கிள் ரேஸ் சூதாட்ட அரங்கிற்கு நடக்கிறார். அங்கு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சிறுவனிடம் அதிர்ஷ்ட எண்களைப் பற்றி ஆலோசனை கேட்டு அவனைப் படுத்தியெடுக்கிறார்.

பணமில்லாமல் நெடுந்தொலைவு செல்லவிருக்கும் சூழலில் வாகன லிஃப்ட் கேட்க நாம் எத்தனை பவ்யமாய் நடந்து கொள்வோம்.

இவரோ, "டேய் பன்னி மண்டையா. அந்த ஊர்ல எங்களை இறக்கி விடு' என்கிறார் மொட்டை அதிகாரமாய். அவனுடன் சண்டை போட்டு வேறு காரில் லிஃப்ட் கேட்டு கிளம்பும் போது அவன் வண்டியின் கண்ணாடியை உடைத்து விட்டு குறும்புச் சிறுவன் போல் ஓடி வருகிறார். சொற்ப பணத்தில் விலையுயர்ந்த ஹோட்டலில் தங்குகிறார். அங்கு நீச்சல் குளத்தில் இவர் செய்யும் அழும்புகள் சுவாரசியமானவை.  இன்னொரு இடத்தில் லிஃப்ட் கேட்பதற்காக குருடன் போல் இவர் செய்யும் பாவனைகள் விழுந்து விழுந்து சிரி்க்க வைப்பவை.

ஏற்கெனவே சொன்னது போல படத்தின் பெரும்பான்மையில் இந்த மனோநிலையிலிருந்து அவர் எங்கும் வெளியே வருவதேயில்லை. மனம் பிறழ்ந்தவராக இருந்தாலும் திறமையாக கார் ஓட்டும் விசித்திரம் கொண்ட தமிழ் சினிமாவில், இவர் ஒரு காரை கிளப்பிக் கொண்டு போய் ஓட்டத் தெரியாமல் புல்வெளியில் இறக்குகிறார். இன்னொரு இடத்தில் ஏதாவதொரு வாகனத்தை பஞ்சராக்கி பின்பு அவர்களுக்கு உதவி செய்து பின்பு காரில் தொற்றிக் கொள்ளும் அதிபயங்கர திட்டத்தோடு செயல்பட, ஒரு காரின் டயர் வெடித்து... அது அபாயகரமாக பாலத்தில் மேலிருந்து சரிந்து விழ, இரண்டு பேரும் ஓட்டம் எடுக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு முக்கியமான நகைச்சுவைக் காட்சி என நான் கருதுவது:

சிறுவனை வெளியில் அமர வைத்து விட்டு ஹோட்டலில் கோழிக்கறியை அசுவாரசியமாக மெல்லுகிறார் கிகுஜிரோ.

"என்னய்யா இது கறி இது. மெத்துன்னே இல்லே. நாய்..இல்லாட்டி.. பூனையைப் போட்டுட்டியா என்ன?"

"யோவ். இத விட அது விலை அதிகம்யா"

"நல்லா வெவரமாத்தான்யா இருக்கீங்க"


வெளியே வந்து சிறுவனைக் காணாமல் தேடுகிறவர், யாரோ அவனை பூங்கா பக்கம் அழைத்துச் செல்வதை விசாரித்து தெரிந்து கொள்கிறார். ஒரு pedophile கிழவன், சிறுவனை பாலியல் நோக்கததோடு வம்பு செய்துக் கொண்டிருப்பதை காண்கிறார். அங்கிருந்து சிறுவனை மீட்டுத் திரும்புவது அடுத்த ஷாட்டில் காண்பிக்கப்படுகிறது. அதற்கும் அடுத்த ஷாட்டில் கிழவன் முகத்தில் ரத்தத்துடன் விழுந்து கிடப்பது காண்பிக்கப்படுகிறது.

ஆச்சா..

மீண்டும் கிகுஜிரோ சிறுவனுடன் வரும் ஷாட். அவனை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் அந்தக் கிழவனிடமே செல்கிறார். தன்னுடைய பேண்ட்டை இறக்கி விட்டு ஜட்டியுடன் அவன் முன் நின்று ' தைரியம் இருந்தா என் கிட்ட செய்டா பார்க்கலாம்' என்று அவனை மேலும் பழிவாங்க முயல்கிறார்.

அப்புறம் நிகழ்வதுதான் பயங்கர காமெடி. அந்தக் கிழவன் அடிபட்டிருந்தாலும், மீதமிருக்கும் சபலத்துடன் கிகுஜிரோவின் ஜட்டியை ஆசையுடன் கழற்ற முயல... இவர் 'அய்யா சாமி விட்டால் போதும்' என ஓடி வருகிறார்.

படம் முழுவதும் இவ்வாறான மெலிதான நகைச்சுவை வழிந்து கொண்டேயிருந்தாலும் சிறுவன் தாயைக் காண தாமதப்படும் கணங்களின் துயரம் கூட நமக்கு உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

பல்வேறு சேட்டைகளுக்குப் பிறகு ஒருவழியாக சிறுவனின் தாய் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடும் போது, அவர் அங்கு இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை மெலிதான அதிர்ச்சியுடன் பார்க்கிறார் கிகுஜிரோ. இருந்தாலும் இதை சிறுவனிடமிருந்து மறைக்க விரும்பி 'அவங்க இங்கருந்து வேற இடத்துக்கு போயிட்டாங்களாம்' என்கிறார். தன் தாயை வேற்றுக் குடும்பத்துடன் பார்த்துவிடும் சிறுவன் சூழலைப் புரிந்து கொண்டு மெளனமாக அழுகிறான்.

ஒரு சாதாரண இயக்குநராக இருந்தால் படத்தை இந்தச் சோகத்தோடு முடித்து விட்டு பார்வையாளர்களை அதே மனநிலையில் விட்டுவிடுவார். டகேஷி கிடானோ இங்குதான் வேறுபடுகிறார். சிறுவனின் மனநிலையை உற்சாகமாக மாற்ற முயலும் நோக்கத்தோடு பின்வரும் காட்சிகள் நீள்கின்றன. பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யும் ஓர் இளைஞனும் இரண்டு பைக் இளைஞர்களும் வழித்துணை நண்பர்களாக கிடைக்க, அவர்கள் தமக்குத் தெரிந்த விளையாட்டுக்களின் மூலம் சிறுவனை மகிழச்சியடைய வைக்கின்றனர்.

எத்தனை துயரமான அனுபவங்கள் நேர்ந்தாலும், அதிலிருந்து நம்மை மீட்டெடுத்துக் கொள்ள இதே உலகில் வேறு விஷயங்களும் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சிக் கோர்வை.


புதுமைப்பித்தனின் தவளைப் பாய்ச்சல் நடையைப் போல கச்சிதமான ஷாட்கள் இந்தப் படத்தை அதிசுவாரசியமாக்குகின்றன. படத்தின் துவக்கத்தில் விளையாட்டுத் துணை நண்பர்களில்லாத அந்தச் சிறுவனின் தனிமையும் பெற்றோருக்கான ஏக்கமும் குறைவான காட்சிகளில் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. (அத்தனை பெரிய கால்பந்து மைதானத்தில் சிறுவன் மாத்திரம் தனித்து நிற்பது ஒரு ஏரியல் ஷாட்டில் காட்டப்படுகிறது.)

ஒரு குடும்பம் இருளில் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஷாட்.விடிகாலை வெளிச்சத்தில் வெடித்துப் போடப்பட்டிருக்கும் கருகின பட்டாசுகளின்  இன்னொரு ஷாட். இதற்குப் பிறகு தன்னுடைய பெற்றோரைப் பற்றி பாட்டியிடம் விசாரிக்கிறான் சிறுவன். மனிதர்கள் நகர்ந்த பின்பும் அந்த வெற்று நிலவெளியை காமிரா வெறித்துப் பார்ப்பது, லாங் ஷாட்கள், இயற்கையின் அதிகுளோசப் ஷாட்கள் என்று மிகச் சிறந்த ஒளிப்பதிவு இந்தப்படத்தை உன்னத அனுபவத்திற்கு இட்டு்ச செல்கிறது. மென்மையான பியானோ இசை பின்னணியாக தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குநர் டகேஷி கிடானோ வழக்கமாக தன் படங்களில் உபயோகப்படுத்தும் சில பிரத்யேக குறியீடுகள் (கனவுக்காட்சி, ஏஞ்சல் பெல்) போன்றவை இதிலும் உண்டு.

சிறுவனின் மற்ற பள்ளி நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் மகி்ழ்ச்சியாக இருந்திருந்தாலும், இச்சிறுவனைப் போல வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பது மாத்திரம் நிச்சயம். அவர்களின் பயணம் நிறைவடைந்தாலும் கிகுஜிரோ மாத்திரம் பார்வையாளர்களின் மனங்களில் மேலும் சில நாட்கள் பயணிப்பார் என்பதும் நிச்சயம்.

கேனஸ் திரைப்பட விழாவில் (1999) போட்டிக்காக நாமினேஷில் நுழைந்த  இத்திரைப்படம், ஜப்பானின் தனிமைப்படுத்தப்பட்ட கலாச்சாரத்தைப் பற்றி உரையாடுகிறது. சிறுவனுக்கு துணையாக, கிளம்பிய கிகுஜிரோ, வழியில் மனநல காப்பகத்தில் இருக்கும் தன் தாயைச் சந்திக்க விரும்பிச் சென்று பின்பு நெருங்கி உரையாடாமலேயே திரும்பி வந்து விடுகிறார். சிறுவனைப் போலவே இவரும் தாயின் அருகாமையை இழந்தவர் என்பது நமக்குத் தெரியவருகிறது. இதற்குப் பின்னதான காட்சிகளில் இவருடைய வழக்கமான விளையாட்டுப் பிள்ளை முகபாவங்கள் மட்டுப்பட்டு ஏதோ யோசனையிலிருக்கும் தீவிர முகபாவங்களின் நுட்பமான வித்தியாசம் ஆச்சரியமளிக்க்கூடியது.

இனி மிஷ்கின், கிகுஜிரோ திரைப்படத்தை தன் பாணியில் எவ்வாறு உருமாற்றம் செய்திருக்கிறார் என்பதை அடுத்து காண வேண்டும்.

suresh kannan

19 comments:

Aranga said...

பாதிக்கு மேல் இதிலிருந்து எடுத்து கொஞ்சம் உள்ளூர் கலர் அடித்திருக்கிறார் மிஷ்கின் , ஒரிஜினலை விட நன்றாகவே செய்திருந்தாலும் ... என்னவோ போங்க .

சென்ஷி said...

நல்ல பதிவு.. :))

ISR Selvakumar said...

நகைச்சுவையின் துயரம்... அருமையான உணர்வுப் பெயர்ப்பு!

sepiyan said...

nanthalaala superb

குரங்குபெடல் said...

நேர்த்தியான ஒரு பதிவு . . .நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான பதிவு. படம் பார்த்த ஒரு நிறைவு. வாழ்த்துக்கள்.

AlterEYE said...

There is some lifting from 'Central Station' also.

God only knows how many more films are involved...

Plagiarism is defined in dictionaries as "the wrongful appropriation, close imitation, or purloining and publication, of another author's language, thoughts, ideas, or expressions, and the representation of them as one's own original work.

Plagiarism is a form of cheating.

Cheating is celebrated in our country.

Nothing more to say...

மீ.ராமச்சந்திரன் said...

\\சிறுவனைப் போலவே இவரும் தாயின் அருகாமையை இழந்தவர் என்பது நமக்குத் தெரியவருகிறது\\-

ஆம்-சிறுவயதில் தாயின் அருகாமையை இழப்பது மிகவும் கஷ்டமான விஷயம் அதை எந்த வயதிலும் மறக்க முடியா

Unknown said...

//நகைச்சுவையின் துயரம்
நல்லா இருக்கு! :-)
நந்தலாலாவுக்கு பிறகு இப்போ பரவலாக கிகுஜிரோ பதிவுகள்!
மிஷ்கின் copy அடிச்சிட்டார் என்று சொல்றிங்களா?

thamizhparavai said...

நல்ல பகிர்வு சு.க...மறுபடியும் படம் பார்க்கத் தூண்டுகிறது.

rajasundararajan said...

அந்த ஜப்பானியப் படத்தைப் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த நிறைவு உங்கள் எழுத்திலிருந்து கிட்டியது. நன்றி.

கட்டளைகளை மீறாதவர் யாராவது இருந்தால் கல்லெறியுங்கள் என்று சொல்லிவிட்டு, இயேசு தெருப்புழுதியில் என்னவோ எழுதுவார் (இவ்வளவுக்கும் அவர் எழுத்தறியாதவர்).

"மிஷ்கின் திருடிவிட்டார்" என்னும் கூப்பாடு அவர் உதவி இயக்குநர்களை இழித்துப் பேசியதால் உரக்கிறதாகலாம். ஆனால், திருடுதல் இன்றித் தமிழ்ப்படம் இல்லை என்னும் உண்மை நிரந்தர உலகத்தில் இதற்கு அர்த்தம் உண்டா?

கையாடலுக்கும் கையாளுதலுக்கும் வேறுபாடு உண்டென்று பதிவர் மணிஜீ தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

உணமை/பொய் என்றில்லை; பயனுடையார் உலகம் நன்மை/தீமை என்றே இருக்கிறது.

CS. Mohan Kumar said...

அருமை. Waiting to read the second part of this article.

எண்ணங்கள் 13189034291840215795 said...

விமர்சையான விமர்சனம்..

ஜெ. ராம்கி said...

//டிபட்டிருந்தாலும், மீதமிருக்கும் சபலத்துடன் கிகுஜிரோவின் ஜட்டியை ஆசையுடன் கழற்ற முயல... இவர் 'அய்யா சாமி விட்டால் போதும்' என ஓடி வருகிறார்.

படம் முழுவதும் இவ்வாறான மெலிதான நகைச்சுவை
//

கொடுமை!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதிவு. படம் பார்த்த ஒரு நிறைவு.

Anonymous said...

ஓ தமிழர்களே !'kikujiro'- வை எப்படியாவது பார்த்து விடுங்கள். அதொரு வாழ்வானுபவம். அதற்காக தான் என் பெயர் கேட்டுபோனாலும் பரவாயில்லைன்னு தமிழில் பிரதி எடுத்தேன். [ மிஷ்கின் 'நந்தலாலா' மூலம் சொல்ல வந்தது இதுதான் என்று நினைக்கிறேன்]

sivan.

Anonymous said...

ஓய் சுனா கனா,
நந்தலாலா பதிவப் போடும் ஓய். எவ்வளவு நேரம் காத்திருக்கிறது..

சுரேஷ் said...

எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்புடையதெனின் எமதாக்கிக் கொள்வோம் என்ற எண்ணம் தேவை. எத்தனை பேர் கிகுஜிரோவைப் பார்க்க முடியும். நம் மொழியில் நமக்கு ஏற்ப மிஷ்கின் உருவாக்கித்தந்திருக்கும் நந்தலாலாவை வரவேறப்போம்.

Anonymous said...

mr suresh...i liked kikujiro..but nandhalala is equivalently brilliant.here inspiration is not wrong..the only trouble is mysskin did not credit kikujiro.if only he had done that..i dont know.if you take the back ground score..please understand that it is inappropriate since western classical string ensemble and sonata type of music involved is used but for us it gives such an emotional experience.according to most the people here the bgm should have the nativity of japan which is not done by joe hishashi.this is what raja does in nandhalala.one of kikujiro soundtrack's named rain is used as background score in the movie anjathe in the final scene.kindly keep this in mind before telling illayaraja's bgm for nandhalala.