எழுத்தாளர் மாலனின் நாவல் ஒன்று உண்டு. நந்தலாலா. தாயின் பாசமே பெரிதும் பிரதானமாக இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு தந்தையின் பாசத்தை,மகனை இழக்க முடியாமல் தன் தந்தைமையை நிறுவ முயலும் ஒரு மனிதனின் உணர்வுப் போராட்டங்களைப் பற்றின நாவல். பாரதி மீதான அபிமானத்தால் மாலன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாம். மிஷ்கினும் இந்தக் காரணத்தையே முன்வைக்கிறார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே (அச்சம் தவிர்), நந்தலாலா, யுத்தம் செய் என்று அவரின் படத்தலைப்புகள் அனைத்தும் பாரதியின் படைப்புகளோடு தொடர்புடையவை.
தமிழ்ச் சினிமாவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் போக்கை தற்காலிகமாவது புரட்டிப் போடுமளவிற்கு சில டிரெண்ட் செட்டர்கள் உருவார்கள். மிஷ்கின் தனது நந்தலாவின் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் இதுவொரு மைல்கல்லான படம்தான். ஆனால் அதை முழுமையான பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்ல முடியாதபடி நெருடலொன்று இடறுகிறது. சரி. அதைப் பின்பகுதியில் பார்ப்போம்.
உலக சினிமாக்களில் திரைமொழியின் சில நுட்பமான குறியீடுகள் தேர்ந்த இயக்குநர்களால் முன்வைக்கப்படும். காட்சியின் போக்கை பார்வையாளர்கள் பூடகமாக உணர்ந்து கொள்ளும் குறியீட்டுக் காட்சிகள் அவை. முதன் முறையாக ஒரு தமிழ் சினிமாவில் அது அர்த்தபூர்வமாக உபயோகப்படுத்தப் படுவதைக் கண்டேன். படத்தின் இறுதிப் பகுதியில் சிறுவன், தன்னுடைய பயணத் தோழனின் (மாமாவின்) காலணிகளை சரியாக அணியுமாறு மாற்றி வைப்பான். அதுவரை அது வலது இடமாக மாற்றியே அணியப்பட்டிருக்கும். பாஸ்கர் மணி என்கிற மனிதனை அகி என்கிற சிறுவன் தன்னுடைய முழுமையான நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதற்கும் 'போடா மெண்ட்டல்' என்று அவரைத் திட்டிய தன்னுடைய தவற்றுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவும் இதுவரை நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள், இனி சரியாக நடக்கும் .. என்று இத்தனை விதங்களாக அதைப் புரிந்து கொள்ளலாம்.
நந்தலாவில் இது போன்று பல குறியீட்டுக் காட்சிகள் உண்டு. அன்னவாசல், தாய்வாசல் என்கிற கருவறையைக் குறிக்கும் பெயர்கள், மிஷ்கின் சுவற்றுடன் விரலால் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டே செல்வது, சாலையைக் கடந்துச் செல்லும் மரவட்டை, மலைப்பாம்பு, பாலியல் தொழிலாளி மிஷ்கினின் கால்சட்டையை மழையில் இறுக்கிக் கட்டுவது, வெள்ளை நிறத்தை தாங்கி நிற்கும் வீடுகள், தாயின் வீட்டை சுட்டிக் காட்டும் போது பயன்படுத்தப்படும் நிழல், தமக்கு உதவும் சிறுமியிடமும், தன்னுடைய தோழனான சிறுவனுக்கும் மிஷ்கின் கையளிக்கும் கூழாங்கற்கள்.
இவற்றை அகவுணர்வு சார்ந்து அவரவர்களின் அனுபவங்களுக்கேற்ப புரிந்து கொள்ளலாம். அவை ஒன்றாகவோ அல்லது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமோ கிடையாது.
தன்னை மனநல காப்பகத்தில் நிராதரவாக விட்டு விட்ட தாயைச் சந்திக்க கோபத்துடன் கிளம்பும் ஓர் இளைஞனும் தான் இதுவரை பார்த்தேயறியாத தாயைச் சந்திக்க அன்புடன் கிளம்பும் ஒரு சிறுவனும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்கிறார்கள். அவர்களின் பயண அனுபவங்களையும் அதன் முடிவையும் பற்றி விவரிக்கிறது நந்தலாலா. இறுதியில் கோப இளைஞன் தாயைக் கண்டு கண்ணீர் உகுப்பதும், தான் தருவதற்கென்று முத்தங்களைச் சேமித்து வைத்திருந்த சிறுவன் ஏமாற்றமடைவதும் என எதிரெதிர் நிலையை அடைகிறார்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியைச் சொல்வேன். ஏமாற்றத்தைத் தருமளவிற்கு மிகச் சாதாரணமாக துவங்கும் காட்சிகள், நகரத்தைத் தாண்டியவுடன் இயற்கை சூழலில் மிகுந்த அழகியல் உணர்வுடன் பிரமிப்பேற்படுத்துகிறது. நடிகர்களை பிரதானமாக பதிவு செய்யாமல் அவர்களை பரந்த நிலவெளியோடு பதிவு செய்திருக்கும் வைட் ஆங்கிள் ஷாட்களும் லாங் ஷாட்களும் இதுவரை பார்த்தறியா தமிழ் சினிமா அனுபவத்தைத் தருகின்றன.
இத்திரைப்படத்தின் மிகப் பெரிய குறைபாடு இதன் ஒலிப்பதிவு. படம் பெரும்பான்மையும் திறந்த வெளியில் இயங்கும் போது அதற்கு முரணாக பாத்திரங்களின் வசனங்கள் - குறிப்பான சிறுவனின் குரல் - டப்பிங்கில் பதிவான டிஜிட்டல் துல்லியத்துடன் ஒலிக்கின்றன. ஒழுங்கின்மையோடு அலையும் காட்சிகளின் பின்னணியில் இந்த ஒழுங்குத் தன்மை துருத்திக் கொண்டு முரணாக நிற்கிறது. மாறாக 'லைவ் சவுண்ட்' நுட்பம் பயன்படுததப்பட்டிருந்தால் காட்சிப் பின்னணிகளின் பொருத்தமான ஒலிகளை கேட்டிருக்க முடியும்.
பிரதான பாத்திரத்திற்கு விக்ரம் உட்பட பல 'ஹீரோக்களின' பெயர் உத்தேசிக்கப்பட்டதாக அறிந்தேன். அபத்தம். மிக மோசமான படைப்பாக ஆகி விட்டிருக்கும். ஒரு திறமையான புதுமுகம் பயன்படுத்தப்பட்டிருந்தால்தான் அந்த வலிமையான பாத்திரத்தோடு பார்வையாளன் பிம்ப தொந்தரவுகளின்றி இயைய முடியும். மிஷ்கினே தம்மை இதைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல முடிவு. கூடுமானவரை அதற்கான நியாயத்தைத் தந்திருக்கிறார். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றாலே அவன் மூர்க்கமானவனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கிளிஷேக்களை கைவிட்டிருக்கலாம். மேலும் இம்மாதிரியான பாத்திரங்களின் மூலம் இயல்பாகவே பார்வையாளனிடமிருந்து அனுதாபத்தையும் கட்டற்ற உடல் மொழியினால் பெற முடியும் ; அதிர்ச்சியையும் தர முடியும். ஏனெனில் யதார்த்த வாழ்க்கையில் பொது சமூகம் இம்மாதிரியான மனிதர்களை கண நேரத்திற்கு மேலாக பார்க்க விரும்புவதில்லை. சில இடங்களில் அவரின் உடல்மொழி கவனத்தைக் கோரும் நோக்கத்துடன் அதீதமாக அமைந்திருக்கிறது. பிதாமகன் மற்றும் சேது படங்களில் நடித்த விக்ரமின் உடல்மொழியையும் சமயங்களில் நினைவுப்படுத்துகிறது. உடன் பயணிக்கும் சிறுவன் அவன் வயதுக்கேற்ற இயல்போடு அமைதியாக நடித்திருக்கிறான்.
லாரி டிரைவர், இளநீர் வியாபாரி. ஐஸ்கீரிம் விற்பவர், மாற்றுத் திறனாளி, என்று அன்றாட வாழ்வின் பல இயல்பான முகங்கள் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டு முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்
பாடல்களே தேவைப்பட்டிருக்காத இந்தப் படத்திற்கு ஆறு பாடல்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சில உபயோகப்படுத்திருக்கின்றன. மாறாக சரோஜா அம்மாள் பாடின அந்த ஜிப்சி பாட்டை மாத்திரம் உபயோகப்படுத்தியிருந்தாலாவது தமிழ் சினிமா பார்வையாளனுக்கு வித்தியாசமான அனுபவம் கிட்டியிருக்கும். இளையராஜா பின்னணி இசையை ஒரு பாத்திரமாக உபயோகிக்கும் உன்னதங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம். இதிலும் அந்த மாதிரியான தருணங்கள் பலவுண்டு. குறிப்பாக காவல் அதிகாரியிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் இளைஞனும் சிறுவனும் மலம் கழிக்கும் சாக்கில் ஓடுவதும் கான்ஸ்டபிள் அவர்களை புல்வெளியில் பின்செல்வதுமான காட்சியில் பின்னணியிசை உயர்ந்த தரத்துடன் அமைந்திருந்தது.
அடிபட்ட பள்ளி மாணவியின் காயத்தைப் பார்க்க இளைஞன் பாவாடையை விலக்கிப் பார்க்க இயல்பான தன்னுணர்வில் அவள் இளைஞனை அறைகிறாள். தொடர்ந்து அறைகளை வாங்கிக் கொண்டே காயத்தைப் பார்க்கும் இளைஞன் 'வலிக்குதாம்மா?' என்கிறான். அங்கே புறப்படும் ஒரு நரம்பு வாத்தியத்தின் இசை நிச்சயம் என் ஆன்மாவை தொட்டிருக்கக்கூடும். இயல்பாக மனம் கலங்கியது. என்னுடைய மனிதம் உயிர்த்தெழுந்த கணங்களில் ஒன்றாக அதைச் சொல்வேன்.
ஆனால் ராஜா மெளனத்தை இன்னும் மேலதிகமாக பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சில காட்சிகளில் தேவையேயின்றி ஓர் ஆழமான ஃபேஸ் வயலின் தொடர்ந்த உரக்க அலறுகின்றது.
பின்னணி இசையை ஒரு தொகுப்பாக இங்கே கேட்க முடியும். சம்பந்தப்பட்டவருக்கு நன்றியுடன் இங்கு அதைப் பகிர்கிறேன்.
()
முன்னரே குறிப்பிட்டது போல இத்திரைப்படத்தின் பல காட்சிகளை மிகு நுண்ணுணர்வுடன் இயக்குநர் அமைத்திருக்கிறார். இளைஞனும் சிறுவனும் இருளான ஒரு பகுதியைக் கடக்க வேண்டியிருக்கிறது. தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யேசு சிலையின் கீழிருக்கும் விளக்குகளை இளைஞன் கையில் எடுத்துக் கொள்கிறான். இருளில் இரண்டு விளக்குகளின் ஒளிப்பொட்டுகள் மாத்திரம் தெரிய கடவுளின் சிலை இருளில் மூழ்குகிறது. ஜென் கதை அனுபவங்களுக்கு நிகரான காட்சி இது
எவ்விதப் பயனுமின்றி தான் நொண்டியாக இருப்பதற்கான தாழ்வுணர்வில் மிகுந்த மனவேதனையில் உழலும் ஒர் இளைஞனுக்கு சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் காலைத் தாங்கி நடந்து செல்லும் காட்சி அவுட் போகஸில் காட்டப்படுகிறது. என்னை மிகவும் நெகிழ வைத்த காட்சியிது.
வழக்க்மான வணிகத் திரைப்படங்களின் மசாலா கச்சடாக்களைத் தவிர்த்து படம் எடுக்க முன்வந்த மிஷ்கினை எத்தனை பாராட்டினாலும் தகும். 'வித்தியாசமான படங்கள்' என்று அறியப்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் வணிகநோக்குச் சினிமாக்களின் தடங்களும் இணைப்புகளும் உண்டு. (பிதாமகனில் சிம்ரனின் நடனத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்). இதில் பாடல்களைத் தவிர்த்து அவ்வாறான எவ்வித அசிங்கங்களுமில்லை. இப்போதைய இளம் இயக்குநர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
நந்தலாலா உணமையாகவே தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான மைல்கல்தான். ஆனால் அது தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மட்டும் என்று திருத்திச் சொல்ல விரும்புகிறென். முழுமையாக இதைக் கொண்டாட முடியாதபடியான தடைக்கல்லை மிஷ்கினே ஏற்படுத்தி வைத்திருப்பது துரதிர்ஷ்டம்.
துவக்கத்திலேயே இது, டகேஷி கிடானோவின் 'கிகுஜிரோவின்' நகல் என்ற பேச்சு எழுந்தது. மிஷ்கின் இதை அப்போது இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தின் புகைப்படங்கள் கிகுஜிரோவின் புகைப்படங்களோடு பெரும்பான்மையாக ஒத்துப் போகும் போது கூட இந்தப் பொய்யை அவர் சாதித்துக் கொண்டிருந்தார். பல சிக்கல்களுக்குப் பிறகு படம் வெளிவந்த சூழலில் இந்தப் பேச்சு பலமாக எழுந்த பிறகு வேறுவழியின்றி, ஏதோ தாமே முன்வந்து சொல்வது போல 'கிடானோ'விற்கான என் மரியாதை என மழுப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.
படத்தின் கதையிலிருந்து காடசிக் கோர்வைகளிலிருந்து கோணங்களிலிருந்து பெரும்பாலும் இது மூலத்திலிருந்து அப்படியே நகல் செய்யப்பட்டிருக்கிறது. கிகுஜிரோவைப் பார்த்தவர்கள் எவரும் இந்த எளிய உண்மையை தெளிவாக உணர முடியும்.
மிக மென்மையான நகைச்சுவையுடன் ஆர்ப்பாட்டமில்லாமாத இயல்புடன் உருவாக்கப்பட்டிருந்த மூலப்படத்தை, தமிழக மனங்களுக்கு தேவைப்படும் தாய் சென்டிமெண்ட், மனநல பாதிப்பு பாத்திரம், ராஜாவின் இசை போன்ற உறைப்பான சமாச்சாரங்களை உள்ளுர் கலவைகளுடன் இணைத்து தந்திருப்பது மாத்திரமே மிஷ்கினின் பணி. 'கிகுஜிரோவில் இல்லாத பல உன்னதமான தருணங்கள் நந்தலாவில் இருக்கிறதுதான். மறுக்கவில்லை. அதற்கான மிஷ்கினின் உழைப்பு அங்கீகரிக்கப்படவேண்டியதுதான். அதையும் மறுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மையான சமாச்சாரங்கள் வேறு படத்திலிருந்து கையாளப்பட்டிருக்கும் காரணத்தினால் இந்த உழைப்பு பின்தள்ளப்படுவது துரதிர்ஷ்டமே. பொதுமக்களுக்குச் சேர வேண்டிய கோடிக் கணக்கான ரூபாயை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் ஒர் அரசியல்வாதி, 'என் சொந்தப் பணத்திலிருந்து சில சமூக நன்கொடைகளை செய்திருக்கிறேன்' என்று தன் தவறை மழுப்ப முனைந்தால் அந்த தருக்க நியாயததை நாம் ஒப்புக் கொள்வோமா?
குறைந்த பட்ச நேர்மையாக டைட்டில் கார்டிலாவது இதை மிஷ்கின் ஒப்புக் கொண்டிருககலாம். கிடானா மீது அவர் உண்மையாக மரியாதை வைத்திருப்பதின் அடையாளமாகவாவது அது ஆகியிருக்கும். பூ சசி, பேராண்மை ஜனநாதன், பச்சைக்கிளி முத்துச்சரம் கெளதம்மேனன் என்று இதற்கு முன் உதாரணங்கள் உண்டு. ஆனால் தமக்கு விருது கிடைப்பதற்கு இந்தக் குறிப்பு தடையாக அமையலாம் என்ற நோக்கத்திலோ, வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் இதற்கு பணம் தரவேண்டியிருக்குமோ, நமக்கு கிடைக்க வேண்டிய பாராட்டை பங்கு போட நேருமோ.. என்ற காரணத்தினாலோ எப்படி செய்திருந்தாலும் இதுவோர் அறிவுசார் சொத்து திருட்டே. இதில் 'கிடானாவோடு' இத்திரைப்படத்தை அமர்ந்து காண விரும்புகிறேன் என்று பேட்டியளிக்க எத்தனை நெஞ்சுரம் வேண்டும்? உதவி இயக்குநர்களை குறைசொல்லும் மிஷ்கின் தாம் அதற்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டாமா? சேரன் போன்ற இயக்குநர்களும் இந்த திருட்டிற்கு உடன்படுவது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. (நாளைக்கு நீ எனக்கு சொறிஞ்சு விடு, என்ன?) 'நான் உலக சினிமாக்களை பார்ப்பதில்லை ; எந்த நூலையும் வாசிப்பதில்லை' என்று இதனால்தான் முன்னெச்சரிக்கையாக சில இயக்குநர்கள் பொதுவில் சொல்கிறார்கள் போலிருக்கிறது.
குப்பையான தமிழ்ச் சினிமாவில் ஒரு நல்ல படம் வருவதை ஏன் முழு மனதுடன் பாராட்ட மாட்டேன்கிறீர்கள், இயக்குநர் இதை வெளிக்கொணர எத்தனை நிதிச் சிக்கல்களை சமாளித்திருக்கிறார் போன்ற காரணங்கள் எல்லாம் இந்தத் தவற்றை மழுப்பி விட முடியாது. இவை தற்காலிக சூழ்நிலைகளே. பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் ரேவின் பதேர் பாஞ்சாலியையும் சாருலதாவையும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஏன்? அவையெல்லாம் இலக்கியப் படைப்புகளிலிருந்து முறையாக அனுமதிப் பெற்று உருவாகப்பட்டவை. மேலும் மூலப் படைப்பை ஒரு வரைபடமாக வைத்துக் கொண்டு தன்னுடைய நுண்ணுணர்வுகளாலும் கற்பனைத் திறமையாலும் சமயங்களில் மூலத்தையே தாண்டிச் சென்று காவியமாக்கிய உதாரணங்கள். இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று அவற்றைத்தான் சொல்ல முடியம். புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவல்தான் 'உதிரிப்பூக்களுக்கு' இன்ஸ்பிரெஷனாக இருந்தது மகேந்திரனே முன்வந்து சொன்னபிறகுதான் நமக்குத் தெரியவந்தது. அவர் சொல்லியிராவிட்டால் நமக்குத் தெரியாமல் போயிருக்கும் அளவிற்கு புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் உதிரிப்பூக்களிற்கும் எவ்வித சம்பந்தத்தையும் நம்மால் உணர முடியாது.
ஒருவேளை இது முக்கிய சர்வதேச விருதுகளுக்கு அனுப்பப்படுமாயின் நமட்டுச் சிரிப்புடன் அவர்கள் இதைப் புறக்கணிக்க மாட்டார்களா?, தன் மகன் திருடிவிடடான் என்றாலும் தாயுள்ளத்துடன் நாம் அதை மறைக்க முயன்றாலும் காவல்துறையிலும் நீதித்துறையிலும் நோண்டி நுங்கெடுத்து விடுவார்களே?
தமிழகத்தின் இலக்கியவாதிகளும் மிஷ்கினின் இந்தத் தவறிற்கு உடன்படுவது துரதிர்ஷ்டமே. ஆப்ரிக்க கலாச்சாரத்தின் தடயங்களை அப்படியே கண்மூடித்தனமாக தன் படத்தில் காப்பிடியத்த அமீரை (யோகி) சவட்டியெடுத்த சாருநிவேதிதா மிஷ்கினின் படத்தை மாத்திரம் கண்ணீர் மல்க பாராட்டும் அபத்தம் ஏன்? எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக முழங்குவதான பாவனை செய்யும் அவா, இதை மாத்திரம் தூக்கி வைத்துக் கொண்டாடும் மர்மம் என்ன? மூலப்படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றெல்லாம் காமெடி செய்யக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே இது ஜப்பானியப்படத்தின் தழுவல் என்கிற பேச்சு இருந்தது. கிகுஜிரோவின் படத்தில் வரும் சில பாத்திரங்களின் உடைகளை (பைக் இளைஞர்கள்) வாகனத்தையும் பனையோலை செருகிச் செல்வதையும் அப்படியே கண்மூடித்தனமாக நகலெடுத்திருக்கிறார் மிஷ்கின்.
கிகுஜிரோவில் காட்டப்படும் மனநலம் குன்றிய தாய்க்கும் அதற்கு அவரது மகன் வெளிப்படுத்தும் மென்மையான ஆனால் நம்மால் அழுத்தமாக புரிந்து கொள்கிற உடலமொழிக்கும், நந்தலாலாவில் உணர்ச்சிக் காவியமாகிய மிஷ்கின் அழுது புரண்டு காண்பிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசம். இங்குதான் மாஸ்டர்களும் சீடர்களும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.
ஏன் நம்மிடம் இலக்கியப்படைப்புகளோ, சமூகப் பிரச்சினைகளோ, நம்மைச் சுற்றி நிகழும் ஆயிரம் கதைகளோ இல்லாமலா போயின? அதிலொன்றை மிஷ்கின் கையாண்டிருந்தால் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கலாம். தம்முடைய சிலுவையை தாமேதான் மிஷ்கின் தோந்தெடுத்துக் கொண்டார். மெய்வருத்தக் கூலி தரும். அவருக்கு என் பாராட்டுக்களும் அனுதாபங்களும். குற்றவுணர்வோடு கொண்டாடப்படும் மகிழச்சியை விட தவற்றின் ஒப்புதல் தரும் ஆசுவாசமான கண்ணீரே உன்னதமானது.
suresh kannan