Friday, June 19, 2009

கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்

பிரபலங்களிடம் 'ஆட்டோகிராஃப்' வாங்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். பொதுவாக நம் எல்லோருக்குமே சக மனிதனை விட ஒரு அங்குலமாவது உயர்ந்த நிலையில் புகழின் படிக்கட்டுகளில் நிற்கும் ஆசை உள்ளுற இருக்கிறது. கடுமையான உழைப்பாலும் தனித்திறமையாலும் பல சமயங்களில் குருட்டு அதிர்ஷ்டத்தாலும் அதை சாதித்தவர்கள் ஒருபுறம் இருக்க, அந்நிலையை அடைய இயலாதவர்கள் பிரபலங்களுடன் சிறிது ஒட்டி உறவாடியாவது அந்த புகழின் வெளிச்சத்தில் கொஞ்சமேனும் தம்மையும் நனைத்துக் கொள்ள விரும்புவதுதான், ரசிகர் மன்றத்தில் கொடி கட்டுவது, நடிகர் வீட்டு வெயில் வரிசையில் காய்ந்து நின்று போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி வைப்பது, டப்பு அதிகமுள்ளவர்கள் சொந்த செலவில் பிரபலங்களுக்கு பாராட்டு விழா எடுப்பது... என்று பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது போலும். 'இன்னாரைத் தெரியும்' என்று மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது எதிரில் இருப்பவரின் புருவம் உயர்த்ததில் நமக்கு பெருமை பொங்கி வழிகிறது. இந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் பிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் பெறுவது.

பிரபலங்களை கண்ட பரவசத்தில் கீழே கிடக்கும் குப்பைக் காகிதத்தில் கையெழுத்து வாங்குபவர்கள் முதற்கொண்டு தங்கபிரேமிட்ட பைண்டு புத்தகத்தில் பிரபலத்திற்கு ஒன்றாக தனிப்பக்கம் ஒதுக்கி மிகுந்த முன்னேற்பாடாக இருப்பவர்கள் வரை உண்டு. இவ்வாறாக பிரபலங்களை துரத்தித் துரத்தி கையெழுத்து வாங்கி பத்திரப்படுத்தி மகிழ்பவர்களை 'philographers' என்கிறார்கள். ரூபாய் நோட்டு, பஸ் டிக்கெட்டின் பின்புறம். திறந்த முதுகு, அவசரத்தில் கிடைக்கிற எந்தவொரு காகிதம்.. என்று சகல விதமாக ஆட்டோகிரா·ப் பெறப்படுகிறது. 'அன்புள்ள ரசிகருக்கு, இத்துடன் எனது கையொப்பமிட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். வாழ்க வளமுடன்' என்று தபாலில் கிடைத்த ஆவணத்தையெல்லாம் ஆட்டோகிரா·ப் வரிசையில் சேர்க்க முடியாது. பிரபலங்களை மாதிரியே கையெழுத்திட்டது அவர் வீட்டு நாய்க்குட்டியாகக் கூட இருக்கலாம். நிற்க. இந்தப் பதிவு ஆட்டோகிராஃப் பற்றி ஆய்வது பற்றியல்ல. நான் வாங்கின / வாங்க முயன்ற ஆட்டோகிராஃப்கள் பற்றியது.

()

அப்போது எனக்கு பதினைந்து வயது இருக்கலாம். கொலம்பஸ்ஸின் கொள்ளுப் பேரன் மாதிரி சென்னையின் முக்கிய இடங்களை நடந்தே 'கண்டு பிடிக்க' ஆரம்பித்திருந்த நேரம். 'ஹீரோ சென்னை வந்துவிட்டான்' என்று தமிழ் இயக்குநர்கள் காண்பிக்க உதவும் சென்ட்ரல் ஸ்டேஷன். ரயில்கள் தண்டவாளத்தில் உராயும் சத்தம், சுமை தூக்கிகளின் கூச்சல்கள், கிடைத்த இடத்தில் சாப்பாட்டுக் கடையை விரிக்கும் வடநாட்டவர்கள் என்று அந்த பரபரப்பான சூழ்நிலையை விழிவிரிய பார்த்துக் கொண்டிருந்தேன். நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டாம் & ஜெர்ரி அறிவிப்புகளுக்கு நடுவே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணத் தொலைக்காட்சியை மிக நெருக்கத்தில் பார்த்தது அந்தத் தருணத்தில்தான்.

இப்படியாக ப.கா.மி.க.வே.பா. மாதிரி நான் நின்று கொண்டிருந்த போது குள்ளமான ஒரு மனிதர் சிலர் புடைசூழ நிலையத்திற்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக வந்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் சுற்றத்தார் நிலையத்திற்குள் நுழைந்ததும்.."டாக்டர் கலைஞர் வாழ்க" என்று அடித்தொண்டையிலிருந்து கத்தியதும் நிலையமே அதிர்ந்து திரும்பிப் பார்த்தது. அவர் அப்போது ஆட்சியில் இல்லாத நேரம் என்பதால் எந்தவிதமான பாதுகாப்பு கெடுபிடிகளுமில்லை. இதுவரை தொலைக்காட்சிகளிலும் போஸ்டர்களிலுமே பார்த்த ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் நேரில் பார்த்த ஆச்சரியத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னைக் கடந்து போன பிறகுதான் அந்த யோசனை தோன்றியது. 'ஒரு ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம்.'

அதற்குள் அவர் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டிருந்தார். 'எதில் கையெழுத்து வாங்குவது' என்பது பிடிபடாமல் கீழே கிடந்ததில் சுத்தமாக கிடந்த ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு பாய்ந்தேன். எந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்த என்னை 'பாதுகாப்பு அதிகாரி' மாதிரியான தோற்றத்தில் இருந்தவர், கனிவான குரலில் 'என்ன தம்பி வேணும்?" என்றார். சொன்னேன். வழியனுப்புவதற்காக வந்திருந்த தொண்டர் கூட்டமும் வட்டமும் மாவட்டமும் குறுக்கும் நெடுக்குமாக போய்க்கொண்டிருக்க பரபரப்பாக இருந்தது. 'கொஞ்சம் பொறு தம்பி. சந்தடி ஓயட்டும். முயற்சி பண்றேன்" என்றார் கா.அ. ஆவலாக காத்து நின்றேன். வண்டி புறப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தது. கா.அ. திரும்பி வந்து "ரொம்ப பிசியா இருக்காருப்பா. முடியாது போலிருக்கு" என்றார். நான் அதிருப்தியுடன் இறங்கி வந்தேன்.

இன்னொரு சமயம். அதே 'ஹீரோ வந்துட்டானில்' நான் பார்த்த இன்னொரு பிரபலம் நடிகர் சரத்பாபு. அழகு மற்றும் நடிப்புத் திறமையிருந்தும் வெற்றிகரமான ஒரு கதாநாயகனாக ஆகமுடியாமல் 'நண்பர்' வேடத்திற்கென்றே தயாரிக்கப்பட்டவர் போல் அவர் நடத்தப்பட்டது என்பது எனது பொதுவான வருத்தமாக இருந்தது. [மக்கள் எந்த மாதிரியான முகத்தை ஹீரோவாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஆய்வது சமூகவியல் நோக்கில் சுவாரசியமானதொன்றாக இருக்கும்.]. வண்டிக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டதும் போன முறை ஆட்டோகிரா·ப் வாங்க முடியாத அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஆவேசத்துடன் பாய்ந்தேன். என்னிடம் பேனா இல்லாத சூழ்நிலையில் இன்னொருவரிடம் வாங்கி புன்னகையுடன் கையெழுத்து போட்டுத் தந்தார். அந்தச் சமயத்தில் அவர் அப்படியொன்றும் கவர்ச்சிகரமான ஆளுமையில்லை என்பதால் ஆர்வமில்லாமல் சில நாட்களிலேயே அந்தப் பேப்பரை தொலைத்து விட்டேன்.

அதே இடம். மற்றொரு சந்தர்ப்பம். ஓட்ட வீராங்கனை பி.டி.உஷா ரயில் வண்டியில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். உஷா அப்போது தங்கம் வென்று புகழின் உச்சியில் இருந்த நேரம். ஆனால் யாரும் அவரை சீண்டுவதாய் தெரியவில்லை. எனக்கு உஷாவை விட பக்கத்தில் இருந்த ஷைனி வில்சனை பிடித்திருந்தது. ஆனால் அவர் அவ்வளவு பிரபலமில்லை. எனவே உஷாவிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். நான் பேப்பரையும் பேனாவையும் சம்பாதித்துக் கொண்டு திரும்புவதற்குள் உஷா குழுவினரைக் காணோம். வண்டி கிளம்பாமல் இருந்தது. ஒருவேளை ஓடியே கேரளாவிற்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாரோ என்று வருத்தமாக கிளம்பினேன். ஆனால் வீட்டுக்குத் திரும்புவதற்குள் என் மனதில் மெல்ல மெல்ல ஒரு வில்லங்கமான திட்டம் உருவாகியது.

()

"ஏ இங்க தாடா. பாத்துட்டு கொடுத்தடறேன்"

"மெல்ல. கிழிஞ்சிடப் போகுது"

"எப்படிரா மச்சான்"

ஐந்தே நிமிடங்களில் வகுப்பு முழுக்க செய்தி பரவிவிட்டது. என்னிடம் பேசாத க்ளாஸ் லீடர் ராஜகோபால் கூட வந்து பார்த்து விட்டுப் போனான்.

"பாம்பேல இருந்து எங்க மாமா வர்றார்னு சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தோம். தண்ணி குடிக்கலாம்னு எதிர் பிளாட்பாராம் போனா, பி.டி.உஷா நிக்கறாங்க. அப்படியே ஆச்சரியமாப் போச்சு. கிட்ட போய் 'ஹலோ மேடம். ஆட்டோகிரா·ப்'-ன்னேன். உடனே சிரிச்சிக்கிட்டே 'ஹலோ'ன்னு சொல்லிட்டு போட்டுக் கொடுத்தாங்க. 'எந்தா படிக்கறது'ன்னாங்க. சொன்னேன். 'குட்பாய்'-ன்னு தலையை தடவிக் கொடுத்துட்டு போயிட்டாங்க."

நான் சொன்னதை எல்லோரும் நம்பி விட்டார்கள். விஷயம் இதுதான். ஒரு சிறிய பேப்பரில் அழகான கோணல் கிறுக்கில் 'பி.டி.உஷா' என்று நானே எழுதி வைத்திருந்த பேப்பரை காட்டி அப்படியாக அளந்து கொண்டிருந்தேன். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும் ஏன் அப்படிச் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கும் போது எல்லாம் மேலே சொன்ன அந்த 'ஒரு அடி அங்குல' மேட்டர்தான் என்று புரிகிறது. பி.டி.பீரியட் முடிந்து வந்த ஒரு நாளில் அந்த 'பொக்கிஷம்' காணாமற் போனதை உணர்ந்த போது வருத்தமெல்லாம் ஏற்படவில்லை. இந்த எமகாதககன்களை ஒரு நாளாவது கலாய்க்க முடிந்ததே என்று ரகசிய மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு காரணமும் இருக்கலாம்.

வகுப்பில் 'பழனியப்பன்' என்கிற நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பையனொருவன் பயங்கர 'பந்தா' செய்துக் கொண்டிருந்தான். புதிய புதிய ஜூன்ஸ் அணிந்து வருவது, இண்டர்வெல்லில் நண்பர்கள் அனைவருக்கும் பால் ஐஸ்கிரீம் வாங்கித்தருவது., பாக்கெட்டிலிருந்து புது நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவுவது .. என்று ஸ்கூலே அவனை வியப்பாகவும் பிரமிப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தது. வாத்தியார்கள் கூட அவனிடம் சிரித்துப் பேசி கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். பழனியப்பனை ஒரு நாளாவது முந்த வேண்டுமென்கிற ஆவல் இதைச் செய்ய என்னைத் தூண்டியிருக்கலாம்.

()

பின்னர் நான் வளர்ந்து என்னுடைய ஈகோவும் என்னுடனேயே வளர்ந்த பிறகு இந்த ஆட்டோகிரா·ப் வாங்குகிற சமாச்சாரமெல்லாம் மகா அபத்தமாகத் தெரிந்தது. நிறைய பிரபலங்களை நேரில் சந்திக்க நேரும் போது ஒரு முறை கூட கையெழுத்து வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த ஆர்வமும் பரவசமும் எப்போதோ வடிந்து விட்டிருந்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கும் இதே நிலைதான். 'நான் காசு கொடுத்து வாங்கின புதுப் புத்தகத்தில் நானே ஒரு எழுத்தை எழுதக்கூட மிகவும் யோசிக்கும் போது இவர்கள் யார் அதில் கையெழுத்துப் போட' என்றுதான் தோன்றுகிறதே ஒழிய ஆட்டோகிரா·ப் வாங்க வேண்டும் என்று எப்போதுமே தோன்றியதில்லை.

ஆனால் ஒரு மனிதரிடம் என்னிடம் பிடிவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்து அவரைப் படித்து படித்து எனக்குள் ஆழமாக இறங்கி விட்டிருந்தார். அவர் என்னுடைய ஒரு பகுதி கூட என்று சொல்லுமளவிற்கு குருதியில் கலந்து விட்டிருக்கிறார். அவரது மரணத்தைக் கூட என் மனம் முழுமையாக நம்ப மறுக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த போது சந்தர்ப்பத்தை வீணடிக்க மனமில்லாமல் மிகுந்த தயக்கத்துடன் அவருடைய புத்தகத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். அந்த மனிதர் இவர்தான்.

()

இன்னொரு பிரச்சினையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. புரொபைலில் என்னுடைய புகைப்படத்தை போட்டாலும் போட்டேன். வெளியில் போக நேரும் போதெல்லாம், "நீங்க சுரேஷ் கண்ணன்தானே. உங்க பிளாக்கை தொடர்ந்து படிப்பேங்க...ரொம்ப நல்லா எழுதறீங்க. அப்புறம் ... ஹிஹி உங்க கையெழுத்து....' என்று இழுக்கும் ஒரு மனிதரையாவது தினமும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது. ஒரு நாள் மூத்திரைப்புரையொன்றில் என்னுடைய பணியில் கண்ணுங் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து தடுப்பிலிருந்து ஒருவர் புன்னகையுடன் திரும்பி மேற்சொன்ன வசனத்தைப் பேசினார். அங்கேயுமா? அந்தச் சமயத்தில் எப்படி அய்யா கையெழுத்து போட முடியும்?. இப்படி ஒரே தொந்தரவாக இருக்கிறது.

எப்படி ஆட்டோகிராஃப் வாங்க மாட்டேன் என்று முடிவு செய்திருக்கிறேனோ அதே போல் இனி ஆட்டோகிராஃப் போட்டுத் தருவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன். இனி என்னை நேரில் சந்திக்க நேர்கிறவர்கள் கையெழுத்து கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்று இந்தச் சமயத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

(மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும். அவர்கள் எழுதும் பதிவுகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கும். 29C பஸ்ஸில் ஜன்னலோர சீட் வாய்ப்பு ஏற்படலாம். மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது 'தங்கம் மற்றும் வெள்ளி விலை' நிலவரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு கலவரங்களிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

நம்பாத சந்தேகப்பிராணிகளுக்கு, ESPN பார்க்க அமரும் போது அதில் தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்பாகும் துர்ப்பாக்கியம் ஏற்படும். சாருவைப் பற்றி அவதூறாக எழுதி பதிவு ஹிட் ஆகாமல் போவதோடு அவரிடமிருந்து நேரடியான சாபமும் கிடைக்க வாய்ப்புண்டு. ஷகிலா மேடம் உங்களின் மேல் உருண்டு புரண்டு நசுக்கியெடுப்பதைப் போன்ற துர்கனவுகள் வரும்).




சரி. இதெல்லாம் இருக்கட்டும். மேலேயிருக்கிற கையெழுத்து எவருடையதென்று யூகித்து பின்னூட்டத்தில் சரியான விடை சொல்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு அபூர்வமான, சிறப்பான, அட்டகாசமான பரிசொன்று காத்திருக்கிறது. என்ன பரிசா? வேறென்ன, என்னுடைய ஆட்டோகிராஃப்தான்.

(க்ளூ: பிரபல இசைப்பாடகர்)

suresh kannan

11 comments:

Anonymous said...

nice humour.

//மேலேயிருக்கிற கையெழுத்து எவருடையதென்று //

RD BURMAN?

பிச்சைப்பாத்திரம் said...

///*(மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும். அவர்கள் எழுதும் பதிவுகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கும். 29C பஸ்ஸில் ஜன்னலோர சீட் வாய்ப்பு ஏற்படலாம். 'தங்கம் மற்றும் வெள்ளி விலை' நிலவரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது மின்தடை ஏற்பட்டு கலவரங்களிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கும். நம்பாத சந்தேகப்பிராணிகளுக்கு, ESPN பார்க்க அமரும் போது அதில் தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்பாகும் துர்ப்பாக்கியம் ஏற்படும். சாருவைப் பற்றி அவதூறாக எழுதி பதிவு ஹிட் ஆகாமல் போவதோடு அவரிடமிருந்து நேரடியான சாபமும் கிடைக்க வாய்ப்புண்டு. ஷகிலா மேடம் உங்களின் மேல் உருண்டு புரண்டு நசுக்கியெடுப்பதைப் போன்ற துர்கனவுகள் வரும்).*/

தனது சொந்த நடையில் எழுத முயலலாம்.

- இரா.வசந்தகுமார்.

வசந்தகுமார், மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை பிழையாக reject செய்துவிட்டேன். எனவே...

வால்பையன் said...

துரதர்ஷ்டவசமாக எத்தனையோ நடிகர்களையும், அரசியல்தலைவர்களையும் சந்திக்க!?(காண) நேர்ந்தும், அதிர்ஷ்டவசமாக யாரிடமும் ஆட்டோகிராப் வாங்கும் பழக்கம் எனக்கில்லை!

மணிஜி said...

எனக்கும் ஆட்டோகிராப் போட்டுத்தான் பழக்கம்(ஜாமீன்ல இருக்கும்போது)
அது தாசண்ணாவோடதா?

Anonymous said...

நானொரு முறை பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவிடம் கையெழுத்து வாங்கினேன். மறுக்காமல் போட்டுத் தந்தார்.

அப்புறம்.. அந்த கையெழுத்து.. மைக்கேல் ஜாக்சன்?

Beski said...

ரொம்ம்ப பெரிசா இருக்கு... அப்புறமா படிச்சிகிறேன்.

Beski said...

//மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு//

நம்பிட்டேன்.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டவாதிகளுக்கு நன்றி.

//தனது சொந்த நடையில் எழுத முயலலாம். //

வசந்தகுமார், பதிவில் சொன்னது போல் வாத்தியாரின் நடை புத்தியில் ஊறிப்போனது. தவிர்க்க முடியாது. இருநதாலும் அதை தவிர்க்கும் பிரக்ஞையுடன்தான் எழுதுகிறேன். உங்களின் ஆலோசனைக்கு நன்றி.

வால்பையன்,தண்டோரா,பிரதாப், அனானிஸ்,

நன்றி. விடை கொஞ்சம் கடினம்தான். நான் பாட்டுக்கு ரொம்பவும் தேடின ஒரு இமேஜை போட்டுவிட்டேன்.

//நம்பிட்டேன்.//

:-))

எழுதின பிறகு சற்று சங்கடமாகவே இருந்தது. யாராவது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று. இருந்தாலும் நம் மக்களின் நகைச்சுவை உணர்வின் மீது நம்பிக்கையும் இருந்தது.

Unknown said...

எல்லாம் சரியாத்தான் சொன்னிங்க..

இப்படி சொன்னிங்கனா(//.. இப்படியாக ப.கா.மி.க.வே.பா. மாதிரி நான் நின்று கொண்டிருந்த போது ..//), என்னப்பத்தி எல்லோரும் என்ன நினைப்பாங்க..!!

எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

பிச்சைப்பாத்திரம் said...

//என்னப்பத்தி எல்லோரும் என்ன நினைப்பாங்க..!!//

:-))

யாரும் இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க மாட்டார்கள் என நினைத்தேன்.

Unknown said...

அதெல்லாம் நாங்க கண்ணுல விளக்கெண்ணய விட்டுட்டு நல்ல பார்ப்போம்..